Showing posts with label 3. Show all posts
Showing posts with label 3. Show all posts

1 July 2012

அரையாண்டு சினிமா ( 2012 ) - ஓர் அலசல் ...


திரைப்பட தயாரிப்பாளர்கள் - தொழிலாளர்கள் இடையேயான இழுபறியால் இந்த  வருடம் பெரிய பட்ஜெட் படங்கள் பெரிதாய் வராத நிலையில் சிறிய முதலீட்டு படங்கள் நிறையவே ரிலீஸ் ஆகியிருந்தாலும் , அவற்றுள் வழக்கு எண் 18/9 , ராட்டினம் தவிர மற்றவையெல்லாம் வெறும் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவியிருக்கின்றன ...

வேலாயுதத்தை தொடர்ந்து  நண்பன்   வணிக ரீதியான வெற்றியை கொடுத்ததோடு , வழக்கமான பாணியிலிருந்தும்  சற்று மாறி விஜய்க்கு தோள் கொடுத்திருக்கின்றான்   ...  வேட்டை யுடிவியிடம் பெரிய விலைக்கு விற்கப்பட்டாலும் , திரைக்கதையை பொறுத்தவரை வேகத்தடையாகி போனதால்  ரசிகர்களிடம் பெரிய வரவேற்ப்பை பெறவில்லை ...  


மெரினா  மூலம் பாண்டிராஜ் ஒரு தயாரிப்பாளராக ஜெயித்த போதும் இயக்குனராக அவரின்   மெரினா  அலைகள்  கால் தொடவில்லை ...  எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் - 2012  இல் இருந்த  தோனி அரவான் இரண்டுமே அதை பூர்த்தி செய்யாமல் போனதில் வருத்தமே , அதே போல நல்ல முயற்சியான  அம்புலி அரை  நிலவாய் போனதும் துரதிருஷ்டமே ... 

கழுகு பறந்த உயரம் குறைவாக இருந்தாலும் பாடல்கள் மற்றும் எடுக்கப்பட்ட விதத்தால் இயக்குனர் சத்ய சிவாவிற்கு நல்ல பெயரோடு சேர்த்து அடுத்த படத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது ... குறும்படமாக நல்ல பெயரை பெற்ற காதலில் சொதப்புவது எப்படி படமாகவும் சொதப்பாமல் வசூலை பெற்று குறும்படம் எடுப்பவர்களுக்கிடையேயும் ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது ... 



வெறும் பாடல்களும் , பப்ளிசிட்டியும் மட்டுமே படம் ஓடுவதற்கு போதுமானதாகி விடாது என்பதை முப்பொழுதும் உன் கற்பனைகள் , 3 இரண்டுமே நிரூபித்திருக்கின்றன , அதிலும்  3 - ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி  என்று சொல்லுமளவிற்கு ரசிகர்களை வெறுப்பேற்றி விட்டது ...  கர்ணன்  நூறு நாட்களுக்கும் மேல் ஓடி காலத்தால் அழியாமல் எல்லோர் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டான் ...

ராஜேஷ் தனக்கு எது வருமோ அதை சரியாக செய்து   ஒரு கல் ஒரு கண்ணாடி  யை டபுள் ஓகே செய்துவிட்டார் . இவருடைய பாச்சா அடுத்தமுறை பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . இதே பாணிக்கு பெயர் போன சுந்தர்.சி யின்  கலகலப்பு வெற்றி பெற்றதிலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை ... அர்பன் ரொமாண்டிக் ஸ்டோரியை ஸ்டைலாக சொன்ன விதத்தில்  லீலை ஏமாற்றவில்லை என்றே சொல்லலாம்... 


தரமான படங்களின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் தீராத பசியை தீர்த்து வைத்த வகையில்  வழக்கு எண் 18/9 - வளர்ச்சிக்கான பாதை ...  ராட்டினம் சுற்றலாம்  என்ற போதும் அழகி , விடிவி வரிசையில் ஒரு படம் என்றெல்லாம் சொல்லுமளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை .  கிருஷ்ணவேணி பஞ்சாலை  நேர்த்தியாக நெய்யப்பட்டிருந்தால் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பாள்.

பில்லாவின் ரிலீஸ் தேதியையே ஒத்திப் போடுமளவிற்கு ஓவர்
பில்ட் அப்புடன் வந்த சகுனி ரசிகர்களை சலிப்பூட்டியதை தவிர வேறோன்றும் உருப்படியாக செய்யவில்லை ... வருட முடிவிற்குள் வருமென்று எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுள் கமலின் விஸ்வரூபம் , அஜித் நடிப்பில் பில்லா 2 , விஜய் நடிப்பில் துப்பாக்கி , சூர்யா நடிப்பில் மாற்றான் இவைகளெல்லாம் மிக முக்கியமானவை ... 



31 March 2012

3 - ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி ...

                          
சூப்பர் ஸ்டார் மகளின் இயக்கத்தில் அவரின் மருமகன் ஹீரோ - சூப்பர் ஆக்டரின் மகள் ஹீரோயின் என்ற எதிர்பார்ப்பான காம்பினேஷன் , தனுஷை ஒரே நாளில் ஒபாமாவாக்கிய " வை திஸ் கொலவெறி டி " பாடல் , அதை அருமையாக மார்கெட்டிங் செய்த விதம் , அட்ராக்டிவான ஸ்டில்கள் இவையெல்லாம் படத்திற்கு பெரிய ஓபனிங் கொடுத்திருந்தாலும் ,  ஐஸ்வர்யா தனுஷை  பார்த்து  " வை திஸ் கொலவெறி " என்று கேட்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது படம் ...

முதல் சீனிலேயே தனுஷ் இறந்து கிடக்க அவரின் மீதான ஸ்ருதியின் நினைவலைகளில் தொடங்குகிறது கதை ... பணக்கார தொழிலதிபரின் மகன் ராம் ( தனுஷ் ) , தன் மகளை மேற்படிப்புக்கு அமெரிக்கா அனுப்ப வேண்டுமென்ற முயற்சியில் இருக்கும் ஒரு தாயின் மகள் ஜனனி ( ஸ்ருதி ) இருவருமே +2 வில் இருந்து காதலித்து , பெற்றோர்களின் ஆதரவும் இல்லாமல் , பெரிய எதிர்ப்புமில்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்... இரண்டாவது பாதியில் தனுஷ் பயோ போலர் டிஸார்டர் என்ற மனவியாதியில் அவதிப்பட்டதும் , அதன் முடிவில் என்ன ஆனார் என்பதும் நண்பன் செந்தில்
( சுந்தர் ) பாயிண்ட் ஆப் வியுவில் இருந்து விளக்கப்படுகிறது ...

தனுஷ் பள்ளி மாணவன் , குடும்பஸ்தன் என்ற இரு வேடங்களிலும் நல்ல வித்தியாசம் காட்டியிருக்கிறார் ... குறிப்பாக கத்தியை கையில் வைத்துக்கொண்டு அழும் காட்சி அற்புதம் ... அதே சமயம் நன்றாக நடிக்கிறார் என்பதற்காக ஒரே மாதிரியான மாதிரியான பாத்திர தேர்வுக்குள் சிக்கிக்கொள்கிறார் என்றே சொல்ல வேண்டும் ... இதே தவறை தான் தனுஷ் தன்னை ஆக்சன் ஹீரோவாக முன்னிறுத்த சுள்ளான், புதுகோட்டையிலிருந்து சரவணன் போன்ற படங்களில் நடித்த போதும் செய்தார் ... ஷோ சேஞ்ச் த கியர் மாமு !

உண்மையிலேயே அவர் கொடுத்து வைத்தவர் ... அவர் பெற்ற தேசிய விருதுக்காகவோ , சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்பதற்காகவோ இதை சொல்லவில்லை , அப்பா - அண்ணனை தொடர்ந்து மனைவியும் அழகான ஹீரோயினுடன் நெருக்கமாக நடிக்க வைத்திருக்கும் கொடுப்பினையை தான் சொல்கிறேன் ...


ஸ்ருதிக்கு நடிப்பு இயற்கையாகவே வருகிறது ... பள்ளி பருவங்களில் தனுஷை விட நம்மை அதிகம் கவர்வது இவரே ... ஐ லவ் யு சொல்லும் காட்சிகளில் க்யுட் ... நிறைய இடங்களில் இவரை அழ விட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம் ... தனுஷின் பள்ளி தோழனாக வரும் சிவகார்த்திகேயன் அடிக்கும் கமன்ட்ஷ்களுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் ... மற்றொரு நண்பன் சுந்தரை பள்ளி மாணவனாக ஏற்க முடியாவிட்டாலும் இரண்டாவது பாதியில் நடிப்பை பாராட்டலாம் ...

பிரபு , பானுப்ரியா , ரோகினி இவர்களெல்லாம் சரியான பாத்திர தேர்வுகள் ... இளையராஜா , ரஹ்மானுக்கு பிறகு முதல் படத்திலேயே இவ்வளவு புகழ் அடைந்தது அனிருத் ஆகத்தான் இருக்க முடியும் ... எல்லா பாடல்களுமே அருமை , ஆனால் பின்னணி இசையில் கவனம் தேவை ... " கொலவெறி " பாடல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு காட்சியமைப்பில் இல்லை.. ஒளிப்பதிவு பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை ... எடிட்டர் இரவில் வேலை பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன் , அவர் தூங்கி வழிந்திருப்பது குழப்பமான எடிட்டிங்கில் நன்றாகவே தெரிகிறது ... எக்கச்சக்க ஜம்ப் ...

           
இளமை துள்ளலான காதல் கதையுடன் , சுஜாதாவின் " " நாவலில் வருவது போல ஹளுஷினேஷனால் பாதிக்கப்பட்ட ஹீரோவின் கதையையும் கலந்து கட்டி கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ... தனுஷ் - ஸ்ருதி இடையேயான பள்ளி பருவ காதல் காட்சிகள் நம்மை படத்தோடு ஒன்ற வைத்தாலும் , பிற்பாதியில் சொல்லப்படும் தனுஷின் மனோவியாதி  நம் மனதை கவரவில்லை ...

எந்நேரமும் பென்சிலால் எதையாவது எழுதிக்கொண்டிருந்தாலும் அழகான பிளாட் வாங்கி கொடுக்க மறக்காத அப்பா , கணவனின் நண்பன் இருக்கிறான் என்ற விவஸ்தையே இல்லாமல் கணவன் மடியில் உட்காரும் அன்பு மனைவி இவர்களிடம் கூட தன் வியாதியை தனுஷ் சொல்லாமல் விடுவது , அவரின்  மனோவியாதிக்கான எந்த பின்னணியையும் விவரிக்காதது , உற்றார் - உறவினர் முன்னிலையில் பல சடங்கு , சம்பிரதாயங்களுடன் கட்டப்படும் தாலியை குடிகார கும்பலுடன் தனுஷ் பப்பில் வைத்து கட்டுவது , ( ஐஸ்வர்யா தாலி கட்டும் சடங்கையே தவிர்த்திருந்தால் கூட முற்போக்காக சிந்தித்திருக்கிறார் என்று சந்தோஷப்பட்டிருக்கலாம் , அதை விடுத்து இதை போன்ற  சீன் வைத்தது கழிவறையில் வைத்து விருந்து சாப்பிடுவது போல இருக்கிறது ) ,

" மயக்கம் என்ன " மயக்கத்தில் காட்சிகள் நகர்வது , நிறைய இடங்களில் பின்னணி இசையே இல்லாமல் ஏதோ டாக்குமென்டரி பார்ப்பது போன்ற உணர்வை கொடுப்பது , பெற்றோர்கள் எதிலுமே தலையிடாமல் தேமே என்றிருப்பது இவையெல்லாம் த்ரீயை பார்க்கும் ரசிகர்களுக்கு  கொலவெறியை கொடுக்கின்றன ... ஐஸ்வர்யா தனுஷ் பாடல்களுக்கும் , அதை பிரபலப்படுத்தியதற்க்கும் கொடுத்த முக்கியத்துவத்தை கொஞ்சம் கதைக்கும் கொடுத்திருக்கலாம் ... சாரி ஐஸ் பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் ...

ஸ்கோர் கார்ட் : 38 


இதே விமர்சனத்தை ஆங்கிலத்தில் படிக்க http://vangablogalam.blogspot.in/2012/03/3-film-review-aishwarya-danushs.html

3 FILM REVIEW - Aishwarya Danush's Kolaveri ...

Related Posts Plugin for WordPress, Blogger...