Showing posts with label PARADESI. Show all posts
Showing posts with label PARADESI. Show all posts

16 March 2013

பரதேசி - PARADESI - பார்க்க வேண்டிய தேசி ...



வன்-இவன் மூலம் புதிதாய் ஏதோ முயற்சி செய்வதாக சொல்லி விட்டு நமக்கு அயர்ச்சியை கொடுத்த பாலாதனது வழக்கமான பாணியில் மிக அழுத்தமாக பரதேசி யை தந்து பிரமிக்க வைத்துவிட்டார் . பாலா ஒரே மாதிரியாக படம் எடுக்கிறாரே என்ற மனப்புண்ணிற்கு பரதேசிமூலம் மருந்து தடவியிருக்கிறார்  . இந்த படமும் ட்ராஜடி தான் என்றாலும் எடுத்த விதத்தில் தான் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் பாலா ...

ரெட் டீ  என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் பரதேசி . பிரிட்டிஷ் காலகட்டத்தில் ( 1939 ) கதை நடக்கிறது . சாலூர் கிராமத்திலிருந்து தேயிலைத் தோட்ட வேலைக்கு ஆட்களை எடுத்து விட்டு அவர்களை சொந்த ஊருக்கே திரும்ப அனுப்பாமல் கொத்தடிமைகளாக நடத்துவதோடு மூளை சலவை செய்து மதமாற்றம் செய்வதையும் அழுத்தமாக பதிவு செய்கிறது படம் . " நாம் இன்று கதகதப்பாக குடிக்கும் தேநீருக்கு பின்னால் பலரின் இரத்தம் இருக்கிறது " என்ற எழுத்துக்களுடன் தொடங்கும் படம் இரண்டு மணி நேரம் நம் இதயத்தை இறுகப் பிடிக்கிறது ...



அதர்வா தன் அப்பா முரளி பல படங்களில் சம்பாதித்த பெயரை இந்த ஒரே படத்தில் எடுத்து விட்டார் . ஒட்டுப்பொறுக்கி ( எ ) ராசாவாக நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார் . சாக்லேட் பாயாக இருந்த இவரை சாக்குத்துணி கேரக்டருக்குள் அடைத்து அனைவரையும் ஏற்றுக்கொள்ள் வைக்க பாலாவால் மட்டுமே முடியும் . ஊர் மக்கள்  சாப்பிடும் போது தனக்கு மட்டும் உணவில்லையே என்று அழும் போதும் , அடிக்காதே என்று கங்காணியிடம் கெஞ்சும் போதும் , ஊருக்கு திரும்ப முடியவில்லையே என்று ஏங்கும் போதும் , க்ளைமாக்ஸ் இல் கதறும் போதும் ஏதோ ஒரு விருது நிச்சயம் உண்டு என நம்ப வைக்கிறார் அதர்வா ...

வேதிகாவை கருப்பாக பார்ப்பதற்கு மனம் கஷ்டமாக தான் இருக்கிறது . அந்த கஷ்டத்தை தன் நடிப்பால் நிவர்த்தி செய்கிறார் . அதர்வா வை சீண்டி விட்டு பின் அவருக்காக இரக்கப்படும் இடத்தில் இவர் நடிப்பு மிளிர்கிறது ... இடைவேளைக்கு பிறகு வேதிகா இல்லாத வெற்றிடத்தை ஓரளவு நிரப்புகிறார் தன்ஷிகா . கணவன் ஓடி விட அதை காரணம் காட்டியே இவரது பணியை நீட்டிப்பு செய்யும் போது  பரிதாபம் வருகிறது ...



வசனமே பேசாமல் கண்களால் மட்டுமே பேசும் அதர்வா வின் நண்பன் , அப்பாவியான முகத்துடன் வரும் அவர் மனைவி , லோக்கல் டாக்டராக வரும் சுப்ரமணியபுர சித்தன் , வேட்டி அவிழ ஆட்டம் போட்டு விட்டு இறந்து போகும் ஊர் பெரியவர் , கங்காணி , அதர்வா வின் கூன் விழ வரும் பாட்டி இப்படி எல்லோரும் சின்ன சின்ன பாத்திரத்தில் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள் . சிறிது நேரமே வந்தாலும் டாக்டராக இருந்து கொண்டு மக்களின் அறியாமையையும் , ஏழ்மையையும் பயன்படுத்தி அவர்களை மத மாற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் வரும் சிவசங்கரும் , அவருடைய வெள்ளைக்கார மனைவியும் மனதில் இடம் பிடிக்கிறார்கள் . " அல்லேலூயா " பாடலில் இவர்களது ஆட்டமும் , நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்காமல் மத மாற்றம் செய்து விட்டு மது அருந்துவதும் நிஜத்தை தோலிருத்துக் காட்டுகின்றன . சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் இது போன்ற மத மாற்றங்கள் தொடர்ந்து வருவது வேதனையே ...

சாலூர் கிராமங்களுக்குள் கேமராவை வளைந்து வளைந்து போக விடும் செழியன் , ஊர் மக்கள் பயணப்படுவதை வைட்  ஆங்கிளிலும் ,  தேயிலைத் தோட்டத்தை டாப் ஆங்கிளிலும் காட்டி மிரள வைக்கிறார் . ஊர் வட்டார சொற்கள் பழக்கப்பட்ட சில நிமிடங்கள் பிடித்தாலும் அதன் பிறகு தன்  நக்கல் , நையாண்டி வசனங்களால் சிரிக்கவும் , சிலிர்க்கவும் வைக்கிறார் நாஞ்சில் நாடன் ... ஜி.வி.பிரகாஸ்குமாரின் இசையில் " செந்நீர் தானா " , " செஞ்காடே " பாடல்கள் இதமாக இருக்கின்றன . அவரின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் இசைஞானி இல்லாதது குறை போல தெரிகிறது . அந்த குறையை கங்கை அமரன்  " செந்நீர் தானா " பாடல் மூலம் ஓரளவு தீர்த்து வைக்கிறார் ...

தமிழில் சரித்திர கால படங்கள் வருவதில்லையே , அப்படியே வந்தாலும் ஸ்டீரியோ டைப்பாக இருக்குமே என்கிற குறையை தீர்த்து வைத்ததற்கும் , விளிம்பு நிலை மனிதர்களின் நிலை , அவர்களுக்குள்ளும் உள்ள ஏற்றத் தாழ்வுகள் , வசனங்களாக  இல்லாமல் விசுவலாக அவர்கள் படும் வேதனைகளை காட்டிய விதம் , வெள்ளைக்காரர்களை மட்டும் வில்லன்களாக சித்தரிக்காமல் அவர்களுக்கு துணை போகும் இந்தியர்களையும் தோலுரித்துக் காட்டியது , மத மாற்ற வித்தைகளை ஒரே பாடலில் சாமர்த்தியமாக பதிவு செய்த விதம் இவற்றிற்க்காகவும் , ஜெயமோகன் , எஸ்.ரா , நாஞ்சில் நாடன் போன்ற இலக்கியவாதிகளுடன் பாலா செய்து வரும் ஆரோக்கியமான பயணத்திற்காகவும் அவரை எழுந்து நின்று பாராட்டலாம் . அவருக்கு இந்த  படத்திற்காக  ஒரு தேசிய  விருதையும் எதிர்பார்க்கலாம் ...



போகும் வழியில் நோய்வாய்ப்பட்ட கணவனை அப்படியே போட்டு விட்டு மனைவியை தரதர வென கங்காணியின் ஆட்கள் இழுத்து செல்ல கணவனின் கை விரல்களை க்ளோஸ் அப்பில் காட்டி இன்டர்வெல் ப்ளாக் விடும் ஒரு காட்சியே பின்னா வரப்போகும் விபரீதங்களுக்கு காட்டப்பட்ட ஒரு சோறு பதம் .எமது கடன் சினிமாவை பொழுதுபோக்காக மட்டும் பார்ப்பதே என்றோ , மென்மையான படங்கள் தான் பிடிக்கும் என்றோ சொல்பவர்கள் பரதேசியை பார்த்து விட்டு புலம்புவதாக இருந்தால் பார்க்காமல் இருப்பதே நலம் . ஆனால் ஒரு முறை பார்த்தால் அவர்களையும் படம் பாதிக்கும் என்பதே என் கருத்து.. .

இடைவேளை வரை காதல் , கல்யாணம் என்று நேரத்தை கடத்துவது , அதர்வா தன் நண்பனின் மனைவியிடம் நிலைமையை புரிந்து கொள்ளாமல் கோவித்துக் கொள்வது , தகப்பன்சாமி , அங்காடிதெரு போன்ற படங்களில் சொல்லப்பட்ட கதை போன்ற சில குறைகளையும்  தாண்டி இரண்டு மணி நேரம் சாலூர் கிராம மக்களுடன் நம்மையும் சிரித்து , அழுது , கோபப்பட்டு , பயப்பட்டு பயணப்பட வைத்த பாலா பிரம்மாண்டமாய் நம் கண் முன் தெரிகிறார் . பரதேசி யை " பெஸ்ட் ஆப் பாலா" என்று சொல்வதில் சிறு தயக்கம் இருந்தாலும் நிச்சயம் " பாலா அட் ஹிஸ் பெஸ்ட் " என்று அடித்து சொல்லலாம் . உலக சினிமா தரத்தில் இருக்கும் பரதேசி -  பார்க்க வேண்டிய தேசி ...

ஸ்கோர் கார்ட் : 51 

15 March 2013

பாலாவும் பரதேசியும் ...


ன்றைய காலகட்டத்தில் ஒரு படம் வெளி வருவதற்கு முன்பே அதை பற்றிய டீசரையோ , ட்ரைலரையோ  இணையதளத்தில் வெளியிட்டு அதன் மூலம் பப்ளிசிட்டி தேடுவதென்பது  தவிர்க்க முடியாததாகி விட்டது . சமீபத்தில் யு ட்யூப்பில் வெளியிடப்பட்ட " யாருடா மகேஸ் " படத்தின் ட்ரைலர் அதன் டபுள் மீனிங் வசனங்களுக்காக இளைஞர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது ...

பொதுவாக இங்கே இது போன்ற டீசர் பப்ளிசிட்டிகள் புதியவர்கள் பங்கு பெறும்  படங்களுக்கு தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன . ஆனால் அந்த வரிசையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா சில நாட்களுக்கு முன் வெளியிட்ட பரதேசி படத்தின் உருவாக்கம் பற்றிய டீசர் வரவேற்பை பெறுவதற்கு பதில் அதிகம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது . பாலா படப்பிடிப்பில் ஆதர்வ் உட்பட சில நடிகர்களை கம்பால் அடிப்பது போல வரும் காட்சிகளே இந்த அதிர்வலைகளுக்கு காரணம் ...

பாலா நார்மலானவர் கிடையாது கொஞ்சம் சைக்கோத்தனம் உள்ளவர் என்ற அபிப்பிராயம் திரையுலகத்தில் பொதுவாகவே உண்டு . அதிலும் இது போன்ற தன்னை பற்றிய  தகவல்களை பத்திரிக்கைகளின் மூலம் அவரே வெளிப்படுத்தியிருக்கிறார் . அவர் படங்களில் வரும் ஹீரோக்கள் என்றுமே நார்மலாக இருந்ததில்லை . அழகாக இருக்கும் ஹீரோக்களை கூட ஏதாவது செய்து கர்ண கொடூரமாக்குவது அவரது வாடிக்கை . விக்ரம் , ஆர்யா , விஷால் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கும் அப்பாவி ஆதர்வ் . பாலா இது போன்றே தொடர்ந்து எல்லா  படங்களிலும் செய்து வருவது சலிப்பை தருவதையும் மறுப்பதற்கில்லை ...

பாலா படங்களில் நடிப்பது கூட அவ்வளவு எளிதான விஷயமில்லை . எந்த நடிகராக இருந்தாலும் தனக்கு வேண்டிய நடிப்பு வரும் வரை அவர்களை கசக்கிப் பிழிந்து விடுவாரென்பது விவரமறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும் . இப்படி எவ்வளவோ இருந்தும்அவரது படங்களில் நடிப்பதற்கு ஹீரோக்கள் குறிப்பாக வளர்ந்து வரும் ஹீரோக்கள் அதிக ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் பாலாவின் படங்களில் நடித்ததற்கு பிறகு அவர்களுக்கு கிடைக்கும் இமேஜ் சேஞ்ச் ஓவர் ...

விக்ரம் , சூர்யா இருவரும் இதற்கு சிறந்த உதாரணங்கள் . சேதுவிற்கு முன் பல வருடங்கள் சினிமாவில் இருந்தும்தனக்கென்று ஒரு இடம் கிடைக்காமல் மற்ற ஹீரோக்களுக்கு டப்பிங் செய்து கொண்டிருந்தார் விக்ரம். பெரிய நடிகரின் பையனாக இருந்தும் நடிப்பு என்ன விலை என்று கேட்குமளவிற்கு இருந்த சூர்யா நந்தா விற்கு பிறகே அனைவராலும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கப்பட்டார் . மற்ற எல்லா துறைகளையும் விட சினிமாவில் அதிகமான சங்கடங்களும் , அவமானங்களும் இருந்தும் அதில் நிறைய பேர் விரும்பி வேலை செய்வதற்கு காரணம் அதில் எல்லா துறைகளையும் விட அதிகமாக கிடைக்கும் பணமும் ,புகழும் ...

பரதேசி டீசரை பார்த்து  விட்டு பொது மக்கள் அதிர்ச்சிடையலாம் ;, ஆனால் சினிமாவில்  இருப்பவர்களே பாலா வை கண்டபடி திட்டுவது ஆச்சர்யமாக இருக்கிறது . ஏனெனில் இந்த டீசரை  பாலா வெளியிடாமல் இருந்திருந்தால் மட்டும் சினிமாவில் எல்லாம் ஒழுங்காக நடக்கின்றன என்றோ அங்கே எந்த விதத்திலும் மனித உரிமை மீறலோ , பாலியில் ரீதியான இம்சைகளோ நடக்கவேயில்லை என்றோ இவர்கள் உறுதியாக கூற முடியுமா ? அதிலும் இந்த டீஸரை உன்னிப்பாக பார்த்தாலே அவர் நடிக்க சொல்லித் தருகிறார் என்பதும் , அந்த தடி சினிமாவிற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட போலி தடி என்பதும் நன்றாகவே விளங்கும் ...

இது போன்ற ஒரு டீஸரை வெளியிட்டு அதன் மூலம் படத்திற்கு எதிர்மறையாக இருந்தாலும் ஒரு பப்ளிசிட்டியை தேடிக்கொள்வதே ஒரு தயாரிப்பாளராகவும் , இயக்குனராகவும் பாலாவின் நோக்கமென்பது சினிமா ஆர்வலர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் . எனவே இளம் தலைமுறை சினிமாக்காரர்கள் இதை விமர்சிப்பதை விட்டு விட்டு இந்த துறையை ப்ரொபஸனலாக முன்னேற்றுவதற்கு தங்களால் முடிந்த முயற்சிகளை செய்தால் அதை பாராட்ட அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம் . ஹாலிவுட் படங்களுக்கு இதை விட மோசமான முறையில் ரியாலிட்டி பப்ளிசிட்டி செய்யப்படுவது மிகவும் வாடிக்கையான ஒன்று . எனவே பாலாவின் பரதேசி டீசர் ரியாலிட்டி அல்ல வெறும் பப்ளிசிட்டி ...

பரதேசி ரியாலிட்டி டீசர் - இங்கே பார்க்கவும் ...

Related Posts Plugin for WordPress, Blogger...