காமெடியனாக பீக்கில் இருக்கும் போதே மேலும் காலம் தாழ்த்தாமல் ஹீரோ வாக தில்லாக களம் இறங்கியவர் சந்தானம் . அவரின் முடிவு அவருக்கு பெரிதாக கை கொடுத்ததோ இல்லையோ நிச்சயம் சூரி , சதீஷ் போன்ற சக காமெடியன்களுக்கு நிறையவே கொடுத்திருக்கிறது . சோலோ ஹீரோவாக தனது மூன்றாவது படத்தில் " லொள்ளு சபா " ராம்பாலா வுடன் கை கோர்த்து தமிழ் சினிமாவின் கரெண்ட் ட்ரெண்ட் ( இன்னுமா முடியல ! ) ஹாரர் காமெடியில் சேஃபாக கால் பதித்திருக்கும் படம் தில்லுக்கு துட்டு ...
ஹீரோ வென்று களம் இறங்கியவுடன் சும்மா இராமல் உடலை எடையை குறைத்து ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி ஸ்மார்ட்டாக இருக்கிறார் சந்தானம் . ஆனால் என்ன சிவகார்த்திகேயன் போலல்லாமல் பத்து வருடமாய் சினிமாவில் பக்கா காமெடியனாக பார்த்தவரை காதல் , ஆக்சன் காட்சிகளில் பார்க்கும் போது லேசாக நெருடுகிறது . அதை தவிர்த்து பார்த்தால் தனது வழக்கமான ஒன் லைனர்களில் படம் நெடுக கலாய்த்து நம்மை கிடுக்கி பிடி போடுகிறார் சந்தானம் . ஹீரோயின் கேரக்டர் சேட் பொண்ணு என்பதால் செவப்பாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்து விட்டார்கள் போல . சனயா சின்ன வயது கோவை சரளா போல இருக்கிறார் . இவர் வரும் க்ளோஸ் அப் காட்சிகள் Zee டி வி யில் ஹிந்தி டப்பிங் சீரியல் பார்ப்பது போல இருக்கிறது ...
மொட்டை ராஜேந்திரன் வரும் போது சந்தானம் அளவுக்கு கை தட்டுகிறார்கள் . அவரும் தனது கட்டை குரலில் பேசி கூலாக நடிக்கிறார் . இவர் டீமுடன் அடிக்கும் பேய் ரகலைகளை ரசிக்க முடிந்தாலும் ஒரே மாதிரியான மேனரிசம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்து விட்டது . சிறந்த நடிகர் சவுரப் சுக்லா வை முடிந்தவரை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள் . ஆனந்தராஜ் மற்றும் கார்த்திக் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் . தமன் இசையில் " சிவன் மகன் டா " மட்டும் முணுமுணுக்க வைக்கிறது . கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் , தீபக் குமார் பாடி யின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் ...
படத்தில் வரும் காதல் காட்சிகள் ஹீரோயினின் லிப் மூவ்மெண்ட் போல படத்தோடு சரியாக சிங்க் ஆகாமல் தனியாக ஓடுகிறது . முதல் பாதி சுமாராக போனாலும் பேய் பங்களாவுக்குள் நுழையவதற்கு முந்தைய சீன்களில் இருந்து படம் சூடு பிடிக்கிறது . அதன் பிறகு ரியல் பேய் - ரீல் பேய் என்று சுத்த விட்டு நம்மை சிரிக்க வைக்கிறார்கள் . சந்தானம் - ராம்பாலா கூட்டணி யில் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தாலும் சந்தானம் ஹீரோ , ஹாரர் காமெடி ஜெனர் படத்தில் புதுசாக என்ன செய்து விட முடியும் ? என்றே தோன்றுகிறது . பொழுதுபோக்காக சினிமாவுக்கு செல்லும் யாருக்கும் இந்த தில்லுக்கு துட்டால் துட்டு வேஸ்டாவாது ...
ரேட்டிங் : 2.5 * / 5 *
ஸ்கோர் கார்ட் : 41
No comments:
Post a Comment