30 September 2018

செக்க சிவந்த வானம் - CCV - விசுவல் ட்ரீட் ...


ரிவியூ விற்கு போவதற்கு முன்னால்  ஒன்றை சொல்லியே ஆக  வேண்டும் . பல ஹீரோக்களை சேர்த்து வைத்து படம் எடுக்கும் போது ( குறிப்பாக சிம்பு ) புது இயக்குனருக்கே நெஞ்சு வலி வரும் . ஆனால் 62 வயதில்  இரண்டு முறை ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து இத்தனை ஸ்டார் ஸை வைத்து அதுவும் ஈக்குவல் ஸ்பேஷ் கொடுத்து ஸ்க்ரீன்பிளே வை பாதிக்காமல் படமெடுப்பது என்பதெல்லாம் மணிரத்னம் மாதிரி ஆள்களுக்கு மட்டும் தான் சாத்தியம் ...

செக்க சிவந்த வானம் ( CCV ) படத்தின் தலைப்பை போலவே ரத்த சிவப்பான கேங்ஸ்டர் கதை . சேனாதிபதி ( பிரகாஸ்ராஜ் ) மறைவுக்கு பிறகு அவர் இடத்துக்கு யார் வருவது என்று மூன்று மகன்களுக்கும் ( அரவிந்த்சாமி, அருண்விஜய் , STR ) இடையே குடும்ப நண்பன் ரசூல் ( விஜய்சேதுபதி) உதவியுடன் நடக்கும் அதிகார போட்டியே  CSV . இது 2013 கொரியன் மூவி நியூ வேர்ல்ட் இல் இருந்து சுட்டது என்கிறார்கள் , நான் அந்த படம் பார்த்ததில்லை . ஆனால் மஹாபாரதம் , பொன்னியின் செல்வன் படித்திருக்கிறேன் ...

சினிமாவுக்கு வந்து 26 வருடங்கள் கடந்த பிறகும் அரவிந்தசாமி மெயின்டென் செய்யும் ஃபிட்னெஸ் பிரமிக்க வைக்கிறது . இவருக்கான பிரத்யேக ஃபைட் ஸீன் படத்துக்கு ஹைலைட் . மூத்தவனாக அப்பாவின் இடத்திற்கு வர நினைக்கும் இவரது ஏக்கம் புரிகிறது ஆனால்  அதற்காக செய்யும் கொலைகள் அதிர்கிறது . துபாய் ஷேக்குகளுடன் பிசினெஸ் ( என்ன எழவு பிசினெஸ்  வெளங்கல ) செய்யும் இரண்டாவது மகன் அருண்விஜய் . தாவி வந்து அப்பாவின் சேரில் உட்காரும் ஒரு ஸீன் இவரது கேரக்டருக்கு ஒரு சோறு பதம் . கடைக்குட்டி STR மூவரில் அதிகம் கவர்கிறார் , அப்லாஸ் அள்ளுகிறார் .


மூன்று பேரையும் போலீசாக வரும் விஜய் சேதுபதி தூக்கி சாப்பிட்டு விடுகிறார் . தாதாவோ , போலீசோ டயலாக் டெலிவரி ஒரே மாதிரி இருந்தாலும் உடல்மொழி யில் வித்தியாசம் காட்டுகிறார் . இவரது ஓப்பனிங்க் ஸீன் அண்ட் க்ளைமேக்ஸ் இரண்டுமே படத்துக்கு பெரிய ப்ளஸ் . மணி படம் என்றாலே விசுவல் ட்ரீட் . படத்தின் பட்ஜெட் பற்றாக்குறை அதிதி , டயானா உடைகளில் நன்றாக தெரிகிறது . இதிலும் சந்தோஷ் சிவன் கேமரா கழுகு போல சுத்தி நம்மை சொக்க வைக்கிறது . ஏ.ஆர்.ஆர். பாடல்களை தனியாக ஒலிக்க விடாமல் படத்தோடு சேர்த்து ஆர்.ஆர். ஆக பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம் ...

நேரத்தை  வீணடிக்காமல் பிரகாஸ்ராஜை கொல்லப்போகும் முதல் சீனிலேயே கதையை துவக்கி விடுகிறார் மணி . அடுத்து மூன்று மகன்களையும் , நண்பன் ரூசலையும் அவர்கள் தோரணையுடன் உடனே அறிமுகப்படுத்தி விடுகிறார் . இடைவேளை வரை யார் பிரகாஸ்ராஜை கொல்ல ஆள் அனுப்பினார்கள் என்கிற சஸ்பென்ஸை மெயின்டென் செய்திருக்கிறார்கள்  . மூன்று மணி நேரம் இழுக்காமல் இரண்டரை மணிக்குள் படத்தை முடித்தது நலம் . ஆனால் டீட்டைலிங் இல்லாமல் படம் ஜம்ப் ஆவது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை ...


சகோக்கள் கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் மோதிக்கொள்வது நெருடுகிறது . அப்பா எல்லோரையும் சுயநலமாக அவரைப்போலவே வளர்த்து விட்டார் என்று சின்ன டயலாக்குகளால் அதை சமன் கட்ட நினைப்பது சறுக்கல் . மணி படம் என்றாலே செயற்கையாக சிலர் பேசுவார்கள் . இதில் வாலே , போலெ என்று தியாகராஜன் பேசுவது , சபரிமலைக்கே பெண்கள் போகலாம் என்று தீர்ப்பு வந்துவிட்ட நிலையில் புருஷன்  கீப் வைத்திருந்தும் ஜோதிகா உருகுவது இதெல்லாம் ஓட்டவேயில்லை . எல்லா அடியாட்களையும் அருண்விஜய் ஒரே டயலாக்கில் தன்  பக்கம் இழுப்பது , ஹைடெக் துபாய் அபார்ட்மெண்டில் யாரோ வந்து போதை மருந்தை வைப்பதெல்லாம் பூ சுத்தல் ...

காட்ஃ பாதர் நினைவுக்கு வந்தாலும் கடல் , காற்று வெளியிடை சறுக்கலுக்கு பிறகு ஓரளவு நிறைவான படம் கொடுத்த இயக்குனருக்காகவும் , தனி ட்ராக் வைக்கலாமல் எல்லா கேரக்டர்களையும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்த திரைக்கதை யுக்திக்காகவும் , எத்தனை ஹீரோக்கள் இருந்தாலும் இது மணிரத்னம் படம் என நிரூபித்ததற்காகவும் . நடிகர்களின் பங்களிப்பு , டெக்கனிகள் ஆஸ்பெக்ட்ஸ் க்காகவும் செக்க சிவந்த வானத்தை ஒரு முறை அண்ணாந்து பார்க்கலாம் ...

ரேட்டிங்க் : 3.25 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 43 



10 August 2018

விஸ்வரூபம் 2 - VISHWAROOPAM 2 - வேஸ்ட் ஆஃப் எனர்ஜி ...


மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு நடுவே வந்ததால் ஹிட்டாகியிருக்க வேண்டிய விஸ்வரூபம் படம் ப்ளாக் பஸ்டரானது . பெரிய பப்ளிசிட்டியில்லாமல் வந்திருப்பதால் சுமாரான விஸ்வரூபம் 2  படு சுமாராகிப்போனது . விஸ்வரூபம் பார்க்காதவர்களுக்கு 2 சுத்தமாக புரியாது பார்த்தவர்களுக்கு ஓரளவு புரியும் ...

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் பேராபத்தை இந்திய ரா உளவாளி விஷாம் காஷ்மீரி & கோ தடுத்த பிறகு ஆப்கானிய தீவிரவாதிகள் இந்தியாவிற்கு வருவதோடு விஸ்வரூபம் படத்தை முடித்திருப்பார்கள்.  தீவிரவாதி ஓமரின்  சதியை காஷ்மீரி முறியடித்தாரா என்பதை எப்படா படத்த முடிப்பாங்க என்கிற அளவு நீட்டி முழக்கியிருப்பதே விஸ்வரூபம் 2 ...

கமல் வழக்கம் போல நடிப்பால் மட்டுமில்லாமல் ஷார்ப்பான டயலாக்கு களாலும் படத்தை தாங்குகிறார் . சக நடிகர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுத்தாலும் தனித்து நிற்கிறார் .அம்மா செண்டிமெண்ட் , ரொமான்ஸ் காட்சிகள் இரண்டிலும் அன்டெர்பிளே செய்து அசத்துகிறார். வில்லன் முஸ்லீம் என்பதால்  ஹீரோ முஸ்லிமை  தேசபக்தனாக முன்னிறுத்துகிறார் . ஒரு பிராமணனை தேசத்துக்காக உயிர் விடுபவனாக காட்டுவதால் இன்னொரு பிராமணனை தேச துரோகியாக்குகிறார் . இப்படி சமன் செய்வதாக நினைத்து  இயக்குனாராக குழப்ப மட்டுமே செய்கிறார் ...


ஆண்டிரியா வுக்கு ஆக்ஸனோடு சேர்த்து அசத்தல் துள்ளல் நடிப்பு . பூஜாவை வாரும் இடங்களில் வாவ் போட வைக்கிறார் . பூஜாவுக்கு பிராமண பாஷையோடு சேர்த்து கடலுக்குள் போகும் சீனும் . பாத்ரூமுக்குள் குளித்து கமலை  மூடேத்தும் சீனும் வைத்திருக்கிறார்கள் . சேகர் கபூர் , ராகுல் போஸ் எல்லோரும் நிறைவு . படத்திற்கு பெரிய மைனஸ்  முகமது ஜிப்ரானின்
( ஜிப்ரான் முகமது ஜிப்ரானாக பதவி உயர்வு !!! ) பின்னணி இசை . சொந்தமாக வும் போடாமல் பார்ட் 1 ஐ சரியாகவும் பயன்படுத்தாமல் சொதப்பி விட்டார் . குறிப்பாக விஸ்வரூபம் 1 இல் எவனென்று நினைத்தாய் பாடலோடு வரும் ஃபைட் படத்துக்கு ஹைலைட் . இதில் அதையே ஸ்லோவாக போட்டு சாவடிக்கிறார் ...

ஒளிப்பதிவு , கலை  , எடிட்டிங் என தொழில்நுட்பத்தில் படம் வேர்ல்ட் க்ளாஸ் .
திரைக்கதையிலும் கமல் இண்டெலெக்சுவளாக ப்ரீகுவல் , சீக்குவல் இரண்டையும் கலந்த நான் லீனியராக படத்தை சொல்லியிருக்கிறார் . இரண்டுமே சரியாக  சிங்க்  ஆனாலும் நமக்கு தான் ஸ்லோவாக பெரும்பாலான இடங்களில் நேச்சுரல் சவுண்டோடு நகரும் படம் கொட்டாவியை வர வைக்கிறது ...


இங்கிலாந்தில் தண்ணீருக்குள் ஏதோ கெமிக்கல் வெப்பனை  வைத்து சுனாமி யை வரவைக்க போவதாக இண்டெர்வெல்லில் முடிக்கிறார்கள் . அப்புறம் ராகுல் அண்ட் கமல் இருவருக்குமான பெர்சனல் சண்டையாக  படத்தை கொண்டு போகிறார்கள் . ஈஸ்வர் கேரக்டர் இடைச்செறுகளாகவே படுகிறது . க்ளைமேக்ஸ் சண்டையில் ரீ ரிக்கார்டிங் சொதப்பலால் விறுவிறு மிஸ்ஸிங் .
முதல் பாகத்தை போல பிரம்மாண்டம் காட்டாமல் சிறு வட்டத்துக்குள்ளேயே படம் சுற்றுவதை போல ஒரு ஆயாசம் ...

ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லும்  ஆப்கான் தீவிரவாதி கமலிடம் நட்பு பற்றியெல்லாம் பேசி பாடம்  எடுப்பது தமிழ்படம் . கமல் கடைசி ஆசை என கேட்கும் போது  என்ன நமாஷ் பண்ணனுமா என ராகுல் போஸ் கேட்பது சீரியஸ் சீனில் நல்ல தமாஷ் . " நீங்க எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை பிரதர் ஆனால் தேச துரோகியாக இருக்கக்கூடாது " என கமல்  டயலாக் வைத்திருக்கிறார் . அதே போல " நீங்க எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் பிரதர் ஆனால் குழப்பக்கூடாது " என்று நாமும் சொல்லலாம்.  படத்திற்கு இருக்கும் சொற்ப ஓப்பனிங்கை பார்க்கும் போது தான் ஆண்டவர் ஏன் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தாரென்று புரிகிறது . நிச்சயம் விஸ்வரூபம் 1 க்கு திருஷ்டி பரிகாரமாக வந்திருக்கும் விஸ்வரூபம் 2 வேஸ்ட் ஆஃப் எனர்ஜி ஃபார் கமல் அண்ட் அஸ் ...

ரேட்டிங்   : 2.5* / 5 * 

ஸ்கோர் கார்ட் : 40 


9 June 2018

காலா - KAALA - கலர்லெஸ் ...


சூப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவரு முத தடவையா கட்சி ஆரம்பிச்சு 234 தொகுதிகள்ளையும் போட்டியிடறேன்னு சொன்னதுக்கப்புறம் வந்த படம்ன்றதுனால ஹைப் பத்தி சொல்லவே வேணாம் . ஆனா ரெண்டாவது தடவையா சேர்ந்திருக்குற ரஞ்சித் - ரஜினி காம்போ ஜெயிச்சிருக்கான்னு கேட்டா 50:50 தான் சொல்ல முடியும் ...

மும்பை தாராவி ல இருக்குற தமிழ் தாதா காலா எ கரிகாலன் ( ரஜினிகாந்த் ) அங்க இருக்குற மக்களுக்கு அவர் தான் எல்லாமே . கிட்டத்தட்ட 40000 கோடி மதிப்பிருக்குற அந்த ஏரியாவை ரியல் எஸ்டேட் பிஸினஸுக்காக வளைச்சுப் போட  பாக்குறார் லோக்கல் அரசியல்வாதி ஹரிதாதா ( நானா படேகர் ) . நாயகன் படத்துல வர ஒரு சீன முழு கதையாக்கி குடும்ப செண்டிமெண்ட் , நடப்பு  அரசியல் , ஆரிய ! திராவிட ! சித்தாந்தம் எல்லாத்தையும் சேர்த்து ரஜினி எனும் கருப்பு வண்ணத்தால் குலைத்துக் கொடுத்திருக்கிறார் ரஞ்சித் ...

கபாலி மாதிரியே சூப்பர் ஸ்டாருக்கு வயசுக்கு ஏத்த ரோல் . பேரன் பேத்தி எடுத்து 60 வயசு மணிவிழா கொண்டாடினாலும் மனுசன் ஸ்டைல் , ஆக்சன் ல பின்னி பெடலெடுக்குறார் . ரஜினி ய இன்ச் பை இன்ச்சா ரசிக்கறவங்களுக்கு படம் வரப்பிரசாதம் . ஊருக்கே தலன்னாலும் மனைவிக்கிட்ட பம்முறதும் , பழைய காதலியை பார்த்து பரவசமாரதும் னு மனுஷன் பழைய குறும்ப விடவேயில்லை . ஸ்டேஷன் ல மினிஸ்டர பார்த்து " யார்யா இவரு " ன்னு கேக்குற ஸீன் ஒன்னு போதும் சூப்பர் ஸ்டாரோட  ஹியூமர் டச்சுக்கு ...


இண்டெர்வெல்லுக்கு அப்புறமா விஸ்வரூபம் எடுத்தாலும் ரஜினிக்கு ஈக்குவலான ரோல் ல நானா படேக்கர் . " உன்னைத்தான்  கொல்ல நெனச்சேன் , ஆனா உன் மனைவியும் மகனும் செத்துட்டாங்க " ன்னு ஸாரி சொல்லும் போது கொடூர வில்லனா இருந்தாலும் நடிப்பால் நெகிழ வைக்கிறார் . அவருக்கும்  ரஜினிக்குமான நேரடி சீன்கள் படத்துக்கு பெரிய ஹைலைட் . ஈஸ்வரி ராவ் என்கிற நடிகையை பார்க்க வைத்த ரஞ்சித்துக்கு நன்றி . ரஜினி யின் பழைய காதலி பற்றி பேச்சு வரும்போது வருத்தத்தை கூட  புருஷனை விட்டுக்கொடுக்காத முகபாவத்தோடு  காட்டும் பாங்கு அழகு ...

கறுப்புக் கூட்டத்துக்கு மத்தியில் காலா வின் முன்னால் காதலி ஸரீனா வாக
வரும் ஹுமா குரேஷி வயசானாலும் வெள்ளை அழகு கொள்ளை அழகு . ஆனால் இவர் கேரக்டர் ஸ்கெட்ச்சில் குழப்பம் தெரிகிறது . படம் நெடுக தள்ளாடிக்  கொண்டே இருக்கும் சமுத்திரக்கனி  நடிப்பால் ஸ்டெடியாக நிற்கிறார் . ரஜினி யின் மகன்களாக  வரும் மணிகண்டன் , திலீபன் , அவரின் தோழி மராத்திப்பெண் , சம்பத் என எல்லாருமே மிக இயல்பாக நடித்திருப்பது பலம் .  பெரும்பாலும் ஒரே லொகேஷனில் பயணப்படும் படத்தை தொய்வில்லாமல் தூக்கி நிறுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் முரளி , எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இருவருக்கும் பாராட்டுக்கள் . சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் கபாலி அளவு கவரவில்லை . ஆனால்  படத்தோடு ஒன்றி வருவது ஆறுதல் ...

ரஞ்சித்துக்கு ரெண்டாவது முறையாக சூப்பர் ஸ்டாரோடு படம் , அதே தாதா வேடம் இந்த முறை மலேசியா இல்லை மும்பை . மனைவிக்கு பதில் ரொமான்ஸ் செய்ய முன்னாள் காதலி . மகளுக்கு பதில் அடிதடிக்கு மகன் . வெள்ளைத்தோல் மலேஷிய வில்லனுக்கு பதிலா  வெள்ளை ஜிப்பா போட்ட வட  இந்திய வில்லன் . இப்படி கபாலிக்கும் , காலாவுக்கும் நிறையவே ஒற்றுமை . ஆனா படம் பார்க்கும் போது இத யோசிக்க விடாம பாத்துக்கிட்டது இயக்குனரோட சாமர்த்தியம் . ரஜினி யை பார்த்து விட்டு அனுமதியில்லாமல்  போகும் நானா படேகரை திரும்ப ரஜினியிடமே வந்து பெர்மிசன் கேக்க வைக்கும் ஸீன் மாஸ் ...


பால் தாக்கரேவை நினைவுபடுத்தும் நானா படேகர் கேரக்டர் , சிவசேனை போன்ற கட்சிக்கொடி , ரஜினி படிக்கும் ராவணகாவியம் , தூய்மை மும்பை , மனதின் குரல் என மோடி யை சீண்டிப்பார்க்கும் சீன்கள் , வில்லன் ஆள் கொல்லப்படும் போது ஆற்றில் கவிழும் விநாயகர் சிலை , முஸ்லீம் பெண் ஸெரீனா வை காலில் விழ சொல்லும் போது பின்னால் காட்டப்படும் ராமர் சிலை , கிளைமேக்ஸ் சண்டையில் நானா படேகரை இராமனாகவும் , ரஜினியை இராவணனாகவும் சித்தரிப்பது என்று படம் நெடுக வெறும் குறியீடுகளாக இல்லாமல் குடியிருப்புகளாகவே ரஞ்சித் தனது  அரைவேக்காடு அரசியல் சித்தாந்தங்களை ரஜினியை பயன்படுத்தி காட்டியிருக்கிறார் ...

தாராவி யின்  தலைவர் காலா வும் தனது மக்களுக்கு எந்த வசதியும் செய்யவில்லை , செய்ய வரும் மற்றவர்களையும் தொறத்துகிறார் . கடைசிவரை அது தமிழ்நாடு போலவே முன்னேறாமல் போராட்டம் மட்டுமே செய்கிறது . நிஜத்தில் போராட்டங்கள் தீர்வாகாது என்று சொல்லிவிட்டு , நிழலில் போராட்டம் மட்டுமே செய்யும் ரஜினியை போல நாமும் பாவம் யாரவது அந்த ஸ்லம் மக்களுக்கு வீடு கட்டுவார்களா என குழம்பியே பார்க்கிறோம் . அதுவும் இண்டெர்வெல்லுக்கு பிறகு நெறைய சீன்கள் தமிழ் நியூஸ் சேனல் பார்ப்பதை போன்ற உணர்வையே தருகிறது ...

இராமன் ஆர்யன் , இராவணன் திராவிடன் சரி . ஆனா இராமன் சத்ரியன் , இராவணன் பிராமணன் , அப்போ யாரு ஆர்யன் ? யாரு திராவிடன் ? . இந்தியா முழுமையையும் இணைத்திருக்கும் இந்து மதத்தை சிதைக்கும் நோக்கில் கார்டுவெல் விட்ட கட்டுக்கதையை ஆரிய திராவிட வாதம் . அதில் ரஞ்சித் சிக்கியதில் ஆச்சர்யமில்லை ஆனால் ரஜினி ? . வெள்ளை அழகு , கருப்பு அசிங்கம் என பார்க்காமல் கருப்பும் , சிகப்பும் அழகு என்கிறார்கள் . இரண்டுமே அழகு என கொள்ளாமல் கருப்பை மட்டும் தூக்கிப்பிடிப்பதும் ஒருவகை ஆணவம் தானே ?! . அதிகாரத்துக்கு எதிரான எளியவர்களின் போராட்டமே காலா . ஆனால் ரஞ்சித் அதை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் கலர்ஃபுல்லான படமாக கொடுக்காமல் தனது கருப்பு சித்தாந்தங்களை அதிகம் திணித்து கலர்லெஸ் ஆக்கி விட்டார் ...

ரேட்டிங்க்   : 3 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 42 


13 May 2018

இரவுக்கு ஆயிரம் கண்கள் - பிரகாசம் ...


ரவுக்கு ஆயிரம் கண்கள் , இரும்புத்திரை இரண்டில் முன்னதை முதலில் பார்த்ததற்கு காரணம் அருள்நிதி  தேர்ந்தெடுக்கும் கதைக்களன் . இந்த முறையும் அவர்  முயற்சி வீண்போகவில்லை . ஒரு இரவு , ஒரு சம்பவம் , நான்கு பேர் இப்படி கதை முடிச்சுள்ள படங்களை நிறைய பார்த்திருப்போம் . சமீபத்திய உதாரணம் விழித்திரு . அந்த படம் போல நம்மை தூங்க வைக்காமல் இரவு முழுக்க விழிக்க வைத்த  இயக்குனர் மு.மாறனுக்கு பாராட்டுக்கள் ...

கால் டாக்ஸீ டிரைவர் பரத் ( அருள்நிதி ) தனது காதலி சுசீலா ( மஹிமா ) வுக்கு தொல்லை கொடுக்கும் கணேஷ் ( அஜ்மல் ) வீட்டுக்கு இரவில் போகிறார் . அங்கு ஒரு கொலை நடந்திருக்கிறது , ஏற்கனவே சிலர் கணேஷை கொலை செய்யும் நோக்கத்தோடு அங்கே வந்திருக்கிறார்கள் . பரத்தை ஏன் போலீஸ் துரத்துகிறது ? உண்மையான கொலையாளி யார் ? கணேஷை ஏன் கொலை செய்ய அலைகிறார்கள் . இந்த அத்தனை கேள்விகளுக்கும் அங்கங்கே க்ளூ வைத்து அழகாக தெளிவாக ( எக்கச்சக்க கேரக்டர்கள் கொஞ்சம் குழப்பினாலும் )  சொல்வதே இ.ஆ.க . ஒரே கண்டிஷன் ஒரு சீனையும் தவற விடக்கூடாது ...

அருள்நிதி வழக்கம் போல கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைதியாக நடித்திருக்கிறார் . எந்த இடத்திலும் ஹீரோயிசத்தை தலை தூக்க விடாமல் திரைக்கதையில் பயணித்திருப்பது அவரை மெச்சூரிட்டியை காட்டுகிறது . அவரது பயணம் இதே போல தொடர வாழ்த்துக்கள்  . மஹிமா சைனீஸ் மாமோ போல நன்றாக இருக்கிறார் . பதட்டப்படும் போது கண்கள் நன்றாக பேசுகிறது . அஜ்மல் கேரக்டர் திருட்டு பயலே பிரசன்னா வை நினைவு படுத்தினாலும் நல்ல தேர்வு . மெய்ன் கேரக்டர்களை தொடர்ந்து நம்மை அதிகம் கவர்பவர் ஆனந்தராஜ் ...



ஆடுகளம் முருகதாஸை வீணடித்திருக்கிறார்கள் . சாயா சிங் கேரக்டர் படத்தை நகர்த்துவதற்கு உதவியிருந்தாலும் இவருக்கும் ஜான் விஜய் கேரக்டருக்கும் சிங்க் ஆகவில்லை . காதலித்த பெண்ணை கை பிடிக்காததால்
சாயா வை தொடாமல் இருக்கும் விஜய் வேறொரு பெண்ணோடு ஏன் போக வேண்டும் ? பணக்காரியாக இருக்கும் சாயா சிங் விஜய் செய்யும் டார்ச்சர்களை ஏன் ஐந்து வருடங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் போன்ற கேள்விகள் எழாமல்  இல்லை ...

சம்பவங்கள் பெரும்பாலும் இரவில் நடந்தாலும் நம்மை விழித்துக்கொண்டே வைத்திருக்கும் திரைக்கதை  அருமை . ஒரு சில கேரக்டர்கள் வீண் போல தோன்றினாலும் கேரக்டர்களின் வாயிலாகவே சின்ன சின்ன பிளாஷ்பேக்கில் கதையை நகர்த்திய விதம் சிறப்பு . கமர்ஷியலுக்காக  பாட்டு , லவ் , செண்டிமெண்ட் என்று நேரத்தை வீணடிக்காமல் ஒரே ட்ராக்கில் பயணித்திருப்பது மிகச்சிறப்பு . சாம்.சி.எஸ் சின் பின்னணி இசை படத்திற்கு தேவையான பெப்பை கொடுக்கிறது ...

படத்தின் ஆரம்பத்திலேயே வரும் போலீஸ் அதன் பிறகு க்ளைமேக்ஷில் வந்து பழைய படம் போல யார் கொலையாளி என சொல்லி முடித்து வைப்பது சறுக்கல் . அவர்களின் விசாரணையை ஒரு வேலை படத்தின் நேரத்தை நினைத்து தவிர்த்திருக்கலாம் . இது போன்ற மிஸ்டரி படங்களில் க்ளைமேக்ஸ் மிகவும் முக்கியம் . ஹைப் கொடுத்து கடைசியில் சொதப்பி விடுவார்கள் . இதில் அது போலல்லாமல் இண்டெர்வெல் , கிளைமேக்ஸ் இரண்டையும் கட்சிதமாக முடித்திருக்கிறார்கள் . க்ரைம் நாவல் பிரியர்களுக்கு படம் பிரசாதம் . மொத்தத்தில் விறு விறு திரைக்கதையோடு வந்திருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் பிரகாசம் ...

ரேட்டிங்க்            : 3.25 * / 5 *

ஸ்கோர்  கார்ட் : 43 

11 February 2018

கலகலப்பு 2 - KALAKALAPPU 2 - குறைவு ...


வெற்றியடைந்த படத்தின் சீக்குவல் வருவது கோலிவுட்டில் பிரபலமாகி வருகிறது . அந்த வரிசையில் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு 2 . முதல் பாகத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மிர்ச்சி சிவா மட்டும் ரீட் டைன் செய்யப்பட்டிருக்கிறார் . அப்படியே அந்த பாகத்தின் ரெஃப்ரெஷ்ஷான காமெடியையும் ரீட் டைன் செய்திருக்கலாம் ...

மந்திரியின் சொத்து ரசிகசியங்கள் அடங்கிய லேப்டாப் பை  வைத்துக்கொண்டு அவரை பணம் கேட்டு மிரட்டுகிறார் ஆடிட்டர் . ஏற்கனவே பணப்பிரச்சனையில்  இருக்கும் ஜீவா , ஜெய் மற்றும் அந்த பிரச்சனைக்கு காரணமான சிவா இவர்கள் கையில் லேப்டாப் சிக்க பிறகு என்ன ஆனது என்பதை தனது வழக்கமான பாணியில் அதே வழக்கமான நட்சத்திர பட்டாளத்துடன் சேர்ந்து சொல்லியிருக்கிறார் சுந்தர்.சி . முதல் பாகத்தில் ஹோட்டல் , வைரத்துக்கு பதில் இதில் மேன்ஷன் , லேப்டாப் என மாற்றியிருக்கிறார்கள் ...

ஜீவா , ஜெய் இருவரும் ஜி ஜி என்று அழைத்துக் கொள்கிறார்கள் . கேத்தரீனா , நிகில் இருவரும் சீ சீ என்று சொல்லும் அளவுக்கு இல்லாமல் கவர்ச்சீயாக வந்து ஆட்டிவிட்டு சாரி ஆடிவிட்டு போகிறார்கள் . அவ்வளவு பெரிய பட்டாளத்தில் மிர்ச்சி சிவா வை தவிர ராதா ரவி யின் உதவியாளர் , ரோபோ சங்கர் , யோகி பாபு போன்றோர் கவனிக்க வைக்கிறார்கள் ...


ஒரு செலஃபீ பாட்டு தவிர மற்றவை ஸ்பீட் பேக்கர்ஸ் , சுந்தர் சி படத்தில் லாஜிக் கையெல்லாம் காமெடி மறக்க வைத்து விடும் . கலகல 2 வில் படம் நெடுக திகட்டினாலும் ஏதாவது ஒரு கேரக்டர் ஏதாவது செய்து கொண்டேயிருந்தது நம்மை என்கேஜ் செய்துவிடுகிறது . ஜெய் , ஜீவா , மிர்ச்சி சிவா காரைக்குடியில் தப்பிக்கும் சீன்ஸ் மற்றும் யோகி பாபு மந்திரி அடியாட்களிடம் படும் பாடு படத்துக்கு ஹைலைட் ...

முதல் பாகத்தின் கிளிஷேக்கள் படம் நெடுக தெறிக்க விட்டிருக்கிறார்கள் . ஒரு லெவெலுக்கு மேல் கலகலப்புக்கு கைகலப்பை மட்டும் நம்பியிருப்பது போரடிக்கிறது . படம் போவது தெரியவில்லை தான் ஆனால் போய்க்கொண்டேயிருப்பது தொய்வு . ஸ்கிரீனில் காமெடியன் பேரை பார்த்தாலே சிரிப்பவர்களுக்கும் , குழந்தைகளுக்கும் படம் பிடிக்கும் . மற்றவர்களுக்கு வயிறு வலிக்கவெல்லாம் சிரிக்க முடியாது விட்டு விட்டு வேண்டுமானால் சிரிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41 *

ரேட்டிங்க்          : 2.5 * / 5 *

ஏமாலி - YEMAALI - ஏமாற்றம் ...



முகவரி , நேபாளி பட இயக்குனர் துரை நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கிருக்கும் படம் ஏமாலி . ளி க்கு பதில் லி வருகிறதே என்கிற டைட்டில் குழப்பத்திற்கு படத்தில் விடை சொல்கிறார்கள் . மற்ற குழப்பங்களை நம்மிடமே விட்டு விடுகிறார்கள் !!!

மாலி ( சாம் ) க்கு அவர் லவர்  ரிது ( அதுல்யா ) பிரேக் அப் சொல்லிவிட அவரை கொலை செய்ய முடிவு செய்கிறார் மாலி .  இதை நெருங்கிய நண்பரான அரவிந்திடம் ( சமுத்திரக்கனி ) சொல்ல அவரோ மாட்டிக்கொள்ளாமல் எப்படி கொலை செய்வதென ரிகர்சல் பார்த்து விட்டு பிறகு செய்யலாம் என ஐடியா கொடுக்கிறார் . அவர்களே போலீசாக கற்பனை செய்து கொண்டு அந்த ஐடியாவை செயல்படுத்துகிறார்கள் . கற்பனையிலும் சரி , நிஜத்திலும் சரி அந்த நல்ல ஐடியாவை ஒழுங்காக செயல்படுத்தாமல் ஏமாந்திருப்பதே ஏமாலி ...

சாம் ஜோன்ஸ் புது முகம் என்கிற பதட்டம் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார் . காதலா , காமமா என்று அவர் கேரக்டர் ஒட்டாதது போலவே  முகத்துக்கு தாடியும் . மழுங்க சேவ் செய்து போலீசாக வரும் போது மேன்லி யாக இருக்கிறார் . திரும்பவும் சி.பி.ஐ ஆபீஸராக வரும் போது க்யா , ஹை என தேவையில்லாமல் அவரை ஹிந்தி பேச வைத்து வெறுப்பேற்றுகிறார்கள் . நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அவர் மேலும் வளர வாழ்த்துக்கள் ...


சமுத்திரக்கனி யை வியாபாரத்துக்காக கோர்த்திருக்கிறார்கள் . மனுஷனும் படம் முழுக்க வந்தாலும் வழக்கம் போல  நாலு வார்த்தை அட்வைஸ் செய்கிறார் . இவருக்கும் திவ்யா ( ரோஷினி ) வுக்கும் இடையேயான
டிராக் அந்த ஜோடியை போலவே சுத்தமாக ஓட்டவேயில்லை . சிங்கம்புலி , பாலசரவணன் லேசாக கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள் ...

சில வருடங்களாகவே காதல் தோல்வியால் இளம்பெண்கள் கொலை செய்யப்படுவதை மையப்படுத்தி கதை பண்ணியிருக்கிறார் இயக்குனர் . அதில் கொலை செய்வதற்கு முன் போலீஸ் கோணத்திலிருந்து விசாரணை என்கிற உத்தியையும் புகுத்தியிருப்பது புத்திசாலித்தனம் . ஆனால் புது இயக்குனர்கள் கூட  பக்காவாக ஹோம் ஒர்க் செய்து மெனெக்கடும் வேளையில் அனுபவ இயக்குனரான துரை நல்ல கதையை ஒழுங்காக எக்சிகியூட் செய்யாமல் கோட்டை விட்டிருப்பது துரதிருஷ்டம் . மாலி - ரிது காதல் ( காம ) காட்சிகள் சுத்த பேத்தல் ...

ஹிரோயின் சிகரெட் பிடிக்கிறார் , வேறொரு ஐடி பெண் விசாரிக்கும் போலீசையே ஜல்சா பண்ணுவது போல பேசுகிறார் . ஒரு காலத்தில் டீச்சர் னா
கொண்டையும் , டாக்டர் னா கண்ணாடியும் இருப்பது போல இப்பொழுதெல்லாம் ஐடி பெண்கள் னா அப்படியிப்படி என்று கேரக்டர் அஸ்ஸசினேஷன் செய்து விடுகிறார்கள் . ஜாலிக்காக செய்யும் காதலுக்காக ஒருவன் கொலை அளவு போவானா என்கிற கேள்வி பெரிதாக எழுகிறது . அதை கன்வின்சிங்காக சொல்வதற்கும் துரை  தவறி விட்டார் . அதே போல கற்பனை , நிஜம் இரணடையும் சரியான கலவையில் சொல்லத்தெரியாமல் குழப்பியிருக்கிறார்கள் . நல்ல கான்செப்ட் இருந்தும் அமெச்சூர்டாக எடுத்திருப்பதால் ஏமாலி நமக்கு மட்டுமல்ல எடுத்தவர்களுக்கும் ஏமாற்றமே ...

ஸ்கோர் கார்ட் : 39

ரேட்டிங்க்          : 2 * / 5 * 


14 January 2018

தானா சேர்ந்த கூட்டம் - TSK - தப்பிச்சுக்கும் ...


மீப காலமாக சூர்யாவுக்கு  எந்த படமும் கை  கொடுக்காத நிலையில் ஹிட் கொடுத்த இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவர் சேர்ந்திருக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம் . இந்த படம் கை கொடுத்ததா ? பார்க்கலாம் ...

நீரஜ் பாண்டே இயக்கத்தில் ஹிந்தியில் வெளி வந்த Special 26 ன் ஒரிஜினல் கதையை நமக்கேற்றவாறு மாற்றி எடுத்திருப்பதே டிஸ்கே . இருப்பவர்களிடம் இருந்து ஏமாற்றி பறித்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் ராபின்ஹூட் கதை தான் . அதில் காமெடி , செண்டிமெண்ட் கலந்து தனக்கேயுரிய பாணியில் தந்திருக்கிறார் இயக்குனர் ...

சூர்யா ஸ்டிஃப்பாக வந்து பயமுறுத்தாமல்  ஃப்ரெஸ்ஸாக இருப்பது குளிர்ச்சி . சிபிஐ ஆஃபீசராக மிடுக்கும் , காதல் காட்சிகளில் துடுக்கும் அவருக்கு இயல்பாகவே வருகிறது . மெதுவாக நகரும் திரைக்கதையில் அவர் பன்ச்  எதுவும் பேசி  நம்மை பஞ்சராக்காமல் விட்டது சிறப்பு . கீர்த்தி சுரேசுக்கு தொடர்ந்து பெரிய ஹீரோக்களுடன் படம் புக் ஆவதால் நிறையவே பூரிப்பு தெரிகிறது ( முகத்துல தாங்க ) . பஸ்சுக்கு லேட் ஆயிடுத்து அதனால பஸ் ஸ்டாப்புலயே படுத்துட்டா என்பது போல இவரது கேரக்டர் பற்றி  ஒருவர் சூர்யாவிடம் விளக்குவது செயற்கையாகவே படுகிறது . மற்றபடி லூசுப்பெண்ணாக இவரை காட்டாமல் விட்டதற்கு நன்றி ...


படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் ரம்யா கிருஷ்ணன் ஜொலிக்கிறார் . அவர் ஜான்சி ராணி ஃப்ரம் சிபிஐ என்று சொல்லும் போது  நம் வீட்டுக்கே ரெய்ட் வந்தது போல பயம் வருகிறது . ஆனந்தராஜ் , ஆர்.ஜே.பாலாஜி இருவருமே கிடைத்த கேப்பில் கடா வெட்டுகிறார்கள் . சுரேஷ் மேனன் வில்லனாக நல்ல வரவு . கலையரசன் , கார்த்திக் கவனிக்க வைக்கிறார்கள் . அனிருத்தின் இசையில் ஏற்கனவே சொடுக்கு மேல பெரிய . ஹிட் . பி.ஜி.எம் மில் இரைச்சலை தவிர்த்திருக்கிறார் ...

கதைக்களம் 80 களில் நடப்பதால் மீடியாக்காரர்கள் மைக்கை தூக்கிக் கொண்டு வரும் தொந்தரவு இல்லாமல் சூர்யா & கோ வால் ரெய்டு செய்ய முடிகிறது . நம்மாலும் லாஜிக்கை கொஞ்சம் மறக்க முடிகிறது . ஜெண்டில்மேன் படத்தை நினைவுபடுத்தினாலும் லஞ்சத்தால் திறமையானவர்களுக்கு  மறுக்கப்படும் வாய்ப்புகளை சரியான கோணத்தில் அலசுகிறது டிஸ்கே . படத்தில் தெளித்து விட்டாற்போல வரும் ப்ளாக் காமெடிகளில் விக்னேஷ் சிவனின் டச் தெரிகிறது ... 

மாஸ் ஹீரோ கால்ஷீட் , ஆக்சன் சப்ஜெக்ட் கையிலிருந்தும் பக்கா கமர்ஷியலாக எடுக்காமல்  அடக்கி வாசித்திருக்கிறார்கள் . பாடல்கள் நடுநடுவே ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் போல வருவதை தவிர்த்திருக்கலாம் .
இரண்டாம்  பாதி ஸ்லோவாகவே நகர்கிறது . க்ளைமேக்ஸுக்கு முந்தின ட்விஸ்ட் அருமை . பண்டிகைக்கு ஏற்ற பக்கா விருந்தாக இல்லாவிட்டாலும் பொங்கல் விடுமுறைகளால் வசூலில் தானா சேர்ந்த கூட்டம் தப்பிச்சுக்கும் ...

ரேட்டிங் : 2.75 * / 5 * 

ஸ்கொர் கார்ட் : 42


Related Posts Plugin for WordPress, Blogger...