23 June 2012

சகுனி - சலிப்பூட்டும் சூதாட்டம் ...


தொடர்ந்து தன்னுடைய படங்கள் வெற்றி பெற்று விட்டாலே படம் எப்படி இருந்தாலும் ஓடி விடும் என்ற நினைப்பு நடிகர்களுக்கு வந்து விடும் ... ஆறாவது படத்திற்கே ஆயிரம் ஸ்க்ரீன்களுக்கு மேல் ரிலீசாகியிருக்கும் சகுனியை பார்த்தால் கார்த்திக்கு அந்த நினைப்பு வந்து விட்டது போல தெரிகிறது ...

காரைக்குடியில் ஊருக்கே படியளக்கும் வீடு கமல் ( எ ) கமலக்கண்ணனின்
( கார்த்தி ) வீடு ... சப்வே கட்டுவதற்காக அந்த வீட்டை இடிக்க ஆணையிடுகிறது ரயில்வே நிர்வாகம் , அதை எதிர்த்து ரயில்வே மந்திரியிடம் மனு கொடுக்க சென்னை வருகிறார் கார்த்தி ... மனு கொடுத்த கையோடு கார்த்தி ஆட்டோ டிரைவர் ரஜினி ஏகாம்பரத்திடம் ( சந்தானம் ) தன் அத்தை பெண் ஸ்ரீதேவியை ( ப்ரனிதா ) டாவடித்த கதையை சொல்கிறார், இட்லிக்கடை ஆச்சியை ( ராதிகா ) கவுன்சிலராக்குகிறார் , பிறகு போனால் போகிறதென்று அவரை மேயராகவும் ஆக்குகிறார் , சும்மா கிடந்த பீடி சாமியாரை ( நாசர் ) சர்வதேச லெவலுக்கு உயர்த்துகிறார் , அவ்வப்போது வீட்டை காக்க என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று முதலமைச்சர் பூபதியிடம் ( பிரகாஷ்ராஜ் ) சவால் விடுகிறார் , எதிர்க்கட்சி தலைவர் பெருமாளை ( கோட்டா ஸ்ரீனிவாசராவ் ) தேர்தலில் ஜெயிக்க வைத்து முதல்வராக்குகிறார் ...

படம் முடியும் போது ஏதோ நியாபகம் வந்தது போல ஹீரோயினும் , வீட்டை இடிப்பதற்கு எதிரான ஆர்டரும் கார்த்தியின் கைகளுக்கு வந்து சேர்கின்றன. அப்பாடா ஒரு வழியாக படம் முடிந்தது என்று எந்திரித்தால் டில்லி அரசியலை சீர்படுத்த கார்த்திக்கு அழைப்பு வருகிறது ... பிரசிடன்ட் தேர்தலை போல  தலை சுற்றுகிறதா ? அதுவே சகுனியின் தூளான கதை ...

என்ன பாஸ் மத்திய அமைச்சரிடம் மனுவை கொடுத்து விட்டு எதற்கு கார்த்தி தேவையில்லாமல் ஸ்டேட் பால்டிக்சுக்குள் நுழைகிறார் என்றோ , ஒரு தனியாளாக கார்த்தியால் எப்படி ஒரு மாநிலத்தின் அரசியலையே புரட்டிப் போட முடியுமென்றோ நீங்கள் கேள்வி கேட்பவராக இருந்தால் சகுனி இஸ் நாட் யுவர் கப் ஆப் டீ ... அதே சமயம் லாஜிக்கெல்லாம் பாக்காம படத்துக்கு போனோமா , ஜாலியா என்ஜாய் பண்ணோமா என்று நினைப்பவர்களுக்கும் சகுனி இஸ் நாட் பிட் பார் தி பில் ஆக இருப்பதே படத்தின் பெரிய குறை ...


மாஸ் ஹீரோவிற்குரிய கரிஸ்மா கார்த்தியிடம் இருக்கிறது ... ஆனால் அது மட்டும் போதுமென அவர் நினைத்து விட்டதே துரதிருஷ்டம் ... படத்தில் நடிப்பிற்கு பெரிய ஸ்கோப் இல்லை , எனவே கார்த்தி படம் நெடுக சிரிக்கிறார் , சிரிக்கிறார் , சிரித்துக் கொண்டேயிருக்கிறார் ...ப்ரனிதா படத்தில் இருக்கிறார் அவ்வளவே ... குட்டைப் பாவாடையுடன் ஒரு பாடலுக்கு நடனமாடுவதோடு அவருடைய பணி முடிந்து விடுகிறது ... மாமா என்று அவர் கார்த்திக்கை பார்த்து குழட்டும் போது நமக்கு குமட்டுகிறது ...

சந்தானம் கார்த்தியுடன் சேர்ந்து நன்றாகவே காமெடி ஆட்டோ ஓட்டுகிறார் ... இருவரின் காம்பினேஷனும் மீண்டும் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது , ஆனால் இவர்களின் கமல் - ரஜினி காம்பினேஷன் ஒரு லெவலுக்கு மேல் எரிச்சலை தருகிறது ... இன்னும் எத்தனை படங்களுக்கு தான் சந்தானம் ஆபத்பாந்தவனாக இருப்பாரோ தெரியவில்லை ...

ராதிகா , நாசர் , ரோஜா இவர்களுள் ராதிகா மட்டும் கவனிக்க வைக்கிறார் ... கோ பாணியில் அரசியல் படம் என்று பார்த்தால் , அந்த படத்தை போலவே முதலமைச்சராக பிரகாஷ்ராஜ் , எதிர்க்கட்சி தலைவராக கோட்டா ஸ்ரீனிவாசராவ் என காஸ்டிங்கும் அதைப் போலவே செய்திருக்கிறார்கள் , இதில் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை ...


மனசெல்லாம் நல்ல மெலடி , மற்றபடி இந்த படத்திற்கு இந்த இசை போதுமென்று ஜி.வி.பிரகாஷ்குமார் நினைத்து விட்டாரோ என்னவோ ... சந்தானத்திடம் சொல்வதன் வாயிலாக கார்த்தி தன் பிளாஸ்பேக்கை சுவாரசியமாக சொல்வது , சந்தானத்தின் காமெடி , சீனியர் நடிகர்களின் பங்களிப்பு , தூள் கதையை தூசி தட்டி எடுத்திருந்தாலும் இரண்டரை மணி நேரத்திற்கும் மேல் அதை சொன்ன இயக்குனரின் தைரியம் இவைகளையெல்லாம் சகுனியின் ப்ளஸ்களாக சொல்லலாம் ...

தொடர்ந்து சக்சஸ் கொடுக்கும் ஹீரோவின் கால்ஷீட் இருந்தாலே போதும் வேறொன்றும் தேவையில்லையென நினைத்து விட்ட அறிமுக இயக்குனர் சங்கர் தயாளின் எண்ணம் , வசனத்தில் மட்டும் அவிழ்க்க முடியாத முடிச்சுக்களை போடுவதே சுவாரசியம் என்று சொல்லிவிட்டு எந்த வித சுவாரஸ்யமும் இல்லாமல் அமைக்கப்பட்ட திரைக்கதை , கதை மட்டும் தான் சுட்டது என்று பார்த்தால் கோ , சிவகாசி , மக்கள் ஆட்சி உட்பட பல படங்களில் பார்த்து பழகிப் போன காட்சிகள் , படம் பார்க்க வருகிறவர்கள் எல்லாம் மங்குணிகள் என்ற நினைப்பில் பசிக்கு ஹோட்டலில் புகுந்து ஏதோ நாலு இட்லி , வடை சாப்பிடுவது போல ஹீரோ அவ்வளவு ஈசியாக கவுன்சிலர் , மேயர் , முதல்வர் என அவ்வளவு பேரையும் உருவாக்கிக் கொண்டே போவது இவைகளெல்லாம் ரசித்திருக்க வேண்டிய சகுனியின் சூதாட்டத்தை சலிப்படைய வைக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 39 


17 June 2012

வழிப்போக்கன் ...மயிலிறகால் வருடிவிட்டு
முள்ளால் தைப்பது
போலிருந்தது
ஒரே நாளில்
நடந்து முடிந்த
நம் சந்திப்பு ...

உயிருக்கும் வரை
உறையப் போகும்
நினைவுகளுக்கு முன்னாள்
உன் பெயரொன்றும்
பெரிதில்லை ...

பார்வையிலேயே
புரிந்து போன பிறகு
பெயரெதற்கு ?

வெறுமையுடன் வந்து
அடி மனதில்
பத்திரப்படுத்திய
உன் புன்னகையுடன்
திரும்புகிறேன் ...

வாழ்க்கையை பொறுத்தவரை
நாம் அனைவருமே
வழிப்போக்கர்கள் தான் ...

வழிப்போக்கனின் வாழ்க்கையையும்
அர்த்தமாக்கிக் கொண்டிருக்கும்
இது போன்ற
கரையாத
கடந்த கால நிமிடங்கள் ...

அந்த நிமிடங்களின்
அனுபவ சுவைக்காக
நீடித்துக் கொண்டிருக்கும்
வழிப்போக்கனின் வாழ்க்கை ...


9 June 2012

கிருஷ்ணவேணி பஞ்சாலை - நேர்த்தியாக நெய்திருக்கலாம் ...ன் மாமா பையன் பல வருடங்களுக்கு முன்னாள் கோயம்புத்தூரில் ஒரு மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் . மில் மூடப்படவே ஒரு நாள் சொந்த ஊருக்கே வந்து விட்டான் . அந்த காலத்தில் நமக்கு தெரிந்த யாரவது ஒருவராவது மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் , மில் மூடப்பட்டது என்றெல்லாம் செய்தித்தாள்களில் நிறைய படித்திருப்போம் . இப்படி செய்தியாக எங்கோ கேட்கும் விஷயத்தை முழு நீள படமாக்கி நம் கண் முன்னே உலவ விட்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் தனபாலன் பத்மநாபன் .

நாவல் போன்ற கதை , ஆனால் சினிமாவிற்கு தேவையான க்ரிப்பான திரைக்கதை இல்லையென்றே சொல்லலாம் . 1957 இல் நிர்வாகத் தகராறால் தன் பார்ட்னரை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ளும் ஒரு பெரியவரிடமிருந்து தொடங்கும் கதை , மில்லில் வேலை பார்க்கும் கதிர்
( ஹேமச்சந்திரன் ) , பூங்கோதை ( நந்தனா ) இருவரின் காதல் , நந்தனாவின் தாய் ரேணுகாவின் ஜாதி வெறி , போனஸ் தொடர்பாக முதலாளிக்கும் , தொழிலாளிகளுக்குமிடையே ஏற்படும் பிரச்சனை , மில் மூடப்படுவதால் இரண்டு தரப்பிற்கும் ஏற்படும் இழப்பு இவைகளையெல்லாம் படம் நெடுக 2007 வரை பதிவு செய்கிறது .


ஹேமச்சந்திரன் மில் தொழிலாளியாக இயல்பாக நடித்திருக்கிறார் . நந்தனாவின் கண்கள் நன்றாகவே பேசுகின்றன . படத்தின் தலைப்பிற்கேற்ப பஞ்சாலையை பிராதனப்படுத்தி இவர்களை கதாபாத்திரங்களாக மட்டும் உலவ விட்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் . ஆனால் இவர்கள் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மனதில் பதியவில்லை . படம் நெடுக ரேணுகாவை பக்கத்து சீட்காரர் திட்டிக் கொண்டேயிருந்தார் , அவர் இறந்தவுடன் சந்தோசப்பட்டார் . அலட்டிக் கொள்ளாமல் தன் நெகடிவ் தனத்தை அழுத்தமாக பதிவு செய்ததே அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி .

மில் முதலாளியாக ராஜீவ் கிருஷ்ணா , கேன்டீன் வைத்திருப்பவராக எம்.எஸ். பாஸ்கர் , கதிரின் அப்பாவாக பாலா சிங் என நிறைய பேர் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தாலும் ஜொள் விட்டுக்கொண்டே பெண்களுக்கு சாக்லேட் கொடுத்து கவர் செய்யும் மில் சூப்பர்வைசர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சண்முகராஜன் நம்மை கவர்கிறார் . இந்த படத்தின் மூலம் காஸ்டிங் டைரக்டாராக ( தமிழ் சினிமாவுக்கு இது புதுசு ) புது அவதாரம் எடுத்திருக்கும் சண்முகராஜனுக்கு வாழ்த்துக்கள் . படம் நெடுக உலா வரும் நிறைய புது முகங்களில் சிலரை தவிர்த்து மற்றவர்களை தேர்வு செய்வதிலும் , பயிற்சி கொடுப்பதிலும் இவர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது .

ரகுநந்தன் இசையில் ஆலைக்காரி உட்பட பாடல்கள் பஞ்சு போல் மென்மையாக இருக்கின்றன . காசிவிஸ்வநாதனின் எடிட்டிங் , சுரேஷ் பாகவின் ஒளிப்பதிவு இரண்டுமே தரமாக இருக்கின்றன . மனதை தொடும் டைட்டில் , படத்தின் ஸ்டில்கள் , விளம்பர யுக்தி , கதை , மிக எளிதாக அதே சமயம் அழுத்தமாக முதலாளி - தொழிலாளி பிரச்சனைகளை பதிவு செய்த விதம் , முதல் படத்திலேயே இயக்குனரின் மாறுபட்ட சிந்தனை இவைகளையெல்லாம் நிச்சயம் பாராட்டலாம் .


படம் இரண்டு மணி நேரமே ஓடினாலும் இழுவையாக இருக்கும் திரைக்கதை , அவ்வப்போது வந்து படத்தை நாடகத்தனமாக்கும் அழுகைக்காட்சிகள் , தொடர்ந்து வைக்கப்பட்ட சிம்பாலிக் ஷாட்கள் ( ரேணுகா மகளை கொல்வதற்கு முன் காட்டப்படும் மின் விளக்கு அவர் தற்கொலை செய்து கொள்ளும் சீனிற்கு முன்னரும் காட்டப்படுவதால் நடக்கப் போவது முன்னமே தெரிந்து சுவாரசியம் குறைகிறது ) இவைகளெல்லாம் படத்தில் தவிர்த்திருக்கப்பட வேண்டிய குறைகள் .

எந்தெந்த தரப்பினர் எந்த மாதிரியான படங்களை விரும்புகிறார்கள் என்றெல்லாம் ப்ராஜெக்ட் செய்த படக்குழுவினர் இந்த படத்தை எந்த மாதிரியான தரப்பினருக்கு எடுக்கிறோம் என்பதிலும் கவனமாக இருந்து திரைக்கதையையும் நேர்த்தியாக நெய்திருந்தால் கிருஷ்ணவேணி நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பாள் .

ஸ்கோர் கார்ட் : 41 

8 June 2012

சுமைகள் ... - சிறுகதைதினமும் ஜாக்கிங் போவது என் வழக்கம் . கைகளை வேகமாக வீசிக்கொண்டு நடக்கும் பெரியவர் , சீரியல் கதைகளை பேசிக்கொண்டு ஓட்டமும் , நடையுமாக போகும் குண்டு பெண்கள் , வானம் தலையில் விழுந்து விடுமோ என்ற பயத்தில் அண்ணாந்து பார்த்துக் கொண்டே ஓடும் நடுத்தர வயதுக்காரர் என விதவிதமான மனிதர்கள் , விதவிதமான முகங்கள் . உடல் ஆரோக்கியம் என்பதை விட காலையில் இளஞ்சூரியனின் வெப்பத்தை வாங்கிக்கொண்டு , சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே போவதென்பது ஒரு அனுபவம் . இதை எத்தனை பேர் அனுபவிக்கிறார்கள் என்று தெரியவில்லை . உடலை விட வேகமாக ஓடும் மன ஓட்டங்கள் , முன்னோக்கி ஓட பின்னோக்கி போகும் சிந்தனைகள் .

நம் எல்லோரையும் விட வாழ்க்கை மிக வேகமாக ஓடுகிறது . அதற்கு எந்த கவலையுமில்லை . பல கோடி ஆண்டுகளாய் அது எல்லோரையும் பார்த்துக்கொண்டே தானிருக்கிறது . நாம் பிறப்பதற்கு முன் என்னவாய் இருந்தோம் , இறப்பிற்கு பின் எங்கே போகிறோம் என்ற கேள்வியை அநேகமாய் எல்லோரும் ஒரு சமயமாவது நமக்கு நாமே கேட்டுக்கொண்டிருப்போம் . இது போன்ற கேள்விகள் கடவுளின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொண்டுதான் போகின்றன . தீராத ஆசை கொண்ட ஆன்மாவிற்கு அடுத்த பிறவி நிச்சயம் உண்டு என்கிறார்கள் . எல்லோருக்கும் அடுத்த பிறவி உண்டா ? சென்ற பிறவியில் நாம் யார் ? மனிதனாய் தான் பிறந்திருப்போமா ? மனிதப்பிறவி பெருமிதம் கொள்ளத்தக்கது தானா ? தெரியவில்லை . பதில் தெரியாத கேள்விகளை அசை போட்டுக்கொண்டே ஓடுவதிலும் ஒரு தனி சுகம் .கண்டதை சிந்திக்கவில்லை என்றால் மனிதனாய் பிறந்து என்ன பயன் ?

ஏதேதோ நினைப்பில் ஓடிக்கொண்டிருக்கும் போது தான் அந்த கூட்டத்தை பார்த்தேன் . சுகம் ,துக்கம் என எல்லாவற்றிற்கும் மனிதர்கள் கூடுகிறார்கள் , ஆனாலும் தனியாய் தான் நிற்கிறார்கள் . அடிபட்டுக் கிடக்கும் சக மனிதனை பார்க்கும் போதும் ஆபீசிற்கு டைம் ஆகிவிட்டதா என்று மணிக்கட்டை பார்க்கும் பரபரப்பான மனிதர்கள் தான் இங்கு அதிகம் . அங்கு கூடியிருந்த சிறு கூட்டம் மனிதனுக்கானது அல்ல . அது ஒரு பூனையை வேடிக்கை பார்க்க சேர்ந்த கூட்டம் .

" ஆக்கும் , தெனமும் திருட்டு பால் குட்சிக்கினுர்ந்தது , இன்னிக்கு நல்லா சொம்புவுள்ள தலைய விட்டு மாட்டிக்கிச்சு " , பால் வித்தியாசமின்றி கூட்டத்துடன் உரசிக்கொண்டே சொன்னாள் அந்த பெண் . " கரிக்கிட்டா சொன்னம்மே " சொல்லிக்கொண்டே அவன் திருட்டுத்தனமாய் ஏனோ கண்ணடித்தான் . " இத்தோட ஒரே ரோதன சார் , தெனமும் என் வூட்டு மீன புட்சிக்குனு போயிடும் , இன்னிக்கு நல்லா மாட்டிக்கிச்சு " மீன் போன துக்கத்தை விட பூனை மாட்டிக் கொண்டதில் அவளுக்கு சந்தோசம் போல இருந்தது . " இப்படியே வுட்டா செத்துரும் " கூட்டத்தை ஏக்கத்துடன் பார்த்தான் அந்த சிறுவன் .

சொம்பில் கையை வைத்து இழுக்க பூனை அதிகமாய் திமிறியது . தினமும் பாலும் , மீனும் தின்று அதன் உடல் கொஞ்சம் கனத்திருந்தது . " ஐயோ , நகத்தால கீறிட்டது சார் " சொல்லிக்கொண்டே அவர் கையை விட பொத்தென்று விழுந்தது அந்த பழுப்பு நிற பூனை . ஏதோ ஆர்டர் கொடுத்து செய்தது போல தன் தலையோடு ஒட்டிக்கொண்டு இருந்த சொம்பை பூனை முன்னுக்கும் பின்னுக்கும் பலமாக ஆட்டிக் கொண்டிருந்தது . " பூனை முடி கொட்டினா பாவம் " மனதின் ஓரமாய் வந்த நினைப்பை ஓரங்கட்டி விட்டு இடுப்போடு பூனையை அணைத்து தூக்கினேன் . பத்தடி தூரத்தில் தான் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது . அவர்கள் ஏதாவது சாதனத்தை வைத்து பூனையை காப்பாற்றிவிடுவார்கள் என்பது என் நம்பிக்கை .

பூனையின் சாவை விட இப்படியே விட்டுவிட்டால் சாவிற்கு முன் அது அடையப்போகும் வேதனையை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது . பூனையின் தலையை ஆக்ரமித்துக் கொண்ட சொம்பை போல் மனதிற்குள் தான் எத்தனை சுமைகள் . படிக்காதவனுக்கு படிப்பு , படித்தவனுக்கு வேலை , வேலைக்கு போகிறவனுக்கு சம்பளம் , சம்பளக்காரனுக்கு அன்றாடம் ஆகும் செலவுகள் , பணம் நிறைய இருப்பவனுக்கோ அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமேயென்ற கவலை . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை , அது தரும் சுமை . பாலிற்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொண்ட பூனை போல நாமும் எதிலோ மாட்டிக்கொண்டு அதை விலக்கி வைக்க முடியாமல் சுமைகளுடனே சுற்றிக்கொண்டிருக்கிறோம் .

" அழுத்தி பிடிங்க சார் , நான் டிரில்லிங் மிசின்ல கட் பண்ணிர்றேன் " . அழுத்தி பிடிக்க பிடிக்க பெற்றோர் மேல் நம்பிக்கை இல்லாத டீன் ஏஜ் பசங்களை போல அது மேலும் திமிறியது . இது வேலைக்காவாது என்பது போல கொஞ்சம் பேர் கலையத்தொடங்க பூனை பிழைக்குமா ? சாகுமா ? என சிலர் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்கள் . " அதோட விதி அவ்வளவு தான் சார் " எனக்கு ஒத்தாசையாக இருந்த நபர் தனக்கு நேரமாவதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார் . மரணம் பெரிய விமோசனம் என்கிறார்கள் , அது சாவை சந்திப்பவனுக்கு தான் . சாவை அருகிலிருந்து பார்ப்பவர்களுக்கு அல்ல .

" கொஞ்சம் பொறுமையா இருந்தா காபாத்திரலாம் " என் குரல் ஏனோ கம்மியது . " யாராவது ஆஸா ப்ளேட் இருந்தா கொடுங்க " எனக்கு நம்பிக்கை கொடுத்தது அந்த குரல் . அந்த ஆஸா ப்ளேட் கூட உடனே கிடைக்கவில்லை . ஏதோ யாசகம் கேட்பவனைப் போல பார்த்தார்கள் . " ரொம்ப நேரமா போராடீனுக்குற , அத்த பாக்கவும் பாவமா இருக்குது , இந்தா ப்ளேட பிடி " கடைசியில் தன் மீனை தின்று விட்டதாக வருத்தப்பட்ட பெண்ணே தள்ளியிருந்த அவள் வீட்டுக்கு சென்று ப்ளேட் கொண்டு வந்து கொடுத்த போது இவளை தப்பாக நினைத்து விட்டோமே என்று கொஞ்சம் வெக்கமாக இருந்தது . சூழ்நிலையே மனிதர்களை அடையாளம் காட்டுகிறது . அதுஅடையாளம் காட்டுவதற்குள் நாம் உணர்சிவசப்பட்டு முடிவுகள் எடுத்துவிடுகிறோம் .

மனதை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கும் காமம் போல மெதுவாய் அவர் சொம்பின் இடைவெளிக்குள் ஆஷா பிளேடை நுழைத்து நெம்பிக் கொண்டிருந்தார் . " கடைசியா ட்ரை பண்ணுவோம் , இதுக்கு மேல நெம்பினா கழுத்து அறுந்துரும் " அறுப்பவர் சொல்ல , அப்படியொரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதென கடவுளை வேண்டிக்கொண்டேன் . இப்படி சித்திரவதையில் சாவதை விட உடனே செத்து விடலாம் என்ற எண்ணமும் ஏனோ தலை காட்டியது . " இந்த தடவ கண்டிப்பா காப்பாத்திடலாம் " திடமாய் சொன்னேன் . அந்த நிமிடம் அந்த உயிரை காப்பாற்றி விட வேண்டுமென்பதே எனக்கு தலையாய குறிக்கோள் போல இருந்தது .

பூனையின் மனதில் இப்பொழுது என்ன ஓடிக்கொண்டிருக்கும் . சில பேர் அதன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று அதற்கு தெரியுமா? முகமே தெரியாத பின் வரும் சந்ததிக்கு பணம் சேர்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் வயிற்று பசிக்காக சொம்பிற்குள் தலையை விட்ட பூனைக்கு மட்டும் ஏனோ இந்த கதி . ஒரு வேலை அது கிளம்பும் போது மனிதன் குறுக்கே போயிருப்பானோ ?!. இது போன்றெல்லாம் நினைப்பதற்கு பூனைக்கு வாய்ப்பில்லை . பாவம் பூனைக்கு ஐந்தறிவு .

" சார் , கொஞ்சம் அழுத்திப் பிடிங்க , பாதி எடுத்தாச்சு " , மீதியையும் எடுப்பதற்காக அதன் மிருதுவான உடலின் மேல் என் கைகளை இறுக்கினேன். இருந்த கொஞ்சம் பேரும் பூனை பாய்வதற்கு ஏதுவாக வழியை விட்டு பின் பக்கமாக நின்று கொண்டார்கள் . பத்து , ஒன்பது , எட்டு ஒவ்வொன்றாக மனதிற்குள் எண்ணிக்கொண்டேன் . ஒன்று வரை எண்ணி முடிக்கும் முன்னே பல நாள் பசியில் இருந்தவன் உணவை பார்த்தவுடன் ஓடுவதைப் போல விருட்டென்று ஓடியது அந்த பூனை .

" எப்படியோ ஒரு வழியா காபாத்திட்டோம் " வேடிக்கை பார்த்த ஒருவர் மகிழ்ச்சியாக சொன்னார் . அங்கே எல்லோர் முகத்திலும் வெற்றிகரமாக ராக்கெட்டை பறக்க விட்ட விஞ்ஞானிகளை போல ஒரு பெருமிதம் . சுமை இறக்கிவிடப்பட்டவுடன் சிட்டாய் பறந்த பூனையின் திசையை பார்த்தபடியே அவரவர் மன சுமைகளுடன் ஒவ்வொருவராய் பிரிந்தோம் .

Related Posts Plugin for WordPress, Blogger...