26 August 2014

தெருக்கூத்து - 3 ...


பா.ஜ.க வின் மாநில தலைவராக டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் . சீனியாரிட்டியை மட்டும் பார்க்காமல் சின்சியாரிட்டியை பார்த்து கட்சி இந்த பொறுப்பை கொடுத்திருக்கிறது . தொலைக்காட்சி விவாதங்கள் , இணையதளங்கள் மூலம் படித்த மக்களுக்கு நன்றாக பரிச்சியமாகியிருக்கும்  இவர் தன் உழைப்பால் கட்சி கிராமப்புறங்களிலும் நன்றாக வேரூன்ற பாடுபட வேண்டும் . ஏனெனில் படித்தவர்களில் பாதி பேர் ஓட்டுப் போட வருவதில்லை . வருபவர்களும் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதில்லை . அ.தி.மு.க , தி.மு.க இரண்டிற்கும் வலுவான மாற்றாக வரவேண்டுமென்றால் பா.ஜ.க பட்டி தொட்டிகளிலெல்லாம் வளர வேண்டியது அவசியம் . அந்தப் பணியை திறம்பட செய்ய அவருக்கு வாழ்த்துக்கள் .  அதே போல தேசிய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் ஹெச்.ராஜா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ...

சுதந்திர  தின உரையின் போது  பிரதமர் மோடியின் பேச்சு வழக்கமான
சம்பிரதாய பேச்சாக   இல்லாமல் உணர்வுபூர்வமாகவும் , ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது . ஆனால் அந்த  உரையில் சொன்னதையெல்லாம் நிறைவேற்ற நிறைய கால அவகாசம் தேவை .அது வரை மக்கள் பொறுத்திருப்பார்களா ?.
ஒரு பக்கம் சமாதானம் பேசிக்கொண்டே மறுபக்கம் பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் தனது வாலை ஆட்டிக்கொண்டிருக்கிறது . இந்த அரசாவது அதை ஓட்ட நறுக்குவார்களா ? ...

சரக்கு விலையை ஏற்றி குடி மகன்களுக்கு தமிழக அரசு ஷாக் கொடுத்தால், படிப்படியாக பத்து வருடங்களில் மதுபானக் கடைகளை மூடப்போவதாக அறிவித்து கேரள அரசு குடி மகன்களின் தலையில் இடியையே இறக்கி விட்டது . என்ன இது சேர நாட்டுக்கு வந்த சோதனை ? . ஆடிப்பெருக்கு அன்று கூட காவிரியில் தண்ணி இல்லாமல் பம்பு செட்டு வைத்து ஆடிப்பெருக்கை கொண்டாடும் அவல நிலையில் இருந்த மக்களுக்கு மேட்டூர் , கபினி அணைகளிலிருந்து தண்ணீரை திறந்து விட்டு வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள் . இதற்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் முதல்வருக்கு பாராட்டு விழாவும் நடத்தி விட்டார்கள் . கடமையை செய்ததற்கு ஒரு கடமைக்காக பாராட்டு விழாவா ? இல்லை மனமார்ந்த பாராட்டு விழாவா ?!...

தம்பித்துரைக்கு துணை சபாநாயகர் பதவி கொடுத்தது எதிர்பார்த்ததே . ஆனால் மைத்ரேயன் ராஜ்யசபா தலைமை பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டது சற்றும் எதிர்பார்க்காத அம்மா ட்விஸ்ட் . இந்த மாற்றங்கள் எதனாலே உருவாகுதோ ?. 23 வருடங்களாக எதிரிகளாக இருக்கும் லாலுவும் - நிதீஷும் பா.ஜ.க வின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமென்கிற ஒரே காரணத்துக்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் . அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பார்கள் . அதற்காக இப்படியா ?! ...

இங்கிலாந்தில் படு  கேவலமாக  உதை  வாங்கிய பிறகு கொஞ்சமா புத்தி வந்து பி.சி.சி.ஐ கோச் ப்லெச்சர் மற்றும் அந்நிய உதவியாளர்களை ஓரங்கட்டி ரவி சாஸ்திரியை கொண்டு  வந்திருக்கிறது . பி.சி.சி.ஐ ரவி தான் தல என்று சொல்கிறது . ரவியோ தோனி தான் கேப்டன் என்கிறார் . கேப்டனோ பெருசு ப்லெச்சர் தான்   எங்க எல்லோருக்கும் பாஸ் என்கிறார் . கேட்கும் போதே தலை சுத்துதே .  இவிங்க என்னத்த ஒன்டே ல ஆடி என்னத்த ஜெயிச்சு ! அட போங்கப்பா ...

லெட்டர் பேட் அமைப்புகள் பிரபலாமவதற்கு பிரபலங்களின் படங்களை எதிர்ப்பதை வாட்டிக்கையாக கொண்டிருக்கின்றன . துப்பாக்கி , விஸ்வரூபம் வரிசையில் லேட்டஸ்டாக அவர்களால் கையில் எடுக்கப்பட்டிருக்கும் படம் கத்தி . ராஜபக்சேவின் மைத்துனர் முக்கிய பொறுப்பிலிருக்கும் லைக்கா நிறுவனம் படத்தை தயாரிப்பதே பிரச்சனைக்கு காரணம் . இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆரோக்கியமானதல்ல . கத்தி தலைக்கு மேலேயே கத்தி . சமாளிக்குமா படக்குழு ?! ...

அஞ்சான் , க.தி.வ.இ இரண்டு படங்களில் அதீத எதிர்பார்ப்பின் காரணமாகவோ என்னவோ அஞ்சான் அமுங்கி விட , கதை விவாதத்தையே கதையாக்கி அதை சுவாரசியமான திரைக்கதையாக தந்ததால் பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார் பார்த்திபன் . வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் தான் சினிமா என்பது மாறி ரொம்ப நாட்களாகிவிட்டது . பொழுதை போக்க கையில் மொபைல் இருந்தால் போதாதா ? . அதை தவிர டி .வி , இணையதளம் என்று எவ்வளவோ இருக்கிறது. இதன் மூலம் தமிழுலக இயக்குனர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ஏதாவது புதுசா யோசிங்க , இல்லேன்னா பழசாயிடுவீங்க ...

மீண்டும் கூடுவோம் ...

21 August 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - KTVI - க்ளாப் ...


முதல் படம் புதிய பாதை க்கு பிறகு அதே போல பெரிய ஹிட் கொடுக்கா விட்டாலும்  தனது வித்தியாசமான அணுகுமுறையால் தன் ஒவ்வொரு படைப்பின் மேலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதில் வித்தகரான இராதாகிருஷ்ணன் பார்த்திபன்  க.தி.வ.இ மூலம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார் ...

எது மாதிரியும் இல்லாத புது மாதிரி படம் எடுக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் டி.வி.டி க்களை சுடாமல் தன் டீமுடன் வீட்டிலியே உட்கார்ந்து டிஸ்கசன் செய்கிறார் இயக்குனர் தமிழ் ( சந்தோஷ் ) . தமிழுக்கு கதை கிடைத்ததா ? அவருடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை  விட்டுப் போகும் காதல் மனைவி ( அகிலா ) திரும்பி வந்தாளா என்பதை நிறைய சுவாரசியங்கள் , கொஞ்சம் கடி என்று தனது கலவையில் தந்திருக்கிறார் பார்த்தி ...

சந்தோஷ் - அகிலா இருவருமே கதைகேற்ற நல்ல தேர்வு . இருவர் முகத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது . நண்பர்கள் குழு வீட்டில் உட்கார்ந்து அடிக்கும் டிஸ்கஷன் கூத்தால் தனது ப்ரைவசி பாதிக்கப்படுவதை சொல்லி அழும் எக்ஸ்சென்ட்ரிக் அகிலா கதாபாத்திரம் யதார்த்தம் . இருவரின் காதல் , அன்னியோன்யம் , சண்டை எல்லாவற்றிலுமே இயக்குனர் பளிச்சிடுகிறார் . ..


தேவர் படங்களில் ஆரம்பித்து சின்னத்தம்பி , ஈ என்று சினிமா  செய்தி துணுக்குகளை அள்ளித் தெளிக்கும் அசிஸ்டன்ட் டைரக்டராக  தம்பி ராமையா . படம் முழுக்க சிரிக்க வைப்பவர் 58 வயதாகியும் தன் 28 வயதான பெண்ணிற்கு இன்னும் கல்யாணம் செய்து வைக்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் ததும்பும் தந்தை கேரக்டரில் அண்ணன் ராமையாவாக படத்தையே தூக்கி நிறுத்துகிறார் . எல்லா துறைகளிலும் எதிர்பார்த்த உயரத்தை அடைய முடியாத இது போன்ற என்சைக்லோபீடியாக்கள் நிச்சயம் இருப்பார்கள் . தம்பி ராமையா வை அடிக்கடி வாரும் உதவி இயக்குனர் சுருளி கவர்கிறார் . பவர் ஸ்டார் கெட்டப்பில் வந்து தப்பு தப்பு இங்கிலீசில் கதை சொல்லி படம் கிளைமேக்சில் முடிய வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லும் தயாரிப்பாளர் சிம்ப்ளி சூப்பர்ப் ...

" முதல் 20 நிமிடத்துக்குள் கதையை சொல்லி இடைவேளையில் ஷாக் ப்ரேக் கொடுத்து ப்ரீ க்ளைமேக்சில கொஞ்சம் நிப்பாட்டி கடைசியில படத்த முடிக்கணும்னு நாங்க ஒரு பார்மெட் வச்சிருப்போம் . அத நேத்து வந்த குறும்பட பசங்க தூக்கி எரியறதா " என்று தம்பி ராமையா வை புலம்ப விட்டு பல சீனியர் இயக்குனர்களின் ஆதங்கத்தை போட்டுடைப்பது இயக்குனரின் சாமர்த்தியம் . பேஸ் புக் , ட்விட்டரில் கமென்ட் போடுபவர்கள் மட்டுமல்லாமல் தண்ணி கேன் போடும் நபருக்கு கூட இருக்கும் சினிமா அறிவை அழகாக சொல்லியிருக்கிறார் பார்த்திபன் ...

பாலச்சந்தர் பட பாணியில் வரும் இரண்டாவது  ஹீரோயின் , நடுநடுவே வந்து பேசி கொஞ்சம் கடிக்கும் பார்த்திபன் , கதை விவாதத்தில் இருந்த சுவாரசியம் தமிழ் சொல்லும் உண்மைக் கதையில் இல்லாமல் போவது , கதை இல்லை என்று என்ன தான் டேக் லைன் போட்டிருந்தாலும் , திரைக்கதை , வசனம் இரண்டும் கவனிக்க  வைத்தாலும் நம்மை ஒன்ற வைக்கும் ஒன் லைன் எதுவும் இல்லாமல் வெறும் சீன்களின் கோர்வையாக படம் இருப்பது போன்றவை மைனஸ் . படம் எடுப்பதற்கு டிஸ்கசன் செய்வார்கள் , ஆனால் அந்த டிஸ்கசனையே ரசிக்கும் படியான படமாக கொடுத்து  25 வருடங்கள் கடந்தும் இன்றைய குறும்பட இயக்குனர்களுக்கு தான் எந்த விதத்திலும் சளைத்தவனில்லை என்று நிரூபிக்கும் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் வித்தியாசமான சிந்தனைக்கு ஒரு க்ளாப் ...

ஸ்கோர் கார்ட் : 43


9 August 2014

தெருக்கூத்து - 2 ...


.பி யில் வெறும் பத்து தொகுதிகளை  பெற்றிருந்த பா.ஜ.க வை கடந்த தேர்தலில் 70 க்கும் மேல் ஜெயிக்க வைத்து மோடியை பிரதமராக பதவியேற்க வைத்ததில் பெரும்பங்காற்றியவர் அமித் ஷா . ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கட்சியின் கொள்கை அடிப்படையில் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராகி விட்டதால் கட்சித் தலைவர் பதவியை அமத் ஷாவிற்கு கொடுத்திருப்பது சரியான முடிவு . உ.பி யைப் போலவே மேற்கு வங்காளம் , ஓடிஸா , தமிழ்நாடு , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கால் பதித்திருக்கும் பா.ஜ.க வை மேலும் வளர்க்க அவரின் தலைமை உதவும் ...

காந்தி குடும்பத்துக்கு நெருக்கமாயிருந்த நட்வர் சிங் தனது சுய சரிதையில் சோனியா பிரதமராகாததற்கு ராகுல் தான் காரணம் என்று சொல்லி குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் . ஏற்கனவே வரலாறு காணாத தோல்வியால் துவண்டிருக்கும் காங்கிரசுக்கு இது வெந்த புண்ணில் வேல் . தேர்தலில் சகோதரருக்காக காம்பேரிங் சாரி , பிரச்சாரம் செய்த பிரியங்கா முழு நேர அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் . அவருக்கு பார்ட் டைம் மட்டும் தான் புடிக்குமோ ? ...

ராணுவத்தில் அந்நிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை 49 சதவிகிதமாக உயர்த்துவதற்கான பில்லை நாடாளுமன்றத்தில் பாஸ் செய்திருக்கிறார்கள் . அதே போல இன்சூரன்ஸ் பில்லையும்  கூடிய விரைவில் பாஸ் செய்வார்கள் என்று நம்பலாம் . பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடும் மைனர்கள் ( என்ன பொருத்தம் ) வயதை காரணம் காட்டி எஸ்கேப் ஆகி விடுவதால் வயது வரம்பை 18 இலிருந்து 16 ஆக குறைக்க வேண்டுமென்கிற மேனகா காந்தியின் ஆலோசனையை வரவேற்கலாம் . ஆனால் அரசியல் ரீதியாகவோ , சட்ட ரீதியாகவோ மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும்  இதை அணுகுவார்களா ? ....

அம்மாவின் லேட்டஸ்ட் அறிவிப்பு அம்மா அமுதம் அங்காடிகள் . எங்களிடம் சரக்குகள் மட்டுமல்ல  பலசரக்குகளும் கிடைக்கும் என்று அரசு இனி விளம்பரம் செய்யுமோ  ?. ஸ்டாலினை 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் கல்யாணசுந்தரத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கூட தூக்கி விட்டார்கள் . அண்ணனின் ஆதரவாளர்களுக்குத் தான் இந்த கதி என்று பார்த்தால் தம்பியின் கைத்தடிகளுக்குமா ? . தலைவரின் பணியில் சொல்வதென்றால் கட்சி ஜனநாயக ரீதியில் தன் கடமையை செய்யும் ...

ஆஸ்திரேலியாவில் ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே கால் மாட்டிக் கொண்ட ஒருவரை எல்லோருமாக சேர்ந்து ரயிலை தள்ளி காப்பாற்றியதை பார்த்த போது மெய் சிலிர்த்தது . ஆனால்  நம்மூர்  அடையார் பாலத்தில் பைக் ஒட்டிக் கொண்டு வந்தவர் கீழே விழுந்து மூர்ச்சையாகி விட கூடவே பைக்கில் வந்த  பெண் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல்  பைக் பார்ட்டியின் பர்சையும் , செல்லையும் லவட்டிக் கொண்டு போன செய்தியை படித்த போது கண் வேர்த்தது . Who is that lady ? ...

பத்து வருடங்கள் கழித்து 94 குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய கும்பகோணம் தீ விபத்துக்கு காரணமாவர்களுக்கு  ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வந்திருக்கிறது . காலம் கடந்த நீதி  மறுக்கப்பட்ட நீதி என்பார்கள் . நம் நாட்டில் ஒரு வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்குள் அதில் சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இருப்பார்களா என்பதே சந்தேகம் . 2014 இல் முகலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து பலர் பலியான வழக்கிலாவது உடனடி தீர்ப்பு வருவதற்கு ஆவண செய்ய வேண்டும்  . ஆனால் 3 வருடங்களுக்கு முன்பே நீதிமன்ற அறிவுரையின்  படி சி.எம்.டி.ஏ வில் உள்ள சில அதிகாரிகளின் மேல் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இது போன்ற விபத்துக்களை ஒரு வேளை  நடக்காமல் தடுத்திருக்கலாம் . இந்நேரத்துக்கு இந்த விபத்தைப் பற்றி நிறைய பேர் மறந்திருப்பார்கள் . பிறகு வேறொரு சம்பவம் , வேறொரு வழக்கு என்று வாழ்க்கை ஓடிக்கொண்டேயிருக்கும் . ஒரு கொலைக்கே தூக்கு தண்டனை கொடுக்கலாமெனும் போது சிலரின் மெத்தனத்தாலும் , ஊழலாலும் பல உயிர்களை பலியாக்கும்  இது போன்ற சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை தான் கொடுக்கப்படுகிறது . என்ன  கொடுமை சார் இது ? ...

சென்ற பதிவில் தோனி இங்கிலாந்து சீரியசை ஜெயித்தால் பேண்டை கழட்டி சுற்றுவாரோ என்று கேட்டது இங்கிலீஸ் காரெங்க காதுல விழுந்துருச்சோ என்னவோ ?. அடுத்து நடந்த சவுத்தாம்ப்டன் டெஸ்டுல வச்சு தோனியோட பேன்ட மட்டுமல்ல டீமோட பேண்டையே மொத்தமா உருவி சூ ... சரி விடுங்க.
சம்சாரம் அது மின்சாரம் படத்துல " வாழாவெட்டியா இருந்த பொண்ணு  புருஷன் வீட்டுக்கு வாழ போனத நினைச்சு சந்தோஷப்படுறதா இல்ல இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு கோவிச்சுக்குட்டு அப்பா வீட்டுக்கு போனத நினைச்சு வருத்தப்படுறதா " என்று விசு ஒரு வசனம் பேசுவார் . அதே மாதிரி " காம்ன்வெல்த்  கேம்ல இந்தியா 64 பதக்கங்களை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்ததை நினைத்து சந்தோசப்படுவதா ? இல்லை இந்தியா இங்கிலாந்திடம் அடிமையாக இருந்ததை நினைவுபடுத்தும் காமன்வெல்த் போட்டியை நினைத்து வருத்தப்படுவதா ? ...

சும்மா சேனலை மாற்றிக் கொண்டிருந்த போது சொல்லி வைத்தார்ப் போல  எல்லா சீரியல்களிலும் ஹீரோயின்களுக்கு கரு கலைந்து விடுகிறது. பாவம் இந்த பெண்களின் சோகத்தையெல்லாம் பார்க்கும் போது ரெம்ப பீலிங்கா இருக்கு . அதே சமயம்  ஜெயா டி.வி யில்  புதுப்பேட்டை போட்டிருந்தார்கள் . எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படங்களில் அதுவும் ஒன்று . தனுஷின் நடிப்பு , செல்வாவின் மேக்கிங் , யுவனின் இசை இதோடு சேர்ந்து பாலகுமாரனின் சார்ப்பான வசனங்கள் எல்லாமே படத்திற்கு ஹைலைட்ஸ் . சோனியா எபிசோட் , நிறைவை தராத க்ளைமாக்ஸ் என்று சில குறைகள் இருந்தாலும் ஒரு ரவுடியின் வாழ்க்கையை நியாயமாக நம்பும் படி பதிய வைத்ததில் புதுப்பேட்டை எப்பவுமே தங்க வேண்டிய இடம் . தனுஷ் - செல்வா - யுவன் கூட்டணி மீண்டும் வருமா ? ...


சரபம் , ஜிகர்தண்டா இரண்டு படங்களை பற்றியும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருந்தும்  ஜிகர்தண்டா வை மட்டுமே பார்க்க முடிந்தது . முதல் பாதி சான்சே இல்ல . இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறினாலும் மொத்தத்தில் டேஸ்டாகவே இருக்கிறது .  சந்தோஷ் குமார் என்பவர் ஒரு சினிமா செய்தியுடன் ஒரு புகைப்படத்தை  எனக்கு மெயில் செய்திருந்தார் . புகைப்படத்தை பார்த்தவுடன் மிகவும்  ஆச்சர்யமாக இருந்தது . பாரதிராஜாவின் அச்சு அசல் ஜெராக்ஸாக  இருக்கும் அவருடைய தம்பி ஜெயராஜ் கத்துக்குட்டி எனும் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் . நடிகனாக வேண்டுமென்கிற ஆசையில் சென்னைக்கு வந்த அவருடைய அண்ணனின் தாகத்தை தம்பி  தீர்த்து வைக்க வாழ்த்துவோம் ...

மீண்டும் கூடுவோம் ...

8 August 2014

ஜிகர்தண்டா - JIGARTHANDA - டேஸ்டி ...


ஹீரோ சித்தார்த்துக்கும் , தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் ட்விட்டரில் லடாய் , Dark Carnival  என்கிற கொரியன் படத்தின் தழுவல்  தான் படம்  என்று செய்தி பரவ அதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் காட்டமான மறுப்பு இப்படி வருவதற்கு முன்பே ஜிகர்தண்டா கொஞ்சம் சூட்டை கிளப்பியிருந்தது. கொரியன் படத்தை பார்க்காததால் இது அப்பட்டமான தழுவலா என்பதற்கு கருத்து சொல்ல முடியாவிட்டாலும் படத்தின் லைட்டிங் , ஷாட்ஸ் , பி.ஜி எல்லாமே உலக சினிமாக்களை நியாபகப்படுத்தியதை மறுப்பதற்கில்லை ...

காட் ஃபாதர் , ஸ்கேரி ஃபேஸ் மாதிரி ஒரு டான் படத்தை எடுக்க நினைக்கிறார் புதுமுக இயக்குனர் கார்த்திக் ( சித்தார்த் ) . மதுரைக்கென்று  எவ்வளவோ பெருமைகள் இருக்க தற்போதைய தமிழ் சினிமாவின் வழக்கப்படி ஒரு ரியல் டான் சேது ( சிம்ஹா ) வின் கதையை தேடி மதுரை வருகிறார் சித்தார்த் . அவருடைய ஆசை நிறைவேறியதா என்பதை வழக்கமாக சொல்லாமல் முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் வித்தியாசமாக தந்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ் .


படத்தின் உண்மையான ஹீரோ சிம்ஹா தான் . நெரைத்த முடி  , பாக்கு கரை பல் என்று நிஜமான ரவிடியாகவே திரையில் ராவுடி செய்கிறார் . தன் படத்தை கார்ட்டூனாக  போட்டதற்காக  ரிப்போர்டரை  கொளுத்தும் அறிமுக சீனில் டெர்ரர் குறைவாக இருந்தாலும் , கூடவே இருக்கும் கறுப்பாடை ஸ்கெட்ச் போட்டு தூக்குவது , " தோள்ள கை போட்டுட்டா பயம் போயிருச்சுள்ள " என்று  சித்தார்த்தை மிரட்டுவது  , நடிப்பு பயிற்சிக்காக மாஸ்டரிடம்  அடி வாங்கி விட்டு முறைப்பது , கடைசியில்  திருந்தும் போது பாடி லேங்குவேஜில்  நடித்துக் காட்டுவது என படம் முழுவதும் சிம்ம கர்ஜனை செய்கிறார் சிம்ஹா ...

அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது அடி வாங்குவதை தவிர சித்தார்த்திற்கு  பெரிய வேலையில்லை . ஒரு வேளை க்ளைமேக்சை  நெகட்டிவாக முடித்திருந்தால் இவர் கேரக்டருக்கு வெயிட் ஏறியிருக்கும் . சித்தார்த்தை சிம்ஹாவிடம்  கோர்த்து  விடுவதை தவிர லக்ஸ்மி மேனுக்கு சொல்லிக்கொள்ளும்  படி எதுவும் படத்தில் இல்லாவிட்டாலும் அவருடைய  நல்ல ராசி இதிலும் தொடர்கிறது . கோலிவுட்டின் லேட்டஸ்ட் நண்பென்டா கருணாகரன் சின்ன சின்ன கவுன்டர்களில் நிறையவே ஸ்கோர் செய்கிறார் ...

நடிப்பு வாத்தியார் ,  அறுத்தே கொள்ளும் சங்கிலி முருகன் , சீன் படத்தை தேடி தேடி பார்க்கும் அடியாள் , உளவு சொல்லிவிட்டு உயிரை விடும் அடியாள் என சின்ன சின்னகேரக்டர்க்ளில் வருபவர்கள் கூட கவனிக்க வைக்கிறார்கள். சந்தோஷ்  நாராயணின்  இசையில் கண்ணம்மா பாடல் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது . கேம்விக் யு அரியின் ஒளிப்பவதிவு சான்ஷே இல்ல ...


படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே சூடு பிடித்து , அடுத்து என்ன என்று யோசிக்க வைத்து  , அங்கே இங்கே நகரவிடாமல் நம்மை இடைவேளை வரை கட்டிப் போடுகிறது . அதிலும் இன்டர்வெல் ப்ளாக்கிற்கு முன்னால் வரும் ட்விஸ்டுகள் அபாரம் . ஆனால் இடைவேளை முடிந்து பெரிதாக ஏதோ நடக்கும் என்று எதிர்பாத்து அமரும் நமக்கு ஏமாற்றம் தான் . அதன் பிறகு படம் முற்றிலும் வேறு ஜெநெருக்கு சென்று விடுகிறது . டெரர் ரவுடிகள் நடிப்புப் பயிற்சிக்காக செய்யும் காமெடிக் கூத்துக்கள் ரசிக்க வைத்தாலும் அ.குமார் படமெல்லாம் காதில் பூ சுத்தல் ...

இரண்டாம் பாதியில் கொஞ்சம் அப்படியிப்படி படம் அலைந்தாலும் திரும்பவும் க்ளைமேக்சுக்கு  முன் இறுகப் பிடிக்கிறது திரைக்கதை . சித்தர்த்திர்க்கு வைக்கப்பட்ட முடிவு திணிக்கப்பட்ட ஹீரோயிசம் . பீட்சா இயக்குனரின் இரண்டாம் படைப்பு இரண்டாம் பாதியின் தடம் மாற்றத்தால் தர்ஸ்டி யை முழுதாக தணிக்கா விட்டாலும் நிச்சயம் டேஸ்டியாக இருக்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 43   
Related Posts Plugin for WordPress, Blogger...