28 May 2016

உறியடி - URIYADI - உரத்த அடி ...


" நீங்க என்ன சாதி " - இந்த கேள்வி ஏதோ கல்யாணத்திற்கு ஜோடி தேடுபவர்களால் கேட்கப்படும் சம்பிரதாயமான கேள்வியாக இல்லாமல் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களிடம் கேட்கப்படும் முக்கிய கேள்வியாக இருக்கும் அளவிற்கு இன்றைய அரசியலில் சாதி இரண்டறக் கலந்துவிட்டது. ஆனால் ஒரு மாணவன் சாதி பார்த்து சக நண்பனையோ , காதலியையோ தேர்ந்தெடுப்பதில்லை .  அப்படி சாதி பார்க்காத மாணவர்களை பலியாடாக்க நினைக்கும் சாதி அரசியலை தான் இயக்கி , நடித்து , தயாரித்த முதல் படத்திலேயே  தோலுரித்துக் காட்டிய விஜய் குமாருக்கு வாழ்த்துக்கள் ...

கல்லூரி விடுதியில் தங்கி சரக்கடிக்கும் சாரி படிக்கும் நான்கு மாணவர்கள் சாதிய அரசியலுக்குள் விழுந்து ரத்தமும் , சகதியுமாய் எழுவதே உறியடி . இந்த சின்ன ஒன்லைனை வைத்து இரண்டு மணி நேர படத்தை சஸ்பென்சோடும் , சென்சிபிலான ஸ்க்ரீன்ப்ளே வோடும் சேர்த்து நம்மை ஒன்ற வைத்த விதத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் . அதே சமயம் வெளியூரில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் பற்றிய எந்த சிந்தனையுமே இல்லாமல் சரக்கடிப்பது இல்லை ஆளை அடிப்பது இந்த இரண்டை மட்டுமே முழு நேர வேலையாக செய்வது போல காட்டியதை தவிர்த்திருக்கலாம் ...

விஜய் குமார் செய்யும் ஆக்சன்களுக்கு தடையாக இருப்பது அவர் அமுல்பேபி முகம் . ஆனாலும் முதல் படம் என்பது தெரியாமல் இயல்பாக நடித்திருப்பதோடு நிறைய புது முகங்களையும் அதே போல நடிக்கவும்  வைத்திருக்கிறார் . நண்பர்களாக வருபவர்களுள் குவாட்டர் கவர்கிறார் . படத்தில் தெரிந்த ஒரே முகம் மைம்கோபி நம்மை ஏமாற்றவில்லை . ஆனால் இவருடைய எண்ணம் நமக்கு முன்பே தெரிந்து விடுவதால் பெரிய ட்விஸ்டை கொடுக்கவில்லை ...


சாதியை சொல்லி ஒரு பெரியவரை கடைக்குள்  அனுமதிக்க மறுப்பதும் அதை அந்த மாணவர்கள் எதிர்ப்பதுமான அந்த சீன் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது . அதை  தொடர்ந்து வரும் சீன்களும் விறுவிறுப்பை கூட்டுகின்றன .  பைத்தியம் மேட்டர் சஸ்பென்சாக இருந்தாலும் குழப்பத்தையும் , சில கேள்விகளையும் எழுப்புகிறது . நடக்கப் போவதை கேரக்டர்கள் நினைத்துப் பார்ப்பது போன்ற சீன்கள் க்ளைமேக்ஸில் கை கொடுத்த அளவிற்கு மற்ற இடங்களில் கொடுக்கவில்லை ...

நடிகர்ளை வேலை வாங்கிய விதம் , திரைக்கதை போன்றவற்றில் முதிர்ச்சி தெரிந்தாலும் மேக்கிங் வைஸ் ஒரு அமெச்சூர்னஸ் தெரிவதை மறுப்பதற்கில்லை . காதல் , காமெடி இதெற்கெல்லாம்  தனி  ட்ராக் வைக்காமல் ஒரு அளவோடு நிறுத்தியதற்கு பாராட்டுக்கள் . அதுவும் பஸ்ஸில் வாந்தியெடுக்கும் சீனில் கைதட்டல் அடங்க நேரமாயிற்று . இன்டர்வெலுக்கு முந்தைய லீட் சீன் வளர்ந்து வரும்  மாஸ் ஹீரோவுக்கு அல்டிமேட் ...

படம் சீரியசாக போனாலும் ஒரு கம்ப்ளீட்னஸ் இல்லாதது குறை . கொஞ்சம் பிசகினாலும் சுப்ரமணியபுரம் , மெட்ராஸ் மாதிரி ஒரு புதுப்பையன் எடுத்த்திருக்கான்பா என்று சொல்லக்கூடிய அபாயம் உள்ள கதையை கமர்சியல் காம்ப்ரமைஸ் எல்லாம் செய்து கொள்ளாமல் அடுத்தடுத்து ஆடியன்சை யோசிக்க வைத்து வேறு மாதிரி சீனை முடித்தததோடு , தன் மேல் உள்ள நம்பிக்கையில் சொந்த காசை போட்டு ரிஸ்க் எடுத்து கொடுத்ததுக்காக  இயக்குனருக்கு ஒரு சல்யூட் . யோசித்த அளவுக்கு சில இடங்களில் எக்ஸிக்யூஷன் இல்லையே என்கிற குறை இருந்தாலும்
சின்ன பட்ஜெட்டில்  புதுமுகங்களை வைத்துக்கொண்டு முதல் படத்திலேயே விஜய் குமார் அழுத்தமாக கொடுத்திருக்கும் உறியடி உரத்த அடி ...

ரேட்டிங்    : 3.5 * / 5 *

ஸ்கோர் கார்ட்  : 45

13 May 2016

தெருக்கூத்து - வாக்காளப் பெருமக்களே ! ...


2016 தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே  இருக்கின்ற நிலையில் அதிமுக தான் ஆட்சியை பிடிக்கும் என சில ஊடகங்களும்  , திமுக வுக்கு தான் அதிக வாய்ப்பு என்று சில ஊடகங்களும்  எதிரும் , புதிருமான  தகவல்களை முன்வைத்து ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் வாக்காளனை மேலும் குழப்புகின்றன . எல்லா வாக்காளர்களும் எந்த கட்சிக்கு ஓட்டுப் போட  வேண்டுமென்பதை இந்த  கருத்துக்கணிப்புகள்  தீர்மானித்து விட முடியாதென்றாலும் தீர்க்கமான முடிவெடுக்காத வாக்காளர்களை நிச்சயம் இது இன்ப்லுயன்ஸ் செய்யும் ...

வாக்கு வங்கி என்ன நடந்தாலும் திமுக வுக்கு தான் எனது வாக்கு என்று ஒரு சாரரும் , அதிமுக வுக்கு தான் என மற்றொரு கும்பலும் இருக்கின்றன . இந்த இரண்டு கட்சிகளுக்கான அடித்தளமே இந்த வாக்கு வங்கிகள் தான் . சமீப காலமாக விலையில்லா நலத்திட்டங்கள் ( அதாங்க இலவசம் ) மூலம் அதிமுகவின் வாக்குவங்கியும் , தொழில் வளர்ச்சி பெரிதாக இல்லாத அதிருப்தியால் ( அந்த வளர்ச்சியால் அதிகம் பலனடைந்தது கட்சி சார்ந்த குடும்பங்கள் எனும் போதிலும் ) திமுக வின் வாக்குவங்கியும் அதிகரித்திருக்கின்றன . இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து 50 லிருந்து 65 சதவிகிதம் இந்த வாக்கு வங்கி இருக்கும். ஆனால் இவற்றை சாராத தேர்தலுக்கேற்ற படி சிந்தித்து ஓட்டு போடும் மற்ற 35 சதவிகிதத்தினர் இந்த முறை நிறைய இடங்களில் கட்சிகளின் வெற்றி தோல்விக்கான காரணிகளாக இருக்கப் போகிறார்கள் . அதற்கு முக்கிய காரணம் ஒரு  கோடிக்கு மேல் புதிய வாக்காளர்களை தமிழகம் பெற்றிருப்பது . அதிலும் கூட எனது தாத்தா காலத்திலிருந்தே நாங்க திமுக தான் என்றோ அல்லது அதிமுக என்றோ சொல்லும் வகையினரும் நிச்சயம் இருக்கலாம்  ...

புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவிலை , திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் கூட செயல்படுத்தப்படவில்லை , முதல்வர் மக்களை தேர்தல் நேரம் தவிர சந்திக்கவேயில்லை , தொழில் வளர்ச்சி இல்லை , மதுவால் சமூகம் சீரழிந்து விட்டது என்று எவ்வளவோ அதிமுக ஆட்சி பற்றி குறை சொன்னாலும் அப்போ திமுக மட்டும் ஒழுங்கா என்று இவர்கள் ஒப்பீடு செய்வார்களே தவிர உண்மையை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  2ஜி உட்பட காங்கிரஸ் உடன் ஆட்சியில் இருந்த போது நடந்த ஊழல் , வளர்ச்சி என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டும் கல்லா கட்டியது , ஊருக்கு ஒன்று என்று இயங்கும் அதிகார மையங்களால் சொத்து அபகரிப்பு உட்பட பல இன்னல்களுக்கு பொது மக்கள் ஆளாகியது , மின்வெட்டு , சினிமா உட்பட பல துறைகளில் அரசாங்க தலையீடு போன்ற குறைபாடுகளை எடுத்துவைத்தால் திமுக ஆதரவாளர்கள் அதற்கு செவிமடுக்க  மாட்டார்கள் . ஆகவே  இந்த இரண்டு கட்சிகளால் அதிகம் பலனடையாத அல்லது இரண்டையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கின்ற வகையினருக்கான பதிவாக கூட இதை சொல்லலாம் ...

மாற்றமா ? ஏமாற்றமா ? 

இப்படி இரண்டையும் தவிர்த்து நம் கண் முன் நிற்கும் மாற்று கட்சிகளில் வாக்கி சதவிகிதத்தின் அடிப்படையில் முன்னாள் நிற்பது தேமுதிக தலைமையில் இருக்கும் மக்கள்நலக்கூட்டணி . தன்னை விட அதிக அரசிய அனுபவம் வாய்ந்த வைகோ , திருமா போன்ற தலைவர்களை தனது தலைமையின் கீழ்  கொண்டு வந்த வகையில் இது கேப்டனுக்கு தனிப்பட்ட வெற்றி . மற்றபடி குறைந்தபட்ச செயல்திட்டத்தின் மூலம் நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்  என்று என்ன தான் சொன்னாலும் இது அரசியலுக்கான கூட்டணி தான் . அதிலும் எப்போது முதல்முறை காங்கிரசுடன் கூட்டணி வைத்தார்களோ அப்போதே கம்யூனிஸ்டுகளின் கொள்கையெல்லாம் காலாவதியாகிவிட்டது . அதற்கு சமீபத்திய உதாரணம் இங்கேயும் , கேரளத்திலும் காங்கிரசை எதிர்க்கும் கம்யுனிஸ்ட் மேற்கு வங்காளத்தில் கை கோர்த்திருப்பது . மக்கள் நல போராட்டங்களை முன் வைத்து நடத்திய வகையில் வைகோ , திருமாவளவன் இருவருக்கும் நன்மதிப்பு உண்டு . ஆனாலும் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி கூட்டணி வைத்த  வகையில் அவர்களின் நம்பகத்தன்மை போய்விட்டது . அரசியலில் தங்களை விட இளையவரான விஜயகாந்தின் வருகைக்காக இவர்கள் வாசலில் காத்திருந்ததன் மூலம் அது மேலும் சிதைந்துவிட்டது . இவர்கள் முன் வைக்கும் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் சாத்தியமா என்பது பெரிய கேள்விக்குறி . ஊழலுக்கு எதிராக இவர்கள் இருப்பார்கள் என வைத்துக்கொண்டாலும் கம்யுனிஸ்டுகள் இருக்கும் இடத்தில் நிச்சயமாக  எந்தவிதமான தொழில் வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியாது . ஆனால் பல இடங்களில் இவர்கள் திமுக வுக்கு போகக்கூடிய ஓட்டை பிளப்பார்கள் என்று மட்டும்  எதிர்பார்க்கலாம் ...

தேசிய அளவில் வெறும் இரண்டு சீட்களுடன் தனது கணக்கை துவக்கிய பாஜக இன்று தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு 30 வருடங்களில் வளர்ந்திருந்தாலும் தமிழகத்தில் அவர்களால் வலுவாக காலூண்ட  முடியவில்லை . தமிழிசை , ராஜா , பொன்னார் என்று நிறைய பிரபலமான தலைவர்கள் இருந்தும் கூட  கட்சியை பட்டி தொட்டிக்கெல்லாம் கொண்டு செல்லக்கூடிய தொண்டர்படை இல்லாதது பெரிய குறை . மோடியின் சாதனையை மட்டும் வைத்து இங்கே ஓட்டு வாங்கிவிட முடியாது என்பதே நிதர்சனம் . இவர்களும் கூட்டணி கட்சிகள் ஒன்று கூட மதிக்காத நிலையில் தேமுதிக , பாமக எல்லாமே எங்கள் கூட்டணியில் தான் இருக்கின்றன என்று ரொம்ப நாட்கள் கச்சேரி செய்ததை நிறுத்தி விட்டு தனித்து போட்டி என்கிற முடிவை முன்பே எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . நிறைய மாநிலங்களில் ஆளும் அனுபவமும் , இரண்டு ஆண்டுகளில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லாமல் மோடி ஜி ஆண்டு வருவதும் இவர்களுக்கு பலம் . அண்டைய கேரளாவில் காங்கிரஸ் , கம்யூனிஸ்ட்களுக்கு மாற்றாக முதல் முறையாக இவர்கள் மூன்றாவது அணியாக உருவெடுத்திருப்பது நல்ல மாற்றம் . தமிழகத்தில் சென்ற நாடாளுமன்ற தேர்தல் போலல்லாமல் இந்த முறை தனித்து விடப்பட்டது துரதிருஷ்டம் . சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மீட்பு நடவடிக்கை , ஜல்லிக்கட்டு திரும்ப நடைபெற முயற்சி போன்றவற்றால் இவர்களின் செல்வாக்கு  தென்தமிழகத்தில் கொஞ்சம் கூடியிருக்கிறது என்பது உண்மை . இப்பொழுது இவர்கள் தங்களுக்கென்று ஓரளவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்திவருவது புத்திசாலித்தனம் . சீட்டு பெரிதாக கிடைக்கிறதோ இல்லையோ தங்களுக்கான ஓட்டு சதவிகிதத்தை அதிகரித்துக் கொள்வது அடுத்த தேர்தலுக்கு நன்மை பயக்கும் . தென் சென்னை , கன்னியாகுமரி , கோவை உட்பட சில இடங்களில் அதிமுக வின் வாக்கு  இவர்கள் பால் சாய்வதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது  ...

பேச்சு மட்டும் போதுமா ?

மருத்துவரான அன்புமணி ராமதாஸ் யின் பிரச்சார உத்தி , இலவசங்கள் இல்லாத தேர்தல் அறிக்கை , வேட்பார்களாக படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு போன்றவை நிச்சயம் கவராமல் இல்லை . இன்று எல்லா கட்சிகளுமே சாதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது இவர்கள் மேல் மட்டும் சாதி முத்திரை குத்துவது தவறு . அதே சமயம் ஏற்கனவே அதிகரித்து வரும் ஆணவக்கொலைகள் இவர்கள் வந்தால் மேலும் அதிகரிக்கும் என்று ஒரு சாராரிடையே உள்ள அச்சத்தை முற்றிலும் புறந்தள்ளி விட முடியாது . மற்றவர்களை விட மது ஒழிப்பில் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுக்கும் இவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என நம்பலாம் . ஆனால் அதன் மூலம் ஏற்படப்போகும் வருமான இழப்பிற்கு இவர்கள் வேறெந்த உகந்த திட்டத்தையும் முன்வைக்கவில்லை . அதிகார துஷ்பிரயோகம் , குடும்ப அரசியல் , அடக்குமுறை போன்றவற்றுக்கு எதிராக இவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம் . வட  மாவட்டங்களில் திமுக , அதிமுக இருவரின் ஓட்டுக்களையும் இவர்கள் பிரிப்பார்கள் என்ற போதும் தென் மாவட்டங்களில் இவர்களுக்கு வேலை பார்க்க எல்லா தொகுதிகளிலும் ஆள் இருக்கிறார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம் ...

அரிசி , கைபேசி வாங்கக்கூட வக்கில்லாதவனா  தமிழன் என்று தொண்டை புடைக்க சீமான் கேட்கும் கேள்விகள் நம்மை புல்லரிக்க வைக்கின்றன . ஆனால் ஒருவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க அது மட்டும் போதுமா ? கர்நாடகாவை  கன்னடன் ஆள்கிறான் , கேரளாவை  மலையாளி ஆள்கிறான் தமிழ்நாட்டை ஏன் தமிழன் மட்டும ஆளக்கூடாது என்று அவர் கேட்கிற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை . ஆனால் கிட்டத்தட்ட 25 சதிவிகிதம் பிற மொழி பேசுபவர்கள் ( குறிப்பாக தெலுங்கு ) பேர் ஆண்டாண்டு காலமாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர்களை தவிர்த்து விட்டு இவர் பேசும் அரசியல் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்காது ...

யாருக்கு ஓட்டு ?இந்த தேர்தலில் நோட்டா வுக்கு சென்ற தேர்தலை அதிக ஓட்டு விழும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன . ஆனால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் . உதரணத்துக்கு ஒரு தொகுதியில் நோட்டா அதிக வாக்கு வாங்கியிருந்தால் கூட அதற்கடுத்து அதிக வாக்கு வாங்கிய வேட்பாளர் தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதே இப்போதைய நடைமுறை . இதை எதிர்த்து ஒரு பொதுநல வழக்கு சமீபத்தில் போடப்பட்டிருக்கிறது . மொத்தத்தில்  நமது ஒட்டு வீணாகி விடுமோ என்றெல்லாம் யோசிக்காமல் கட்சிகளின் செயல்பாடு , நிறை குறை, கடந்த கால வரலாறு ,  வேட்பாளர்களின் தகுதி , தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தேர்தல் அறிக்கை , சமூக , பொருளாதார , சுகாதார வளர்ச்சிக்கான பார்வை இவற்றின் அடிப்படையில் ஓட்டளிப்பதே சிறந்தது . பிடிக்காத கட்சிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து ஐந்தாண்டுகள் அவஸ்தைப்படுவதை விட பிடித்த கட்சிக்கு ஓட்டுப் போட்டு அது தோற்றாலும் மன நிறைவோடு இருப்பதே மேல . பல்முனைப் போட்டி நிலவும் இந்த தேர்தலில் பணம் , சாதி , இலவசத்துக்காக ஓட்டுப் போடாமல் சிந்தித்து போடப்படும் ஒவ்வொரு ஓட்டும் மிக மிக முக்கியமானது ...

வாழ்க ஜனநாயகம்

9 May 2016

24 - CUTE BUT NOT SHORT ...


ரண்டு தோல்விகளுக்கு பிறகு தானே தயாரிப்பாளராகவும் களத்தில் சூர்யா இறங்கியிருக்கும் பெரிய பட்ஜெட் படம் 24 . தொடர் வெற்றிகளை கொடுத்த விக்ரம் குமார் இந்த டைம் மிஷின் படம் மூலம் சூர்யாவுக்கு டைம் பீயிங் கை கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம் ...

டைம் மிசினை கண்டுபிடிக்கும் தம்பிக்கும் , அதை அபகரிக்க நினைக்கும் கொடுமைக்கார அண்ணனுக்கும் இடையே நடக்கும் போராட்டமும் , அப்பா இறந்து விட& ;26 வருடங்கள் கழித்து கையில் கிடைத்த டைம் மிசினை பெரியப்பாவிடமிருந்து காப்பாற்றும் தம்பி மகனின் யுத்தமுமே 24 . இதில் அப்பா , மகன் , பெரியப்பா என மூன்று முகங்களில் சூர்யா ...

தன் திறைமையை காட்டி நடிப்பதற்கு கஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு இது நல்ல வாய்ப்பு . நிறைய இடங்களில் சிவாஜியின் இமிடேசன் தெரிந்தாலும்
( தெரிந்தோ தெரியாமலோ ) கிடைத்த வாய்ப்பில் நன்றாக விளையாடியிருக்கிறார் சூர்யா . " ஐயம் எ வாட்ச் மெக்கானிக் " என்று சமந்தாவிடம் ஓவராகவே வழிந்து வெறுப்பேற்றினாலும் குறும்பு மணியாகவும் , கொடுமைக்கார வில்லன் ஆத்ரேயா வாகவும் நம்மை நன்றாகவே கவர்கிறார் சூர்யா ...


சமந்தா நிறைய முதுகையும் , கொஞ்சம் நடிப்பையும் காட்டியிருக்கிறார் . கொஞ்சமே வந்தாலும் நித்யா மேனன் நிறைவு . பாசக்கார தாயாக தற்கால பண்டரிபாய் சரண்யா . ( இவருக்கெல்லாம் கின்னஸ் ரெக்கார்ட் எதுவும் கெடையாதா ) . திருவின் ஒளிப்பதிவு , படத்தின் சிஜி , ஸ்டண்ட் , ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை எல்லாமே தரம் . பாடல்கள் தான் பாவம் தியேட்டரில் கொஞ்சம் கூட்டத்தை குறைக்கின்றன ...

வாட்ச் சைஸ் டைம் மிசினை வைத்துக்கொண்டு ரெண்டரை மணிநேர படத்தை ஓட்டியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் . ஷாட்ஸ்களில் விக்ரமின் ரிச்னெஸ் தெரிகிறது . இண்டர்வெலுக்கு பிறகு வரும் சின்ன சின்ன ட்விஸ்ட் படம் முடியும் வரை நம்மை ஒன்ற செய்கிறது . சின்ன திடுக் சம்பவங்களும் , அதை டைம் மிசின் கொண்டு கரக்ட் செய்வதும் க்லெவர் ...


இதே பாணியில் வந்த இன்று நேற்று நாளையில் டைம் மிசினை வைத்து அவர்கள் அடிக்கும் விறுவிறுப்பான லூட்டி இதில் மிஸ்ஸிங் . சமந்தாவை கரெக்ட் செய்வதற்கே பெரும்பாலும் சூர்யா டைம் மிசினை உபயோகப்படுத்துவது சறுக்கல் . டைம் மிசினே லாஜிக் இல்லை பிறகு இந்த படத்தில் லாஜிக் பார்ப்பது வெட்டிவேலை . இருந்தாலும் டைம் மிசினை ப்ரீஸ் செய்து விட்டு தோனியுடன் செல்பீ எடுப்பதெல்லாம் ஓவரோ ஓவர் . டைட்டிலை போலவே சுருக்கமாக விறுவிறுவென்று போயிருக்க வேண்டிய படம் சூர்யா - சமந்தா காதல் காட்சிகளால் நிறையவே தொங்குகிறது . யாரோ பெற்ற பிள்ளைக்காக சரண்யா வாழ்வையே தியாகம் செய்வதெல்லாம் எம்.ஜி.ஆர் காலத்து தாய் சென்டிமெண்ட் ...

யாவரும் நலம் , மனம் போன்ற படங்களை கொடுத்த இயக்குனருக்கு இது ஒரு மாற்று கம்மி தான் . ஆனால் தோல்வியில் துவண்டிருந்த சூர்யாவுக்கு இந்த படம் நிச்சயம் ஏ சென்டர்களில் கை கொடுக்கும் . படத்தின் நீளத்தால் நேரம் போவது நமக்கு நன்றாகவே தெரிந்தாலும் சூர்யாவின் நடிப்பு , மேக்கிங் போன்றவை நிறைவை தராமலில்லை ...

ரேட்டிங்   : 3 * / 5*

ஸ்கோர் கார்ட் : 43
Related Posts Plugin for WordPress, Blogger...