24 December 2017

வேலைக்காரன் - VELAIKKARAN - ஓவர் டைம் ...


ழக்கமாக சிறுசுகளை கவரும் டைம் பாஸ் படமாக இல்லாமல் இந்த முறை ஃபகத் ஃபாசிலுடன் சேர்ந்து  மோகன் ராஜா இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் சீரியஸ் அவதாரம் எடுத்திருக்கும் படம் வேலைக்காரன் . வேலைக்காரனை நம்பி நாம் போடும் முதல் தேறுமா ? பார்க்கலாம் ...

ரவுடி காசியின்  ( பிரகாஸ்ராஜ் ) பிடியிலிருந்து தன் குப்பத்து மக்களை  விடுவித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நினைக்கிறார் அறிவு ( எஸ்கே ) . அதற்காக ஒரு எஃப்.எம்.சி.ஜி கம்பெனியில் வேலைக்கு சேர்பவர் அங்கு நுகர்வோருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நிறைய பேசுவதே சாரி பொங்குவதே வேலைக்காரன் ...

காமெடியையே மட்டும் நம்பி களமிறங்காத சிவகார்த்திகேயனுக்கு  நிச்சயம் இது ஒரு பரீட்சார்த்த முயற்சி . எஸ்கே , சதீஷ் , ரோபோ சங்கர் என ஒரு பட்டாளமே இருந்தும் முதல் பாதியில் மட்டும் ஓரளவு சிரிக்க முடிகிறது . ஆக்சன் காட்சிகளில் பெரிதாக எடுபடா விட்டாலும் அம்மா செண்டிமெண்ட் காட்சியில் அட போட வைக்கிறார் எஸ்கே . நன்றாக உழைத்திருந்தும் ஃபகத் , நயன்தாராவுக்கு நடுவில் ஒரு மாற்று குறைவாகவே தெரிகிறார் ...


இந்தியாவின்  மிகச்சிறந்த  நடிகர்களில் ஒருவர் ஃபகத்  ஃபாசில் . மனிதர் சின்ன சின்ன கண்ணசைவுகளில் தனது இயல்பான நடிப்பால் பிண்ணி பெடலெடுத்திருக்கிறார் . தனி ஒருவனில் அரவிந்த் சாமியை பயன்படுத்தியது போலவே இவரை சரியான முறையில் உபயோகப்படுத்திய ராஜாவுக்கு நன்றி. இவருடைய கேரக்டர் சஸ்பென்ஸை முன்னரே உடைத்திருந்தும் விறுவிறுப்புக்கு குறைவில்லை . கேரக்டரில் மட்டும் இல்லாமல் தோற்றத்திலும் சிவகார்த்திகேயனுக்கு அக்கா போல மெச்சூர்டாக இருக்கிறார் நயன்தாரா ...

பிரகாஷ் ராஜ் ரவுடியாக நடித்திருக்கும் பல்லாயிரத்து சொச்சம் படங்களில் இதுவும் ஒன்று . மனுஷன் கத்திக்குத்து பட்டு ரத்த வெள்ளத்தில் இருக்கும் போதும் கார்ப்பரேட் கம்பெனிகள் பற்றி பேசி நம் காதுகளில் ரத்தம் வர வைக்கிறார் . சினேகா ,சார்லி , காளி வெங்கட் , ராமதாஸ் என ஒரு பட்டாளமே படத்தில் வீணடிக்கப்பட்டிருந்தாலும் ரோகினி மட்டும் கவர்கிறார் . அனிருத் இசையில் ஒரு குத்து பாட்டும் , மெலடியும்  தேறும் .   பின்னணி இசையில் இரைச்சல் இல்லாதது ஆறுதல் . குப்பத்தை கண்முன்னே நிறுத்திய கலை இயக்குனருக்கு வாழ்த்துக்கள் ...

தனி ஒருவன் வெற்றிக்கு பிறகு அதே போன்றதொரு ஹீரோ - வில்லன் மோதலை அதைவிட பெரிய பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார் ராஜா . ரவுடிகளின் வெட்டுக்குத்துக்களை லைவாக  ரேடியோவில் கமெண்ட்ரி செய்வது , வேலைக்கார்களுக்கு முதலாளிகளின் மேல் இருக்கும் விசுவாசத்தை ( அஜித் படத்தின் தலைப்புக்கு நல்ல மார்க்கெட்டிங் இப்பவே ) உடைத்து ஒரு சின்ன பயத்தைக் காட்டினாலே அவர்கள் திருந்தி விடுவார்கள் என்கிற கான்செப்ட் , சூப்பர் மார்க்கெட்டில் வைத்து கார்ப்பரேட்கள் செய்யும் வியாபார தந்திரங்களை விளக்குவது என வேலைக்காரன் சில இடங்களில் நன்றாக வேலை செய்கிறான் ...


" உலகின் தலைசிறந்த சொல் செயல் " என்கிற வசனத்தை அடிக்கடி சொல்கிறார் ஹீரோ . ஆனால் அவரே எதையும் பெரிதாக செயலில் காட்டாமல் நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டே இருப்பது படத்தின் சறுக்கல் . ஆளாளுக்கு பன்ச் பேசுவது போல இதில் போகிற போக்கில் எல்லோரும் ஏதோ வகையில் அட்வைஸ் செயகிறார்கள் . காசு இருக்கிறது என்பதற்காகவோ இல்லை கடனை வாங்கியோ தேவைக்கு மேலாகவே வாங்கி குவிக்கும் வாடிக்கையாளர்களை பற்றி எதுவும் சொல்லாமல் வெறும் கார்ப்பரேட்களை மட்டுமே குறை சொல்லியிருப்பது ஒன் சைட் கோல் ...

நுகர்வோரின் நலத்தை கவனத்தில் கொள்ளாமல்  லாபத்திற்காக கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்களின்  தில்லுமுல்லுகளை அங்கு வேலை பார்ப்பவர்களை வைத்தே முறியடிக்க நினைக்கும் கான்செப்ட் குட்  . லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள் போகாமல் சீரியசான ரூட்டை பிடித்திருப்பதை பாராட்டலாம் . ஆனால் இரண்டாம் பாதியில் வேலைக்காரன் முழு நேர பேச்சாளனாக மாறியது துரதிருஷ்டம் . நார்மல் கதையை மக்களிடம் கொண்டு செல்வதற்கே நட்சத்திர பட்டாளத்தை வைத்து மார்க்கெட்டிங் பண்ண வேண்டுமெனும் பொழுது பல கோடி முதலீட்டில் தொழில் நடத்துபவன் அதை சக்சஸ் ஆக்க எவ்வளவு மார்க்கெட்டிங் செய்ய வேண்டுமென்கிற கேள்வியுடனேயே தியேட்டரை விட்டு வர முடிகிறது . மொத்தத்தில் வாயை குறைத்து ஓவர் டைம் இல்லாமல் துரிதமாக வேலையை முடித்திருந்தால் வேலைக்காரனுக்கு வெல்டன் சொல்லியிருக்கலாம் ...

ரேட்டிங்க் : 2.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 41 





10 December 2017

சத்யா - SATHYA - சைலண்ட் கில்லர் ...


நாயகனுக்கு பிறகு கமல் நடிப்பில் வந்த அருமையான படம்  சத்யா . அந்த பெயரை சிபி படத்துக்கு போய் வைத்து விட்டார்களே என்கிற ஆதங்கம் இருந்தாலும் , தெலுங்கில் ஏற்கனவே ஹிட் அடித்த படத்தையே தமிழில் ரீ மேக்கியிருக்கிறார்கள் என்பதும் , படத்தை பற்றிய பாசிட்டிவ் டாக்கும் ஆறுதல் ...

கழட்டி விட்ட ஃபிகர் பக்கத்து ஊருக்கு கூப்பிட்டாளே போகாத நம்ம ஊரு பசங்க மத்தியில் முன்னாள் காதலியின் கிட்னாப்  செய்யப்பட  குழந்தையை காப்பாற்ற ஃபாரீனிலிருந்து இந்தியா திரும்புகிறார் சத்யா ( சிபி ) . குழந்தையை காப்பாற்ற போலீசும் , புருசனும் எந்தவிதத்திலும் உதவாத நிலையில் காதலி ஸ்வேதா  ( ரம்யா ) வுக்காக சிபி சந்திக்கும் திடுக் திடுக் திருப்பங்களே சத்யா ...

சிபி சத்யராஜின் சின்ன வயசு ஜெராக்ஸ் போலவே இருக்கிறார் . படம் நெடுக ஸ்டிஃபாகவே இருப்பவர் காதல் காட்சிகளிலாவது  கொஞ்சம் கேசுவலாக இருந்திருக்கலாம் . டைட்டிலை போலவே படம் நெடுக இவர் ஷோல்டரிலேயே பயணம் செய்கிறது . சிபி யும் சிம்பிலாக நடித்திருந்தாலும் நம்மை ஏமாற்றவில்லை . ரம்யா க்யூட்டான ஹெச்.ஆர் ஆக வந்து நிறைய நிறைய ஐடி காரர்களை பெருமூச்சு விட வைக்கிறார் . மகளை கண்டுபிடிக்க சொல்லி சிபி இடம் அழும் இடத்தில் நடிப்பு மிளிர்கிறது ...


ஐ.டி எம்ப்ளாயியாக யோகி பாபுவை பார்க்கும் போதே சிரிப்பு வருகிறது . சதீஷ் ஜாலியாக பேசும் போது  வராத சிரிப்பு கன் னை எடுத்து தலையில் வைக்கும் போது  வந்து தொலைக்கிறது . ஆக்சுவலி  காப் ஆனந்தராஜ் சீரியஸான படத்தில் சின்ன சின்ன தாக ரிலாக்ஸ் செய்கிறார் . ஏ.சி.பி யாக வரும் வரலக்ஷ்மி டைட்டான ட்ரெஸ்ஸில் ரிலாக்ஸாக நடித்திருக்கிறார் . சைமனின் பின்னணி இசை படத்துக்கு பலம் ...

சைத்தானில் சறுக்கிய இயக்குனர் பிரதீப் சத்யா வில் ஸ்டடியாகியிருக்கிறார் . படம் இடைவேளை வரை அடுத்து என்ன என்கிற ஆர்வத்தை நமக்கு கொடுத்துக்கொண்டே போகிறது . இண்டெர்வெல் ப்ளாக் சரியான இடத்தில் வந்து நம்மை நிமிர வைக்கிறது . இண்டெர்வெலில் ஒரு சாண்ட்விட்ச்சை முடித்து விட்டு வந்து உட்காரும்  போது  " என்ன இது நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு " என்று வடிவேலு போல புலம்ப வைத்தது துரதிருஷ்டம் ...

குழந்தை ஏன் காணவில்லை என்பதற்கான முடிச்சுகளை பல இடங்களில் இருந்து போட்டு யோசிக்க வைத்தவர்கள் அதை அவிழ்க்கும் போது இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம் . பாலாஜி , சதீஸ் என்று நிறைய உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் . ரியாலிட்டியோடு நகரும் படம் சிபி போலீஸ் ஆனந்தராஜி டம் வா , போ என்று சவடாலாக பேசும் போது சறுக்கிறது . தன்னை கொல்ல வந்தவனை பிடித்து விசாரிக்காமல் சிபி சுட்டு கொல்வது , கடத்தப்பட்ட குழந்தை அம்மாவை தேடி அழாமல் கேசுவலாக இருப்பது , குழந்தைக்காக செய்யப்படும் கொலைகள் என்று லாஜிக் லூப்ஹோல்ஸ் இருந்தாலும் க்ரிப்பான திரைக்கதையால் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வந்திருக்கும் சத்யா சைலண்ட் கில்லர் ...

ஸ்கோர் கார்ட் : 42 

ரேட்டிங்க் : 3 * / 5 * 




Related Posts Plugin for WordPress, Blogger...