Showing posts with label இசைஞானி. Show all posts
Showing posts with label இசைஞானி. Show all posts

5 September 2012

நீதானே என் பொன்வசந்தம் - புது ராஜ வாழ்க்கை ஆரம்பம் ...


ரலாற்றுப் பாடத்தில் சிந்து சமவெளி காலம்  , முகலாயர் காலம் , ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் என்றெல்லாம் படித்திருப்போம் , ஆனால் எக்காலத்திற்கும் கேட்கக் கூடிய இசையைக் கொடுப்பவர் இசைஞானி ... இன்றைய இளைஞர்கள் மத்தியில் தன் இயக்கத்திற்காக மட்டுமின்றி படத்தின்   இசைக்காகவும் பேசப்படுபவர் கெளதம் மேனன் ... இந்த இருவரும் இணைந்தால் எப்படியிருக்கும் என்று நினைக்கும் போதே வீசுகிறதே ஒரு சுகந்தம் , இணைந்ததன் விளைவே " நீதானே என் பொன்வசந்தம் " ...

70 களில் " அன்னக்கிளி ஒன்னத்தேடுதே " , " செந்தூரப்பூவே " மூலம் கவனிக்க வைத்தவர் , 80 களில் " இளைய நிலா " , " " பனிவிழும் மலர்வனம் " , " பூவே செம்பூவே " போன்ற பாடல்கள் மூலம் நம்மை கட்டிப்போட்டவர் , 90 களில் புதியவர்களின் வருகைக்குப் பிறகும் " இஞ்சி இடுப்பழகி " , " தென்றல் வந்து " ,
" என்னை தாலாட்ட " மூலம் இசைக்கு ராஜா நான் தான் என்று மீண்டுமொருமுறை நிரூபித்தவர் , 2000 க்கு பிறகு " ஒளியிலே தெரிவது " ,
" உன்னவிட உலகத்தில் " , " இளங்காத்து வீசுதே " என்று சொக்க வைத்தவர் இப்படி இசைஞானி தன் இசையால் நம் உயிரோடு கலந்து உறவாடியதை சொல்லிக்கொண்டே போகலாம் ... 2010 க்கு பிறகு " அழகர்சாமியின் குதிரை " ,
" தோனி" போன்ற படங்கள் பின்னணி இசைக்காக பேசப்பட்டாலும் , பாடல்களின் இசைக்கான ஒரு வெற்றிடத்தை " நீதானே என் பொன்வசந்தம் " நிரப்பியிருக்கிறது என்று சொல்லலாம் ...

படத்தின் பாடல்களை கேட்டவுடனே எந்த ஒரு முடிவுக்கும் வராமல் பொறுமையாக இரண்டு நாட்கள் கேட்டுப் பார்ப்பவர்களை இந்த இசை நிச்சயம் கட்டிப்போடும் ... இதில் " அஞ்சலை " இல்லை ஆனால் " பெண்கள் என்றால் " இருக்கிறது . " ஹொசானா " இல்லை " சாய்ந்து சாய்ந்து இருக்கிறது. படத்தின் அனைத்து பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார் ... குறை என்று பார்த்தால் எட்டு பாடல்களையும் யுவன் , கார்த்திக் உட்பட சிலரே பாடியிருப்பதை தவிர்த்திருக்கலாம் . அதே போல எல்லா பாடல்களும் மெலடியாகவே இருப்பதால் வெரைட்டி இல்லாத ஒரு தோற்றத்தை கொடுக்கிறது , மற்றபடி படம் வெளிவந்த பிறகும் பாடல்கள் நீண்ட நாட்கள் மனதில் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை ... எனக்குப் பிடித்த வரிசையில் பாடல்களை அடுக்கியுள்ளேன் ...

1 .சாய்ந்து சாய்ந்து...
   யுவன்ஷங்கர் ராஜா / ரம்யா.என்.எஸ்.கே 

   யுவன் , ரம்யா குரலில் இளமை ததும்புகிறது . படத்தில் ஹைலைட்டே இந்த பாடல் தான் .

2. என்னோடு வா வா ...
    கார்த்திக் 

   கார்த்திக்கின் குரலும் , முத்துக்குமாரின் வரிகளும் புகுந்து விளையாடுகின்றன ... " காதலின் இலக்கணமே தன்னால் வரும்  
சின்ன சின்ன தலைக்கனமே " போன்ற வரிகள் காதலின் ஊடலை தத்ரூபமாய் சொல்கின்றன .

3. வானம் மெல்ல ...
    இளையராஜா / பெலா செண்டே  

   என்றுமே உடையாத குரல் இசைஞானியுடையது ... அவருடைய குரலில் பாடல் வசீகரித்தாலும் ஹரிஹரன் அல்லது மது பாலகிருஷ்ணன் இந்த பாடலி பாடியிருக்கலாம் என்பது என் கருத்து ... இயக்குனர் கேட்டுக் கொண்டதற்காகவே இந்த பாடலை இசைஞானி பாடினார் என்பது தகவல் .

4. முதல் முறை ...
    சுனிதி சௌஹான் 

   சுனிதி புதியவர் என்று நினைக்கிறேன்  , ஆனால் கேட்டவுடன் பற்றிக்கொள்ளும் குரல் ... பாடலின் பி.ஜி யும் , கோரஸும்  அருமை ... வழக்கம் போல இதிலும் ஒரு முறையோடு கோரஸை முடித்துக் கொண்டு 
ஏமாற்றமளிக்கிறார் இசைஞானி . பாடல் தேவதை படத்தின் " ஒருநாள் " பாடலை நினைவுபடுத்துகிறது ... 

5. பெண்கள் என்றால் ...
    யுவன்ஷங்கர் ராஜா 

   காதல் தோல்விப் பாடல் ... யுவனின் உருக்கும்  குரல் , " பெண்ணின் காதலின் அர்த்த்தமினி , புல்லின் மேல் தூங்கும் காலைப்பனி " போன்ற நா.முத்துக்குமாரின் வரிகளும் அருமை .

6. சற்று முன்பு ...
    ரம்யா என்.எஸ்.கே 

   கௌதமின் படங்களில் வரும் பெண் ஏக்கப் பாடல் ... கேட்க கேட்க பிடித்துப் போகும் பாடல் ... வாத்தியங்களின் ஆக்ரமிப்பை குறைத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் ...

7. காற்றை கொஞ்சம் ...
    கார்த்திக் 

    வரிகளின் அளவிற்கு பாடல் உடனடியாக  கவரவில்லை ... படம் வந்த பிறகு ஹிட்டாகும் .

8. படிக்கல மாமு ...)
    சுராஜ் ஜகன் / கார்த்திக் 

     காலேஜ் கலாட்டா பாடல் ...  திருஷ்டி கழிக்கும் பாடல் என்று சொல்லலாம். படம் வந்த பிறகே தெரியும் ... 

   ( பின்குறிப்பு : இந்த பதிவை எழுதி முடித்தவுடனே எங்கிருந்தோ 
" நினைவெல்லாம் நித்யா " படத்திலிருந்து  " நீதானே என் பொன்வசந்தம் " பாடல் ஒலிக்க என்னையறியாமல் அதில் மூழ்கிப்போனேன் ) ஏ 


11 February 2012

தோனி நாட் அவுட் - மேட்ச் டிரா ...


தரமான படங்களை தயாரித்து வந்த பிரகாஷ்ராஜ் முதன் முதலாக இயக்கிருக்கும் படம் தோனி ... படத்திற்கு இசைஞானியின் இசை மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது ... இன்றைய சூழலில் படிப்பு பிள்ளைகளுக்கு வரமாக இல்லாமல் சாபமாக மாறிவிட்டதே என ஒரு மிடில் க்ளாஸ் தகப்பன் படும் ஆதங்கமே " தோனி " ...

சுப்ரமணியம் ( பிரகாஷ்ராஜ் ) பத்திர பதிவாளர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருந்து கொண்டே ஊறுகாயும் விற்றுக்கொண்டு தாயில்லாத தன் இரண்டு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார் ... மகள் காவேரி ( ஸ்ரிதேஜா ) நன்றாக படித்தாலும் மகன் கார்த்திக் ( ஆகாஷ் பூரி ) படிப்பில் கவனம் செலுத்தாமல் கிரிக்கெட் மட்டுமே ஆடிக்கொண்டிருக்கிறான் ... மகனின் மார்க்குகளை காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் அவனை பள்ளியை விட்டு நீக்க சொல்லவே மகனிடம் கிரிக்கெட்டை தூர போட்டு விட்டு படிக்க சொல்கிறார் பிரகாஷ்ராஜ் ... 

ஒரு கட்டத்தில் படிப்பில் கவனம் செலுத்தாத மகனை தகப்பன் கோபத்தில் அடிக்க அவன் தலையில் அடிபட்டு கோமா ஸ்டேஜுக்கு சென்று விடுகிறான். இதன் பிறகு தன் தவறை உணரும் பிரகாஷ்ராஜ் மகனை கோமாவில் இருந்து மீட்டெடுப்பதோடு , கல்வி என்ற பெயரில் மாணவர்கள் மேல் அநியாயத்திற்கு சுமத்தப்படும் சுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதே கதை ... 

தானே இயக்குனராக இருப்பதால் தன்னிடம் இருந்து அபரிபிதமான நடிப்பை பிரகாஷ்ராஜ் வாங்கியிக்கும் படம் தோனி ...  ராதிகா ஆப்தேவிடம் தன் தவறை உணர்ந்து வருந்தும் போதும் , மகனின் படிப்பிற்காக பள்ளி நிர்வாகத்திடம் கெஞ்சும் போதும் , கூனி குறுகி கடன் வாங்கும் போதும் , மகனை அடித்து விட்டோமே என அழும் போதும் ஒரு மிடில் கிளாஸ் தகப்பனாக நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார் ... குறிப்பாக நீயா நானா நிகழ்ச்சியில் இவர் அழுது கொண்டே பேசும் காட்சி உருக வைக்கிறது ... சிறந்த நடிகருக்கான மற்றொரு விருது கிடைக்குமென நம்பலாம் ... 

              
மகனாக ஆகாஷும் , மகளாக ஸ்ரிதேஜாவும் நல்ல பொருத்தம் ... அப்பாவுடன் வாக்குவாதம் செய்யும் காட்சியில் ஆகாசின் நடிப்பு நன்று ... காலனியில் குடியிருக்கும் நளினியாக வரும் ராதிகா ஆப்தே அழகாக இருப்பதோடு நன்றாகவும் நடித்திருக்கிறார் ... அவர் கால் கேர்ளாக மாறியதன் பின்னணியை எளிமையாக விளக்கிய விதமும் , அந்த காட்சியில் இவரின் நடிப்பும் அருமை ... 

நாசர் , சாம்ஸ் , தலைவாசல் விஜய் , பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பு இயல்பாக இருந்தாலும் கந்துவட்டி கனி பாயாக நடித்திருக்கும் முரளி ஷர்மா கவனிக்க வைக்கிறார் ... இவருக்கு சமுத்திரக்கனியின் பின்னணி குரலும் பொருத்தமாக இருக்கிறது ... படத்தின் வசனங்கள் நல்ல சார்ப் ... படிப்பை மட்டுமே வைத்து ஒருவனை மதிப்பிடும் அவலத்தை சாடுவதோடு மட்டுமல்லாமல் , விலைவாசி ஏறிக்கொண்டேயிருக்கிறது ஆனால் சம்பளம் ஏறவில்லையே என்ற நடுத்தர வர்க்கத்தினரின் ஆதங்கத்தையும் வசனங்களில் பதிவு செய்திருக்கிறார் த.சே.ஞானவேல் ... 


இசைஞானி இசையில் " வாங்கும் பணத்துக்கும் " , " தாவி தாவி போகும் " பாடல்களும் அதற்கு நா.முத்துகுமாரின் வரிகளும் அருமை ... படம் முழுவதும் வசனங்களால் நிரம்பியிருந்தாலும் தேவைப்படும் இடங்களில் தன் இசையால் முத்திரை பதித்திருக்கிறார் இசைஞானி ... குறிப்பாக ஆஸ்பத்திரியிலிருந்து மகனை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியிலும் , ஆபரேஷன் முடிந்து ஆகாஷ் கண் விழிக்கும் கட்சியிலும் பின்னணி இசை அருமை ... 

பள்ளியிலிருந்து மகனின் பொருட்களை எடுக்கும் போது அவன் வாங்கிய பதக்கங்களை பார்த்து உருகும் காட்சியிலும் , ராதிகா ஆப்தே - பிரகாஷ் ராஜ் சமபந்தப்பட்ட காட்சிகளிலும் , தோனி  , சச்சின் போன்றவர்கள் கிரிக்கெட் ஆட தடை செய்ய வேண்டும் என மற்ற பிளாட் காரர்களிடம் புலம்பும் இடத்திலும் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர் பிரகாஷ் ராஜ் ஜொலிக்கிறார் ... 

படத்தின் முக்கிய ஆதாரமே ஆகாஷ் கிரிக்கெட் ஆடுவதில் திறமைசாலி என்பதே , ஆனால் அவரின் திறமையை கோச் , ஸ்கூல் ப்யூன் என்று ஒவ்வொருவராக பாராட்டிக்கொண்டிருக்கிறார்களே தவிர அவர் கிரிக்கெட் ஆடுவதாக ஒரு சீன் கூட இல்லை ... அதிலும்  க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் ஆடும் ஒரே சீனில் கூட ஒரு பயிற்சி பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரனின் உடல்மொழி ஆகாஷிடம் சுத்தமாக இல்லாதது படத்தின் பெரிய குறை ... 


தன் பிள்ளைகளின் திறமையையும் ,ஆசையையும் கருத்தில் கொள்ளாமல்  பள்ளிகளின் முன் தவம் கிடக்கும் பெற்றோர்களின் போக்கை பற்றி கொஞ்சம் கூட சொல்லாமல் எல்லாவற்றிற்கும் ஆசிரியர்களும் , பள்ளிகளும் மட்டுமே காரணம் என்பது போல அவர்களை மட்டுமே சாடியிருப்பது ஒருதலைப்பட்சமாக இருக்கிறது ... பள்ளிகள் வியாபாரத்தளங்களாக மாறியிருப்பினும் , குருவாக வணங்க வேண்டிய ஆசிரியரையே கொலை செய்யும் அளவிற்கு இன்றைய மாணவர் சமுதாயம் மாறிப்போனதற்கு படிப்பு பற்றிய பிரஷர் மட்டும் தான் காரணமா ? என்பதை சமூக ரீதியாக ஆராய வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் இருப்பதையும் யாரும் மறுக்க முடியாது ... 

இது போன்ற சில குறைகள் ,  மராத்திய படத்தின் ரீமேக் என்பதோடு ஏற்கனவே த்ரீ இடியட்சில் பார்த்த கரு என்ற போதிலும் பிரகாஷ்ராஜ் ஒரு இயக்குனராக தகப்பனின் பார்வையிலிருந்து இதை அழுத்தமாக சொல்லியிருக்கும் விதத்தை சற்றே நாடகத்தனமாக இருந்தாலும் பாராட்டலாம் ...  

ஸ்கோர் கார்ட் - 43 

30 December 2011

என்றென்றும் ராஜா ...

                              
சென்னை வானிலை மையம் இன்று " தானே " புயல் கரையை கடப்பதால் சென்னை உட்பட கடலோர பகுதிகளில் பெரும் புயலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று அறிவித்திருக்கிறது , ஆனால் அதற்கு முன்பே  நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் புயல் இல்லாத இசைஞானியின் இசை வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் இன்பமாக நனைந்தோம் ...

வார இறுதியில் வைக்காமல் வேலை நாளில் நிகழ்ச்சியை வைத்திருக்கிறார்களே கூட்டம் குறைவாக இருக்குமோ என்ற எள்ளளவு சந்தேகத்தை தவிடு பொடியாக்கியது வானை பிளந்த ரசிகர்களின் கூட்டம் ... தாமதமாக ஏழு மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி  முடிவதற்கு கிட்டத்தட்ட பனிரெண்டு மணி ஆகிவிட்டாலும்  இந்த பாட்டு இல்லையே  , அந்த பாட்டு இல்லையே என்ற ஏக்கத்துடனேயே ரசிகர்களை கலைய வைத்தது இசைஞானியின் இசை ...

பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய ஜெயா டி.வி யின் "என்றென்றும் ராஜா" லைவ் இன் கான்சர்ட்டின் சில முக்கிய அம்சங்கள் இதோ :
                     
*** குரு வணக்கத்துடன் துவங்கிய கான்சர்ட் இசைஞானியின் குரலில்
" ஜனனி ஜனனி " யில் ஆரம்பித்து எஸ்.பி.பி. யின் குரலில் " இளமை இதோ இதோ " வில் முடிவடைந்தது ***

                 
*** " அம்மா என்றழைக்காத " பாடலை பாட கே.ஜே.யேசுதாசை இசைஞானி அழைத்தவுடன் கூட்டத்தில் ஒரே கரகோஷம் ... " என் இனிய", "பூவே செம்பூவே " போன்ற மெலடி பாடல்களை பாடிய கே.ஜே முடிவில் " வச்ச பார்வை " என்ற குத்து பாடலையும் பாடி ரசிகர்களை அசர வைத்தார் ... " பூவே " பாடலில் இசை முடிவதற்கு முன்னரே இவர் பாட ஆரம்பித்து விட்டதால் அரங்கத்தில் பெரிய சலசலப்பு , பின் இருமுறை அவர் பாடிய பிறகே சலசலப்பு அடங்கியது ... பாடகரையும் , பாடல் வரிகளையும் தாண்டி இசைஞானியின் பின்னணி இசையின் மேல்  ரசிகர்கள் வைத்திருக்கும் வெறித்தனமான பக்திக்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம் ***

                       
*** இவரை நேரே பார்க்காதவர்கள் குரலை மட்டும் கேட்டால் நிச்சயம் இருபத்தைந்து வயதிற்கு மேல் சொல்ல மாட்டார்கள் ... அறுபத்தைந்தை தாண்டியும் குரலை அதே இனிமையில் வைத்திருக்கும் எஸ்.பி.பி யே ஷோவின் ஹைலைட் ... கான்சர்டில் அதிக பாடல்கள் பாடியவரும் இவரே...
 " நானாக நானில்லை " யில் ஆரம்பித்து " மடை திறந்து " , " கண்மணியே காதல் " , " சுந்தரி கண்ணால் " என்று மெலடிகளால் நம்மை கட்டிப் போட்டவர் " இளமை இதோ " வில் முடிக்கும் போது ஆட வைத்துவிட்டார் ... பாடல்களுக்கு நடுவில் எஸ்.பி.பி யின் இம்ப்ரோவைசெஷன் அருமை ***

*** இசைஞானி தன் குரலில் " ஜனனி " , " நான் தேடும் " , " ஒரு ஜீவன் " , அவரே முதன் முதலில் எழுதிய " இதயம் ஒரு கோவில் " என்று பாடல்கள் பாடியதோடல்லாமல் நடு நடுவே  சிம்பொனி , பாடல் கம்போசிங்கில் பாரதிராஜா எப்படி பேசுவார் என்றெல்லாம் சுவைபட விசயங்களை சொல்லி ரசிக்க வைத்தார் ... தொகுத்து வழங்க வேண்டிய பிரகாஷ்ராஜும் ஒரு பார்வையாளராக இதை ஓரமாக நின்று ரசித்துக்கொண்டிருந்தார் ***


*** உலகநாயகனால் நேரில் வர முடியாததால் அவர் பேசியதை வீடியோவில் காட்டினார்கள் ... கமல் பாடிய " சுந்தரி நீயும் " பாடலை ஹரிச்சரனும் , "நினைவோ ஒரு பறவை " , " ராஜா கைய வச்சா " பாடல்களை யுவனும் பாடினார்கள் ... யுவன் கமலை போல மிமிக்ரி செய்து எல்லோரையும் சிரிக்க வைத்தார் ***

*** தன் வசீகரிக்கும் குரலில் " சின்ன கண்ணன் " பாடலை பாடி முடித்தவுடன் பால முரளி கிருஷ்ணாவும் இசைஞானியும் இறுக தழுவிக்கொண்ட காட்சி உருக்கமாக இருந்தது ... பாடலை கேட்கும் போது ஜேம்ஸ் வசந்தனின் "கண்கள் இரண்டால் " பாடல் நினைவிற்கு வந்தது ***

*** சின்ன குயில் சித்ரா " புத்தம் புது காலை " , " பருவமே " , " சுந்தரி " உட்பட பல பாடல்களை பாடி உருக வைத்தார் ***

*** ஹரிஹரன் " நீ பார்த்த " பார்வையில் ராகத்தை மாற்றினாலும் குரலில் கிறங்கடித்தார் ... " என் மன வானில் " பாடலை சுருதி பிசகாமல் பாடினாலும் தமிழ் உச்சரிப்புகளை கொஞ்சம் கொலை செய்தார் ***

*** தீபன் சக்ரவர்த்தி - உமா ரமணன் குரலில் " பூங்கதவே " , கார்த்திக் - நான்சி  குரலில் " ஏதோ மோகம்  " , ஸ்ரீராம் குரலில் " இளங்காத்து வீசுதே " , பவதாரிணி குரலில் " கும் சும் " ஹிந்தி பாடல் இவையெல்லாம் சொக்க வைத்த மற்ற பாடல்கள் ***

                             
*** சிம்பொனி பின்னணியில் இசைஞானி பாடிய " இதயம் போகுதே " இரண்டே வரிகளானாலும் இதயத்தை வருடியது ...
" பா " , " அழகர் சாமியின் குதிரை " போன்ற படங்களின் பின்னணி இசையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன ***

*** " சீனி கம் " , " பா " போன்ற படங்களின் இயக்குனர் பால்கி இந்தியாவிலேயே பின்னணி இசையில் உண்மையான இசை இயக்குனர் இசைஞானி ஒருவர் தான் என்று புகழாரம் சூட்டியதோடு மட்டுமல்லாமல் இவர் பின்னணி இசையிலிருந்து தழுவி பல பாடல்களுக்கு இசையமைக்கலாம் என இளம் இசையமைப்பாளர்களுக்கு டிப்சும் கொடுத்தார்...இதை ஏற்கனவே பல இசையமைப்பாளர்கள் செய்து கொண்டு தானிருக்கிறார்கள் ***

***ஆறு வருடங்களுக்கு முன் இதே அரங்கத்தில் நடந்த இசைஞானியின் முதல் கான்சர்டில் இடம்பிடித்த மனோ , சாதனா சர்கம் , ஸ்ரேயா கோசல் போன்றோர் இதில் மிஸ்ஸிங் ... அதே போல் சினிமா பாடல்கள் தவிர இசைஞானியின் கீதாஞ்சலி உட்பட மற்ற ஆல்பங்களிலிருந்து  பாடல்கள் இடம் பெறாததும் சற்று ஏமாற்றமே ***

*** கமல் தன் வீடியோ உரையில் குறிப்பிட்டது போல இசைஞானி தன்னுடைய சோகத்தை மறைத்து தன் இசையின் மூலம் மற்றவர்களின் சோகத்தை குறைக்கிறார் என்பது தன்னுடைய துணைவியார் ஜீவா இறந்து சில காலமே ஆன நிலையிலும் தன் இசை வெள்ளத்தால் எல்லோரையும் நேற்று கவலைகளை மறக்க செய்த இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் புலனாகிறது ***


10 June 2011

சூன் 2 - இசை பிறந்த நாள்

           சூன் 2 - அன்னக்கிளியில் ஆரம்பித்து அழகர்சாமியின் குதிரை 
வரை தன்  இசையால்  இயற்கையில் பிரிந்து  கிடக்கும்  உயிர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி பிறந்த நாள் ..ஆம் இசை பிறந்த நாள்...
 இசையே நீ...இசைஞானி மட்டும் அல்ல,....இசையே நீ...
                               
            1943  ஆம் ஆண்டு பன்னைப்புரத்தில்  பிறந்தவருக்கு பெற்றோர்கள் தெரிந்தே தான் "ஞானதேசிகன்" என்று பெயரிட்டிருக்கிறார்கள்...தன்  இசை ஞானத்தால் எல்லோர் இதயங்களையும் இளமையாக வைத்து அதில் எப்போதுமே ராஜாவாக
சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் தான் "இசைஞானி" இளையராஜா...

            1976  இல் ஆரம்பித்து இன்று வரை 900த்துக்கும் மேற்பட்ட படங்கள் 
4000த்துக்கும்   மேற்பட்ட பாடல்கள் , இவர் இசைக்காகவே வணிக ரீதியாக வெற்றி பெற்ற நூற்றுக்கணக்கான படங்கள், நான்கு தேசிய விருதுகள்,  தமிழகம்,ஆந்திரம்,கேரளம்,மத்திய பிரதேசம்  என பல மாநில அரசுகளின்  விருதுகள்,  இந்தியாவின் மூன்றாவது பெரிய விருதான பத்ம  பூஷன் விருது ,

               ஆசியாவிலேயே சிம்பொனி இசை அமைத்த முதல்
இசையமைப்பாளர் , ஒரே வருடத்தில் 50  க்கும்  மேற்பட்ட படங்களுக்கு இசை
அமைத்த ஒரே இசையமைப்பாளர் , 2005   ஆம் ஆண்டு எம்.எஸ்.வி யுடன் இணைந்து வழங்கப்பட்ட துளசி விருது ,

        பி.பி.சி. வானொலி அறிவித்த உலகின் சிறந்த பத்து  பாடல்களில் இவர்
இசையமைத்த "ராக்கம்மா கையத்தட்டு" பாடல் தொடர்ச்சியாக இடம் பெற்றிருந்தது , 45 நிமிடங்களில்  சின்னத்தம்பி படத்திற்கான அத்தனை  ஹிட் பாடல்களையும் இசை அமைத்தது என்று இசைஞானியின் பெருமைகளை
சொல்லிக் கொண்டே போகலாம் ...நிச்சயம் இந்த ஒரு பதிவு போதாது..
ஆனால் இது அவரைப்பற்றிய புள்ளி விவரங்களை மட்டும் சொல்லும்  பதிவு அல்ல ...
           என்னைப் போன்ற கோடானு கோடி மக்களின் சந்தோசம்,துக்கம்,காதல்,காமம்,தனிமை,ஏக்கம்,பிரிவு, என எல்லா உணர்ச்சிகளிலும்  உறவாடும் அவர் இசையை பற்றிய பதிவு...

           தமிழ் திரையுலக வரலாற்றை இசைஞானிக்கு முன் இசைஞானிக்குப்  பின் என்று இரண்டாக பிரிக்கலாம்..அதுவரை இசை நன்றாக இருந்தாலும்
எம்.ஜி.ஆர் பாடல் , சிவாஜி பாடல் ,ஜெமினி பாடல் என்று சொல்லிக்கொண்டிருந்த மக்களை இளையராஜாவின் பாடல்கள் என்று சொல்லவைத்தது 'அன்னக்கிளி" பாடல்கள்...அன்றைய காலகட்டத்தில் ஹிந்தி பாடல்களை விரும்பி
கேட்டுக் கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்களை கேட்க வைத்ததோடு  மட்டும்  அல்லாமல் ஹிந்தி இசையமப்பாளர்களையே தமிழ் பாடல்களை திருடி 
மெட்டு போட வைத்தவர் இசைஞானி ..
                       
           ராமராஜன்,விஜயன் போன்ற சாமான்ய முகங்களையும் , மோகன் , கார்த்திக்,முரளி என்று பல புது
முகங்களையும் மக்கள் மனதில் பதிய வைத்தது இசைஞானியின் இசை ..

           இந்தியாவிலேயே பின்னணி இசைக்கு புது பரிணாமம் கொடுத்தது
இசைஞானியின் இசை..இன்றைய காலகட்டத்தைப் போல கைபேசி,,இணையதளம்  போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே
மனித மனமெங்கும் இசையை விதைத்தது  இசைஞானியின் இசை...
                       .
           சபா கச்சேரிகளில் புரிந்தோ,புரியாமலோ தலையாட்டிக் கொண்டிருந்து விட்டு
கிராமிய இசையை சாவுக் கொட்டு என்று சொன்ன கூட்டத்தின் பார்வையை
 "சிந்து பைரவி" படத்திற்கு பிறகு  தலை கீழாக திருப்பிப்போட்டது
 இசைஞானியின் இசை ..
                         
           இன்று மேற்கத்திய  பாடல்களை முழுவதும் திருடி விட்டு தன் பெயரை இசையமைப்பாளர் என்று போட்டுக்கொள்பவர்கள் மத்தியில்
"புன்னகை மன்னன்" படத்தின் மூலம் இசையின் எல்லைகளை விரிவு படுத்தியது இசைஞானியின் இசை....

             தமிழ் மொழி, இனம் என்று சொல்லி ஒரு கூட்டம்  ஏமாற்றிக்கொண்டிருக்க தமிழ் வரிகளை பட்டி தொட்டி எங்கும் பரப்பியது இசைஞானியின் இசை...

            தமிழனின் எந்த ஒரு விஷேசத்தையும் வியாபித்திருப்பது இசைஞானியின் இசை..தாயின் அரவணைப்பு , காதலியின் நேசம்,
நண்பனின் ஆறுதல் என எல்லாவுமாக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடன் கூடவே பயணப்படுவது
இசைஞானியின் இசை...

          பள்ளிப்பருவம் , முதல் காதல், கல்லூரி நாட்கள் , சுற்றுலா பயணம் ,
காதல் தோல்வி , நண்பர்களுடன் செய்த கூத்து என்று எல்லா நினைவுகளையும்
அசை போட  வைக்கும் இசைஞானியின் இசை ...
                                         
            இன்றும் பல படங்களின் பின்னணி இசையாக
ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது
இசைஞானியின் பழைய பாடல்கள் ,
தொலைக்காட்சித் தொடர்கள் கூட  இதை விட்டு வைக்கவில்லை... 
இசைஞானியின் இசை பாதிப்பு இல்லாமல் ஒருவரும் இசை அமைக்க முடியாது ....    
            
         ஒப்பிடுதல் செய்தே நேரத்தைக்கழிக்கும் தமிழன் ஏ.ஆர்.ஆர். என்ற
இளைஞனின் இசை ஒரு புத்துணர்வைக் கொடுத்தவுடன் இருவரையும்
ஒப்பிட்டதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை..
     இசைஞானியின் இசையில் புதிதாக ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு நீண்டது காது  கேளாதோர் பட்டியல்...

      ஏ.ஆர்.ஆர் வருகைக்குப் பிறகும் வள்ளி,வீரா,வால்டர் வெற்றிவேல்,அவதாரம்,காசி,காதலுக்கு மரியாதை,கண்ணுக்குள் நிலவு, சேது,விருமாண்டி,பிதா மகன்,நான் கடவுள் என்று தமிழில் இசைஞானி இசை அமைத்த
படங்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்,.... சீனி கம்,பா,பழசி ராஜா என்று பிற மொழி படங்களின் ஹிட் பாடல்கள், அதிகம் விற்பனை ஆன "திருவாசகம்" என்ற தனி இசைத்தொகுப்பு  என்று அடுக்கிக்கொண்டே போகலாம்...இருந்தும் "அம்னீசியா"வில் இருப்பவர்களை நாம் எழுப்ப முடியாது....

           76 ஆம்  ஆண்டுக்கு முன்னர் இறந்தவர்களையும், உயிரோடு இருந்தும்
இசைஞானியின் இசையினை உணராமல் நடை பிணமாக வாழ்பவர்களையும் எண்ணி வருத்தப்படுவதைத் தவிர நாம் வேறொன்றும்
செய்ய முடியாது ....
                                  
        இசை  மட்டுமே தெரிந்த இசைஞானிக்கு வியாபார நுணுக்கம், வெளி நாடுகளில் தன் முகவர்களை நியமித்தல் போன்ற விஷயங்களில் ஈடுபாடு
இல்லாததால் உலக அளவிலான ஆஸ்கர்,கிராமி விருதுகள் போன்றவை எட்டாமல் போயின..விருதுகள் வழங்கப்படுவது மட்டும் இல்லை..
சில நேரங்களில் வாங்கப்படவும் செய்கின்றன....இல்லையென்றால் நான்கு
தேசிய  விருதுகள் மட்டுமா கொடுத்திருப்பார்கள்??..

            இசைஞானிக்கு வாழும் காலத்திலேயே "பாரத் ரத்னா" பட்டம் வழங்கப்பட வேண்டும் , அவர் பெயரில் தேசிய அளவிலான
இசைப் பல்கழைக்கழகம் தொடங்கப்பட வேண்டும், இனி வழங்கப்படும் இசை சம்பந்தப்பட்ட எல்லா விருதுகளும் இசைஞானியின் பெயரிலேயே
வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளோடும், இசைஞானி வாழும்
காலத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம் என்று சந்தோஷப்படுவதொடும்
நின்று விடாமல் தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் இசைஞானியின்
பெருமையினை மேலும் மேலும் உலகமெல்லாம் பரப்ப வேண்டும்....

            இசைஞானி சம்பந்தப்பட்ட  பதிவு என்பதால் விரல்கள் தாளம் போடுவதை என்னால் தவிர்க்க முடியாததன் விளைவே இந்த நீண்ட பதிவு...
                

Related Posts Plugin for WordPress, Blogger...