29 September 2019

அவன் - அவள் - நிலா (6) ...


லகின் எல்லா ஜீவராசிகளும் ஒரு செல் அமீபாவிலிருந்து தோன்றியவை தான் . வெவ்வேறு வடிவங்களில் , பரிமாணங்களில் எல்லாவுமாக அவை வியாபித்திருக்கின்றன . ஆனால் ஒவ்வொரு உயிர்க்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்து கொண்டு தானிருக்கிறது . தனக்கான சரியான துணையை ஓர் உயிர் அடையுமேயானால் அது பாக்கியம் . காதலித்தவர்கள் , கல்யாணம் செய்து கொண்டவர்கள் ஏன் கூடவே சாகும் வரை இருப்பவர்கள் கூட அந்த உயிர்த்துணையாக இல்லாமலேயே இருக்கலாம் . ஏதோ ஒரு சவுகரியத்துக்காக அல்லது விதியின் வழியில் ஒரு பயணம் தொடர்கிறது . சுஜாதா சொன்னது போல வாழ்க்கையே ஒரு " PROGRESSIVE COMPROMISE "
தான் போல . கார்த்திக்கிற்கு சுந்தரி அது போல ஒரு சோல் மேட்டா என தெரியவில்லை . ஆனால் எவ்வளவோ சண்டைகளுக்கு பிறகும் இருவரும் சேர்ந்திருக்கிறார்கள் . அவளை பிரிந்து நடைப்பிணமாக அவன் அலைந்திருக்கிறான் . பகலிலேயே மதுக்கடைகளில் மல்லாந்து படுத்திருந்திருக்கிறான் . வாந்தியெடுத்து அது  மேலேயே படுத்திருந்தவனை அவன் அப்பா நள்ளிரவில் தூக்கிக் கொண்டு போய் குளிப்பாட்டிய நாட்களும் உண்டு ...

இளமைக் காலத்திலிருந்த அதே  பரவசம் இன்றும் அவள் மேல் அவனுக்கு குறையவில்லை ஆனால் காலம் கற்றுக்கொடுத்த பாடத்தால் மெச்சூரிட்டி கூடியிருக்கிறது . குறிப்பாக பெண்களின் உடல் கொடுத்திருக்கும் அனுபவமும்  காதல் போலவே மகத்தானது . கைகளை மூடிக்கொண்டிருப்பவன் உள்ளே என்ன என்று தேடும் ஆர்வத்தை வயது கொடுக்கிறது . ஒரு முறை திறந்து பார்த்து என்ன என்று தெரிந்தவுடன் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போல மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது . ஆனால் அதுவும் வயிற்றுக்கு உணவிடுவதை போல தான்.
மனதை கட்டுப்படுத்த  முடிந்தவனுக்கு  பசிக்கும் போதெல்லாம் உணவு தேவைப்படுவதில்லை . அவன் ஒரு வகையில் அப்படி வாழ்ந்திருக்கிறான் . எங்கோ மலை குகைளுக்குள் இருந்து கொண்டு சந்நியாசம் செய்வது எளிது ஆனால் எல்லா வித சந்தர்ப்பங்களுக்கும் நடுவில் யோக்கியமாக இருப்பது கடினம் . இங்கே பலருக்கு சந்தர்ப்பம் கிடைக்காததாலேயோ  அல்லது தண்டனையும் , அவமானமும்  கிடையாது என்கிற  நிலைமை இல்லாததாலேயோ  தான் படிகளை தாண்டாமல் இருக்க முடிகிறது  ...

இதோ இந்த நிலா சாட்சியாக அவனுக்கும் அவளுக்கும் எத்தனையோ முறை ஊடல்கள் , கூடல்கள் , கொஞ்சல்கள் , கெஞ்சல்கள் , ஆத்திரங்கள் , அரவணைப்புகள் எல்லாமே நிகழ்ந்திருக்கின்றன  .
" இந்த கதை எழுதுறவங்க , சினிமாக்காரங்க எல்லோருக்குமே ஒரு வசதில்ல , தனியா எத்தனை நேரம் வேணாலும் எதையாவது நெனைச்சுக்கிட்டே நிக்க முடியும் " சுந்தரியின்  குரல் கேட்டு திரும்பினான் . யாருடைய  பிரிவால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று பல வருடங்களை தொலைத்தானோ  அதே சுந்தரி நிற்கிறாள் பாவாடை சட்டடைக்குப் பதில் சுடிதாருடன் . இன்றும் சத்தம்  எழுப்பாமல் பூனை போல அவளால் மட்டுமே  வர முடிகிறது .
" பிடிச்சவங்க பிரிஞ்சாலும் அவங்களால தனியா சமாளிக்க முடியறது நல்லது தானே " . அவன்  சொன்ன பதில் அவளுக்கு லேசாக ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டுமென்பது  அவள் கண்கள் குனிந்த போதே தெரிந்தது . " அந்த பிரியக்கூடிய சூழ்நிலைக்கு  அவங்களும் ஒரு காரணம் தானே " அவளின் வழக்கமான சுபாவத்தை மாற்ற முடியாமல் உடனே பதில் சொன்னாள்  . உண்மை தான் இருவரின் பிரிவுக்கு ஒருவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது . பிரிவிற்கு பிறகு பெண்கள் தண்ணியடிப்பதில்லை , தாடி வளர்ப்பதில்லை என்பதாலேயே பழியை அவர்கள் மேல் போட்டு விட்டு எஸ்கேப்  ஆகி விடுகிறார்கள் ஆண்கள் . ஆனால் நிச்சயம் அவன் அவளிடம் இதை ஒரு குறையாக சொல்லவில்லை , வருத்தமாக தான் சொன்னான் ...

இதே முன்னொரு காலமாக இருந்திருந்தால்  அவனும் பதில்  பேச அவளும் பேச பெரிய களேபரம் நடந்திருக்கும் . காலம் எல்லா உணர்ச்சிகளையும் மாற்றுகிறது , ஆசுவாசப்படுத்துகிறது . மற்றவர் சொல்வதை அப்படியே கேட்க வைக்கிறது , நம் விருப்பப்படி அவர்களை பேச வைப்பதில்லை  அல்லது அவர்கள்  பேசும் வரை சண்டை பிடிப்பதில்லை .
" நீ சொல்றது உண்மை தான் சுந்தரி " உடனடியாக அவள் சொல்வதை ஒப்புக்கொண்டவனை ஆச்சரியமாக பார்த்தாள் சுந்தரி .
" நான் ஒன்னும் தப்பா  சொல்லல " எங்கே கோபப்பட்டு விடுவானோ என்கிற பயம் அவளுக்குள் லேசாக  துளிர்விட்டது .
" இல்ல உண்மையா தான் சொல்றேன் " . அவர்களுக்குள் இந்த  உரையாடல்
அமைதியாக சுமூகமாக நடந்தது . காதல் எப்போதும்  கழுத்தில் கிடக்கும் தங்கச்சங்கிலி போலத்தான் அது தொலைந்து போகும் வரையோ அல்லது
சேட்டுக்கடையில் அடமானம் வைக்கப்படும் வரையோ  அதன் மதிப்பு யாருக்கும் தெரிவதே இல்லை . அவனுக்கும் கூட அப்படி தான் இருந்தது.
இதோ இங்கே அருகில் அமர்ந்திருக்கும் அந்த தேவதையை எத்தனை முறை கோபத்தால் திட்டியிருக்கிறான் , அழ வைத்திருக்கிறான் , அழுவதன் அர்த்தத்தை  கூட புரிந்து கொள்ளாமல்  எத்தனை முறை எரிச்சல் பட்டிருக்கிறான் ?!!

அவனுக்கு அவளிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் போலிருந்தது , அவள் மடியில் படுத்துக்கொண்டு அழ வேண்டும் போலிருந்தது . பலதடவை அவளை அழ வைத்திருந்தாலும் அவள் முன்னாள் ஒரு  முறை கூட அவன் அழுததில்லை . எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் . " என்ன உங்க மாப்ளைய ஆளே  காணோம்?"
சிவாவை பற்றி கேட்டு அவன் கவனத்தை அவள் திசை திருப்பப் பார்த்தாள் .
" அவன் அப்பவே மட்டை ஆயிட்டான்  " . " நீங்க அடிக்கலையா ?! " .
" இல்ல , ஆனா ரெண்டு நாள் தங்க சொல்றான் " . அடுத்த இரண்டு  நாட்களில்
எப்படியிருந்தாலும் தண்ணியடிக்கப்போகிறேன் என்பதை சூசகமாக சொன்னான் . " அதானே அவளோ சீக்கிரம் உங்கள  விட்டுருவாரா ?" .
இன்னும் இரண்டு நாட்கள் அவன் இருக்கப்போவது அவளுக்கு ஒரு விதமான புத்துணர்ச்சியை  கொடுத்தது . " நானும் நாலு நாள் அக்கா வீட்ல தான் இருப்பேன் " . அது ஏற்கனவே முடிவு செய்தது தான் . அவன்  சொன்னவுடனேயே அவளும் சொல்லிவிட்டாள்  ...

" என்ன மன்னிச்சுரு சுந்தரி " , அவன் சொன்னவுடன் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . எதை அவன் ஆரம்பிக்கக்  கூடாது என அவள் நினைத்தாளோ அதை நோக்கியே அந்த பேச்சு திரும்பியது .
" உங்க மேல தப்பில்லை என்னால தான் வெயிட் பண்ண முடில "
" எந்த பெண்ணால் சுந்தரி இத்தனை வருஷம் வெயிட் பண்ண முடியும் " .
நிச்சயமாக உண்மை தான் . காதல் இரண்டு தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது . கல்யாணம் இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்டது . கல்யாணத்திற்கு பிறகு அவள் மனைவியாக மட்டுமல்ல மருமகளாக , அண்ணியாக , நாத்தனாராக , பல வகையான உறவுகளாக ஒரு வீட்டுக்குள் நுழைகிறாள் . அது அவ்வளவு எளிதில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடந்து  விடுவதில்லை . பெற்றவர்கள் , உறவினர்கள் என எல்லோரையும் துறந்து விட்டு இருவர் ஓடிப்போகும் போதே அவர்களின் சுயநலம் தான்  மேலோங்கி நிற்கிறது . பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களில் கூட விரிசல்கள் வரலாம் ஆனால் அவை மற்றவர்களின் சாபத்தின் மேல் தொடங்குவதில்லை ...


  • " நான் உன் அப்பாவல்லாம் அப்படி பேசியிருக்கக்கூடாது " . அவன் சுந்தரியிடம் மன்னிப்பு கேட்பது போல சொன்னான் . அவர்கள் பேசிக்கொள்ளும்போதெல்லாம் அவன் அவள் அப்பாவை , மாமாவை நிறைய தடவை கிண்டலடித்திருக்கிறான் . சுந்தரியின் அப்பா சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் . அப்பாவை இழந்து தவித்த அவருக்கு ஆரம்ப காலங்களில் உதவியது அவரின் தாய்மாமா . பிறகு தாய்மாமாவின் மகளையே அவர் மணந்து கொண்டார் . அவருக்கு சரஸ்வதியின் ஆசி நிறைய இருந்தது ஆனால் அதனை லட்சுமியாக மாற்றியதென்னமோ தாய்மாமாவின் தொடர்புகள் தான் . பெரிய பங்களாவில் சுந்தரியின் அப்பா அம்மாவுக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டன . சுந்தரி தாத்தாவின்  பங்களாவில் கூட்டுக் குடும்பத்துடனேயே வளர்ந்தாள் . அவள் என்றும் தனிமையை சந்தித்ததே இல்லை . சிறு வயதில் சில ரூம்களுக்கோ , மாட்டுத்தொழுவத்துக்கோ போகும் போது கூட அவள் பயத்தினால் யாருடைய துணையோடு தான் போவாள் . அப்படி அன்யோன்யமாக வாழ்ந்தும் அவன் அவர்களை கிண்டல் செய்யும் போது அவனது குணம் அறிந்து சண்டை வேண்டாமென தவிர்த்திருக்கிறாள் . ஆனால் அவள் ஏதாவது அவன் வீட்டை பற்றி சொல்லிவிட்டால் அவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும் . அவள் மன்னிப்பு கேட்கும் வரை  விடமாட்டான்...


அவனது அப்பா பயங்கர கோபக்காரர் . சட்டென்று யார் என்னவென்று பார்க்காமல் எரிந்து விழக்கூடியவர் . ஒரு முறை அவனுக்கு கணக்கு சொல்லிக்கொடுப்பதற்காக  அவன் வீட்டில் தங்கியிருந்த அத்தை பையன்  ரமேஷ் அண்ணாவை ஏதோ ஒரு  சின்ன விஷயத்துக்காக அதிகமாக திட்டி விட்டார் . அவன் அப்பாவிடம் சண்டை போட்டான் . " அவர் எனக்காக தான்பா வந்திருக்காரு , எதுக்கு திட்டுற " . தன்  மகன் தன்னையே எதிர்த்து பேசுவது அவர் கோபத்தை அதிகப்படுத்தியது .
" உனக்கு அவ்ளோ ரோஷம் வந்தா நீயே ஒழுங்கா படிடா , அவனுக்கு சிபாரிசோ ?" . "அதெல்லாம் இல்ல திட்டாத அவ்ளோ தான் " .
" நீ என்னடா எனக்கு புத்திமதி சொல்றது , அவனை கிளம்ப சொல்லு , உனக்கும் வேணும்னா நீயும் கூடவே  போ " . அவர்கள் சண்டைக்குள்  உள்ளே நுழைய வேண்டாமென வராந்தாவில்  நின்று கொண்டிருந்த ரமேஷுக்கு அது நன்றாகவே கேட்டிருக்க வேண்டும் . காம்பவுண்ட் கேட் திறக்கும் சத்தம் கேட்டு அவன் வேகமாக ஓடினான் ...

" நீ ஒன்னும் மனசுல வச்சுக்காத விடுண்ணா " , ஒரு கோல்ட் ஃப்ளாக்கை ரமேஷிடம் நீட்டிக்கொண்டே அவனும் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டான் .
" காசில்லாதவன்னா எல்லோருக்கும் இளக்காரமா போச்சுல்ல " லேசான விசும்பலுடன் அவர் பேச்சு வந்தது . அவனுக்கு அவரென்னடா புதுக்கோணத்திலிருந்து பேசுகிறார் என்பது போல பட்டது . அவன் அப்பா கோபம் வந்தால் கன்னாபின்னாவென்று திட்டக்கூடியவர் ஆனால் என்றுமே காசு பணம் பார்த்தெல்லாம் அவர் பழகியதில்லை . முதலாளி பையனிடமே அவர் கோபப்பட்டு முதலாளியே அவரை சமாதானப்படுத்தியதை அவனே கண் கூடாக பார்த்திருக்கிறான் .
" அவர் கேரக்டர் தான் தெரியும்ல சட்னு கோபப்படுவார் அப்புறம் மறந்துடுவார்" .  " ஆமாண்டா அந்த ஆளுக்கென்ன திட்டிட்டு மறந்துடுவாரு ,
வாங்கினவனுக்கு தானே வலி தெரியும் , கூப்புட்டு வச்சு  அவமானப்படுத்தறது தான அவன் வேலை " . ரமேஷ் சொன்னவுடன் அவனுக்கே சற்றென்று  கோபம் வந்தது .    " அண்ணா தேவையில்லாம பேசாத " .
ரமேஷ் தம்மை ஒரு இழுப்பு இழுத்துக்கொண்டே " அப்பன சொன்னா  புள்ளைக்கும் பொத்துக்கிட்டு வந்துடுமே ?" . அவனுக்கு வந்த கோபத்துக்கு ஓங்கி ஒரு குத்து விட்டிருப்பான். அவன் அடியையெல்லாம் தாங்க முடியாத ஒல்லி தேகம் அவருடையது . வந்த கோபத்துக்கு கம்பில் ஓங்கி குத்தினான் , அடி  தாங்காமல் தட்டி அப்படியே சரிந்தது . ரமேஷின் வாயிலிருந்த தம் பாதியிலேயே கீழே விழுந்தது . வீட்டுக்கு வந்தவுடன் அவன் அப்பா தங்க சொல்லியும் கேளாமல் ரமேஷ் உடனே கிளம்பி விட்டான் . அவன் அவரை தடுக்கவில்லை ...

கல்லூரி படிப்பை முடித்து விட்டு நண்பர்களுடன் வெட்டியாக டாப் அடித்துக்கொண்டிருந்த காலம் அது . சினிமாவில் சேர்வதற்கு  முன் லோக்கல் சேனலுக்காக ஏதாவது பண்ணலாமென ஒருவன் ஐடியா கொடுக்க உடனே அடுத்தவன் சரவணன் அண்ணனை பார்க்கலாம் என்று சொன்னான் . சரவணன் லோக்கலில் வீடியோ கேமரா கடை வைத்திருப்பவர் . திருமணம் , சடங்குகள் தவிர லோக்கல் கம்பெனிகளுக்கு விளம்பரம் செய்து தருபவர் . அவர்களின்  காலேஜ்  சீனியர் . அவரும் அடுத்த மாதம் வந்து பாருங்கள் என்று நம்பிக்கை தரவே அவனுக்கு வேலையே கிடைத்தது போல ஒரு சந்தோசம் . அவனுக்கு உடனே சுந்தரியை பார்க்க வேண்டும் போல இருந்தது . வழக்கமான ஒரு லேண்ட்லைனில் அவளை தொடர்பு கொள்ளவே அவளும் வர சொன்னாள் . சத்திரம் பேருந்து நிலையத்துக்கு சற்று தள்ளிய ரெஸ்ட்ராரெண்டில் காஃபி குடித்துவிட்டு அமர்ந்திருந்தவனுக்கு அவள் வராமல் போரடித்தது . அதுக்கு மேல் பொறுக்க முடியாமல் பெட்டிக்கடைக்கு போய்  தம்மை பற்றவைத்தான் . தம்மை ஊதிக்கொண்டிருக்கும் போதே ஹீரோ ஹோண்டாவில்  கூலிங் க்ளாஸ் போட்ட ஒரு பையனுடன் சுந்தரி வந்துகொண்டிருந்தாள் . அவனுக்கு காதுகளிலும் சேர்த்து புகை வர ஆரம்பித்தது ...

தொடரும் ...

அவன் - அவள் - நிலா (1) ...

அவன் - அவள் - நிலா (2) ...

அவன் - அவள் - நிலா ( 3 ) ...

அவன் - அவள் - நிலா ( 4 ) ...

அவன் - அவள் - நிலா (5) ...




22 September 2019

அவன் - அவள் - நிலா (5) ...


போதையில் இருப்பவர்களுக்கு பொய் சொல்ல வராது இல்லை மனதிற்குள் புதைந்து கிடக்கும்  உள்ளக்கிடக்கைகளை அவர்களால் அமுக்கி வைக்க முடியாது . அதனை கொட்டிக்கொண்டே இருப்பார்கள் , அதில் நல்லதும் வரும், நாற்றமும் அடிக்கும் . சிவா அது போன்ற ஒரு மனநிலையில் பேசிக் கொண்டே இருந்தான் . "உன்ன நினைச்சா பெருமையா இருக்கு மச்சி , சாம்பு மாமா மாதிரி லவ் பண்ண பொண்ணு கிடைக்கலேன்னு ஏதோ ஒரு அருக்காணியை கட்டாம வைராக்கியமா உன் கோல் ல குறியா இருக்க " .
சாம்பு மாமாவுக்கு அவனை போல சினிமா ஆசை இல்லாமல் இருந்திருக்கலாம் . அதனால் போட்டிக்காக விரக்தியில்  ஏதோ ஒன்றை செய்து விட்டு மீதி வாழ்க்கை முழுவதும் அதை நொந்து கொண்டிருக்கிறார் . சிவா சொன்னது போல அவனால் அவ்வளவு எளிதாகவெல்லாம்  சுந்தரியின் பிரிவை தாண்டி வரமுடியவில்லை . சிவா தஞ்சையிலும் அவன் மதுரையிலும் இருந்ததால் அவள் பிரிவால் அவனுக்கு ஏற்பட்ட பாதிப்பை சிவா முழுவதுமாக உணர்ந்திருக்க வாய்ப்பில்லை ...

" என் கூட நீ சரக்கடிக்காதது மட்டும் தான் ஒரே குறை " , சிவா சொன்னான். வாழ்க்கையின் மிகப்பெரிய குறைகளையெல்லாம் இது போன்ற சின்ன சின்ன குறைகள் மறைத்துக்கொண்டே இருக்கின்றன அல்லது பெரிய குறைகளை நினைத்து நாம் தலை சுற்றி மலைப்பதற்குள் சிறிய குறைகளுக்குள்  விரும்பியே சிக்கிக்கொள்கிறோம் . சிவாவுக்கு திருமணம் ஆகாதது  தவிரவும்  ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் பிசினஸில் இருக்கிறது . ஆனால் நிச்சயம் அதையெல்லாம்  உற்ற நண்பனுடன்  இருக்கும் போது மறக்க முடிகிறது . அதனால் தான் அவனுடன் அமர்ந்து சரக்கடிக்காதது கூட சிவாவுக்கு ஒரு குறையாகப்படுகிறது . " மச்சி இன்னும் கொஞ்சம் நாள் நீ இருந்துட்டு போ " சிவா கேட்கும் போதே சென்னையில் அடுத்து என்னென்ன வேலை இருக்கிறது என்று அவன் யோசிக்க தொடங்கி விட்டான் . உடனடியாக போகும் அளவுக்கு பெரிய வேலையில்லை தான் ஆனாலும் சினிமாவில் இருப்பவர்கள் தூங்கும் போது கூட காலை ஆட்டிக்கொண்டே இருக்கவேண்டும் இல்லையென்றால் பிணமென்று நினைத்து தூக்கிப் போட்டுவிடுவார்கள் என்று சண்முகம் அண்ணன் சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது ...

'" மச்சி இருந்துட்டு போ ரொம்பவெல்லாம் யோசிக்காத " அவனை யோசிக்க விட்டால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவான் என்பதால் சிவா முடிவாகாவே சொல்லி விட்டான் . சென்னையில் ரூமை அடைத்துக்கொண்டு என்ன தான் யோசித்தாலும் அவனால் ரெண்டு சீன்களுக்கு மேல் எழுத முடிவதில்லை . சிவாவுக்கு  தோட்டம் , தோப்போடு கூடிய அமைதியான வீடு  ,  தேவைப்பட்டால் ஏதாவது குறிப்புகள் எடுத்துக்கொள்ள வசதியாக அருகாமையிலேயே நூலகம் . இதையும் சேர்த்தே யோசித்தவன் " சரி மாப்பிள்ளை நான் இருக்கேன் , ஆனா சண்டே கெளம்பிடுவேன் " என்று சொன்னான் .
அதற்கு நடுவில் இன்னும் மூன்று நாட்கள் இருந்தது .
" அப்போ நம்ம தோப்புல உட்கார்ந்து இளநி மிக்சிங்கோட அடிக்கிறோம் " . இப்பொழுதே சிவா பிளான் செய்ய ஆரம்பித்து விட்டான் .
"  இரு மச்சி வெள்ளிக்கிழமை வேலைக்கு வேற ஏற்பாடு பண்ணிட்டு வரேன் ". சிவா  செல்போனை எடுத்து  நம்பர் போட்டுக்கொண்டே நகர ஆரம்பித்தான் ...

அவன் பிறந்து , வளர்ந்தது எல்லாம் மதுரையாக இருந்தாலும் அவனுடைய அம்மா சைடில் எல்லாம் தஞ்சாவூரை சுற்றி தான் . பள்ளி கோடை விடுமுறை நாட்களில் ஒவ்வொரு வருடமும் சாம்பு மாமா வீட்டுக்கு வருவது அவன் வழக்கம் . மாமியின் பேச்சுக்கு பயந்தே சாம்பு மாமா பணத்தை கொடுத்து ஜீவா அண்ணனுடன் அவனை சினிமாவுக்கு அனுப்பி விடுவார் . அவனுக்கு கமல் பிடிக்கும் , அவருக்கு ரஜினி பிடிக்கும் அதனால் சில வேளைகளில் தொடர்ந்து இரண்டு சினிமா பார்த்த அனுபவமும் அவனுக்கு உண்டு . ஜீவா அண்ணன் வயதில் மிக மூத்தவராக இருந்தாலும் அவனை நண்பன் போல பாவித்து பழகுபவர் . வயதுக்கு மீறி அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் புன்னகையுடன் பதில் சொல்லக்கூடியவர் . ஒரு முறை அவன்  சொன்னதற்காக புரோட்டா கடைக்கு கூட்டிப்போனார் . ஏதோ ரெண்டு மூணு சாப்பிடுவான் மூணு ரூவா ஆகுமென நினைத்தார் போலும் , அவனை சாப்பிட சொல்லிவிட்டு பெட்டிக்கடைக்கு வெத்தலை பாக்கு வாங்க போய்விட்டார்...

பெட்டிக்கடைக்காரனுடன் கொஞ்ச  நேரம் பேசி விட்டு திரும்ப வந்தவருக்கு  பதினெட்டு புரோட்டா , சிக்கன் குழம்பு , நாலு ஆம்லெட் என ஐம்பது ரூபாவுக்கு மேல் பில்லை பார்த்தவுடன் அவருக்கு தலையே சுற்றிவிட்டது. ஏதோ தெரிந்த கடைக்காரன் என்பதால் வந்து தருகிறேன் என்று சொன்னவுடன் விட்டான். இதே டவுன் கடையாக இருந்திருந்தால் களேபரம் தான் . நடந்து போகும் போது " நீ எல்லாம்  என் சாதில பொறந்திருக்கணும்டா " .
அவர் சிரித்துக்கொண்டே இதை மட்டும் தான் சொன்னார் . அவர் சொன்னவுடன் இந்த சாதி இத இத இவ்வளவு தான் சாப்பிடணும்னு ஏதாவது கணக்கு இருக்கா என அவன் யோசிக்க ஆரம்பித்தான் . ஏற்கனவே அவர் பில்லுக்காக பட்ட சிரமத்தை உணர்ந்து எதுவும் கேள்வி கேட்காமல் அவன் பேசாமலேயே நடக்கலானான் . இப்படி மதுரையை போலவே டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்ல அந்த மக்களோடும் அவனுக்குள்ள தொடர்பு அலாதியானது . அதனால் கூடவும் தான் சிவா சொன்னவுடன் அவனால் மறுக்க முடியவில்லை . இங்கேயே சில நாட்கள் தங்குவது என முடிவெடுத்தவுடன் அவனுக்கு பையனை பார்த்துவிட்டு வருகிறேனென்று சொல்லிவிட்டு போன சுந்தரியின் நியாபகம் வந்தது .

அன்று மாமா பேசிவிட்டு போன பிறகு அவள் நடந்து கொண்ட  விதம் அவளுக்கு மாமா வந்த பேசியது எதுவும் தெரியாதது போலவே இருந்தது . அவள்  உடல் அக்காவின் அருகே இருந்தாலும்மனம் அவனை பார்க்க போக முடியவில்லையே என ஏங்கியது . அந்த ஏக்கம் அவள் முகத்தை பார்த்தவுடன் அவனுக்கு புரிந்தது . அவள் நாளை கட்டு சாதம் கொடுத்து பெண் வீட்டாருடன் கிளம்புவாள் ஆனால் அவன் இன்றே கிளம்பியாக  வேண்டும் அதற்குள் அவளுடன் எப்படியாவது பேசியே ஆக வேண்டும் என தீர்மானமாக இருந்தான் . திருவானைக்காவலில் தான் அவள் வீடு , படிக்கும் பள்ளிக்கூடம் எல்லாமே இருக்கிறது . அவன் கிளம்புவதற்குள் அவளிடம் பேசி அடுத்து எங்கே சந்திப்பது என்பதையெல்லாம் முடிவு செய்து விட  வேண்டும் . அவளிடம் மாமா பற்றியும் அவர் அவளிடம் ஏதாவது சொன்னாரா என்பது பற்றியும் முதலில் விசாரிக்க வேண்டும் ...

பொதுவாக பணம் படைத்தவர்கள் எதிராளி சாமானியனாக இருந்தால் தங்கள்  வீட்டுப் பெண்களிடம் பேசுவதை விடுத்து முதலில் சம்பந்தப்பட்ட பையனிடம் பேசுகிறார்கள் , மசியவில்லையென்றால் அவன் வீட்டாரிடம் பேசுகிறார்கள் . இதிலேயே  நிறைய காதல்கள் முளையிலேயே பொசுங்கி விடுகின்றன . வந்தவன் தானாகவே விலகுவது போலாகிவிட்டால் அந்த பெண்ணிடம் அவனது இமேஜ் முழுவதுமாக உடைந்துவிடும் . அடுத்து தன் வீட்டார் சொல்வதை அவள் முழுமையாக நம்பிவிடுவாள் என்பதே அவர்கள் போடும் மனக்கணக்கு . யார் என்ன கணக்கு போட்டாலும் காலம் ஒரு கணக்கு போடுகிறது , அதிலிருந்து யாரும் தப்ப முடிவதில்லை ...

அங்கே ஆளாளுக்கு நலுங்கில் தங்கள் திறமையை காட்டிக்கொண்டிருந்தார்கள் .  ஆடல் பாடல்களில் பெண் வீட்டாரின் கையே ஓங்கியிருந்தது . அவனை பார்த்தவுடன் அவன் அம்மா சத்தமாக கார்த்தி இங்க வா என்று கூப்பிட்டாள் . அம்மா பக்கத்தில் உட்கார்ந்தால் சுந்தரிக்கு நேரெதிர் அமர்ந்து அப்படியே அவளை ரசிக்கலாம் . அடுத்த திட்டத்தை கண்களாலேயே பேசிக்கொள்ளலாம் . ஆனால் கல்யாண வீடுகளில் அவன் அம்மா படுத்தல் அதிகமாகவே  இருக்கும் . அவன் என்றோ பாடிய " கல்யாண சமையல் சாதம் " பாடலை பாட சொல்லுவாள் . அதெல்லாம் பழசும்மா என்று சமாளித்தால்  உடனே :" நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் " பாட்டு ரஜினி படத்துல வருமே அதப்பாடுன்னு விடமாட்டாள் . அம்மாவை பொறுத்தவரை அவன் குழந்தை தான் . அதுவும் அவனை ஆட சொல்லி  பாட சொல்லி அவன் திறமையை எல்லா சொந்தக்கார்களுக்கும் தெரியவைத்ததில் அவளது பங்கு தான் அதிகம் . காக்கைக்கே தன்  குஞ்சு பொன் குஞ்சு எனும் போது கர்நாடக சங்கீதம் தெரிந்த அவனது அம்மா குயிலுக்கு கேட்வா வேண்டும் ?!.

கல்லூரிக்கு போகும் அவனை இன்னும் சிறுவனாக பாவித்து அது பண்ணு, இது பண்ணு என்று அவன் அம்மா சொல்லும் போது அவனுக்கு சங்கடமாகவே இருக்கும் , அதுவும் இப்போது சுந்தரி வேறு இருக்கிறாள் . அவளுக்காக அம்மாவின் அன்பு குடைச்சல்களை பொறுத்துக்கொள்ளலாமா என்று அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே இதோ அவன் அம்மாவே சத்தமாக மண்டபமே அதிரும் படி கூப்பிட்டு விட்டாள் . அவன் அம்மா அருகே அமர்ந்தான் . கண்ணைக் காட்டி சுந்தரி பழிப்பு செய்வது போலவே அவனுக்கு இருந்தது . சுற்றிலும் பார்த்தான் கொஞ்சம் மாமாக்களுடன் நிறைய மாமிகள் இருந்த அந்த கூட்டத்துக்குள் அவளது மாமா இல்லாதது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது . " என் புள்ள நன்னா பாடுவான் " அவன் அம்மா அவனுக்கு எம்எல்எம் செய்ய ஆரம்பித்து விட்டாள் . அவன் குறைந்தது ரெண்டு பாட்டாவது பாடி கைத்தட்டல் வாங்காமல் ஓய மாட்டாள் என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது ...

" ஏண்டாம்பி அம்மா தான் சொல்றாளோலியோ நல்ல பாட்டா பாடேண்டா" அவனது அம்மாவுக்கு மட்டும் அப்பாயிண்ட் செய்யாமலேயே சம்பளம் இல்லாமல் பி.ஆர்.ஓ எப்படியோ கிடைத்து விடுகிறார்கள் .
" நன்னா சொல்லுங்கோ மாமா  ரொம்ப தான் பிகு பண்ணிப்பான் " .
அவன் அம்மா பாட்டை அப்போதே ஆரம்பித்து விட்டாள் . எல்லோரும் அவனையே பார்ப்பது போலிருந்தது . அப்படி என்னத்த பாடிரப்போறான் என்பது போலவும் , என்னத்த வேணா பாடட்டும் பொழுது போனா சரி என்பது போலவும் அவர்களது பார்வை இருந்தது . சுந்தரி அவனை பாட சொல்லி கண்களாலேயே ஜாடை  காட்டிக்கொண்டிருந்தாள் . அவன் தொண்டையை செருமிக்கொண்டான் . ஸ்கூல் படிக்கும் போது நன்றாக தான் பாடிக்கொண்டிருந்தான் . அதன் பிறகு வந்த சிகரெட் பழக்கத்தால் தொண்டை அவன் சொல்வதை கேட்பதில்லை . ரொம்ப நேரம் தம் அடிக்காததாலோ என்னமோ அப்பொழுது கொஞ்சம் தேவலாம் போல அவனுக்கு பட்டது ...

" சுந்தரி நீயும் சுந்தரன் ஞ்ஞானும் " என்று கமல்-ஜானகி பாடிய டூயட் பாட்டை அவன் சிங்கிளாக பாட ஆரம்பித்தான் . சிகரெட் உபயத்தால் கொஞ்சம் தொண்டை கனமாக மாறி கமல் குரலுக்கு அவனுக்கு கைகொடுத்தது . அவன் பாட கேட்கும் போதே சுந்தரி வெட்கத்தை வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாமல் அங்கிருந்த ஜமக்காளத்தை சுரண்டிக்கொண்டிருந்தாள் .
ஒரு வழியாக அவன் பாடி முடித்து விட்டு அங்கே அமர்ந்திருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தான் . சில வினாடிகள் அமைதிக்கு பிறகு எல்லோரும் கை தட்ட ஆரம்பித்தார்கள் . சுந்தரி இன்னும் குழந்தை போல மாறி வேகமாக தட்டிக்கொண்டிருந்தாள் . இந்த கரகோஷம் தான் அவனை சினிமாவுக்குள் போக தூண்டியது . அந்த ஒரு நிமிடம் கை தட்டும் யாவரும் அவன் யார் , என்னவென்றெல்லாம் யோசிக்கவில்லை . அவன் திறமையை மட்டுமே பார்த்தார்கள் . கலையும் , கலாச்சாரமும் வேறுபட்டு நிற்கும்  மனிதர்களை கூட இணைக்கிறது . அவன் பாடியதை சுந்தரியின் அம்மா , அப்பா , பாட்டி எல்லோருமே நன்றாக  ரசித்துக்கொண்டிருந்தார்கள் . அவன் பாட ஆரம்பிக்கும் போதே வந்து சற்று தள்ளியிருந்த தூணில் சாய்ந்து கொண்டிருந்த அவளது மாமா மட்டும் அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார் ...

தொடரும் ...

முதல் நான்கு  பாகங்களை படிக்க கீழே சொடுக்கவும் ...

அவன் - அவள் - நிலா (1) ...

14 September 2019

அவன் - அவள் - நிலா ( 4 ) ...


வானில் நிலவை மேகங்கள் மறைத்து விலகுவது போல அவனது மனதுக்குள் கடந்த கால நினைவுகள் வந்து வந்து போயின . அவளது  மாமாவுக்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் அவனல்ல . ஆனால் அவர்  சொன்னதன் உண்மை அன்று அவனை சுட்டது . இன்று எளிதாக சுந்தரியுடன் பேசிக்கொண்டு நிற்பது போல அந்த காலத்தில் முடியவில்லை . இது கூட அவள் புருஷன் மற்றும் அவன் குடும்பத்தார் இல்லாததால் சாத்தியமானது என்றே நினைத்தான் . கல்யாணம் வரை பெண்ணிற்கு அவள் வீட்டார் போடும் சட்டதிட்டம் , கல்யாணத்திற்கு பிறகு புருஷன் போடும் சட்டதிட்டம் . அதில் சில வரைவுகள் வேறுபடலாம் ஆனால் அடிப்படையில் அவளை அடிமைப்படுத்துவது மாறப்போவதில்லை . கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் எந்த ஒரு தன் வீட்டு விசேஷத்துக்கும் பெண் விட்டுக்கொடுக்காமல் போகத் துடிக்கிறாள் . நிறைய கணவன்மார்களுக்கு அவர்கள் மனைவி மிக அருமையாக சமைப்பாள்  என்பதே  அவள் வீட்டார் வரும் போது  தான் தெரிகிறது . திருமணத்துக்குப் பின் தன் வீட்டாருடனான தொடர்பு ஏதோ ஒரு வகையில் அவளுக்கு நிம்மதியை  தருகிறது . முதல் காதலன் என்பதையும் தாண்டி சொந்தக்காரனுமான அவனை பார்த்ததில் அவளுக்கு நிறையவே மகிழ்ச்சி ...

யோசித்துக் கொண்டிருக்கும் போதே கதவை  படாரென்று திறந்து அங்கே சிவா வந்து நின்றான் . " சாரி மாப்பிள்ளை கால் தடுக்கிருச்சு " . அவன் நல்ல போதையில் இருப்பது நன்றாகவே தெரிந்தது . போதையில் இருப்பவர்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வார்கள் . அதில் குழந்தைத்தனம் , குரூரத்தனம் எல்லாவற்றையும் பார்க்கலாம் . அடுத்த நாள் போதையில்  சொன்னேன் என்று சொல்லி மழுப்பிக் கொள்ளலாம் . போதையில் இருப்பவனுக்கு ஈக்குவலாக அடுத்தவனும் அடித்திருந்தால் பிரச்சனையில்லை . ஒருவன் மட்டும் சரக்கடித்து விட்டு அடுத்தவன் அடிக்கவில்லையென்றால்  மாட்டினவன் மாண்டான் . அந்த ஒரு நிலையில் சிவாவிடம் கார்த்திக்  மாட்டியது போலவே இருந்தது ... 

" நீயும் வந்திருக்கணும் மச்சி , ஒரிஜினல் சரக்கு , ஜிவ்வுன்னு ஏறுது " .
" பார்த்தாலே தெரியுது " . " அய்யயோ அடிச்சது தெரியுதா , மத்தவங்க பார்த்தா 
தப்பாயிடும் மச்சி " . சின்ன வயதில் தம்மடித்து விட்டு  வாடை வராமலிருக்க கொய்யா இலையெல்லாம் மென்று தின்னது அவனுக்கு நியாபகம் வந்தது . 
அதிலும் அப்பா கையை மோர்ந்து பார்த்து கண்டுபிடித்து வெளுத்து வாங்கியதும் அவனுக்கு மறக்கவில்லை .
" அடிச்சது தெரியுதா மச்சி " . இதோ சொன்னதை சொல்ல ஆரம்பித்து விட்டான் . " வாடையே வராது சொன்னான் ?! " . அவன் தானாக பேச ஆரம்பித்தான் . " அதெல்லாம் ஒன்னும் தெரியல விடு " . 
" அப்புறம் எப்போ மச்சி உன் படம் வரும் ? போன தடவையே ப்ரொடியூசர் கெடைச்சுட்டாரு சொன்ன ?! " .
அவன் கதை சொல்லி பிடித்துப்போன ஒரு பெரிய ஜவுளிக்கடை ஓனர் அட்வான்ஸ் கொடுத்து படத்தை ஆரம்பிக்க ரெடியாக தான் இருந்தார் . பூஜைக்கு கூட நல்ல நாள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் . அந்த நேரம் பார்த்து மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வர இன்னும் மூன்று மாதம் கழித்து ஆரம்பிக்கலாம் என்று போனவர் இன்று வரை வரவில்லை . அரசாங்கம் நாட்டுக்காக எடுக்கும் நடவடிக்கை ஏதோ ஒரு தனிப்பட்டவனின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறது ...

" இல்ல மாப்பிள்ளை அவர் பேக் அடிச்சுட்டாரு . இப்போ வேற ஒரு கம்பெனி ல கதை சொல்லிருக்கேன் அனேகமா ஊருக்கு போனவுடனே ஆரம்பிச்சுடலாம்".
திருமணம் ஆகாதவனிடமும் , குழந்தை இல்லாதவர்களிடமும் எப்போ விசேஷம் என்று கேட்பது போலவே தான் நல்ல வாய்ப்புக்கு காத்திருக்கும் சினிமாக்காரனிடம் எப்போ அடுத்த ப்ராஜெக்ட் என்று கேட்பதும் . இதை தவிர்க்க முடியாது . சிவா ஒரு அக்கறையில்  கேட்கிறான் , நிறைய பேர் இன்னும் வெட்டியா தான் இருக்கியா என்பது போல கேட்பார்கள் . இதற்காகவே அவன் பல விசேஷங்களுக்கு போவதில்லை . இருட்டு அறையில் நிறைய நாள் தண்ணீர் சிகரெட்டோடு முடங்கி கிடந்திருக்கிறான் . வேலை இருக்கும் போது இரவு பகல் பாராமல் உழைப்பதும் வேலையில்லா நாட்களில் சும்மாவே ஒரே ரூமில் கிடப்பதும் சினிமாக்காரர்களுக்கே சாத்தியம் ...

" உன்ன பார்த்தா  எப்போ படம் ? என்ன பார்த்தா எப்போ கல்யாணம் ? இப்படி கேக்குறதே இங்க நெறைய பேருக்கு வேலையா போச்சு ! "
" நீ ஏண்டா இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க ?"
" எனக்கு அதுல இன்ட்ரெஸ்ட் இல்லேன்னுல்லாம் பொய் சொல்லல மச்சி , பொண்ணு கிடைக்கல அதான் உண்மை " . அவன் சொல்லும் போதே கண்களில் ஒரு வேதனை தெரிந்தது . பொதுவாக கல்யாணம் ஆகாத முதிர்கண்ணன்கள் திருமண சடங்கை கேலி செய்தோ இல்லை மணப்பெண்ணை குறை சொல்லியோ  சுய இன்பம் அடைந்து கொள்வார்கள் . சிவா அப்படியல்ல . பெரிதாக படிக்கவில்லையென்றாலும் பிசினஸில் நன்றாக சம்பாதிக்கிறான் . உள்ளூரில் எல்லா பெட்டிக்கடைகளிலும் , சூப்பர் மார்க்கெட்டிலும் இவன் ப்ராண்ட் ஊறுகாய் , புளியோதரை பேஸ்ட் வகையறா இல்லாமல் இருக்காது . அவன் சமைத்தால் ஊரே மணக்கும் , அப்படியொரு கைப்பக்குவம் . பெரிதாக படிக்கவில்லை என்பது அவனுக்கு ஒரு குறையாகவே இருந்ததில்லை ஆனால் அதை பெரிய விஷயமாக்கி அவனை ரிஜெக்ட் செய்தவர்கள் ஏராளம் ...

ஒரு முறை ஒரு கல்யாணத்துக்கு போயிருந்த போது அவன் சண்முகம் அண்ணனை பார்க்க நேர்ந்தது . சண்முகம் அண்ணன் அவன்  வேலை பார்த்த இயக்குனரிடம் அஸோஸியேட் ஆக இருந்தவர் . பொண்டாட்டி போல கூடவே இருந்து புதிதாக சேரும் அஸிஸ்டண்ட்களை இயக்குனரிடம் நெருங்க விடாமல் பார்த்துக்கொள்வதே அவரின் முக்கிய வேலை . ஒரு படம் ஓடியதால் பிரபலமான இயக்குனருக்கும் இது போன்றதொரு அல்லக்கை தேவைப்பட்டது . கல்யாண மண்டபத்தில் இவனருகே உட்கார்ந்த போது வன்மத்தோடு பேசிக்கொண்டே போனார் .  
" இந்த பொண்ணு கண்ண பாரேன் அலைபாயுது , நிச்சயம் கல்யாணத்துக்கப்புறம் நிலையா இருக்காது " . 
" கல்யாணத்தப்பவே பொண்ணு இந்த ஆட்டம் போடுதே கல்யாணத்துக்கப்புறம் மாப்பிள்ளை சொல்றத மசுருல கேக்கும் "  .
" காசு பணத்த பார்த்து பொண்ண கட்டிக்கிட்டு அப்புறமா இங்க குடையுதே அங்க குடையுதேம்பானுங்க முட்டாப்பசங்க " . 
இப்படி ஒவ்வொரு கல்யாணத்துக்கும் ஒவ்வொரு மாதிரி பேசிக்கொண்டே இவர்களெல்லாம் கல்யாணமாலை நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பார்கள் ...

லேசாக தள்ளாடிய சிவா  சுவற்றில் சாய்ந்து கொண்டே பேசினான் . 
" இப்போ பொண்ணுங்களெல்லாம் நெறைய எதிர்பார்க்குறாங்க மச்சி , நல்ல சம்பளத்துல வேலை , பணம் , ஃபாரீன் ட்ரிப் இப்படி மட்டுமில்ல பையனோட அம்மா , அக்கா , தங்கை ன்னு யாரும் இருக்கக்கூடாதாம் , பொண்ணோட அப்பா , அம்மாவே  இத ஜாடை மாடையா கேக்குறாங்க " .
" நம்ம சாம்பு மாமாவுக்கு இல்லாத காண்டாக்ட்டா , அவரால முடியாதா ?"
" அவர் கூட்டிட்டு போன இடம் தான் அது  , அவரே கடுப்பாகி அப்போ என்ன கல்யாணம் பண்ணனும்னா வீட்ல இருக்கறவாளெல்லாம் கழுத்த நெறிச்சு கொன்னுடனுமா  ன்னு காட்டமா கேட்டுட்டு வந்துட்டார் " . 
சாம்பு மாமா எதையும் பட்பட் டென்று பேசக்கூடியவர் . சொந்த சாதிக்காரன் யாரும் அவரோடு அவ்வளவாக வைத்துக்கொள்ள மாட்டார்கள் . ஊரே அவரை கொண்டாடினாலும் " சாதிய கெடுக்க வந்த சத்ரு " என்றே அவரை பொரிந்து தள்ளுவார்கள் . ஆனால் இவர்கள் இருவருக்கும் அவரை ரொம்பவே பிடிக்கும் ...

அவருக்கு திருமணமான கதையே பெரிய கதை . அவர் சொந்தத்திலேயே ஒரு பெண்ணை காதலித்தார் . அந்த பெண்ணிற்கும் அவரை பிடித்திருந்தது. இருவரும் சரியான பொருத்தம் என்று பேசிக்கொள்வார்கள் . திடீரென ஒரு நாள் அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டவர் வீட்டை  விட்டு ஓடி விட்டார் . எங்கே போனாரென்று தெரியவில்லை . இந்த கவலையில் அவர் அம்மா மிகவும் நொடிந்து விடவே , ஆபத்பாந்தவனாக அவரிடமிருந்து ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது . அதில் அவர் மிலிட்டரியில் சேர்ந்து விட்டதாகவும் ஆறு மாதம் கழித்து ஊருக்கு  வருவதாகவும் தகவல் இருந்தது . இதை கேள்விப்பட்ட அந்த சொந்தக்கார பெண்ணிற்கும் இதுநாள் வரை இருந்த கோபம் மறைந்து அவரை பார்க்க வேண்டுமென்கிற ஆர்வம் வந்தது . அவரும் உயரத்துக்கேற்ற நல்ல உடல்வாகோடு வந்தார் . ஊரில் தெரிந்தவர்களுக்கெல்லாம் அவரால் முடிந்ததை வாங்கி வந்தார் தனக்கு பிடித்த பெண்ணிற்கு உட்பட . அதை ஆசையோடு அவளுக்கு கொடுக்கலாமென்று ஆத்தங்கரைக்கு வர சொன்னவர்க்கு அதிர்ச்சி காத்திருந்தது ...

காவேரி ஆறு அருமையாக ஓடிக்கொண்டிருந்தது . சாம்பு மாமா சைலண்டாக ஆற்றங்கரையில் உட்கார்ந்து மணலை நோண்டிக்கொண்டிருந்தார் . மணலால் அவர் கட்டிய அழகான  கோட்டை இடியப்போவது தெரியாமல் வெள்ளந்தியாக உட்கார்ந்திருந்தார் . எப்பொழுதும் பூனை போல வந்து கண்ணை பொத்துபவள் இன்று அப்படி செய்யாமல் நேராக வந்து நின்றாள் .
அவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியதால் வந்த கோபம் என்று நினைத்தார்.
" உனக்காக எத்தன நேரமா காத்துண்டு இருக்கேன் தெரியுமா ?" .
" என்ன ரெண்டு வருஷம் இருக்குமா ?" . இவர் ஓடிப்போய் ராணுவத்தில் சேர்ந்து திரும்ப வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதை சொல்கிறாள் என அவருக்கு புரிந்தது . " இன்னும் கோபம் தீரேலியா ?" .
" கவலைப்படாதீங்கோ நான் கோபப்பட்டு எங்கயும் ஓட மாட்டேன் " 
அவருக்கு சுருக்கென்றது . " என்ன பண்றது , என் அப்பன் கண்டபடி திட்டினான், ஒரு நிமஷம் அங்க இருக்க முடியாதுன்னு ஓடிட்டேன் " . 
" ஓடிப்போன அந்த ஒரு க்ஷணம் என்ன நெனைச்சுப் பார்த்தேளா ? "
" உன்ன மட்டுமா அம்மா , தங்கை , இந்த ஆத்தங்கரை  எதையும் நெனைக்கமா 
 தானே ஓடினேன் , அப்போ எதையும் யோசிக்க முடியல " .
அவர் தீர்க்கமாக பதில் சொன்னார் ...

" கோவத்துல ஆத்த விட்டு ஓடினவன் எப்பிடி உன்ன கடைசி வர காப்பாத்துவான் னு அப்பா கேக்குறார் " . அவள் வீட்டில் இந்த இரண்டு வருடத்தில் பேசி பேசி நிறையவே மனதை மாற்றியிருந்தார்கள் . அவர்களை சொல்லி குற்றமில்லை அந்த காலத்தில் கல்யாண வயதில் பெண்ணை வீட்டில் வைத்திருப்பது என்னமோ வெடிகுண்டை வைத்திருப்பது போல . 
" உங்க அப்பா தான் ஆத்தங்கரைக்கு போய் அந்த முட்டாப்பய  கிட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டு வான்னு அனுப்பிச்சாரோ ? " .
" இல்ல அவருக்கு தெரியாம நானா தான் வந்தேன் " . 
" என்ன பார்க்க வருவ , இந்த பரிசை கொடுக்கலாம்னு ஆசையா காத்திருந்தேன் , ஆனா நீ உன்ன ஏற்கனவே பொண்ணு பார்த்துட்டு போன விஷயத்த சொல்ல வந்திருக்கேன்னு நெனைக்கிறேன் " .
அவருக்கு அந்த விஷயம் தெரிய வந்ததில் ஒரு வியப்புமில்லை . ஊருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களிடம் சொல்லவேண்டியதை  சொல்ல நாலு பேர் மரத்தடியில் எப்பொழுதுமே காத்துக்கொண்டிருப்பார்கள் ...

" அப்போ எல்லாம் தெரிஞ்சு தான் நீங்களும் வந்திருக்கேளா ?" அவள் அழுகையுடன் கேட்டாள் . ஆண்களுக்கு ஒரு விஷயத்தில் ஆத்திரம் வருவது போல பெண்களுக்கு உடனே அழுகை வந்துவிடுகிறது . அது ஆயுதமா ? கேடயமா ? என்பது சம்பந்தப்பட்டவர்களை பொறுத்தது . 
" தெரியும் ஆனா உன் சம்மதத்தோட நடக்கறது தெரியாது " .
அவரின் சுருக்கு பேச்சு  அவளை மேலும் பாதித்தது . 
" ஆமாமா நான் தான் வந்து என்ன பொண்ணு பாருங்கோன்னு வாசல்ல நின்னுண்டு இருந்தேன் " அழுகையும் , ஆத்திரமுமாக அவள் பேச்சு வெடித்ததில்  அவருக்கும் ஆத்திரம் தலைக்கேறியது ,
" அப்புறம் ஏண்டி இங்க வந்த ? உங்க அப்பன் சொல்றவனையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான " அவர் கத்தியபடியே கையில் வைத்திருந்த பொருளை ஆற்றில் தூக்கியெறிந்தார் . அது அவளுக்கு அவளை தூக்கியெறிந்தது போலவே இருந்தது , இனிமேல் அங்கே நிற்பது நல்லதல்ல என்று நினைத்து அவள் வேகவேகமாக அழுகையுடன் நடக்க ஆரம்பித்தாள் .
" போடி போ உங்கப்பன் பார்த்த நொள்ளை மாப்பிள்ளையையே கட்டிண்டு அழு  " , சொல்லும் போதே அவளுக்கு கல்யாணம் நடக்கப்போகும் அதே தேதியில் நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று மனதுக்குள்ளேயே கருவலானார் . சொந்தக்காக்காரன் , சாதிக்காரன்  ஒரு பயல கூப்பிடக்கூடாது என்று அப்பொழுதே முடிவு செய்தார் . அந்த போட்டி மனப்பான்மை அவர் அழகுக்கும் , அறிவுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணுடன் முடிச்சு போட வைக்கப்போகிறது என்று பாவம் அவருக்கு அன்றே  தெரிந்திருக்கவில்லை ...

தொடரும் ...

முதல் மூன்று பகுதிகளை படிக்க கீழே சொடுக்கவும் ...

அவன் - அவள் - நிலா (1) ...

13 September 2019

மகாமுனி - MAGAMUNI - மெகா முனி ...


ஏழு ஸ்வரங்கள் தான் இருக்கிறது , அந்த ஏழுக்குள் எப்படி மாற்றி மாற்றி சுவாரசியமாக இசையமைக்கிறோம் என்பது தான் வித்தையே என்று இசைஞானி ஒரு பேட்டியில் சொல்வார் . அதே போல பழக்கப்பட்ட  இரட்டை வேட ஆள் மாறாட்ட ஹீரோ சப்ஜெக்ட்டை  தனக்கே உரிய திரில்லர் திரைக்கதை பாணியில் எட்டு வருட இடைவெளிக்கு பிறகு  மௌன குரு சாந்தகுமார் மகாமுனி யாக தந்திருக்கிறார் ...

காசுக்கு அல்லல்படும் கால் டாக்ஸி டிரைவர் கம் கொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டுத்தரும் மகாதேவன்  ( ஆர்யா ) , ஆர்கானிக் விவசாயி கம் சமூக சேவை செய்யும் பிரமச்சாரி முனிராஜ்  ( ஆர்யா ) இவர்கள் இருவர் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் இருவரையும் இடம் மாற்றுகின்றன . அதை ஸ்லோ கம் ஸ்டடி திரைக்கதையில் சொல்வதே மகாமுனி ...

தொடர் தோல்விகளுக்கு பிறகு ஆர்யா வுக்கு பெயர் சொல்லும் படம் . இரண்டு கேரக்டர்களுக்குமே அடிப்படையில் பெரிய வித்தியாசம் இருந்தாலும் பயப்படுவதில் ஒன்று போலவே இருக்கிறார்கள் . அதிலும் குறிப்பாக மகா கார் கம்பெனி குமாஸ்தா , மனைவி , அரசியல்வாதி இளவரசு என்று எல்லோரிடமும் பம்மியே பேசுவது நெருடுகிறது . அப்படியிருப்பவர் எப்படி கொலைகளுக்கு ஸ்கெட்ச் போடுவார்  என்ற கேள்விக்கு படத்தில் பதிலில்லை. முனி நல்லவராக இருக்கலாம் ஆனால் சாதியின் விளைவால் தனக்கெதிரான நடக்கும் கொலை சதியை கூட  உணர முடியாத அளவு ரொம்ப நல்லவராக இருக்கிறார் !..


மஹிமா ஜர்னலிஸ்ட் கம் திராவிட சித்தாந்தவாதியாக பாடி லாங்குவேஜில் கலக்குகிறார் . குறிப்பாக தன்னை பெண் கேட்டு  வந்தவனை நோஸ்கட் செய்து அனுப்பிவிட்டு நக்கலாக  நடக்கும் இடம் செம்ம . சாரு நாவல் படிப்பது , அப்பா சரக்கை பிடுங்கி அடிப்பது இதெல்லாம் திராவிட பெண்களின் அடையாளங்கள் போல ?! . இந்துஜா பணம் கேட்டு படுத்தும் போதும் , ஆர்யா முதுகில் ரத்தத்தை பார்த்ததும் உருகும் போதும் , போலீஸ் ஆர்யாவை பிடித்தவுடன் மருகும்  போதும் பரிமளிக்கிறார் . இளவரசு , ஜெயப்ரகாஷ் , பாலாசிங் இவர்கலெல்லாம் அப்படியே கேரக்டருக்குள்  பொதிந்து விடுகிறார்கள் . இளவரசுவின் மச்சான் , க்ரைம் இன்ஸ்பெக்டர் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் ...

மகா முதுகில் குத்திய கத்தியை ஆப்பரேஷன் செய்து எடுக்க காசில்லாமல் வலியை பொறுத்துக்கொண்டே நண்பனை  ( காளி வெங்கட் )  வைத்து எடுப்பது ,எதிர்கட்சிக்காரன் கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்கும் போது சோற்றில் சாம்பாரை ஊற்றி இளவரசு பிசைந்து அடிப்பது , பாம்பு கடியில் கதறும் ஆர்யாவை சாதிவெறியன் ஜெயப்ரகாஷ் காப்பாற்றுவது போல நடிப்பது , நம்பிக்கை , சமாதானம் என்று பேசி தனது முதல் காதலை போதையில் இன்ஸ்பெக்டர் விவரிப்பது , எந்த பணத்தை தேடி தேடி சேர்த்தாரோ அதே பணத்துக்கடியில் இளவரசு செத்து கிடப்பது என நிறைய சீன்களில் இயக்குனர் ஸ்கோர் செய்கிறார் ...

ஆர்யா எதற்கு மனநிலை காப்பகத்திற்கு செல்கிறார் ? தனது அண்ணனை கொலை செய்தவர்களையே கொடுமையாக பழிவாங்கும் அருள்தாஸ் & கோ கடைசியில் அதற்கு காரணமான இளவரசுவுடன் ஏன் தோழமையோடு  தண்ணியடிக்க வேண்டும் ? கொலை செய்த காசை கேட்டு வாங்க ஆர்யா ஏன் அநியாயத்துக்கு பயப்படுகிறார் ? இவ்வளவு பொறுமையாக ( 2.38 மணிநேரம்) படத்தை காட்டும் இயக்குனர் ஆர்யாவின்  மேல் நடக்கும் கொலை முயற்சியை விசுவலாக காட்டாமல் டம்மியாக ஏன் வாய்வழி மட்டும் சொல்கிறார் ? சிரத்தையாக படத்தை எடுத்து விட்டு ஏதோ அவசர கதியில் ஏன் முடிக்க வேண்டும் என்கிற கேள்விகள் நிறைய படத்தில் இருக்கிறது . நீளமான படமாகவும் , அதே சமயம் அது தெரியாமல்  திரைக்கதை யுக்தியால் நம்மை கட்டிப்போட்ட விதத்திற்காகவும்  இந்த மகா முனி ஒரு மெகா முனி ...

ரேட்டிங் : 3.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 44 



8 September 2019

அவன் - அவள் - நிலா ( 3 ) ...


வளுக்காக காத்திருக்கிறான் , முதல்முறையாக ஒரு பெண்ணிற்காக காத்திருக்கிறான் . அவன் மனம் பட்டம் விட்டுக்கொண்டே அதை பார்த்துக்கொண்டு  ஓடும் சிறுவனை போல ஓடியது  . ஸ்கூல் படிக்கும் போது ஜெனிஃபருக்காக ரகு காத்திருந்ததை போல ஒரு நாள் நானும் நிற்பேன்  என்று அவன் நினைத்துக்கூட பார்த்ததில்லை . சிறு வயதிலிருந்தே பெண்கள் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தாலும் தானாக போய் பேசுவதை ஒரு கவுரக்குறைச்சலாக நினைத்திருக்கிறான் . தானாக வந்து எல்லா பெண்களும் பேசுமளவிற்கு அவன் அழகனில்லை . ஆனால் அவன் கண்களில் ஒரு வசீகரம் இருந்தது.
கவித்துவமான அவன் பேச்சு பெண்களுக்கு பிடித்திருந்தது . எட்டாவது படிக்கும் போது  தெருவில் இருந்த சுதா அக்கா அவனை மிகவும் கவர்ந்திருந்தாள் . இருவரும் பஸ் ஸ்டாப் வரை பேசிக்கொண்டே போகும் போது கைகளை உரசி சில சமயங்கள் பிடித்துக் கொள்ளும் போது இனம் புரியாத சிலிர்ப்பை உணர்ந்திருக்கிறான் ...

இருவரும் சினிமா பற்றி  நிறைய பேசினார்கள் . கமல்ஹாசன் மேல் அவளுக்கு அப்படி ஒரு காதல்.  அவர் ஹீரோயின்களோடு நெருக்கமாக நடிப்பது பிடிக்காமல் அவனிடம்  புலம்பியிருக்கிறாள் . கமல் ஏன் டி.ஆர் போல பெண்களை தொடாமல்  நடிப்பதில்லை என்று அவளிடம் அவன் கேள்வி கேட்டிருக்கிறான் . அவள் உடனே அவ்வளவு நெருக்கமாகவெல்லாம் தொட மாட்டார்கள் அதெல்லாம் கேமரா டெக்னிக் என்றாள் . அவனால்  நம்ப முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை . அவனுக்கே  அது குழப்பமாக தான் இருந்தது . அப்போ தூக்கும் போதெல்லாம் கூட கேமரா டெக்னிக் தானா  என்று யோசித்திருக்கிறான் . ஒரு நாள் சுதா அக்காவை டேனியலுடன் மிக நெருக்கமாக மரத்தடியில் வைத்து  பார்த்த பிறகு தான் அது கேமரா டெக்னிக் இல்லை  சுதா அக்காவோட டெக்னிக் என்பது  அவனுக்கு புரிந்தது ...

பெண்களுக்கு படிப்பு , சினிமா தவிர பெரிய வெளியுலக அறிவில்லை என்கிற அவன் நினைப்பை சுந்தரி மாற்றினாள்  . காதல் ஒரு விசித்திரமான வஸ்து . ஆரம்ப காலங்களில் அது கொடுக்கும் போதை அலாதியானது . சுற்றியிருக்கும் எல்லாம் மறந்து அவள் முகம் மட்டுமே முழுவதுமாக தெரிந்தது . முந்தைய நாள் இரவு அவனால் எளிதாக தூங்க முடியவில்லை . அவன் புரண்டு புரண்டு படுத்ததை பார்த்து  சிவாவே பயந்து போய் அந்த பக்கம் படுத்துக்கொண்டான் . அந்த காதலால் தான் எதைஎதையோ யோசித்துக்கொண்டு அவனால் அரைமணி  நேரத்திற்கும் மேலாக நிற்க முடிந்தது . கதவருகே ஏதோ சத்தம் வரவே அவளுக்காக காத்திருப்பது போலில்லாமல் இருக்க கேசுவலாக காட்டிக்கொள்ள முயற்சித்தான் . அவளுக்கு பதிலாக பாரதி போல மீசை  வைத்த அவள் மாமா வருவார் என அவன் எதிர்பார்க்கவில்லை . அவர் நேராக அவன் அருகே வந்து ஒரு பெர்க்குலிஷை பற்ற வைத்தார் ...

" வருமா வருதான்னு தெரியாம ஒரே குழப்பமா இருக்குல்ல " .
அவர் எதை கேட்கிறார் என்று யோசித்துக்கொண்டே " புரியல அங்கிள் " . என்றான் . " இல்லப்பா வானம் மப்பும் மந்தாரமுமா மழை வருமா வராதான்னு இருக்குல்ல " . " வந்தா எல்லோருக்கும் நல்லது தான அங்கிள் " .
அவனிடம்  சட்டென்ற அந்த பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை .
" அது எங்க யாருக்காக  வருதுன்றத பொறுத்து தான் நல்லதா கெட்டதா எல்லாமே , எல்லோருக்கும் எல்லாம் அப்படி ஈஸியா கெடைச்சுடாதில்லையா " . அவரும் சூசகமாகவே பேசினார் .
அவன் புரிந்தும் புரியாதது போல பார்த்தான் .
" கீழ எல்லோரும் நலுங்குல பிஸியா இருக்கா , நீ இங்க என்னடாப்பா தனியா பண்ற ? " . " உங்கள மாதிரி தான் அங்கிள் சும்மா காத்து வாங்க வந்தேன் " .
" நான் தம்மடிக்க வந்தேன் , உனக்கும் அந்த பழக்கம்  இருக்கா ?". உதடு கருத்திருப்பதை வைத்து கேட்டிருப்பாரோ என்று அவனுக்கு தோன்றியது .
இல்லை என்பது போல வேகமாக தலையாட்டினான் ...

" பெட்டிக்கடைப்பக்கம் உன்ன அந்த ஒல்லி பையனோட பார்த்தேனே ?"
சிவாவை சொல்கிறார் என்று அவனுக்கு புரிந்தது .
" அது ஒண்ணுமில்லை அங்கிள் " சீக்கிரமா விஷயத்துக்கு வாய்யா என மனதுக்குள் நினைத்துக் கொண்டான் . அவனுக்கு அவரை பார்த்தால் பயமாகவெல்லாம் இல்லை ஆனால் கொஞ்சம் பதட்டமாக இருந்தது . சுந்தரி ஏன் வரவில்லை என ஒரே குழப்பமாக இருந்தது . அவள் சொல்லித்தான்  இந்த ஆள் வந்தாரா என்று தோன்றிய நினைப்பை உடனே அழித்தான் .
" என்ன படிக்கிறீங்க தம்பி ?" . " பி.காம் செகண்ட் இயர் அமரிக்கன் காலேஜ் ல "
அவர் அடுத்து எந்த காலேஜ் என்று கேட்பதற்குள் நாமே சொல்லிவிடலாமே  என்று சொல்லி  விட்டான் ...

" ஓ மதுரையா அதான் ரொம்ப துடிப்பா இருக்காப்ல " .
" அப்பா என்ன பண்றார் ?" . என்ன பொண்ணு தரப்போற மாதிரி அடுத்தடுத்து கேள்வி கேட்கிறார் என்று நினைத்துக்கொண்டான் .
" எம்.என்.ஆர் மண்டபத்துல மேனேஜரா இருக்கார் ".
" ஓ அது ஃபேமஸ்  மண்டபமாச்சே ஊர்ல இருக்குற பெரிய மனுஷன் பூரா அங்க தான் கல்யாணம் பண்ணுவான் " .
அவர் சொன்னது உண்மை தான் . அவனுடைய அப்பா நாலு காசு சம்பாதித்தாரோ இல்லையோ நாலு பெரிய ஆட்களின் தொடர்பு கிடைத்ததற்கு அந்த மண்டபம் முக்கிய காரணம் . அவரே தொடர்ந்தார் ,.
" சுந்தரியோட சித்திக்கு கூட அங்க தான் ஆச்சு , அவளுக்கும் காலேஜ் படிச்சு முடிச்சவுடனே அங்க தான் பண்ணனும்னு அவ அப்பா கூட சொல்லிண்டே இருக்கார் ". அவனுக்கு அவர் சுத்தி வளைத்து எங்கே வருகிறார் என்று நன்றாகவே புரிந்தது ...

இங்கே சாதி மட்டும் ஒரு பிரச்சனையில்லை அதை விட கொடியது பணம் . நாலு காசு சேர்ந்து விட்டால் யாரிடமும்  பழக யாரும்  சாதி பார்ப்பதில்லை . பல லட்சங்கள் கொடுத்து கல்யாணம் செய்து வைக்கும் இடத்தில் சுந்தரி வீட்டுக்காரர்கள் அந்த திருமண மண்டபத்தில் மேனேஜராக வேலை பார்க்கும் ஒரு மிடில் க்ளாஸ் மாதவனின் பையனாக அவன் . அவனுக்கு அந்த மலையளவு வித்தியாசம் நன்றாகவே உறைத்தது  . " உங்க அம்மா கூட நன்னா சமைப்பா ன்னு காண்டிராக்டர் கணபதி சொன்னான் " . இந்த ஆளுக்கு அவன் குடும்பத்தை பற்றி நன்றாக தெரிந்திருக்கிறது . கணபதியை தெரியுமென்றால் நிச்சயம் அவன்  அப்பா , அம்மா , தம்பி , ஓடிப்போன அக்கா எல்லோரையும் பற்றி தெரிந்திருக்கலாம் ...

அவன் குடும்பத்தை பற்றி சுந்தரியிடம் ஒரு நாள்  சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தான் . ஆனால் அவன் விஷயத்தில் எல்லாமே வேக வேகமாக நடக்கின்றன . கூடல் , ஊடல் , எதிர்ப்பு எல்லாமே அடுத்தடுத்து வருகின்றன .
" உன்ன தான் உன் அம்மா மலை போல நம்பிருக்கான்னு கணபதி சொன்னான்" ,  " இந்த காலத்துல இன்ஜினீரிங்க் படிச்சாலே வேலை கஷ்டப்பட்டு தான் கெடைக்குறது , நீ வேற பி.காம் ன்ற . டிஸ்டிங்க்ஷன் ல பாஸ் பண்ணி , சி.ஏ இன்டெராவது கிளியர் பண்ணா வாய்ப்பிருக்கு " . அவன் சி.ஏ ஹையர் கிளியர் பண்ணுவதர்க்கெல்லாம் ஒர்த் இல்லை என்பது போலவும் , ஏதோ இன்டெர்வியூ எடுக்க வந்தவர் போலவும்  பேசிக்கொண்டே போனார் ...

அவனுக்கு இந்த பிளஸ் 2 , காலேஜ் , வேலை என்கிற சிஸ்டத்தை உடைக்க வேண்டும் போல இருந்தது . அவன் சமூகம் எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்க தயங்குவது அல்லது எடுப்பவர்களையும் இளக்காரம் செய்வது அவனுக்கு எரிச்சலை தந்தது . வேலைக்கு சென்று விட்டால் போதும் இங்கே பலர் பிறவிப்பயன் அடைந்து விடுகிறார்கள் . அதற்கு மேல் எதையும் யோசிக்கும் நிலையில் இங்கு யாரும் இல்லை . அப்படியே எவனாவது யோசித்து ஏதாவது வித்தியாசமாக செய்து ஜெயித்து விட்டால் அதை அதிர்ஷ்டம் என்கிறார்கள் , தோற்றுவிட்டால் இவனுக்கு இதெல்லாம் தேவையா நாம தான் அப்போவே சொன்னோமே என்கிறார்கள் . அவனுக்கு படிப்பு மேல் என்றுமே அயர்ச்சி இருந்ததில்லை. எக்ஸாமுக்கு முதல் நாள் வரை நம்ம கூட தான் ஊர் சுத்துறான் ஆனா ஒரு அரியர்  கூட இல்லாம நல்ல மார்க்ல பாஸ் பண்ணிடுறான் என்று நண்பர்களே அவனிடம் கடிந்து கொள்வார்கள் .
அந்த நம்பிக்கையில் " கண்டிப்பா  நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணுவேன் " என்று அவரிடம் உறுதியாக சொன்னான் ...

" அது தான் தம்பி உனக்கும் நல்லது உன் குடும்பத்துக்கும் நல்லது " .
அவர் சொன்னதில் அக்கறையோடு சேர்ந்த எச்சரிக்கையும் இருந்தது . சுந்தரியின் அப்பா ஊரில் பெரிய ஆடிட்டர் . மளிகை கடைக்காரனிடம் இருந்து மினிஸ்டர் வரை கணக்கு வழக்கு அவர் கைவசம் இருந்தது . படிப்பு தவிர வேறொன்றுமே அவருக்கு தெரியாது . அது தான் உண்மையான வெற்றியாக இந்த சமூகத்தால் பார்க்கப்படுகிறது . " நான் நிச்சயமாக  ஒரு நாள் எல்லோருக்கும் தெரியும் படி பெரிய ஆளா வருவேன் " . அவன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான் . அவர் நேரடியாக சுந்தரி விஷயத்துக்கு வராததால் அவனாக அவள் டாபிக்கை எடுப்பது அவனுக்கு தயக்கமாக இருந்தது . அவருக்கு எந்த அளவு விஷயம் தெரியும் என்பது புரியாமல் நாமாக  வாய் விடுவது நல்லதுக்கில்லை என உள்ளுணர்வு சொல்லியது ...

லேசான மழை தூரவே " தம்பி பாத்துக்கோங்கோ , நான் வரேன் " என்று அவர் கிளம்பலானார் . அப்போது கூட " சுந்தரியை நன்னா பாத்துக்க சொல்றேளா மாமா " என்று அவரை கிண்டலடிப்பது போல தோன்றிய நினைப்பை அப்படியே  அடக்கிக்கொண்டான் . அவர் என்ன தான் நக்கலாக பேசியது போலிருந்தாலும் அதில் பொதிந்திருந்த உண்மை அந்த மழை நேரத்திலும் அவனுக்குள் எரிந்தது . அனைவரும் அவனை ஒரு நாள் அண்ணாந்து பார்க்க வேண்டுமென்கிற  வேட்கை இன்னும் அதிகமானது . சினிமாவில் பெரிய இயக்குனாராவதே அதற்கு சிறந்த வழி என்று அவன் நம்பினான் . எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் அது அவ்வளவு எளிதல்ல என்பது அவனுக்கு தெரியும் ஆனால் அது அவன் நினைத்ததை விட மிகவும்  கடுமையானது என அவனுக்கு அப்போது புரிந்திருக்க வாய்ப்பில்லை ...

தொடரும் .,,

அவன் - அவள் - நிலா முதல் இரண்டு பாகங்களை படிக்க இங்கே சொடுக்கவும்...


அவன் - அவள் - நிலா (1) ...

1 September 2019

அவன் - அவள் - நிலா (2) ...


கார்த்திக் என்று அந்த பையன் சொன்னதும் அவன் பெரிதாக ஆச்சர்யப்படவில்லை ஆனால் ஆச்சர்யப்படாமலுமில்லை . இவனே முதலில் பெண் பிறந்தால் சுந்தரி என்று வைக்கலாமென யோசித்திருக்கிறான் . ஆனால் இத்தனை வருடங்கள் கொடுத்த அனுபவத்தில்  அவனுக்கு கல்யாணம் என்பது ஏதோ ஒரு சடங்காகவோ இல்லை தனி மனித சுதந்திரத்துக்கு விடப்படும் சவாலாகவோ தான் படுகிறது .  அது ஒரு சக்கர வியூகம் . நுழைந்த பின் வெளி வர முடியாத அல்லது வர விரும்பாத ஒரு வியூகம் .   குறிப்பாக பெண்கள் ஏன் அந்த வியூகத்துக்குள் விரும்பி விழுகிறார்கள் என அவன் பல முறை யோசித்திருக்கிறான் ...

ஒரு ஆண் திருமணத்திற்கு பின் அவனாகவே இருக்க முடிகிறது . நண்பர்களுடன் ஊர் சுற்றுவது , அரட்டை ,சினிமா , பார்ட்டி என பெரும்பாலும் அவன் எதையும் குடும்பத்துக்காக விட்டுக்கொடுப்பதில்லை . ஆனால் பெண் வேறொரு வீட்டுக்கு வந்து புது அவதாரம் எடுக்கிறாள் . ஏதோ தோழியோ , தோழனோ கூப்பிட்டால் அவளால் சட்டென்று போக முடிவதில்லை . பெரும்பாலான பெண்களுக்கு  திருமணத்துக்குப் பின்  கணவனே உலகம்  ஆனால் கணவன்மார்களுக்கு  அவர்கள் உலகத்தில் இந்த பெண்கள் . இதற்கு விதிவிலக்குகள் உண்டு . ஆனால் விதிவிலக்குகள் வாழ்க்கையாகி விடாது . அவள் பேசிய பேச்சு பல திருமணமான பெண்களின் குரலாகவே அவனுக்கு பட்டது ...

" சாப்பிட வரலியா ?" அவள் கேட்டவுடன் என்ன சொல்வதென்று ஒரு கணம் யோசித்தான் . " நீங்க சாப்புடுங்க , நாங்க சாப்ட்டு சாப்புடுறோம் " சிவா சொன்னது அவளுக்கு முதலில் புரியவில்லை . பிறகு புரிந்தவளாய் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் .
 " மச்சி நீ மட்டும் சரக்கடிக்குறியா ?" " டே ஆனா அன்னிலேருந்து இன்னி வரையும் ஃபிகர பார்த்தவுடனே என்ன கழட்டி விடுறதுல இருந்து மட்டும் நீ மாறலடா ! " . " டே " , " சரி, புரியுது முன்னாள் ஃபிகர் " .
கார்த்திக்  திரும்பவும் முறைத்துக்கொண்டிருக்கவே சிவா " சாரி மச்சி கோச்சுக்காத , நான் போயி எடுத்துட்டு வந்துடறேன் " , " என்னடா ஏற்கனவே ஏற்பாட்டோட தான் இருக்கியா ? " , " கல்யாணத்துக்கு மொய்  வைக்கிறோமோ இல்லையோ சரக்கு மேலயும் , சீட்டு மேலயும்  கை வைக்காம விடுறதில்லை " ,
சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாமலிருக்க வாட்டர் பாட்டில் , சோடா வுடன் பக்கார்டியை மிக்ஸ் செய்யும் வேலைக்கு அவன் கிளம்பினான் ...

சிவா  நாலு ரவுண்டு அடித்து விட்டு சீட்டாடி முடித்து விட்டு வர நேரமாகுமென்பதால் அவன் மொட்டை மாடிக்கு போனான்  .
சின்ன வயதிலிருந்தே மொட்டை மாடி அவனுக்கு  நெருக்கமாக இருந்தது . யாரும் இல்லாத போது கூட நிலாவை பார்த்துக்கொண்டே தனிமையில் நீண்ட நேரம் படுத்திருக்கிறான் . வான் வெளியையும் , நட்சத்திரங்களையும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலே நான் என்ற அகந்தை ஓடி விடும் .  இந்த பிரபஞ்சத்தில் பூமியே ஒரு சின்ன புள்ளி அதில் நாம் எம்மாத்திரம் என்கிற நினைப்பு வந்துவிடும் . அதனால் தான் நம் முன்னோர்கள் எல்லாம் வானில் நட்சத்திரங்களாய் ஜொலிக்கிறார்கள்  என்று சொல்கிறார்களோ என்னமோ! .
" என்ன ஸ்டார்செல்லாம் எண்ணி முடிச்சாச்சா ?" அவள் இங்கு வருவாள் என்று அவன் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை , ஆனால் இது போலொரு சம்பாஷனை நடக்க வேண்டுமென அவன் நினைத்திருக்கிறான் . நேற்று பெரிதாய் நினைப்பது இன்று  புள்ளி போலாகி  விடுகிறது . ஆனால் அது ஏன் அப்படியானது என்கிற கேள்வியை எல்லோரும் கேட்டுக்கொண்டே தானிருக்கிறோம் ...

" நீ தூங்க போல ? " , " இல்ல அவர் லேட் நைட் வந்தாலும் வருவார் , அப்போ ரூமை லாக் பண்ணிட்டு தூங்கிட்டேன்னா தொறக்கறது கஷ்டம் அதான் " .
" போன் போட்டு எப்போ வருவாரு கேளேன் ? " , இது உண்மையிலேயே அவள் தூங்க வேண்டுமே என்ற அக்கறையை விட எத்தனை நேரம் அவளோடு பேச முடியுமென்கிற ஆர்வத்தாலேயே கேட்கப்பட்டது போலிருந்தது .
" கேட்டாச்சு , வருவேன் , அவ்ளோ தான் பதில் " .
" ஓ " . சிறிது நேரம் அங்கே மவுனம் பேசியது . காற்று அவர்களுக்குள் புகுந்து மவுனத்தை கலைக்க முயற்சி செய்துகொண்டிருந்தது.
இதே போன்றதொரு இரவில் மொட்டைமாடியில் ஆரம்பித்த அவர்கள் காதல் வெவ்வேறு பரிமாணங்களை தாண்டி இன்று இந்த மொட்டை மாடியில் நிற்கிறது .
" என்ன பாக்கறதுக்காக நைட் ல மொட்டை மாடி ஏறி குதிச்சியே அதெல்லாம் நியாபகம் இருக்கா ?" அவள் நேரடியாக இதை கேட்டாள் .
" மறக்க முடியுமா ? உன் பாட்டியோட  கத்தலுக்கு பயந்து நான்  ஓடின ஓட்டத்த நாட்டுக்காக ஒடியிருந்தா  இந்நேரம் பதகத்தோட வந்திருப்பேன் ! " .
" ஆமாம் நிச்சயமா " அவள் சிரித்துக்கொண்டே ஆமோதித்தாள் ...

" கார்த்திக்  எங்க ? " , " என் கூட பேசிட்டு இருக்கார் " என அவள் சொல்லவே ,
" ஐயோ மொக்கை காமெடி சொல்றதுலயும் அப்படியே இருக்க " ,
 " வேற எதுல அப்படியே இருக்கேன் ? " .
அந்த நிமிடம் அவள் பழைய சுந்தரியாகவே கண் முன் நின்றாள் .
" எவ்வளவோ , பேசும் போது  முடிய சுருட்டறது , ஏதாவது கேக்கும் போது  குறுகுறு ன்னு பாக்குறது , தனியா இருக்கும் போது  கண்ணாடியை பாத்து பேசிக்குறது , நான் தனியா மொட்டை மாடில இருக்கும் பொது கரெக்ட்டா மோப்பம் பிடிச்சு வந்துர்றது ன்னு சொல்லிகிட்டே போலாம் " .
" இன்னும் உன்ன நினைச்சுக்கிட்டே இருக்கறது "  சொல்ல வந்தவள் ஏனோ நிறுத்திக்கொண்டாள் . "  அவன் அக்காவோட இருக்கான் , இரு தூங்கிட்டானா பார்த்துட்டு இல்லேன்னா பால் கொடுத்து வந்துடறேன் " .
அவளுக்கு அந்த இடைவெளி தேவைப்பட்டது. இல்லையேல் பழைய சுந்தரியாகவே மாறி விடுவாளோ என்கிற அச்சம் அவளுக்கு துளிர் விட்டது . பெண்களுக்கே உரிய ஒரு பயம் , ஏதோ நடந்து விடும் என்பதால் அந்த பயம் வருகிறதா இல்லை பயம் வருவதால் நடந்து விடுகிறதா ! ..

அவள் போன பிறகு அவன் பழைய சிந்தனைக்குள் மூழ்கினான் . வாழ்க்கை விசித்திரமானது . இவளுடன் பேசுவதற்காக எவ்வளவு பிரயத்தனப்பட்டிருக்கிறான் . மாப்பிள்ளை அழைப்பிற்கு அடுத்த நாள் அவள் வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருந்தாள் . இவனை பார்க்கும் போது மெனெக்கெட்டு  ஒரு குட்டிப்பெண்ணை பிடித்து வைத்துக்கொண்டு,
" என்ன படம் பார்த்த ? " கடமை கண்ணியம் கட்டுப்பாடு " பார்த்துருக்கியா ?
என்று இவனை சைடில் கலாய்த்துக்கொண்டிருந்தாள் . அவனுக்கு ஒரு விதமான தயக்கம் வந்தது . நேற்று மொட்டை மாடியில் சினிமா லட்சியத்தை சொன்னதால் கடுப்பாகி விட்டாளோ என்று  யோசித்தான் . பெண்கள் எப்பொழுதுமே அவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதையே விரும்புகிறார்கள் . இடையில் மற்றவர்கள் மட்டுமல்ல , வேலை , லட்சியம் எதுவுமே வரக்கூடாதென்பது அவர்கள் எதிர்பார்ப்பு . இவன் நார்மலாக இருக்கும் போது பார்ப்பது , பேச எத்தனித்தால் கண்டுக்காமல் போவது என அவனோடு அவள் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள் .
அவனுக்கு அந்த ஆட்டம் பொறுமையை சோதித்தது ...

 ஒரு வழியாக அவள் தனியாக தாண்டிப்போகும் கையை பிடித்துக் கேட்டான்
" என்ன உன் பிரச்சனை ?" . " ம் . பிளஸ் 2 பாஸ் பண்ணாதான் காலேஜ் போகமுடியும்னு சொல்றாங்க " , அவன் மேலும் கடுப்பானான் .
" ஹலோ நம்ம மேட்டர்ல கேட்டேன் ? " .
" நமக்குள்ள என்ன மேட்டர் , அப்படில்லாம் ஒண்ணுமில்லையே ! ".
அவள் சொன்னவுடன் அவன் கை லேசாக தளர்ந்தது .
" என்ன டைரக்டர் சார் , சின்ன ட்விஸ்டுக்கே ஷாக்காவுறீங்க ?! ' .
அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை .
" உங்களுக்கு தான் ஆல்ரெடி லவ்வ்ர் இருக்காளே , அப்புறம் ஏன் என் கைய பிடிக்கிறீங்க ?! . அவனுக்கு ஒன்றும் புரியவில்லை . இவள் என்ன உளறுகிறாள் என்று தோன்றியது . சிவா ஏதாவது ரீல் சுத்திவிட்டானா வேண்டும் யோசித்தான் . " நீ என்ன சொல்ற ? " . " நீங்க தானே நேத்து சொன்னீங்க , சினிமா தான் முக்கியம்னு அத தான் சொன்னேன் " .
அவனுக்கு லேசாக நிம்மதி பெருமூச்சு வந்தது ...

" நான் சொன்னேன் தான் ஆனா உன்ன பிடிக்கலேன்னு சொல்லலியே ?"
" நானும் சொல்லலியே ! " . இப்போ என்ன செய்யலாம் என்பது போல அவளை பார்த்தான் . " என் அப்பா , மாமா வுக்கெல்லாம் சினிமான்னா சுத்தமா பிடிக்காது " . " ஏன் படமே பார்க்க மாட்டாங்களா ?" .
" இல்ல இல்ல அவரும் சிவாஜி ரசிகர் தான் , ஆனா சினிமாவுல இருக்கரவாள சுத்தமா பிடிக்காது " . " ஓ சிவாஜியை பிடிக்கும் , ஆனா சிவாஜிக்காக வசனம் எழுதினவன , அவரை சினிமாவுல அழகா காட்டுறவன பிடிக்காது , என்ன ஒரு ஹைபோக்ரஸி | "  .
 " என்ன க்ரஸியோ தே ஆர் நாட் க்ரேஸி அபௌட் சினிமா ,
அதான் எனக்கு தெரியும் " . இது  நிச்சயம் ஒரு பெரிய விவாதத்துக்கான சின்ன தொடக்கப் புள்ளியாகவே பட்டது . ஆனால் இவளிடம் இங்கே வாதித்து ஒன்றும் ஆகப்போவதில்லை . அவள் வீட்டாரின் விருப்ப , வெறுப்புக்கு இவள் என்ன செய்வாள் ! ...

" சரி உனக்கு என் கூட பேச இன்ட்ரெஸ்ட் இருந்தா நாலு மணிக்கு மொட்டைமாடி ஸ்பாட்டுக்கு வா " அவன் நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.
" அப்போ நலுங்கு இருக்குமே , நான் அக்கா பக்கத்துல இருக்கணும் " .
" ஓகே அக்காவ கட்டிண்டே அழு " அவன் கொஞ்சம் கோபமாக சொன்னான்.
" நான் நாலு மணி தான் முடியாது சொன்னேன் " . இவன் கோவப்பட்டவுடன் அவள் முகம் அழப்போகும் குழந்தையை போல மாறியது . என்ன தான் பதிலுக்கு பதில் பேசும்  பெண்ணாக இருந்தாலும் மனதுக்கு பிடித்த ஆணின் கோபம் அவளை அசைத்துப்பார்த்தது . அவனுக்கு ஏதோ உறைக்கவே ,
" சாரி உன் கூட பேசணும்ன்ற ஆசையில கத்திட்டேன் " .
" பரவாயில்லை , நான் ஈவினிங் தோது பார்த்து வரேன் " , அவள் சொல்லிவிட்டு ஒரு காந்த பார்வையை வீசிவிட்டு நகர்ந்தாள் . அவன் இப்பொழுது கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான் . அவனுடன் கூடப்பிறந்த கோபத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டான் .
கோபமாக இல்லாமல் காதலோடு அவள் கையை பிடித்துக்கொணடே பேச வேணுமென்று மனம் ஏங்கியது . இந்த பேச்சுக்கு நடுவில்
தூரத்தில் இருந்து இவர்களது உரையாடல்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அவளது மாமாவை இருவரும் கவனித்திருக்கவில்லை ...

தொடரும் ...

முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்...

அவன் - அவள் - நிலா (1) ...








  
Related Posts Plugin for WordPress, Blogger...