Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

1 September 2022

Latest Tamil Movie COBRA Review by Vanga Blogalam ..


ஆளவந்தான் படத்துக்கு அட்லீ  வேலை  பார்க்கத் தெரியாம அஜய் ஞானமுத்து படம் எடுத்தது தான்   இந்த கோப்ரா . முதல்  பதினைந்து நிமிஷம் நல்லா படம் எடுக்குற கோப்ரா அப்புறமா  பெட்டிக்குல்ல படுத்துடுது . விக்ரம் பணத்தை வாங்கிட்டு யாரை யாரையோ கொல்றாப்ல ஆனா இயக்குனர் நம்மையும் சேர்த்துள்ள கொல்றாப்ல ! படத்துல வில்லன் சிரிச்சுகிட்டே இருக்காரு , சீரியஸ் காட்சிகள் ள ஆடியன்ஸ் சிரிச்சிக்குட்டே கெடக்காய்ங்க ! முழு விமர்சனத்தை கீழே உள்ள லிங்க்  மூலம் VANGA BLOGALAM YOUTUBE சேனலில்  வாங்க பார்க்கலாம் ... 




15 August 2022

GARGI Tamil Movie Review by Vanga Blogalam ... #gargireview #saipallavi ...

இயக்குனரின் சில குறீயீடுகளீல் சூர்யாதனங்கள் இருந்தாலும் கதைக்களன் , எடுத்த விதம் இவற்றால் கார்கி கவனிக்க வைக்கிராள் . முழு விமர்சனத்தை கீழெ உள்ள லின்க் மூலம் காணவும் ... சினிமா 


1 March 2022

வலிமை வென்றதா ? Valaimai Tamil Movie Review


பொதுவாக மாஸ் ஹீரோ படம் என்றாலே எதிர்பார்ப்பு இருக்கும் அதுவே அந்த ஹீரோவின் படம் இரண்டு வருடங்களுக்குப் பின் அதுவும் ஹேட்ரிக் ஹிட் கொடுத்த இளம் இயக்குனரின் காம்போ வில் வந்தால் எதிர்பார்ப்பு எகிறாதா ?!  அஜித் - வினோத் காம்போ வில் அப்படி வந்திருக்கும் வலிமை வென்றதா? பார்க்கலாம் ... 

தங்கப்பதக்கத்திலிருந்து தற்போது வந்த ருத்ர தாண்டவம் வரை பார்த்துப் பழகிய நேர்மையான போலீஸ் அதிகாரி க்கும் எதிர்மறை வில்லனுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் வலிமை . அதில் நடுநடுவே மானே தேனே என்று காதல் காட்சிகளை வைக்காமல் அம்மா சென்டிமெண்டை கொட்டியிருக்கிறார் வினோத் ‌‌. அது என்னவோ ஹாலிவுட் படத்தையும் , பழைய தமிழ் படத்தையும் ரிமோட்டில் மாறி மாறி பார்த்த அனுபவத்தை கொடுப்பது தான் துரதிருஷ்டம் ...

அஜித் சட்டை யை கழட்டி வைத்து சண்டை போடவில்லை , பறக்க பறக்க பஞ்ச் டயலாக் பேசவில்லை ஆனால் பைக்கில் பறந்து பறந்து சட்டை போட்டு அதகளப்படுத்துகிறார் . வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் நடிப்பது ஆறுதல் என்றாலும் க்ளோஸ் அப் காட்சிகளில் வயது தெரிவதை தவிர்த்திருக்கலாம் . ஹீரோயின் இல்லை என்கிற குறையை ஹிமா குரேசி நீக்குகிறார் . தம்பி கேரக்டர் ட்விஸ்ட் என எதிர்பார்த்து வைத்திருந்தால் அது தான் வொர்ஸ்ட் . தெலுகு இறக்குமதி வில்லன் கார்த்திகேயன் கலக்கல் நடிப்பு ஆனால் அவர் பாத்திரப் படைப்பு அந்த அளவு கவரவில்லை ‌‌...

அஜித் , ஆக்சன் காட்சிகள் , இசை , ஒளிப்பதிவு எல்லாமே படத்திற்கு பலம் ஆனால் ஆக்சன் திரில்லர் படத்தை விறுவிறுப்பாக இரண்டு மணி நேரத்தில் முடிக்காமல் இரண்டாம் பாதியை இழுத்து அம்மா சென்டிமெண்டை கலந்தடித்தது பலவீனம் . சிலர் கழுவி ஊற்றும் அளவு படம் அவ்வளவு மோசமில்லை அதிரடி ஆக்சன்களுக்காக குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம் . மொத்தத்தில் பைக் ரேஸர்சை மையமாக வைத்து வந்திருக்கும் இந்த வலிமை பைக் புதுசு இன்ஜின் பழசு ...

ஸ்கோர் கார்ட். : 41 

ரேட்டிங்க். : 2.5 * 

இந்த படத்தின் வீடியோ விமர்சனத்தை Vanga Blogalam YouTube Channel ல் காணவும் 🙏 ...

அனந்து ...

7 November 2021

அண்ணாத்த - Annaatthe Tamil Movie Review

சூப்பர் ஸ்டார் - சிறுத்தை சிவா காம்பினேஷனில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு எந்த போட்டியுமில்லாமல் அல்லது போட்டியை ஓரங்கட்டி எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் அண்ணாத்த ‌‌. ரஜினி - நயன்தாரா ஜோடி சேர்ந்த தைரியத்தில் அதரப்பழசான அண்ணன் தங்கை பாச டெம்ப்ளேட் கதைக்கு அதை விட அதரப்பழசான திரைக்கதையுடன் அண்ணாத்த யை களமிறக்கியிருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா ...

 71 வயதிலும் இன்றைய நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் படி துடிப்பாக இருக்கிறார் ரஜினி. பச்சக்கிளி என்று அவர்  ‌‌‌சூரியை அழைப்பதே தனி ஸ்டைல் . ஸ்டேஷனில் பிரகாஸ்ராஜை கலாய்ப்பது , முறைப்பெண்கள் மீனா , குஷ்பு வை சமாளிப்பதென என எல்லாமே ரஜினி ஸ்டைல் கலகலப்பு . வக்கீல் நயன்தாரா ரஜினி யை பார்த்தவுடனே எந்த வாதமும் பண்ணாமல் விழுந்து விடுகிறார் . கீர்த்தி சுரேஷ்க்கு இயக்குனர் இது சன் டிவி யின் சீரியல்  என்று சொல்லிவிட்டார் போல படம் முழுவதும் ஒரே மாதிரியான சோக முகபாவம் . வில்லன்கள் பெரிய எதிர்ப்பு இல்லாமல் சரணடைவது சறுக்கல் ...

இமானின் இசையில் சாரக்காற்று பாடல் வருடுகிறது மற்றபடி பிண்ணனி இசை  வெறும் இரைச்சல் . ரஜினி யின் எனர்ஜி , சன் மார்க்கெட்டிங் , மெகா ரிலீஸ் எல்லாமே ப்ளஸ் மற்றவை எல்லாம் மைனஸ் தான் . மாஸ் ஹீரோ படத்தில் கதை லாஜிக் எல்லாம் பெரிதாக யோசிக்க வேண்டாம் ஆனால் திரைக்கதை என்கிற வஸ்துவையும் சிவா தீபாவளி தள்ளுபடியில் விட்டது தான் வேதனை ...

அண்ணாத்த கிராமத்தில் இருக்கும் வரை அப்படியிப்படி நம்மை சமாளித்து விடுகிறார் ஆனால் கொல்கத்தா போனவுடன் வில்லன்களோடு சேர்ந்த நம்மையும் வதம் செய்கிறார் . தீபாவளி விடுமுறையாலும் , பெரிய போட்டி இல்லாததாலும் முதல் வாரம்  அண்ணாத்த வசூல் செய்வார் . மற்றபடி சீரியலை மிஞ்சும் ஓவர் செண்டிமென்ட் , ஒட்டாத ஆக்சன் , திருப்பாச்சி கதை , வேதாளம் காட்சிகள் என கம்பீரமாக நிற்காமல் அந்தரத்தில் தொங்குகிறார் இந்த அண்ணாத்த ...

ரேட்டிங்க். : 2* 

வீடியோ விமர்சனத்தை கீழே காணவும் ...

https://youtu.be/JtQKKxypwYw














  


15 August 2021

நெற்றிக்கணஂ - NETRIKANN - மாலைக்கண் - திரை விமர்சனம் ...


நயன்தாரா நடிப்பில் அவரது காதலர் விக்னேஸ் சிவன் தயாரிப்பில் டிஸ்னி ப்ளஸ்  ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் நெற்றிக்கணஂ . இது பத்து ஆண்டுகளுக்கு முன் வந்த ப்ளைண்ட் கொரியன் படத்தின் ரீ மேக் . நெற்றிக்கண் திறந்ததா பார்க்கலாம் ...

சிபிஐ ஆபீசர் துர்கா ( நயன்தாரா ) கார் ஆக்சிடெண்டில் தன் தம்பி , வேலை , பார்வை எல்லாவற்றையும் இழந்து தடுமாரி வாழ்ந்து கொண்டிருக்கிறார் . அவர் வாழ்க்கையில் பெண்கள்  கடத்தி செக்ஸ் டார்ச்சர் செய்யும் ஒரு டாக்டர் சைக்கோ ( அஜ்மல் ) குறுக்கே  வருகிறான் . அவன் செய்கையில் சந்தேகம் கொள்ளும் துர்கா போலீசை நாடுகிறார் . போலீஸ் உதவியுடன் அவர் அந்த சைக்கோவை பிடித்தாரா என்பதே படம் ...



மாயா , அறம் வெற்றிக்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டாராக மாறியிருக்கும் நயனுக்கு இது ஏற்ற படம் . நயன் போலீசிடம் தகவல் சொல்லும் காட்சி , அஜ்மலை விசரரிக்கும் காட்சிகளில் தியெட்டரில் ரிலீஷ் அகியிருந்தால் விசில் பறந்திருக்கும் . அஜ்மலுக்கு வழக்கமான சைக்கோ கேரக்டர் அதனால் பெரிதாக எடுபடவில்லை . சப் இன்ஸ்பெக்டராக வந்து நயனுக்கு உதவி செய்யும் மனிகண்டன் ஜொலிக்கிரார் . இதுவும் கடந்து போகும் பாடல் , பின்னணி இசை இரண்டிலும் கிரிஸ் கோபாலகிருஷ்னன் ஸ்கோர் செய்கிறார் . 

படத்தின் ஆரம்ப காட்சிகளில் , இன்டர்வெல் வரை அடுத்தடுத்த நகர்வுகள் படத்துக்கு பலம் . மெட்ரோ வில் நயன் நாயுடன் போவது , எந்த செக்யூரிட்டியும் இல்லாமல் மெட்ரோ ,  மால் எல்லாம் இருப்பது, விடியோ காலில் ஸ்கிரீன் ஷாட் எடுக்காமல் நம்பியார் காலத்து பாணியில் ஸ்கெட்ச் வரைந்து குற்றவாளியை கண்டுபிடிப்பது எல்லாம் லாஜிக் சொதப்பல். சுருக்கமா சொன்னால் சின்னதம்பி கவுன்டமணிக்கு ஆறு மணி வரை ஆறு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் அண்டாவின் கரையை பார்க்கும் அளவுக்கு  கண் பார்வை இருந்தும் ஆறு மணிக்குப் பின் எதுவுமே தெரியாதது  போல இண்டர்வெல் வரை நன்றாக  போய் அதன் பிறகு தடுமாறும் நெற்றிக்கண் -  மாலைக்கண் ...   

ரேட்டிங்க் : 2.75 *  

இதன் வீடியோ விமர்சனத்தை Vanga Blogalam  யூ டியூப் சேனலில் காணவும் ...

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/jKYY7GG6GI4" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

16 November 2020

மூக்குத்தி அம்மன் | இந்துக்கள் மட்டும் இளிச்சவாயர்களா?!

ஆர்.ஜே.பாலாஜி தயாரித்து நடித்து என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியிருக்கும் படம் மூக்குத்தி அம்மன். இவர் முந்தைய எல்.கே.ஜி படத்தில் அரசியலை நையாண்டி செய்து வெற்றியடைந்ததைப் போல இதில் போலி சாமியார்களை கிண்டலடித்து வெற்றியடைந்தாரா? மூக்குத்தி அம்மன் ஜொலித்தாளா ?வாங்க பார்க்கலாம் ....

அப்பா ஓடிப்போனதால் மூன்று தங்கைகளையும் கரையேற்றும் பொறுப்பில் திணறிக் கொண்டிருக்காறார் பாலாஜி.  ஒரு நாள் குலதெய்வம் கோவிலில் மனமுறுகி வேண்ட நேரில் வரும் அம்மன் ( நயன்தாரா) இவரின் குறையை தீர்க்காமல் அவரின் மூலமாக ஊரையே வளைத்துப் போட நினைக்கும் போலி சாமியாரின் முகத்திரையை கிழிக்கிறார் ...

படத்திலேயே சொல்வது போல உண்மையிலேயே அழகான அம்மனாக நயன்தாரா படத்திற்கு பெரிய பலம் . ஆர்ஜே வாக இருந்து இயக்குனராக உயர்ந்திருக்கும் பாலாஜி திறமைசாலி ஆனால் ரேடியோ ஷோ போல படம் முழுவதுமே இவரே பேசிக் கொண்டிருப்பது போர் . ஊர்வசி ஓவர் ஆக்டிங்க் செய்து மேலும் வெறுப்பேற்றுகிறார் . மௌலி படத்தில் இருக்கிறார் அவ்வளவே!..

படத்தில் ஆங்காங்கே வசனங்கள் கிச்சு கிச்சு மூட்டுகின்றன . இடைவேளை வரை தேறும் படம் வில்லன் வந்த பிறகு படு மொக்கையாகி விடுகிறது . அதிலும் குறிப்பாக உலகமே வியக்கும் சாமியார் கதாபாத்திரத்தை படு கேவலமாகவா காட்டுவது . கவுண்டரிடம் அடி வாங்கும் செந்தில் போல ஆள் படு வீக் ...

இந்துக்கள் என்றுமே விமர்சனங்களை சகித்துக் கொள்பவர்கள் எனபதற்காக அம்மனை " உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் " என்றெல்லாம் பாடி அழைப்பது சுத்த கேப்மாரித்தனம் . மனோபாலா வை வைத்து எடுத்த பவர் பாஸ்டர் கிண்டல் சீன்களை மட்டும் நீக்கியிருக்கிறார்கள் . இந்துக்கள் மட்டும் இளிச்சவாயர்களோ?! . நடுநிலையில்லாத படத்தில் நாகர்கோவிலை மட்டும் அழகாக காட்டியிருக்கிறார்கள் . மொத்தத்தில் மொக்கை காமெடிகளின் தொகுப்பாக இருக்கும் மூக்குத்தி அம்மன் ஜொலிக்கவில்லை ....

ரேட்டிங்க் :  2.25 * 

ஸ்கோர் கார்ட் : 38  

வாங்க ப்ளாகலாம் அனந்து ...

இப்படத்தின் வீடியோ விமர்சனம் காண கீழே சொடுக்கவும் ...

https://youtu.be/iYAs7PWZyo4

15 November 2020

சூரரை போற்று | போற்றலாமா ? தூற்றலாமா ?!! I SOORARAI POTRU ...

சூர்யா தயாரிப்பு, நடிப்பில் சுதா கொங்குரா இறுதிசுற்று வெற்றிக்கு பிறகு நான்கு வருட இடைவெளியில் இயக்கியிருக்கும் படம் சூரரை போற்று . சாதாரணமான ஆட்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமென்கிற கனவை நிஜத்தில் நிஜமாக்கிய கேப்டன் கோபிநாத் எழுதிய அவரின் சுயசரிதை Simply fly புனைவை சினிமாவுக்காக மட்டுமில்லாமல் தனக்ககேற்றபடியும் சூர்யா - சுதா மாற்றியிருப்பதே சூரரை போற்று...

பெரியாரிய , கம்யூனிஸ சிந்தனைகளோடு வரும் சூர்யா பேசியே கொல்லப்போகிறார் என பயந்தால் நல்ல வேளை அடக்கி வாசித்திருப்பது ஆறுதல் . அதுவும் அபபாவை பார்க்கப் போக டிக்கட் காசில்லாமல் ஏர்போர்ட்டில் கெஞ்சும் இடம் அருமை.  பாரக்க ஊர்வசியின் தங்கை போலிருந்தாலும் நடிப்பிலும் , பாத்திரப் படைப்பிலும் அபர்ணா அசத்துகிறார் . பல கோடி ரூபாய் தேவைப்படும் இடத்தில் பதினோராயிரம் கொடுத்து விட்டு போதாதா என அப்பாவியாய் கேட்கும் கருணாஸ் கவனிக்க வைக்கிறார் ...

முகம் சாந்தமாய் இருந்தாலும் சகுனித்தனமான பார்வையில் வில்லத்தனத்தை காட்டத் தவறவில்லை பரேஷ் ராவத் . ஜி.வி.பிரகாஸ் குமாரின் இசையில் பின்ணணியும் , பாடல்களும் அருமை ...

சாதாரண மனிதன் பல போராட்டங்களை தாண்டி ஜெயிக்கும் தெரிந்த கதை தானென்றாலும் அதை திரைக்கதையில் சொன்ன விதத்தால் ஜெயிக்கிறார் சுதா . உண்மைக்கதையை அப்படியே எடுக்க முடியாது தான் அதற்காக அதை சொன்ன விதத்தில் கொஞ்சமாவது உண்மை வேண்டாமா ? சூர்யா அப்துல் கலாமை சந்திப்பது , ஊர் மக்கள் நிலத்தை அடமானம் வைத்து அவருக்கு பணம் அனுப்புவது , ஃப்ளைட்டை தரையிரங்க விடாமல் வில்லன் தடுப்பது என படத்தில் நிறைய பூ சுத்தல் ...

நிஜத்தில் இப்புத்தகத்தை எழுதியவர் ஐயங்கார் . ஆனால் அவர் கதாபாத்திரத்தை பிற்படுத்தப்பட்ட பெரியாரியவாதியாக காட்டுவதில் சுதா கொங்கரா , ஜுமித் மாங்கா என சாதியை பெயருடன் தாங்கியவர்களுக்கு என்ன அவசியமோ இல்லை அழுத்தமோ தெரியவில்லை . அமேசான் ப்ரைமுக்கும் , தொடர்  தோல்விகளால் தவித்த சூர்யாவுக்கும் இந்த சூரரை போற்று - சூர்யாவை தேற்று ...

ரேட்டிங்க்   : 3.25

ஸ்கோர் கார்ட்: 43

Pls Click below link to watch Video Review ...

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/1bFWGqPzCvI" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>






 



23 August 2020

லாக்அப் - LOCK UP - படம் எப்படி? ...

                                                                   

வெங்கட் பிரபு , வைபவ் காம்போவில் அவர்களது நண்பர் நிதின் சத்யா தயாரித்து Zee 5 ல் நேரடியாக ரிலீஸ் ஆகியிருக்கும் படம் லாக்அப் . புதுமுக இயக்குனர் சார்லஸ் இயக்கியிருக்கிறார் ...

வெங்கட் பிரபவிற்கு ஏற்ற டெய்லர் மேட் கேரக்டர் . கட்சிதமாக நடித்திருக்கிறார் . அமைதியாகவே வந்து போனாலும் தேவைப்படும் போது வில்லத்தனம் காட்டத்தவறவில்லை . வைபவ் தான் ஹீரோ என காட்டவோ என்னவோ ஒரு ஃபைட் அவர்க்கு எக்ஸட்ரா பார்ஸல் . வழக்கை விசாரிக்கும் ஈஸ்வரி ராவ் ரவுடியை அடிப்பதும் , வெங்கட் கலாய்ப்பதும் ஹைலைட் ...

இன்ஸ்பெக்டரை கொலை செய்தவனை கண்டுபிடித்து ப்ரமோசன் வாங்கலாமென நினைக்கும் வெங்கட்பிரபுக்கு அவன் கொலைகாரனல்ல என முட்டுக்கட்டை போடும் ஈஸ்வரி ராவிடமிருந்து ஆரம்பிக்கும் படம் இடைவேளை வரை விறுவிறுப்பாகவே போகிறது . வெங்கட்பிரபு _ வைபவ் இடையே நடக்கும் தில்லுமுல்லு திரைக்கதைக்கு உதவுகிறது ...

திரில்லர் படத்தில் படம் எதை நோக்கி போகுமென ஊகிக்க முடிவது சறுக்கல் . சுவாரசியத்துக்காக லாஜிக்கை கண்டுகொள்ளவில்லை . இரண்டு மணி நேரத்துக்குள் விறு விறு திரில்லராக வந்திருக்க வேண்டிய லாக்அப் சில தடுமாற்றங்களால் ஸ்டரக் அப் ஆகி நிற்கிறது ...

ரேட்டிங்க்: 2.75* / 5 * 

ஸ்கோர் கார்ட்: 41 .

இந்த விமர்சனத்தினை வீடியோவில் காண கீழே சொடுக்கவும் ...


<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/SvOu7m0MYto" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>



26 January 2020

சைக்கோ - PSYCHO - ஸ்டன்னிங்க் ...



இசைஞானி - மிஸ்கின் கூட்டணி யில் உதயநிதி பார்வை இழந்தவராக நடித்திருக்கும் சைக்கோ திரில்லர் படம் சைக்கோ. ஏற்கனவே அஞ்சாதே , யுத்தம் செய் , பிசாசு போன்ற படங்களால்  நம்மை கவர்ந்த மிஸ்கின் பொலிவிழந்த உதயநிதியின் நடிப்போடு  இசை , ஒளிப்பதிவு , இயக்கம் என எல்லா டெக்கினிக்கல் சமாச்சாரங்களாலும் தமிழ் சினிமா உலகிற்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் ...

The Chaser என்றொரு கொரியன் படம் அதில் சைக்கோ வில்லன் பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வான் . அவனிடம் சிக்கிக்கொள்ளும் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அவளுடைய ஓனரால் எவ்வளவு முயன்றும் காப்பாற்ற முடியாமல் போகும் . PSYCHO என்றொரு தமிழ் படம் அதில் சைக்கோ வில்லன் ( ராஜ்குமார் ) பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறான்  . அவனிடம் சிக்கிக்கொள்ளும் ரேடியோ ஜாக்கி ( அதிதி ) யை கண் பார்வையிழந்த காதலன் ( உதயநிதி ) கஷ்டப்பட்டு மீட்கிறான் . The Chaser படத்தின் நாட்டை தனக்கேற்ற பாணியில் மிஸ்கின் கவனிக்கும் படி சொல்லியிருக்கும் படமே சைக்கோ ...

அமுல் பேபி போல முகம் இருந்தாலும் ( The Chaser லும் அப்படியே ) க்ளோஸ் அப் காட்சிகளில் பார்வையாலேயே மிரட்டுகிறார் புதுமுக வில்லன் அங்குலுமாலியாக வரும் ராஜ்குமார். அடிக்காதீங்க டீச்சர்  என்று இவர் க்ளைமேக்ஸ் காட்சிகளில் கதறும் நடிப்பில் கவருகிறார் . அம்மாவையே வாடி போடீ என்று வசைபாடும் முதல் சீனிலேயே அதிரடியாக அறிமுகம் ஆகிறார் நித்யா மேனன் . வீல்சேரிலேயே வலம் வந்தாலும் இவருடைய கேரக்டர் படத்தை தொய்வில்லாமல் நிமிர வைக்கிறது  . பொதுவாக மிஸ்கின் படங்களில் ஹீரோக்கள் செய்யும் எக்சன்ட்ரிக் ரோலை இதில் நித்யா மேனன் திறம்பட செய்திருக்கிறார் ...

ஆர்ஜே வாக வரும் அதிதி பார்வையில்லாதவனையே கவரும் அளவுக்கு அழகாக இருக்கிறார் . காதலையே கன்ஃபார்ம் பண்ணாமல் இன்னும் ஒரு வாரத்தில் கவுதம் ( உதயநிதி ) உன்னை கொன்று விட்டு என்னை காப்பாற்றுவான் என தலையை வெட்ட வரும் வில்லனிடம் டயலாக் விடுவது சினிமாத்தனம் . அதே போல தலையை வெட்டி கொடூரமாக கொல்லும் சைக்கோவை இவர் குழந்தை என்று கடைசியில் சொல்வது நமக்கு கொலைவெறியை ஏற்றுகிறது . மேற்படி மூன்று கேரக்டர்களுக்கு பிறகே ஹீரோ உதயநிதி நமக்கு தெரிகிறார் . அவருடைய அலட்டிக்கொள்ளாத நடிப்பு ஓகே . அழுகின்ற சீன்களில் மூஞ்சியை மூடி ஒப்பேற்றுகிறார் . தேர்தல் பிரச்சாரங்களில் காட்டிய நடிப்பில் பாதியையாவது படத்தில் காட்டியிருக்கலாம் ...


மிஸ்கின் படம் என்பதையும் தாண்டி இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் ஓப்பனிங்கிற்கு முக்கிய காரணம் இசைஞானியின் இசையும் , சித் ஸ்ரீராம் குரலில் " உன்னை நெனைச்சு " பாடலும் தான் . அதை தவிர " நீங்க முடியுமா" பாடலிலும் பிஜிஎம் மிலும் தனது இசையால் மெஸ்மெரிஸம் செய்கிறார் இசைஞானி . பி.சி  யின் மாணவர் தன்வீரின் ஒளிப்பதிவு குருவை போலவே  கனகச்சிதம் . பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே நடந்தாலும் இவரது ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் ஒளியேற்றுகிறது . சிங்கம் புலி யின் கதாபாத்திரமும் அவரது முடிவும் சிம்ப்ளி சூப்பர்ப் . இன்ஸ்பெக்டராக வரும் ராமை விட டீச்சராக வரும் கேரக்டர் தான் படத்துக்கு பெரிய ஹைலைட் ...

முதல் சீனிலேயே சைக்கோ அறிமுகத்தால் நம்மை உறைய வைப்பது , காதல் காட்சிகளில் நேரத்தை வீணடிக்காமல் ஒரே பாடலில் அதன் வீரியத்தை உணர்த்தியது , நித்யா மேனன் கேரக்டரால் படத்துக்கு தேவையான பெப்பை கூட்டியது , வழக்கமான தமிழ் சினிமா போல கொலைகாரானுக்கு பெரிய
ப்ளாஸ்பேக்கெல்லாம் வைக்காமல் சில சீன்களிலேயே அதை உணர வைப்பது, பெண்ணின் உடலை அடையாளம் காட்டி விட்டு அழுது கொண்டே போகும் தாயாரை ஏரியல் சாட்டில் காட்டுவது என படம் நெடுக மிஸ்கினத்தனங்கள் நம்மை கட்டிப்போடுகின்றன ...

ஒவ்வொரு கொலைக்கு பிறகும் போலீஸ் வந்து தொப்பியை கழட்டுவதை தவிர கொலைகாரனை பிடிக்க வேறு எதையும் தீவிரமாக செய்யாதது சறுக்கல் . அதிலும் இந்த கொலைகாரனை பிடிக்கும் வேளையில் பிஸியாவே இருந்ததால் பொண்டாட்டியே ஓடிட்டா என்று சொல்லும் ராம் ஒரு சிசிடிவி யை கூட செக் செய்யாமல் இருப்பது பெருத்த  பின்னடைவு . சைக்கோ கொலைகாரனுக்கு ப்ளாஷ்பேக் இல்லாதது ஓகே ஆனால் அவர் பெண்களை மட்டும் கொலை செய்வதற்கும் அவர்கள் தலையை வெட்டி விட்டு உடலை மட்டும் உள்ளாடைகளுடன் பப்ளிக்கில் டிஸ்பிளே செய்வதற்கும் உளவியல் ரீதியாக ஒரு விளக்கம் கொடுக்காமல் விட்டது பெரிய மைனஸ் . வில்லனுக்கு கட்டை விரல் இல்லை என்கிற க்ளூவை சிங்கம் புலி விட்டுச்செல்வதை வில்லனை கண்டுபிடிக்கிறார்கள் ஆனால் க்ளோஸ் காட்சிகளில் வில்லனுக்கு கட்டை விரல் இருப்பது இமாலய கவனக்குறைவு ...

The Chaser , Red Dragon , I SAW Devil போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு Psycho
பெரிய அதிர்வை தராது ஆனால் தமிழ் படங்களை மட்டும் பார்க்கும் திரில்லர் விரும்பிகளுக்கு இந்த படம் மஸ்ட் வாட்ச் .  கடந்த வருடம் வெளி வந்த சீரியல் கில்லர் மூவி ராட்சனில் இருந்த நிறைவு சைக்கோ வில் மிஸ்ஸிங்.  ஆனாலும் கொலைகளை பட்டவர்த்தனமாக காட்சிப்படுத்திய விதங்களில் தமிழ் சினிமா உலகுக்கு சைக்கோ நிச்சயம் ஒரு ஸ்டன்னிங்க்  எக்ஸ்பீரியன்ஸ்...


ரேட்டிங் : 3.25 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 44 










6 April 2019

உறியடி 2 - URIYADI 2 - ஸ்டெர்லைட் நெடி ...


சாதாரண பின்புலத்திலிருந்து வந்து உறியடி மூலம் அனைவரையும் அட போட வைத்த விஜயகுமார் இப்போது தனது நடிப்பு , இயக்கத்தில் நடிகர் சூர்யா வுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் உறியடி 2 . ஹீரோ , டைட்டில் , கொஞ்சம் சாதி அரசியல் தவிர இரண்டு படத்துக்கும் பெரிதான தொடர்பு இல்லை ...

சொந்த ஊரிலேயே பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தன் நண்பர்களுடன் கெமிக்கல் இன்ஜினியராக வேலைக்கு சேர்கிறார் லெனின் விஜய் ( விஜயகுமார் ) . சரியான பராமரிப்பு இல்ல்லாததால் அங்கிருந்து கசியும் விஷ வாயு நண்பன் , பெற்றோருடன் சேர்த்து கிராமத்தையே  காவு வாங்குகிறது . இதற்கு காரணமான தொழிலதிபர் , அவருக்கு உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிகளை ஹீரோ எப்படி பழி வாங்குகிறர் என்பதே உறியடி 2 ...


வேலைக்கு போனாலும் கல்லூரி மாணவன் போலவே க்யூட்டாக இருக்கிறார் விஜயகுமார் . ஒரு பார்வையிலேயே  காதலை சொல்லிவிடுவது அருமை . நண்பன்  மெட்ராஸ் சென்ட்ரல்  சுதாகரும் , அரசியல் வாதிகளில் சின்ன சாதிக் கட்சி தலைவராக வருபவரும்  கவனிக்க வைக்கிறார்கள் . ஹீரோயினுக்கு இந்த படத்தில் டூயட்டோடு சேர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் கூடுதல் வேலையையும் கொடுத்திருக்கிறார்கள் . கோவிந்த் வசந்தா வின் பின்னணி இசை சில சமயம் கோரஸாக இரைந்தாலும் பெரும்பாலும் படத்திற்கு பலம் கூட்டுகிறது . படத்தில் அனைவரையும் ரொம்ப இயல்பாக நடிக்க  வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் ...

கல்லூரி மாணவர்களின் நட்புக்கிடையே புகும் சாதி அரசியலை தெளிவாக , தைரியமாக உறியடியில் சொன்ன விஜயகுமார் இதில் தொழிற்சாலையின் விஷ வாயு வெளியேற்றத்தால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பை கையிலெடுத்திருக்கிறார் . ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி எல்லோரும் பணத்துக்கும் , அதிகாரத்துக்கும் அடிமை என்பதை தெளிவாக சொல்கிறார் .
விஷவாயுவால் மக்கள் பாதிக்கப்படும் ஸீன்களை  மிக இயல்பாகவும் , நுட்பமாகவும் , டீட்லைல்டாக எடுத்திருப்பது ஹைலைட் ...

போலீஸ் வாடா என கூப்பிடும் போது என்னடா என்று விஜய் கேட்பது , பிணத்தில் கூட தனது சாதிக்காரனா என அரசியல்வாதி பார்ப்பது  போன்ற சில ஸீன்கள் மட்டுமே ஜெர்க் . முதலில் ப்ராமிசிங்காக ஆரம்பிக்கும் படம் இடைவேளைக்கு பிறகு மக்கள் போராட்டம் , டிவி விவாதம் என ஸ்டர்லைட் நெடியோடு சுற்றி வருவது அயர்ச்சி . மாற்று அரசியல் , மக்கள் எழுச்சி எல்லாம் பேசி விட்டு க்ளைமேக்ஸில் பழிவாங்கலோடு படத்தை சப்பென்று முடித்து இதுக்கு  ஏன்யா இத்தனை நேரமா டேபிள் சேரல்லாம் உடைச்சீங்க என கேட்க வைக்கிறார்கள் . படம் முடிந்து வரும் போது உறியடியை மீண்டும் பார்க்க வேண்டுமென தோன்றுவது உறியடி 2 க்கு பெரிய மைனஸ் ...

டிஸ்கி : ஸ்டெர்லைட் மேட்டரை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படத்தை தேர்தல் நேரத்தில் ரிலீஸ் செய்தால் சரியாக இருக்கும் என நினைத்திருப்பார்கள் போல ஆனால் படம் ஏப்ரல் 18 வரை ஓடுவது கடினமே ...

ரேட்டிங்க்  : 2.75 */ 5 *  

ஸ்கோர் கார்ட் : 42











12 January 2019

விஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...


சிறுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது  சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற யங் அஜித்தின் எனெர்ஜி . இன்டர்நேஷனல் லெவெலுக்குல்லாம் படம் நமக்கு சரிப்படாது என்பதை உணர்ந்து சிவா விவேகமாக வீரத்தோடு கொஞ்சம் வேதாளத்தையும் கலந்து கொடுத்தது  விஸ்வாசம் ...

தேனி மாவட்டத்தின் பெரிய தலைக்கட்டு தூக்குதுரை ( அஜித்குமார் ) , பத்து வருடங்களாக பிரிந்திருக்கும் மனைவி நிரஞ்சனா ( நயன்தாரா ) , மகள் ஸ்வேதா (அங்கிதா) இருவரையும் திருவிழாவிற்கு அழைக்க மும்பை செல்கிறார் . எந்த அடிதடியால் குடும்பத்தை பிரிந்தாரோ அதே அடிதடியால் மும்பையில் மகளை காப்பாற்றி மீண்டும் குடும்பத்தோடு இணைவதே விஸ்வாசம் . சுருக்கமாக சொன்னா காதலித்த பெண்ணின் குடும்பத்துக்காக அடிதடி பண்ணா வீரம் , தன் குடும்பத்துக்காக பண்ணா விஸ்வாசம் ...


அஜித் ஸ்டைலாக நடப்பார் , பைக் ஓட்டுவார் என வழக்கமாக இல்லாமல் அவரின் காமெடி அண்ட் செண்டிமெண்ட் நடிப்பு படத்துக்கு ஹைலைட் . ஒபெனிங் சீனில் ஃபைட் இல்லாமலேயே மாஸ் காட்டியிருப்பது நைஸ் . ஃப்ரேம் பை ஃப்ரேம் அஜித் இருந்தாலும் கொஞ்சம் கூட சலிக்காதது தான் 
தலயின் ப்ளஸ் .  ஆக்சனை விட செண்டிமெண்ட் காட்சிகள் தூக்கலாகவே இருப்பதால் நிச்சயம் பெண்கள் மனதில் நல்ல இடம் பிடிப்பார் இந்த தூக்குதுரை ...

மாஸ் ஹீரோ படத்துக்கு டூயட்டுக்கு மட்டும் வந்து போகாமல் நல்ல வெயிட்டான கேரக்டரில் நயன்தாரா . உங்கள கட்டிபிடிக்கணும்னு தோணினா கைய பிடிப்பேன் என்று சொல்லும் இடத்தில் மனதில் இடம் பிடிக்கிறார் . இண்டெர்வெல்லை ஒட்டி வந்தாலும் செகண்ட் ஆஃப் முழுவதும் படத்தை டேக் ஆஃப் செயகிறாள் அங்கிதா . நயன்தாராவை விட அஜித் - அங்கிதா ஜோடி அப்பா மகளாக நல்ல கெமிஸ்ட்ரி . வில்லனாக வந்து ஹீரோவிடம் கடைசியில் அடிபட்டு சாகாமல் நல்ல அப்பாவாக மாறும் வேடத்தில் ஜெகபதி பாபு . யோகி பாபு , ரோபோ சங்கர் , தம்பி ராமையா கூட்டணி கிச்சுகிச்சு மூட்ட முயற்சி செயகிறார்கள் . விவேக் - கோவை சரளா படத்தில் இருக்கிறார்கள் . " அடிச்சு தூக்கு " பாடலில் ஆட வைக்கும் இமான் 
" ஆராரோ " பாடலில் கொஞ்சம் அழ வைக்கிறார் ... 


பொங்கலுக்கு குடும்பத்தோடு பார்க்கும்படியாக ஒரு யு சான்றிதழ் படத்தை கொடுத்திருக்கும் சிவா வுக்கு பாராட்டுக்கள் . அஜித் திடம் இருந்து ஆக்சனை தாண்டி நெகிழ்வான நடிப்பையும் வரவைத்து விக்ரமன் இல்லாத குறையை தீர்க்கிறார் சிவா . அஜித் சோல்டரிலேயே பயணித்தாலும் பெரிய நட்சத்திர பட்டாளத்தை சரியான விதத்தில் பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம் .
ஆக்சன் , செண்டிமெண்ட் ரெண்டையும் சரியான விகிதத்தில் கலந்திருப்பது ப்ளஸ் . " ஒண்டிக்கு ஒண்டி வாடா " , " நேர்மையா இருக்கறது நம்ம திருப்திக்கு" , " அரசியல் பேசாத "  போன்ற வசனங்களால்  சர்க்காரை சீண்டியிருப்பது ரசிகர்களுக்கு விருந்து .இண்டெர்வெல் ப்ளாக்கில் நிமிர வைத்து விட்டு பின் நெகிழ மட்டும் வைப்பது நாட் இனஃப் ...

என்ன தான் கோபம் என்றாலும் புருஷனை விட்டு பத்து வருடம் மனைவி பிரிந்திருப்பதும் , மனைவி , மகளை பார்க்க எந்த முயற்சியும் எடுக்காமல் தூக்குதுரை தூங்கிக் கொண்டிருப்பதும் சறுக்கல் . ஆண்டனி இருந்தால் தான் பாட்சாவுக்கும் பலம் . இங்கே தூக்குதுரை யை பார்த்து எதிரிகள்  பம்முகிறார்கள் . மும்பை வில்லனுக்கும் வலுவான காரணங்கள் இல்லை . சோலோவாக அஜித் கிரௌண்டில் சிக்ஸராக அடித்துக்கொண்டிருப்பது போரடிக்கிறது . " தலையில் ரத்தக்கட்டு ,நார்மலாவது கடினம் " என்று டாக்டர் சொன்ன அடுத்த சீனிலேயே அஜித் சண்டை போடுவது சொதப்பல் . பாசம் எனும் நெய்யை அதிகமாக போட்டு நம்மை வழுக்க  வைக்காமல் அரிசி , நெய் , மிளகு, பருப்பு என எல்லாவற்றையும் சேர்த்து இன்னும் சுவையாக கொடுத் திருந்தால் விஸ்வாச பொங்கல் படு வெரைட்டியாக இருந்திருக்கும் . ஸ்டில் 
அல்டிமேட் அஜித்தால் விஸ்வாசம் இஸ் வித்ஸ்டாண்டிங் ... 

ரேட்டிங்  : 2.75 * / 5

ஸ்கோர் கார்ட் : 42 


1 May 2017

பாகுபலி 2 - BAHUBALI 2 - The Conclusion - கோடை கொண்டாட்டம் ...


" Why Kattappa Killed Bahubali " ? - இந்த கேள்வியை  தான் கடந்த மூன்று வருடங்களாக இந்தியாவே கேட்டுக்கொண்டிருந்திருக்கும்  . ஆனால் இந்த கேள்விக்கான பதிலை படம் பார்க்கும் போதே யூகிக்க முடிந்தாலும் அந்த பிரம்மாண்டம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறது . பாகுபலி 1 வசூல் மூலம் ஷாருக் , சல்மான் , அமீர் என்று எல்லா கான்களையுமே  கலங்கடித்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி . பாகுபலி 2 மூலம் ஹாலிவுட்டுக்கே சவால்  விட்டிருக்கிறார் என்றே சொல்லலாம் ...

கட்டப்பா ( சத்யராஜ் ) வின் வாக்குமூலம் வாயிலாக தொடங்கும் படம் அமரேந்திர பாகுபலி ( பிரபாஸ் ) யின் அட்டகாசமான அறிமுகம் , தேவசேனா
( அனுஷ்கா ) வுடனான காதல் ,   அன்னை சிவகாமியுடன் மனக்கசப்பு , அரியணைக்காக சகோதரன் பல்லதேவன்
( ராணா டக்குப்பட்டி ) செய்யும் சூழ்ச்சி என்று விரியும் படம் மகன் மஹேந்திர பாகுபலி ( பிரபாஸ் ) மகிழ்மதி யின்  ஆட்சியை கைப்பற்றுவதோடு முடிகிறது ...


தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஸ்க்ரீனில் வந்தவுடனேயே தியேட்டரில் விசில் பறக்கிறது . அதுவே ஒரு மிகப்பெரிய வெற்றி . முதல் பாகத்தை விட இதில் அவருடைய உழைப்பு கடுமையானது . ஹீரோயிசம் இதில் படு தூக்கலாக இருப்பது கொஞ்சம் சலிப்பை கொடுத்தாலும் அந்த பிரம்மாண்ட பாகுபலிக்கு பிரபாஸ் படு கச்சிதம் . ராணா தன்  பார்வையிலேயே வில்லத்தனத்தை காட்டுகிறார் . வில்லன் கேரக்டருக்கு உடம்பை இந்த அளவு வருத்தி ஏற்றியது இவராக தான் இருக்கும் . அரசணை வேண்டுமென்றால் அண்ணனாவது , தம்பியாவது என்கிற வன்மம் படம் நெடுக அவர் உடல்மொழியிலேயே தெரிகிறது ...

அரசிக்கேற்ற கச்சிதமான வேடத்தில்  அனுஷ்கா . என்ன படம் ரொம்ப வருடம் எடுத்ததாலோ என்னமோ அம்மணி டயட்டை மறந்துவிட்டார் . விளைவு சில சீன்களில் ஆன்டி போல தெரிகிறார் ஆனா அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் . " நான் இந்த பெரிய படத்தில் சின்ன நடிகன் " என்று மன்னிப்பு கடிதம் வாசித்தார் சத்யராஜ் . படம் பார்த்த பிறகு புரிகிறது . ஹீரோவுக்கு அடுத்த படியாக வரும் ரொம்ப சின்ன வேடம் என்று . முதல் பாதி வேகமாக நகர்வதற்கு இவரது காமெடி நிறையவே கை கொடுக்கிறது . படையப்பா வுக்கு பிறகு ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் . ஆஜானுபாகுவான ஆண்களுக்கு மத்தியில் உருவத்தில் சின்னவராக  இருந்தாலும் கம்பீரமான நடிப்பால் மிரட்டுகிறார் .  நாசர் நடிப்புக்கு கோபத்தில் சுவற்றை உடைக்கும் அந்த ஒரு சீனே போதும் . அனுஸ்கா வின் மாமா வாக வருபவரும் இந்த ஸ்டார் பட்டாளத்துக்கு நடுவே ஸ்கோர் பண்ணுகிறார் ...


மேலைநாடுகளுக்கு எந்தவிதத்திலும் இந்தியன் சளைத்தவனில்லை என்று நிரூபிக்கிறார் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் . காதல் , ஆக்சன் , செண்டிமெண்ட் என்று எல்லா காட்சிகளிலும் படத்தின் பிரம்மாண்டத்தை நம் கண்களிலும் தக்க வைக்கிறது அவரது ஒளிப்பதிவு . சி.ஜி . ஆக்சன் , செட் என்று எல்லாமுமே சேர்ந்து நம்மை புது உலகுக்குள் கொண்டு செல்கின்றன .
கீரவாணி யின் பின்னணி இசை இதில் முந்தையதை விட ஒரு மாற்று குறைவு தான் . கார்க்கியின் பாடல்கள் டப்பிங்க் நெடியில் இருந்தாலும் வசனங்கள் கவர்கின்றன .  ஆனால் இந்த டெக்கனிகள் பூச்சாண்டிகளை மட்டுமே நம்பாமல் திரைக்கதையில் தனது தனி முத்திரையை பதிக்கிறார் ராஜமௌலி ...

கிட்டத்தட்ட மூன்று மணி நேர படம் ஒரு வித தொய்வை கொடுத்தாலும் முதல்  பாதி போவதே தெரியவில்லை . படத்திற்கு ஆக்சன் காட்சிகள் தான் பலம்னாலும்  ஒரு சின்ன பெஞ்சில் முட்டிக்கொண்டாலே நமக்கு முட்டி ரெண்டு நாளைக்கு விண்ணுன்னு தெறிக்குது இதுல என்னென்னா கோட்டையே இடிஞ்சு விழுந்தாலும் திரும்பவும் எந்திருச்சு ஃப்ரெஷ்ஷா சண்டை போடுறாய்ங்க . பிரபாஸ் தாவி தாவி ஓடும் போது சோட்டா பீம் கண் முன் வந்து போகிறார் . பாகுபலி 1 இல் " ஐஸ்தராப்பூ ஸ்வஞிக " என்று நமக்கு புது பாஷை சொல்லிக்கொடுத்த வில்லன் இதில் மிஸ்ஸிங் . ஹாலிவுட்டின்  ஹீ மேன் , ஸ்பைடேர் மேன் , சூப்பர் மேன் இதுக்கெல்லாம் தாத்தா நம்ம ஹனுமான் . அதை திரையில் சொல்வதற்கும் நம்மிடம் ஆள் இருக்கிறது எனும் வகையில் உலக அரங்கில்  நம்மை தலைநிமிர வைத்திருக்கும் படம் பாகுபலி . "பாகூகூ கூ கூ  பலி " , " மகிழ் மதீஈ " என்று வீட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளையும் கூவ வைத்திருக்கும் பாகுபலி 2 நிச்சயம் கோடை கொண்டாட்டம் ...

ரேட்டிங்க்           : 3.75 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 48








8 July 2016

தில்லுக்கு துட்டு - DHILLUKKU DHUDDU - வேஸ்டாவாது ...


காமெடியனாக பீக்கில் இருக்கும் போதே மேலும் காலம் தாழ்த்தாமல் ஹீரோ வாக தில்லாக களம்  இறங்கியவர் சந்தானம் . அவரின் முடிவு அவருக்கு பெரிதாக கை கொடுத்ததோ இல்லையோ நிச்சயம் சூரி , சதீஷ் போன்ற சக காமெடியன்களுக்கு நிறையவே கொடுத்திருக்கிறது . சோலோ ஹீரோவாக தனது மூன்றாவது படத்தில் " லொள்ளு சபா " ராம்பாலா வுடன் கை கோர்த்து தமிழ் சினிமாவின் கரெண்ட் ட்ரெண்ட் ( இன்னுமா முடியல ! ) ஹாரர் காமெடியில்  சேஃபாக கால் பதித்திருக்கும் படம்  தில்லுக்கு துட்டு ...

ஹீரோ வென்று களம் இறங்கியவுடன் சும்மா இராமல் உடலை எடையை குறைத்து ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி ஸ்மார்ட்டாக இருக்கிறார் சந்தானம் . ஆனால் என்ன சிவகார்த்திகேயன் போலல்லாமல் பத்து வருடமாய் சினிமாவில் பக்கா காமெடியனாக பார்த்தவரை காதல் , ஆக்சன் காட்சிகளில் பார்க்கும் போது லேசாக நெருடுகிறது . அதை தவிர்த்து பார்த்தால் தனது வழக்கமான ஒன் லைனர்களில் படம் நெடுக கலாய்த்து நம்மை கிடுக்கி பிடி போடுகிறார் சந்தானம் . ஹீரோயின் கேரக்டர் சேட் பொண்ணு என்பதால் செவப்பாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்து விட்டார்கள் போல . சனயா சின்ன வயது கோவை சரளா போல இருக்கிறார் . இவர் வரும் க்ளோஸ் அப் காட்சிகள் Zee டி வி யில் ஹிந்தி டப்பிங் சீரியல் பார்ப்பது போல இருக்கிறது ...



மொட்டை ராஜேந்திரன் வரும் போது சந்தானம் அளவுக்கு கை தட்டுகிறார்கள் . அவரும் தனது கட்டை குரலில் பேசி கூலாக நடிக்கிறார் . இவர் டீமுடன் அடிக்கும் பேய் ரகலைகளை ரசிக்க முடிந்தாலும்  ஒரே மாதிரியான மேனரிசம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்து விட்டது . சிறந்த நடிகர் சவுரப் சுக்லா வை முடிந்தவரை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள் . ஆனந்தராஜ் மற்றும் கார்த்திக் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் . தமன் இசையில் " சிவன் மகன் டா " மட்டும் முணுமுணுக்க வைக்கிறது . கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் , தீபக் குமார் பாடி யின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் ...

படத்தில் வரும் காதல் காட்சிகள் ஹீரோயினின் லிப் மூவ்மெண்ட் போல படத்தோடு சரியாக சிங்க் ஆகாமல் தனியாக ஓடுகிறது . முதல் பாதி சுமாராக போனாலும் பேய் பங்களாவுக்குள் நுழையவதற்கு முந்தைய சீன்களில் இருந்து படம் சூடு பிடிக்கிறது . அதன் பிறகு ரியல் பேய் - ரீல் பேய் என்று சுத்த விட்டு நம்மை சிரிக்க வைக்கிறார்கள் . சந்தானம் - ராம்பாலா கூட்டணி யில் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தாலும் சந்தானம் ஹீரோ , ஹாரர் காமெடி ஜெனர் படத்தில் புதுசாக என்ன செய்து விட முடியும் ? என்றே தோன்றுகிறது . பொழுதுபோக்காக சினிமாவுக்கு செல்லும் யாருக்கும் இந்த தில்லுக்கு துட்டால் துட்டு வேஸ்டாவாது ...

ரேட்டிங்  :   2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 41 


21 February 2016

சேதுபதி - SETHUPATHY - ஸ்லோ அண்ட் ஸ்டடி ...


ண்ணையாரும் பத்மினியும் பேசப்பட்ட அளவுக்கு பணம் பண்ணவில்லை . அதை நிவர்த்தி செய்யும் வகையில் விஜய் சேதுபதியை வைத்து இயக்குனர் அருண்குமார் எடுத்திருக்கும் மாஸ் ஆக்சன் படம் சேதுபதி . ஹீரோ போலீஸ் என்பதால் பஞ்ச் டயலாக் பேசி பத்து பேரை வானத்தில் பறக்க விடாமல் க்ரிப்பையும் விட்டுக் கொடுக்காமல் ரசிக்க வைக்கிறான் சேதுபதி ...

ஒரு எஸ்ஐ கொலையை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சேதுபதி ( விஜய் சேதுபதி ) அதற்கு காரணமான ஊர் பெரிய மனுஷன் வாத்தியாரை ( வேலு ராமமூர்த்தி ) கைது செய்ததால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் , அவர் எப்படி ஜெயிக்கிறார் என்பதையும் சொல்லும் வழக்கமான கதை தான் சேதுபதி . ஆனால் 2010 இல் காவல் துறை அதிகாரி கொலை செய்யப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து விஜய் சேதுபதி க்காக மாஸ் படத்தை கொஞ்சம் கிளாஸாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ...

சில வெற்றிகளை கொடுத்திருந்தாலும் தனது ரசிகர்களை கன்சாலிடேட் செய்யும் விதமாக விஜய் சேதுபதியை ஒரு ஆக்சன் ஹீரோவாக மாற்றியிருக்கிறான்  சேதுபதி . உடற்கட்டில் தெரியும் தொளதொளப்பை   கண்களிலும் , மீசையிலும் காட்டும்  போலீஸ் மிடுக்கில் சமன் செய்கிறார் சேதுபதி .  தன்னை முறைக்கும் வாத்தியாரின் மாப்பிள்ளையை பார்த்து " அப்படி பாக்காதய்யா எனக்கு சிரிப்பா வருது " என்று சொல்லும் இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது . என்ன தான் ஆக்சன் ஹீரோவாக இருந்தாலும் வீட்டில் காதலுடன் மனைவி காலில் விழும் இடத்தில் ரியல் ஹீரோவாக தெரிகிறார் விஜய் சேதுபதி ...

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பினும் பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அழகில் ரம்யா நம்பீசன் . காலில் தாராளமாக விழலாம் என்று சொல்லவைக்கும் காதல் கண்கள் . இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் கெமிஸ்ட்ரி செமையாக வொர்க் அவுட் ஆகியிருந்தாலும் ஹீரோ ஒரியண்டட் படத்தில் அடிக்கடி வரும் இவரது காட்சிகள் கொஞ்சம் நிறையவே ஸ்பீட் பிரேக்கர் ...


காப் படங்களில் ஹீரோயின் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகிறதோ இல்லையோ ஹீரோ - வில்லன் காம்பினேஷன் வொர்க் அவுட் ஆக வேண்டும், அதற்கு சமீபத்திய உதாரணம் தனி ஒருவன் . அந்த வகையில் வில்லன் வாத்தியார் ஆக வரும் வேலு ராமமூர்த்தி மதுரை பேக் ட்ராப்பிற்கு நன்றாக பொருந்தினாலும்  கம்பீர சேதுபதிக்கு முன்னால் ஸ்கூல் தமிழ் வாத்தியார் போல இருக்கிறார் . கைது செய்யப்பட பிறகு சொந்தமாக எதுவும் செய்யாமல் சேதுபதிக்கு வரும் வேறொரு பிரச்சனையை வைத்து அவரை காலி செய்ய நினைப்பது புத்திசாலித்தனமாக பட்டாலும் பெரிய இம்பேக்ட் இல்லை .
" இனிமே உன் வாழ்க்கையில வர ஒவ்வொரு நிமிஷமும் நான் எழுதினதாத்தான் இருக்கும் " என்று அவர் பேசும் வசனத்தில் இருக்கும் வீரியம் செயலில் இல்லாதது சறுக்கல் ...

நானே ராஜா பாடல் தவிர மற்றவை பெரிதாக கவரவில்லை . பின்னணி இசையில் இரைச்சலை தவிர்த்திருக்கலாம் . வாத்தியாரின் மாப்பிள்ளையாக நடித்திருப்பவர் , போலீஷ்காரர் மூர்த்தி , விசாரணைக்கமிஷன் ஹெட் ஆக வருபவர் என படத்தில் நிறைய பேர் கவர்கிறார்கள் ...

விஜய் சேதுபதியின் நடிப்பு , கொஞ்சம் நீளமாக இருந்தாலும் மனதை டச் செய்யும் லவ் சீன்கள் , போலீஸ்காரர்களின் நல்ல பக்கத்தை காட்டும் டைட்டில் சாங் , வாத்தியாரின் ஆட்களை ஸ்டேஷனில் காக்க வைத்து விட்டு அவரை செவிலில் அறைந்து கைது செய்வது , வீட்டை சூழ்ந்த அடியாட்களை கொஞ்சம் கூட பதட்டப்படாமல் மகனிடம் போனில் பேசி அவனை வைத்தே விரட்டுவது உட்பட நல்ல மாஸ் சீன்கள் போன்றவை கொஞ்சம் நீளமான முதல் பாதி , சட்டென்று முடியும் க்ளைமேக்ஸ் , சம பலம்  இல்லாத வில்லன் & கோ ஆகிய குறைகளை மறக்கடிக்கின்றன . மொத்தத்தில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் ஸ்டெடியாக இருக்கும் சேதுபதியை விஜய் சேதுபதிக்காகவும் , அப்ளாஸ் அள்ளும்  மாஸ் சீன்களுக்காகவும் பார்க்கலாம் ...

ரேட்டிங் : 3 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 42




31 January 2016

இறுதிச்சுற்று - IRUTHI SUTRU - ஜெயிக்கும் ...


லைபாயுதே வில் அறிமுகமாகி மின்னலே , ரன் வெற்றிகளின் மூலம் தனக்கென்று ஒரு தனி மார்க்கெட்டை ஏற்படுத்திக்கொண்டவர் மாதவன் . ஹீரோவாக மட்டும் வளம்  வர நினைக்காமல் பீக்கில் இருக்கும் போதே ஆயுத எழுத்து படத்துக்காக மொட்டை போட்டுக்கொண்டு வில்லனாக நடித்து மற்ற கமர்சியல் ஹீரோக்களை விட பல படிகள் மேலே சென்றவர் . ஆனால் அப்படிப்பட்டவரை மன்மதன்அம்பு , வேட்டை படங்களில் ஒரு ஜோக்கர் போல பார்க்க நேர்ந்தது காலக்கொடுமை . இதோ அதற்கு பிராயச்சித்தம் போல இத்தனை வருட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறது இறுதிச்சுற்று ...

தன்னால் சாதிக்க முடியாததை தனது மாணவி மூலம் சாதிக்க நினைக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இறுதிச்சுற்று . ஏற்கனவே பார்த்துப்பழகிய ( வெற்றி மேல் வெற்றி , குமரன் S / O மகாலட்சுமி etc ...) கதைக்கு யதார்த்தமான அதேசமயம் க்ரிப்பான திரைக்கதையால் மெருகேற்றியிருக்கிறார் இயக்குனர் சுதா கோங்குரா ...


மாதவன் அழகாக இருந்தாலும் அவரிடம் உள்ள  சாக்லேட் பாய் இமேஜ் நெருடும் . வெறும் உடம்புடன் வரும் முதல் சீனிலேயே அதை சுத்தமாக உடைத்தெறிந்து நம்மை உள்வாங்குகிறார் மேன்லி மாதவன் . இந்த உடற்கட்டுக்காக வருடக்கணக்கில் அவர் போட்ட உழைப்பு வீண்போகவில்லை .  மனைவி ஓடிப்போனதை சொல்லும் போது காட்டும் ஆதங்கம் , மாணவி வேண்டுமென்றே தோற்கும் போது காட்டும் கோபம் , நீ அவ்ளோ தாண்டா என்று சொல்லும் போது காட்டும் நக்கல் என படம் முழுவதும் கோபக்கார கோச் பிரபு வாக வியாபித்து நிற்கிறார் மாதவன் . இனிமேல் இது போன்ற படங்களில் அவர் கவனம் செலுத்துவார்  என்று நம்புவோமாக ...

மதி ரோலுக்கு பாக்சர் ரித்திகா சிங்கை தேர்ந்தெடுத்ததோடு விட்டு விடாமல் அவர் முதல் படம் என்றே தெரியாத அளவுக்கு நடிக்க வைத்திருக்கும் இயக்குனருக்கு ஒரு பூச்செண்டு . பொண்ணு பின்னி பெடெலெடுத்திருக்கு . மாதவனுக்கு ஈக்குவலாக ஏன் ஒரு படி மேலாகவே ரித்திகா நம்மை கவர்கிறார் என்றால் மிகையாகாது . வேண்டுமென்றே தோற்று விட்டு மாதவனை பார்த்து நக்கலாக சிரிக்கும் இடம் ஒன்றே போதும் இந்த பொண்ணோட திறமைக்கு சான்று ...



மதியின் அக்கா லக்ஸ் ( மும்தாஸ் ) கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் ஸ்போர்ட்ஸ் டெம்ப்ளேட் டிலிருந்து  சற்று விலகி நிற்கிறது படம் . எனக்கு ஏன் மாஸ்டர் நீங்க அவள  மாதிரி கோச்சிங் கொடுக்கல என்று அவர் ஆதங்கப்படுவதும் , அதற்கு மாதவன் பதிலளிப்பதும் உருக்கம் . காளி வெங்கட் , ராதா ரவி குறிப்பாக நாசர் என எல்லோருமே இறுதிச்சுற்றில் நம்மை இறுக்கிப்பிடிக்கிறார்கள் . ஏற்கனவே லீ படத்தில் பார்த்த அதே ரோலில் ஜாகிர் ஹுசைன் . இவர் மாதவனிடம் பேச்சோடு பேச்சாக ஐடி கார்டை வாங்கும் இடம் படத்துக்கு ஹைலைட் . சந்தோஷ் நாராயணின் இசை , சிவகுமார் சூரியனின் ஒளிப்பதிவு , சதீஷ் சூரியா வின் எடிட்டிங் என எல்லாமுமே படத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றன . அருண் மகேஸ்வரனின் கவுச்சியான வசனங்கள் கவுதம் மேனன் படங்களை சில நேரம் நினைவு படுத்தினாலும் நிறைவு ...

உலக அளவில் நிறைய படங்களில் பார்த்த வாழ்ந்து கெட்ட கோச்சின் கதை , அதில் வழக்கமான அரசியல் பண்ணும் வில்லன் , மாஸ்டரின் பேரைக் காப்பாற்றும் மாணவி என கதையில் எதுவுமே புதுசாக இல்லாமல் போனாலும் கேரக்டர்களுக்குள் நம்மை கொண்டு செல்லும் டீட்டைளிங்கிலும், ( குறிப்பாக மாதவன் வரும் முதல் சீனிலேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை சொன்ன விதம் ) ப்ரெசெண்டேசனிலும் தான் மணிரத்னத்தின் மாணவி என்று நிரூபிக்கிறார் சுதா கோங்குரா . இது போன்ற கதைகளில் கிளைமேக்சில் ஒரு சண்டை வரும், அதில் முதலில் அடி வாங்கும் லீட் கேரக்டர் பிறகு எதிராளியை வீழ்த்தி ஜெயிக்கும் என்று தெரிந்த சீனாக இருந்தாலும் இதில் மதி ஜெயிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை நம்முள் விதைத்த விதத்தில் ஜெயிக்கிறார் இயக்குனர் . விளையாட்டுத் துறையில் இருக்கும் அரசியல் , ஆணாதிக்கம் , அதிகார துஷ்பிரயோகம் இவற்றை அழுத்தமாக சொன்ன விதத்திலும் , இரண்டு மணி நேர படம் முடிந்த பிறகும்  பிரபு , மதி இருவரையும் பற்றி நம்மை நினைக்க வைத்த வகையிலும் இறுதிச்சுற்று ஜெயிக்கும் ...

ரேட்டிங்  : 3.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 44 



23 September 2015

த்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...


முதல் படமான டார்லிங் சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய்  அதையே  கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா வில் நடித்து விட்டார் ஜி.வி என நினைக்கிறேன் . அடல்ட் செக்ஸ் பேஸ் மூவி தமிழுக்கு போல்டாக பட்டாலும் படத்தில் காமெடி என்கிற பெயரில் காம நெடி மட்டுமே தூக்கலாக இருக்கிறது ...

வெர்ஜின் பையன் ஜீவா ( ஜி.வி.பிரகாஷ்குமார் ) தனது சிறு வயது தோழிகள் தீபிகா ( ஆனந்தி ) , அதிதி ( மனிஷா யாதவ் ) இருவரையும் லவ் பண்ணி கடைசி வரை கன்னி கழியாமல் இருந்து பல்பு வாங்குவதே கதை . வழக்கமான காதல் தோல்வி ஹீரோ புலம்பலை செக்ஸ் , டபுள் மீனிங் ஜோக்குகளை சேர்த்து அடுத்த கியருக்கு தாவியிருக்கிறார்கள் ...

ஆரம்ப காலங்களில் தனுஷை இமிடேட் செய்தது  இருக்கிறது ஜி.வி.யின் தோற்றம் மற்றும் பாடி லாங்குவேஜ் . முதல் படத்திற்கு இந்த பட நடிப்பு தேவலாம் என்றாலும் இன்னும் லாட்ஸ் டு கோ . எப்பவுமே மூஞ்சில விரக்தியா ?  கொஞ்சம் வெரைட்டியும் காட்டுங்க பாஸ் ! . இரண்டு ஹீரோயின்களில் ஆனந்தி பெரிய விழிகளில் அழகாய் பேசுகிறார் . க்ளைமேக்சில் இவர் ஏற்கனவே அடிபட்ட மேட்டரை உடைக்கும் போது நமக்கே " என்னமா இப்புடி பண்ணிட்டியேம்மா " என்று ஜி.வி மேல் வருத்தம் வரத்தான் செய்கிறது . மாங்கு மாங்கென்று குடிக்கும் பெண்ணாக மனிஷா . நான் ஏன் குடிக்கக்கூடாது என்று ஜி.வி யை இவர் மடக்கும் சீன் சூப்பர் . கிளாமரா டவுசரோட நடிக்குற பொண்ணுக்கு கொஞ்சம் மூஞ்சியோட சேத்து மத்த இடத்துக்கும் மேக்கப் போட்டா தேவல ! . ஜோதிகா ஜம்மென்று 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இது போன்ற படங்கள் சிம்ரனுக்கு தேவையா ?! . வி.டி.வி கணேஷ் பெரிசாக இம்ப்ரெஸ் செய்யவில்லை ...


அடல்ட் கன்டென்ட் படம் தமிழில் எடுப்பதில் தப்பில்லை  . செக்ஸ் மேட்டரை ஆன் பெண் வித்தியாசம் இல்லாமல் பேசியது பாவமில்லை . ஒரு மெச்சூர்ட் படமாக இல்லாமல் காமெடி யாக கொடுத்ததிலும் ஏமாற்றமில்லை . ஆனால் அதையே ஸ்ட்ராங்காக இல்லாமல்  நிறைய தனி தனி அடல்ஸ் ஒன்லி சீன்களை எடுத்து பிட் பிட் டாக ஓட்ட வைத்தது போல படம் இருப்பதே குறை . ஏ சர்டிபிகேட் படத்துக்கு சின்ன பசங்கள வச்சு எதுக்கு இத்தன சீனு ? படத்துல ஹீரோ விர்ஜின் ?! ஆனா பொண்ணுங்க விர்ஜினா கிடக்குறது டைனோசர் காலத்துலேயே முடிஞ்சிருச்சு என்று வி டி.வி கணேஷ் டயலாக் விடுவது மட்டும் எந்த ஊரு நியாயங்கோ ?! ...

சரக்கை வாங்கிக் கொடுத்து விட்டு சைட் டிஷுக்கு தன் கன்னத்தை காட்டும் ஒரு ஹீரோயின் , சரக்கடித்து விட்டு வரும் ஹீரோ வை ட்ரங்கஅன்ட் டிரைவ் ஸ்டடியாக இருக்காது என்பதால் தொட விடாமல் ஏய்க்கும் மற்றொரு ஹீரோயின் என்று இதுவரை ஹீரோயின்ளை அப்பாவிகளாக அல்லது லூசுகளாக மட்டும் காட்டி வந்த இயக்குனர்களுக்கு மத்தியில் டெர்ரெர்ராக காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆதிக் இரவிச்சந்திரன் . ஆனாலும் கடைசியில் பெண்களை மட்டும் ஹீரோவை வைத்து திட்ட விடுவதில் ஆதிக்கிடம் தெரிவது ஆணாதிக்கம் மட்டுமே . ஒரு காலத்தில் இலை மறை காய் மறையாக இருந்த செக்ஸ் சமாச்சாரம் செல்போன் வருகையால் தெருச்சரக்காகி விட்ட இந்த காலத்தில் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்கிற டைட்டிலுக்கு பதில் ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் என்று வைத்திருக்கலாம் . அதற்கேற்ப படம் விடலை (ஹி ஹி ) பசங்களையும் , குடும்பஸ்தனாகியும் கள்ளத்தனமாக பலான சிடி பார்க்கும்
( என்ன தான் பிட் போடாவிட்டாலும் ) விட்ட பசங்களையும் கவரும் . குடும்ப குத்துவிளக்குகள் அந்த பட போஸ்டர் பக்கம் கூட செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ...

ஸ்கோர் கார்ட் : 39

ஸ்கோர் கார்ட் : 2.25*/5*

பின்குறிப்பு : ( படத்தை எதிர்த்து மாதர் சங்கங்கள் கேஸ்  போடுதோ இல்லையோ த்ரிஷா , நயன்தாரா ரெண்டு பேரும் போடாம இருந்தா சரி ) 

பத்த வச்சுட்டியே பர ட்ட ! 

16 August 2015

வாலு - VAALU - சமத்து ...


ரு படத்தில் பிரச்சனை வந்தால் அதை கிடப்பில் போட்டு விட்டு அடுத்தடுத்த படத்துக்கு தாவும் ஹீரோக்கள் மத்தியில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக வாலு படத்தின் ரிலீசுக்காக தன் சொந்த படத்தையே ஒத்தி வைத்த சிம்புவின் சின்சியாரிட்டியை பாராட்ட வேண்டும் . அதே போல படம் லேட்டாக வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஒப்பனிங் லேட்டஸ்டாகவே இருக்கிறது ...

வேலை வெட்டி எதுவும் இல்லாவிட்டாலும் வீட்டின் செல்லப்பிள்ளை ஷார்ப்
( சிம்பு ) . இது போன்றவர்களை முழு நேர பிசியாக்கும் காதல் , ப்ரியாவை
( ஹன்சிகா ) பார்த்தவுடன் அவருக்கு வருகிறது . ஆனால் முறைப்பையன்
( படம் பூரா முறைச்சுக்கிட்டே தான் இருக்காரு ) அன்பு ( ஆதித்யா ) வுடன் ப்ரியாவுக்கு திருமணம் செய்து வைப்பதாய் வீட்டில் பேசி வைத்திருக்கிறார்கள் . ( நல்ல வேளை  இதுவரை யாருமே சொல்லாத வித்தியாசமான கதைன்னு டைரக்டர் எந்த பேட்டிலையும் சொல்லல ) . சோ கடைசியில் இது போன்ற படங்களில் எது நடக்குமோ அது சுகமாவே நடந்து படம் முடிகிறது . ஆனால் சிம்புவின் ஸ்க்ரீன் ப்ரெசென்சும் , போரடிக்காத திரைக்கதையும் இந்த சாதாரண கதையை காப்பாற்றுகிறது ...


பாட்டு , டான்ஸ் , பைட் , பஞ்ச் , அளவான நடிப்பு என ஒரு சக்சஸ்புல் ஹீரோவுக்கு தேவையான  எல்லா திறமைகளும் சரிவரப் பெற்றவர் சிம்பு . ஆனால் சொந்த பிரச்சனையோ அல்லது சுழியோ அவரை அலைக்கழிக்க அந்த இடைவெளியில் சில ஸ்டார்கள் மேலும் தங்களை ஸ்ட்ராங் ஆக்கிக் கொண்டார்கள் . ஒரு வழியாக வாலு மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் சிம்பு ஒரே பாணி கதைகளை மட்டும் தேர்ந்தெடுக்காமல் வெரைட்டியாக படங்களில் நடித்து மேலும் வளர வாழ்த்துக்கள் ...

படத்தின் கால தாமதத்துக்கு சாட்சி போல மைதா மாவு ஹன்சிகா சில இடங்களில் சப்பாத்தி போல இளைத்தும் , சில இடங்களில் புரோட்டா போல பெருத்தும் இருக்கிறார் . ஆனாலும் சின்ன குஷ்பு சிரிப்பில் மயக்குகிறார் . ஹன்சிகா வோடு மட்டுமல்ல சந்தானம் - விடிவி கணேஷ் இருவரோடும் சிம்புவின் கெமிஸ்ட்ரி வழக்கம் போல நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருப்பது படத்தின் பலம்  . அப்பா வாக வரும் நரேன் சில காட்சிகளில் நெகிழ வைக்கிறார் . தமனின் இசையில் சிம்பு வின் நடனம் தாளம் போட வைக்கும் ...

என்ன தான் படத்தின் டிளே கூடுதல் ஆதரவைக் கொடுத்திருந்தாலும் அதை கெடுக்காத வகையில் எண்டெர்டைன்மெண்டாக  படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் விஜய் சந்தர் . படத்தின் க்ளைமேக்சுக்கு முன் வரும் சண்டை தேவையில்லாதது போல பட்டாலும்   ஓவர் ஆக்ஷன் காட்சிகளை  காட்டி நம் உடம்பை ரணமாக்காமல் விட்டதற்கு இயக்குனருக்கு நன்றி . பழைய கதை , படத்தின் நீளம் போன்ற குறைகளை தாண்டி சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி தல , தளபதி ரசிகர்களையும் இழுக்கும் வகையில் ஸ்மார்ட்டாக சொன்ன விதத்தில் சிம்பு விட்ட இடத்தை பிடிக்க உதவியிருக்கும் இந்த வாலு - சமத்து ...

ஸ்கோர் கார்ட் : 40

ரேட்டிங் : 2.5* / 5*

15 August 2015

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -VSOP - வெட்டியா சிரிக்கணும்னா ஒருதடவ பாக்கலாம் ...


பாஸ் எ பாஸ்கரன் வெற்றிக்கு பிறகு ராஜேஸ் - ஆர்யா - சந்தானம் கூட்டணியில் ஆர்யாவின் 25 வது படமாக வந்திருக்கிறது வாசுவும் சரவணனும் ஒண்ணா குடிச்சவங்க சாரி படிச்சவங்க ( V S O P ) . 25 வது படத்தில் எந்தவித புதுமைக்கும் வழி கொடுக்காமல் சேம் அண்ட் டெஸ்டெட்  டைரக்டர் ராஜேசுடன்  கை கோர்த்ததில் நடிகராக ஆர்யா ஏமாற்றினாலும் தயாரிப்பாளராக  ஸேஃப் கேம் ...

வாசு ( சந்தானம் ) வும் , சரவணனும் ( ஆர்யா ) சிறு வயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள் . இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் பெண்களால்
( பானு , தமனா ) நட்பிற்கு ஏற்படும் விரிசலை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே V S O P . வழக்கம் போல கதைக்கு மெனக்கெடாத ராஜேஸ் & கோ என்ன தான் பழைய படங்களின் தேஜாவு போல இருந்தாலும் திரைக்கதைக்கு உழைத்திருக்கிறார்கள் ...


பொதுவாக ஹீரோ இருந்தால்  அவனுக்கு ஒரு நண்பன் இருப்பான் . இந்த படத்தில் யார் ஹீரோ யார் நண்பன் என்று பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு படம் முழுவதும் இருவருமே வியாபித்திருக்கிரார்கள் . ஆர்யா வழிசலான சில சிரிப்புகளில் மட்டும் தனியாக தெரிகிறார் . மற்றபடி அவர் சந்தானத்திடம் சரண்டர் . படத்தை தன் தோள்களில் தூக்கி நிறுத்துவது சந்தானத்துக்கு புதிதில்லை என்றாலும் எல்லோரையும் கலாயத்து அவர் செய்யும் காமெடி ஒரு லெவெலுக்கு மேல் கடி .  வெறும் வார்த்தை ஜாலங்களாக மட்டும் இருக்கும் காமெடிக்கு வித்யூ ராமின் ரியாக்சன்ஸ் பெரிய ரிலீஃப் . ஆனால் காமெடி  என்ற பெயரில் அவர் வீட்டில் சந்தானம் அண்ட் கோ அடிக்கும் லூட்டிகள் டூ மச் அண்ட் போரிங் . தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் கருணாகரன் இது போன்ற முக்கியத்துவம் இல்லாத ரோல்களை தவிர்க்கலாம் ...

இனிமேல் ராஜேஸ் படங்களுக்கு " மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு " என்று ஓரமாக டைட்டில் போடுவதுக்கு பதில் பெரிதாக எப்பொழுதுமே போட்டு விடலாம் . அந்த அளவுக்கு படத்தில் கடியை விட குடி அதிகம். நட்பு , காதல் , குடி , கலாய் ,,, கொஞ்சமாவது மாத்தி யோசிங்களேன் பாஸ் ?! . டி.இமானின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே . நீரவ்ஷா வின் ஒளிப்பதிவு பளிச் . ராஜேஸ் படங்களில் ஒரு அட்வான்டேஜ் . என்ன  நடக்கும் என்பது நமக்கு முன்பே தெரியும் . அது எப்படி நடக்கிறது என்று மட்டும் பார்த்தால் போதும் . அந்த விதத்தில் படம் ஆங்காங்கே நமக்கு கொட்டாவியை வரவைத்தாலும் ஆல் இன் ஆல் போல மொக்கையாக இல்லை . பாஸ் போல பெஸ்டாகவும் இல்லை . அவர்கள் பாஷையில் சொன்னால் பீர் போல வயிற்றை ரொப்பாமல் , ஃபுல் போல பெரிய போதையையும் கொடுக்காமல் கட்டிங் லெவெலுக்கு இருக்கிறது  V.S.O.P . வெட்டியா சிரிக்கணும்னா ஒருதடவ பாக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 39

ரேட்டிங் : 2.25* / 5* 


14 July 2015

பாகுபலி - BAHUBALI - நல்ல ஆரம்பம் ...


நான் ஈ வெற்றியின் மூலம் தமிழகத்தில் கால் பதித்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலி மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் . 250 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படம் என்பதையும் தாண்டி தமிழில் ஒரு சரித்திர படம் ( என்ன தான் டோலிவுட ஹீரோவாக  இருந்தாலும் ) பார்க்க வேண்டும் என்கிற தாகத்தை தீர்த்து வைக்கிறது பாகுபலி ...

மகாபாரதத்தில் வரும் பங்காளி சண்டை தான் கதை . அர்ஜுனனுக்கு பதில் பிரபாஸ் , துரியோதனுக்கு ரானா , கர்ணனுக்கு சத்யராஜ் , சகுனிக்கு பதில் நாசர் இவர்களை நடிக்க வைத்து கதையை கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர் . என்ன அவ்வளவு நேரம் படத்தை பார்க்க வைத்து விட்டு க்ளைமேக்ஸ் இல் முடிவு சொல்லாமல் இன்டர்வெல் ப்ளாக் போட்டு 2016 பார்ட் 2 வில் பார்க்கலாம் என்று முடித்து விட்டார்கள் . இவ்வளவு பெரிய படத்தை இப்படி முடித்திருக்கும் இயக்குனரின் தையிரியத்தை பாராட்டினாலும் ஏமாற்றத்தை தவிர்க்க முடியவில்லை ...


பிரபாஸ் , ரானா இருவருமே சரித்திர கால வேஷத்துக்கேற்றபடி அட்டையில் செய்த கவசத்தை போடாமலேயே நல்ல உடற்கட்டுடன் இருக்கிறார்கள் . ஹீரோ பிரபாஸ் என்ட்ரிக்கு ஒருபடி மேலே இருக்கிறது ரானா வின் அறிமுகம் . ரொமான்ஸ் சீன்களில் மெழுகு பொம்மை போல போல வரும் தமனா சீரியாசக  சண்டையும் போட்டு உருக வைக்கிறார் . இவர்கள் இயக்கம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒட்டவில்லை . நாசர் , சத்யராஜ் , ரம்யாகிருஷ்ணன் எல்லோருமே தேர்ந்த நடிகர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள் . சத்யராஜுக்கு பெயர் படத்தில் கட்டப்பா . என்ன கொடுமைப்பா ! . அனுஷ்கா வின் அழகை ரசிக்க நினைத்து வந்த அங்கிள்களுக்கு ஏமாற்றமே . பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ...

ஒளிப்பதிவு , எங்கேயுமே பொம்மைப் படம் போல இல்லாமல் உண்மையிலேயே மிரள வைக்கும் சி.ஜி , அரண்மனை செட் , மிரட்டும் போர்க்காட்சிகள் , விசுவல்ஸ் என்று எல்லாமுமாய் சேர்த்து நம்மை பிரம்மாண்டமாய் கட்டிப் போடுகின்றன . இந்த பிரம்மாண்டத்தையும் தாண்டி நான் ஈ யில் உயிர்ப்பாக இருந்த கதை , திரைக்கதை இதில் மிஸ்ஸிங் . குறிப்பாக கிரேசி மோகனின் வசனங்கள் நான் ஈ க்கு ப்ளஸ் . இழுத்துக் கொண்டு போகும் முதல் பாதி , கொட்டாவியை வர வைக்கும் தமனா - பிரபாஸ் காதல் காட்சிகள் , கொஞ்சம் சலிப்பைத் தரும் நீண்ண்ண் ட சண்டைக் காட்சிகள் , சட்டென முடியும் படம் போன்ற சில குறைகள் இருந்தாலும்  இப்பூடி ஒரு படத்தை அதிக பொருட்செலவில் எடுத்து அதை வீணாக்காமல் ரசிக்கும் படி தந்த விதத்தில் பாகுபலி நல்ல ஆரம்பம் ...

ஸ்கோர் கார்ட் : 45

பின் குறிப்பு : ( தென் இந்திய இயக்குனரின் படம் இந்தியாவிலேயே பிரம்மாண்டமான படம் என்பதோடு முதல் மூன்று நாட்கள் வசூலிலேயே  எல்லா கான்களையும் தூக்கி சாபிட்டு விட்டது குறிப்பிடத்தக்கது )






9 July 2015

அரையாண்டு தமிழ் சினிமா 2015 - TAMIL CINEMA 2015 HALF YEARLY REVIEW ...




ந்த வருடம் பயங்கர எதிர்பார்ப்போடு வந்த , மாசு , உத்தமவில்லன் என்று பெரிய ஹீரோக்களின் படங்கள் சொதப்ப தேசிய விருது பெற்ற காக்காமுட்டை , டார்லிங் , டிமாண்டி காலனி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் பெற்றிருப்பது புது முயற்சிகளுக்கு என்றுமே தமிழ் ரசிகர்களின் ஆதரவு உண்டு என்பதை மீண்டும் நிரூபணம் செய்கிறது ...

ஐ படத்தில் பாடல் காட்சிகளை படமாக்குவதில் மெனக்கட்டதற்கு கால்வாசியாவது ஷங்கர் கதைக்கு பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். காஸ்ட்லி ஃபோனா இருந்தாலும் சிக்னலே வரலேன்னா எப்படி பாஸ் ? இருந்தாலும் பொங்கல் விடுமுறை தயாரிப்பாளருக்கு பொங்கலோ பொங்கல் சொல்லாமல் காப்பாற்றியிருக்கும் . Blessing in Disguise என்பது போல ஐ பட டிக்கெட் கிடைக்காமல் டார்லிங் போனவர்கள் டர் ஆகாவிட்டாலும் பேய் ட்ரெண்டில் மற்றுமொரு படத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் . தனது அழுத்தமான விமர்சனங்களால் படிப்பவர்களின் மனதை தொடும் கேபிள் சங்கர் நல்ல கதையை தேர்ந்தெடுத்தும் தொட்டால் தொடரும் மூலம் கொடுத்ததென்னமோ மைல்ட்  டச் தான் . அடுத்த படத்தில் சிக்சர் அடிக்க வாழ்த்துக்கள் ...

காக்க காக்க , வேட்டையாடு விளையாடு படத்தின் ரீமேக் போல இருந்தாலும் ஐந்து கெட்டப்களில் அஜித்தை அவ்வளவு அழகாக காட்டியதற்கும் , ஸ்டைலிஷான மேக்கிங்குக்கும் பேசப்பட்டது என்னை அறிந்தால் . புதிய மொந்தையில் பழைய கள் தான் என்றாலும் ருசிக்கலாம் . தோல்விகளால் துவண்டிருந்த தனுஷுக்கு வி.ஐ.பி க்கு பிறகு மற்றுமொரு வெற்றிப்படம் அனேகன் . க்ரைம் நாவல் போன்ற கதைக்காகவும் , வேகமான திரைக்கதைக்காகவும் வென்றான் இந்த அனேகன் . தந்திரமான திரைக்கதையால் ராஜதந்திரம் அனைவரையும் கவனிக்க வைத்தது . பி சி சென்டர்களில் வசூலோடு சர்ச்சையையும் சேர்த்து கிளப்பியிருக்கிறது கார்த்திக் நடிப்பில் வந்த கொம்பன் . காக்கி சட்டையின் வெற்றி சிவகார்த்திகேயனை சக்சஸ் ஹீரோவாக மீண்டும் நிரூபித்திருக்கிறது ...

பேய் சீசனின் பேய் ஹிட் காஞ்சனா 2 . இரண்டாம் பாதி கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் எல்லா சென்டர்களிலும் கல்லா கட்டியது காஞ்சனா . தனது படங்களில் வெரைட்டியை விரும்பும் அருள்நிதியை டிமாண்ட் நாயகனாக ஆக்கியிருக்கிறது டிமாண்டி காலனியின் வெற்றி . உலகநாயகனின் உத்தமவில்லன் இந்த அளவு சோதிப்பான் என்று யாரும் நினைக்கவில்லை . ஒரு நடிகனாக பிரமிக்க வைத்தாலும் கதை , திரைக்கதை ஆசிரியராக கமல் காலை வாரியது துரதிருஷடம் . ஐஸ்வர்யா தனுஷின் வை ராஜா வை ஏ சென்டர்களில் கை யை கடிக்காததாக கேள்வி . ஜனநாதனின் இயக்கத்தில் புறம்போக்கு மேம்போக்காக இருந்ததால் ரசிகர்களின் வரவேற்பை  பெறாவிட்டாலும் ஷாமின் நடிப்பு பாராட்டப்பட்டது ...

குரு எஸ்.ஜே சூர்யாவின் இசை சவுண்டாக வசூல் செய்யாவிட்டாலும் சிஷ்யன் லக்ஷ்மனின் ரோமியோ ஜூலியட் கமர்சியலாக ஜெயம் ரவிக்கு நல்ல ப்ரேக் கொடுத்திருக்கிறது . பல சர்வதேச விருதுகளோடு தேசிய விருதும் சேர்ந்து கொள்ள கிடப்பிலிருந்த காக்கா முட்டைக்கு டீசண்ட் ஓபனிங் கிடைத்தது . வன்முறை , சோகம் எதுவுமில்லாமல் மென்மையான படங்களாலும் அழுத்தமாக மனதை தொட முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்த படம் . வெறும் விமர்சகர்களால் மட்டும் பாராட்டப்படாமல் படம் வசூலிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியம் ...

ஓ காதல் கண்மணி மூலம் ரசிகர்கள் , விமர்சகர்கள் இருவரிடமும் டபுள் ஓ.கே வாங்கி விட்டார் மணிரத்னம் . கணவர் சூர்யாவின் மாசுவை துடைக்கும் வகையில் ஜோதிகாவின் 36 வயதினிலே படம் நல்ல ஹிட் . குட் கம் பேக் . தரமான படங்களை தயாரித்து வரும் சி.வி.குமாரின் மற்றுமொரு நல்ல படைப்பு இன்று நேற்று நாளை . டைம் மிஷின் கான்செப்ட் பழசு தான் என்றாலும் தமிழுக்கு சொன்ன விதத்தில் புதுசு . இரண்டாம் அரையாண்டின் ஆரம்பத்திலேயே பாபநாசம் மூலம் உத்தம வில்லனின் பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார் உலகநாயகன் . விஜய் நடிப்பில் புலி , சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயரிடப்படாத தல 56 இரண்டிற்காகவும் ரசிகர்கள் பசியுடன் காத்திருக்கிறார்கள் ...


Related Posts Plugin for WordPress, Blogger...