27 August 2013

தலைவா - THALAIVAA - TIME TO LEARN ...


ரு படம் சொல்லப்பட்ட தேதியில் ரிலீசாகாமல் ஏதோ ஒரு காரணத்தால் தடை செய்யப்படும் போது அதற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது . அதற்கு சமீபத்திய உதாரணம் விஸ்வரூபம் . தமிழகத்தை விடுத்து உலகமெங்கும் படம் ரிலீசானாலும் மற்ற இடங்களில் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்சாலும் , ரசிகர்களின் மனமார்ந்த ஆதராவலும் படம் இரண்டு வாரங்கள் கழித்து ரிலீசாகியும் தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது . ஆனால் அதே வரிசையில் பிரச்சனையில் சிக்கிய தலைவா ஏனோ திக்குமுக்காடி விட்டது ...

மும்பை வாழ் தமிழர்களின் நலனுக்காக பாடுபடும் தாதா அண்ணா (எ) ராமதுரை  ( சத்யராஜ் ) . வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் மகன் விஷ்வா
( விஜய் ) வின் கண் முன்னாலேயே அண்ணா இறந்து விட அவர் விட்ட பணியை தொடர தலைமைப் பொறுப்பேற்கும் மகனின் கதையே தலைவா ...


விஜய் வழக்கம் போல ஆட்டத்திற்கு தவிர வேறெதற்கும் அதிகம் மெனக்கெடவில்லை . இவர் வெள்ளை சட்டை , தடிமன் மீசை யுடன் தலைவனாக வரும் பின்பாதியை விட ஆட்டம் பாட்டம் என முன் பாதியில் வரும் நார்மல்  விஜயாகவே அதிகம் கவர்கிறார் . இதுவே கூட படத்திற்கு பெரிய சறுக்கலோ என்று தோன்றுகிறது . அமலா பால் இயக்குனர் விஜய் படங்களில் கூடுதல் அழகாக இருக்கிறார் . அவர் என்ன தான் அடக்க ஒடுக்கமாக வந்தாலும் சிந்து சமவெளி சீன்கள் கண் முன் வந்து நம்மை சீழ் படுத்துகின்றன ...

சத்யராஜ் சண்டைக் காட்சிகளில் வாயை கோணிக் கொள்வதை இன்னும் விடவில்லை . மற்றபடி வயதான தாதா கதாபாத்திரத்தில் கவர்கிறார் . சந்தானம் ஜவ்வென்று இழுக்கும் முன்பாதியை ஜிவ்வென்று ஆக்குகிறார் . சாம் ஆன்டர்சன் அனாவசிய இடைசெருகல் . நாசர் , பொன்வண்ணன் போன்றோர் சரியான தேர்வு . வில்லன் விஷயத்தில் அப்படி சொல்ல முடியவில்லை . ஜி.வி யின் இசையில் " வாங்கன்னா " தாளம் போட  வைத்தாலும் பின்னணி இசை பின்னடைவு . ஒளிப்பதிவு , எடிட்டிங் இரண்டும் படத்திற்கு தேவையான அளவு இருக்கின்றன ...டைட்டிலிலேயே மணிரத்னம் , ராம்கோபால் வர்மா , ப்ரியதர்சன்  போன்றோருக்கு நன்றி தெரிவித்து தனது முந்தைய படங்கள் போலல்லாமல் கொஞ்சம் நேர்மையை காட்டியதற்காக இயக்குனர் விஜயை பாராட்டலாம் . இன்ஸ்பைர் ஆகி படம் எடுக்கலாம் , அதற்காக சீன்களை கூட புதிதாய் யோசிக்காமல் ஈயடிச்சான் காப்பியா அடிப்பார்கள் ? சாரி விஜய்  . இன்டர்வெல் ப்ளாக் , டேப்பிற்காக வில்லனும் , விஜயும் அலையும் சீன் போன்ற சிலவற்றை தவிர பெரும்பாலும் படம் நீளமாக இழுத்து ஒருவித அயர்ச்சியை தருகிறது ...

ஆய் , ஊய் என்ற சத்தமில்லாமல் ஒரு நாயகன் ஸ்டைல் ஆக்சன்  படத்தை விஜயை  வைத்து இயக்குனர் விஜய் எடுக்க நினைத்ததில் தப்பில்லை . ஆனால் அதை செயல்படுத்தியதில் நிறைய கவனம் செலுத்தியிருக்க வேண்டும் . ஏனெனில் இது போன்ற தாதாயிச படங்களில் இருக்கும் விறுவிறுப்பு படத்தில் டோட்டலி மிஸ்ஸிங் . மணிரத்னம் காட் பாதர் இன்ஸ்பிரேஷனில் எடுத்திருந்தாலும் அடுத்த தலைமுறைக்கு ஒரு ட்ரென்ட் செட்டராக இருந்த படம் நாயகன் . அதே போல நடிகர் விஜய் நடிப்பை மட்டுமல்ல ஒரு பிரச்சனையை நேரடியாக சமாளிக்கும் தைரியத்தையும் கமல்ஹாசனிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் . தலைவா இரண்டு விஜய்களுக்கும் டைம் டு லேர்ன் ...

ஸ்கோர் கார்ட் : 40


25 August 2013

மழலை - எனது குறு குறும்படம் ...


லைஞர் டி.வி யில் ஒளிபரப்பாகும் நாளைய இயக்குனர் போல ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் விளம்பர உலகம் என்றொரு நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள் . இறுதி சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படத்தின் இயக்குனருக்கு பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்குவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்பதே இதன் சிறப்பம்சம் . இந்த போட்டிக்கான முதல் சுற்றில் எனது குறும்படம் நல்லதோர் வீணை தேர்ந்தெடுக்கப்படவே அடுத்த சுற்றுக்கான போட்டியாக மழைநீர் சேகரிப்பு என்கிற தலைப்பில் அதனை பற்றி விளக்கும் விதமாக இரண்டரை நிமிடங்களுக்கு மிகாமல் ஒரு குறும்படத்தை இயக்க சொல்லியிருந்தார்கள் ...

இது போன்ற நிபந்தனைக்குட்பட்ட போட்டிகளில் நமது சுதந்திரம் பாதிக்கப்படும் அசௌகரியம் இருந்தாலும் நமது திறமையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருந்ததால் எனது டீமுடன் களத்தில் இறங்கிவிட்டேன் . முப்பது செகன்ட்களுக்குள் ஒரு விளம்பரம் எடுத்து விடலாம் , அதே போல ஐந்து நிமிடங்களுக்கு குறும்படம் எடுக்கலாம் . ஆனால் இதில் இரண்டரை நிமிடங்களுக்குள் படம் இருக்க வேண்டும் அதே நேரம் அந்த தலைப்பை பற்றிய முழு விளக்கமும் இடம்பெற வேண்டுமென்பதே எனக்கு விடப்பட்ட சவால் . ஒரு வழியாக படத்தை எடுத்து சேனலுக்கு கொடுத்தாகிவிட்டது ..

ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து தகவல் வர நீண்ட நாட்கள் ஆகவே சேனலை தொடர்பு கொண்ட போது தான் நிகழ்ச்சி தயாரிப்பாளர் விலகி விட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது  தெரிய வந்தது . பிறகு நீண்ட தாமதத்திற்கு பிறகு இப்பொழுது தான் யூ டியூபில் ஏற்ற முடிந்தது . இந்த குறு குறும்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய  அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . குறிப்பாக எனக்கு உறுதுணையாக இருந்த இயக்குனர் திரு.ஸ்ரீஹரி மற்றும் பட வேலைகள் இருந்தும் நான் கூப்பிட்டவுடனேயே நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட திரு.சங்கரநாராயணன் (துப்பாக்கி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்தவர் ) அவர்களுக்கும் எனது மனமார்ந்த  நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் . குறு குறும்படத்தை கீழே பார்க்கவும் ...
18 August 2013

ஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...


கடந்த  ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால்  தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை  மனதில் அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் இயக்குனர் சுசீந்திரன் ராஜபாட்டையால்  தனக்கு ஏற்பட்ட சரிவை சமன் செய்து விட்டார் என்றே சொல்லலாம் ...

கல்லூரி மாணவ மாணவிகளிடையே காதல் என்ற பெயரில் நடக்கும் காம களியாட்டங்களையும் , அதனால் ஏற்படும் விபரீதங்களையும்  கார்த்திக்
( சந்தோஷ் ) , ஸ்வேதா ( மனிஷா ) ஆகிய இருவரின் வாழ்க்கையின் மூலம் ஆபாசமில்லாமல் படம் பிடித்துக்காட்டுவதே " ஆதலால் காமம் சாரி காதல் செய்வீர் " ...


ஹீரோ சந்தோஷ் பக்கத்து வீட்டுப்  பையன் போல என்றெல்லாம்  சொல்ல முடியாத படிக்கு படு சுமாராக இருக்கிறார் . அழகான பொண்ணுங்க அட்டு பசங்களுக்கு தான் மாட்டும் என்றெல்லாம்  லாஜிக் சொன்னாலும் இவரது காஸ்டிங் சறுக்கல் . ஆனால் ஒரு லெவலுக்கு மேல் அவரையும் உற்று கவனிக்க வைப்பதே திரைக்கதையின் பலம் . மனிஷாவுக்கு  வழக்கு எண்ணை விட இதில் வெயிட்டான கேரக்டர் .  கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . காதல்  காட்சிகளை விட சோக காட்சிகளில் நடிப்பு மிளிர்கிறது . இவர்களுடன் வரும் நண்பர்கள் குழுவும் நம்மை கவனிக்க வைக்கிறார்கள் ...

டெம்ப்ளேட் அம்மாக்களுக்கு மத்தியில் மனிஷாவின் அம்மாவாக வரும் துளசியின் நடிப்பு ரியலி சூப்பர்ப் . மகளிடம் கோபப்படும் போதும் சரி , மகளுக்காக மற்றவர்களுடன் சண்டை போடும் போதும் சரி யதார்த்த அம்மாவை கண் முன் நிறுத்துகிறார் "மகாநதி "  துளசி . இவரது நடிப்புக்கு முன்னால்  நீண்ட இடைவெளிக்குப் பின்  நடிக்க வந்திருக்கும் பூர்ணிமா பாக்யராஜ் , ஜெயப்ரகாஷ் போன்றோர் கொஞ்சம் மறைந்து விடுகிறார்கள். புதுமுகங்களை வைத்து குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு யுவனின் இசையும் , சூர்யாவின் ஒளிப்பதிவும் பெரிய பலம் . டைட்டில் பாடல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது ...


நாடோடிகள் , ராட்டினம் போன்ற படங்களின் சாயல் கதையில் இருந்தாலும் சொன்ன விதத்தில் நம்மை  சொக்க வைக்கிறார் சுசீந்தரன் . புரிதலை விட பைக் இருந்தால் போதும் என்று நினைக்கும் காதலி , காரியம் முடிந்தவுடன் காதலின் வீரியத்தை குறைக்கும்  காதலன் , வேறு வழியில்லாமல் பிள்ளைகளின் போக்கிற்கு தலையாட்டும் பெற்றோர் என்று எல்லா கதாபாத்திரங்களிலும் யதார்த்தத்தோடு அதில் உள்ள சுயநலத்தையும்  தோலுரித்துக் காட்டுகிறது படம் . திரைக்கதை டீட்டைலாக இருக்கும் அதே சமயம் என்ன என்று யோசிப்பதற்குள் படம் முடிந்தும் விடுவது மற்றொரு சிறப்பு ...

க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று யூகித்திருந்ததால் முடிவு பெரிய ஜெர்க்கை கொடுக்கா விட்டாலும் அதனை சொல்லி முடித்த விதம் நிச்சயம் நெகிழ்ச்சியை கொடுத்தது .  ஹீரோ , கவித்துவமாக இருந்தாலும் சம்பந்தமில்லாத படத்தின் தலைப்பு , திட்டமிட்டு தப்பு செய்பவர்கள் முக்கியமான விஷயத்தில் திட்டமிடாமல் கோட்டை விட்டது ( படத்தின் திருப்புமுனையான அந்த சம்பவம் ஆக்சிடண்டலாக நடந்திருந்தால் இன்னும் யதார்த்தமாக இருந்திருக்கும் ) போன்ற குறைகள் படத்தில் இருந்தாலும் ஏதோ இருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நேரில் நின்று பார்த்தது போன்ற ஒரு உணர்வை கொடுத்த விதத்தில் படம் நிச்சயம் பார்ப்பவர்களை கவரும் ...

ஸ்கோர் கார்ட் : 44 

8 August 2013

தலைவா - THALAIVAA - கதை என்ன ? ...


இளைய தளபதி விஜய் , இயக்குனர் விஜய் இருவரும் இணைந்திருக்கும் தலைவா படத்தை எஸ்.ஆர்.எம். க்ரூப் சேர்மன் பாரி வேந்தரின் மகன் மதன் வேந்தர் மூவீஸ் சார்பில் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். நாளை படம் ரிலீஸ் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்   இருக்கும் நிலையில் இரண்டு காரணங்களுக்காக பட வெளியீடு தள்ளிப்போகும் என்று தெரிகிறது ...

முதலாவதாக , எஸ்.ஆர்.எம் க்ரூப்பை எதிர்க்கும் சில மாணவர் அமைப்புகள் தலைவா படம் வெளியிடப்படும் திரையரங்குகளில் பாம் வைப்போம்  என்று தியேட்டர்களுக்கு கடிதம் அனுப்பியதாகவும் , அதை தொடர்ந்து காவல்துறை தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் பட்சத்திலேயே படத்தை வெளியிடுவோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது . அடுத்ததாக தலைவா படம் மும்பை தாராவியில் உண்மையில் வாழ்ந்த எஸ்.எஸ்.கே மற்றும் அவரது புதல்வன் எஸ்.கே.ஆர் ஆகிய இருவரையும் தவறுதலாக சித்தரிப்பதாக சொல்லி அவர்களது வாரிசு படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருப்பதும் , அதற்கு பதில் விளக்கம் தருமாறு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருப்பதும் படம் நாளை  ரிலீஸ் ஆகாததற்கு காரணமாக அறியப்படுகிறது ...

வழக்கில் குறிப்பிட்டுள்ள படி படத்தின் கதை யாதெனில் மும்பையில் வாழும் தமிழர் தீய வழியில் சம்பாதித்தாலும் அங்கிருப்பவர்களுக்கு நல்லது செய்கிறார் . இது பிடிக்காத எதிரிகள் அவரை கொன்று விடுகிறார்கள் . வெளிநாட்டிலிருந்து வரும் அவரது மகன் தந்தையின் நற்பணியை தொடர்வதோடு அவரை கொன்றவர்களையும் பழி தீர்க்கிறார் .  உண்மையில் இந்த காரணத்துக்காக வழக்கு தொடரப்பட்டிருந்தால் அது மணிரத்னம்  , ராம்கோபால் வர்மா போன்றோர் மீதும் தொடரப்பட்டிருக்க வேண்டும் . ஏனெனில் இதே கதையை தான் அவர்கள் நாயகன் , சர்க்கார் என்று ஏற்கனவே எடுத்துவிட்டார்கள் . அதே கதையை கொஞ்சம் களத்தை மாற்றி கமல் தேவர்மகன் எடுத்துவிட்டார் . இவர்கள் அனைவரின் மீதும் உண்மையிலேயே ப்ரான்சிஸ் போர்ட் தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் . அவர் தான் இது போன்ற படங்களுக்கெல்லாம் அக்மார்க் காட் பாதர் . அவரின் இயக்கத்தில் வெளிவந்த காட் பாதர் தான் மற்ற இயக்குனர்களுக்கெல்லாம் இன்ஸ்பிரேஷன் ...

தனிப்பட்ட ஒரு நபரையோ , சமூகத்தையோ நேரடியாக படம் புண்படுத்தாத பட்சத்தில் மேலும் சிக்கல் இருக்காது  என்று எதிர்பார்க்கலாம் . இந்த பிரச்சனை படத்தின் பப்ளிசிட்டிக்காக செய்யப்பட்ட ஸ்டண்டாகவும்  இருக்கலாம் என்கிறார் விஷயமறிந்த உதவி இயக்குனர். அதே போல விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்காக போடப்பட்ட  முட்டுக்கட்டை என்றும் சொல்கிறார்கள் .  எது  எப்படியோ 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பலரது உழைப்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் வெளி வரவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு . இந்த வருட ஆரம்பத்தில் இதே போல சிக்கலில் மாட்டிய விஸ்வரூபம் பின்னர் விஸ்வரூப வெற்றியடைந்ததை போல தலைவா தடைகளை தாண்டி மாபெரும் வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ...


Related Posts Plugin for WordPress, Blogger...