23 November 2013

இரண்டாம் உலகம் - IRANDAM ULAGAM - இதற்குத்தானா ஆசைப்பட்டாய் செல்வராகவா ?...

 

7G யில் பிரமிக்க வைத்து புதுப்பேட்டை க்கு பின் மனதில் குடியேறியவர் செல்வராகவன் . கிடைத்த  அருமையான வாய்ப்பை ஆயிரத்தில் ஒருவன் போலவே இழுவையான இரண்டாம் பாதியால் இரண்டாம் உலகத்திலும்
நழுவ விட்டிருக்கிறார் ...

நார்மலான நம் உலகம் , ஃபேண்டஸி யான இரண்டாம் உலகம் . இரண்டிலும் ஆர்யா , அனுஷ்கா இருக்கிறார்கள் . இந்த உலகத்தில் காதலியை இழக்கும் ஆர்யா காதலே இல்லாத இரண்டாம் உலகத்திற்கு சென்று அங்கிருக்கும் ஆர்யா - அனுஷ்கா இடையே காதல் பூவை மலர வைக்கிறார்  . காதல் , ஃபேண்டஸி இரண்டையும் குழப்பி கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...


சரியான  உடற்கட்டுடன் ஆர்யா கதைக்கு நல்ல தேர்வு . ஆதி வாசி தோற்றத்தில் ஆஞ்சநேயர் போல இருந்தாலும் சிங்கத்துடனும் , அனுஷ்கா வுடனும் சண்டை போடும் இடங்களில் ரசிக்க வைக்கிறார் . அனுஷ்கா கேரியரில் இந்த படம் ஒரு மைல்கல் . மென்மையான டாக்டர் , வீரமான காட்டுவாசி இரண்டிலும் வித்தியாசம் காட்டி வியாபிக்கிறார் . மற்ற பெண்களுடன் ஆர்யா  பழகுவதை பார்த்து பொறுமுவது , காதல் வந்தவுடன் வெட்கப்படுவது என நிறைய இடங்கள் ஆஸம் . ஆர்யாவின் நண்பராக வருபவர் தமிழ் காமெடிக்கு நல்ல வரவு ...

ராம்ஜி செல்வராகவனின் முதுகெலும்பு என்பதை ஒளிப்பதிவில் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் . வைரமுத்து - ஹாரிஸ் கூட்டணியில் எல்லா பாடல்களும் ஹம்மிங் செய்ய வைக்கின்றன . அனிருத் தின் பின்னணி இசை படத்திற்கு பலம் . ஸ்பெஷல் எஃபெக்டஸ்  , லொக்கேசன் எல்லாமே எல்லாமே படத்திற்கு தேவையான பிரம்மாண்டத்தை தக்க வைக்கின்றன ...


கதையின் தொடக்கத்திலேயே அனுஷ்கா தன் காதலை சொல்வது , ஆர்யா காதலை ஏற்க மறுப்பது , பின் ஆர்யா தொடர அனுஷ்கா மறுப்பது , காதலை ஏற்றுக்கொண்ட பின் வரும் காதல் காட்சிகள் என எல்லாவற்றிலுமே செல்வராகவனின் அக்மார்க் காதலிஸம் கண்களுக்கு விருந்து .  அதே போல படம் நெடுக வரும் ஷார்ட் அண்ட் க்யுட் வசனங்கள் , படத்தின் முதல்பாதி இரண்டுமே இரண்டாம் உலகத்தில் முதல் தரம் ...

இது போன்ற சில சிறப்பம்சங்கள் , கதை தேர்வு போன்றவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால்  இரண்டாம் பாதி , குழப்பமான திரைக்கதை , ஆர்யா - அனுஷ்கா தவிர மனதில் பதியாத இரண்டாம் உலக கதாபாத்திரங்கள் இவையெல்லாம் இரண்டாம் உலகத்தை பாதாள உலகத்திற்கு அனுப்புகின்றன . தனக்கு தெரிந்த காதல் களத்தில் கவர்ந்தாலும் மகதீரா , அவதார் போன்ற படங்களின் பாதிப்பில் " அவலை நினைத்து உரலை இடித்தது " போல இந்த படத்தை எடுத்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது . வழக்கமான மசாலா இல்லாமல் தமிழில் ஃபேண்டஸி வகையறா படம் எடுத்த முயற்சியை பாராட்டலாம் . ஆனால் அதை சரி வர கொடுக்க முடியாமல் போனதால் இதற்குத்தானா ஆசைப்பட்டாய் செல்வராகவா ? என்று ஏக்கத்தோடு சொல்ல வைக்கிறார் இயக்குனர் ...

ஸ்கோர் கார்ட் : 40


16 November 2013

சச்சின் - SACHIN ...


மூன்றே நாட்களில் இந்தியா டெஸ்ட் மேட்சை ஜெயித்ததற்காக முதல் முறையாக ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள் . உலகக்கோப்பை இறுதிப்போட்டி போல மைதானமே நிரம்பி வழிகிறது . 18 ஆட்டங்களிலேயே 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவனையும்  , அறிமுகமான முதல் இரண்டு ஆட்டங்களிலும்  செஞ்சுரி அடித்தவனையும் அனைவரும் மறந்தே போகிறார்கள் . அம்பயர் உட்பட எதிரணியினர் அனைவரும் ஒரு  விளையாட்டு வீரனை வரிசையில்  நின்று வரவேற்கிறார்கள் .  இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருதை ஒருவனுக்கு 40 வயதிலேயே வழங்கி கவுரவிக்கிறது . இவையனைத்தும் நடந்தது 24 வருடங்களுக்கு முன்னால்  நவம்பரில் அறிமுகமாகி இன்று நவம்பர் 16 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து வெளியேறும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்னும் மகத்தான மனிதனுக்காக ...

கால் நூற்றாண்டு காலமாக கிரிக்கெட்டையே மூச்சுக்காற்றாக சுவாசித்து வருபவர் , உலகிலேயே  அதிக அளவு டெஸ்ட் மற்றும் ஒன் டே ஆட்டங்களை  ஆடியவர் மற்றும் ரன்களை குவித்தவர் , சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்தவர் , ஒரு நாள் கிரிக்கெட்  மேட்சில்  முதன் முறையாக 200 ரன்களை அடித்தவர் , அதிக அளவு மேன் ஆப் தி மேட்ச் அவார்ட்களை வாங்கிக் குவித்தவர்  இப்படி எவ்வளவோ சாதனைகளையும் , புள்ளி விவரங்களையும் தாண்டி  " கிரிக்கெட் எங்கள் மதம் சச்சின் அதன் கடவுள் " என்று நாத்திகர்களை கூட சொல்ல வைத்தவர் சச்சின் ...

எளிமை ,  ஒழுக்கம் , கட்டுப்பாடு , அர்ப்பணிப்பு , உதவும் மனப்பான்மை போன்ற நற்பண்புகளால் சிறந்த வீரர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதராக ரசிர்களால் மட்டுமல்லாமல் முன்னாள் , இந்நாள் விளையாட்டு வீரர்களாலும் கொண்டாடப்படுபவர் சச்சின் . இவரது ஒரு நாள் போட்டி சாதனைகள் ஒரு வேளை நாளை கோலிக்களாலோ  , டெஸ்ட் மேட்ச் சாதனைகள் புஜாராக்களாலோ முறியடிக்கப்படலாம் . ஆனால் அப்பொழுதும் கிரிக்கெட் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவராக சச்சின் மட்டுமே இருப்பார் ..


15 November 2013

பீட்சா II வில்லா - WOULD HAVE BEEN BETTER ...
பொதுவாக பெரிய வெற்றியடையும் படங்களின் இரண்டாம் பாகங்கள் எதிர்பார்ப்பை அவ்வளவாக  பூர்த்தி செய்வதில்லை . தமிழில்  பில்லா விற்கு பிறகு அதற்கு சமீபத்திய உதாரணம் வில்லா . ஆனாலும்  பெயரை தவிர முதல் பாகத்தோடு வேறு எந்தவித தொடர்புமில்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு திகில் படத்தை கொடுக்க முற்பட்டமைக்காக இயக்குனர் தீபனை பாராட்டலாம் ...

பிசினசில்  எல்லா சொத்துக்களையும் இழந்தாலும் பெரிய எழுத்தாளனாக வேண்டுமென்கிற கனவில் இருக்கும் ஜெபினுக்கு ( அசோக் செல்வன் ) இறந்து போன அப்பாவின் ( நாசர் ) சொத்தான வில்லா கைக்கு வருகிறது . அங்கு காதலி ஆர்த்தி ( சஞ்சிதா ) யுடன் தங்கும் ஜெபினுக்கு என்ன நேர்கிறது என்பதை ஸ்லோவான முதல் பாதி , புத்திசாலித்தனமான க்ளைமேக்ஸ் இரண்டையும் கலந்து சொல்லியிருக்கிறார்கள்  ...

அசோக் செல்வனுக்கு எழுத்தாளனுக்கு ஏற்ற கேரக்டர் . தாடி , ஜிப்பா , ரிம்லெஸ்  கண்ணாடி என பொருத்தமாகவே இருக்கிறார் . முகம் மட்டும் எப்பொழுதும் இறுக்கமாகவே இருக்கிறது . ஹீரோவுக்கு சமமான அல்லது ஒரு படி மேலான பாத்திரத்தில் சஞ்சிதா . நல்ல வாய்ப்பிருந்தும் ஏனோ பெரிதாக கவரவில்லை . நாசர் வீணடிக்கப்பட்டிருக்கிறார் ...


முதல் பாகத்துடன் ஒப்பிடும்  பொழுது ஒரு மாற்று குறைவாக  இருந்தாலும் தீபக்  கின் ஒளிப்பதிவும் , சந்தோஷ் நாராயணின் இசையும் படத்திற்கு பலங்கள் . வழக்கமான திகில்  படம் போல இருந்துவிடக் கூடாது என்கிற இயக்குனரின் எண்ணத்திற்கேற்ப இருவரும் அடக்கி வாசித்திருப்பது போல தெரிகிறது ...

பேய் , திகில் படம் என்றவுடன் லிப்ஸ்டிக் , மைதா மாவை அப்பிக்கொண்டு ஓடி வரும் பெண்கள் , அதிர வைக்கும் இசை , அப்நார்மல் கேரக்டர்ஸ் போன்றவற்றை தவிர்த்ததில் இயக்குனர் வித்தியாசம் காட்டுகிறார் . ஸ்லோவாக இருந்தாலும் டீட்டைலிங்கான பின்னணியுடன் கதையை நகர்த்திய விதம் , யோசிக்க வைக்கும் க்ளைமேக்ஸ் போன்றவை வில்லா வில் நல்லாவே இருக்கின்றன ...

வழக்கமான விஷயங்களை தவிர்த்திருந்தாலும் திகில் படங்களுக்கே உரிய அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பை கொடுக்க தவறியிருக்கிறார்கள் . அதிலும் படம் படு ஸ்லோவாக நகர்வதால் ஒன்னேமுக்கால்  மணி நேரம் என்பதே மூன்று மணிநேரம் போல ஒரு அயர்ச்சியை கொடுக்கிறது . அருமையான க்ளைமேக்ஸ் தான் . ஆனால் அதுவும் சட்டென்று அனைவராலும் புரிந்து கொள்ள  முடியாத விதத்தில் இருப்பது வணிக ரீதியாக
படத்திற்கு சறுக்கல் . சென்டரை மட்டும் கருத்தில் வைக்காமல் கதையோடு சேர்த்து  ரசிக்கும் படி விறுவிறுப்பான திரைக்கதையையும் அமைத்திருந்தால் அனைவரும் வில்லா வில் வசித்திருக்கலாம் . பீட்சா II வில்லா - வுட் ஹேவ் பீன் பெட்டெர் ...

ஸ்கோர் கார்ட் : 417 November 2013

கலைமகன் கமல் ...


ந்து வயதில் ஆரம்பித்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு தலை சிறந்த நடிகனாக , கதை வசனகர்த்தாவாக , பாடகனாக , பாடலாசிரியராக , தயாரிப்பாளராக , இயக்குனராக இப்படி சகலகலாவல்லவனாக ஒருவரால் ஜொலிக்க முடியுமென்றால அவர் கமல்ஹாசன் மட்டுமே ....

வருடம் ஓடினாலும் வயதேராமல் ஒவ்வொரு படத்திலும் புது மாணவன் போல புத்துணர்ச்சியோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள கமலால் மட்டுமே முடியும் ... சக நடிகர்களெல்லாம் மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதித்த பணத்தையெல்லாம் சாமர்த்தியமாக மற்ற துறைகளில் முதலீடு செய்து கொண்டிருக்க தன் பணம் , ஜீவன் எல்லாவற்றையும் சினிமாவில் புதைத்துக்கொள்பவர் கமலாக மட்டுமே இருப்பார் ...            

கமல் இல்லாத தமிழ் திரையுலகை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது ... பாடல்களாகவே இருந்த தமிழ் சினிமாவில் நடிப்பின் மூலம் புது இலக்கணம் வகுத்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ... ஆனால் 70 களுக்குப் பின்னர் இயக்குனர்களின் நடிகராய் இருந்த இவரை சரியான முறையில் பயன்படுத்தாமல் அநியாயத்திற்கு அழ விட்டு ஓவர் ஆக்டிங் செய்யவைத்தவர்கள் ஏராளம் பேர். அதே சமயம் எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரமது ...


இந்த இரண்டு ஜாம்பவான்களுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தை சிவகுமார் , ஜெயசங்கர் ரவிச்சந்திரன் என்று யாராலும் நிரப்ப முடியவில்லை . அதை  நிரப்பியவர்கள் கமலும் , ரஜினியும் .கமலின் அறிவுரையால் அவருடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து தனக்கென தனி கமெர்சியல் பாணியை வகுத்துக்கொண்டார் ரஜினி .. ஹிந்தியில் பெரிய வெற்றியடைந்த அமிதாப்பின் படங்கள் ரஜினிக்கு ரீமேக் மூலம் பெரிதும் கைகொடுத்தன . அதன் பிறகு அவரின் வளர்ச்சியை எந்திரன் வரைக்கும் கூட எவராலும் அசைக்க முடியவில்லை ...                   

டான்ஸ் , ஃபைட் என கமெர்சியல் வெற்றிக்குரிய எல்லா தகுதிகளும் தனக்கிருந்தும் அதை மட்டுமே செய்யாமல் உலக சினிமா ஞானம் தந்த உந்துதலில் பரீட்சார்த்த முயற்சிகளில் கமல் இறங்கியதே தமிழ் திரையுலகின் முக்கிய திருப்புமுனை . அதனால் தான் புது இயக்குனர் பாரதிராஜாவிற்க்காக அவரால் கோவணம் கட்ட முடிந்தது , சகலகலாவல்லவனின் வெற்றிக்குப் பின்னாலும் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் " சத்யா " வில் நடிக்க முடிந்தது , இமேஜ் வட்டத்திற்குள் சிக்காமல் மகாநதியில் மூத்திரம் தோய்ந்த கடிதத்தை கைகளால் எடுக்க முடிந்தது ...
        
இதையெல்லாம் கமல் செய்யாமல் விட்டிருந்தால் இன்று வரை நமது ஹீரோக்கள் பண்ணையாருடன் மோதிக்கொண்டும் , ஹீரோயின்களுடன் மரத்தை சுற்றிக்கொண்டும் , தங்கைக்காக சபதம் எடுத்துக்கொண்டும் இருந்திருப்பார்கள் ...
                  
தேசிய விருதுகளையும் தாண்டி தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியதோடல்லாமல் , ரசிகர்களின் ரசனையை பல படி மேலே எடுத்துக்கொண்டு வந்ததே கமலின் மிகப்பெரிய சாதனை ... கடந்த முப்பது வருடங்களாக நல்ல படம் எடுக்க வேண்டுமென்று நினைக்கும் எவரும் கமலின் பாதிப்பில்லாமல் இருந்திருக்க முடியாதென்பதே கமல் தந்த போதனை ... எவ்வளவு திறமையிருந்தும் எதையாவது சொல்லி கமலின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இன்றும்  இருப்பதே தமிழ் சினிமாவின் வேதனை ... 

இவரின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களை நாம் தேர்ந்தெடுத்தால் அதில் கணிசமான இடத்தை கமலின் படங்களே நிரப்பும். நாயகனில் கமலை தவிர வேறு யாரையும் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது . முத்தம் கொடுக்க தான் லாயக்கு என்று கேலி பேசியவர்கள் கூட மூன்றாம்பிறையில் கமலின் நடிப்பை  பார்த்து மூச்சடைத்துப் போயிருப்பார்கள் . தோல்விப் படங்கள் நிறைய கொடுத்திருந்தும் தமிழ் சினிமா வணிகத்தில் கமல் அசைக்க முடியாத தூண் என்பதை எல்லோரும் இந்தியனுக்குப் பிறகு ஒரு முறை உறுதி செய்திருப்பார்கள் ...


வ.உ.சி , கட்டபொம்மன் , கர்ணன் போன்ற சரித்திர நாயகர்களை நினைத்தாலே நடிகர் திலகம் தான் நம் நினைவுக்கு வருவார்... அதே போல கமலை நினைத்தாலே சப்பாணி , சீனு , வேலு நாயக்கர் , அப்பு கிருஷ்ணா இவர்களெல்லாம் நம் கண் முன்னாலே வந்து  நிற்பார்கள். தன் ஸ்டார் அந்தஸ்தை தரை மட்டமாக்கி அண்டர்ப்ளே மூலம் கேரக்டர்களை கேமராவில் மட்டுமல்லாமல் மக்களின் மனதிலும் பதிய வைப்பது கமலுக்கு கை வந்த கலை ...

சிவாஜியைப் போல நடிப்போடு நின்று விடாமல் அதையும் தாண்டி டெக்னிகல் மற்றும் வியாபார யுக்திகளுக்கு கமல் ஒரு ட்ரென்ட் செட்டர் என்பது அவரின் கூடுதல் பலம் ...அபூர்வ சகோதரர்களில் கமல் போட்ட அப்பு வேஷம் இன்று வரை பல டெக்னீஷியன்களால் கூட அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு ... 

ராஜபார்வைக்கு பிறகு மாற்றுத்திறனாளிகளை முன்னிலைப்படுத்தி இன்று வரை பல படங்கள் , ஆரோக்கியமான தழுவல் இல்லையென்றாலும் தேவர்மகனின் வெற்றிக்கு பிறகு ஜாதியை மையப்படுத்தி பல படங்கள் , குணாவிற்கு பிறகு அந்த வழியில் காதல் கொண்டேன் , காதலில் விழுந்தேன் என்று பல படங்கள் , விருமாண்டி வரிசையில் மேலும் சில படங்கள் என்று உதாரணங்களை அடுக்கிகொண்டே போகலாம் ...         


ஆளவந்தானில் கோல்ட் வின்னர் , விருமாண்டியில் ரிலையன்ஸ் என கார்பரேட்களுடன் கமல் கைகுலுக்கியது வியாபார விருத்தியில் அவருடைய விசாலத்தை காட்டியது . ராஜபார்வை , குணா போன்ற படங்களின் தயாரிப்பாளராக கமல் கையை சுட்டுக்கொண்ட  காயத்திற்கு விக்ரம், சூர்யா போன்றவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் எடுக்கும் புதுப்புது முயற்சிகளே மருந்து ... 
     
முந்தைய படமான மன் மதன் அம்பு  வியாபார ரீதியாக மண்ணைக் கவ்வியிருந்தாலும் அடுத்த படத்தில் விஸ்வரூபம் எடுப்பதென்பது கமலுக்கு மட்டுமே சாத்தியம் .  இன்று ஐம்பத்தெட்டாவது  பிறந்த நாள் காணும் உலக நாயனுக்கு அவருடைய ரசிகனாக மட்டுமல்லாமல் நல்ல சினிமாவின் ரசிகனாக நான் வைக்கும் சமர்ப்பணமே இந்த பதிவு ...

- மீள்பதிவு


6 November 2013

பாண்டிய நாடு - PANDIYA NADU - விசுவ(ஷா)ல் ட்ரீட் ...

  


தீபாவளிக்கு  வந்திருக்கும் மூன்று படங்களுள் சுசீந்திரனின் பாண்டிய நாடு சென்சிபிலாக இருக்கும் என்ற எண்ணம் பொய்க்கவில்லை . கதை பிடித்ததால் விஷாலே படத்தை தயாரிக்க முன் வந்ததும் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது ...

பயந்தாங்கொள்ளி சிவகுமார் ( விஷால் ) அண்ணனையும் , நண்பனையும் கொன்றவர்களை பழிதீர்க்கும் வழக்கமான மதுரை மண் மணக்கும் படம் தான் பாண்டிய நாடு . ஆனால் அதை நேர்த்தியான திரைக்கதையால் சுவாரசியமாக்குகிறார் இயக்குனர் ...

ஒத்தையாளாக  நின்று ஊரையே அடிக்கும் விஷாலுக்கு இது  நல்ல ப்ரேக் . பயத்தில் திக்குவது , அடியாட்களை பார்த்து பம்முவது , பொய்யாக போன் பேசிக்கொண்டே காதலியை ரூட் விடுவது , குறிப்பாக பஞ்ச் டயலாக் எதுவும் பேசாதது என  இந்த வித்தியாச விஷால் வியக்க வைக்கிறார் . விஷாலை பிடிக்காதவர்களுக்கும் இந்த படத்தில்  அவரை பிடிக்கும் . கீப் இட் அப் ...


லக்ஷ்மி மேனனின் லக் இதிலும் தொடர்கிறது . பார்ப்பதற்கு  பக்கத்து வீட்டுப் பெண் போல இருந்தாலும் கண்களும் , உடல்வாகும் வசீகரிக்கின்றன . விஷாலின் நண்பனாக சில சீன்களே  வந்தாலும் விக்ராந்த் நல்ல தேர்வு . சூரி கொஞ்சம் சிரிக்க வைக்கிறார் ...

விஷாலை போல நடிப்பில் படத்தை தூக்கி நிறுத்தும் மற்ற தூண்கள் அப்பா பாரதிராஜா வும் , வில்லன் சரத் லோஹிதஸ்வா வும் . மகனை  கொன்றவனை பழி தீர்க்க துடிக்கும் அப்பாவாக  வரும் பாரதிராஜா நடிப்பிற்காக  பேசப்படுவார் . இயக்குனர்கள் தொடர்ந்து இவருக்கு அப்பா வேடமாக கொடுத்து முடக்காமல் இருத்தல் நலம் . கட்டுமஸ்தான் உடல்வாகு இல்லாவிட்டாலும் கண்களாலேயே மிரட்டுகிறார் வில்லன் சரத் ...

இமானின் இசையில் " ஒத்தக்கடை " , " பை பை " பாடல்கள் தாளம் போட வைத்தாலும் பை பை பாடல் ஸ்பீட் பிரேக்கர் . அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் யதார்த்தம் ...இழவு சீனில் இருந்து படத்தை தொடங்குவது , வில்லன் , ஹீரோ கேரக்டர்களை மனதில்  பதிய வைத்தது , " தடையற தாக்க " பாணியில் ஹீரோ முகத்தை மூடிக்கொண்டு அடியாட்களை அடித்தாலும் அதை விறுவிறுப்பாக படமாக்கியது , ஹீரோ வில்லனை பழிவாங்குவது நூற்றாண்டு கால சினிமா என்றாலும் அதை டீட்டைளிங்கோடு கொடுத்தது என பாண்டிய நாட்டில் பிடிக்கும் விஷயங்கள் நிறைய ...

வலுவான அண்ணன் கதாபாத்திரத்துக்கு வலுவில்லாத ஆளை தேர்வு செய்தது , முகத்தை மூடிக்கொண்டு அடித்தாலும் சொந்த வண்டியின் நம்பர் பிளேட்டை மூடாமல் போகும் லாஜிக் சொதப்பல் , ஊரை விட்டு ஓடிப்போன விக்ராந்திற்கு என்ன  ஆனது என்பதை சொல்லும் சினிமாத்தனமான ப்ளாஷ்பேக் போன்றவை பாண்டிய நாட்டிற்கு நேர்ந்த சோதனைகள் ...

மதுரையையே கைக்குள் வைத்திருக்கும் தாதா , அண்ணனை கொன்றதற்காக  அவனை பழி வாங்க பொங்கியெழும் பயந்தாங்கொள்ளி ஹீரோ , தாதாவிற்கு உதவியாக மினிஸ்டர் , சென்டிமென்ட் அப்பா இப்படி நிறைய வழக்கமான வழக்கங்கள் படத்தில் இருந்தாலும் சுசீந்திரனின் நேர்த்தியான திரைக்கதை . மதியின் நுட்பமான ஒளிப்பதிவு , விஷாலின் நடிப்பு இவையெல்லாம் சரியான விகிதத்தில் சேர்ந்ததால் பார்ப்பவர்களுக்கு பாண்டிய நாடு விசுவ(ஷா)ல் ட்ரீட் ...

ஸ்கோர் கார்ட் : 434 November 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா - ALL IN ALL - அமெச்சூர் ...
முதல் மூன்று படங்களையுமே வெற்றி பெற செய்த ராஜேஸ், சில வெற்றிகளுக்கு பிறகு தொடர்  தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும் கார்த்திக்குடன் நண்பன் சந்தானத்தை நம்பி கை கோர்த்திருக்கும் படம் ஆல் இன் ஆல் . ஆனால் அனைவருக்கும் அது ஆல் இஸ் வெல் ஆக அமையாமல் போனது துரதிருஷ்டமே ...

லோக்கல் சேனல் AAA டி.வி யை தன் அசிஸ்டன்ட்  கல்யாணத்தின்
( சந்தானம் ) உதவியுடன் NO.1 ஆக்க முயற்சிக்கிறார் எம்.டி அழகுராஜா
( கார்த்தி ) .  ஒரு கல்யாண ரிசப்சனில் அழகான தேவிப்ரியாவை ( காஜல் ) பார்த்தவுடன் தனது கொள்கையை கிடப்பில் போட்டு விட்டு  அவளை காதலித்து திருமணம் செய்வதையே புது கொள்கையாக கையிலெடுக்கிறார் .
அதில் ஜெயித்தாரா என்பதை கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் கொஞ்சம் சிரிப்புடனும் , நிறைய மொக்கைகளுடனும்  சொல்லி நம்மை வதக்கி எடுக்கிறார் இயக்குனர் ...
 
பொதுவாகவே ராஜேஸ் படங்களில் வரும் கேசுவல் ஹீரோ வேடம் கார்த்திக்கு எளிதாக பொருந்துகிறது . ஆனால்  ராஜேஷின் மற்ற ஹீரோக்களை போலில்லாமல் இவர் சந்தானத்தை விட அதிகமாக பேசி நம்மை அதிகம் சோர்வாக்குகிறார் . சண்டை எதுவும் போடாதது ஆறுதல் ...ஹீரோக்களை  அடா புடா என்று  அளவளாவும் சந்தானம் இதில் கார்த்திக்கை வாங்க சார் , போங்க சார் என்று அழைப்பது அவருக்கு  மட்டுமல்ல நமக்கே புதுசாக தான் இருக்கிறது . ஆனால் ப்ளாஷ் பேக் கில்  கார்த்திக்கை வாடா தம்பி என்று கூப்பிட்டு சமன் செய்கிறார் . வழக்கம் போல இப்படத்திலும் அவர் ஆபத்பாந்தவனாக இருந்தாலும் முந்தைய ராஜேஸ் படங்களின் மேஜிக் இதில் டோட்டலி மிஸ்ஸிங் ...

காஜல் கேரக்டர் சுத்த பேத்தலாக இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . ஒரு மாதத்தில் ஷோபனா ஆகி விடுவேன் என்று சவால் விட்டு அதற்காக எம்.எஸ். பாஸ்கரிடம் பரதம் கற்றுக்கொள்வது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் ரசிக்க முடிகிறது ...பிரபு , கோட்டா ஸ்ரீனிவாச ராவ் , நரேன் , சரண்யா  போன்ற நட்சத்திர பட்டாளத்தில் கோட்டா தனித்து நிற்கிறார் . தமன் இசையில் " உன்னை பார்த்த" பாடல்  மட்டும் ஹம்மிங் செய்ய வைக்கிறது . ( தேங்க்ஸ் டூ இசைஞானி ) ...

வெட்டியாக அல்லது வெட்டியான லட்சியத்துடன் சுற்றும் ஹீரோ , அவன் எது செய்தாலும் ஆதரிக்கும் அம்மா , அவன் உதவிக்கு சந்தானம் , பார்த்தவுடன் காதல் வயப்பட வைக்கும் ஹீரோயின் என்று ராஜேஸ் தனக்கு ஏற்ற படியான டெம்ப்ளேட் கேரக்டர்களுடன் ஆல் இன் ஆலிலும்  களமிறங்கியதில் தப்பில்லை . ஆனால் வீக்கான  கதைக்கும்  தனி ட்ராக் எதுவுமில்லாமல் சந்தானத்தின் கவுண்ட்களை வைத்து சுவாரசியமாக அவர் பின்னும் திரைக்கதை இதில் சரிவர அமையாமல் ஒரு லெவெலுக்கு மேல் ஆள விடுங்க ராஜா என்று சொல்லுமளவுக்கு போனது தான்  பரிதாபம் ...

கார்த்தி நடிப்பதால் சண்டை , வழக்கமாக ராஜேஸ் படங்களில் வரும் ஹீரோ - ஹீரோயின் ஈகோ மோதல் , ஒயின் ஷாப் சீன்கள் ( ஒரு சீனை தவிர ) போன்றவற்றை தவிர்த்தது அறுதல் . படத்தின் நீளம் , பொறுமையை சோதிக்கும் ப்ளாஷ்பேக் , காஜல் சம்பந்தப்பட்ட மொக்கை சீன்கள் இவையெல்லாம் சந்தானம் ஸ்க்ரீனில் வந்தாலே சிரிக்கும் அதிதீவிர ரசிக கண்மணிகளுக்கு பிடிக்க வாய்ப்பு இருந்தும் ஆல் இன் ஆல் அழகுராஜா வை அமெச்சூர் என்றே சொல்ல வைக்கின்றன ...

 ஸ்கோர் கார்ட் : 39
2 November 2013

ஆரம்பம் - ARAMBAM - அவசரம் ...


ஜித் - விஷ்ணுவர்தன் - யுவன் காம்பினேஷனின் ஸ்டைலிஷான மேக்கிங் , அஜித் தின் ஒப்பனிங்  இரண்டையும் மட்டும் அதிகமாக நம்பி வந்திருக்கிறது ஆரம்பம் . தீபாவளிக்கு வந்திருக்கும் படம் ரசிகர்களுக்கு உண்மையிலேயே  தல தீபாவளியா ? !  பார்க்கலாம் ...

நண்பனின் சாவுக்கு காரணமானவர்களின் கதையை முடிப்பதே ஆரம்பம் . இதை அஜித் படத்தில் பேசுவது போல " Make IT Simple " ஆக சொல்லாமல் இடைவேளை வரை சஸ்பென்ஸ் வைத்து பின் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...

சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் , கூலிங் க்ளாஸ் , ஸ்டைலான லுக்
( கோட் இல்லாமலா ? )  , கையில் கன் என அஜித்திற்கு அல்டிமேட் ரோல் . வசனமே தேவையில்லை அவர் வந்தாலே தியேட்டர் அதிர்கிறது .  போலீஸ் தோள்  மேலே  கை வைத்தவுடன் அஜித் முறைத்து விட்டு கூலிங் க்ளாஸ்  போடும் இடம் க்ளாஷான மாஸ் . அஜித் ரிஸ்க் எடுத்து சண்டை செய்திருந்தும் உடல் சுற்றளவு பிரபுவை நியாகப்படுத்துகிறது . அதிலும் ராணா , அதுல் , ஆர்யா ,  கிஷோர் என  வருபவர்கள் எல்லாம் ஸ்லிம் அன்ட் பிட்டாக இருக்க என்ன தல இது ? ...


ஆர்யா விற்கு தனி லவ் ட்ராக் , நிறைய சீன்கள் எல்லாம் இருந்தும் தல இருப்பதால் தனித்துவம் இல்லாமல் இருக்கிறார் . அஜித் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்கிற குழப்பத்தில் இவர் செய்யும் சேட்டைகள் சூப்பர் . ப்ளாஷ்பேக் லவ் காட்சிகளில் அங்கிள் பன் போல வந்து அட போட வைக்கிறார் . லாஜிக் இடித்தாலும் ஆர்யாவின் ஹாக்கிங் மேட்டர் ரசிக்க வைக்கிறது ...

நயன் , டாப்சீ இருவரில் முன்னவர் தாரளாமாக நடித்து தாகம் வர  வைக்கிறார்.  பப்ளி ரோலில் டாப்சீ , மெச்சூர்ட் ரோலில் நயன் இருவருமே கவர்கிறார்கள் . அஜித்தின் நண்பனாக ரானா , போலீஸ் ஆபீசர்களாக அதுல் குல்கர்னி , கிஷோர் , கடைசியில் சாகப்போகும் போது  கூட டே ஆபீசர் என்று விளிக்கும் வில்லன் என பொருத்தமான நட்சத்திரங்கள் ...

 "  அடடடா " , " என் பியூஸ் "  பாடல்கள் யுவன் அக்மார்க் . அஜித்  வரும் போது
ஒலிக்கும் பி.ஜி பெர்பெக்ட் . ஆனாலும் யுவன் - விஷ்ணு கூட்டணியின் பழைய மேஜிக் மிஸ்ஸிங் . ஒளிப்பதிவு , படத்தொகுப்பு , ஆக்ஸன் எல்லாமே படத்திற்கு பலம் ...


இடைவேளை வரை சஸ்பென்சுடன் நகரும் திரைக்கதை , ஆய் , ஊய் வசனங்கள் இல்லாமல் அஜித்தின் மாஸை க்ளாஸாக காட்டும் சீன்கள் , ஆர்யா , நயன் என நட்சத்திர பட்டாளங்கள் , ஹாக்கிங்கை ( ஹாலிவுட்டில் இருந்து சுட்டிருந்தாலும் ) பயன்படுத்திய விதம் , சில நேரமே வந்தாலும் அஜித் - ரானா சம்பந்தப்பட்ட காட்சிகள் என எல்லாமே அஜித் மூலம் படத்திற்கு கிடைத்த ஆரம்பத்தை தக்க வைக்கின்றன ...

அஜித்தை ஸ்டைலாக நடக்க விடுவது , கூலிங் க்ளாஸ் போட வைப்பது , பைக் ஓட்ட விடுவது இதெற்கெல்லாம் ஆரம்பத்துடனாவது முடிவு கிடைக்குமா ? கொஞ்சம் போரடிக்குது பாஸ் . தீபாவளி ரிலீஸ் என்பதாலோ என்னவோ படம் நெடுக சுடுகிறார்கள் . ஆனால் நமக்கோ  ஜேம்ஸ் பாண்ட்  வகையறா படங்களை விட ஜாக்கிசான் படங்கள் தான் பிடிக்கிறது . ராணுவ வீர்களின் தற்காப்பு சாதனங்களில் கூட நடக்கும் ஊழலை வைத்து பின்னப்பட்ட அழகான கதை , வழக்கமான அரசியல் வாதி , ஊழலுக்கு  உடந்தையான மேலதிகாரி , அதை கண்டுபிடிக்கும் நல்ல போலீஸ் போன்றவற்றால் பின்னுக்கு தள்ளப்படுகிறது . பில்லா  , மங்காத்தா போல ஆரம்பம் அஜித்திற்கு அல்டிமேட் படமாகும் வாய்ப்பிருந்தும் அதை ஏதோ அவசரத்தில் நழுவ விட்டிருக்கிறார்கள் ...

ஸ்கோர் கார்ட் : 42


Related Posts Plugin for WordPress, Blogger...