11 March 2017

மாநகரம் - MAANAGARAM - மஸ்ட் வாட்ச் ...


திட்டமிட்டு ரிலீஸ் தேதிக்காக வெயிட் பண்ணி பார்க்கும்  படங்கள் சொதப்பும் வேளையில் , சும்மா பாக்கலாமே என்று போகும் சின்ன பட்ஜெட் படங்கள் செம்மையாக இருக்கும் . மாநகரம் அதில் ரெண்டாம் வகை . நடிகர்களை தவிர்த்து இயக்குனர் உட்பட அனைவரும் புதுவரவுகள் என்பதை நம்ப முடியவில்லை ...

வேலைக்காக சென்னை வரும் ஸ்ரீ , அவரை இண்டெர்வியூ செய்யும் எச்.ஆர் பெண்ணை ( ரெஜினா ) பல வருடங்களாக காதலிக்கும் சுதீப் , கார் ஓட்டுநர் சார்லீ , ஒரு கடத்தல் கும்பல் இவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்களின் சுவாரசிய தொகுப்பே மாநகரம் ...

வழக்கு , ஓ.ஆ வை தொடர்ந்து ஸ்ரீ க்கு சரியான படம் . வேலை தேடும் இளைஞனாக வெகு இயல்பாக பொருந்துகிறார் . கிளைமேக்ஸ் சண்டையில் இவரது ஆக்ரோஷம் அதிர வைக்கிறது . நல்ல உயரம் , உடல் மொழியுடன் வரும் சுந்தீப் கிஷன் கேரக்டர் ஸ்கெட்சில் ஹீரோயிசம் இருந்தாலும் காட்சிகள் இயல்பாகவே இருக்கின்றன . ரெஜினா ரெஃ ப்ரிஜிரே ட்டரில் வைத்த ஆப்பிள் போல ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார் . படத்தின் முக்கியமான ஒரே பெண் கதாபாத்திரம் இவர் மட்டுமே . சார்லீ , மது போன்றோர் சரியான தேர்வு . சீரியசான படத்தில் காமெடி என்ற பெயரில் கொலை செய்யாமல் ராமதாஸ் ப்ளாக் காமெடியால் ராவடி செய்கிறார் . இவரை சரியாக பயன்படுத்திய இயக்குனருக்கு பாராட்டுக்கள் ...


படத்திற்கு இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங் எல்லாமே பக்க பலமாக இருந்து ஸ்மால் பட்ஜெட் படத்துக்கு ரிச் லுக்கை கொடுக்கின்றன . வேகமான திரைக்கதை என்பது வெறும் கேமராவை அங்குமிங்கும் ஆட்டுவதோ , டாட்டா சுமோவை வேக வேகமாக ஓட்டுவதோ இல்லை என்பதை சீனியர் இயக்குனர்கள் லோகேஷிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் .அதிலும் குறிப்பாக வேறு வேறு சம்பவங்களை சரியாக கோர்ப்பதென்பது தனி கலை. அதை எடிட்டர் பிலோமின் ராஜ் உதவியுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கச்சிதமாக செய்திருக்கிறார் .  நீண்ட நாட்கள் கழித்து முற்றிலுமாக நம்மை ஒன்றை வைத்த படம் ...

மாநகரம் என்ற தலைப்பை பார்த்தவுடன் சிட்டி யில் நடக்கும் அட்ராஸிட்டிகளை  படம் பிடித்து கடைசியில் பாடம் எடுப்பார்களோ என்று பயந்தால் ஏமாற்றமே , சார்லி , ஸ்ரீ இருவரும் காருக்குள் பேசிக்கொள்ளும் வசனங்களிலேயே சிட்டி பற்றிய ஒரு ஒரு அவுட்லுக்கை ஸ்வீட் அண்ட் சார்ட்டாக கொடுத்திருப்பது க்யூட் . சஸ்பென்சாக போகும் படத்தில் சில நிமிடமே இருந்தாலும் வரும் லவ் பாட்டு , பி.கே.பி பற்றி கொடுக்கப்படும் சினிமாத்தனமான பில்ட் அப் இவை தவிர படத்தில் பெரிய குறைகள் இல்லை. மிரட்டும்  கதையெல்லாம் ஒண்ணுமில்லை , நெஞ்சை நக்கும் கிளைமேக்ஸ் இல்லை , உருக விடும் நடிப்பும் இல்லை ஆனால் திரைக்கதை என்கிற வஸ்து
ஒரு படத்தின் வெற்றிக்கு எந்த அளவு முக்கியம் என்பதை உணர நினைப்பவர்களுக்கு மஸ்ட் வாட்ச் இந்த மாநகரம் ...

ஸ்கோர் கார்ட் : 46 

ரேட்டிங்   : 3.75* / 5 * 


8 March 2017

குற்றம் 23 - KUTTRAM 23 - குடும்ப க்ரைம் நாவல் ...


வெற்றியோ தோல்வியோ நம்பிக்கை தரும் இயக்குனர்கள் சிலரில் ஒருவர் அறிவழகன் . சுபா , பி.கே.பி இவர்களுக்கெல்லாம் அண்ணன் க்ரைம் மன்னன் ராஜேஷ்குமாரோடு இணைந்திருக்கும் படம் குற்றம் 23 . நாவலை வெள்ளித்திரையில் அப்படியே கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல . அதை இந்த கூட்டணி திறம்படவே செய்திருக்கிறது எனலாம் ...

கர்ப்பிணிப் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள் இதன் பின்னணியில் இருக்கும் மர்ம முடிச்சுகளை ஏ.சி.பி வெற்றி ( அருண்விஜய் ) அவிழ்க்கும் மெடிக்கல் த்ரில்லரே குற்றம் 23 . க்ரிப்போடு பக்கா  த்ரில்லராக இருந்திருக்க வேண்டிய படம் குடும்ப செண்டிமெண்டால் கொஞ்சம்  அப்படியிப்படி தள்ளாடுகிறது ...

திறமையிருந்தும் பெரிய பிரேக் கிடைக்காமல் அல்லாடும் நடிகர் அருண்விஜய் . இதில் காப் வேஷத்தில் கச்சென பொருந்துகிறார் . காதல் காட்சிகளில் குறும்புன்னகையோடு கடந்து போகிறார் . இவருக்கு ஜோடியாக மஹிமா நல்ல தேர்வு . ஆறாது சினத்தில் ரோபோ ஷங்கரை திணித்தது போலல்லாமல் இதில் தம்பி ராமையா வை அளவோடு உபயோகப்படுத்தியிருக்கிறார் அறிவழகன் . அபிநயா , அர்விந்த் , வம்சி எல்லாமே கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்கிறார்கள் . விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை , பாஸ்கரின் ஒளிப்பதிவு எல்லாமே படத்தின் தரத்தை உயர்த்துகின்றன ...


அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களை வைத்து முதல் பாதியில் முற்றிலுமாக ஒன்றை வைக்கிறார் இயக்குனர் . சாட்சிக்கார பெண்ணிடம் ஹீரோ சரண்டர் ஆவது ஹைக்கூ . ஹீரோ வீட்டிலேயே ஒரு சாவை ஏற்படுத்தி இண்டெர்வெல்லில் வைக்கும் ட்விஸ்ட் இன்ட்ரெஸ்டிங் . ஆனால் அதை இரண்டாம் பாதியில் தக்க வைக்கத் தவறிவிட்டார்கள் ...

செயற்கை முறை கருத்தரிப்பை வைத்து பிண்ணப்பட்டிருக்கும் கதையின் கரு வீக்காக இருந்தாலும் லாஜிக் முடிச்சுகளை சரியாகவே போட்டு அவிழ்க்கிறார்கள் . அடுத்தடுத்து தற்கொலை சம்பவங்கள் நடக்க ஹீரோ தனது சவுகரியத்துக்கேற்ப விசாரணை நடத்துவது   நெருடல் .  ஸ்பெர்ம் டொனேஷனை வைத்து விக்கி டோனர் மாதிரியான ஜாலி படங்கள் ஹிந்தியில் வந்து கொண்டிருக்க இங்கே அதன் சீரியஸ் பக்கத்தை தொட்டிருக்கிறார்கள் . மேக்கிங்க் வைஸ் ஸ்டைலிஷாக இருந்தாலும் ஷார்ட் ன் ஸ்வீட் க்ரைம் நாவலாக இல்லாமல் குடும்ப சென்டிமெண்டையும் சேர்த்து குடும்ப க்ரைம் நாவலாக வந்திருக்கிறது குற்றம் 23 ...

ரேட்டிங்க்  : 3.25 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 43


12 February 2017

சிங்கம் 3 - SI3 - சர்க்கஸ் ...


ரு வழியாக பதுங்கி பதுங்கி கடைசியில் வந்தே விட்டது சிங்கம் 3 . முதல் இரண்டு பாகங்களில் இருந்த கர்ஜனை குறைந்து சத்தம் அதிகமாக கேட்டாலும் ஹரி - சூர்யா காம்பினேஷனில் வேறெதையும் புதிதாக எதிர்பார்க்க முடியாதென்பதால் ஏமாற்றமில்லை . சூர்யா  வின் தெலுங்கு மார்க்கெட்டை கணக்கில் கொண்டு ஆந்திராவில் கதைக்களனை அமைத்திருக்கிறார்கள் ...

ஆந்திர  உள்துறை அமைச்சரின் வேண்டுகோளிற்கிணங்க  அங்கே சென்று கமிஷனர் கொலை  வழக்கை கையிலெடுக்கிறார் துரைசிங்கம் ( சூர்யா )  . அதன் பின்னணியில் இருக்கும் சதியை ஆஸ்திரேலியா வரை சென்று முறியடிக்கிறார் . என்ன நமக்கு  தான் காதுல ங்கொய்னு கேட்டுக்கிட்டே இருக்கு ...

சூர்யா ஏழு வருடமாகியும் உடலையும் குரலையும்  அப்படியே கிண்ணென்று வைத்திருக்கிறார் . இந்த உயரத்துக்கு தமிழ்நாடு போலீஷே அதிகம்  இதுல இன்டர்நேஷனலா என்று நெருடினாலும் தனது உடல்மொழியால் அதை சமன் செய்கிறார் . முதல் பாகத்தில் லவ்வராக இருந்தவர் படிப்படியாக முன்னேறி இப்போது சிங்கத்துக்கு ஆன்டியாகியிருக்கிறார்  அனுஷ்கா . ரெஸ்ட் ரூம் என்றால் என்னவென்று தெரியாதவரை  எல்லாம் எப்படி போலீசில் சேர்த்தார்கள்  ? சூரி யை வைத்து சிரிக்க வைக்கிறேன்  பேர்வழி  என்று முகம் சுழிக்க வைக்கிறார்கள் ...


ஸ்ருதி க்கு சூர்யாவை சைட் அடிப்பது தவிர பெரிய  வேலையில்லை . இவரை சாகடிக்காதது  ஆறுதல் என்றாலும் சூரியோடு சேர்ந்து காமெடி செய்ய வைத்து நம்மை சாவடிக்கிறார்கள் . நான் தமிழன்டா  என்று கூவும் ஹீரோக்கள் படத்திலேயே ஹிந்தி வில்லன்கள் தான் இருப்பார்கள் . நான் இந்தியன் என்று கர்ஜிக்கும் சூர்யா படத்தில் வேறு யார் இருக்கப்போகிறார்கள் ?! . அதிலும் சூர்யா விடம் அடி வாங்கி சாவதற்கு அவ்வளவு பெரிய எக்சர்ஸைஸ் எதற்கு ?. ராதிகா கொஞ்ச நேரம் வந்தாலும் நடிப்பால் சிலிர்க்க வைக்கிறார் ...

தேவி ஸ்ரீ பிரசாத் ஒரே மாதிரி உருட்டினாலும் பாட்டில் தாளம் போடவாவது வைப்பார் . இதில் ஹேரிஸ் ஜெயராஜ் சாரி ஜெயராஜ் . ப்ரியனின் ஒளிப்பதிவு பெர்ஃ பெக்ட் . விஜயனின் எடிட்டிங்கில் கட்டிங் ஓட்டிங் சிங்கத்தின் வேகத்தை கூட்டுகின்றன . தமிழ்த்திமிரு பேசாமல் ஒரு கட்டம் மேல போய் இந்திய இறுமாப்பை காட்டும் ஹரி யின் வசனங்கள் விறுவிறு ...

ஹரியின் டெம்ப்லேட் படம் . என்ன ஏதென்று யோசிப்பதற்குள் ரோலர் கோஸ்டரில் உட்கார்ந்து போல படம் கடகடவென ஓடி  இடைவேளை வந்து விடுகிறது . திரும்பவும் பாப்கார்ன் சாப்பிட்டு முடிப்பதற்குள் சூர்யா பக்க பக்க மாய் டயலாக் பேசி முடித்து விடுகிறார் . முடிவில் என்ன நடக்குமென்பது கண்ணை மூடிக்கொண்டாலும் தெரியுமென்பதால் நாம் சாவகாசமாக சாப்பிட முடிகிறது . காமெடி , காதல் இவை சொதப்பினாலும் அதிரடி ஆக்சன்களால் படத்தை  நிறுத்துகிறார் ஹரி . முதல் இரண்டு பாகங்களை விட படம் குறைவு தான் என்றாலும் பரபரவென்று கத்திக்கொண்டே பறந்து பறந்து ஏதாவது சாகசம் செய்து கொண்டேயிருக்கிறது இந்த சர்க்கஸ் சிங்கம் ...

ஸ்கோர் கார்ட் : 41 

ரேட்டிங்   : 2.75 * / 5 * 

Related Posts Plugin for WordPress, Blogger...