Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

20 April 2014

மாற்றம் நம் கையில் - 2014 ELECTION ...


மிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் யாருக்கு ஒட்டு என்கிற குழப்பம் குறிப்பாக முதன்முறை ஒட்டு போடப்போகிற இளைஞர்களுக்கு மட்டுமின்றி பரவலாக நிறைய பேருக்கு  இருக்கும் என்றே நினைக்கிறேன் . ஊடகங்களில் வெளிவரும் கருத்துக் கணிப்புகளும் தமிழக வாக்காளர்களிடையே உள்ள குழப்பத்தை ஊர்ஜிதம் செய்வது போலவே இருக்கின்றன ...

நகரம் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட அடுத்த பிரதமராக யார்  வர வேண்டும் என்கிற கேள்விக்கு நரேந்திர மோடி என்கிற பதிலையே பரவலாக காண முடிகிறது .  அதே சமயம் யாருக்கு ஒட்டு போடுவீர்கள் என்கிற கேள்விக்கு அ .தி.மு.க வே முன்னணி வகிக்கிறது . பொதுவாக தமிழக மக்கள்  மாநில கட்சிகளுக்கே வாக்களிக்க முன்னுரிமை தருவார்கள் என்பது வரலாறாக இருந்தாலும் கிட்டத்தட்ட எல்லா கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் பதவிக்கு மோடியை யே மக்கள் முன்னிறுத்துவது அவர்களின் எண்ண  ஓட்டத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது . அதே சமயம் அந்த தெளிவு ஒட்டு போடும் விஷயத்தில் சிலருக்கு இல்லை என்பதும் புலனாகிறது ...

ஒரு நாள் தெரிந்த நண்பருடன் பேசும் போது காங்கிரஸ் , தி.மு.க இரண்டையும் கடுமையாக சாடினார் . மத்தியில் மோடி தான் பிரதமராக  வேண்டும் என்று உறுதியாக சொன்னார் . ஆனால் அ.தி.மு.க வுக்கே எனது ஒட்டு என்றும்  குழப்பினார் . பா.ஜ .க வுக்கு ஒட்டு போட்டு அது வீணாகி தி.மு.க வந்து விடுமோ என்கிற பயமே  அ.தி.மு.க  பக்கம் சாய காரணம் என்று விளக்கமும் தந்தார் . நான் இதே போல அ.தி.மு.க வுக்கான ஒட்டு வீணாகி அதன் மூலம் தி.மு.க வந்து விட்டால் அப்போது என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்ட பிறகு அவரிடம் கொஞ்சம் தெளிவு பிறந்தது . இந்த உரையாடல் ஒரு சோறு பதம் . நிச்சயம் அவர் அ.தி.மு.க வின் அனுதாபியாக இருந்து அதற்கு தான் எனது ஒட்டு என்று சொல்லியிருந்தால் குழப்பமே இல்லை . ஆனால் மோடி பிரதமராக வருவதற்கு அ.தி.மு.க வுக்கு ஒட்டு என்பது நான் ஏற்கனவே முகநூலில் சொன்னது போல தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்றது ...

பா.ஜ.க போட்டியிடாத தொகுதிகளில் அ.தி.மு.க வுக்கு வாக்களியுங்கள் என்று சோ தனது துக்ளக் தலையங்கத்தில் எழுதியதும் கொஞ்சம் குழப்பத்தில் இருப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் உக்தி . அதே போல பா.ஜ.க - அ.தி.மு.க இரண்டிற்கும் ரகசிய உடன்பாடு இருப்பது போல ஒரு வதந்தி தி.மு.க , காங்கிரஸ் போன்றவற்றால் பரப்பப்பட்டு வருவதும் , தேர்தலுக்கு பின் நிச்சயம் அ.தி.மு.க - பா.ஜ.க சேர்ந்து விடும் என்பது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் . ஆனால் இது போன்ற ஹேஷ்யங்களின் அடிப்படையில் நிச்சயம் ஒட்டு  போட முடியாது . ஏற்கனவே 13 மாதங்களில் அ.தி.மு.க வால் வாஜ்பாய்  அரசு கவிழ்ந்ததையும் யாரும்  மறந்திருக்கவும்  முடியாது ...

இப்போது மற்றவர்களின் தூண்டுதலினாலோ என்னவோ முதலில் காவிரி பிரச்சனையை வைத்து முதல்வர் பா.ஜ.க வை சாட பிறகு மோடி அ.தி.மு.க வும் , தி.மு.க வும் தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு வழி செய்யாமல் மாறி மாறி பழி வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்று சாடினார் . ஜெ பா.ஜ .க வை திடீரென திட்டுவதற்கு சிறுபான்மையினர் ஒட்டு வங்கியோ , நிர்பந்தமோ மட்டும் காரணம் அல்ல . முதலில் நாற்பதும் நமதே என்கிற நினைப்பில் பா.ஜ க அணியை சாதாரணமாக எடுத்துக் கொண்டவருக்கு  நிறைய தொகுதிகளில் தி.மு.க வை விட பா.ஜ .க வே தனக்கு சவாலாக இருக்கும் என்கிற தகவல்கள்  வர ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட மாற்றமே இது.
என்ன நடந்தாலும் இந்த கட்சிக்கு தான் ஒட்டு போடுவேன் என்று சொல்லும் சொல்லும் தீவிர அனுதாபிகள் கூடுதலோ குறைவோ எல்லா  கட்சிகளுக்கும் உண்டு . ஆனால் அவர்கள் மட்டும் தேர்தல் முடிவுகளை தீர்மானித்து விட முடியாது .  சூழ்நிலைக்கேற்ப  தங்கள் முடிவுகளை எடுக்கும் நடுநிலையாளர்களும் அரசியல்  மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக இருக்கிறார்கள்...

ஒரு பக்கம் மோடி பிரதமராக வர அ.தி.மு.க வுக்கு ஒட்டு போடுங்கள் என்று அவர்கள் ரகசிய பிரச்சாரம் செய்வதாக செய்திகள் கசிய , இன்னொரு பக்கம் 15 வருடங்களாக மாறி மாறி  மத்தியில் நடைபெற்ற ஆட்சியில் அங்கம் வகித்து விட்டு 10 வருடங்களாக நடந்த அவலங்களுக்கும் தனக்கும்   சம்பந்தம் இல்லாதது போல பால் விலை  ஏறிப் போச்சு , பவர் கட் ஆகிப் போச்சு என்று பிரச்சாரங்களிலும் , விளம்பரங்களிலும் அ.தி.மு.க  வை மட்டும் குறை கூறி கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் தி.மு.க வினர் மக்களின் ஞாபக மறதியின் மேல் நம்பிக்கை வைத்து ஒட்டு கேட்க , மற்றொரு பக்கமோ கை கொடுக்க யாருமின்றி  திரும்ப திரும்ப மோடி மதவாதி என்று சொல்லிக்கொண்டே முஸ்லீம் மதத் தலைவர் புஹாரியிடம் ஆதரவை பெற்றுக் கொண்டு மக்களை முன்னேற்றுவதற்கு வகை செய்யாமல் போலி மதவாதத்தை மட்டுமே நம்பி காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும் இந்த தருணத்தில் மத்தியில் நிலையான , வலுவான அரசாங்கம் அமைவதற்கு மோடியின் தலைமையிலான பா.ஜ.க வை அரியணையில் ஏற்றுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் ...

இது இப்பொழுதிருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவேயொழிய நிரந்தரமான முடிவல்ல . ஒரு வேளை நாம் எதிர்பார்த்தது போல தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்படாத பட்சத்தில் அடுத்த தேர்தலில் அதனை ஜனநாயக ரீதியில் மாற்றுவதற்கான அதிகாரம் நம் கையில் இருக்கிறது . ஏனெனில் எப்பொழுதுமே மாற்றம் நம் கையில் ...

27 October 2013

2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் ? ! ...


டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார்  யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள்  என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே  இருந்தாலும் அதற்கான அரசியல் சூடு தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது . 2014 தேர்தலுக்கு  இன்னும் தயாராகாமல் தமிழகம் தடுமாறுகிறதா ?! ...

மோடி மேஜிக் நாடெங்கும் வியாபித்திருந்தாலும் தமிழகத்தில் மோடி வித்தையெல்லாம் பலிக்காது என்றவர்களை கூட அவர் தலைமையில் நடந்த திருச்சி மாநாடு திரும்பிப்  பார்க்க வைத்திருக்கும் . எந்த ஒரு கட்சி ஆட்சியை பிடிப்பதற்கும் பண , அரசியல் பலங்களையும் தாண்டி தன்னலமற்ற தொண்டர்களின் பங்களிப்பும் , புத்துணர்ச்சியும் மிக மிக அவசியம் . அதனை மோடி பிரதம வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட பிறகு  பி.ஜே.பி யினரிடம்  கண் கூடாக காண முடிகிறது ...

தமிழகத்திலும் அதே புத்துணர்ச்சி எதிரொலித்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி  மோடியின் சென்னை வருகைக்கு பிறகும் உறுதி செய்யப்படாமல் போனது துரதிருஷ்டமே . இருப்பினும் அனைத்து கட்சிகளுக்குமிடையே  எந்த ஒரு உறுதியான பேச்சு வார்த்தையும் தொடங்கப்படாத நிலையில் எது  வேண்டுமானாலும் நடக்கலாம் . அரசியலில்  நிரந்தர நண்பனும் இல்லை , எதிரியும் இல்லை என்பார்கள்  . தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டுபவர்கள்  கூட அரசியல் அரங்கில் எதிர் எதிர் அணியில் மோதுவதும் , எதிர் அணியில் இருப்பவர்கள் தேர்தலை ஒட்டி கை கோர்ப்பதும் புதிதல்ல ...

இந்த சூழ்நிலையில் நிதியமைச்சருடன் ஒரே மேடையில் அ.தி.மு.க   மந்திரி அமர்ந்ததையும்  , பிரதமருக்கு தமிழக முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததையும் எதேச்சையாக  நடந்தது  என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது . இதையெல்லாம் பார்க்கும் போது கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க   கூட்டணி அமையாமல் போனாலும் அதற்காக பி.ஜே.பி  சோர்ந்து விட வேண்டிய அவசியமிருக்காது  . கடந்த  சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2.5 சதவிகித வாக்குகளை பெற்றதோடு கணிசமனான  இடங்களில் மூன்றாவது இடத்திற்கு வந்ததும் , உள்ளாட்சி தேர்தலில் 13 நகராட்சிகளை  கைப்பற்றியதும் கட்சி இங்கே வளர்ந்து வருகிறது என்பதை நன்றாகவே காட்டுகிறது . தமிழகத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டும் பலம் வாய்ந்ததாக அறியப்பட்ட கட்சி மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு 15 தொகுதிகளுக்கு மேல் பலம்  பெற்றிருப்பதும்  குறிப்பிடத்தக்கது . பி.ஜே.பி யுடன் கூட்டணி வைக்காமல் போவது இரு பக்கமும் இழப்பு என்பதே நிதர்சனம் ...

அதே வேளை மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு  அதிக வாய்ப்புள்ள கட்சி என்பதால் இங்கே வலுவான கூட்டணி அமைவது பி.ஜே.பி க்கு மிகவும் அவசியமாகிறது .  2004 இல் எந்தவொரு காரணமுமில்லாமல் பி.ஜே.பி யை கழட்டி விட்டு விட்டு காங்கிரசுடன் கை கோர்த்த தி.மு.க விற்கு இந்த முறை அதையே மாற்றி செய்வதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன . தி.மு.க வை கூட்டணியில் சேர்ப்பது மூலம் நடுநிலையாளர்களின் ஓட்டுக்கள் சிதைவதற்கு வாய்ப்பிருந்தாலும் கிட்டத்தட்ட  அ.தி.மு.க விற்கு சமமாக வாக்கு வங்கியை வைத்திருக்கும் தி.மு.க வை பி.ஜே.பி யால் கழித்து  விட முடியாது . பத்து வருடங்களுக்கு முன்னாள் அ .தி.மு.க  ஆட்சியிலிருக்கும் போதே தி.மு.க தமிழகத்தில் நாற்பதையும் வென்றதை  மறுக்கவோ , மறைக்கவோ முடியாது . இங்கே  மாறி மாறி கழகங்களின் ஆட்சி தான்  நடந்து கொண்டிருக்கின்றன ...

இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக  இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட  தே.மு.தி.க இப்போது திணறிக் கொண்டிருக்கும் வேளையில் தன்னை நிலைநிறுத்த பி.ஜே.பி யுடனான கூட்டணி ஓர் வாய்ப்பாக அமையலாம் . இந்த முறையும் கடவுளுடனோ அல்லது  மக்களுடனோ மட்டும் கூட்டணி வைக்கும் நிலையில் விஜயகாந்த்  இல்லை . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவிகித வாக்குகள் பெற்றும் ஒரு  தொகுதியை கூட வெல்ல முடியாமல் போனதை அவர்  மறந்திருக்க மாட்டார் . தற்போதைய சூழ்நிலையில்  அவருக்கு சரியான புகலிடம் பி. ஜே .பி  மட்டுமே  . கடந்த சட்டசபை தேர்தலில் அ .தி.மு.க கூட்டணிக்குள் அவர் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டதால் தி.மு .க விற்கு எதிரான அலை தே.மு.தி.க விற்கு கட்சி ஆரம்பித்து 8 வருடங்களுக்குள்ளாகவே பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கொடுத்தது . இந்த முறையும் காங்கிரஸிற்கு எதிரான அலையை அவர் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டால் சரிவிலிருந்து மீளலாம் ...

இந்த கூட்டணிக்குள் ம.தி.மு.க வும் இணைவது கூடுதல் பலம் சேர்க்கும் . கட்சி ரீதியாக ம.தி.மு.க பெரிய அளவில் வளர்ந்திருக்கா விட்டாலும் அதன்  தலைவர் வை.கோ விற்கு மக்களிடம் இன்னும் நல்ல பெயர் இருக்கிறது . இந்த கூட்டணியில் தொகுதிகளுக்காக அவர் தன்மானத்தை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் நம்பலாம் . பா .ம.க தலைவர் ராமதாஸ் திருமாவளவனை தவிர்த்து  ஜாதி கட்சிகளை இணைக்கும்  முயற்சியை  கை விட்டு விட்டு இந்த கூட்டணிக்குள் வருவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும் . இது போன்ற ஒரு வலுவான மூன்றாவது கூட்டணி அமைவதில் சிக்கல் இருந்தாலும்  , அப்படி அமையும் கூட்டணி  தேசிய அளவில் மட்டும் இல்லாமல் அடுத்த  சட்டசபை தேர்தலில் இரண்டு பிரதான கழகங்களுக்கு மாற்றாகவும் தமிழகத்தில் அமையக் கூடும் . தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதில்  உள்ளது போன்ற இடியாப்ப சிக்கல் நிச்சயம்  இதில் இருக்காது எனவும் எதிர்பார்க்கலாம் ...

இப்படி அரசியல் கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் கூட்டு சேரலாம் . கடந்த வருகையின் போது மோடி தொண்டர்களிடையே  சொன்னது போல வரும் தேர்தல் அவர்களுக்கு பரிசோதனை முயற்சி அல்ல , நிச்சயம் மத்தியில்  மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய  அருமையான வாய்ப்பு . இதை அவர்கள் நழுவ விட மாட்டார்கள் . ஏனெனில் காங்கிரஸ்  மேல் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்  . மூன்றாவது அணிக்கு யார் தலைமை ஏற்பார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி . அதே சமயம் சிறந்த பிரதமராவதற்குரிய தகுதி மோடிக்கு இருப்பதும் , பத்து  கோடிக்கும் மேல் இளைஞர்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடன் இருப்பதும் பி.ஜே.பி க்கு மேலும் பலம் சேர்க்கும் விஷயங்கள் ...

ஆனால்  நிலையான ஆட்சி அமைவதற்கும்  272 தொகுதிகள் பி.ஜே.பி கூட்டணிக்கு தேவை . தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இல்லாத போதும் நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதை உணர்ந்து  கடந்த சட்டமன்ற தேர்தலில் தங்களின் நியாயமான கோபத்தை வாக்களிப்பில் காட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் இந்த முறையும் அதே போல நாடாளுமன்ற தேர்தலில் செய்வார்களா ? அல்லது கூட்டணியையும் , சொந்த விருப்பு , வெறுப்புகளையும் பார்த்து தடுமாறுவர்களா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ...



21 March 2012

சங்கரன்கோவில் சவாலை முறியடித்தார் ஜெ ...!


பொதுவாக  இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி ஜெயிப்பது என்பது நடைமுறை தான் என்றாலும் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரால் விடப்பட்ட சவாலால் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் சம்பிரதாயமாக இல்லாமல் சண்டைக்களமாக மாறியது ...

கடந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சியமைத்ததிலிருந்தே கூட்டணி கட்சியான தே.மு.தி.க வுடன் புகைச்சல் ஆரம்பித்தது அனைவரும் அறிந்ததே ... உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் வெளியிட்டதிலிருந்தே புகைச்சல் நேரடி சண்டையாக மாறியது ...

உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்ததை போலவே அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றாலும் தே.மு.தி.க படு தோல்வியை சந்தித்ததிலிருந்து அ.தி.மு.க விற்கு மாற்று தி.மு.க தான் என்பது மேலும் ஊர்ஜிதமாகியது ... இந்த தோல்வியிலிருந்து தே.மு.தி.க பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை... அ.தி.மு.க வுடனான கூட்டணியால் தான் தன்னால் எதிர்க்கட்சி தலைவராக முடிந்தது என்பதை முற்றிலும் மறந்த விஜயகாந்த் தன்னால் தான் ஜெயலலிதாவால் அரியணை ஏற முடிந்தது என்ற கருத்தில் உறுதியாக இருந்தார் ...



விலைவாசி உயர்வு தொடர்பான சட்டசபை விவாதத்தின் போது போது இது வெளிப்படையாக தெரிந்தது ... உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னாள் பால் , பஸ் டிக்கெட் விலைகளை ஏற்றாததற்கு தோல்வி பயம் தானே காரணம் என்று விஜயகாந்த் கேட்ட கேள்வி முதல்வருக்கு நேரடியாக விடப்பட்ட சவாலாகவே இருந்தது ...

நிச்சயம் விலையேற்றத்தையும் மீறி மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்ற முதல்வரின் நம்பிக்கை வீண்போகவில்லை , அதே சமயம் எல்லா அமைச்சர்களும் அந்த தொகுதியில் வட்டமடித்ததிலிருந்தே பண விநியோகம் நிறைய நடந்திருக்கும் என்று மற்ற கட்சிகள் முன் வைக்கும் வாதத்தையும் மறுப்பதற்கில்லை ...

விலையேற்றத்தையும் தாண்டி தினமும் ஆறு மணி நேரத்திற்கு மேல் ஏற்படும் மின் தடங்கலே தொகுதி மக்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது என்பதை உணர்ந்த ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் பேசிய போது சாக்கு போக்கு எதுவும் சொல்லி பொறுப்பை தட்டி கழிக்காமல் வரும்  ஜூன் மாதத்திற்குள் மின் பற்றாக்குறை தீர்த்து வைக்கப்படும் என்று உறுதிமொழி அளித்தது  மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது ...

தேர்தல் முடிந்த அடுத்த நாளே கூடங்குளம் அணுமின் நிலைய வேலைகளை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே அவர் சொன்னதை செய்வதில் முனைப்புடன் இருக்கிறார் என்பது தெள்ள தெளிவாகிறது ... அ.தி.மு.க 68000  வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருப்பதும் , தே.மு.தி.க நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது ... 

6 March 2012

தேர்தல் முடிவுகள் - காங்கிரஸை "கை" கழுவிய மக்கள் ...


த்திரபிரதேசம் , பஞ்சாப் , உத்ராகந்த் , மணிப்பூர் , கோவா என ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன ... இதில் உ.பி , பஞ்சாப் தேர்தல் முடிவுகள் அரசியல் ஆர்வலர்களுக்கிடையே அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது , குறிப்பாக  403 தொகுதிகள் அடங்கிய உ.பி யில் ஆட்சியை பிடிப்பவர்கள் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பது அரசியல் வரலாறு ...

அதனால் தான் மாநில கட்சிகளான எஸ்.பி , பி.எஸ்.பி இரண்டுடனும் போட்டி போட்டுக்கொண்டு காங்கிரஸ் , பி.ஜே.பி ஆகிய தேசிய கட்சிகளும் மிகுந்த வலிமையுடன் களத்தில் இறங்கின ... எப்போதுமே குடும்ப அரசியலை நம்பாத பி.ஜே.பி உமாபாரதியை நட்சத்திர பேச்சாளராக களமிறக்க , காங்கிரஸ் வழக்கம் போல ராகுல் காந்தியை களமிறக்கியது ...



இந்த தடவையும் ராகுல் காந்தி கூட்டிய  200  க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களுக்கு கை தட்ட கூட்டம் கூடியதே ஒழிய " கை " க்கு ஒட்டு போடுவதற்கு அல்ல என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றன ... பீகார் , குஜராத் தேர்தல்களை தொடர்ந்து ராகுல் மீண்டும் மண்ணை கவ்வியிருப்பது அவர் மீடியாக்களை கவர்ந்த அளவிற்கு மக்களை கவரவில்லை என்பதையே காட்டுகிறது ...

2007 ஆம் ஆண்டு தேர்தலில் 22 இடங்களை மட்டும் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த முறை 37 இடங்களை கைப்பற்றியிருந்தாலும் , கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில் 95 தொகுதிகளை கைவசம் வைத்திருந்த காங்கிரசிற்கு இது பெரிய அடி ... எதிர்பார்த்ததை போலவே தனிப்பெரும் கட்சியாக 224 தொகுதிகளை கைப்பற்றியுருக்கும்  எஸ்.பி தனித்து ஆட்சியமைக்க போவது உறுதியாகிவிட்டது ... இந்த வெற்றிக்கு முலாயம் சிங்கின் புதல்வன் அகிலேஷின் பங்கு மகத்தானது என கூறப்படுகிறது ...

80 சீட்களை மட்டும் வென்ற பி.எஸ்.பி ஆட்சியை இழந்து விட்டது ... சட்டம் , ஒழுங்கை கட்டுக்குள் வைத்ததாக சொல்லப்பட்டாலும் மாயாவதியின் மேல் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றே சொல்லலாம் ... சென்ற முறை இவரது கட்சிக்கு அதிக வாக்குகள் அளித்த பிராமண , தாகூர் சமூகத்தினர் இம்முறை பி.ஜே.பி , காங்கிரஸ் பக்கம் சாய்ந்ததும் பி.எஸ்.பியின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்கள் ...


பி.ஜே.பி யை பொறுத்த வரை கடந்த முறை பெற்ற 51 சீட்களை விட 2 சீட்கள் குறைவாக பெற்றது சறுக்கல் தான் என்றாலும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்ததை எண்ணி வேண்டுமானால் சந்தோசப்பட்டு கொள்ளலாம் ...

பஞ்சாபிலும் வரலாறு காணாத வகையில் ஆளுங்கட்சியான அகாலி தள் - பி.ஜே.பி கூட்டணி 68 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது ... ஆட்சியை பிடிக்குமென எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 46 இடங்களையே வென்றிருக்கிறது ...

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல கோவாவிலும் 9 இடங்களையே கைப்பற்றி ஆட்சியை பி.ஜே.பியிடம் இழந்த காங்கிரசிற்கு ஒரே ஆறுதல் மணிப்பூரில் மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பதே , அதே போல உத்ராகந்தை பொறுத்த வரை ஆளும் பி.ஜே.பி , காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்தாலும் பி.ஜே.பி யே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று சொல்லப்படுவதும் காங்கிரஸிற்கு நிச்சயம் கலக்கத்தை கொடுத்திருக்கும் ...


கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல பல காங்கிரஸ் தலைவர்கள் உ.பி யில் அடைந்த தோல்விக்கு ராகுல் காந்தி காரணம் இல்லை , உள்ளூர் தலைவர்களே காரணம் என்பது போல பேச ஆரம்பித்துவிட்டார்கள் ...இரண்டு நாட்களுக்கு முன்பு கூட உ.பி யில் காங்கிரஸ் அடையப்போகும் வெற்றிக்கு ராகுல் தான் முக்கிய காரணம் என்று சொல்லி வந்தார்களே என கேட்டால் வடிவேலு பாணியில் அது போன வாரம் , இது இந்த வாரம் என்று சொல்வார்களோ என்னவோ , அவர்களுக்கு தான் மக்களின் மறதி மேல் எவ்வளவு  நம்பிக்கை !

இந்த தேர்தல் முடிவுகள் அடுத்து 2014  இல் நடக்க போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டம் என்று சொல்லப்பட்டாலும் , காங்கிரஸின் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதையும்  , நேரு குடும்பத்தில் இருந்து யாராவது போய் நின்றாலே மக்கள் ஓட்டளித்து விடுவார்கள் என்ற காங்கிரஸாரின் நினைப்புக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகவும் இதை நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம் ...

இனி வரப்போகும் தேர்தல்களுக்கு பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தியை காங்கிரஸ் அனுப்புகிறதோ இல்லையோ பி.ஜே.பி உட்பட மற்ற எதிர்கட்சிகள் அவர் வரவேண்டுமென்றே வேண்டிக்கொள்ளும் என நினைக்கிறேன் , ஏனெனில் அவர் ராசி அப்படி ...

ஒரு பக்கம் முடிவுகள் இப்படியிருந்தாலும் 2014 க்குள் பி.ஜே.பி தங்களுடைய  பிரதம வேட்பாளர் யார் என்பதில் ஒரு தீர்மானத்தையும் , கட்சிக்குள் உள்ள பூசலை  களைவதற்குரிய நடவடிக்கைகளையும்  இப்பொழுதிலிருந்தே  எடுக்காவிட்டால் மூன்றாவது முறையாகவும் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு அவர்களே வழியமைத்து விடுவார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை ...

( மேலே குறிப்பிட்டுள்ள தேர்தல் முடிவு எண்ணிக்கையில் சிற்சில மாற்றங்களை நாளை எதிர்பார்க்கலாம் ) 

17 October 2011

ஒண்டிக்கு ஒண்டி - உள்ளாட்சி தேர்தல் ...


           
     உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்  கட்ட வாக்குபதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் . பொதுவாக சட்டசபை மற்றும் மக்களவைக்கு நடக்கும் தேர்தலை போல உள்ளாட்சி தேர்தல் பரபரப்பாக இல்லாவிட்டாலும் இந்த முறை தே.மு.தி.க , இடது சாரிகள் தவிர மற்ற கட்சிகள் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவதும் , மாநகராட்சிக்கான மேயரை மக்களே நேரடியாக தேர்தேடுப்பதும் சுவாரசியத்தை கூட்டியிருக்கின்றன ...

    தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி வைத்து தங்கள் கொள்கைகளை ! காற்றில் பறக்கவிடுவதையே கொள்கையாக வைத்திருக்கும் கட்சிகள் வழக்கத்திற்கு மாறாக தி.மு.க , அ .தி. மு.க முதுகில் சவாரி செய்ய முடியாமல் தனித்து விடப்பட்டிருக்கின்றன ...

    சென்ற முறை அ.தி.மு.க கூட்டணியில் இருந்த தே.மு.தி.க , இடதுசாரிகள்  கூட்டணியாகவும் , தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ம.க மற்றும் காங்கிரஸ் தனித்தனியாகவும் போட்டியிடுவது யாவரும் அறிந்ததே ...

                             
    இழுபறி நிலையில் கூட்டணியில் இருந்து  கடைசியில் தே.மு.தி.க கழட்டி விடப்பட்டது சங்கடமாக இருந்தாலும் , உற்று நோக்கினால் தி.மு.க வுடன் தே.மு.தி.க வை மோத வைத்த அம்மாவின் சாமர்த்தியம் ஒளிந்திருப்பது தெரியும் ...

    இந்த முடிவு இப்போது இருக்கும் சூழ்நிழையில் இரண்டு கட்சிகளும் சேர முடியாதென்பதையும் , இருவரில் யார் ஜெயித்தாலும் அதில் தனக்கு சாதகம் இருப்பதையும் வைத்து போடப்பட்ட தெளிவான கணக்கு ... கடந்த சட்டசபை தேர்தலை புறக்கணித்து தன்மானம் காட்டிய வை.கோ இந்த முறை தே.மு.தி.க, இடது சாரி கூட்டணியில் சேர்ந்திருந்தால் ஒரு புது கணக்காவது தொடங்கியிருக்கும் ... தமிழகத்தில் தீண்டத்தகாத கட்சியென்று பி.ஜே.பி யை பழித்த காங்கிரஸ் இன்று அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது காலத்தின் கட்டாயம் ...

     இந்த தேர்தலில் தங்கள் பலத்தை கான்பிக்கப்போவதாக கட்சி தலைவர்கள் சொல்லிக்கொண்டாலும் சட்டசபை தேர்தலுக்கு கிடைத்தது போல பெருவாரியான வாக்குப்பதிவு இந்த முறை கிடைக்காது என்பதும் , இந்த தேர்தல் உயர்நீதி மன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடப்பாதலோ என்னவோ , சட்டசபை தேர்தலை போல அல்லாமல் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் கணிசமாக குறைந்திருப்பதும் , கட்சி உறுப்பினர்களின் ஒட்டுப்பதிவே பெரும்பாலும் நடக்கும் என்பதாலும் உள்ளாட்சி தேர்தலில் உண்மையான பலம் தெரியாது என்பதே உண்மை ...

             
     இருப்பினும் அன்றாட பிரச்சனைகளுக்கான தீர்வை முன் வைத்து நடத்தப்படும் இத்தேர்தலில்  அந்தந்த வார்டுகளில் நிற்கும் தனிப்பட்ட மனிதர்களின் நிறை,குறைகள் நிச்சயம் அலசப்படும் ... இது சுயேட்சைகளின் வெற்றி வாய்ப்பையும் அதிகரிக்கும் ...

       
    குறிப்பாக சென்னை மாநகராட்சியை பொறுத்த வரை மேயர் பதவிக்கு தி.மு.க சார்பில் போட்டியிடும் திரு.சுப்ரமணியன் மற்றும் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் திரு,சைதை துரைசாமி இருவரின் மீதும் மக்களுக்கு நல்ல அபிப்ராயம் இருப்பதால் நிச்சயம் போட்டி கடுமையாக இருக்கும் ...


   இருவரில் யார் மேயரானாலும் ஏற்கனவே தொடங்கிய மெட்ரோ ரயில் உள்ளிட்ட மக்கள் நல திட்டங்களை பாரபட்சமின்றி தொடர்ந்து நிறைவேற்ற வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம் ...

    மக்களின் பேராதரவோடு பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சிமைத்து ஆறு மாதங்களே முடிவந்த நிலையில் அ.தி.மு.க விற்கு மக்களின் ஆதரவு பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்பதும் , அ.தி.மு.க வை தேர்ந்தெடுத்தால் தான் மின்விசிறி , லேப் டாப் உள்ளிட்ட வாக்குறுதிகள் தங்குதடையின்றி நிறைவேற்றப்படுமென்ற மக்களின் நினைப்பும் , ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களையே உள்ளாட்சி தேர்தலிலும் ஜெயிக்க வைக்கும் மக்களின் மனப்பாங்கும் அ.தி.மு.க விற்கு சாதகமாக இருந்தாலும் , சமசீர் கல்வி குளறுபடி , தி.மு.க வினரின் தொடர் கைது ஏற்படுட்ட்திய அனுதாப அலை  , பரமக்குடி  துப்பாக்கி சூடு , கூட்டணி கட்சிகளை நடத்திய விதம் போன்றவையெல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை ஏற்படுத்துமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை ...

    இது போன்ற யூகங்களுக்கெல்லாம் விடை தெரிய ஒட்டு எண்ணிக்கை நாள் வரை நாமும் பொறுத்திருப்போம் ...

பின் குறிப்பு : இந்த பதிவை படித்ததோடு நின்று விடாமல் உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ்மணம் , இன்ட்லி , தமிழ் 10 , இனிய தமிழ் , உடான்ஸ் , உளவு உள்ளிட்ட அனைத்திலும் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது உங்கள் சகோதரன் , அன்புதோழன் அனந்து ... ( சாரிங்க தேர்தல் பத்தின பதிவா அதான் ... அதுக்காக நீங்க ஒட்டு போட மறந்துராதீங்க )

Related Posts Plugin for WordPress, Blogger...