Showing posts with label அனந்துவின் கட்டுரைகள். Show all posts
Showing posts with label அனந்துவின் கட்டுரைகள். Show all posts

13 May 2016

தெருக்கூத்து - வாக்காளப் பெருமக்களே ! ...


2016 தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே  இருக்கின்ற நிலையில் அதிமுக தான் ஆட்சியை பிடிக்கும் என சில ஊடகங்களும்  , திமுக வுக்கு தான் அதிக வாய்ப்பு என்று சில ஊடகங்களும்  எதிரும் , புதிருமான  தகவல்களை முன்வைத்து ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் வாக்காளனை மேலும் குழப்புகின்றன . எல்லா வாக்காளர்களும் எந்த கட்சிக்கு ஓட்டுப் போட  வேண்டுமென்பதை இந்த  கருத்துக்கணிப்புகள்  தீர்மானித்து விட முடியாதென்றாலும் தீர்க்கமான முடிவெடுக்காத வாக்காளர்களை நிச்சயம் இது இன்ப்லுயன்ஸ் செய்யும் ...

வாக்கு வங்கி 



என்ன நடந்தாலும் திமுக வுக்கு தான் எனது வாக்கு என்று ஒரு சாரரும் , அதிமுக வுக்கு தான் என மற்றொரு கும்பலும் இருக்கின்றன . இந்த இரண்டு கட்சிகளுக்கான அடித்தளமே இந்த வாக்கு வங்கிகள் தான் . சமீப காலமாக விலையில்லா நலத்திட்டங்கள் ( அதாங்க இலவசம் ) மூலம் அதிமுகவின் வாக்குவங்கியும் , தொழில் வளர்ச்சி பெரிதாக இல்லாத அதிருப்தியால் ( அந்த வளர்ச்சியால் அதிகம் பலனடைந்தது கட்சி சார்ந்த குடும்பங்கள் எனும் போதிலும் ) திமுக வின் வாக்குவங்கியும் அதிகரித்திருக்கின்றன . இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து 50 லிருந்து 65 சதவிகிதம் இந்த வாக்கு வங்கி இருக்கும். ஆனால் இவற்றை சாராத தேர்தலுக்கேற்ற படி சிந்தித்து ஓட்டு போடும் மற்ற 35 சதவிகிதத்தினர் இந்த முறை நிறைய இடங்களில் கட்சிகளின் வெற்றி தோல்விக்கான காரணிகளாக இருக்கப் போகிறார்கள் . அதற்கு முக்கிய காரணம் ஒரு  கோடிக்கு மேல் புதிய வாக்காளர்களை தமிழகம் பெற்றிருப்பது . அதிலும் கூட எனது தாத்தா காலத்திலிருந்தே நாங்க திமுக தான் என்றோ அல்லது அதிமுக என்றோ சொல்லும் வகையினரும் நிச்சயம் இருக்கலாம்  ...

புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவிலை , திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் கூட செயல்படுத்தப்படவில்லை , முதல்வர் மக்களை தேர்தல் நேரம் தவிர சந்திக்கவேயில்லை , தொழில் வளர்ச்சி இல்லை , மதுவால் சமூகம் சீரழிந்து விட்டது என்று எவ்வளவோ அதிமுக ஆட்சி பற்றி குறை சொன்னாலும் அப்போ திமுக மட்டும் ஒழுங்கா என்று இவர்கள் ஒப்பீடு செய்வார்களே தவிர உண்மையை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  2ஜி உட்பட காங்கிரஸ் உடன் ஆட்சியில் இருந்த போது நடந்த ஊழல் , வளர்ச்சி என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டும் கல்லா கட்டியது , ஊருக்கு ஒன்று என்று இயங்கும் அதிகார மையங்களால் சொத்து அபகரிப்பு உட்பட பல இன்னல்களுக்கு பொது மக்கள் ஆளாகியது , மின்வெட்டு , சினிமா உட்பட பல துறைகளில் அரசாங்க தலையீடு போன்ற குறைபாடுகளை எடுத்துவைத்தால் திமுக ஆதரவாளர்கள் அதற்கு செவிமடுக்க  மாட்டார்கள் . ஆகவே  இந்த இரண்டு கட்சிகளால் அதிகம் பலனடையாத அல்லது இரண்டையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கின்ற வகையினருக்கான பதிவாக கூட இதை சொல்லலாம் ...

மாற்றமா ? ஏமாற்றமா ? 

இப்படி இரண்டையும் தவிர்த்து நம் கண் முன் நிற்கும் மாற்று கட்சிகளில் வாக்கி சதவிகிதத்தின் அடிப்படையில் முன்னாள் நிற்பது தேமுதிக தலைமையில் இருக்கும் மக்கள்நலக்கூட்டணி . தன்னை விட அதிக அரசிய அனுபவம் வாய்ந்த வைகோ , திருமா போன்ற தலைவர்களை தனது தலைமையின் கீழ்  கொண்டு வந்த வகையில் இது கேப்டனுக்கு தனிப்பட்ட வெற்றி . மற்றபடி குறைந்தபட்ச செயல்திட்டத்தின் மூலம் நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்  என்று என்ன தான் சொன்னாலும் இது அரசியலுக்கான கூட்டணி தான் . அதிலும் எப்போது முதல்முறை காங்கிரசுடன் கூட்டணி வைத்தார்களோ அப்போதே கம்யூனிஸ்டுகளின் கொள்கையெல்லாம் காலாவதியாகிவிட்டது . அதற்கு சமீபத்திய உதாரணம் இங்கேயும் , கேரளத்திலும் காங்கிரசை எதிர்க்கும் கம்யுனிஸ்ட் மேற்கு வங்காளத்தில் கை கோர்த்திருப்பது . மக்கள் நல போராட்டங்களை முன் வைத்து நடத்திய வகையில் வைகோ , திருமாவளவன் இருவருக்கும் நன்மதிப்பு உண்டு . ஆனாலும் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி கூட்டணி வைத்த  வகையில் அவர்களின் நம்பகத்தன்மை போய்விட்டது . அரசியலில் தங்களை விட இளையவரான விஜயகாந்தின் வருகைக்காக இவர்கள் வாசலில் காத்திருந்ததன் மூலம் அது மேலும் சிதைந்துவிட்டது . இவர்கள் முன் வைக்கும் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் சாத்தியமா என்பது பெரிய கேள்விக்குறி . ஊழலுக்கு எதிராக இவர்கள் இருப்பார்கள் என வைத்துக்கொண்டாலும் கம்யுனிஸ்டுகள் இருக்கும் இடத்தில் நிச்சயமாக  எந்தவிதமான தொழில் வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியாது . ஆனால் பல இடங்களில் இவர்கள் திமுக வுக்கு போகக்கூடிய ஓட்டை பிளப்பார்கள் என்று மட்டும்  எதிர்பார்க்கலாம் ...

தேசிய அளவில் வெறும் இரண்டு சீட்களுடன் தனது கணக்கை துவக்கிய பாஜக இன்று தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு 30 வருடங்களில் வளர்ந்திருந்தாலும் தமிழகத்தில் அவர்களால் வலுவாக காலூண்ட  முடியவில்லை . தமிழிசை , ராஜா , பொன்னார் என்று நிறைய பிரபலமான தலைவர்கள் இருந்தும் கூட  கட்சியை பட்டி தொட்டிக்கெல்லாம் கொண்டு செல்லக்கூடிய தொண்டர்படை இல்லாதது பெரிய குறை . மோடியின் சாதனையை மட்டும் வைத்து இங்கே ஓட்டு வாங்கிவிட முடியாது என்பதே நிதர்சனம் . இவர்களும் கூட்டணி கட்சிகள் ஒன்று கூட மதிக்காத நிலையில் தேமுதிக , பாமக எல்லாமே எங்கள் கூட்டணியில் தான் இருக்கின்றன என்று ரொம்ப நாட்கள் கச்சேரி செய்ததை நிறுத்தி விட்டு தனித்து போட்டி என்கிற முடிவை முன்பே எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . நிறைய மாநிலங்களில் ஆளும் அனுபவமும் , இரண்டு ஆண்டுகளில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லாமல் மோடி ஜி ஆண்டு வருவதும் இவர்களுக்கு பலம் . அண்டைய கேரளாவில் காங்கிரஸ் , கம்யூனிஸ்ட்களுக்கு மாற்றாக முதல் முறையாக இவர்கள் மூன்றாவது அணியாக உருவெடுத்திருப்பது நல்ல மாற்றம் . தமிழகத்தில் சென்ற நாடாளுமன்ற தேர்தல் போலல்லாமல் இந்த முறை தனித்து விடப்பட்டது துரதிருஷ்டம் . சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மீட்பு நடவடிக்கை , ஜல்லிக்கட்டு திரும்ப நடைபெற முயற்சி போன்றவற்றால் இவர்களின் செல்வாக்கு  தென்தமிழகத்தில் கொஞ்சம் கூடியிருக்கிறது என்பது உண்மை . இப்பொழுது இவர்கள் தங்களுக்கென்று ஓரளவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்திவருவது புத்திசாலித்தனம் . சீட்டு பெரிதாக கிடைக்கிறதோ இல்லையோ தங்களுக்கான ஓட்டு சதவிகிதத்தை அதிகரித்துக் கொள்வது அடுத்த தேர்தலுக்கு நன்மை பயக்கும் . தென் சென்னை , கன்னியாகுமரி , கோவை உட்பட சில இடங்களில் அதிமுக வின் வாக்கு  இவர்கள் பால் சாய்வதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது  ...

பேச்சு மட்டும் போதுமா ?

மருத்துவரான அன்புமணி ராமதாஸ் யின் பிரச்சார உத்தி , இலவசங்கள் இல்லாத தேர்தல் அறிக்கை , வேட்பார்களாக படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு போன்றவை நிச்சயம் கவராமல் இல்லை . இன்று எல்லா கட்சிகளுமே சாதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது இவர்கள் மேல் மட்டும் சாதி முத்திரை குத்துவது தவறு . அதே சமயம் ஏற்கனவே அதிகரித்து வரும் ஆணவக்கொலைகள் இவர்கள் வந்தால் மேலும் அதிகரிக்கும் என்று ஒரு சாராரிடையே உள்ள அச்சத்தை முற்றிலும் புறந்தள்ளி விட முடியாது . மற்றவர்களை விட மது ஒழிப்பில் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுக்கும் இவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என நம்பலாம் . ஆனால் அதன் மூலம் ஏற்படப்போகும் வருமான இழப்பிற்கு இவர்கள் வேறெந்த உகந்த திட்டத்தையும் முன்வைக்கவில்லை . அதிகார துஷ்பிரயோகம் , குடும்ப அரசியல் , அடக்குமுறை போன்றவற்றுக்கு எதிராக இவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம் . வட  மாவட்டங்களில் திமுக , அதிமுக இருவரின் ஓட்டுக்களையும் இவர்கள் பிரிப்பார்கள் என்ற போதும் தென் மாவட்டங்களில் இவர்களுக்கு வேலை பார்க்க எல்லா தொகுதிகளிலும் ஆள் இருக்கிறார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம் ...

அரிசி , கைபேசி வாங்கக்கூட வக்கில்லாதவனா  தமிழன் என்று தொண்டை புடைக்க சீமான் கேட்கும் கேள்விகள் நம்மை புல்லரிக்க வைக்கின்றன . ஆனால் ஒருவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க அது மட்டும் போதுமா ? கர்நாடகாவை  கன்னடன் ஆள்கிறான் , கேரளாவை  மலையாளி ஆள்கிறான் தமிழ்நாட்டை ஏன் தமிழன் மட்டும ஆளக்கூடாது என்று அவர் கேட்கிற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை . ஆனால் கிட்டத்தட்ட 25 சதிவிகிதம் பிற மொழி பேசுபவர்கள் ( குறிப்பாக தெலுங்கு ) பேர் ஆண்டாண்டு காலமாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர்களை தவிர்த்து விட்டு இவர் பேசும் அரசியல் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்காது ...

யாருக்கு ஓட்டு ?



இந்த தேர்தலில் நோட்டா வுக்கு சென்ற தேர்தலை அதிக ஓட்டு விழும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன . ஆனால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் . உதரணத்துக்கு ஒரு தொகுதியில் நோட்டா அதிக வாக்கு வாங்கியிருந்தால் கூட அதற்கடுத்து அதிக வாக்கு வாங்கிய வேட்பாளர் தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதே இப்போதைய நடைமுறை . இதை எதிர்த்து ஒரு பொதுநல வழக்கு சமீபத்தில் போடப்பட்டிருக்கிறது . மொத்தத்தில்  நமது ஒட்டு வீணாகி விடுமோ என்றெல்லாம் யோசிக்காமல் கட்சிகளின் செயல்பாடு , நிறை குறை, கடந்த கால வரலாறு ,  வேட்பாளர்களின் தகுதி , தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தேர்தல் அறிக்கை , சமூக , பொருளாதார , சுகாதார வளர்ச்சிக்கான பார்வை இவற்றின் அடிப்படையில் ஓட்டளிப்பதே சிறந்தது . பிடிக்காத கட்சிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து ஐந்தாண்டுகள் அவஸ்தைப்படுவதை விட பிடித்த கட்சிக்கு ஓட்டுப் போட்டு அது தோற்றாலும் மன நிறைவோடு இருப்பதே மேல . பல்முனைப் போட்டி நிலவும் இந்த தேர்தலில் பணம் , சாதி , இலவசத்துக்காக ஓட்டுப் போடாமல் சிந்தித்து போடப்படும் ஒவ்வொரு ஓட்டும் மிக மிக முக்கியமானது ...

வாழ்க ஜனநாயகம்

6 March 2016

தெருக்கூத்து - தமிழக சட்டசபை தேர்தல் 2016 ...



மிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்து தேர்தல் நடைமுறை விதிகளையும் அமல்படுத்தி விட்டது தேர்தல் ஆணையம் . கடந்த தேர்தல்களை விட இந்த முறை தமிழக அரசியல் களம் பெரிய சூடு பிடிக்காமல் ஒரு குழப்பமாக இருப்பது போலவே படுகிறது . இப்போதிருக்கும் சூழ்நிலையில் நடுநிலை வாக்காளனுக்கு நிறைய சாய்ஸ் இருப்பது போல பட்டாலும் எந்த கட்சிக்கு ஒட்டு போடுவது என்பதில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாத சூழ்நிலையே நிலவுகிறது . கடந்த 50 ஆண்டுகளாகவே தி.மு.க , அ .தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கின்றன . ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த இரண்டு கட்சிகளையும் தவிர்த்து மாற்று வரவேண்டும் என்று பேச்சுக்கள் எழுந்தாலும் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது அவை நீர்த்துப் போய் விடுகின்றன . மாற்று என்று தங்களை கூறிக்கொள்ளும் கட்சிகள் மேல் மக்களுக்கு நம்பிக்கை இல்லாததும் , அப்படி சொல்லிக்கொள்ளும் கட்சிகள் கூட கடைசி நேரத்தில் ஏதோ ஒரு கழகத்துடன் கூட்டு சேர்வதுமே வாடிக்கையாகி வருகிறது . ஆனாலும்  2014  நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி தலைமையில் அமைந்த அணி 18 சதவிகித வாக்குகளை பெற்று பல இடங்களில் திமுக வையே பின்னுக்கு தள்ளியிருந்தாலும் இப்போது தனித்தனியே இருந்து அந்த வெற்றிடத்தை நிரப்பாமல் விட்டது துரதிருஷ்டம். தனிப்பட்ட வாக்கு வங்கிகளை பொறுத்தவரை திமுக , அதிமுக இரண்டுமே கிட்டத்தட்ட சமபலத்துடன் இருப்பதை சமீபத்திய கருத்துக் கணிப்புகளும் ஊர்ஜிதம் செய்கின்றன . இருப்பினும் ஒரு கட்சி ஆட்சி முடியும் போது அடுத்த முறை மக்கள் அடுத்த கட்சிக்கு வாய்ப்பளித்து வருகிறார்கள் . 1996 - 2001 திமுக ஆட்சி , 2001 - 2006 அதிமுக ஆட்சி இரண்டும்  ஓரளவு  சிறப்பாக செயல்பட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன . 2004 இல் அரசு ஊழியர்களை கைது செய்தது அதிமுக ஆட்சிக்கு எதிராக போனாலும் மற்றபடி பொது மக்களிடையே பெரிய அதிருப்தி இல்லை .  இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு கட்சிகளின் வாய்ப்பு எப்படியிருக்கும் என்பதை அலசலாம்...

அ.தி.மு.க 

தொழில் வளர்ச்சியின்மை , நிர்வாக மந்தம் போன்ற குறைகள் இந்த ஆட்சியில் பரவலாக பேசப்பட்டாலும் அம்மா உணவகம் , மருந்தகம் என பல நலத்திட்டங்கள் மக்களிடையே  ஏற்படுத்திய நல்ல பெயரை சமீபத்தில் வந்த வெள்ளம் அடித்துக் கொண்டு போனது என்றே சொல்லலாம் . ஆனால் வெள்ளம் வந்த நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஆளுங்கட்சியின் மேல் பெரிய அதிருப்தி இல்லாதது போலவே படுகிறது .
 " வளர்ச்சிய விடுங்க ரவுடிங்க பிரச்சனை இல்லாம  நிம்மதியா இருக்கோம் " என்று பலர் பேசுவதை காண முடிகிறது . அதே போல மின்வெட்டு பிரச்சனை பெரிய அளவு குறைக்கப்பட்டிருப்பதையும் பலர் நினைவு கூர்கிறார்கள் . ஊழல்  குற்றச்சாட்டுக்கள் ஆங்காங்கே சொல்லப்பட்டாலும் கடந்த ஆட்சியைப் போல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு அது பெரிய எதிரலையாக வீசவில்லை . எதிரணிகள் பிரிந்து கிடப்பது பலமாக இருப்பினும் 2014 நாடாளுமன்ற  தேர்தலை போல நாளை நமதே நாற்பதும் நமதே என்று முழங்கக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை .  தொடர்ந்து ஒரே கட்சிய ஆள விட்டா  சரிப்படாது என்பது போன்ற கருத்துக்கள் நிலவுவதை அவர்களாலும் உணர முடியும் . தேமுதிக எந்த பக்கம் போகிறது என்பதை பொறுத்து கூட்டணிக்கான நிர்பந்தம் இங்கே அதிகரிக்கும் என நம்பலாம் . கிடைக்கிற கேப்பில் எல்லாம் அம்மா ஸ்டிக்கரை ஒட்டிய கட்சிக்கு திரும்பவும் மக்கள் ஓட்டு குத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ...

தி.மு.க 

மக்களின் நியாபக மறதி மேலுள்ள நம்பிக்கையில் " என்னம்மா இப்புடி பன்னுறீங்கலேம்மா " என்பது போன்ற விளம்பரங்களை கட்சி செய்தாலும் அடுத்து என்ன நம்ம தானே என்கிற தன்னம்பிக்கையை கட்சிக்காரர்களிடம் அதிகம் பார்க்க முடிகிறது . தலைவர் ஒரு வழியாக குடும்ப சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதும் , தளபதியின் நமக்கு நாமே ஊர்வலமும் அந்த நம்பிக்கையை மேலும் கூட்டியிருக்கின்றன. 2 ஜி விவகாரத்துக்காக ஈழத் தமிழர்களின் பெயரை சொல்லி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி விட்டு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அதனோடு கூட்டு வைத்திருப்பது திமுக மீது கட்சிக்காரர்களுக்கே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது . அதிலும் ஏற்கனவே கட்சியே உடைந்து பலம் குன்றிப் போயிருக்கும் காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்தது சந்தர்ப்பவாதமாகவே இருந்தாலும் அவர்களுக்கு சறுக்கல் . ஸ்டாலினை முன்னிருத்தினால் பிஜேபி + திமுக + தேமுதிக கூட்டணி ஏற்படலாம் என்று சுப்ரமணியசுவாமி போட்ட குண்டில் காங்கிரஸ் அலறியடித்துக்கொண்டு வந்து கலைஞரை பார்த்ததும் அவர் உடனே கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம் மகனாகவே இருந்தாலும் தன்னைத் தவிர  வேறொருவரையும் அரியணையில் ஏற்றி அழகு பார்க்கும் பெருந்தன்மை அவருக்கு இல்லாததே . ஏற்கனவே சில கருத்துக் கணிப்புகள் முதல்வர் பதவிக்கு ஜெயலலிதாவுக்கு அடுத்து ஸ்டாலினை முன் வைத்ததும் கலைஞரின் உடனடி முடிவுக்கு காரணமாக இருக்கலாம் . மேயராக , துணை முதல்வராக இருந்த அனுபவமும் , குளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வாக சிறப்பாக  செயல்பட்டதோடு நமக்கு நாமே மூலம் மக்களிடையே நேரடித் தொடர்பை அதிகப்படுத்தியன் மூலமும் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியிருப்பதை மறுப்பதற்கில்லை . 2ஜி விவாகரத்தால் பிஜேபி திமுக வுடன் சேர்வதற்கு தயக்கம் இருந்தாலும் இந்த கூட்டணி அமைந்திருந்தால் திமுக வின் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருக்கும் ...

தே.மு.தி.க 

சினிமாவில் ரஜினி , கமலுக்கு அடுத்து இருந்தாலும் வருகிறேன் , வரமாட்டேன் என்றெல்லாம் இழுக்காமல் 2006 இல் கட்சியயை ஆரம்பித்து எந்த கூட்டணியும் இல்லாமல் முதல் தேர்தலிலேயே தில்லாக விருத்தாலச்சத்தில் வெற்றி பெற்றவர் விஜயகாந்த் . ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக வருவார் என ஒட்டு போட்டவர்கள் எதிர்பார்த்த நிலையில் 2011 இல் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததில் இருந்து ஆரம்பித்தது அவரது இறங்குமுகம் . சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சட்டசபையில் நாக்கை துருத்தி அவர் காட்டிய வேகம் அவரை ஹீரோவாக பார்த்தவர்களுக்கே காமெடியனாக ஆக்கியது . அடுத்தடுத்து அவர் பேச்சுக்கள் , பேட்டிகள் எல்லாமே மீம்ஸ் பிரியர்களுக்கு இலவச ஆந்திரா மீல்ஸ் ஆகின . கோபமோ , சோகமோ எங்கள் தலைவருக்கு மறைக்க தெரியாது என்று அவர்கள் ஆதரவாளர்கள் மழுப்பினாலும்  கேட்பார் யாருமில்லை . ஆனால் இப்படி நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பாட்டாலும் இவரது துணையில்லாமல் பெரிய கட்சிகள் ஆட்சியமைக்க முடியாது என்கிற சூழல் உருவாகியிருப்பதையும் மறுப்பதற்கில்லை . 2014 இல் மோடி அலை நாடு முழுவதும் வீசியும் இவரால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாதது மேலும் சரிவை ஏற்படுத்தியிருக்கும் . இன்னும் இவர் ஒரு முடிவுக்கு வராமல் கிங்கா - கிங் மேக்கரா என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருப்பது மீடியாக்களுக்கு பாப்கார்ன் . திமுக , அதிமுக அல்லாத மாற்று அணியுடன் கை கோர்க்க தயக்கம் காட்டுவது அரசியலுக்கு வந்த போது இருந்த தையிரியம் கேப்டனுக்கு இப்போது இல்லாததற்கு சான்று ...

பா.ஜ.க 

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இருந்தது போலல்லாமல் இப்போது தமிழகத்தில் கட்சி வலுப்பெற்றிப்பினும் அது  யானைப்பசிக்கு சோளப்பொறி போலத்தான் . நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து  விட்டு இந்த முறை விஜயகாந்தை எதிர்பார்த்து கூட்டணி வரும் ஆனா வராது என்பது போல இவர்கள் தேவுடு காத்துக் கொண்டிருப்பது பகல் கனவு . பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஊழல் குறைவாக இருப்பதும்   , வளர்ச்சி பெற்றிருப்பதும்  , மத்தியில் இவர்கள் ஆட்சி  இருப்பதால்  அதை பயன்படுத்தி தமிழகத்துக்கு நிறைய நலத்திட்டங்களை கொண்டு வரமுடியும் என்பதும் பலம் . தேமுதிக , பாமக இரண்டையும் கூட்டணிக்கு இழுப்பதோ அல்லது தேமுதிக திமுக பக்கம் போகும்  பட்சத்தில் அதிமுக கூட்டணியில் சேர்வதோ தான்  இவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு . பிஜேபி யுடன்  சேர்வது வெள்ளத்தால் வெறுப்பில் இருக்கும் சென்னை நகர  வாக்களர்களை ஒன்று சேர்ப்பதற்கு அதிமுக வுக்கும் உதவும் . மேலும் இந்த இரண்டு கட்சிகள் ஒன்று சேர்வதில் கொள்கை(!) ரீதியாகவும் எந்த சிக்கலும் இருக்காது ...

பா.ம.க 

ஓவர் கான்பிடென்ஷ்  போல பட்டாலும் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் கேப்டனை விடவும் , கூட்டணியின் பெயரில் மக்களை வைத்து விட்டதால் ஜெயித்து விடுவோம் என்பது போல நினைப்பில் இருக்கும் மக்கள் நலக் கூட்டணி யை விடவும் கார்பரேட் பாணியில் தனது பிரசார வேலையை செய்து கொண்டிருக்கும் அன்புமணி ராமதாஸ் தேவலாம் என்றே தோன்றுகிறது . ஆனால் அது மட்டும் அவரை ஆட்சிக்கட்டில் ஏற்றுவதற்கு பத்தாது . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்த அதிமுக அல்லாத இரண்டு எம்பிக்களில் அன்புமணி யும் ஒருவர் . ஆனால் அதற்கு உண்மையான காரணம் யார்  என்று அவர்களுக்கே தெரியும் . வன்னியர்களின் வாக்கு எண்ணிக்கை இவர்களுக்கு பலமாக இருந்தாலும் அவர்கள் மற்ற கட்சிகளிலும் நிறைய இருப்பதும்  ,  வெறும் சாதிக்கட்சியாக பொதுமக்கள் மத்தியில் பார்க்கப்படுவதும் கட்சிக்கு பலவீனம் . தனியாக நிற்பதால் ஓட்டு கிடைக்கலாமே தவிர சீட்டு கிடைப்பது கஷ்டம் . ஈகோக்களுக்கு இடம் கொடுக்காமல் பிஜேபி - தேமுதிக வுடன் கை கோர்ப்பது  கட்சிக்கு பலம் சேர்ப்பதோடு பெரிய கட்சிகளுக்கு பயத்தையும் கொடுக்கும் ...

மக்கள் நலக் கூட்டணி 

இந்த தேர்தலுக்கு முதல் கூட்டணியை அமைத்தது இவர்கள் தான் . மதிமுக , கம்யூனிஸ்டுகள் , விடுதலைசிறுத்தைகள் கட்சி மூன்றும் இணைத்து அமைத்திருக்கும் கூட்டணிக்கு மக்கள் நலம் செய்வார்களே என்பது சந்தேகமே . இரண்டு திராவிட கட்சிகளுடனும் மாறி மாறி இருந்து விட்டு இப்போது நாங்கள் கொள்கை ரீதியாக சேர்ந்த கூட்டணி என்று சொல்வதெல்லாம் பிம்பிளிக்கோ பிலேப்பி . அதிமுக வுக்கு எதிரான ஓட்டு இப்படி சிதறுகிறதே என்கிற கடுப்பில் இவர்களை அதிமுக 2 என்று திமுக திட்டுவது " இன்னுமா நம்பள நம்புராய்ங்க " என்பது போன்ற தன்னம்பிக்கையை இவர்களுக்கு கொடுத்திருக்கும் . மற்றபடி முதல் முறை எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் எங்களை விட அதிக வாக்குகளை பெற்று விட்டால் கட்சியை கலைத்து விட்டு உங்களுடன் சேர்ந்து விடுகிறேன் என்று ஓப்பனாக கலாய்க்கும் நிலைமையில் தான் இந்த கூட்டணி இருக்கிறது . முன்னரே சொன்னது போல இப்படி ஆளாளுக்கு சிதறிக் கிடப்பது " இவிங்க எடுக்குற முடிவெல்லாம் நமக்கு சாதகமாத்தான் இருக்கு " என்று அதிமுக தலைமையை சொல்ல வைக்கிறது ...

NOTA 

எந்த கட்சிக்கும் தங்களை ஆட்சி செய்யும் தகுதியில்லை என்று நினைக்கும் வாக்களார்களுக்கு தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் சாதனம் NOTA ( None of the above ) . இந்த முறை இது சின்னத்துடன் வந்திருப்பது மகிழ்ச்சி . இந்த தேர்தலில் இது அதிக வாக்குகளை பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை ...











10 October 2015

தெருக்கூத்து - கூத்தாடிகள் ரெண்டுபட்டால் ?! ...


டந்த சில மாதங்களாகவே பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருக்கும் செய்தி அக்டோபர் 18 ல் நடக்கவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தல் . கடந்த 15 வருடங்களாகவே தேர்தலே இல்லாமல் நடிகர் சங்கத் தலைவர் பதிவியை தக்க வைத்துக்கொண்டிருந்த சரத்குமாருக்கும் , 29 வருடங்களாக செயலாளர் பதவியில் இருக்கும் ராதாரவிக்கும் " பாண்டவர் அணி " என்று அழைக்கப்படும் விஷால் , கார்த்தி , நாசர் , பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் இந்த ஐவரால்
( பாஞ்சாலி யாருன்னெல்லாம் குசும்பா கேட்கக்கூடாது ) சில வருடங்களாக குடைச்சல் கொடுக்கப்பட்டு இன்று சரத்துக்கு எதிராக நாசரும் , ராதாரவிக்கு எதிராக விஷாலும் தேர்தலில் நிற்கும் அளவிற்கு மிகப்பெரிய மோதலாக வெடித்திருக்கிறது ...

நடிகர் சங்கத்தை இடித்து அங்கே எஸ்பிஐ சினிமாஸ் வருவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே பூச்சி முருகன் என்பவர் கேஸ் போட்டு கட்டிடம் கட்டுவதற்கு ஸ்டே வாங்கியிருந்தார் . இந்த முறைகேடு சம்பந்தமாக விஷால் , எஸ்.வி.சேகர் போன்றவர்கள் கேட்ட கேள்விக்கு பொறுப்பான பதில்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்தவர்கள் தனி டீம் அமைத்து இன்று ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்க முனைத்திருக்கிரார்கள் . முதலில் இவர்களை பெரிதுபடுத்தத சரத்குமார் & கோ இப்பொழுது கமல்ஹாசனின் ஆதரவோடு சத்யராஜ் உட்பட பல சீனியர்களின் ஆதரவும் கிடைத்திருப்பதால் நிறையவே டென்சன் ஆகியிருக்கிறார்கள் . கட்டிடம் கட்டும் விஷயத்தில் முறைகேடு நடந்ததா ? இல்லையா என்று யாருக்கும் தெரியாது . ஆனாலும் விஷால் & கோ வினர் நிர்வாகிகள் தன்னிச்சையாக நடந்து கொண்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் . மறு தரப்பினரோ பொதுக்குழுவில் பேசி முடிவெடுத்த பிறகு தான் தீர்மானம் போடப்பட்டது என்கிறார்கள் . உண்மையில் நடிகர் சங்க இடத்தின் மேல் அவ்வளவு அக்கறை இருப்பவர்கள் கோடி கோடி யாக தாங்கள் வாங்கும் சம்பளத்தில் அள்ளிக் கொடுக்க வேண்டாம் , கிள்ளிக் கொடுத்திருந்தாலே இந்த பிரச்சனை எப்பொழுதோ தீர்ந்திருக்குமே ?! அது அனைத்து நடிகர்களுக்குமே வெளிச்சம் ! ...

பொதுவாகவே எந்த ஒரு சங்கத்தும் குறிப்பிட்ட  ஆண்டு இடைவெளியில் ஜனநாயக முறையில் தேர்தல்  நடத்தப்பட்டு நிர்பவாகிகள் தேர்ந்தேடுக்கப்படுவதே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும் . அப்படி இல்லாமல் ஒரே ஆட்களே ( மாமன் , மச்சானாக இல்லாமல் போனாலும் ) நீண்ட வருடகளுக்கு பொறுப்பில் இருப்பது நிச்சயம் இது போன்ற பிளவுக்கு ஒரு நாள் இல்லை நாள் வழிவகுக்கும் . அது தான் இப்போது நடந்திருக்கிறது . ஆர்யா , விஷ்ணு , விக்ராந்த் , சாந்தனு என்று இளவட்டங்கள் விஷாலுக்கு பின்னால் வரிந்து கட்ட , சிம்பு , தனுஷ் போன்ற சீனியர் இளவட்டங்கள் சரத்துக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் .  சிம்பு சரத் அணியினர் சார்பில் போட்டியிட , கார்த்தி விஷால் சார்பில் போட்டியிடுகிறார் . ஊர் ஊராக சென்று நாடக நடிகர்களை சந்தித்து அவர்கள் ஆதரவை விஷால் அணியினர் கோரினால் , சின்னத்திரையினர் ஆதரவை ராதிகா சரத்குமார் வைத்திருக்கிறார் .  இவை எல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பது போல விஷாலை அவன் , இவன் என்று வசை பாடுகிறார் வாலு நடிகர் . நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று சொல்லிக்கொண்டே பிரஸ் மீட்டில் விஷாலை கழுவி கழுவி ஊற்றுகிறார் சிம்பு . சரத்குமார் ஒரு படி மேலே சென்று விஷால் மேல் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கே போட்டுவிட்டார் . விஷாலோ எதையும் சந்திக்க தயார் என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார் . லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் நினைவு தின விழாவைக் கூட இவர்கள் அரசியல் விட்டுவைக்கவில்லை . இப்படி நிஜ அரசியல் தேர்தலை கூட மிஞ்சி விடும் போலிருக்கிறது இவர்கள் சண்டை ...

முதலில் கூடுதல் பலத்திலிருந்த சரத் & கோ விஷால் சிலம்பலுக்கு  செவி சாய்க்காமல் தானிருந்தனர் . பிறகு உலகநாயகனின் நேரடி ஆதரவு அவர்களை நிலைகுலைய செய்தது . சூப்பர்ஸ்டார் மண்டபத்தில் வைத்து விஷால் அணியினர் கூட்டம் நடத்தியிருப்பது அவரின் மறைமுக ஆதரவாக மற்ற அணியினர் பார்க்கிறார்கள் . இப்படி ஒரு பக்கம் ஆதரவு கூடி வருவதை கண்ட சரத் அணியினர் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அதை மறுத்துவிட்டார் விஷால் . இன்னும் தல ஆதரவு யாருக்கு என்று தெளிவாக தெரியவில்லை . ஆனால் இளையதளபதி புரட்சிதளபதி க்கு எதிராகத் தான் இருப்பார் போலத் தெரிகிறது . அரசியல் ஆசையில் இருக்கும் அவருக்கு கலைஞர் ஆட்சியில் மேடையிலேயே கேள்வி கேட்டு கெத்து காட்டிய தல போல சீனியர்களுடன் நிஜ ஸ்டண்ட்  அடித்து வரும் விஷாலின் வளர்ச்சி வெறுப்பேற்றியிருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள் ....

இந்த இரண்டு அணியினரின் சண்டை ஒரு புறம் இருக்க தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை மாற்றி தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் வைக்க வேண்டும் மற்றும் ஒரு தமிழர் தான் சங்கத்தின் உயர் பதவிக்கு வரவேண்டுமென்றும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர் மற்றொரு அணியினர் . இது போன்ற இன , மொழி பேதங்களை கலைஞர்களுக்குள் புகுத்துவது சரியில்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் தமிழர் யாரும் எந்த பதவியிலும் நிற்க முடியாது என்று அவர்கள் சொல்கிற செய்தியையும் மறுக்க முடியாது . புலி படம் ஃப்ளாப்பா , ஹிட்டா என்று இணையதளங்களில் நடக்கும் சண்டையை விஞ்சி நிற்கும் இந்த தேர்தல் பரபரப்புக்கு அக்டோபர் 18 க்கு பிறகு விடை தெரியும் . தேர்தல் முடிந்து நல்ல மாற்றம் ஏற்பட்டால் நல்லது தான் . எது எப்படியோ ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் . இங்கே கூத்தாடிகள் ரெண்டுபட்டிருப்பது ஊருக்கு கொண்டாட்டமோ இல்லையோ மீடியாக்களுக்கு நல்ல கொண்டாட்டம் . இதைப்பற்றி தினமொரு பேட்டி , செய்தி  என்று பரபரப்பாக்க இயங்கிக்கொண்டிருக்கின்றன மீடியாக்கள் ...



28 November 2014

மதுரை பசங்க - MADURA GUYS ...


சொந்த ஊர் மதுரைக்கு சென்று இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும் . இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லூரி நண்பன் பத்ரி வாட்ஸ் ஆப்பில் மதுரை கல்லூரி பி.காம் க்ளாஸ் மேட்ஸ் அனைவருக்காகவும் ஒரு க்ரூப்பை ஏற்படுத்தியிருந்தான் . அதில் வெட்டியாக அளவளாவிக் கொண்டிருந்த போது திடீரென ஒருநாள் அனைவரும் ஏன் மதுரையில்  மீட் செய்யக்  கூடாது என்று அவனே திரியை கிள்ளிப்போட அதுவே பற்றியெரிந்து நவம்பர் மாதம் மதுரையில் கெட் டுகெதர் என்று முடிவானது . நண்பர்கள் சிலருடன் ஏற்கனவே தொடர்பிலிருந்தாலும் பி.காம் முடித்து பதினைந்து வருடங்கள் கழித்து எங்கள் செட்டில் உள்ள அனைத்து நண்பர்களும் ஒரே இடத்தில் அதுவும் மதுரையில் மீட் செய்யப் போகிறோம் என்று நினைக்கும்போதே மனசு ஏனோ மலரும் நினைவுகளுக்குள் போனது  ...

மதுரை கல்லூரியை என்னால் மறக்கவே முடியாது.  மூன்று வருடங்கள் அங்கே படித்தேன் என்பதை விட நண்பர்களுடன் சேர்ந்து நிறைய லூட்டி அடித்தேன் என்பதே நிஜம். வேறு வேறு பள்ளிகளில்  படித்ததாலோ என்னவோ எனக்கு பள்ளி நாட்களில் பள்ளி நண்பர்களை விட ஏரியா நண்பர்களே அதிகம் . ஏரியா நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதற ஆரம்பிக்கும் போது  தான் நான் கல்லூரியில் முதல் வருடம் காலடி எடுத்து வைத்தேன் . மதுரை கல்லூரி ரெகுலரில் கண்டிப்பாக சீட் கிடைக்கும் என்று தெரிந்தும் அப்பாவுக்கு தெரியாமல் அப்ளிக்கேஷனை கிழித்துப் போட்டதற்கு காரணம் ஈவினிங் காலேஜ் கோ - எட் என்பது மட்டுமே . அதோடு அண்ணன்கள் இருவரும் ரெகுலரில் படித்திருந்தாலும்  ஈவினிங் காலேஜில் படித்துக் கொண்டிருந்த என் அத்தை பெண் ( ரெண்டு வருடம் சீனியருங்க ) காலேஜ் பற்றி கொடுத்திருந்த பில்ட் அப் மனதை பட்டாம்பூச்சி போல பறக்க வைத்திருந்தது ...

ஆண்கள் பள்ளியிலேயே படித்ததாலோ என்னவோ சில சுமாரன பெண்கள் கூட சூப்பராகவே தெரிந்தார்கள் . ஆனால் அதற்கும் இருந்த போட்டி இருக்கிறதே அடடடடா !. முதல் பெஞ்சில்  உட்காருபவனெல்லாம் மூளைக்காரன் என்று நினைப்பார்கள் என்கிற நினைப்பில் அமர்ந்திருந்த என் நம்பிக்கை வீண் போகவில்லை . யார் செட் ஆவார்கள் என்கிற டவுட்டில் இருந்த என்னிடமே சிலர் டவுட் கேட்டார்கள் . முதல் பெஞ்சை விட கடைசி  பெஞ்சே கவனிக்க வைக்கும் என எனக்கு போகப் போக புரிந்தது . கடைசி பெஞ்சில் இருந்து மொக்கை கேள்வி கேட்டால் கூட கிளாசே திரும்பிப் பார்க்கும் . முதலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆர்வமாக பதில் சொன்ன வாத்தியார்கள் எங்களின்  உள்நோக்கம் புரிந்த பிறகு நாங்கள் இருக்குமிடம் வந்தே பதில் சொன்னார்கள்...

பிறகு அதுவும் குறைந்து எங்களின் கேள்விகளுக்கு வகுப்பறைக்கு வெளியே விடை தேடிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள் . அந்த டீலிங் ரொம்பவே பிடித்திருந்ததால் வெறும் அட்டன்டென்சில் சைன் செய்து விட்டு கேலரியில் எங்கள் வாழ்க்கைப் பாடத்தை படித்துக் கொண்டிருந்தோம் . ஆனாலும் கட்டடிக்கும் எங்கள் க்ரூப்பில் முக்கால் வாசி பேர் ஆங்கிலம் மற்றும் புள்ளியியல் வகுப்புகளுக்கு மட்டும் கடலோர கவிதைகள் சத்யராஜ் போல முகத்தை வைத்துக் கொண்டு ஆஜராகி விடுவோம் . அது  ஏனென்று சொல்லாமலேயே புரியும் என்று நினைக்கிறேன் . என்னைப் போலல்லாமல் கோ எட்டில் படித்திருந்த மாணவ மாணவிகளிடமுமே கூட ஒருவித இறுக்கம் இருந்தது . முதல் வருட முடிவில் அந்த இறுக்கம் தளர்ந்ததை நன்றாகவே உணர முடிந்தது ...

முதல் வருடம் நண்பன் சேஷனுக்கு அவன் ஆளை சைட் அடிக்க மாட்டேன் என்று செய்து கொடுத்திருந்த  சத்தியத்தை சாயங்கால காலேஜ் என்பதால் சில சமயங்களில் மீறியிருந்தாலும் படித்த மூன்று வருடங்களில் முடிந்தவரை காப்பாற்றினேன் என்றே சொல்லலாம். அவனுக்கு பெண்கள் மத்தியில் க்ரேஸ் இருந்தாலும் ( மச்சி இதுக்கெல்லாம் அழக் கூடாது சரியா ! ) ஏனோ ஒரே பெண்ணையே கடைசி வரை காதலித்தான் . எங்கள் செட்டை  தவிர்த்து கல்லூரிக்கு செல்ல வேண்டுமென்கிற ஆர்வத்தை அதிகம் கொடுத்தது கல்சுரல்ஸ் . அதற்கான தாகத்தை என்னுள் விதைத்து நண்பன் மைக் மது . பி.எஸ்.சி யில் படித்தாலும் எங்கள் பிகாம் செட்டுடனேயே அதிகம் சுற்றியவன் . ரஜினி , கமல் , ரகுவரன் என்று நிறைய குரல்களில் அசால்டாக மிமிக்ரி செய்து எல்லா போட்டிகளிலும் அப்லாசோடு சேர்த்து கப்சையும் அள்ளுபவன் . கெஸ்ட் ப்ளேயராக எங்கள் டீமில் கிரிக்கெட் ஆட வந்து எங்களையே கெஸ்ட்களாக மாற்றியவன் ,..

இரண்டாம் வருடத்திலிருந்து மதுரை மட்டுமல்லாமல் திருச்சி , பாண்டி , கோவை என எல்லா யுனிவர்சிட்டி லெவல் போட்டிகளிலும் பதக்கங்களோடு  சேர்த்து பணமும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால் நான் , சேஷன் , மது , தோசை ( மற்றொரு பி.எஸ்.சி நண்பன் ) அனைவரும் க்ளாசை மறந்து கல்சுரல் அறையிலேயே கதியென கிடப்போம் . இப்படி ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்த அந்த சின்ன  கேப்பில் நண்பன் ரம்மி ரெகுலர் காலேஜ்  பெண்ணை காதலித்து கல்யாணம் முடிக்கும் அளவிற்கு பெரிய ஆட்டமே  ஆடி முடித்திருந்தான் . வெளியில் முரட்டுத் தோற்றத்தில் இருந்தாலும் நட்புக்காக எதையும் செய்யக் கூடியவன் ரமேஷ் எ ரம்மி ...

எங்கள் கல்சுரல் செட் ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பாக  ஃபாத்திமா காலேஜ் பெண்களின் நட்பு கிடைத்த பிறகு வேறொரு உலகத்தில் பிரயாணிக்கத் தொடங்கியிருந்தோம் . நான் , மது , தோசை மூவருக்கும் ஆல் இந்தியா கல்ச்சுரல் மீட்டிற்காக டிசம்பரில் சென்ற ஹைதராபாத் பயணம் இன்று வரை மறக்க முடியாத அனுபவமாக இருக்குமென்றே நம்புகிறேன் . ஏனெனில் அப்போது தான்  ஃபாத்திமா காலேஜ் பெண்களின் நட்பு கிடைத்தது . தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த பயணம் பெண்களைப் பற்றிய சரியான புரிதலைக் கொடுத்தது . காமம் மட்டும் சார்ந்த குறுகிய வட்டத்திலிருந்து விலகி பெரிய விசாலமான பார்வையை கொடுத்தது . இன்று அதில் ஒரு பெண்ணை தவிர வேறு யாருடனும் எனக்கு தொடர்பில்லா  விட்டாலும்  உலகில் எங்கோ ஒரு மூலையில் இதே போன்றதொறு நினைவில் அவர்கள் வாழ்ந்து  கொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன் ...

கோபுவை காரணம் காட்டி நான் , ரம்மி , சேஷன் மூவரும் காலேஜுக்கு எதிராக நடத்திய  ஸ்ட்ரைக் ( இந்த விஷயத்தில் ஜூனியர்கள் கொடுத்த ஒத்துழைப்பு அபாரம்  ) , கல்சுரலுக்கு போனோமா , காசு பாத்தாமோ என்று இல்லாமல் பாண்டியில் லோக்கல் ஆட்களுடன் நாங்கள் கூட்டிய பஞ்சாயத்து , அந்த பஞ்சாயத்துக்காக பயந்து ஊருக்கு வராமல் அடுத்த நாள் " இவர்கள் சந்தித்தால் " போட்டியில் நானும் சேஷனும் ஜெயித்தது , வேலியில்  போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாக லவ் லெட்டெர் எழுதிக் கொடுக்க வந்தவன் லவ்வரையே உஷார் செய்தது ( மச்சி குடும்பத்துக்குள்ள குழப்பம் வேணான்னு பேர் போடல ) , சிவகாசியில் எங்கள் கல்லூரி எல்லா கப்புகளையும் வென்றதோடு எனக்கு மேன் ஆ ஃப் தி சீரியஸ் கிடைத்தது , திருச்சி யில் கவிதைப் போட்டிக்கான முதல் பரிசை கணையாழி ஆசிரியர் ஞானக்கூத்தன் கைகளால் வாங்கியது , பத்ரி பிறந்தநாள் பார்ட்டிக்கு சரக்கடித்து விட்டு க்ளாசுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்தது என்று எல்லாமே மறக்க முடியாத நினைவுகள் . இன்று வேலை , குடும்பம் என்று எல்லோரும் பிரிந்திருந்தாலும் கல்லூரியை பற்றிய நினைவுகள் எங்களை பாலமாக இன்னும் இணைத்துக் கொண்டு தானிருக்கிறது ...

இந்த பதிவை எங்கள் கெட் டுகதெருக்கு ப்ளான் போட்டுக் கொடுத்த பத்ரி , அதற்கு செயல் வடிவம் கொடுத்த துபாய் கார்த்தி , மாப்பிளை அழைப்புக்கு கூப்புடும் பொண்ணு வீட்டுக்காரன் போல முதல் நாளே மதுரையில் டேரா போட்டு நண்பர்களுக்கு தண்ணியாக  அல்லாமல் தண்ணிக்காக மட்டும் பணத்தை செலவு செய்த கட்டிங் ( என்ன பெயர் பொருத்தம் ) ,  150 ரூபாய் ப ஃபே வில்  ஒரே ஒரு இட்லி மட்டும் தின்ற சவூதி ஷேக் சபரி , தேவையில்லாத வாக்கு வாதங்களில் ஈடுபடாமல் காரியத்தில் மட்டும் கண்ணாயிருந்து ஆ ஃப் பாட்டிலை சைலெண்டாக காலி செய்த சேஷன் , சரக்கடிக்கா விட்டாலும் பில்லை பார்த்தாலே  போதையேறும் அளவிற்கு சைட் டிஸ்ஷை ஆர்டர் செய்யும் கோபால் , நட்பிற்காக நிறைய  வருடம் கழித்து தீர்த்தா ஸ்நானம் செய்து கொண்ட யோகி , நீங்க அடுத்து கோவாவுக்கு போவீங்களோ , குவைத்துக்கு போவீங்களோ  , யாரு ஸ்பான்சருன்னு முடிவு பண்ணிக்குங்க என்று கார்த்திக் , கட்டிங் இருவருக்கும் வயிற்றை  கழங்க வைத்த ரம்மி மற்றும் கெட் டுகதெருக்கு வந்திருந்த , வராத அனைத்து மதுரை கல்லூரி நண்பர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் ...


15 October 2014

தெருக்கூத்து - 5 ...


2002 கோத்ரா கலவரத்தை காரணம் காட்டி மோடிக்கு விசாவை மறுத்து வந்த அமெரிக்கா இப்பொழுது இந்தியாவின் பிரதமரான பிறகு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது .  பிரதமர் சென்ற இடமெல்லாம் அவருக்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பை பார்த்து அமெரிக்காவே ஆடி விட்டது என்றே சொல்லலாம் . வெறும் சாராயத்துக்கும் , பிரியாணிக்கும் இங்கே கூடும் அரசியல் கூட்டம் போலல்லாமல் ஒரு உணர்ச்சிப் பூர்வமான சந்தோஷத்தை அமரிக்க வாழ் இந்தியர்களிடம் காண முடிந்தது . அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் போட்ட ஒப்பந்தங்கள் மூலம் சீனாவுக்கு  சின்ன செக் வைத்திருக்கிறார் மோடி . காஷ்மீர் விவாகரத்தில் தலையிட முடியாது என்று ஐ.நா சொன்னதன் மூலம் மீண்டுமொருமுறை மூக்குடை பட்டிருக்கிறது பாகிஸ்தான் . இங்கே துப்பாகியால் சுட்டு விட்டு அங்கே போய் ஒப்பாரி வைப்பார்களாம் . இது தான் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதோ ?! ...

பெரிய கட்சிகளெல்லாம் தனித்தனியாக நிற்பதன் மூலம் மகாராஷ்டிரா , ஹரியானா சட்டசபை தேர்தல்கள் நன்றாகவே சூடு பிடித்திருக்கின்றன . இடைத்தேர்தலில் கிடைத்த தோல்விகள் மூலம் மோடி யின் மேஜிக் அவ்வளவு தான் என்று மற்ற கட்சிகள் சொல்லி வரும் வேளையில்  இடைத்தேர்தலை போல அல்லாமல் இந்த முறை அதிக கூட்டங்களில் மோடி ஜி பேசி வருவது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி . அதை நிரூபிப்பது போலவே தேர்தலுக்குப் பின் நடந்த சர்வேக்கள் எல்லாமே பா.ஜ.க தனிப் பெரும் கட்சியாக ஜெயித்து ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்திருக்கின்றன . இது நடக்கும் பட்சத்தில் கூடுதலாக இரண்டு மாநிலங்களை பிடிப்பதுடன்  பா.ஜ.க  வுக்கு ராஜ்யசபாவில் அதிக எம்.பி க்கள் கிடைப்பதற்கும் ஏதுவாக அமையும் . சும்மா இருந்த சிங்கத்தை சீப்பால சீவி விட்டுட்டாங்களோ ?! ...

அடுத்தடுத்து அம்மா ப்ராண்ட் பொருட்களை மலிவு விலையில் அறிவித்துக் கொண்டிருந்தவர் மேலே யாரு கண்ணு பட்டதோ ? . 18 வருடமாக இழுத்துக் கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ உட்பட நால்வரையும்  உள்ளே வைத்து விட்டார்கள் . கர்நாடகா கோர்ட்  பெயிலை  மறுத்து விட 17 ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள் கழக கண்மணிகள் . தண்டனை அங்கேயும் உறுதி செய்யப்பட்டு  விட்டால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் முதல்வரால் தேர்தலில் நிற்க முடியாது . அப்படி நடக்கும் பட்சத்தில் கட்சிக்குள் இப்போதிருக்கும்  கட்டுப்பாடு   குலைந்து கட்சியே சிதறும் அபாயம் உள்ளது . 2 ஜி வழக்கின் தீர்ப்பு வரும் போது  இதே போன்ற நிலைமை தி.மு.க வுக்கு ஏற்படாவிட்டாலும் ஏற்கனவே சரிவிலிருக்கும் கட்சி மேலும் சிதையும் . இந்த இரண்டு பிரதான கட்சிகளின் சரிவால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இப்போதைக்கு யாருமில்லை .
ஆனால் சென்ற முறை தே.மு.தி.க , பா.ம.க , ம.தி.மு.க போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்த பா.ஜ.க சரியாக காய்களை நகர்த்தினால் அடுத்த சட்டசபை தேர்தலில் நடுநிலையாளர்களையும் , அ.தி.மு.க - பா.ஜ.க இரண்டுக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருப்பவர்களையும் தங்கள் வசம் எளிதாக இழுக்கலாம் . பா.ஜ.க பாச்சா இங்கே பலிக்குமா ?! ...

நிச்சயம் பா.ஜ.க வுக்கு ஒரு வலுவான தலை தமிழகத்தில் தேவை . அதற்காக அவர்கள் சூப்பர் ஸ்டாரை இழுப்பதாகவும் , அவரும் இதற்கு ஒரளவிற்கு சம்மதித்துவிட்டார் என்பது போலவும் செய்திகள் கசிகின்றன . யார் யாரோ அரசியலுக்கு வரும் போது தனக்கென்று ஒரு பெரிய கூட்டத்தை வைத்திருக்கும் ரஜினி வருவதில் எந்த தவறுமில்லை . ஆனா தலைவரு வராரோ இல்லையோ தன்னோட ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்னாடியும் இந்த அரசியல் படத்த தவறாம ஓட விட்டுருறாரு . புலி வருமா ?!. மெட்ராஸ் , ஜீவா மாதிரி தரமான படங்கள் ஒரே நாளில் ரிலீசானதில் சந்தோசம் . ஆனால் எந்த லாஜிக்கும் இல்லாத ஆவரேஜ் படம் அரண்மனை தான் வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது . பேயே லாஜிக் இல்ல அப்புறம் எதுக்கு பேய்ப்படத்துக்கு லாஜிக்கு ன்றீங்களா ?! ....

திரிஷ்யம் படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கிறார்கள்  . மோகன்லால் ரோலில் நடிக்கும் உலக நாயகன் படத்திற்கு நிச்சயம் ஸ்டார் வால்யூவை கொடுத்தாலும் அந்த ஜார்ஜ் குட்டி என்கிற யதார்த்த நாயகனை சாகடித்து விடுவார் . கமல் பிரபு , ராஜ்கிரண் அல்லது வேறு யாரையாவது நடிக்க வைத்துவிட்டு படத் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டிருக்கலாம் என்பது எனது அபிப்ராயம் . ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிறைய பதக்கங்களை பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் ஒரு பெரிய ஓ போடுவோம் ...

மீண்டும் .கூடுவோம் ...




29 September 2014

ஒரு கைதும் சில கேள்விகளும் ...


ற்போது தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் சம்பவம் சொத்துக்குவிப்பு வழக்கில் நூறு கோடி அபராதத்துடன் நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பது . எனக்குத் தெரிந்த சில தி.மு.க அனுதாபிகள் கூட தண்டனைக்காக வருத்தப்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வகையில் கிட்டத்தட்ட 18 வருடங்கள் வழக்கை தீர விசாரித்து கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நியாயமான முறையில் தீர்ப்பு வந்திருக்கிறது என்று புத்திக்கு தெரிந்தாலும் , 91 - 96 இல் முதல் முறை முதல்வராக இருந்த போது செய்த தவறுகளுக்கு இப்பொழுது மூன்றாவது முறை முதல்வராகி மக்கள் நலத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு கட்சியினர் செய்யும் கட்டப் பஞ்சாயத்துக்களை அறவே ஒழித்து நல்ல முறையில் ஆட்சி செய்து வரும் ஒரு நபருக்கு இப்படி தண்டனை கொடுத்து விட்டார்களே என்று படபடக்கும் மனசுக்கு தெரியவில்லை ...

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வின் அசுர வளர்ச்சிக்கு பிறகு அந்த கட்சியை எதிர்த்து அனைத்து கட்சிகளும்  ஒன்று சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த கைது அ.தி.மு.க வுக்கு பேரிடி . பா.ஜ.க வுக்கு திமுக வின் தூது , நீண்ட வருடங்கள் திமுக வை தீண்டாமலிருந்த வை.கோ கலைஞர் மேல் காட்டும் திடீர் பாசம் , பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டு விஷேசத்திற்கு கலைஞருக்கு விடப்பட்ட தனிப்பட்ட அழைப்பு , அ.தி.மு.க வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டுமென்று விஜயகாந்த் விடுத்திருக்கும் அறைகூவல் இவையெல்லாம் நடந்து வருகின்ற நேரத்தில் இந்த கைது அ.தி.மு.க வுக்கு பெரிய பின்னடைவு . தனிப்பட்ட வாக்கு வங்கியை மட்டும் வைத்துப் பார்க்கும் போது  தி.மு.க வுக்கும் , அ.தி.மு.க வுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை . ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு கட்சியை வீழ்த்துவதற்காக அடுத்த கட்சிக்கு போடப்படும் ஓட்டுக்களே வெற்றி , தோல்விக்கான வித்தியாசத்தை தீர்மானிக்கின்றன . அந்த வகையில் பார்த்தால் 2016 சட்டசபைத் தேர்தலுக்கு அ.தி.மு.க மக்களுடன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டியிருக்கும் ...

எதிர்பார்த்தபடியே முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஓ .பி
( பன்னீர்செல்வம் ) கடந்த முறை போல இந்த முறை பவ்யமாக மட்டுமிருந்து ஓ .பி அடிக்க முடியாது . ஏனெனில் இந்த முறை அவர் கிட்டத்தட்ட 2 வருடங்கள்  ஆள வேண்டியதோடு மக்களின் நன் மதிப்பையும் பெற்று கட்சியையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் .. ஹை கோர்ட்டுக்கு அப்பீல் செய்த போதிலும் தண்டனை குறைக்கப்படுவதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளன என்கிறார்கள் சட்ட நிபுணர்கள் . ஆனால் சீனியர் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இவருக்கு ஆதரவாக வாதாடப் போவது தண்டனையை குறைக்கும என்றும் , பெயில் கிடைக்கும் என்றும்  எதிர்பார்க்கிறார்கள் அ.தி.மு.க வினர் . ஒரு வேளை ஜெ பெயிலில் தமிழ்நாட்டுக்கு வருவது கட்சிக்கு போனசாக இருந்தாலும் முதல்வர் பதவியில் அமர்வதோ , மீண்டும் போட்டியிடுவதோ அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முடியாது ...

இப்படி ஒரு இக்கட்டான நிலை வருமென்று அம்மாவே எதிர்பார்த்திருக்க மாட்டார் . இதற்கு முந்தைய 11 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டது போல இதில் முடியாமல் போனதற்கு காரணம் வழக்கின் தன்மை . மற்ற வழக்குகளில் குற்றம் சாட்டியவர்கள் இவரது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் . ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ தனது ஆவணங்களை சரியாக காட்டி தன மேல் குற்றம் இல்லையென்று நிரூபிக்க வேண்டும் . இந்த விஷயத்தில் கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம் . மேலும் வழக்கை 18 வருடங்கள் இழுத்தடித்ததும் , நீதபதி டிகுன்ஹா நேர்மையானவர் என்பதும் கூடுதல் நெருக்கடியை கொடுத்திருக்கும் . எல்லாவற்றிற்கும் அறிக்கை விடும் கலைஞர் இந்த கைதை பற்றி ஒன்றுமே சொல்லாமல் மௌனம்  காப்பது அவரது அனுபவத்தைக் காட்டுகிறது . சுப்ரமணியசாமியால் போடப்பட்ட வழக்கிற்கு கலைஞரின் கொடும்பாவியை எரித்து என்ன ஆகப் போகிறது ?...

எனக்கு தெரிந்த ஒருவரின் மாமா ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே அரசியலில் பார்ட் டைமாக இருந்தார் . பிறகு வேலையை விட்டு விட்டு முழு நேர அரசியலில் இறங்கி இப்போது கவுன்சலராகி விட்டார். அவருக்கு அப்போதே 10 லட்சம் கடன் இருந்தது . ஆனால் இப்போதோ வீடு , கார் என்று கிட்டத்தட்ட 4 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக சொல்கிறார்கள்.
தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்கிற நம்பிக்கையை இந்த தீர்ப்பு கொடுத்தாலும் , கவுன்சிலருக்கே இவ்வளவு சொத்து  என்றால் எம்.எல்.ஏ , எம்.பிககெல்லாம் ? . இது போல கணக்கில்லாமல் லஞ்சம் வாங்கிய எல்லா அரசியல்வாதிகளும் , அரசு அதிகாரிகளும் இதே போல தண்டிக்கப்படுவார்களா ?. அல்லது இதே போல விடாப்படியாக யாராவது கேசை நடத்துவார்களா ? . பிறகு ஏன் அம்மாவை மட்டும் தண்டிக்க வேண்டும்? போன்ற கேள்விகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே தானிருக்கின்றன ...


11 September 2014

தெருக்கூத்து - 4 ...


மோடி 100 என்ற தலைப்பில் எக்கச்சக்க விவாதங்கள் , கட்டுரைகள் என கடந்த ஒரு வாரமாகவே எல்லா ஊடகங்களும்  அலசி ஆராய்ந்து காயப் போட்டு விட்டதால் நாம் பெரிதாக சொல்வதற்கேதுமில்லை . ஒரு ஷோவை பார்த்து விட்டு விமர்சனம் செய்வதற்கு இது சினிமா அல்ல . ஒரு புதிய அரசாங்கத்தை சரியாக கணித்து சொல்வதற்கு 100 நாட்கள் நிச்சயம் பத்தாது . ஆனாலும் அது எந்த டைரக்சனில் செல்கிறது என்பதை வைத்து அதன் எதிர்கால செயல்பாட்டை கணிக்கலாம் . அந்த வகையில் சார்க் , ப்ரிக் நாடுகளுடனான உறவு , அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் , ஜப்பானிலிருந்து 2 லட்சம் கோடி முதலீடு . பாசிட்டிவான  சென்செக்ஸ் குறியீடு போன்றவை இந்த அரசாங்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி பயணப்படுகிறது என்பதை உணர முடிகிறது . கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்டைலில் அரசாங்க நிறுவனங்களிலும் சில ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க சொல்லி அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதும் ஆரோக்கியமான விஷயம் ...

உள்ளாட்சி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள அ.தி.மு.க வுக்கு எதிராக பா.ஜ.க மட்டும் நிற்கும் சூழல் உருவானது . ஆனால் நிறைய இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் விலகிக்கொள்ள அ.தி.மு.க அன்னபோஸ்டில் செலெக்ட் ஆகி விட்டார்கள் . ஆளுங்கட்சியின் மிரட்டல் தான் இதற்கு காரணம் என்று பா.ஜ.க குற்றம் சாட்ட , இரண்டு கட்சிகளின் கூட்டு சதி தான் இது என்று கம்யூனிஸ்ட் சொல்கிறது . எது எப்படியோ பா.ஜ.க நல்ல வாய்ப்பை இழந்து விட்டது . இதே போல 2016 இல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . இல்லையேல் கட்சியின் கனவு அம்பேல் ! ...

ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்கிற பெயரில் கொண்டாடப்படுவதற்கு பயங்கர எதிர்ப்பு ஒரு பக்கம் இருக்க பெரிய  சம்பளம் இல்லாத காரணத்தால் தன்னார்வத்துடன் பணிபுரியும் ஆசிரியர்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக  படித்த செய்தி இது போன்ற கொண்டாட்டங்களையே கேள்விக்குறியாக்கி விடுகிறது . நவாப் செரீப் பிரதமருக்கு  மாம்பழங்களை பரிசாக அனுப்பியிருக்கிறார் . " ஏண்டா காஷ்மீர்ல எங்க ஆளுகள சுட்டுட்டு இங்க மாம்பழத்த கொடுத்தா அத திங்க நாங்க என்ன மாங்கா மடையனுங்களா , அவ் " என்று விஜயகாந்த் ஸ்டைலில் மோடி சொல்லியிருக்கலாமோ ?! ...

நேற்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்னாப் தலைமையில் ஒரு விவாதம் . அதில் மீடியா வினரை கழுத்தை நெரித்து விடுவேன் , குழிக்குள் புதைத்து விடுவேன் என்றெல்லாம் மிரட்டிய தெலுங்கானா முதல்வரை ஹிட்லர் என்று வர்ணித்தர்கள் . அது சரி , ஆனால் யார் விவாதத்திற்கு வந்தாலும் பேச விடாமல் தானே மிரட்டல் தொனியில் பேசிக் கொண்டேயிருக்கும் அர்னாப் கோஸ்வாமி என்ன முசோலினியா ?! ...

ஒரு படம் ஹிட்டானால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவதும் தோற்றால் தூக்கிப் போட்டு மிதிப்பதும் பலரது வாடிக்கை . அந்த வகையில் சிறந்த அரசியல் பத்திரிக்கையான துக்ளக் ஒரு கட்டுரையில் அஞ்சான் படத்தை அறுவை சிகிச்சை செய்திருக்கிறது . அந்த கட்டுரையை எழுதியவர் ஆர்வக் கோளாறில் சதுரங்க வேட்டையை இயக்கியவர் லிங்குசாமி எனவும் ( லிங்குசாமி அந்த படத்தின் தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் )  , தமிழ் தாதா வை மையப்படுத்தி வந்த படம் மும்பை எக்ஸ்ப்ரெஸ்  (அந்த படம் சென்னை எக்ஸ்ப்ரெஸ் ) எனவும் குறிப்பிட்டிருந்தார். படத்தில் தான் லாஜிக் இல்லை அதை விமர்சிக்கும் கடிதத்திலுமா ?!. இப்படி சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத பத்திரிக்கைகள் கூட படத்தை கழுவி கழுவி ஊற்ற குமுதம் மட்டும் நன்று என்று விமர்சனம் போட்டிருப்பது அடடா ஆச்சர்யக்குறி ! ...

இரண்டாவது பாதி திரைக்கதைக்காகவும் , வசனத்திற்காகவும் சலீம் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது . பெரிய ஹீரோ இல்லாமலேயே  விறுவிறு திரைக்கதை பார்ப்பவர்களை கட்டிப் போட்டாலும் விஷால் , ஆர்யா யாராவது படத்தில் நடித்திருந்தால் பெரிய கல்லா கட்டியிருக்கும்  என்பது பரவலான கருத்து  . தொடர்ந்து இரண்டு வெற்றிகளை கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்கள் . நாளை ரிலீசாகும் சிகரம் தொடு , வானவராயன் வல்லவராயன் , பர்மா ஆகிய மூன்று படங்களில் போஸ்டர்கள் பர்மா வை பார்க்க தூண்டுகிறது . கே டிவி யில் சுப்ரமணியபுரம் போட்டிருந்தார்கள் . என்ன படம் ! . ஒரு சாதாரண நடிகன் சசிகுமாருக்காக சிறந்த  இயக்குனர் சசிகுமாரை நாம் இழந்து விட்டோமோ ! ...

நொறுக்குத்தீனி :

கணவன் : நம்ம பையன நினைச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு ..

மனைவி : ஏன் உங்கள விட ரொம்ப புத்திசாலியா இருக்கானேன்னா ! ...


மீண்டும் கூடுவோம் ...




26 August 2014

தெருக்கூத்து - 3 ...


பா.ஜ.க வின் மாநில தலைவராக டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் . சீனியாரிட்டியை மட்டும் பார்க்காமல் சின்சியாரிட்டியை பார்த்து கட்சி இந்த பொறுப்பை கொடுத்திருக்கிறது . தொலைக்காட்சி விவாதங்கள் , இணையதளங்கள் மூலம் படித்த மக்களுக்கு நன்றாக பரிச்சியமாகியிருக்கும்  இவர் தன் உழைப்பால் கட்சி கிராமப்புறங்களிலும் நன்றாக வேரூன்ற பாடுபட வேண்டும் . ஏனெனில் படித்தவர்களில் பாதி பேர் ஓட்டுப் போட வருவதில்லை . வருபவர்களும் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதில்லை . அ.தி.மு.க , தி.மு.க இரண்டிற்கும் வலுவான மாற்றாக வரவேண்டுமென்றால் பா.ஜ.க பட்டி தொட்டிகளிலெல்லாம் வளர வேண்டியது அவசியம் . அந்தப் பணியை திறம்பட செய்ய அவருக்கு வாழ்த்துக்கள் .  அதே போல தேசிய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் ஹெச்.ராஜா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ...

சுதந்திர  தின உரையின் போது  பிரதமர் மோடியின் பேச்சு வழக்கமான
சம்பிரதாய பேச்சாக   இல்லாமல் உணர்வுபூர்வமாகவும் , ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது . ஆனால் அந்த  உரையில் சொன்னதையெல்லாம் நிறைவேற்ற நிறைய கால அவகாசம் தேவை .அது வரை மக்கள் பொறுத்திருப்பார்களா ?.
ஒரு பக்கம் சமாதானம் பேசிக்கொண்டே மறுபக்கம் பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் தனது வாலை ஆட்டிக்கொண்டிருக்கிறது . இந்த அரசாவது அதை ஓட்ட நறுக்குவார்களா ? ...

சரக்கு விலையை ஏற்றி குடி மகன்களுக்கு தமிழக அரசு ஷாக் கொடுத்தால், படிப்படியாக பத்து வருடங்களில் மதுபானக் கடைகளை மூடப்போவதாக அறிவித்து கேரள அரசு குடி மகன்களின் தலையில் இடியையே இறக்கி விட்டது . என்ன இது சேர நாட்டுக்கு வந்த சோதனை ? . ஆடிப்பெருக்கு அன்று கூட காவிரியில் தண்ணி இல்லாமல் பம்பு செட்டு வைத்து ஆடிப்பெருக்கை கொண்டாடும் அவல நிலையில் இருந்த மக்களுக்கு மேட்டூர் , கபினி அணைகளிலிருந்து தண்ணீரை திறந்து விட்டு வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள் . இதற்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் முதல்வருக்கு பாராட்டு விழாவும் நடத்தி விட்டார்கள் . கடமையை செய்ததற்கு ஒரு கடமைக்காக பாராட்டு விழாவா ? இல்லை மனமார்ந்த பாராட்டு விழாவா ?!...

தம்பித்துரைக்கு துணை சபாநாயகர் பதவி கொடுத்தது எதிர்பார்த்ததே . ஆனால் மைத்ரேயன் ராஜ்யசபா தலைமை பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டது சற்றும் எதிர்பார்க்காத அம்மா ட்விஸ்ட் . இந்த மாற்றங்கள் எதனாலே உருவாகுதோ ?. 23 வருடங்களாக எதிரிகளாக இருக்கும் லாலுவும் - நிதீஷும் பா.ஜ.க வின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமென்கிற ஒரே காரணத்துக்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் . அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பார்கள் . அதற்காக இப்படியா ?! ...

இங்கிலாந்தில் படு  கேவலமாக  உதை  வாங்கிய பிறகு கொஞ்சமா புத்தி வந்து பி.சி.சி.ஐ கோச் ப்லெச்சர் மற்றும் அந்நிய உதவியாளர்களை ஓரங்கட்டி ரவி சாஸ்திரியை கொண்டு  வந்திருக்கிறது . பி.சி.சி.ஐ ரவி தான் தல என்று சொல்கிறது . ரவியோ தோனி தான் கேப்டன் என்கிறார் . கேப்டனோ பெருசு ப்லெச்சர் தான்   எங்க எல்லோருக்கும் பாஸ் என்கிறார் . கேட்கும் போதே தலை சுத்துதே .  இவிங்க என்னத்த ஒன்டே ல ஆடி என்னத்த ஜெயிச்சு ! அட போங்கப்பா ...

லெட்டர் பேட் அமைப்புகள் பிரபலாமவதற்கு பிரபலங்களின் படங்களை எதிர்ப்பதை வாட்டிக்கையாக கொண்டிருக்கின்றன . துப்பாக்கி , விஸ்வரூபம் வரிசையில் லேட்டஸ்டாக அவர்களால் கையில் எடுக்கப்பட்டிருக்கும் படம் கத்தி . ராஜபக்சேவின் மைத்துனர் முக்கிய பொறுப்பிலிருக்கும் லைக்கா நிறுவனம் படத்தை தயாரிப்பதே பிரச்சனைக்கு காரணம் . இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆரோக்கியமானதல்ல . கத்தி தலைக்கு மேலேயே கத்தி . சமாளிக்குமா படக்குழு ?! ...

அஞ்சான் , க.தி.வ.இ இரண்டு படங்களில் அதீத எதிர்பார்ப்பின் காரணமாகவோ என்னவோ அஞ்சான் அமுங்கி விட , கதை விவாதத்தையே கதையாக்கி அதை சுவாரசியமான திரைக்கதையாக தந்ததால் பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார் பார்த்திபன் . வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் தான் சினிமா என்பது மாறி ரொம்ப நாட்களாகிவிட்டது . பொழுதை போக்க கையில் மொபைல் இருந்தால் போதாதா ? . அதை தவிர டி .வி , இணையதளம் என்று எவ்வளவோ இருக்கிறது. இதன் மூலம் தமிழுலக இயக்குனர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ஏதாவது புதுசா யோசிங்க , இல்லேன்னா பழசாயிடுவீங்க ...

மீண்டும் கூடுவோம் ...





9 August 2014

தெருக்கூத்து - 2 ...


.பி யில் வெறும் பத்து தொகுதிகளை  பெற்றிருந்த பா.ஜ.க வை கடந்த தேர்தலில் 70 க்கும் மேல் ஜெயிக்க வைத்து மோடியை பிரதமராக பதவியேற்க வைத்ததில் பெரும்பங்காற்றியவர் அமித் ஷா . ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கட்சியின் கொள்கை அடிப்படையில் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராகி விட்டதால் கட்சித் தலைவர் பதவியை அமத் ஷாவிற்கு கொடுத்திருப்பது சரியான முடிவு . உ.பி யைப் போலவே மேற்கு வங்காளம் , ஓடிஸா , தமிழ்நாடு , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கால் பதித்திருக்கும் பா.ஜ.க வை மேலும் வளர்க்க அவரின் தலைமை உதவும் ...

காந்தி குடும்பத்துக்கு நெருக்கமாயிருந்த நட்வர் சிங் தனது சுய சரிதையில் சோனியா பிரதமராகாததற்கு ராகுல் தான் காரணம் என்று சொல்லி குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் . ஏற்கனவே வரலாறு காணாத தோல்வியால் துவண்டிருக்கும் காங்கிரசுக்கு இது வெந்த புண்ணில் வேல் . தேர்தலில் சகோதரருக்காக காம்பேரிங் சாரி , பிரச்சாரம் செய்த பிரியங்கா முழு நேர அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் . அவருக்கு பார்ட் டைம் மட்டும் தான் புடிக்குமோ ? ...

ராணுவத்தில் அந்நிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை 49 சதவிகிதமாக உயர்த்துவதற்கான பில்லை நாடாளுமன்றத்தில் பாஸ் செய்திருக்கிறார்கள் . அதே போல இன்சூரன்ஸ் பில்லையும்  கூடிய விரைவில் பாஸ் செய்வார்கள் என்று நம்பலாம் . பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடும் மைனர்கள் ( என்ன பொருத்தம் ) வயதை காரணம் காட்டி எஸ்கேப் ஆகி விடுவதால் வயது வரம்பை 18 இலிருந்து 16 ஆக குறைக்க வேண்டுமென்கிற மேனகா காந்தியின் ஆலோசனையை வரவேற்கலாம் . ஆனால் அரசியல் ரீதியாகவோ , சட்ட ரீதியாகவோ மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும்  இதை அணுகுவார்களா ? ....

அம்மாவின் லேட்டஸ்ட் அறிவிப்பு அம்மா அமுதம் அங்காடிகள் . எங்களிடம் சரக்குகள் மட்டுமல்ல  பலசரக்குகளும் கிடைக்கும் என்று அரசு இனி விளம்பரம் செய்யுமோ  ?. ஸ்டாலினை 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் கல்யாணசுந்தரத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கூட தூக்கி விட்டார்கள் . அண்ணனின் ஆதரவாளர்களுக்குத் தான் இந்த கதி என்று பார்த்தால் தம்பியின் கைத்தடிகளுக்குமா ? . தலைவரின் பணியில் சொல்வதென்றால் கட்சி ஜனநாயக ரீதியில் தன் கடமையை செய்யும் ...

ஆஸ்திரேலியாவில் ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே கால் மாட்டிக் கொண்ட ஒருவரை எல்லோருமாக சேர்ந்து ரயிலை தள்ளி காப்பாற்றியதை பார்த்த போது மெய் சிலிர்த்தது . ஆனால்  நம்மூர்  அடையார் பாலத்தில் பைக் ஒட்டிக் கொண்டு வந்தவர் கீழே விழுந்து மூர்ச்சையாகி விட கூடவே பைக்கில் வந்த  பெண் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல்  பைக் பார்ட்டியின் பர்சையும் , செல்லையும் லவட்டிக் கொண்டு போன செய்தியை படித்த போது கண் வேர்த்தது . Who is that lady ? ...

பத்து வருடங்கள் கழித்து 94 குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய கும்பகோணம் தீ விபத்துக்கு காரணமாவர்களுக்கு  ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வந்திருக்கிறது . காலம் கடந்த நீதி  மறுக்கப்பட்ட நீதி என்பார்கள் . நம் நாட்டில் ஒரு வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்குள் அதில் சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இருப்பார்களா என்பதே சந்தேகம் . 2014 இல் முகலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து பலர் பலியான வழக்கிலாவது உடனடி தீர்ப்பு வருவதற்கு ஆவண செய்ய வேண்டும்  . ஆனால் 3 வருடங்களுக்கு முன்பே நீதிமன்ற அறிவுரையின்  படி சி.எம்.டி.ஏ வில் உள்ள சில அதிகாரிகளின் மேல் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இது போன்ற விபத்துக்களை ஒரு வேளை  நடக்காமல் தடுத்திருக்கலாம் . இந்நேரத்துக்கு இந்த விபத்தைப் பற்றி நிறைய பேர் மறந்திருப்பார்கள் . பிறகு வேறொரு சம்பவம் , வேறொரு வழக்கு என்று வாழ்க்கை ஓடிக்கொண்டேயிருக்கும் . ஒரு கொலைக்கே தூக்கு தண்டனை கொடுக்கலாமெனும் போது சிலரின் மெத்தனத்தாலும் , ஊழலாலும் பல உயிர்களை பலியாக்கும்  இது போன்ற சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை தான் கொடுக்கப்படுகிறது . என்ன  கொடுமை சார் இது ? ...

சென்ற பதிவில் தோனி இங்கிலாந்து சீரியசை ஜெயித்தால் பேண்டை கழட்டி சுற்றுவாரோ என்று கேட்டது இங்கிலீஸ் காரெங்க காதுல விழுந்துருச்சோ என்னவோ ?. அடுத்து நடந்த சவுத்தாம்ப்டன் டெஸ்டுல வச்சு தோனியோட பேன்ட மட்டுமல்ல டீமோட பேண்டையே மொத்தமா உருவி சூ ... சரி விடுங்க.
சம்சாரம் அது மின்சாரம் படத்துல " வாழாவெட்டியா இருந்த பொண்ணு  புருஷன் வீட்டுக்கு வாழ போனத நினைச்சு சந்தோஷப்படுறதா இல்ல இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு கோவிச்சுக்குட்டு அப்பா வீட்டுக்கு போனத நினைச்சு வருத்தப்படுறதா " என்று விசு ஒரு வசனம் பேசுவார் . அதே மாதிரி " காம்ன்வெல்த்  கேம்ல இந்தியா 64 பதக்கங்களை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்ததை நினைத்து சந்தோசப்படுவதா ? இல்லை இந்தியா இங்கிலாந்திடம் அடிமையாக இருந்ததை நினைவுபடுத்தும் காமன்வெல்த் போட்டியை நினைத்து வருத்தப்படுவதா ? ...

சும்மா சேனலை மாற்றிக் கொண்டிருந்த போது சொல்லி வைத்தார்ப் போல  எல்லா சீரியல்களிலும் ஹீரோயின்களுக்கு கரு கலைந்து விடுகிறது. பாவம் இந்த பெண்களின் சோகத்தையெல்லாம் பார்க்கும் போது ரெம்ப பீலிங்கா இருக்கு . அதே சமயம்  ஜெயா டி.வி யில்  புதுப்பேட்டை போட்டிருந்தார்கள் . எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படங்களில் அதுவும் ஒன்று . தனுஷின் நடிப்பு , செல்வாவின் மேக்கிங் , யுவனின் இசை இதோடு சேர்ந்து பாலகுமாரனின் சார்ப்பான வசனங்கள் எல்லாமே படத்திற்கு ஹைலைட்ஸ் . சோனியா எபிசோட் , நிறைவை தராத க்ளைமாக்ஸ் என்று சில குறைகள் இருந்தாலும் ஒரு ரவுடியின் வாழ்க்கையை நியாயமாக நம்பும் படி பதிய வைத்ததில் புதுப்பேட்டை எப்பவுமே தங்க வேண்டிய இடம் . தனுஷ் - செல்வா - யுவன் கூட்டணி மீண்டும் வருமா ? ...


சரபம் , ஜிகர்தண்டா இரண்டு படங்களை பற்றியும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருந்தும்  ஜிகர்தண்டா வை மட்டுமே பார்க்க முடிந்தது . முதல் பாதி சான்சே இல்ல . இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறினாலும் மொத்தத்தில் டேஸ்டாகவே இருக்கிறது .  சந்தோஷ் குமார் என்பவர் ஒரு சினிமா செய்தியுடன் ஒரு புகைப்படத்தை  எனக்கு மெயில் செய்திருந்தார் . புகைப்படத்தை பார்த்தவுடன் மிகவும்  ஆச்சர்யமாக இருந்தது . பாரதிராஜாவின் அச்சு அசல் ஜெராக்ஸாக  இருக்கும் அவருடைய தம்பி ஜெயராஜ் கத்துக்குட்டி எனும் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் . நடிகனாக வேண்டுமென்கிற ஆசையில் சென்னைக்கு வந்த அவருடைய அண்ணனின் தாகத்தை தம்பி  தீர்த்து வைக்க வாழ்த்துவோம் ...

மீண்டும் கூடுவோம் ...





19 July 2014

சக்ர வியூகம் ...


ன் மனைவியின் சொந்த ஊரான மாயவரத்திற்கு சென்றிருந்தேன். பரபரப்பான  சென்னை வாழ்க்கையிலிருந்து இரண்டு நாட்கள் ப்ரேக் கிடைத்தது  என்பதை விட  அந்த இரண்டு நாட்களையும்  அமைதியான ஊரில் என் மகளுடன் செலவழிக்க முடிந்தததில்  இரட்டிப்பு மகிழ்ச்சி.  அந்த மகிழ்ச்சியான தருணங்கள் என்றுமே மறக்க முடியாதவை. சென்னைக்கு வந்ததிலிருந்து நீண்ட நாள் விடுப்பு முடிந்து முதல் நாள் பள்ளிக்கு செல்லும் மாணவனின் மன நிலையிலிருந்து இன்னும் என்னால் விடுபட முடியவில்லை ...

நாம் தனிப்பட்ட முறையில் மற்றவர்களுக்கு நல்லவனாகவோ , கெட்டவனாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் . ஏன் சிலரை அவரவர் கணவன் , மனைவியே கூட வெறுக்கலாம் . ஆனால் எல்லோரும் தத்தம் குழந்தைகள் மீது கொண்டிருக்கும் பாசம் மட்டும் பொய்க்காது . அதிலும் குறிப்பாக குழந்தைகள் சிறுவர் ,  சிறுமியாக மாறும் வயதிற்குட்பட்ட காலம் எந்த ஒரு பெற்றோருக்கும்  பொற்காலம் . அதே நேரம் தாய் - மகன் உறவுக்கு இருக்கும் முக்கியத்துவம் தந்தை - மகள் உறவுக்கு கொடுக்கப்படவில்லையோ என்று எனக்கொரு ஆதங்கம் எப்பொழுதுமே உண்டு ...

ஒரு கட்டத்தில் குடும்பம் , உறவுகளை தாண்டி வெளி உலகிற்கு குழந்தைகள்  பழக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்  . அப்படிப்பட்ட சூழலுக்கு பிள்ளையார் சுழி போடுபவை பள்ளிகள் . இந்த காலத்தில் எல்.கே.ஜி யில் சேர்ப்பதற்கே நாம் லாங் க்யூவில் நிற்க வேண்டியது  அவசியம் . அதிலும் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் தான் பிள்ளையை சேர்ப்பேன் என்று அடம் பிடிக்கும் பெற்றோர்களும் இங்கே அதிகம் . மனைவி இரண்டாவது பிரசவத்திற்கு ஊருக்கு சென்றுவிட்டதால் அங்கேயே என் மகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டியதாக போய் விட்டது . ஒரே நாளில் எளிதாக வேலை முடிந்துவிட்ட சந்தோசம் இருந்தாலும் மகளை பிரிந்து ஆறு மாதங்களுக்கும் மேல் இருக்கப் போவதை நினைத்தாலே ஏக்கமும் ,சோகமும் மனதை அப்பிக் கொள்கிறது ...

அவளை கவனிக்காமல் டி .வி பார்த்துக் கொண்டிருந்தால் ஒங்கி முதுகில் அடி வைப்பதும் , சேர்ந்து விளையாடாமல் தூங்கி விட்டால் முகத்தில் தண்ணீரை விட்டு எழுப்புவதும் , வயிற்றில் ஏறி நின்று குதித்து விளையாடுவதுமென எல்லாமே கண் முன் நிற்கின்றன . சென்னையில்  இருக்கும் போது கூட நான் நிறைய நேரங்களில் புத்தகம் , டி.வி , இணையம் , மொபைல் என என் சொந்த வேலைகளில் மூழ்கி  விடுவதுண்டு . அந்த சுயநலத்திற்கு கிடைத்த சாட்டையடியே இந்த தற்காலிக பிரிவு என்று நினைக்கிறேன் . ஊரில் இருந்த  இரண்டு நாட்களும் பரபரப்பில்லாத சூழலில் என்னை முழுவதுமாக அதுல்யா மட்டுமே ஆக்ரமித்திருந்தாள் ...

தனிமை எனக்கு புதிதில்லை . சொல்லப் போனால் திருமண வாழ்க்கை நமது சுதந்திரத்திற்கு விடப்படும் சவால் என்று பேசியவன் நான். இன்றோ பொய்க் கோபம் காட்டவும் , பொய் அழுகையை வாங்கவும் ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் . வெறும் கோபக்காரராகவே அறியப்பட்ட எனது அப்பா கூட என்னை முதல் நாள் பள்ளியில் சேர்த்து விட்டு  இதே போல ஃபீல் பண்ணியிருப்பாரோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது . உடன் பிறந்த நால்வரும் சகோதரிகள் என்பதாலோ என்னவோ எனது அப்பாவிற்கு பெண்கள் என்றாலே அலர்ஜி . சகோதரிகளுடன் பிறக்காததாலோ என்னவோ எனக்கு பெண்கள் மேல் அலர்ஜியுமில்லை , அதீத அன்பும் இருந்ததில்லை .
வயது ஏற ஏற பெண்கள் பற்றிய புரிதல் வர ஆரம்பித்தது . புரிதலுக்கு பின் வரும் அன்பில் என்றுமே அடக்குகின்ற தன்மை இருப்பதில்லை . அப்படிப்பட்ட அன்பே என்றும்  நிலைக்கும் ...

பள்ளி முழுவதும் சிறிய . பெரிய வயதில் நிறைய குழந்தைகள் . சில மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே ஏதோ தண்டனைக்காக உட்கார வைக்கப்படிருக்கிறார்கள் . நான் பத்தாவது படிக்கும் வரை வகுப்பறைக்கு வெளியே உட்கார்ந்த நாட்களே அதிகம் . பாடத்தில் சுட்டி என்றாலும் ஏதாவது சேட்டை செய்து வாத்தியாரால் வெளியில் அனுப்பப்படுவது எனக்கு வாடிக்கை . மரங்களையும் ,  அதிலுள்ள பறவைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கும் போது வகுப்பறைக்குள் ஆசிரியரின் பாடத்தை கவனித்துக் கொண்டிருக்கும் அனைவரும் தண்டனைக்கைதிகள் போலவே எனக்கு காட்சியளிப்பார்கள் . இன்றும் நிச்சயம் தண்டனை அந்த மாணவனுக்கு இல்லை என்று புரிகிறது ...

அலுவலகத்தில் கட்டிய பணத்திற்கு முக்கால் சதவிகிதத்திற்கு மட்டுமே  ரசீது கொடுத்தார்கள் . மீதியை  டொனேஷன் என்றார்கள் . வகுப்பறைக்குள் சென்றவுடன் யாரோ ஒரு குட்டிப் பெண்ணுக்கு அருகில் என் மகள் உட்கார்ந்து கொண்டாள் . என்னைத் தேடுகிறாளோ பார்ப்போம் என்ற நப்பாசையில் அரைமணி நேரம் நான் வெளியில் காத்திருந்தது தான் மிச்சம் . அவள்   தன்  உலகிற்குள்  மூழ்கத் தொடங்கியிருந்தாள் . கொஞ்ச நேரம் கழித்து அவள் என்னை தேட ஆரம்பித்தது தெரிந்ததும் இன்னும் ஒழிந்து கொண்டேன் . கண்களில் கண்ணீர் கொஞ்சமாக எட்டிப்  பார்க்க ஆரம்பித்தவுடன் எனக்கு தாங்காமல் விளையாட்டை முடித்துக் கொண்டேன் . முதல் நாள் என்பதால் அவளை என்னுடன் அனுப்பி  விட்டார்கள் . அடுத்த நாளிலிருந்து பாட்டி கொண்டு வந்து விடுவார்கள் என்று சொல்லி விட்டு அதுல்யாவை தூக்கிக் கொண்டேன் ...

இன்னும் இரண்டொரு நாட்களில் பள்ளிக்கூடம் , பாட்டி வீடு எல்லாமே அவளுக்கு பழகி விடும் . நடந்த சம்பவங்களும் ஞாபகத்தில் இருக்கப் போவதில்லை . ஒரு வகையில் ஞாபக மறதி எவ்வளவு சவுகரியம். நிறைய பேருக்கு எதையும் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்வதே மன நிம்மதி போவதற்கு முக்கிய காரணம் . பிடித்ததோ , இல்லையோ கடமைக்காக  கௌரவர்களின் பக்கம் நின்றார்  பீஷ்மர் . நேற்று என் அப்பா எனக்கு செய்த கடமையை நான் என் மகளுக்கு இன்று செய்திருக்கிறேன் . அவளும் நாளை இதே போல செய்யலாம் . அங்கே சுவற்றின் மேல் சிலந்தி கொஞ்சம் கொஞ்சமாக தனது வலையை பின்னிக்கொண்டு அதனுள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தது . அதைப் பார்த்த போது சொந்த  கடமை என்றாலும் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த சக்ர வியூகத்திற்குள் என் மகளையும் கொண்டு வந்து விட்டு விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி எனக்குள் எட்டிப் பார்த்தது . அவளோ  வழக்கம் போல தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தவள் என் தோள்களின் மேல் தூங்க ஆரம்பித்திருந்தாள் ...





20 April 2014

மாற்றம் நம் கையில் - 2014 ELECTION ...


மிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் யாருக்கு ஒட்டு என்கிற குழப்பம் குறிப்பாக முதன்முறை ஒட்டு போடப்போகிற இளைஞர்களுக்கு மட்டுமின்றி பரவலாக நிறைய பேருக்கு  இருக்கும் என்றே நினைக்கிறேன் . ஊடகங்களில் வெளிவரும் கருத்துக் கணிப்புகளும் தமிழக வாக்காளர்களிடையே உள்ள குழப்பத்தை ஊர்ஜிதம் செய்வது போலவே இருக்கின்றன ...

நகரம் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட அடுத்த பிரதமராக யார்  வர வேண்டும் என்கிற கேள்விக்கு நரேந்திர மோடி என்கிற பதிலையே பரவலாக காண முடிகிறது .  அதே சமயம் யாருக்கு ஒட்டு போடுவீர்கள் என்கிற கேள்விக்கு அ .தி.மு.க வே முன்னணி வகிக்கிறது . பொதுவாக தமிழக மக்கள்  மாநில கட்சிகளுக்கே வாக்களிக்க முன்னுரிமை தருவார்கள் என்பது வரலாறாக இருந்தாலும் கிட்டத்தட்ட எல்லா கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் பதவிக்கு மோடியை யே மக்கள் முன்னிறுத்துவது அவர்களின் எண்ண  ஓட்டத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது . அதே சமயம் அந்த தெளிவு ஒட்டு போடும் விஷயத்தில் சிலருக்கு இல்லை என்பதும் புலனாகிறது ...

ஒரு நாள் தெரிந்த நண்பருடன் பேசும் போது காங்கிரஸ் , தி.மு.க இரண்டையும் கடுமையாக சாடினார் . மத்தியில் மோடி தான் பிரதமராக  வேண்டும் என்று உறுதியாக சொன்னார் . ஆனால் அ.தி.மு.க வுக்கே எனது ஒட்டு என்றும்  குழப்பினார் . பா.ஜ .க வுக்கு ஒட்டு போட்டு அது வீணாகி தி.மு.க வந்து விடுமோ என்கிற பயமே  அ.தி.மு.க  பக்கம் சாய காரணம் என்று விளக்கமும் தந்தார் . நான் இதே போல அ.தி.மு.க வுக்கான ஒட்டு வீணாகி அதன் மூலம் தி.மு.க வந்து விட்டால் அப்போது என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்ட பிறகு அவரிடம் கொஞ்சம் தெளிவு பிறந்தது . இந்த உரையாடல் ஒரு சோறு பதம் . நிச்சயம் அவர் அ.தி.மு.க வின் அனுதாபியாக இருந்து அதற்கு தான் எனது ஒட்டு என்று சொல்லியிருந்தால் குழப்பமே இல்லை . ஆனால் மோடி பிரதமராக வருவதற்கு அ.தி.மு.க வுக்கு ஒட்டு என்பது நான் ஏற்கனவே முகநூலில் சொன்னது போல தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்றது ...

பா.ஜ.க போட்டியிடாத தொகுதிகளில் அ.தி.மு.க வுக்கு வாக்களியுங்கள் என்று சோ தனது துக்ளக் தலையங்கத்தில் எழுதியதும் கொஞ்சம் குழப்பத்தில் இருப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் உக்தி . அதே போல பா.ஜ.க - அ.தி.மு.க இரண்டிற்கும் ரகசிய உடன்பாடு இருப்பது போல ஒரு வதந்தி தி.மு.க , காங்கிரஸ் போன்றவற்றால் பரப்பப்பட்டு வருவதும் , தேர்தலுக்கு பின் நிச்சயம் அ.தி.மு.க - பா.ஜ.க சேர்ந்து விடும் என்பது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் . ஆனால் இது போன்ற ஹேஷ்யங்களின் அடிப்படையில் நிச்சயம் ஒட்டு  போட முடியாது . ஏற்கனவே 13 மாதங்களில் அ.தி.மு.க வால் வாஜ்பாய்  அரசு கவிழ்ந்ததையும் யாரும்  மறந்திருக்கவும்  முடியாது ...

இப்போது மற்றவர்களின் தூண்டுதலினாலோ என்னவோ முதலில் காவிரி பிரச்சனையை வைத்து முதல்வர் பா.ஜ.க வை சாட பிறகு மோடி அ.தி.மு.க வும் , தி.மு.க வும் தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு வழி செய்யாமல் மாறி மாறி பழி வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்று சாடினார் . ஜெ பா.ஜ .க வை திடீரென திட்டுவதற்கு சிறுபான்மையினர் ஒட்டு வங்கியோ , நிர்பந்தமோ மட்டும் காரணம் அல்ல . முதலில் நாற்பதும் நமதே என்கிற நினைப்பில் பா.ஜ க அணியை சாதாரணமாக எடுத்துக் கொண்டவருக்கு  நிறைய தொகுதிகளில் தி.மு.க வை விட பா.ஜ .க வே தனக்கு சவாலாக இருக்கும் என்கிற தகவல்கள்  வர ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட மாற்றமே இது.
என்ன நடந்தாலும் இந்த கட்சிக்கு தான் ஒட்டு போடுவேன் என்று சொல்லும் சொல்லும் தீவிர அனுதாபிகள் கூடுதலோ குறைவோ எல்லா  கட்சிகளுக்கும் உண்டு . ஆனால் அவர்கள் மட்டும் தேர்தல் முடிவுகளை தீர்மானித்து விட முடியாது .  சூழ்நிலைக்கேற்ப  தங்கள் முடிவுகளை எடுக்கும் நடுநிலையாளர்களும் அரசியல்  மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக இருக்கிறார்கள்...

ஒரு பக்கம் மோடி பிரதமராக வர அ.தி.மு.க வுக்கு ஒட்டு போடுங்கள் என்று அவர்கள் ரகசிய பிரச்சாரம் செய்வதாக செய்திகள் கசிய , இன்னொரு பக்கம் 15 வருடங்களாக மாறி மாறி  மத்தியில் நடைபெற்ற ஆட்சியில் அங்கம் வகித்து விட்டு 10 வருடங்களாக நடந்த அவலங்களுக்கும் தனக்கும்   சம்பந்தம் இல்லாதது போல பால் விலை  ஏறிப் போச்சு , பவர் கட் ஆகிப் போச்சு என்று பிரச்சாரங்களிலும் , விளம்பரங்களிலும் அ.தி.மு.க  வை மட்டும் குறை கூறி கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் தி.மு.க வினர் மக்களின் ஞாபக மறதியின் மேல் நம்பிக்கை வைத்து ஒட்டு கேட்க , மற்றொரு பக்கமோ கை கொடுக்க யாருமின்றி  திரும்ப திரும்ப மோடி மதவாதி என்று சொல்லிக்கொண்டே முஸ்லீம் மதத் தலைவர் புஹாரியிடம் ஆதரவை பெற்றுக் கொண்டு மக்களை முன்னேற்றுவதற்கு வகை செய்யாமல் போலி மதவாதத்தை மட்டுமே நம்பி காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும் இந்த தருணத்தில் மத்தியில் நிலையான , வலுவான அரசாங்கம் அமைவதற்கு மோடியின் தலைமையிலான பா.ஜ.க வை அரியணையில் ஏற்றுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் ...

இது இப்பொழுதிருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவேயொழிய நிரந்தரமான முடிவல்ல . ஒரு வேளை நாம் எதிர்பார்த்தது போல தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்படாத பட்சத்தில் அடுத்த தேர்தலில் அதனை ஜனநாயக ரீதியில் மாற்றுவதற்கான அதிகாரம் நம் கையில் இருக்கிறது . ஏனெனில் எப்பொழுதுமே மாற்றம் நம் கையில் ...

21 March 2014

பா.ஜ.க கூட்டணி -BJP- வெற்றிக்கான முதல்படி ...

 

2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் ? ! ... என்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு  நான் எழுதிய பதிவில் தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் தே.மு.தி.க , ம.தி.மு.க மற்றும் பா.ம.க ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பதற்கான சூழலையும் , அவசியத்தையும் உணர்த்தியிருந்தேன் . ஒரு வழியாக  ஏகப்பட்ட இழுபறிக்குப் பின் பாரம்பரிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேசிய கட்சியின்

தலைமையில் அப்படியொரு கூட்டணி தமிழகத்தில் 50 வருடங்களுக்கு பிறகு அமைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதோடு  மட்டுமல்லாமல் நல்ல மாற்றத்திற்கு வடிகாலாகவும்  இருக்கும் என்றும் நம்புகிறேன் ... 

 

இப்படியொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணிக்கு வித்திட்டவர் எழுத்தாளர் தமிழருவி மணியன் என்பது குறிப்பிடத்தக்கது . எந்தவொரு குறைந்த பட்ச செயல்திட்டமும் இல்லாமல் வெறும் பதவி ஆசைக்காக ஐந்தாறு கட்சிகள் சேர்த்து அமைத்திருக்கும் கூட்டணி தானே என்று சிலர் சாடினாலும் அரசியல் ரீதியாக இந்த கூட்டணியை அவ்வளவு எளிதில் ஒதுக்கி விட முடியாது . இதுவரை அமைந்த அல்லது அமையப்போகிற எந்த கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும் . அதில் அதிகம் ஆராய்ந்தால் எந்தவொரு கூட்டணியும் அமைந்திருக்காது அல்லது அமையாது என்பதே நிதர்சனம்  ... 

 

அ.தி.மு.க விடம்  2 சீட்களுக்காக  கையேந்தி நின்ற கம்யூனிஸ்டுகளுக்கும் , கடைசி வரை அவர்களை என்னத்த கண்ணையா போல குழம்ப வைத்து கழட்டி விட்ட அ.தி.மு.க விற்கும் , பா.ஜ.க விற்கு கல்லெறிந்து பார்த்து விட்டு எதுவும் நடக்காது என்றவுடன் மதசார்பற்ற அணிகளுடனே எங்கள் கூட்டணி  என்று சொல்லி விட்டு முஸ்லீம் லீக் , மனிதநேய மக்கள் கட்சி போன்றவற்றுடன் கூட்டு சேர்ந்திருக்கும் தி.மு.க விற்கும் இந்த கூட்டணி பற்றி விமர்சனம் செய்ய எந்தவித தார்மீக உரிமையும் இல்லையென்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்து ... 

 

அ.தி.மு.க வால் தாங்கள் கழுத்தறுக்கப்பட்ட கோபத்தை அங்கே காட்டாமல் பா.ஜ.க வை தோற்கடிப்பதே எங்கள் இலக்கு என்று அறைகூவல் விடுக்கும் கம்யூனிஸ்டுகளைப் பார்க்கும் போது காமெடி கலந்த வேதனையாய் இருக்கிறது . 2009 இல் காங்கிரசை வரவிடாமல் தடுத்ததில் இவர்கள் செய்த முயற்சி பலித்ததைப் போல இம்முறையும் நடக்கக்கடவது... 

 

முதலில் மோடி அலையே இல்லை என்று சொன்ன காங்கிரஸ்காரர்கள் பிறகு பா.ஜ.க அணியின் தொகுதிப் பங்கீட்டில் உள்ள சிக்கலை காட்டி  கேலி செய்கிறார்கள். பா.ஜ.க அணியிலாவது தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில் தான் பிரச்சனை . அதாவது ஒரு தொகுதிக்கு நிறைய பேர் போட்டி போடுகிறார்கள் . ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு சுளையாக 39 தொகுதிகள் இருந்தும் நிற்பதற்கு யாரும் முன் வரவில்லை என்கிற பரிதாப நிலையிலும்

பா.ஜ.க வை எந்த முகத்தை வைத்துக் கொண்டு குற்றம் சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம் ...

 

இப்படி முதலில் பா.ஜ.க தலைமையில் கூட்டணி என்றவுடன் நிறைய பேர் ஏளனம் செய்தார்கள் , பின் இது முரண்பட்ட கூட்டணி என்று எதிர்த்தார்கள் , கடைசியில் கூட்டணி அமைந்து வெற்றியும் பெற்றவுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவோமாக . இந்த கூட்டணி அனைத்து  தொகுதிகளிலும் வெற்றி பெறுமென்று யாரும் சொல்லவில்லை . அதே நேரம் சுத்தமாக தோல்வியை தழுவவும் வாய்ப்பில்லை . கூட்டணி கட்சியிலுள்ளவர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து  ஒற்றுமையாக பணியாற்றினால் குறைந்தது 8 - 12  தொகுதிகளில் வெற்றி பெறவும் , நிறைய தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கவும்  வாய்ப்புள்ளது.

உண்மையில் வெற்றி , தோல்விகளை தாண்டி தி.மு.க , அ.தி.மு.க இரண்டையும் தவிர்த்து தமிழகத்தில் இப்படியொரு கூட்டணி அமைந்ததே வெற்றிக்கான முதல்படி ...


9 March 2014

பதிவு போடலையோ பதிவு ! ...


திவெழுதி ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது . உடல் நிலை சரியில்லையா அல்லது சினிமா பார்ப்பதை விட்டு விட்டீர்களா என்றெல்லாம் கேள்விகள்  வர ஆரம்பித்த பிறகு தான் இந்த இடைவெளியின் நீளம் நன்றாக உறைக்கிறது.
எனக்கு அம்மை போட்டதன் காரணமாக இதே போன்றதொரு இடைவெளி சென்ற வருடம் இதே நேரம் ஏற்பட்டது . அப்பொழுது கூட விஸ்வரூபம் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் வீட்டிலிருப்பவர்கள் திட்டையும் பொருட்படுத்தாமல் எழுத  ஆரம்பித்து விட்டேன் ...

மற்றபடி எழுதாமல் இருப்பதற்கு கணினியில்  கோளாறோ அல்லது இணையத்தில் தடையோ தான் பொதுவாக காரணமாக இருக்கும் . ஆனால் இந்த முறை அப்படி எந்தவித தடையும் இல்லாமல் நான் பதிவு போடாதது  மட்டுமல்ல இணையத்திலேயே உலவாமல் போனதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை .  அதே நேரம் திடீரென ஒரு நாள் ஷஹி மூலம்  மூன்றாம் கோணம் இணைய தள நிறுவனரும் , நண்பருமான அபி கார் விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி வேறெதையும் பற்றி சிந்திக்க விடாமல் சில நாட்கள் என்னை கட்டிப்போட்டதும் உண்மை ...

படங்கள் ரிலீசானவுடன் பார்க்காமல் போனது விமர்சனங்கள் எழுதாததற்கு காரணாமாக இருந்தாலும் அப்படி பார்க்காமல்  போனது ஏனென்று யோசித்தால் அதற்கும் விடையில்லை . ஆனால் ஒரு விஷயம் நமக்கு பிடித்திருந்தாலும் அதையே திரும்ப திரும்ப செய்யும் போது  ஏற்படும் அயர்ச்சி தான் இதற்க்கெல்லாம் அடித்தளமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .  கணவன் மனைவிக்குள் என்ன தான் பிடித்தம் இருந்தாலும்
ஒரு இடைவெளி ஏற்படும் போது பிறக்கும்  சுதந்திரத்தை எல்லாரோலும் உணர முடியும் . பிரிவிற்கு பிறகு இணையும் போது உறவு இன்னும் வலுப்படும் . ஒரு மாத இடைவெளிக்கு ஓவர் பில்ட் அப் கொடுக்கிறேனோ . சரி விடுங்க மேட்டருக்கு வருவோம் ...

கடைசியாக விமர்சனம் எழுதிய படம் ரம்மி . ஒரு வேளை அது தான் அடுத்து படங்களை ரிலீசானவுடன் பார்க்காதற்கு  காரணமோ என்றெல்லாம் யோசித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை . வீரம் , ஜில்லா என்று கமர்சியல் அதிரடியில் ஆரம்பித்த 2014 பிறகு கொஞ்சம்  தொங்க ஆரம்பித்து விட்டது . விஜய் சேதுபதியின் ரம்மி , பண்ணையாரும் பத்மினியும் இரண்டுமே சரியாக போகவில்லை . பார்ட்டி உஷாராக வேண்டிய நேரமிது . கதையை  தேர்ந்தெடுப்பதில்  கவனம் செலுத்தாவிடில் காணாமல் போய்  விடும் அபாயம் உள்ளது ...

இங்க என்ன சொல்லுது , இது கதிர்வேலன் காதல் இரண்டுமே காமெடி என்ற பெயரில் வந்த மொக்கைகள் தான் என்றாலும் இரண்டாவது கொஞ்சம் பரவாயில்லை . சின்ன பட்ஜெட்டில் வந்த  கோலி சோடா பாராட்டுக்களோடு பைசாவையும் அள்ளியது சந்தோசம் . படம் பிடித்திருந்தாலும் எனக்கென்னமோ ரேணிகுண்டாவில் நடித்தது போன்ற பையன்கள் நடித்திருந்தால் படம் இன்னும்  பிக் அப் ஆகியிருக்கும் . ஏனா பசங்க ரொம்ப பால்வாடி யா இருக்காங்க . வல்லினம் , தெகிடி இரண்டுமே நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள் . இன்னும் பார்க்கவில்லை . நிமிர்ந்து நில் ரிலீசாகி இருக்கிறது . பார்த்தவுடன் பதிவு போடலாம் என்றிருக்கிறேன் ...

நாடாளுமன்ற தேர்தலுக்கு தேதியையே அறிவித்தாகி விட்டது . அரசியலை தொடாமல் போனால் நன்றாக இருக்குமா ? . நான் எனது முந்தைய பதிவுகளில் சொன்னது போல எதிர்பார்த்த படி பி.ஜே.பி - ம.தி.மு.க - பா.ம.க - தே.மு.தி.க கூட்டணி அமையவிருப்பது இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல அடுத்த சட்டசபை தேர்தலுக்கும் தி.மு.க , அ.தி.மு.க விற்கு நல்ல மாற்றாக இருக்கும் என நம்பலாம் . கம்யூனிஸ்டுக்களை கழட்டி விட்டதிலிருந்து அ.தி.மு.க அதீத நம்பிக்கையிலிருப்பது தெரிகிறது . தோழர்களுக்கு தோள் கொடுக்க மு.க காத்திருக்கிறார் . அவர்கள் செவி சாய்ப்பார்களா தெரியவில்லை . நான் பல முறை சொன்னது போல காங்கிரஸ் தனித்து விடப்பட்டிருக்கிறது . இப்படி பல்முனை போட்டி நடப்பது குழப்பத்தை கொடுத்தாலும் அந்தந்த கட்சிகளின் பலத்தை நிரூபிப்பதற்கு ஏதுவாக இருக்கும் ...

வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்கும் வழக்கம்  இருந்தாலும் நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதையும் , மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டுமென்பதையும் மறக்காமல்மக்கள்  வாக்களிப்பார்கள் என்று நம்பலாம் . ஏனெனில் டில்லியில் ஆம் ஆத்மி அடித்த 48 நாள் கூத்தை யாராவது மறக்க முடியுமா ? சொன்ன வாக்குறுதிகளை  நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தவுடன் அரவிந்த் அடித்த அந்தர் பல்டி பழுத்த அரசியல்வாதிகளையும் மிஞ்சி விட்டது . மத்தியிலும் இது போன்றதொரு நிலை ஏற்படாமல் இருக்க மக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும் ...

10 January 2014

ஆம் ஆத்மியும் அறிவுஜீவிகளும் ...


மீடியாக்களுக்கு , குறிப்பாக  ஆங்கில சேனல்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு ஏதாவது ஒரு விஷயம் தீனி போட்டுக் கொண்டேயிருக்க  வேண்டும் . அப்பொழுது தான் அவர்கள் பிழைப்பு ஓடும் . 2ஜி , மோடி விவகாரம் , டெல்லி பெண் கற்பழிப்பு ( அந்த சம்பவத்தை ஒட்டி தமிழ் நாட்டில் ஒரு பள்ளி  சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது அதற்கு ஒரு சிறிய சலசலப்பைக்  கூட இவர்கள் காட்டவில்லை ) , ஐ.பி.எல் பெட்டிங் இப்படி பலவற்றை தொடர்ந்து இப்பொழுது அவர்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருப்பது சமீபத்தில் காங்கிரசின் ஆதரவோடு டில்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் ஆம் ஆத்மியும் , அதன் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் ...

அர்விந்த் கெஜ்ரிவால் ஐ.ஐ.டி யில் படித்தவர் , அரசு வேலையை  உதறி விட்டு பொதுநலப் பணிக்காக  தன்னை அர்ப்பணித்தவர் , ஊழலை ஒழித்துக் கட்ட வேண்டுமென்கிற நோக்கத்தோடு அரசியலில் குதித்தவர் என பல சிறப்பம்சங்களையும் தாண்டி கட்சி ஆரம்பித்து ஒன்பது மாதங்களிலேயே டில்லியில் ஆட்சியை பிடித்தவர் என்கிற ஒரு காரணத்திற்காகவே இன்று இந்தியாவையே  தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் . சினிமா , அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமல் இது போன்ற ஒரு சாதனையை  அவர் செய்திருப்பது வியக்கத்தக்கது . முதல்வன் படத்தில் வருவது போல ஒரு சாமான்யன் நினைத்தாலும் இது போன்ற மாற்றங்களை கொண்டு  கொண்டு  வர முடியும் என்று நிரூபித்த விதத்தில் அவர் இந்திய எதிர்கால அரசியலுக்கு ஒரு நம்பிக்கை ...

இதையெல்லாம் சொல்லும் அதே நேரத்தில் அவரின் வெற்றியை தொடர்ந்து அர்விந்த் கெஜ்ரிவால் அடுத்த பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் , அவரின் கட்சிக்கு இந்தியா முழுவதும் பெருத்த ஆதரவு இருப்பது போலவும் சில மீடியாக்களும் , அதிலுள்ள அறிவு ஜீவிகளும் Knee Jerk ரியாக்சன் கொடுப்பது அவர்களின் அரைவேக்காட்டுத்தனத்தையே காட்டுகிறது . முதலில் ஊழலுக்கு எதிராக கட்சியை ஆரம்பித்தவர் எப்பொழுது காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியமைத்தாரோ அப்பொழுதே அர்விந்த் சந்தர்ப்பவாத அரசியல்வாதியாகி விட்டார் . அடுத்தது காஷ்மீர் பிரச்சனை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் ஏனோதானோ என்று ஒரு கருத்தை பிரஷாந்த் பூஷன் சொல்லி வைக்க அதை தொடர்ந்து சில அமைப்பினர் உ.பி யில் உள்ள ஆம் ஆம்தி அலுவலுகத்தை சூறையாடினர் . அதனை தொடர்ந்து
 " காஷ்மீர் பிரச்சனை தீர எனது உயிர் தான் தேவை என்றால் அதை தரவும் நான் தயார் " என்று அர்விந்த் அதீத உணர்ச்சியோடு பேசியதிலிருந்து சாமான்ய முகத்திரையை அவிழ்த்து சாணக்கிய அரசியல் முகமூடியை போடத்  தொடங்கி விட்டார் ...

நல்ல ஒரு மாற்றத்தை கொண்டு வருவார்  என்ற நம்பிக்கையோடு வாக்களித்த டில்லி வாக்காளர்களுக்கு காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைத்ததன் மூலம் ஏமாற்றம் அளித்தவர் , முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் கூட  முடிவடையாத நிலையில் அவசரம் அவசரமாக தேசிய அரசியலுக்கு தாவுவது அவரின் நம்பகத்தன்மையை குலைத்து கிடைத்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்திக் கொள்ளும் பக்கா அரசியல்வாதியாகவே நம் கண் முன் காட்டுகிறது . ஏனெனில் டில்லி மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை ஒழுங்காக நிறைவேற்றவே அவருக்கு ஐந்து ஆண்டுகள் போதாது . அப்படியிருக்க தேசிய அரசியலில் அவர்கள் காட்டும் ஆர்வம் காங்கிரசுக்கும் , ஆம் ஆத்மிக்கும் ரகசிய உடன்பாடு இருக்கிறதோ என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது . அடுத்த  முறை ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட அழிந்திருக்கும் நிலையில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மியின் வளர்ச்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை . மாற்றாக மோடிக்கு ஆதரவாக விழும் ஓட்டுக்களை ஓரளவுக்கேனும் சிதைப்பதற்கு நிச்சயம் அர்விந்த் அனுகூலமாக இருப்பார் ...

அர்விந்த் படித்த புத்திசாலி , தனிப்பட்ட முறையிலும் தூய்மையானவர் எனவே அவர் பிரதமர்  ஆவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம் . நிச்சயம் தவறில்லை தான் . ஆனால் முதலில் முதல்வராக அவர் தனது கடமையை திறம்பட செய்து தன்னை நிரூபிக்கட்டும் என்பதே  பலரது எண்ணம் .  மேலும் அர்விந்த் போலவே அதிகம் படித்தவரும் , தனிப்பட்ட முறையில் தூய்மையானவரும் ஆன மன்மோகன் சிங் இரண்டு முறை பிரதமராக இருந்து நமக்கெல்லாம் என்ன செய்தார் என்பது நாடறிந்த விஷயம். அதற்காக மன்மோகன் போல தான் அரவிந்தும் இருப்பார் என்று சொல்ல வரவில்லை . அதே நேரம் படிப்பும் , தனிப்பட்ட தூய்மையும் மட்டும் திறம்பட ஆட்சி செய்வதற்கு போதுமானதாக இருக்காது என்பதையே வலியுறுத்துகிறேன் ...

கட்சி ஆரம்பித்து ஒன்பது  மாதங்களே ஆகியிருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக லோக்பால் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே , கிரண் பேடி  போன்றோருடன் இணைந்து அர்விந்த் நடத்திய போராட்டங்களே அவரை டில்லி மக்களிடையே பிரபலப்படுத்தியது . அன்னா , கிரண் இருவரும் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி விட  அவர்களுக்கு கிடைத்த ஆதரவையும் சேர்த்து மொத்தமாக அர்விந்த் அறுவடை செய்தார் என்பதே நிதர்சனம் . அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியை அன்னா புறக்கணித்ததும் , அவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்று அவர் கேள்வி எழுப்பியதும் பலவித சந்தேகங்களை கிளப்புகின்றன . மோடி போன்ற  வலிமையான ஒருவர்  இந்தியாவுக்கு பிரதமராவதை அமெரிக்கா விரும்பாததால் அங்கிருந்து அதிக பணம் மறைமுகமாக ஆம் ஆத்மிக்கு வருகிறது என்பது ஒரு சாரரின் கருத்து ...

நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரசை  கலைத்து விட சொன்னார் காந்தி . அதே போல காந்தியவாதியான அன்னா ஹசாரே ஆம் ஆத்மி என்று கட்சியை ஆரம்பிக்க எதிர்ப்பு தெரிவித்தார் . இரண்டிற்கும் ஏதோ ஒற்றுமை இருப்பது போலவே படுகிறது . இவையெல்லாவற்றையும் விட லோக்பால் மசோதாவுக்காக அர்விந்த் , அன்னா வுடன் ஒரே குழுவில் இருந்து போராடிய கிரண் பேடி மத்தியில் நிலையான ஆட்சி  அமைவதற்கு மோடிக்கே எனது  ஒட்டு என்று தனது ஆதரவை தெரிவித்திருப்பது தனிப்பட்ட விருப்பு , வெறுப்புகளை தாண்டி அவர் நாட்டின் மேல் கொண்டிருக்கும் அக்கறையை காட்டுகிறது . இதே போன்றதொரு முடிவை அன்னா எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை . இதையெல்லாம் மீறி அர்விந்த் தான் அடுத்த பிரதமர் என்கிற அளவிற்கு அளந்து விடும் அறிவுஜீவிகளுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளலாம்  . பவர் ஸ்டார்  ஹிட் கொடுத்து விட்டார் என்பதற்காக சூப்பர் ஸ்டாராக ஆகி விட முடியாது ...


28 December 2013

2014 - மோடி ஆர் நோபடி - MODI OR NOBODY ...


திர்பார்த்ததைப் போலவே 2014 தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்ததும்  , தி.மு.க காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியிருப்பதும் நடந்திருக்கிறது . வாஜ்பாயை பாராட்டிய கையோடு  பி.ஜே.பி கூட்டணிக்கு தாவுவார்  என்று எதிர்பார்த்த நிலையில் அதனுடன் கூட்டு இல்லை என்று கலைஞர் அறிவித்திருப்பது ஆச்சர்யமே . ஆனால் இன்னும் தேர்தலுக்கு குறைந்தது நான்கு மாதங்கள்  உள்ள நிலையில் இது தான் அவருடைய உறுதியான முடிவா என்பதையும் சொல்வதற்கில்லை...

ஏனெனில் முன்பொரு முறை மத சார்புடைய  (!) பி.ஜே.பி யுடன் கூட்டு  இல்லை என்று சொன்ன  கலைஞர்  அதனோடு கூட்டணி வைத்துக் கொண்ட பின் " நான்  இருக்கும் இடத்தில் தான் மதசார்புக்கு இடமில்லையே " என்று மழுப்பியதை யாரும் மறந்திருக்க முடியாது . பெரிய கட்சியான தி.மு.க கூட்டணியில் சேர்ந்திருந்தால்  பி.ஜே.பி க்கு அது வலு சேர்க்கும்  என்றாலும் ஊழலுக்கு எதிரான அதன் பிரச்சாரத்திற்கு   பெரிய சறுக்கலை ஏற்படுத்தியிருக்கும்  ...

கடைசியில் ஒரு வழியாக இரண்டு பிரதான கழகங்களும் காங்கிரசை  கை கழுவியிருக்கும் இந்த வேளையில் ம.தி.மு.க ., பா.ம.க போன்ற இதர கட்சிககளை  தன்னுடன் இணைத்துக் கொண்டு பி.ஜே.பி தேர்தலை சந்திப்பது தன்னை மேலும் வலுப்படுத்திக்கொள்ள அதற்கு பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை . பி.ஜே.பி யை தீண்டத்தகாத கட்சி போல வர்ணித்து வந்த காங்கிரசிற்கு இன்று அதே நிலை ஏற்பட்டிருப்பதும்  எதிர்பார்த்ததே...

தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதை விட தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதே தே.மு.தி.க விற்கு வலிமை சேர்க்கும் . 2016 இல் நடக்கவிருக்கும் சட்டசமன்ற தேர்தலுக்கும் தன்  தலைமையில் கூட்டணியை தயார்படுத்திக் கொள்ள விஜயகாந்திக்கு இந்த கூட்டணி அருமையான சந்தர்ப்பம் . காங்கிரஸ் மேல் எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கும் இந்த நிலையில்  பி.ஜே.பி யுடன் சேர்வது அவரது சரிந்த செல்வாக்கை கொஞ்சமேனும் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கலாம் ...

நடந்து முடிந்த ஐந்து சட்டமன்ற தேர்தல்களில் பி.ஜே.பி மூன்றில் ஜெயித்திருப்பதும் , பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக டில்லியில் உருவெடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது . மூன்று மாநிலங்களை கைப்பற்றியதை கணக்கில் கொள்ளாமல் டில்லியில் தோற்றதையே காரணமாக்கி மோடி அலையெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல சில மீடியாக்கள் விஷமமாக பிரச்சாரம் செய்து வருவது வேடிக்கையாக இருக்கிறது . டில்லியை பொறுத்த  வரை காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் பி.ஜே.பி க்கு மட்டும் விழாமல் ஆம் ஆத்மி க்கும் சென்றதே பி.ஜ.பி யின் சறுக்கலுக்கு காரணம் . ஆனால் தேசிய அளவில் காங்கிரஷிற்கு வலுவான மாற்றாக பி.ஜே.பி மட்டுமே உள்ளது ...

அதே நேரத்தில் திரிமூணல் , எஸ்.பி , அ.தி.மு.க உள்ளிட்ட வலுவான பிராந்திய கட்சிகள் காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள்  பி.ஜே.பி க்கு மட்டும் போகாமல் பார்த்துக் கொள்ளும் . பிஹார் , ஓடிஸா இரண்டிலும் தனக்கிருந்த வலுவான கூட்டணியை பி.ஜே.பி  இழந்திருப்பதும் அதற்கு பெரிய சறுக்கல் . மோடி அலை இதையனைத்தும் சரிக்கட்டுவது கஷ்டமே . இருப்பினும் பி.ஜே.பி வலுவாக உள்ள  குஜராத் , மத்திய பிரதேஷம் , ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களையும் சேர்த்து 200 இடங்களுக்கு மேல் கிடைத்து விட்டால் அது ஆட்சியமைப்பது உறுதி . இதை மனதில் வைத்து அவர்கள் தேர்தல் வியூகம் அமைப்பார்கள் என்று நம்பலாம் ...

தங்களால் ஆட்சி அமைக்க முடியாதது கிட்டத்தட்ட உறுதியானதால் பி.ஜே.பி யை வர விடாமல் தடுப்பதே காங்கிரசின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் . பிராந்திய கட்சிகளின் களப்பில் அமையும் மூன்றாவது  அணிக்கு அது வெளியிலிருந்து ஆதரவு தரலாம் . இந்த கட்சிகளுக்குள் யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது இமாலய சிக்கல் . அப்படியே ஒருவரை  ஒருமித்த ஆதரவுடன் தேர்ந்தெடுத்தாலும் அவர் எத்தனை நாட்கள் பிரதமாராக நீடிப்பார் என்பது கேள்விக்குறி . ஏற்கனவே இது போன்ற சிக்கலான சந்தர்ப்பங்களை இந்திய ஜனநாயகம் சந்தித்திருக்கிறது ...

பல விதமான பிரச்சனைகளையும் தாண்டி இன்று மக்கள் முன் நிற்கும் மிகப்பெரிய பிரச்னை விலைவாசி உயர்வு . அடுத்து பி.ஜே.பி ஆட்சியமைத்தாலே இதனை உடனடியாக சரிக்கட்ட முடியாது , அப்படியிருக்க யார் வழி நடத்தப் போகிற தலைவர் என்பது தெரியாமலேயே பல கட்சிகள் அணி சேர்ந்து ஆட்சியமைத்தால் ஏற்கனவே படு குழியில் இருக்கும் நமது பெருளாதாரம் அதள பாதாளத்திற்குள்  போவது உறுதி ...

இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் குழப்பமில்லாத நிலையான ஆட்சியை மத்தியில் அமர்த்துவதே ஒவ்வொரு குடிமகனின் தலையாய ஜனநாயக கடமை . அதற்கு பி.ஜே.பி , காங்கிரஸ் , அ.தி.மு.க , தி.மு.க என்று கட்சிகளின் தனிப்பட்ட நிறை குறைகளையும் தாண்டி நாட்டை வழிநடத்துவதற்கு ஒரு  நல்ல தலைவன் தேவை . இன்று நம் கண் முன் தெரியும் ஒரே  தலைவன் மோடி . அவர் வந்து மட்டும் பெரிதாக என்ன செய்து விடப்போகிறார் என்று எதிர்மறையாக கேட்காமல் , ஒரு சாதாரண டீ வியாபாரியாக இருந்து இன்று ஒரு மாநிலத்திற்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலைமைச்சராகி அதை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் ஒருவர் ஏன் இந்திய நாட்டிற்க்கு பிரதமாராக வரக் கூடாது என்று ஒவ்வொருவரும் யோசிக்க ஆரம்பித்தால் ஒரு விடிவு பிறக்கும் ...

எது நடந்தாலும் காங்கிரஷிற்கு தான் ஓட்டுப் போடுவேன்  என்பவர்கள் போட்டு விட்டுப் போகட்டும் . ஆனால் காங்கிரஸ் ஆட்சியின் மேல் வெறுப்பிலிருப்பவர்கள் தங்கள் ஓட்டுக்களை பி.ஜே.பி க்கு போடுவது மட்டுமே சரியான தீர்வு .  ஏனெனில் டில்லி யில் மக்கள் எடுத்த குழப்பமான முடிவால் அவர்கள் எந்த கட்சியை தூக்கியெறிய நினைத்தார்களோ அதே கட்சியின் ஆதரவுடன் தான் இன்று ஆம் ஆத்மி யே அரசமைக்க முடிகிறது . அதே போல 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் அனைத்தும் பி.ஜே.பி க்கு சென்றடையாத நிலையில் காங்கிரசின் ஆதரவுடன் மீண்டும் பல கட்சிகளின் கூட்டணியாட்சி அமையக் கூடிய பரிதாபமான நிலைக்கு நாளை மீண்டும் நாம் தள்ளப்படலாம் . அப்படி ஒரு நிலைமை வராமல் இருப்பதற்கு ஒரே தீர்வு மோடி ஆர் நோபடி ...


Related Posts Plugin for WordPress, Blogger...