Showing posts with label 26/11. Show all posts
Showing posts with label 26/11. Show all posts

21 November 2012

அஜ்மல் கசாப் கதம் கதம் ...


26/11/2008 ஆம் ஆண்டு மும்பையில்  நடந்த அதி பயங்கர தீவிரவாத தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது . பல இந்தியர்களின் உயிரை குடித்த அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களில் ஒருவனான  அஜ்மல் கசாப் அதே நவம்பர் மாதமான இன்று காலை 7.30 மணியளவில் புனே சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டான் ...

நம் நாட்டிற்க்கு எதிராக தீவிரவாதம் செய்த அயல் நாட்டவனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு நான்கு  வருடங்கள் பிடித்திருக்கின்றன . அவன் பாதுகாப்பிற்காக செலவிடப்பட்ட பல கோடிகள் இனி அரசாங்கத்திற்கு மிச்சம் . கசாப்பின் தூக்கு தண்டனைக்கு எதிரான  கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை தொடர்ந்து தண்டனையை சத்தமில்லாமல் நிறைவேற்றியிருக்கிறது அரசு . அரசாங்கம் செய்த துணிச்சலான , மிக உருப்படியான காரியங்களுள் இது ஒன்று என அடித்து சொல்லலாம் ...

தனிப்பட்ட முறையில் மரண தண்டனைக்கு எதிரான கருத்துடையவர்கள் கூட  இது போன்ற தீவிரவாதிகளுக்கு எதிராக கொடுக்கப்படும் மரண தண்டனையை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன் . இந்த மரண தண்டனையால் இறந்தவர்கள் திரும்ப உயிருடன் வந்து விடுவார்களா என்றோ தீவிரவாதத்தை முற்றிலும்  ஒழித்து விட முடியுமா என்றோ கேள்வி கேட்கும் அறிவாளிகள் கேட்டுக் கொண்டே இருக்கட்டும் . போன உயிர் திரும்ப வராது தான் , ஆனால் இனிமேலும் உயிர்கள் போகாமல் தடுக்கலாம் . தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் இது முடிவல்ல ஆரம்பமே ...

2001 ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளால் தான் அங்கு அதன் பிறகு எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் . நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எந்தவொரு குற்றத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதோ  அல்லது  அதில் சம்பந்தப்பட்டவர்களை ஜாதி , இன , மதங்களோடு ஒப்பிட்டுப்பார்ப்பதோ மறைமுகமாக தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு சமம் ...

அஜ்மல் கசாப் ஒருவனை தூக்கில் போட்டதோடு நின்று விடாமல் அப்சல் குரு உட்பட இது போன்ற தீவிரவாதிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனைகளை நிறைவேற்றி   , நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி தீவிரவாத சம்பவங்கள் நடக்காமல் தடுத்து மக்களை காப்பதிலும் அரசாங்கம் தன் கடமையை செவ்வென செய்யும் என அனைவரும் நம்புவோம் ...


Related Posts Plugin for WordPress, Blogger...