12 January 2014

வீரம் - VEERAM - வெல்லும் ...


தீனா தவிர்த்து பொங்கலுக்கு ரிலீசான அஜித்தின் அத்தனை படங்களும் அட்டர் ஃப்ளாப் . அதோடு கோட் சூட் , கூலிங் க்ளாஸ் , கையில் துப்பாக்கி என்று அல்டரா  மாடல் போல சுற்றிக் கொண்டிருந்தவரை வேட்டி சட்டை , விபூதி , அரிவாள் என்று கிராமத்து ஆளாக காட்டினால் எடுபடுமா ? இப்படி பல சந்தேகங்களுக்கு இந்த வெற்றியின் மூலம் அஜித்தை வைத்து தல பொங்கல் கொடுத்து பதில் சொல்லியிருக்கிறார்  இயக்குனர் சிறுத்தை சிவா ...

குடும்பம்  பிரிந்து விடுமோ  என்கிற பயத்தில்  4 தம்பிகளுடன் கட்டை பிரமச்சாரியாக வாழ்கிறார் விநாயகம் ( அஜித்குமார் ) . தம்பிகளோ கோப்பெரும்தேவி ( தமன்னா ) யை அண்ணனுக்கு கரெக்ட் செய்ய , காதலியின் அப்பா ( நாசர் ) சம்மதம் வாங்க அவளுடன் ஊருக்கு செல்லும் அஜித்  அந்த குடும்பத்திற்கு ஏற்படவிருக்கும் பெரிய அபாயத்தை அவர்களுக்கே தெரியாமல் தன்  வீரம் காட்டி முறியடிக்கிறார் ...


சால்ட் அண்ட் பெப்பர் லுக் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்து விட்டாலும் பேச்சில் அமைதியையும் , சண்டையில் ஆக்ரோஷத்தையும் அழகாக காட்டி  வசீகரிக்கிறார் அஜித் . மாஸ் ஹீரோக்களில் ரஜினிக்கு அடுத்து " Larger than Life"  இமேஜை ஸ்க்ரீனில் படம் முழுவதும் கேரி செய்யும் தகுதி தனக்கிருப்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கிறார் . சண்டையில்லாமல் அறிமுகம் ஆகிறாரே என்று சந்தோசப்பட்டால் அதன் பிறகு பல பேரை  அடித்து கொன்றே அதை சிதைத்து விடுகிறார் . ஆனாலும் ரயில் சண்டையில் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க் அபாரம் . இது வரை ஒப்பனிங் கிங் என்று அறியப்பட்டவர் தொடர் வெற்றிகளின் மூலம் மாஸ் கலெக்சன் கிங்காகவும் மாறியதற்கு வாழ்த்துக்கள் ...

தமன்னா பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்து ரசிகர்களை தம்மடிக்க அனுப்பாமல் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார் . நான்கு தம்பிகளுள் விதார்த் தேறுகிறார் . அடிதடி குடும்பத்தை பெயிலில் எடுக்கவே வீட்டோடு இருக்கும் வக்கீல் சந்தானம் கொடுக்கும் காதல் ஐடியாக்கள் கல கல . முதல் பாதி இவர் உபாயத்தில் வேகமாகவே போகிறது . வில்லன்கள் ராவத் , அதுல்  இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் . தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களில்  பழைய நெடி இருந்தாலும் அஜித் சண்டை  போடும் போது வீரம் பின்னணி பாடல் முறுக்கேற்றுகிறது ...


புதிதாய் எதுவும் இல்லாத கதை , அஜித் - தமன்னா இருவரின் காதலை வைத்தே இடைவேளை வரை ஒப்பேற்றியது , பாடல்கள் , அளவுக்கதிகமான சண்டைகள் போன்ற குறைகள் இருந்தாலும் சந்தானத்தின் காமெடி , அஜீத் தை
கச்சிதமாக பயன்படுத்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பொங்கல் விருந்து கொடுத்த விதத்தில் வீரம் வெல்லும் ...

ஸ்கோர் கார்ட் : 43ஜில்லா - JILLA - தீவிர விஜய் ரசிகர்கள் வசிக்கலாம் ...
ண்பன் , துப்பாக்கி என்று புது பாணியில் ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த விஜய் தலைவா வின் தோல்விக்கு பிறகு தன் பழைய பாணிக்கு திரும்பியிருக்கும் படம் ஜில்லா . தனது தீவிர ரசிகர்கள் மட்டுமே கல்லாவை  நிரப்பி விடுவார்கள் என்கிற அதீத நம்பிக்கையில் ஜில்லாவில் நேசனுடன் இணைந்து களம் இறங்கியிருக்கிறார் விஜய் . நினைத்தது பலித்ததா ?. பார்க்கலாம் ...

மதுரையின் பெரிய தாதா சிவன் ( மோகன்லால் ) , அவரது வளர்ப்பு மகன் சக்தி ( விஜய் ) . போலீஸ் என்றாலே பிடிக்காத சக்தியை தன்னுடைய சவுகரியத்துக்காக ஏ.சி ஆக்குகிறார் சிவன் . வளர்த்த கடா மார்பில் பாய்வது போல போலீசானவுடன் சிவனுக்கு எதிராக திரும்புகிறார் சக்தி . ஜெயித்தது சிவனா ? சக்தியா ? என்பதே மூன்று மணி நேர படம் ...விஜய் தன் வழக்கமான துள்ளல் நடிப்பில் மனதை அள்ளுகிறார் . அவர் குரலில் வரும் கண்டாங்கி பாடலுக்கும் , சிவனும் பாடலில் அவர் நடனத்துக்கும் தியேட்டரே அதிர்கிறது .  என்ன தான் மந்திரி சிபாரிசில் போலீசானாலும் முதல் நாளே ஏதோ  காலேஜுக்கு போவது போல கலர்  ட்ரெஸ்ஸில் வருவது , கமிசனருக்கு சல்யூட் போடாமல் சவடாலாய் பேசுவது எல்லாம் ர்ரொம்பவெ ஓவர்ங்கண்ணா . போக்கிரியாக மனதில் பதியும் விஜய் போலீசாக , சாரி பாஸ் ...

டைட்டிலில் விஜய்க்கு முன்னாள் பெயர் வருவதோடல்லாமல் படம் முழுவதும் " நான் சிவன்டா " என்று விஜய் பேசாத பஞ்ச் டயலாக்ஸ் பேசி ரணகளப்படுத்துகிறார் சேட்டன் மோகன்லால் . மலையாள வாடையில் பேசினாலும் இந்த மதுரை தாதாவை ரசிக்கலாம் . பொதுவாக ராஜ்கிரண் செய்யக்கூடிய சாதாரண தாதா பாத்திரமானாலும் அதற்கு மோகன்லாலை தேர்ந்தெடுத்தது சிறப்பு . ஆனால் தன் மகன் ( மகத் ) செய்த தவறால் ஊரே பற்றியெரிய அதற்காக ஒரு சிறு வருத்தம் கூட காட்டாத இவரது கேரக்டர் பெரிய சறுக்கல் ...

காஜல் அகர்வால் மசாலா படங்களில் வரும் வழக்கமான ஹீரோயினாக வந்து போகிறார் . சூரி சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் டபுள் மீனிங் வசனங்கள் நெளிய வைக்கின்றன . இவர் அபாய இடத்தில் அடி வாங்கி அடிக்கடி கதறுவதும் எரிச்சல் . சம்பத் போன்ற சிறந்த நடிகர் வில்லனாக வந்து உதை வாங்குவது வருத்தமாக இருந்தாலும் விஜயுடனான இவரது மோதல் படத்திற்கு பலம் . தம்பி ராமையா , அட்டாக் பாண்டி எல்லாம் வீணடிக்கப்பட்டிருக்கிரார்கள் . டி.இமானின் இசையில் பாடல்கள் ஹம்மிங் செய்ய வைத்தாலும் பின்னணி இசை இரைச்சல் ...கேரளாவில் விஜய்க்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து இணைக்கப்பட்டிருக்கும் மோகன்லால் , இடைவேளையில் விஜய் எடுக்கும் போலீஸ் அவதாரம் , விஜயின் துள்ளல் , சம்பத் கொடுக்கும் ட்விஸ்ட் இப்படி ஜில்லாவில் சில விஷயங்கள் நல்லாவே இருக்கின்றன ...

அதரப்பழசான கதை தான் என்றாலும் புதிதாய் யோசித்து சீன்கள் பிடிக்காமல் போனதில் கோட்டை விடப்பட்ட திரைக்கதை , படத்தின் நீளம் , மோகன்லால் கேரக்டரின் சறுக்கல் , அதனால் விஜய் - மோகன்லால் பிரிவு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்ப்படுத்தாது , தங்கை சென்டிமெண்டிற்காக புகுத்தப்பட்ட ஆர்.கே எபிசோட் இவையெல்லாம் ஜில்லாவின் கல்லாவை ரொம்பவே பாதிக்கின்றன . கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் கில்லி , போக்கிரி வரிசையில் வந்திருக்க வேண்டிய படம் வில்லு , சுறா அளவிற்கு மோசமாக இல்லாததால் ஜில்லாவில் தீவிர விஜய் ரசிகர்கள் வசிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41


10 January 2014

ஆம் ஆத்மியும் அறிவுஜீவிகளும் ...


மீடியாக்களுக்கு , குறிப்பாக  ஆங்கில சேனல்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு ஏதாவது ஒரு விஷயம் தீனி போட்டுக் கொண்டேயிருக்க  வேண்டும் . அப்பொழுது தான் அவர்கள் பிழைப்பு ஓடும் . 2ஜி , மோடி விவகாரம் , டெல்லி பெண் கற்பழிப்பு ( அந்த சம்பவத்தை ஒட்டி தமிழ் நாட்டில் ஒரு பள்ளி  சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது அதற்கு ஒரு சிறிய சலசலப்பைக்  கூட இவர்கள் காட்டவில்லை ) , ஐ.பி.எல் பெட்டிங் இப்படி பலவற்றை தொடர்ந்து இப்பொழுது அவர்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருப்பது சமீபத்தில் காங்கிரசின் ஆதரவோடு டில்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் ஆம் ஆத்மியும் , அதன் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் ...

அர்விந்த் கெஜ்ரிவால் ஐ.ஐ.டி யில் படித்தவர் , அரசு வேலையை  உதறி விட்டு பொதுநலப் பணிக்காக  தன்னை அர்ப்பணித்தவர் , ஊழலை ஒழித்துக் கட்ட வேண்டுமென்கிற நோக்கத்தோடு அரசியலில் குதித்தவர் என பல சிறப்பம்சங்களையும் தாண்டி கட்சி ஆரம்பித்து ஒன்பது மாதங்களிலேயே டில்லியில் ஆட்சியை பிடித்தவர் என்கிற ஒரு காரணத்திற்காகவே இன்று இந்தியாவையே  தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் . சினிமா , அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமல் இது போன்ற ஒரு சாதனையை  அவர் செய்திருப்பது வியக்கத்தக்கது . முதல்வன் படத்தில் வருவது போல ஒரு சாமான்யன் நினைத்தாலும் இது போன்ற மாற்றங்களை கொண்டு  கொண்டு  வர முடியும் என்று நிரூபித்த விதத்தில் அவர் இந்திய எதிர்கால அரசியலுக்கு ஒரு நம்பிக்கை ...

இதையெல்லாம் சொல்லும் அதே நேரத்தில் அவரின் வெற்றியை தொடர்ந்து அர்விந்த் கெஜ்ரிவால் அடுத்த பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் , அவரின் கட்சிக்கு இந்தியா முழுவதும் பெருத்த ஆதரவு இருப்பது போலவும் சில மீடியாக்களும் , அதிலுள்ள அறிவு ஜீவிகளும் Knee Jerk ரியாக்சன் கொடுப்பது அவர்களின் அரைவேக்காட்டுத்தனத்தையே காட்டுகிறது . முதலில் ஊழலுக்கு எதிராக கட்சியை ஆரம்பித்தவர் எப்பொழுது காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியமைத்தாரோ அப்பொழுதே அர்விந்த் சந்தர்ப்பவாத அரசியல்வாதியாகி விட்டார் . அடுத்தது காஷ்மீர் பிரச்சனை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் ஏனோதானோ என்று ஒரு கருத்தை பிரஷாந்த் பூஷன் சொல்லி வைக்க அதை தொடர்ந்து சில அமைப்பினர் உ.பி யில் உள்ள ஆம் ஆம்தி அலுவலுகத்தை சூறையாடினர் . அதனை தொடர்ந்து
 " காஷ்மீர் பிரச்சனை தீர எனது உயிர் தான் தேவை என்றால் அதை தரவும் நான் தயார் " என்று அர்விந்த் அதீத உணர்ச்சியோடு பேசியதிலிருந்து சாமான்ய முகத்திரையை அவிழ்த்து சாணக்கிய அரசியல் முகமூடியை போடத்  தொடங்கி விட்டார் ...

நல்ல ஒரு மாற்றத்தை கொண்டு வருவார்  என்ற நம்பிக்கையோடு வாக்களித்த டில்லி வாக்காளர்களுக்கு காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைத்ததன் மூலம் ஏமாற்றம் அளித்தவர் , முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் கூட  முடிவடையாத நிலையில் அவசரம் அவசரமாக தேசிய அரசியலுக்கு தாவுவது அவரின் நம்பகத்தன்மையை குலைத்து கிடைத்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்திக் கொள்ளும் பக்கா அரசியல்வாதியாகவே நம் கண் முன் காட்டுகிறது . ஏனெனில் டில்லி மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை ஒழுங்காக நிறைவேற்றவே அவருக்கு ஐந்து ஆண்டுகள் போதாது . அப்படியிருக்க தேசிய அரசியலில் அவர்கள் காட்டும் ஆர்வம் காங்கிரசுக்கும் , ஆம் ஆத்மிக்கும் ரகசிய உடன்பாடு இருக்கிறதோ என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது . அடுத்த  முறை ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட அழிந்திருக்கும் நிலையில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மியின் வளர்ச்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை . மாற்றாக மோடிக்கு ஆதரவாக விழும் ஓட்டுக்களை ஓரளவுக்கேனும் சிதைப்பதற்கு நிச்சயம் அர்விந்த் அனுகூலமாக இருப்பார் ...

அர்விந்த் படித்த புத்திசாலி , தனிப்பட்ட முறையிலும் தூய்மையானவர் எனவே அவர் பிரதமர்  ஆவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம் . நிச்சயம் தவறில்லை தான் . ஆனால் முதலில் முதல்வராக அவர் தனது கடமையை திறம்பட செய்து தன்னை நிரூபிக்கட்டும் என்பதே  பலரது எண்ணம் .  மேலும் அர்விந்த் போலவே அதிகம் படித்தவரும் , தனிப்பட்ட முறையில் தூய்மையானவரும் ஆன மன்மோகன் சிங் இரண்டு முறை பிரதமராக இருந்து நமக்கெல்லாம் என்ன செய்தார் என்பது நாடறிந்த விஷயம். அதற்காக மன்மோகன் போல தான் அரவிந்தும் இருப்பார் என்று சொல்ல வரவில்லை . அதே நேரம் படிப்பும் , தனிப்பட்ட தூய்மையும் மட்டும் திறம்பட ஆட்சி செய்வதற்கு போதுமானதாக இருக்காது என்பதையே வலியுறுத்துகிறேன் ...

கட்சி ஆரம்பித்து ஒன்பது  மாதங்களே ஆகியிருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக லோக்பால் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே , கிரண் பேடி  போன்றோருடன் இணைந்து அர்விந்த் நடத்திய போராட்டங்களே அவரை டில்லி மக்களிடையே பிரபலப்படுத்தியது . அன்னா , கிரண் இருவரும் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி விட  அவர்களுக்கு கிடைத்த ஆதரவையும் சேர்த்து மொத்தமாக அர்விந்த் அறுவடை செய்தார் என்பதே நிதர்சனம் . அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியை அன்னா புறக்கணித்ததும் , அவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்று அவர் கேள்வி எழுப்பியதும் பலவித சந்தேகங்களை கிளப்புகின்றன . மோடி போன்ற  வலிமையான ஒருவர்  இந்தியாவுக்கு பிரதமராவதை அமெரிக்கா விரும்பாததால் அங்கிருந்து அதிக பணம் மறைமுகமாக ஆம் ஆத்மிக்கு வருகிறது என்பது ஒரு சாரரின் கருத்து ...

நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரசை  கலைத்து விட சொன்னார் காந்தி . அதே போல காந்தியவாதியான அன்னா ஹசாரே ஆம் ஆத்மி என்று கட்சியை ஆரம்பிக்க எதிர்ப்பு தெரிவித்தார் . இரண்டிற்கும் ஏதோ ஒற்றுமை இருப்பது போலவே படுகிறது . இவையெல்லாவற்றையும் விட லோக்பால் மசோதாவுக்காக அர்விந்த் , அன்னா வுடன் ஒரே குழுவில் இருந்து போராடிய கிரண் பேடி மத்தியில் நிலையான ஆட்சி  அமைவதற்கு மோடிக்கே எனது  ஒட்டு என்று தனது ஆதரவை தெரிவித்திருப்பது தனிப்பட்ட விருப்பு , வெறுப்புகளை தாண்டி அவர் நாட்டின் மேல் கொண்டிருக்கும் அக்கறையை காட்டுகிறது . இதே போன்றதொரு முடிவை அன்னா எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை . இதையெல்லாம் மீறி அர்விந்த் தான் அடுத்த பிரதமர் என்கிற அளவிற்கு அளந்து விடும் அறிவுஜீவிகளுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளலாம்  . பவர் ஸ்டார்  ஹிட் கொடுத்து விட்டார் என்பதற்காக சூப்பர் ஸ்டாராக ஆகி விட முடியாது ...


1 January 2014

தமிழ் சினிமா 2013 - TAMIL CINEMA 2013 ...


டந்த வருடம் ரிலீசான 150 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் 80க்கும் மேற்பட்டவை புதுமுக இயக்குனர்கள் இயக்கத்தில் வந்திருப்பதும் , கமல் , அஜித் , சூர்யா என மெகா ஸ்டார்களின் படங்கள் ஹிட் ஆகியிருப்பதும் மொத்தத்தில் வெறும் பத்து சதவிகித படங்கள் கூட ஹிட் ஆகாததன் இழப்பை  கொஞ்சம் மறக்கடிக்கின்ற்ன . பாரதிராஜா , மணிரத்னம் போன்ற ஜாம்பவான்கள் சறுக்கினாலும் நலன் குமாரசாமி ,  பாலாஜி குமார் , விக்ரம் சுகுமாரன் போன்ற புதுமுகங்கள் நம்பிக்கை தருகிறார்கள் .  விஸ்வரூபம்  ரிலீசாகா விட்டால் நாட்டை விட்டே  சென்று விடுவேன் என்று கலங்கிய கமல் , தலைவா ரிலீஸ் பிரச்சனைக்காக கொடநாடு வரை சென்று விட்டு முதல்வரை பார்க்க முடியாமல் விரக்தியுடன்  திரும்பி வந்த விஜய் என்று சர்ச்சைகளுக்கு பெயர் போன ஆண்டாகவும் 2013 இருந்தது . வாலி ,டி.எம்.எஸ் , பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்ற ஜாம்பவான்களின் மறைவு ,  விஸ்வரூபம் .. பிரச்சனையை திறம்பட சமாளித்த உலகநாயகனின் துணிவு ,  இந்திய சினிமா 100 கொண்டாட்டங்களில் ஆட்சி பீடத்தில் இருப்பவர்களுக்கு வழக்கமாக சினிமா கலைஞர்கள் காட்டிய கனிவு போன்றவை 2013 ஆம் நாட்டின்  சிறப்பம்சங்கள் . முதல் ஆறு மாதங்களை பற்றி அறிய காண்க : அரையாண்டு சினிமா 2013 ... 

இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2013

கவர்ந்த படங்கள் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில்  )

 1. கண்ணா லட்டு தின்ன ஆசையா 
 2 .விஸ்வரூபம் 
 3. பரதேசி  
 4. சூது கவ்வும் 
 5. நேரம்  
 6. ஆதலால் காதல் செய்வீர்  
 7. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
 8. பாண்டிய நாடு 
 9. விடியும் முன் 
10. மதயானைக் கூட்டம் 

டாப் டென் பாக்ஸ் ஆபீஸ்  ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )

1.  கண்ணா லட்டு தின்ன ஆசையா 
2.  விஸ்வரூபம்
3.  சூது கவ்வும்
4.  தீயா வேலைசெய்யணும் குமாரு
5.  சிங்கம் 2 
6  .ராஜா ராணி
7.  வருத்தப்படாத வாலிபர் சங்கம்
8. ஆரம்பம்
9 .பாண்டிய நாடு
10.பிரியாணி


ப்ளாக்பஸ்டர்  : விஸ்வரூபம்

டாப் டென் பாடல்கள்

1. கண்ணா லட்டு ( க.லதி.ஆ )
2. எவனென்று நினைத்தாய் ( விஸ்வரூபம் )
3. ஆஹா காதல் ( மூன்று பேர் மூன்று காதல் )  
4. மின்வெட்டு நாளில் ( எதிர்நீச்சல் )
5. காசு பணம் ( சூது கவ்வும் )
6. பிஸ்தா ( நேரம் )
7. கடல் ராசா ( மரியான் )
8. வாங்கன்னா ( தலைவா )
9. ஹே பேபி ( ராஜா ராணி )
10.பனங்கள்ளா ( இரண்டாம் உலகம் )

கவர்ந்தவர்கள் 

 கவர்ந்த படம் - பரதேசி
 கவர்ந்த நடிகர் - கமல்ஹாசன்   ( விஸ்வரூபம்   )
 கவர்ந்த நடிகை - பார்வதி   ( மரியான் )
 கவர்ந்த குணச்சித்திர நடிகர் - பாரதிராஜா  ( பாண்டியநாடு  )
 கவர்ந்த குணச்சித்திர நடிகை - துளசி ( ஆதலால் காதல் செய்வீர் )
 கவர்ந்த காமெடி நடிகர் -  பவர் ஸ்டார்  ( க.ல.தி.ஆ  )
 கவர்ந்த வில்லன் நடிகர் - ராகுல் போஸ் ( விஸ்வரூபம்  )
 கவர்ந்த இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா   ( மூ.பே.மூ.கா )
 கவர்ந்த பின்னணி இசை - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  ( இளையராஜா   )
 கவர்ந்த ஆல்பம் - மூன்று பேர் மூன்று காதல் ( யுவன் ஷங்கர் ராஜா )
 கவர்ந்த பாடல் -  ஆனந்த யாழை ( தங்க மீன்கள்   )
 கவர்ந்த பாடகர் - கானா பாலா  ( ஹே பேபி )
 கவர்ந்த பாடலாசிரியர் - வைரமுத்து  ( எவனென்று  )
 கவர்ந்த வசனகர்த்தா - நவீன்  ( மூடர் கூடம் )
 கவர்ந்த திரைக்கதையாசிரியர் - நலன் குமாரசாமி ( சூது கவ்வும் )
 கவர்ந்த ஒளிப்பதிவாளர் - சானு வர்கீஸ்  ( விஸ்வரூபம் )
 கவர்ந்த இயக்குனர் - பாலா   ( பரதேசி   )
 கவர்ந்த புதுமுகம் - நஸ்ரியா  ( நேரம் )

வசூல் ராஜாக்கள் 

கமல்ஹாசன் ( விஸ்வரூபம் )
சூர்யா ( சிங்கம் 2 )
அஜித்குமார் ( ஆரம்பம் ) 

ஏமாற்றங்கள்

அலெக்ஸ் பாண்டியன் 
கடல் 
நய்யாண்டி
அன்னக்கொடி 
இரண்டாம் உலகம்

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...
  
Related Posts Plugin for WordPress, Blogger...