29 October 2011

ஏழாம் அறிவு - ஆறாம் அறிவே ...


     ஒரு படத்திலேயே இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் , சமீபத்தில் தோல்வியே கண்டிராத சூப்பர் ஹீரோ இருவரின் கூட்டணியில் ஆறு வருட இடைவேளைக்கு பிறகு வந்திருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமே இல்லை ... அதிலும் பிரமோக்களை தாண்டி " போதி தர்மன் " என்ற பல்லவ இளவரசனை பற்றி ஏ.ஆர்..முருகதாஸ் எடுத்துக்கொண்ட கதைக்களம் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக்கியது ...

    வான சாஸ்திரத்தில்  இருந்து வயகரா வரை இங்கிருந்து மூல காரணிகளை வெளிநாட்டவர்கள்  சுருட்டி செல்ல நாமோ அந்த வரலாறு தெரியாமல் அயல்நாட்டு  மோகத்தில் இருக்கிறோம் என்பதை உரக்க சொல்வதால் வரலாற்றோடு கலந்து கட்டிய கற்பனையை நாம் கண்டுகொள்ளாமல் விடலாம் ...
                                  
     1600  வருடங்களுக்கு முன் காஞ்சிபுரத்திலிருந்து சீனா செல்லும் பல்லவ இளவரசன் போதி தர்மன் அங்கேயே தங்கி சீனர்களுக்கு மருத்துவத்தையும்  , தற்காப்பு கலையையும் கற்று தருவதோடல்லாமல் தன் வாழ்கையையும்  முடித்து கொள்கிறார் ...

    தற்காலத்தில் சீனர்கள் அந்த கலையை பயோ வார் மூலம் நம்மை அழிப்பதற்காகவும்  , போதி தர்மன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஸ்ருதியை கொல்வதற்காகவும் டோன் லீ என்பவனை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள் ... போதிதர்மன் பரம்பரையில் வந்த சூர்யாவை கொண்டு இந்த பயங்கரத்தை ஸ்ருதி எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை ...     நடுவில் மானே தேனே போல ஆறு பாடல்கள் , காதல் , வில்லனின் ஹிப்னாடிச கொலைகள் , நீள , நீள வசனங்கள் , போதி தர்மன் பற்றிய போதனைகள் என போகிறது படம் ...

    முதல் பதினைந்து நிமிடத்திற்குள் கதை எதை நோக்கி செல்கிறது என்பதை பார்வையாளர்களுக்கு சொல்லி விடுவதே சிறந்த திரைக்கதைக்கு அடையாளம்  என்பார்கள் ... ஆனால் இந்த படத்தில் முதல் இருபது நிமிடங்களுக்குள் மொத்த கதையையும் சொல்லிவிட்டு பின் படம் முழுவதும் அந்த சுவாரஷ்யத்தை தக்க வைக்க தவறி விடுகிறார்கள் ...

                           
    சூர்யா சிக்ஸ் பேக்கிற்கு மெனக்கெட்ட அளவிற்கு நடிப்பில் மெனக்கெடவில்லை ... அவர் போதி  தர்மனாக பிரகாசித்தாலும்  அவருடைய அரவிந்தன் கேரக்டரை வில்லனும்  , ஸ்ருதியும் அமுக்கி விடுகிறார்கள் ... அதிலும் சூர்யா ஸ்ருதியை  விழுந்து , விழுந்து காதலித்து விட்டு பின் ஸ்ருதி ஏமாற்றி விட்டார் என்று சொல்லி " எம்மா , எம்மா " என வழக்கமான காதல் தோல்வி  பாட்டு பாடுவது செயற்கை திணிப்பு ...

    ஸ்ருதிக்கு தமிழில் அருமையான அறிமுகம் ... படத்தில் சூர்யாவை விட அவருக்கு தான் வசனங்கள் அதிகம் ... அதனால் தானோ என்னவோ அவர் கஜினி அசின் அளவிற்கு மனதில் ஒட்டவில்லை ... மற்ற படி கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ...

                    
    வில்லனை எதிபார்த்து படத்திற்கு  நிறைய பேர் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன் ... அவர் அறிமுகம் ஆகும் போது அவ்வளவு கைதட்டல்கள் ... பார்வையாலே கலக்கும் வில்லன் ... அதற்காக இவர் படம் நெடுக கண்களாலேயே ஹிபனாடிச கொலைகள் செய்து கொண்டிருப்பதும் கொடுமை... ஒருவனை ஹிப்னாடிசம் செய்யும் போது நடுவில் தடுப்பு இருக்க கூடாது என்பது நியதி , ஆனால் வில்லனோ சகட்டுமேனிக்கு லாரி , கார் ஓட்டுபவர் என்று ஒருவனை விடாமல் தொடர்ச்சியாக கொலை செய்யும் போது சலிப்பு தட்டுகிறது ...

    ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனுக்கு ஒரு சபாஷ் ... படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவு வரை அருமையான ஒளிப்பதிவு ... ஹாரிஸ்
" ஒ ரிங்கா " பாடலை " டாக்ஸி டாக்ஸி " யில் இருந்து சுட்டிருந்தாலும்    
              
" எம்மா எம்மா " பாடலிலும் " தோழா " பாடலிலும் ஒரிஜினாலிட்டி காட்டுகிறார் ... அதிலும் குறிப்பாக " எம்மா எம்மா " வில் எஸ்.பி.பி யின் குரலும் , கபிலனின் வரிகளும் மனதை வருடுகின்றன ... இருந்தும் பாடலுக்கான லீட் அழுத்தமாக இல்லாததால் அழகு குறைகிறது ...

                      
     ஏற்கனவே , தசாவதாரம் போன்ற படங்கள் பயோ வாரை தொட்டிருந்தாலும்  இதற்காக இயக்குனர் நிறைய மெனக்கட்டிருப்பது டீடைளிங்கில் தெரிகிறது ... ஆனால் அது ஓவர்டோஸ் ஆகாமல் தடுத்திருக்கலாம் ...

     " மஞ்சளே மொளைக்காத நாட்டுக்காரன் நம்ம ஊர் மஞ்சளுக்கு பேட்டர்ன் ரைட் வாங்குறான் " ,  " 800 வருசமா இருக்கற இங்கிலிஷ்ல நீங்க பேசலாம் பல்லாயிரம் வருசமா இருக்கற தமிழ்ல நான் பேச கூடாதா " போன்ற நச் வசனங்கள் நிறைய ... வசனங்களில் நாம் நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டு எதையோ தேடி அலைகிறோம் என்பதன் ஏக்கம் நன்றாக தெரிகிறது ... அதே போல தமிழ் , தமிழன் என்று வசனங்களில் பிரச்சார  நெடி ...
        
     போதி தர்மன் " தமிழன் "  என்று நிறைய இடங்களில் சொல்கிறார்கள் , ஆனால் பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் , அவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்து சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக கொண்டு ஆண்டவர்கள் என்கிறது தமிழர் வரலாறு ... அதே போல் போதி தர்மன் சீனாவில் பரப்பியது " ஜென் புத்திசம் " என்ற கோட்பாடே , தற்காப்பு கலைகள் அங்கு முன்பே இருந்தன என்கிறது உலக வரலாறு ...


     சீனாவில் கடவுளாக வணங்கப்படும் புத்தர் நம் நாட்டில் பிறந்தவரே ... அவரை போல போதி தருமனையும் 28 வது குரு மாராக சீனர்கள் ஏற்றுக்கொண்டதில் நமக்கெல்லாம் பெருமை , அந்த பெருமையை இந்த படம் மூலம் பறை சாற்றியதால் ஏ.ஆர்.முருகதாஸை கண்டிப்பாக பாராட்டலாம் ...

     ஆனால் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையை ஏதோ இருவர் மட்டும் சம்பந்தப்பட்டது போல எடுத்து சென்றது  , காட்சிகளால் சொல்ல வந்ததை விளக்காமல் வெறும் வசனங்களாலேயே நிரப்புவது , " கஜினி " யில் இருந்தது போல காதல் காட்சிகள் இதில் சுவாரஷ்யமாக இல்லாதது இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஏழாம் அறிவு - ஆறாம் அறிவே ...

ஸ்கோர் கார்ட் : 43

24 October 2011

திரை தீபாவளி - தீபாவளி படங்கள் ஓரு பார்வை ...

             
    தீபாவளி என்றாலே நம் எல்லோருக்கும் அதிகாலையில் எழுந்து தலைக்கு எண்ணை  வைத்து குளிப்பது , குடும்பத்தாருடன் சந்தோசமாக புத்தாடைகள் அணிந்து கொண்டு வித விதமாக வெடிகள் வெடிப்பது , சாமிக்கு படையல் வைத்து விட்டு பலகாரம் சாப்பிடுவது இப்படி வழக்கமான பழக்கங்கள் பல சட்டென்று நினைவுக்கு வரும் ...

ezham-arivu


    இவற்றையெல்லாம் தாண்டி பல வருடங்களாக கடைபிடித்து வரும் மற்றொரு பழக்கம் தீபாவளிக்கு ரிலீசாகும் நமக்கு பிடித்த ஹீரோவின் படத்தை அடித்து பிடித்து முதல் நாள் முதல் ஷோவே  பார்ப்பது ... நினைத்து பார்க்கும் போதே அவரவர் மனத்திரையில் பிளாஷ்பேக் ஓடும் ...அப்படி தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய தமிழ் படங்களின் நினைவலைகளே " திரை " தீபாவளி ... 

    தமிழ் சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் ...  இவர் குரல் வளத்திற்கு சொக்காதவர்கள் குறைவு ... இவர் நடிப்பில் 1944  ஆம் ஆண்டு  தீபாவாளிக்கு வெளிவந்த " ஹரிதாஸ் " படம் ஜி.ராமனாதனின் இசையில் எம்.கே.டி பாடிய பாடல்களுக்காகவே மூன்று தீபாவளி வரை தொடர்ந்து மரத்தான் ஓட்டம் ஓடியது ... அம்மா வேடத்தில் பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை பண்டரிபாய் இதில் தான் அறிமுகம் ஆனார் ... 
                    

    பாடல்களாகவே இருந்த தமிழ் சினிமாவை வசனங்களின் வீச்சால் திரும்பி பார்க்க வைத்தது கலைஞரின் கதை வசனத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் அறிமுக நடிப்பில் 1952  ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த " பராசக்தி " ... கலைஞரின் கூரிய வசனங்களும் , சிவாஜியின் சிம்ம குரலும் பகுத்தறிவு பிரசாரங்களை இப்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பரப்பின ... 

    இதன் பிறகு இவருடைய பல படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகி பெரிய வெற்றியடைந்தாலும் அதில் மிக முக்கியமானது சிவாஜி 9 வேடங்களில் நடித்த அவருடைய நூறாவது படமான " நவராத்திரி " ... அவருக்கு இணையாக நடிகையர் திலகம் சாவித்திரியும் மிக அருமையாக நடித்திருப்பார் ... இந்த படம் 1964  ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்தது ... ரஜினி , கமல் இருவரின் வளர்ச்சிக்கு பிறகும் சிவாஜி பிரபுவுடன் இணைந்து நடித்த " வெள்ளை ரோஜா " 1983  ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்து நூறு நாட்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடியது ...


                
     சிவாஜியை போல எம்.ஜி.ஆர் அவர்களின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை ... 12  வருடங்கள் சிறு சிறு வேடங்களில் நடித்து தன்னுடைய 16  வது படத்தில் தான் அவரால் ஹீரோவாக முடிந்தது ... இவருடைய பெரும்பாலான படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகி பெரிய வெற்றியடைந்திருக்கின்றன ... தீபாவளிக்கு வெளியாகி பெரிய வெற்றியடைந்த இவரின் குறிப்பிடத்தக்க படங்கள் " மன்னாதி மன்னன் " மற்றும் " படகோட்டி " ... 

    எம்.ஜி.ஆரை போலவே வசூலை அள்ளி குவிக்கும் சூப்பர் ஸ்டாரின் படங்கள் பெரும்பாலும் சித்திரை திருநாளன்று வெளிவருவது வழக்கம் ... வெற்றி பெற்ற இவருடைய தீபாவளி படங்களில் மிக முக்கியமான படம் " முத்து " ... 1995 ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூலை அள்ளிக் குவித்ததோடு மட்டுமல்லாமல் அடுத்து வரப்போகும் அரசியல் மாற்றத்திற்கு ஒரு முன்னோடியாகவும் இருந்தது ... 

    வெற்றியையும் , தோல்வியையும் சரி சமமாய் சந்திக்கும் கமலின் படங்கள் தீபாவளியை பொறுத்தவரை பெரும்பாலும் வெற்றியடைந்தன என்றே சொல்லலாம் ... இவர் சைக்கோவாக நடித்த " சிகப்பு ரோஜாக்கள் " , டைம் வெளியிட்ட உலகின் சிறந்த நூறு படங்களில் இடம்பிடித்து கமலுக்கு தேசிய விருதும் வாங்கிக்கொடுத்த " நாயகன் " , நடிகர் திலகத்துடன் இணைந்து இவர் நடிப்பிலும் , திரைக்கதையிலும் வெளிவந்த " தேவர் மகன் " போன்றவை சில உதாரணங்கள் " முத்து " அளவிற்கு பெரிய வெற்றியடையாவிட்டாலும் நல்ல பெயர் சம்பாதித்ததோடு , பெண்கள் கூட்டமே இல்லமால் நூறு நாட்கள்  ஓடியது " குருதிபுனல் " ... 

                  

    ரஜினி , கமல் இருவரும் இணைந்து நடித்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி பெரிய வெற்றியடைந்த படம் " மூன்று முடிச்சு  " ... கேப்டனை பொறுத்தவரை தீபாவளி வெற்றி படங்களில் குறிப்பிடத்தக்கது ஆக்சனை தாண்டி அவருடைய நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை காட்டிய  "வைதேகி காத்திருந்தாள் " ... நன்றாக ஓடியதோடு மட்டுமல்லாமல் நவரச நாயகன் கார்த்திக்கின் இயல்பான நடிப்பை நினைக்க வைக்கும் படம்      "கோகுலத்தில் சீதை " ...

                                     
    அஜித் ஆஞ்சநேயா , ஏகன் என்று தீபாவளியில் தோல்வி படங்கள் கொடுத்திருந்தாலும் வில்லனையும் , வரலாறையும் வைத்து சமன் செய்கிறார்... இவையிரண்டையுமே இயக்கியது கே.எஸ்.ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது ... விஜய் அழகிய தமிழ் மகனில் அடக்கி வாசித்திருந்தாலும் சிவகாசியில் வசூல் வானவேடிக்கை காட்டினார் ...
                     
    விக்ரம் , சூர்யா இருவருக்கும் தீபாவளி கொண்டாட்டமாக அமைந்தது பாலா கொடுத்த " பிதா மகன் " , இதை தவிர சூர்யா தனியாக  ஆதவனில் அசத்தியிருப்பார் ... சிம்புவிற்கு ஒரு " வல்லவன் " என்றால் தனுசிற்கு ஒரு " பொல்லாதவன் " ...    இப்படி பெரிய ஹீரோக்கள் படங்களை தவிர தீபாவளிக்கு  அத்தி பூத்தாற்போல வந்து மைனா மாதிரி மனதை அள்ளும் படங்களும் உண்டு ... முன்பெல்லாம் தீபாவளி அன்று பெரிய ஹீரோக்கள் படங்கள் போட்டி போட்டுக் கொண்டு ரிலீஸ் ஆவதோடு மட்டுமல்லாமல்  அவை எத்தனை நாட்கள் ஓடும் என்று ரசிகர்களுக்கிடையே  ஒரு போட்டியே நடக்கும் ... 

     இப்போதெல்லாம் பெரிய ஹீரோக்களே வியாபாரம் பாதிக்கும் என்பதனால் நேரடி போட்டியை தவிர்ப்பதனாலும் , படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை விட எத்தனை பிரிண்ட்கள் போடுகிறார்கள் என்பதே வியாபார யுக்தியாய் இருப்பதினாலும் குறைவான படங்களே ரிலீஸ் ஆகின்றன ... 
                    
     அதுவும் தவிர அடிக்கொரு தடவை சுட சுட " இந்திய தொலைக்காட்சிகளிலேயே முதல்  முறையாக வந்து சில நிமிடங்களே ஆன , இன்னும்  தியேட்டர்களில் ஒரு காட்சி மட்டும் ஓடிக் கொண்டிருக்கிற புத்தம் புது படம் " என்கிற அளவிற்கு சொல்லி முடிந்த வரை மக்களை டி.வி பொட்டிக்கு முன் உட்கார  வைத்து விடுகிறார்கள் ...

velayudam

 
   இந்த தீபாவளியை பொறுத்தவரை 1000  பிரிண்ட்களுடன் சூர்யா நடித்த ஏழாம் அறிவும் , 350  ஸ்க்ரீன்களுக்கு மேல் விஜய் நடித்த வேலாயுதமும் வெளியாகின்றன... எதிர்பார்ப்பில்  ஏழாம் அறிவே முந்துகிறது...

அனைவருக்கும் என் தீபாவளி நல் வாழ்த்துக்கள் ...  

( பின் குறிப்பு ) :  இந்த பதிவினை மூன்றாம்கோணம் தீபாவளி மலரிலும் காணலாம்....

21 October 2011

வேர்கள் – சிறுகதை...

     
    மாலை சூரியன் மறைந்து , இரவின்  முழு நிலவு வர தாமதப்பட அதைக் கண்டிப்பது போல் கண் சிமிட்டி , சிமிட்டி எரிந்து கொண்டிருந்தது அந்த நடைபாதை மின்விளக்கு....நீளமான பெஞ்சின் ஓரத்தை காக்கா எச்சம் குத்தகைக்கு  எடுத்திருக்க ,பெஞ்ச் நடுவில் தூக்கமா , சிந்தனையா என 
பார்ப்பவர்கள் குழம்பும் படி கைகள் கட்டி அமர்ந்திருந்தார் சிவசங்கரன்....

   " என்ன ஓய் நல்ல தூக்கமா..? கேட்டவருக்கு சிவசங்கரனைப் போல அறுபத்தைந்து வயது இருக்கும், அவர் தினமும் வாக்கிங் போவார் என்பதை தொப்பையில்லாத உடல்வாகும் , முகத்தில் வழியும் வியர்வையும்  சொல்லாமல் சொல்லின....

   " அதெல்லாம் ஒன்னும் இல்ல நடராஜன் , இன்னிக்கு என்னமோ ரொம்ப நடக்க முடியல அதான் அப்படியே சித்த  நேரம் உட்கார்ந்தேன் "

   " அப்புறம் வேற என்ன சேதி "

   அவர்கள் பேச்சு சிறிது நேரம் கிரிக்கெட் , உள்ளாட்சி தேர்தல் ,  அன்னா ஹசாரே என்று நீண்டது ...

  " மத்தபடி வீட்டு சமாச்சாரம்லாம்  எப்படி ?..என்று ஆரம்பித்தார் நடராஜன்...

   " பெருசா ஒன்னும் இல்ல ,  மூத்த பையனுக்கு பிரமோசன் வந்து சம்பளம் ஒரு லட்சத்தை தாண்டியாச்சு...ரெண்டாவது பையனும் , மருமகளும் வேலைக்கு போறதுனால அங்கயும் ஒரு குறையும் இல்ல..என் பேரன் கிளாஸ் பஸ்ட் வந்திருக்கான் " சொல்லும் போதே அவர் முகத்தில் பெருமிதம் பொங்கியது ...

  " ரொம்ப சந்தோசம்..என் பையனும் ஸ்ரீபெரும்புதூர்ல மூணாவது வீடு வாங்கிட்டான்..நல்ல இன்வெஸ்ட்மென்ட் , ரெண்டு வருசத்துலேயே டபுள் ஆயிடும்னு சொல்றாங்களாம்"

  " ஆமாமா , அந்தக் காலம் மாதிரி இல்ல..இந்தக் காலத்து பசங்க சம்பாதிக்கறதுலையும் , சேக்கருதலையும்   ரொம்ப தெளிவா இருக்காங்க , அதிலயும் அவன் காலேஜ் படிக்கும் போது ஒரு தடவ ஆக்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரில கெடந்தப்போ ,  மூஞ்சியெல்லாம் ரத்தத்தோட ஒரு நிமிஷம் கூட பாக்க முடியல , எவ்வளவோ கஷ்டப்பட்டு காப்பாத்துனோம் . இப்போ அவன் இருக்கற நிலமைய பாக்கறப்ப ரொம்ப பெருமையா இருக்கு "

   " நாம  தான் எவ்வளவோ கஷ்டப்பட்டாச்சு , பசங்க நல்லா இருக்கணும், என் செட்டில்மென்ட்  பணம் முழுசையும் பையன் மேற்படிப்புக்கு செலவு செஞ்சப்போ சொந்தக்காரங்க எல்லாம் " பொழைக்க தெரியாதவன் "னு என் காது படவே பேசினாங்க, இப்ப என்ன ஆச்சு பாத்தீங்களா , இவன் சம்பாதிக்கறத பாத்து எல்லாம் மூக்கு மேல விரல வைக்குறாங்க "

   " அது சரி தான்,  நல்லது , கெட்டது எது நடந்தாலும் சொந்தக்காரன் " நான் தான் அப்பவே சொன்னேன்லம்பான் " , என்று சிவசங்கரன் நாட்டு நடப்பை சொல்லி சிரித்தார்...

    தொடர்ந்து " நானும் என்ன பிரச்சனை வந்தாலும் பசங்களுக்கு ஒரு குறை வைக்கல , என் பொண்டாட்டி சொல்லியே கேட்கலையே, அவ நகையை வச்சு தான் பசங்க படிப்ப சமாளிச்சேன் , இதெல்லாம் பாக்க அவளுக்கு தான் குடுத்து வைக்கல , மகராசியா போய் சேந்துட்டா "... ,கொஞ்சம் கண்  கலங்கியபடியே வானத்தை நோக்கி பார்த்த சிவசங்கரனை ஆசுவாசப்படுத்துவது போல் தோள்களில் கை போட்டார் நடராஜன்....

   " விடுங்க , சிவசங்கரன் . சின்ன குழந்தை மாதிரி , பசங்க நல்லா இருக்கறத பாத்து அவங்க ஆன்மா நிச்சயம் சந்தோசப்படும் "...

   வாய் சமாதானம் சொன்னாலும் , மனைவியை இழந்த சோகத்தை அவர் கண்கள் காட்டிக்கொடுத்தன...சிறிது நேர வெற்றிடத்தை மிதமாக வீசிய காற்றும் , மர அசைவுகளும் நிவர்த்தி செய்தன..

   " டைம் எட்டு இருக்காது சிவசங்கரன் "

   " ம்..ம்..இருக்கும் , சாப்பிட போகணும், எல்லாரும் காத்திருப்பாங்க "...

   " சரி வாங்க போகலாம் "

    இருவரும் மெதுவாக " சரணாலயம் " என்ற  முதியோர்கள் மறு வாழ்வு மையத்தை நோக்கி நடந்தார்கள்....

17 October 2011

ஒண்டிக்கு ஒண்டி - உள்ளாட்சி தேர்தல் ...


           
     உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்  கட்ட வாக்குபதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் . பொதுவாக சட்டசபை மற்றும் மக்களவைக்கு நடக்கும் தேர்தலை போல உள்ளாட்சி தேர்தல் பரபரப்பாக இல்லாவிட்டாலும் இந்த முறை தே.மு.தி.க , இடது சாரிகள் தவிர மற்ற கட்சிகள் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவதும் , மாநகராட்சிக்கான மேயரை மக்களே நேரடியாக தேர்தேடுப்பதும் சுவாரசியத்தை கூட்டியிருக்கின்றன ...

    தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி வைத்து தங்கள் கொள்கைகளை ! காற்றில் பறக்கவிடுவதையே கொள்கையாக வைத்திருக்கும் கட்சிகள் வழக்கத்திற்கு மாறாக தி.மு.க , அ .தி. மு.க முதுகில் சவாரி செய்ய முடியாமல் தனித்து விடப்பட்டிருக்கின்றன ...

    சென்ற முறை அ.தி.மு.க கூட்டணியில் இருந்த தே.மு.தி.க , இடதுசாரிகள்  கூட்டணியாகவும் , தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ம.க மற்றும் காங்கிரஸ் தனித்தனியாகவும் போட்டியிடுவது யாவரும் அறிந்ததே ...

                             
    இழுபறி நிலையில் கூட்டணியில் இருந்து  கடைசியில் தே.மு.தி.க கழட்டி விடப்பட்டது சங்கடமாக இருந்தாலும் , உற்று நோக்கினால் தி.மு.க வுடன் தே.மு.தி.க வை மோத வைத்த அம்மாவின் சாமர்த்தியம் ஒளிந்திருப்பது தெரியும் ...

    இந்த முடிவு இப்போது இருக்கும் சூழ்நிழையில் இரண்டு கட்சிகளும் சேர முடியாதென்பதையும் , இருவரில் யார் ஜெயித்தாலும் அதில் தனக்கு சாதகம் இருப்பதையும் வைத்து போடப்பட்ட தெளிவான கணக்கு ... கடந்த சட்டசபை தேர்தலை புறக்கணித்து தன்மானம் காட்டிய வை.கோ இந்த முறை தே.மு.தி.க, இடது சாரி கூட்டணியில் சேர்ந்திருந்தால் ஒரு புது கணக்காவது தொடங்கியிருக்கும் ... தமிழகத்தில் தீண்டத்தகாத கட்சியென்று பி.ஜே.பி யை பழித்த காங்கிரஸ் இன்று அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது காலத்தின் கட்டாயம் ...

     இந்த தேர்தலில் தங்கள் பலத்தை கான்பிக்கப்போவதாக கட்சி தலைவர்கள் சொல்லிக்கொண்டாலும் சட்டசபை தேர்தலுக்கு கிடைத்தது போல பெருவாரியான வாக்குப்பதிவு இந்த முறை கிடைக்காது என்பதும் , இந்த தேர்தல் உயர்நீதி மன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடப்பாதலோ என்னவோ , சட்டசபை தேர்தலை போல அல்லாமல் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் கணிசமாக குறைந்திருப்பதும் , கட்சி உறுப்பினர்களின் ஒட்டுப்பதிவே பெரும்பாலும் நடக்கும் என்பதாலும் உள்ளாட்சி தேர்தலில் உண்மையான பலம் தெரியாது என்பதே உண்மை ...

             
     இருப்பினும் அன்றாட பிரச்சனைகளுக்கான தீர்வை முன் வைத்து நடத்தப்படும் இத்தேர்தலில்  அந்தந்த வார்டுகளில் நிற்கும் தனிப்பட்ட மனிதர்களின் நிறை,குறைகள் நிச்சயம் அலசப்படும் ... இது சுயேட்சைகளின் வெற்றி வாய்ப்பையும் அதிகரிக்கும் ...

       
    குறிப்பாக சென்னை மாநகராட்சியை பொறுத்த வரை மேயர் பதவிக்கு தி.மு.க சார்பில் போட்டியிடும் திரு.சுப்ரமணியன் மற்றும் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் திரு,சைதை துரைசாமி இருவரின் மீதும் மக்களுக்கு நல்ல அபிப்ராயம் இருப்பதால் நிச்சயம் போட்டி கடுமையாக இருக்கும் ...


   இருவரில் யார் மேயரானாலும் ஏற்கனவே தொடங்கிய மெட்ரோ ரயில் உள்ளிட்ட மக்கள் நல திட்டங்களை பாரபட்சமின்றி தொடர்ந்து நிறைவேற்ற வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம் ...

    மக்களின் பேராதரவோடு பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சிமைத்து ஆறு மாதங்களே முடிவந்த நிலையில் அ.தி.மு.க விற்கு மக்களின் ஆதரவு பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்பதும் , அ.தி.மு.க வை தேர்ந்தெடுத்தால் தான் மின்விசிறி , லேப் டாப் உள்ளிட்ட வாக்குறுதிகள் தங்குதடையின்றி நிறைவேற்றப்படுமென்ற மக்களின் நினைப்பும் , ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களையே உள்ளாட்சி தேர்தலிலும் ஜெயிக்க வைக்கும் மக்களின் மனப்பாங்கும் அ.தி.மு.க விற்கு சாதகமாக இருந்தாலும் , சமசீர் கல்வி குளறுபடி , தி.மு.க வினரின் தொடர் கைது ஏற்படுட்ட்திய அனுதாப அலை  , பரமக்குடி  துப்பாக்கி சூடு , கூட்டணி கட்சிகளை நடத்திய விதம் போன்றவையெல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை ஏற்படுத்துமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை ...

    இது போன்ற யூகங்களுக்கெல்லாம் விடை தெரிய ஒட்டு எண்ணிக்கை நாள் வரை நாமும் பொறுத்திருப்போம் ...

பின் குறிப்பு : இந்த பதிவை படித்ததோடு நின்று விடாமல் உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ்மணம் , இன்ட்லி , தமிழ் 10 , இனிய தமிழ் , உடான்ஸ் , உளவு உள்ளிட்ட அனைத்திலும் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது உங்கள் சகோதரன் , அன்புதோழன் அனந்து ... ( சாரிங்க தேர்தல் பத்தின பதிவா அதான் ... அதுக்காக நீங்க ஒட்டு போட மறந்துராதீங்க )

14 October 2011

இந்திய அணி பழி தீர்க்குமா ? பதுங்கி விடுமா ? ...


                                                   
    இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது ... இந்திய மண்ணில் போட்டி நடைபெறுவதும் , ஏற்கனவே இந்தியா இங்கிலாந்தை ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் சொந்த மண்ணில் தோற்கடித்திருப்பதும் நமக்கு சாதகமாக இருந்தாலும் , இங்கிலாந்தில் இந்திய அணி எட்டுக்கு பூஜ்ஜியம் என்று வாங்கிய உதையை யாரும் மறக்கவில்லை ... 


    உலககோப்பை வெற்றி தந்த மமதையில் மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்பப்பட்ட கத்துக்குட்டி இந்திய அணி நன்றாக ஆடி வெற்றி வாகை சூடினாலும் வலிமையான இங்கிலாந்து அணிக்கு முன் அந்த ஜம்பம் எடுபடவில்லை...


     ஐ.பி.எல் போட்டிக்கு எல்லா நாட்டு வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆட வர அப்பொழுது கூட இங்கிலாந்து அணியினர் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளுக்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டதன் பலன் வீண்போகவில்லை ... சவாலாக இருக்கும் என்று நினைத்த இந்திய அணி இப்படி சரண்டர் ஆகுமென்று அவர்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் ...     இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு எதிரான வியூகம் சரியில்லாததும் , காயம் காரணமாக ஜாகிர் , சேவாக் போன்றோர் ஆடாததும் , திராவிட் தவிர யாரும் பார்மில் இல்லாததும் தோல்விக்கான காரணங்களாக கூறப்பட்டாலும் , இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியன் பைசா லீக்  கிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை டெஸ்ட் போட்டிகளுக்கு கொடுக்காததே மிக முக்கிய காரணம் ... 
                                      
     இதற்கு நேர்மாறான போக்கே இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் நல்ல வெற்றிகளை தேடித்தந்தது ... இது போன்ற டூர்களில் வழிநடத்த கிறிஸ்டன் இல்லாததும் பெரிய இழப்பு ... டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதல் இடத்தை இழந்ததும் , நூறாவது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் அதை நிறைவேற்றாததும் பெரிய ஏமாற்றங்கள் ... கேப்டன் ஆனதிலிருந்து 11 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் கூட தோல்வியை கண்டிராத தோனிக்கும் இது மறக்க வேண்டிய தொடராகவே அமைந்திருக்கும் ... 

                                 
    டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து ட்வென்டி - ட்வென்டி , ஒரு நாள் தொடர் இவற்றிலும்  சச்சின் , சேவாக் , யுவராஜ் , ஜாகிர் போன்ற சீனியர்கள் ஆடா விட்டாலும் தோனியின் தலைமையிலான ரைனா , கோலி , பிரவீன் உள்ளிட்ட இளம் இந்திய அணி கிடைத்த ஒன்றிரண்டு வெற்றி வாய்ப்புகளையும் நழுவ விட்டது ...

   சீனியர் வீரர்களின் காயம் ஒருபுறம் , தோல்வி கொடுத்த பயம் மறுபுறம் இவையிரண்டிற்கும் இடையே தேர்வுக்குழு திராவிட மாயையில் சிக்கியதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை ... அவரும் இந்த ஒரு நாள் தொடருடன் நிம்மதியாய் நிறைவு பெற்றார் ... அறிமுக வீரர் அஜன்கிய ரஹானேவின் ஆட்டம் மட்டுமே ஓரளவு நிம்மதி கொடுத்தது ...


    ஆனால் இந்த முறை ஆட்டம் இந்திய மண்ணில் நடைபெறுவதால் அணியில் அரவிந்த் , வரோன் , ராகுல் ஷர்மா உள்ளிட்ட இளம் பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து இந்த பரீட்சார்த்த முயற்சி தொடருமா என்பது கேள்விக்குறியே ... பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச்களில் தங்களை நிரூபிக்க அவர்களும் போராட வேண்டியிருக்கும் ...  ஹர்பஜனுக்கு இது நல்ல பிரேக் ... சாம்பியன் லீக் இறுதி போட்டியில் மும்பையின் வெற்றிக்கு அவர் வழிவகுத்தது இதற்கு சான்று ...

    சச்சின் , சேவாக் இல்லாத நிலையில் குக் தலைமையின் கீழ் வலுவான இங்கிலாந்து அணியை தோனியின் இளம் இந்திய அணி சொந்த மண்ணில் பழி தீர்க்குமா ? இல்லை பதுங்கி விடுமா ? இரு வாரங்களில் தெரிந்து விடும் ...

12 October 2011

வெறி நாய் - சிறுகதை ...

                           

     அந்த இரயில்வே ஸ்டேஷனில்  எப்பொழுதும் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருப்பதில்லை..சின்ன ஸ்டேஷன் என்பதால் போலீசுக்கும் அங்கு பெரிதாக வேலை இருக்காது..அவ்வப்போது கேட்கும் இரயில் ஓசையை தவிர , நிரந்தரமாய் கேட்பது அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் உடல்  இளைத்த கருப்பு நாயின் குரைப்பும் , அதை அடக்க  குருட்டு பிச்சைக்காரன் எழுப்பும்  தடிச்சத்தமும் ...

     இந்த நேரத்தில் , அதுவும் ஆள் அரவமற்ற இடத்தில் தலை நிறைய மல்லிகைப்பூவுடனும் , மாநிறத்தை சிவப்பாக மாற்றக்கூடிய முயற்சியில் தோல்வியடைந்த மேக்-அப் புடனும் முப்பது வயதுக்கு மிகாத தோற்றமுடைய அந்த பெண் ஏன் அமர்ந்திருக்கிறாள் என்று அவளை கடந்து செல்லும் வெகு சிலரை போல நீங்களும் புருவம் உயர்த்தலாம் ... அவள் கண்களை சற்று நேரம் உற்றுப்  பார்த்தால் அவள் யாருக்காகவோ ஆவலுடன் காத்திருப்பது  புரியும் ...

    அவள் முகத்தில் இப்போது பிரகாசம் ..  ."  ஏன் இத்தன லேட்டு ? எம்மா நேரமா காத்து கிடக்கிறது ! ? கொஞ்சம் பொய் கோபத்துடன் அவள் சிணுங்கினாள் ...

    " ஏன் கோவிக்கற   , வேலைய முடிச்சுப்புட்டு வர வேணாமா "

   " ஆமா கலெக்டர் வேல "

   " கலெக்டர் வேல இல்லன்னாலும் கவெர்மென்ட் வேலைல "

   " இத்த சொல்லியே ஆள மடக்கிப்புடு "

   " இந்தா மொதல்ல இந்த அல்வாவ சாப்புடு "

   " ஏய் ! கடசில அல்வா தான் கொடுக்கப்போறேன்னு சொல்லாம சொல்றியா ?

   " பிடிக்குமேனு வாங்கியாந்தா ரொம்ப தான் வார்றியே " சொல்லிக்கொண்டே திரும்ப முயன்றவனை அவள் கைகள் இறுக்கியணைத்தன  ... அவர்கள் செய்கையில் வெட்கப்பட்டு நிலா சிறிது நேரம் மேகத்திற்குள் மறைந்தது ..   " எவ்வளவு நாள் தான் இப்படி சந்துலயும் , டேசன்லையும் மீட் பண்றது "

   " கொஞ்ச நாள் பொறுத்துக்க , நம்ம நண்பன் வீடு காலியாவுது " சொல்லிக்கொண்டே கண் சிமிட்டினான் ...

    " யாரு , வெளக்கமாத்துக்கு சட்ட போட்ட மாதிரி வெட வெடன்னு இருப்பானே அவனா ?.. அவனும் அவன் பார்வையும் ... சுத்தமா சரியில்ல "

   " ஆமா அவன் கூட என்ன குடும்பமா நடத்த போற , சாவிய கொடுத்துட்டு அவன் பாட்டுக்கு போவ போறான் "

   " அது சரி , ஏற்கனவே ஒருத்தன் கூட குடும்பம் நடத்தறதே கஷ்டமா இருக்கு , அதுல இது வேறவா ? "

   " ஊருக்கு போனார்னு சொன்னியே எப்ப வராரு ? "

   " ஆமா அவர் போய் ரெண்டு நாளாச்சு , என்ன பிரயோஜனம் ...ம்ம் ..ஒன்னத்தையும் காணோம் "

   " நான் என்ன பண்றது அவ கண்ல மன்ன தூவிட்டு வரதுக்குள்ள போதும்  போதும்னு  ஆயிருது , அவள போட்டுத்தள்ளுனாதான் நிம்மதி "  ,  பெருமூச்சு விட்டவனின் வாயை பொத்தினாள் அவள் ...

   அவன் ஒரு நிமிடம் அவளை உற்று பார்த்து விட்டு " என்ன தான் இருந்தாலும் நீயும் ஒரு பொம்பளதான்னு நிரூபிச்சுட்ட " என்று சொன்னான் ...

   " அதெல்லாம் ஒன்னும் இல்ல , நீ அவள போட்டுத்தள்ளிட்டு உள்ள போய்ட்டேன்னா அப்புறம் ஏன் கதி ? "

   " அத்தானே பாத்தேன் , நீயாவது அவ மேல இரக்கபடறதாவது "
வாய் பேசிக்கொண்டிருந்தாலும் கைகள் அவளிடம் எதையோ தேடிக் கொண்டிருந்தன ...

                 
   " உர்ர்ர் , உர்ர்ர் " அந்த சத்தம் இவர்களை ரொம்பவே தொந்தரவு செய்தது ...

   " மொதல்ல அந்த நாய துரத்து , கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடுதா ?...

அவள் சொன்னவுடன் ,  அவன் கையில் கிடைத்த எதையோ அதன் மேல் விட்டெறிய , அந்த கருப்பு நாய் அதற்கு பயந்தது போல பின்வாங்கி திரும்பவும் வந்து லொள் என்றது ...

     " சனியன் , இந்த நாய பாத்தாலே எனக்கு ஆவாது , வெறி நாய் மாதிரி இருக்கு ,சுத்தமா வெவஸ்தையே கெடையாது ,  துரத்து ! ... திரும்பவும் அவள் உசுப்பேற்ற அவன் கல்லை பொறுக்கிக்கொண்டு நாயை துரத்தி  ஓட ,  இந்த சத்தத்தில் எரிச்சலடைந்த குருட்டு பிச்சைக்காரன் ,

     " இந்த நாய்ங்களுக்கு வேற வேலையே இல்ல " என்று முனகியவாறு திரும்பிப்படுத்தான் ... 

11 October 2011

குறும்பட கார்னர் - நிழல் படம் ...

                                            
    திகில் படங்கள் எடுப்பது கத்தி மேல் நடப்பது போன்றது ... சில காட்சிகளில் சொதப்பினால் கூட மொத்த உழைப்பும் வீணாகக்கூடிய அபாயம்  அதிகம் ... தமிழ் சினிமாவின் இரண்டரை மணி நேர கலாசாரத்திற்காக திகில் படங்களில் தேவையில்லாமல் காமெடி , பாடல் என புகுத்தி கெடுப்பவர்கள்  ஏராளம் ...

      பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடுவதால் குறும்படங்களுக்கு  இந்த பிரச்சனைகள் இல்லை ... அதே சமயத்தில் சொல்ல வந்ததை சுருக்கமாக பயம் குறையாமல் சொல்ல வேண்டும் ... அந்த வரிசையில்  வந்திருக்கும் ஒரு குறும்படமே " நிழல் படம் " ... 

     " பண்ணையாரும் பத்மினியும்"  மூலம் காமெடியில் கலக்கிய வெயிலோன் திரையின் மற்றொரு திகில் படைப்பே இந்த " நிழல் படம் " ... சிட்டியில் பொது இடங்களில் புகைப்படங்கள்  எடுக்கப்பட்டு அதில் இருப்பவர்கள் வரிசையாக கொல்லப்படுகிறார்கள் ... அதிலும் கொல்லப்படுவதற்கு முன்பாக அவர்களின் புகைப்படங்கள் அவரவர்கள் வீட்டிற்கே அனுப்பபடுகின்றன ...
  
    நெஞ்சை உறைய வைப்பது போன்ற காட்சிகள் இல்லையென்றாலும் படம் ஸ்மார்டாக இருப்பது பிளஸ் ... மூவரே நடித்திருக்கும் இப்படத்தில் விமல்ராஜ் ஸ்கோர் செய்கிறார் ...  ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் , கோகுலின் ஒளிப்பதிவும் திகில் படத்திற்குன்டான உணர்வைக் கொடுக்கின்றன .... 

இயக்கம் : எஸ் . யு . அருண் குமார் ...


8 October 2011

முரண் - மிதமான ரன் ...

    
    எதையுமே லட்சியம் செய்யாத பணக்கார இளைஞன் மற்றும்  சினிமாவில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற இலட்சியமுள்ள  நடுவயதுக்காரன் இவர்களின் எதிர்பாரா சந்திப்பு ஏற்படுத்தும் முரண்பாடுகளே " முரண் "... ஹிட்ச்காக்கின் " Strangers  on  a  train  " எனும் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம் ... 

    கோடீஸ்வரர் ஜெயப்ரகாஷின் மகன் அர்ஜுனாக பிரசன்னா , இசையமைப்பாளர் நந்தாவாக சேரன் , சேரனின் மனைவியாக நிகிதா , காதலியாக ஹரிப்ரியா இப்படி சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு முழு நீள படத்தையும் முடிந்தவரை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராஜன் மாதவ்  ...

                         
    வயதில் சிறியவனாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக சேரனை தன் முழு ஆளுமைக்குள் கொண்டு வரும் பிரசன்னாவின் கேரக்டரும் , நடிப்பும் பிரமாதம் ... இவரை விட்டால் யாரையும் யோசிக்க முடியாத அளவிற்கு பணக்கார கேசுவல் இளைஞனாக மிக இயல்பாய் பொருந்துகிறார் ... நல்ல நடிப்பு திறமை இருந்தும் பெரிய பிரேக் கிடைக்கவில்லையே என்று நான் நினைத்து வருத்தப்படும் நடிகர்களுள் இவரும் ஒருவர் ... 

    சேரனின் வயதும் , தோற்றமும் இந்த கேரக்டருக்கு கட்சித பொருத்தம் ... அவர் நடிப்பில் பிரசன்னா அளவு பிரகாசிக்காவிட்டாலும்    அண்டர்ப்ளே செய்திருப்பதை பாராட்டலாம் ... வசன ( குறிப்பாக ஆங்கில ) உச்சரிப்புகளிலும் , உடல்மொழியிலும் அதீத கவனம் செலுத்தினால் மட்டுமே சேரன் நடிகனாக ஒருபடி மேலே போக முடியும் ... 

    நிகிதா புருசனை மதிக்காத மனைவி பாத்திரத்தில் அளவாக நடித்து ஆண்களின் எரிச்சலை சம்பாதிக்கிறார் ... ஹரிப்ரியாவின் நடிப்பு சேரனுடன் அவருக்குள்ள காதலை  போலவே மனதில் ஒட்டவில்லை ...  சில காட்சிகளே வந்தாலும் தன் அழகால் லிண்டா சிலாகிக்க வைக்கிறார் ... 

                       
                   
    த்ரில்லர் படம் என்பதால்  முகம் சுழிக்க வைக்கும் படி காட்சிகளை வைக்காமல் குடும்பத்துடன் காணும் படி படம் எடுத்ததற்கு இயக்குனரை பாராட்டலாம் ... அதே போல பிரசன்னா த்ரில் உணர்வைக் காட்ட அதி வேகமாக காரை ஓட்டுவது , சேரனை மாங்காய் திருட வைப்பது , நிகிதா கள்ள காதல் செய்யும் செல்போன் காட்சியை பிரசன்னா மூலம் ஆடியன்சுக்கு நேரடியாக காட்டாமல் சேரனிடம் காட்டி " கிளாரிட்டி நல்லா இருக்குல்ல " என்று ஒரு வரியில் சொல்லி அதன் அழுத்தத்தை உணர வைப்பது , ஆக்சிடென்ட் யாருக்கு வேணா நடக்கலாம் என்று சொல்லி பிரசன்னா சேரனை தன் வழிக்கு இழுப்பது என இயக்குனர் ஸ்கோர் செய்யும் இடங்கள் நிறைய ... 

    பாடல்கள் வேகத்தடையாய் இருந்தாலும் பின்னணி இசையும் , ஒளிப்பதிவும் படத்தின் பலங்கள் ... " நான் என்ன கோழையா ? .. அப்போ நான் என்ன முட்டாளா ? " என ஆங்காங்கே வரும் பளிச் வசனங்கள் பலம் ... 

                
     இப்படி நிறைகள் நிறைய இருந்தாலும் த்ரில்லர் படங்களுக்குன்டான அதிவேக திரைக்கதை இல்லாமல் படம் அப்பப்போ தொய்வாக நகர்வது , கொலைக்கு கொலை என பிரசன்னா சேரனிடம் டீல் போட்ட பிறகு அதே விறுவிறுப்புடன் படம் நகராதது , மூன்றாவது மனிதனை வைத்து தன் அப்பனை கொலை செய்ய திட்டம் போடும் பிரசன்னாவின் யோசனை நன்றாக இருந்தாலும் , அதை நிறைவேற்ற  ஒரு போலீஸ்காரனை கொலை செய்யும் பிரசன்னாவே ஏன் அப்பாவையும் கொன்று விடக்கூடாது எனும் லாஜிக் இடிப்பது , நிகிதா சேரனை இவ்வளவு வெறுத்தும் எதற்காக திருமணம் செய்து கொண்டாரென்பதை விளக்காதது போன்ற குறைகளை தவிர்க்காததால் ஹைவேஸில் ஆரம்பிக்கும் " முரண் " பயணம் மிதமான ரன்னாகவே ( ஓட்டம் ) முடிகிறது ... 

ஸ்கோர் கார்ட் : 41

2 October 2011

வெடி - சவுண்ட் பத்தல ...

     
      அவன் இவன் படத்தில் வித்தியாசமாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற விஷால் பிரபு தேவாவுடன் கை கோர்த்து தன் வழக்கமான ஆக்சன் பார்முலாவிற்கு திரும்பியிருக்கும் படம் " வெடி " ... தங்கை செண்டிமெண்ட் , போலீஸ்  - தாதா மோதல் , பிளாஷ்பேக்கில் உடையும் சஸ்பென்ஸ் , குத்து பாட்டு , காமெடி   என மசாலா  படத்திற்குரிய அத்தனை சமாச்சாரங்கள் இருந்தும் வேகம் குறைந்ததால் டல்லடிக்கிறது வெடி ... 

     வழக்கமான ஹீரோ - வில்லன் சேசிங் கதையை இடைவேளை வரை சஸ்பென்சுடன்  நகர்த்தி பின் விஷால் ஏன் கொல்கட்டா வந்தார் , அவருக்கும் அவர் காப்பாற்றும் ஐஸ்வர்யாவுக்கும் என்ன உறவு , அவரை ஏன் வில்லன் ஆட்கள் துரத்துகிறார்கள் என்று ஒவ்வொரு முடிச்சையும் வழக்கம் போல பிளாஷ்பேக்கில் அவிழ்க்கிறார்கள் ... 

     முதல் காட்சியிலேயே பெரிய சண்டைக்கான ஸ்கோப் இருந்தும் ஒரே அடியில் முடித்து விட்டு அடுத்த காட்சிக்கு தாவும் போதே நமக்கு கொஞ்சம் நிம்மதி வருகிறது ... விஷால் பாலாவின் பட்டறைக்கு போய் வந்தது நடிப்பில் நன்றாக தெரிகிறது ... விறைப்புடன் இருந்தாலும் வில்லன் சியாஜி ஷிண்டேவை உயிர்  பயம் காட்டி அலைய விடும் போது புன்னகைக்க வைக்கிறார் ... வழக்கம் போல சண்டைக்காட்சிகளில் எதிரிகளை பந்தாடுகிறார் இவரிடம் எவ்வளவு அடி வாங்கினாலும் அடியாட்கள் அடுத்த சண்டைக்கு எப்படியோ பிரெஷ்ஷாக   வந்து மறுபடியும்   உதை  வாங்குகிறார்கள் ...

        
    இவர் உயரத்திற்கு பொருத்தமான சமீரா ரெட்டியை ஹீரோயினாக்கியது நடனக்காட்சிகளில் விஷாலுக்கு நிம்மதி கொடுத்திருக்கும் ... சமீரா ஆறடியில் கொஞ்சம் ஆண்மை சாயலில் இருந்தாலும் அசத்தல் ... க்ளோஸ் அப் காட்சிகள் பயமுறுத்துகின்றன ... மேக் அப்  மேன் யாரோ ?... இந்த மாதிரி படத்துல ஹீரோயினுக்கு நடிக்கறதுக்கு  பெரிசா என்ன இருக்கும் ? ...  

     விவேக் யாரையாவது இமிடேட் செய்து இரிடேட் செய்யாமல் நடித்தது நலம். இவர் பேசுவதை விட உடலெங்கும் பலூனை சுத்திக் கொண்டு இளைய திலகம் பிரபு போல இவர் செய்யும் சேட்டைகள் சிரிக்க வைக்கின்றன ... படத்தின் முதல் பாதி நகர்வதற்கு இவர் காமெடி கொஞ்சம் கை கொடுக்கிறது ... 

    விஷாலின் தங்கையாக வரும் பூனம் அழகாக இருப்பதோடு நடிக்கவும் செய்கிறார் ... சியாஜி சிண்டே நன்றாக நடித்திருந்தாலும்  வட இந்திய தோற்றம் அவருடைய தூத்துக்குடி வில்லன் கேரக்டரை துவம்சம் செய்கிறது ... என்று தணியும் இந்த தமிழ் பட வில்லன் பஞ்சம் ?... 
               
    பெரிய சண்டை வருமோ என எதிர்பார்க்கும் இடத்தில் அதை தவிர்த்திருப்பது உத்தமம் ... விஷால் வில்லனுக்கு விஷ ஊசி போட்டதாக சொல்லி  உயிரை காப்பாற்றி கொள்வதற்காக அலைய விடும் காட்சிகளில்  ஊர்வசி , ஸ்ரீமன் , பாண்டு இவர்கள் மூவரையும் வைத்து பிரபு தேவா நன்றாக கிச்சு கிச்சு மூட்டுகிறார் ... 
                 
    கதை பழசாக இருந்தாலும் அதை புதுசு போல விறுவிறுப்பாக காட்டுவதே ஆக்சன் படங்களின் ஆணிவேர் ... அதரப் பழைய கதைக்கு பிரபு தேவா தன் பாணியில் காமெடி , ஆக்சன் மருந்தை  ஆங்காங்கே கலக்கியிருந்தாலும்  நிறைவாக  இல்லாததால் வெடி முழுசா வெடிக்கல  ... போக்கிரி படத்திற்கு பிறகு தமிழில் எதுவும் ஹிட் கொடுக்காத பிரபு தேவா தெலுங்கு  படமான " சௌர்யம் " கதையை தேர்ந்தெடுத்தது சௌர்யமாக  இல்லை  .. 

    இந்த மாதிரி படங்களில்  லாஜிக் பார்க்க கூடாது என்றாலும் போலீசாக இருந்து கொண்டு  ஒரு தகவலும்  சொல்லாமல் தங்கைக்காக திடீரென விஷால் கொல்கொத்தா சென்று விடுவது , கிளைமாக்சில் ஏ.சி.பி யான விஷால் இறந்து விட்டதாக வில்லன் டி.வி. யில் விளம்பரம் கொடுத்து அவர் தங்கையை பிடிப்பது என்று லாஜிக் சொதப்பல்கள் ஏராளம்  ... 

     பிரபு தேவா - விஜய் ஆண்டனி கூட்டணியில் பாடல்களும் சொல்லும் படி பெரிதாக இல்லாததும் ஒரு குறை ... ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை ... இரண்டே மணி நேரத்தில் முடிந்து விடுவதால் பொழுதுபோக்கை மட்டும் மனதில் வைத்து பார்ப்பவர்களுக்கு படம் ஓரளவு பிடிக்கலாம் ... இருப்பினும் காவல்துறையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட சாமி , சிங்கம் , தபங் ( ஹிந்தி ) போன்ற கமெர்சியல் ஆட்டோ பாம்களை பார்த்த நமக்கு இந்த வெடி வெறும் பிஜிலி வெடியாகவே தெரிகிறது ...

ஸ்கோர் கார்ட் : 39 
( இந்த பதிவில் இருந்து அறிமுகம் ) 
Related Posts Plugin for WordPress, Blogger...