26 May 2012

என்ன கொடுமை சார் இது ? ...!


ன்ன கொடுமை சார் இது ? - இது தான் இன்று இந்தியாவில் உள்ள எல்லா நடுத்தர வர்க்கத்தினரும் பேசிக்கொண்டிருக்கும் வசனமாய் இருக்கும் ...
மத்திய அரசாங்கத்திற்கு ஆறு மாத காலமாய் எங்கே அம்னீசியா வந்து விட்டதோ என்று அனைவரும் கொஞ்சம் நிம்மதியாய் இருந்ததில் யார் கண் பட்டதோ தெரியவில்லை பெட்ரோலை லிட்டருக்கு எட்டு ரூபாய் ஏற்றி விட்டார்கள். ..

விலையை ஏற்றுவதற்கான அதிகாரத்தை எண்ணெய் கம்பனிகளுக்கு கொடுத்ததில் இருந்தே இந்த கூத்து நடந்து கொண்டு தானிருக்கிறது , எங்களுக்கு நஷ்டம் நஷ்டம் என்று கம்பெனிகளும் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டு தானிருக்கிறார்கள் ...சச்சினின் சதத்தை போல காங்கிரஸ் ஆட்சியில் விலையேற்றம் ஒன்றும் புதிதில்லை என்ற போதும் இந்த முறை இரவோடு இரவாக அதிகபட்சமாக விலையை ஏற்றியிருப்பதை பார்த்தால் பெட்ரோல் இல்லாமலேயே வயிறு குபு குபுவென்று எரிகிறது ...

பேரலின் விலை இறங்கியும் பெட்ரோலின் விலை ஏறியதற்கு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததே காரணம் ...ஆனால் உன்னிப்பாய் பார்த்தால் காங்கிரஸ் அரசின் கையாலாகாத தனமும் , தவறான பொருளாதார கொள்கைகளுமே முக்கிய காரணம் என்பது நன்றாக புலப்பட்டும் ... 2ஜி ஊழல் , கனிம ஊழல் ஆதர்ஸ் ஊழல் இப்படி சில ஊழல்களால் இழந்த பல லட்சம் கோடிகள் இருந்தாலே பல வருடங்களுக்கு மக்களுக்கு இனாமாகவே பெட்ரோல் தரலாம் ...

மத்திய கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திரிமுனூல் காங்கிரசும், தி.மு.க வும் தங்களுடன் கலந்து கொள்ளாமலேயே விலையை ஏற்றி விட்டதாக கோபப்படுகிறார்கள் ...அவர்களும் என்ன செய்வார்கள் பாவம்... மம்தாவின் மனது கோணாமல் மத்திய அரசு நடக்கிறது மற்றொரு கட்சிக்கோ மாநிலத்தில் ஆட்சியில்லை , ராஜாவும் இப்பொழுது தான் ஜாமீனில் வந்திருக்கிறார் ,இந்த மாதிரி சூழ்நிலையில் கோபப்பட்டு அறிக்கை தான் விடலாமே தவிர உண்மையிலேயே கோபத்தில் ஏதாவது செய்து விட முடியுமா என்ன ? அவர்கள் அப்படி செய்வதாக முடிவெடுத்தால் மத்திய அரசிற்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் வாங்கலாம் ...அவ்வாறு செய்து திரும்பவும் தேர்தலை சந்திக்க அவர்கள் என்ன முட்டாள்களா? ...

மிடில் கிளாஸ் மக்களுக்கு எப்பொழுதுமே காங்கிரஸ் மேல் ஒரு சாப்ட் கார்னர் உண்டு. அதனால் தானோ என்னமோ காங்கிரஸ் நம்மை கார்னருக்கு கார்னர் துரத்தி துரத்தி அடிக்கிறது , நாமும் சாயங்காலம் ஆனால் சரக்கு கடை தேடி ஓடும் குடிமகன் போல ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவர்களுக்கே ஓட்டை போடுவோம் , இல்லையென்றால் எவன் வந்தாலும் நாடு உருப்படாது என்று சொல்லி ஒரு நாள் லீவு கிடைத்த சந்தோஷத்தில் வீட்டில் கவுந்தடித்து படுத்துக் கொள்வோம் ...

2009 நாடாளு மன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஒட்டு போட்டு விட்டு நண்பர் ஒருவர் சொன்ன காரணம் இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது ... அவருக்கு கம்யுனிஸ்டுகளே பிடிக்காது , அதிலும் அமெரிக்காவுடனான நியூக்லியர் ஒப்பந்தத்தை அவர்கள் தீவிரமாக எதிர்த்தது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை ... பி.ஜே.பி க்கு ஒட்டு போடலாம் என்றால் அந்த கட்சி முழு மெஜாரிட்டியோடு ஜெயிக்காது என்று ஏதோ கமல் படம் நன்றாக தான் இருக்கும் ஆனால் ஓடாது என்பது போல கவலைப்பட்டுக் கொண்டே இரண்டாவது முறையாக தெரிந்தே கிணற்றில் விழுந்தார் ... சமீபத்தில் அவரை சந்தித்த போது மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல டீசல் கார் வாங்கியிருக்கலாம் என்று மட்டும் வருத்தப்பட்டுக் கொண்டார் ...

இது போன்ற எத்தனையோ காரணங்களால் அன்று அனைவரும் ஒரு முடிவை எடுத்திருக்கலாம் ... இன்று பெட்ரோல் விலையுயர்வால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நாம் என்ன செய்யப் போகிறோம் ? இதெல்லாம் வழக்கம் போல நடப்பது தானே என்று சொல்லி விட்டு வேலையை பார்க்க போகிறோமா ? வாகனங்கள் இல்லாத வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளப் போகிறோமா ? 2014 வரை பல்லைக் கடித்துக் கொள்ளப் போகிறோமா இதை தவிர மிடில் கிளாசால் வேறென்ன சார் செய்ய முடியும் ? உண்மை தான் பெரிதாக வேறென்ன செய்ய முடியும் ?


பெட்ரோல் விலையேற்றத்திற்கு எண்ணெய்  கம்பெனிகள் மட்டும் தான் காரணமா ? நாம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கொடுக்கும் விலையில் பாதிக்கு மேல் மத்திய , மாநில அரசுகளுக்கு வரியாக போவது தான் மிக முக்கிய காரணம் ...கோடி கோடியாக சம்பாதித்தாலும் எதையாவது சொல்லி நீலிக்கண்ணீர் வடிக்கும் கார்பரேட்களுக்கு வரிச்சலுகையை வாரி வழங்கும் அரசு அத்தியாவசிய தேவையான பெட்ரோலுக்கு வரியை போட்டு மக்களை வதைக்கிறது ...

பெரிய பெரிய கம்பனிகளை போலவோ , பணக்காரர்கள் போலவோ அல்லாமல் ஒழுங்காக வருமான வரி உட்பட அனைத்து வரிகளையும் செலுத்துவது நடுத்தர மக்களே ... முக்கால்வாசி பேருக்கு சம்பளமே வரி பிடித்தத்திற்க்கு பின் தான் வருகிறது ... குட்ட குட்ட குனிவதால் மேலும் மேலும் குட்டிக் கொண்டிருக்கிறது அரசாங்கம் ...பெட்ரோல் விலை ஏறி விட்டதால் யாருக்கும் சம்பள உயர்வு வரப்போவதில்லை ...

மாதம் குறைந்தது 600 ரூபாயாவது பட்ஜெட்டில் விழும் துண்டு மருந்து வாங்குவதிலேயோ , வீட்டு பராமரிப்பு செலவிலோ ,பொழுதுபோக்கிற்கான செலவிலோ அல்லது மளிகை சாமான் வாங்குவதிலேயோ என ஏதோ ஒன்றில் சமன் செய்யப்பட போகிறது ..பெட்ரோல் விலையை மட்டும் நினைத்த மாத்திரத்தில் சர்ரென்று ஏற்றும் அரசு டீசல் விலையை ஏற்றுவதற்கு மட்டும் யோசிக்கிறார்களே ஏன் ? மக்களின் அன்றாட தேவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்காக மட்டுமா ? இல்லை ... மொத்தமாக போக்குவரத்து வர்த்தகமே பாதிக்கப்பட்டு அரசாங்கத்தின் வருமானம் குறையும் என்பதோடு , யூனியன்கள் மூலம் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்து நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் என்பதற்காகவும் தான் ...

பெட்ரோல் போட்டுக் கொண்டு டூ வீலரோ , காரோ ஓட்டுகின்ற யாரும் புலம்புவதை தவிர ரோட்டில் வந்து நின்று போராடப் போவதில்லை... வாழ்க்கை எனும் போராட்டத்தை கடந்து முடிப்பதற்குள்ளே வயது முடிந்து விடுகிறது ... இது தெரிந்து தானோ என்னவோ மக்களின் பொறுமையை சோதித்துக் கொண்டேயிருக்கிறார்கள் அதிகார வர்க்கத்தினர் ...

சென்னையில் மட்டும் வாகனம் ஓட்டுவோர் இருபது லட்சம் பேர் இருப்போமா ? இந்தியா முழுவதும் கூட்டிப் பார்த்தால் கோடிக்கணக்கானோர் வருகிறார்கள் ... அந்தந்த முக்கிய நகரங்களில் ஒரு நாள் இவர்கள் எல்லாம் ஒன்று கூடினால் கூட அரசாங்கம் ஆடி விடுமே ! ... சரி தான் , ஆனால் மாசக்கடைசியில் லீவு கிடைக்காது , அப்படியே கிடைத்தாலும் சம்பளத்த கட் பண்ணிடுவான் என்று உங்களுக்கு தோன்றும் அதே சிந்தனைகள் எனக்கும் தோன்றுகிறது ...

சினிமாவுக்கு நம்மால் ஒன்றாக செல்ல முடியும் , ஐ.பி,எல்லில் சென்னை ஜெயிப்பதற்காக ஒன்று கூட முடியும் , சீக்கிரம் போகலேனா பீர் கூலிங் போயிரும் என்று ஓட முடியும் ஆனால் நம்மையே விழுங்கிக் கொண்டிருக்கிற ஓர் பிரச்சனைக்கு ஒன்று கூட முடியாது ... ஒன்று கூடுவதை விடுங்கள் , அதை பற்றி சிந்திப்பதற்கு கூட நம்மில் பலருக்கு நேரம் இருப்பதில்லை ... போங்க சார் நீங்க வேற , இத பத்தி பேசலாம் , முடிஞ்சா ஏதோ கொஞ்சம் எழுதலாம் ,அத விட்டுட்டு மத்ததெல்லாம் நடக்குற காரியமா என்று முணு முணுப்பது நன்றாகவே கேட்கிறது ...

இப்பொழுது கூட காஸ் , டீசல் விலையை கொஞ்சம் ஏற்றி விட்டு பெட்ரோல் விலையை குறைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்... கத்தியால் குத்தி விட்டு மண்ணை அள்ளிப் போடுவது போல இல்லை... இதையெல்லாம் பார்க்கும் போது என்ன கொடுமை சார் இது என்று ஆரம்ப புள்ளிக்கே மீண்டும் வரத்தோன்றினாலும் ஏதாவது செய்யணும் சார் என்று ஒரு குரல் உள்ளுக்குள் ஓங்கி ஒலித்துக்கொண்டே தானிருக்கிறது ... 

23 May 2012

வழக்கு எண் 18/9 - சில விவாதங்கள் ...



ல்ல விமர்சனத்தையும் , அதே சமயத்தில் வசூலையும் ஒரு சேர பெறக்கூடிய படங்கள் தமிழ் சினிமாவிற்கு அரிதாகவே கிடைக்கின்றன ...மே 4 ஆம் தேதி வெளியாகி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வழக்கு எண் 18/9 படத்தை அந்த வகையில் சேர்க்கலாம்...பல தரப்பினராலும் பாராட்டப்பட்டு வரும் இந்த படம் உண்மையிலேயே அப்படியொரு வலுவானதொரு பாதிப்பை பொது மக்களிடத்திலும் ஏற்படுத்தியிருக்கிறதா அந்த படம் தமிழ் சினிமா உலகையே புரட்டிப் போட்ட படமா ? இல்லை அனைவரும் ஓவர் ரியாக்ட் செய்து கொண்டிருக்கிறோமா ? விவாதிப்போம் ...

யதார்த்தமான கதை, பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் திரைக்கதை, சமூக அக்கறையுடன் சொல்லப்பட்ட காட்சிகள் , புதுமுகங்களை திறம்பட இயக்கிய நேர்த்தி இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது வழக்கு எண் 18/9 - வளர்ச்சிக்கான பாதை ... என்பதை யாரும் மறுக்க முடியாது ...
பொதுவாக ஒரு படம் வெற்றியடைந்து விட்டாலே அதைப் பற்றி விமர்சிக்க தேவையில்லை , ஏனெனில் மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று சொல்வார்கள் ... அப்படி இருக்கும் போது ஏற்கனவே விமர்சனம் எழுதி விட்ட ஒரு படத்தை பற்றி மற்றொரு பதிவுபோடுவதன் அவசியம் என்னவென்று கேள்வி எழலாம் ...

சினிமா விமர்சனங்களுக்கு பெயர் போன ஆனந்த விகடன் " தமிழ் சினிமா குறித்து பெருமிதம் கொள்ள வைக்கும் படம் வழக்கு எண் 18/9 " என விமர்சித்து 55 மார்க்குகளை வாரி வழங்கியிருக்கிறது ...எந்த ஒரு சிறந்த படத்திற்கும் நன்று என விமர்சனம் செய்து வரும் குமுதம் வழக்கு படத்தை அதிகபட்சமாக சூப்பர் என்று விமர்சித்துள்ளது ...இவை தவிர சினிமா விமர்சனம் செய்யும் ஆங்கில பத்திரிக்கைகளும் ,வலைப் பத்திரிக்கைகளும் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகின்றன ...

பதிவர்களை பொறுத்த வரையில் சிலரை தவிர அனைவருமே படத்தை வானளாவ புகழ்கிறார்கள் ...அதிலும் சினிமா விமர்சனங்களை பொதுவாக எழுதாத சில பதிவர்கள் கூட இந்த படத்தை விமர்சித்தே தீர வேண்டுமென்கிற அளவிற்கு தங்கள் கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்கள்... இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அனைவரின் மதிப்பையும் பெற்ற இயக்குனர் பாலு மகேந்திரா நான் பாலாஜி சக்திவேலின் காலில் விழக்கூட தயார் என கூறியிருக்கிறார் ...


தரமான படத்தை அனைவரும் பாராட்டுவது இயல்பு தானே ? கேட்கலாம்.. படத்தின் தயாரிப்பாளர் ஒரு இயக்குனர் என்பதால் மற்ற இயக்குனர்களின் பாராட்டுக்களை விளம்பரப்படுத்தி படத்தின் வசூலை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதில் தவறேதுமில்லையே ? நியாயப்படுத்தலாம் ... ... ஆனாலும் அனைவரும் இப்படி படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கரகம் ஆடும் பொழுது தான் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல நெஞ்சுக்குள் ஏதோ நெருடுகிறது ...

வழக்கு எண் என்ன குறைகளே இல்லாத படமா? நிச்சயம் இல்லை. இப்படத்தை எதிர்மறையாக விமர்சித்தால் எங்கே தங்களுக்கு உலக சினிமா ரசனையே இல்லையென்று யாராவது சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் சிலர் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம் , அல்லது வழக்கத்திலிருந்து மாறுபட்ட இது போன்றதொரு சினிமாவை குறை கூற வேண்டாமென பெருந்தன்மையாக விட்டிருக்கலாம் ...

படத்தை மறுபடியும் ஒரு முறை சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்களுடன் சேர்ந்து பார்த்த பொழுது சினிமா உலகினரால சொல்லப்படுவது போல அப்படியொன்றும் மிகப்பெரிய தாக்கத்தை படம் அவர்களிடையே ஏற்படுத்தவில்லை என்பதும் , சிறந்த படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் அதே ஆர்வத்துடன் பார்க்கும் எனக்கும் படம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதும் தவிர்க்க முடியாத உண்மைகள்


முழு படமுமே ரோட்டோரக் கடையில் வேலை பார்க்கும் வேலு , பள்ளி மாணவி ஆர்த்தி இருவரின் பாயிண்ட் ஆப் வியூவில் தான் சொல்லப்படுகிறது. இருவரையும் விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் அவர்கள் சொல்ல சொல்ல ஆதாரப்பூர்வமாக தன் போனில் பதிவும் செய்து கொள்கிறார்... ஆடியன்சுக்கு நடந்தது என்ன என்பதை இந்த இருவரும் தான் சொல்கிறார்கள் ...

முதலில் முதல்பாதியில் விசாரிக்கப்படும் வேலுவிற்கு வருவோம் ...வேலு தன்னுடைய பிள்ளை பருவம் , குடும்பத்தின் ஏழ்மை நிலை , சென்னையில் அடைக்கலம் புகுந்த விதம் , ஜோதியை சந்தித்து காதல் வயப்பட்டது என்ற எல்லாவற்றையுமே சொல்கிறார்... வேலுவை பொறுத்த வரை ஜோதியுடன் பழக்கம் இல்லாததால் அவளுடைய குடும்பம் பற்றியோ , குறிப்பாக ஜோதியின் தந்தை கம்யூனிச ஆதரவாளர் என்பது பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை... அப்படியிருக்கும் போது வேலுவின் பாயிண்ட் ஆப் வியூவில் இது போன்ற காட்சியை வைத்ததில் சுத்தமாக லாஜிக் இல்லை.
...
மற்றொரு சீனில் ஜோதி வீட்டுக்கார பெண் ஆர்த்தியிடம் ஷாம்பூ தீர்ந்து விட்டது வாங்க வேண்டுமென்கிறாள் ...அடுத்த சீனில் வேலு அவளை கடையில் சந்திக்கிறான் ...ஜோதி வேலை செய்யும் வீட்டுக்குள் நடந்த விஷயம் வேலுவிற்க்கு எப்படி தெரியும் ? இங்கேயும் அதே லாஜிக் மிஸ்ஸிங்...

முதல் பாதியில் இது போன்ற சில லாஜிக் சொதப்பல்கள் என்றால் இரண்டாம் பாதியில் நிறையவே வருகின்றன ... ஆர்த்திக்கு தினேஷ் ஒரு பணக்கார ஸ்கூல் கரஸ்பாண்டண்டின் பையன் என்று தெரியும் ...ஆனால் அதற்காக தினேஷ் வீட்டிற்க்குள் பணம் கேட்டு அவன் அம்மாவிடம் சண்டை போடுவதும் , அவன் அம்மாவிற்கும் மந்திரிக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ஆர்த்திக்கு தெரிவதற்கு வாய்ப்பே இல்லை , அப்படியிருக்க அவள் தனக்கு தெரிந்ததை இன்ஸ்பெக்டரிடம் சொல்லும் போது இது போன்ற காட்சிகள் எப்படி இடம்பெற்றன ? ... இதே லாஜிக் சொதப்பல்கள் தான் தினேஷ் தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன் பேசிக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெறும் போதும் நம் மனதை குடைகின்றன ...

என்ன பாஸ் இது ? இப்படில்லாம் லாஜிக் பாத்தா சினிமாவே எடுக்க முடியாது என்றோ ,கதைக்கு கால் உண்டா என்றோ சிலர் கேட்கலாம் ...ஒரு பக்கா கமர்சியல் படத்திற்கே லாஜிக் பார்க்கும் பொழுது உலக சினிமாக்களோடு ஒப்பிடப்படும் ஒரு படத்திற்கு பார்க்காமல் இருக்கலாமா ?புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசேவா சொன்ன பாணியில் தான் இந்த படத்தின் கதையும் சொல்லப்பட்டிருக்கிறது .... ஏற்கனவே இதே பாணியில் வந்த விருமாண்டி நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம் ... இது போன்ற லாஜிக் சொதப்பல்கள் விருமாண்டியில் இல்லை என்று அடித்து சொல்லலாம்... கமல் ,பசுபதி இருவருமே தங்கள் கதைகளை சொல்லும் பொழுது அவரவர் சம்பந்தப்பட்ட காட்சிகளே இடம்பெற்றிருக்கும்...இரண்டு படங்களின் பின்னணியும் வேறு வேறு என்றாலும் கதை சொன்ன விதம் ஒரே முறையில் இருப்பதால் தான் இந்த ஒப்பீடே தவிர வேறெந்த காரணமும் இல்லை ...


ஏற்கனவே என் விமர்சனத்தில் தப்பு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டுமென்ற ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போன்ற
க்ளைமாக்ஸ் , அங்காடி தெருவை போலவே குறையுடன் காதலியை ஏற்றுக்கொள்ளும் காதலன் , நமக்கு சிம்பதி வர வேண்டுமென்பதற்காகவே இன்ஸ்பெக்டரிடம் வேலு சொல்லும் நீண்ட பிளாஷ்பேக் போன்ற மற்ற குறைகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறேன் ... தொடர்ந்து இப்படத்திற்கு கொடுக்கப்பட்டு வரும் எக்கச்சக்க பில்ட் அப்களே இந்த பதிவு போட தூண்டுதலாய் இருந்ததே ஒழிய , எல்லோரும் பாராட்டும் படத்தை நாம் குறை சொல்வோம் என்ற எண்ணமோ , யதார்த்தமான சினிமாக்களுக்கு எதிரான நிலைப்பாடோ நிச்சயம் காரணமல்ல என்பதையும் நான் தெளிவு படுத்திக்கொள்கிறேன் ...

சினிமா எடுப்பவர்களுக்குஎப்பொழுதுமே ஒரு படம் ஹிட்டடித்தால் அது மாதிரியே தொடர்ந்து படம் எடுக்கும் வியாதி உண்டு ... அதே போல ரசிகர்களுக்கும் ஒரு படத்திற்கு தொடர்ந்து ஒரு படத்தை பற்றிய நல்லடாக் இருந்தால் அதை நோக்கியே படையெடுக்கும் பழக்கமுமுண்டு. ஒரு ரசிகனாக நல்ல படங்களை ஊக்குவிப்பதில் எனக்கு எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை ...அதே சமயத்தில் விமர்சகனாக எந்த ஒரு படமாக இருந்தாலும் அதை வேறொரு கோணத்தில் இருந்தும் பார்க்க வேண்டுமென்பதில் எனக்கு சிறிதளவு கூட ஐயப்பாடும் இல்லை ...

சினிமாவில் என்ன சொல்கிறோம் என்பதை விட எப்படி சொல்கிறோம் என்பதே மிக முக்கியம் என்பார்கள் ..அந்த வகையில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் படத்தை மிக அழகாக தொய்வில்லாமல் பிரசன்ட் செய்திருக்கிறார், இருந்தாலும் காதல் படத்தை பார்த்த பிறகு ஒரு வாரத்திற்கும் மேல்இருந்த பாதிப்பு வழக்கு படத்தை பார்த்த பிறகு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை ... மகாநதி,சேது ,காதல் , சுப்ரமணியபுரம் வரிசையில் என்னால் இந்த படத்தை வைக்க முடியவில்லை , அதனால் தானோ என்னவோ வழக்கு எண் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட படமென்றோ , இப்படியொரு படம் வந்ததேயில்லை என்றோ வானுக்கும் பூமிக்கும் குதிப்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை ...


இதை விட மிக மோசமான கூத்து தான் சமீபத்தில் வந்த " ராட்டினம் " படத்திற்கும் நடந்து கொண்டிருக்கிறது .. ராட்டினம் - சுற்றலாம்   தவறேதுமில்லை , ஆனால் மௌனகுரு , வழக்கு எண் வரிசையில் ஒரு படம் என்று சொல்வதையே ஜீரணிக்க முடியாத பொழுது தூத்துக்குடியில் ஒரு விடிவி என்று கௌதம் மேனனும் , அழகி , ஆட்டோக்ராப் , மைனா வரிசையில் ராட்டினம் என்று சேரனும் புகழாரம் சூட்டுவதை பார்க்கும் பொழுது சிரிப்பதா?அழுவதா ? என்று கூட தெரியவில்லை ...

சபா கச்சேரிகளுக்கு செல்பவர்களில் நிறைய பேருக்கும் சங்கீதம் புரியாவிட்டாலும் அடுத்தவர்களுக்காக தலையை ஆட்டி வைப்பார்கள்.
எங்கே தனக்கு சங்கீத ஞானம் இல்லையென்று சொல்லி விடுவார்களோ என்ற பயமே அதற்கு காரணம் ... இந்த சபா கச்சேரி மனப்பாங்கு சினிமா உலகிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருவது பயத்தையும் , பதிவுலகில் உள்ளது போன்ற மொய்க்கு மொய் கலாச்சாரம் இயக்குனர்களிடையேயும் இருப்பது வேதனையையும் தருகிறது ... வித்தியாசமான முயற்சிகளை வரவேற்பது நம் கடமை , அதே சமயம் அது ஓவர் டோஸாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்புணர்வும் அவசியம் , இல்லையெனில் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மாஸ் ஹீரோக்களை வைத்து ரசிகர்களை ஏமாற்றுவதற்காக கொடுக்கப்படும் எக்ஸ்ட்ரா பில்ட் அப்புகளுக்கும் இதற்கும் வித்தியாசமில்லாமல் போய் விடும் ...

கொஞ்சம் பணமும் , நான்கு வெகுஜன முகங்களும் , மனதை உலுக்கும் க்ளைமாக்ஸும் இருந்தால் படத்தை உலக சினிமா என்றெல்லாம் விளம்பரப்படுத்தி நாலு காசு பார்த்து விடலாம் என்ற எண்ணம் பரவி விட்டால் அது தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல ... இந்த பதிவிற்கு எதிர் கருத்துரையிட நினைப்பவர்கள் தயவு செய்து இரு படங்களையும் இன்னொரு முறை பார்த்து விட்டு , இந்த படங்களுக்கான என் விமர்சனத்தையும் படித்து 
விட்டு நேர்மையுடன் வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ...

19 May 2012

ராட்டினம் - சுற்றலாம் ...



டந்த மூன்று மாதங்களுக்குள் முப்பதுக்கும் மேற்பட்ட சிறிய படங்கள் புற்றீசலைப் போல வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிலிருந்து சற்று மாறுபட்டு மின்மினி பூச்சியைப் போல கவனிக்க வைத்திருக்கும் படம் " ராட்டினம் " ...

நண்பர்களுடன் வெட்டியாக ஊரை சுற்றிக்கொண்டிருக்கும் அரசியல்வாதி அசோக்கின் ( கே.எஸ்.தங்கசாமி ) தம்பி ஜெயத்திற்கும் ( லகுபரன் ) க்கும் , அரசு உத்தியோகத்தில் பெரிய போஸ்ட்டில் இருப்பவரின் மகளான பள்ளி மாணவி தனத்திற்கும் ( சுவாதி ) இடையே வரும் காதல் , இரு வீட்டாருக்கும் இது தெரிந்தவுடன் ஏற்படும் பிரச்சனை , வழக்கத்திலிருந்து மாறுபட்ட க்ளைமாக்ஸ் இவை மூன்றையும் கலந்து தலையை சுற்ற வைக்காமல் ராட்டினத்தை சுற்றியிருக்கிறார் புதுமுக இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி ...



லகுபரன் பார்த்தவுடன் பிடிக்காமல் போனாலும் படம் பார்த்து முடிக்கும் போது பிடித்துப் போகிறார் ...ஹீரோயின் உட்பட படத்தில் அறிமுகம் ஆகியிருக்கும் டஜனுக்கும் மேற்பட்ட புதுமுகங்களோடு ஒப்பிடும் போது இவர் பார்ப்பதற்கு பெட்டராக இருப்பதும் காரணமாக இருக்கலாம் ...

சுவாதிக்கு நடிப்பு வருகிறது ... முகம் தான் பள்ளி மாணவி போல அல்லாமல் க்ளோஸ் அப் காட்சிகளில் பள்ளி ஆசிரியை போல இருக்கிறது ...இவர்களை தவிர ஹீரோயினின் அப்பா , ஹீரோவின் அண்ணி இருவரும் கவனிக்க வைக்கிறார்கள்... இப்படத்தின் இயக்குனர் ஒரு நடிகராக நம்மை பெரிதாய் கவரவில்லை ... மற்ற நடிகர்களையெல்லாம் ஏதோ ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து செலக்ட் செய்திருப்பார்கள் போல... நடிப்பில் அத்தனை அமெச்சூர்தனம் ...பின்னணி இசை பெரிதாக இல்லை , பாடல்கள் ஓகே...

முன்பாதி நீளமாக இருந்தாலும் படத்தில் காதல் எபிசோட் நச்சென்று இருக்கிறது ... போலீஸ் மூலம் இருவரின் காதலும் வெளிச்சத்திற்கு வந்த பிறகே படம் சூடு பிடிக்கிறது ... இடைவேளையில் இருந்து படம் முடியும் வரை அந்த டெம்போவை குறைய விடாமல் பார்த்துக் கொண்டதற்காக இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம் ...கதை காதல் ,நாடோடிகள் போன்ற படங்களை நியாபகப்படுத்தினாலும் அதை சொன்ன விதம் சூப்பர்... லொக்கேஷன் சேஞ்ச் அதிகம் இல்லாமலேயே திரைக்கதையை சுவாரசியமாக எடுத்து சென்ற விதமும் அருமை ...


நிறைகள் இருந்தும் புது முகங்களின் நடிப்பும் , ஹீரோ நண்பர்களுடன் தண்ணியடிப்பது போல வரும் ரிப்பீட்டட் காட்சிகளும் , முழு சினிமாவாக நம்மை சிலாகிக்க விடாமல் செய்யும் சில டெக்னிக்கல் சமாச்சாரங்களும் ராட்டினத்தை பின்னுக்கு இழுக்கின்றன ...

நடிகர்கள் தேர்வு , இசை , ஷாட்கள் வாயிலாக படத்தை கொண்டு செல்லும் விதம் இவைகளில் இயக்குனர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ராட்டினம் நம்மை அண்ணாந்து பார்க்க வைத்திருக்கும். இருப்பினும் முதல் படத்திலேயே சின்ன பட்ஜெட்டில் தான் சொல்ல வந்ததை எந்த காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் அழுத்தமாகவும் , தெளிவாகவும் சொன்ன விதத்திற்காக நிச்சயம் ராட்டினம் சுற்றலாம் ...

ஸ்கோர் கார்ட் : 43

15 May 2012

கலகலப்பு @ மசாலா கபே - மினி மீல்ஸ் ...


ள்ளத்தை அள்ளித்தா ,அருணாசலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த சுந்தர்.சி நீண்டஇடைவெளிக்கு பிறகு தன் கலகலப்பான பாணியில் மசாலா கபேவில் களமிறங்கியிருக்கிறார் ...படம் அவருடைய வழக்கமான கலவை சாதம் தான் என்றாலும் சுவையாக தான் இருக்கிறது ...

தற்போது நொடிந்து போயிருக்கும் தன்;பரம்பரை ஹோட்டலான மசாலா கபேவை எப்படியாவது முன்னுக்கு கொண்டு வரவேண்டுமென்று துடிக்கிறார் விமல் ... தன் குறுக்கு வழிகளால் விமலுக்கு உதவி  செய்கிறார் அவருடைய  ப்ரதர் சிவா ... மற்றொரு டிராக்கில் பத்து கோடி மதிப்புள்ள வைரத்தை செல்போனில் ஒளித்து வைத்து தன் மக்கு மச்சானிடம் பத்திரமாக(!) கொடுத்து அனுப்புகிறார் நகைவியாபாரி சுப்பு... செல்போன் சிவாவின் கைக்கு வர , மசாலா கபேவை முன்னுக்கு கொண்டு வந்தார்களா என்பதை நகைச்சுவை பட சொல்லியிருக்கிறார்கள் ...


படத்திற்கு ஹீரோவாக சிம்பிளான விமல் சரியான தேர்வு ... இடுப்பில் மிதி பட்டு முக்கால் வாசி படத்திற் மேல் இவர் நொண்டி நொண்டி நடப்பதை பார்க்கவே பாவமாக இருக்கிறது ... விமல் ஹோட்டலை முன்னேற்ற செய்யும் முயற்சிகளையும் , அவை நேர் மாறாக முடிவதையும் ஆரமபத்திலேயே மாண்டேஜ் சாங்கில் அழகாக சொல்லி விடுகிறார்கள். அதனால் தானோ என்னவோ தொடர்ந்து வரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சம் போரடிக்கவே செய்கின்றன ...

முகத்தில் ரியாக்ஷனே இல்லாமல் நடித்தாலும் கைதட்டல் பெறுகிறார் சிவா...காதலிக்காக இவர் சூப்பர் மார்க்கட்டில் பொருட்களை களவாடும் இடம் கல கல ... முதல் பாதியின் சிரிப்பு சிவா பொறுப்பென்றால் இரண்டாம் பாதியை மூன்றாவது ஹீரோ சந்தானம் கையிலெடுத்துக் கொள்கிறார்.. அஞ்சலியின் முறைப்பையனாக இவர்செய்யும்காமெடி பழைய ப்ளாட் தான் என்றாலும் இவர் பாணியில் செய்து ரசிக்க வைக்கிறார் ...


விமலுக்கு ஜோடியாக அஞ்சலியும் ,சிவாவிற்கு ஜோடியாக ஓவியாவும் போட்டி போட்டு கொண்டு திறமையை காட்டியிருக்கிறார்கள் ... அதிலும் முன்னவரே ஜெயிக்கிறார் ...விஜய் எபனேசர் இசையில் படத்தில் " இவளுக இம்சை " தவிர மற்ற பாடல்கள் எல்லாமே இம்சையாக இருக்கின்றன...

போலிசாக வரும் ஜான் விஜய் , அவருக்கு பயந்து மாறு வேடத்தில் அலையும் இளவரசு , மண்டையில் அடிபட்டு சௌத்ரி , வால்டர் என்றெல்லாம் உலறும் போலீஸ்காரர் , எதை தூக்கி போட்டாலும் கொண்டு வந்து கொடுக்கும் நாய் , சுகர் மாத்திரை போட்டுக் கொள்ளும் அடியாள் இப்படி பல கதாபாத்திரங்களை வைத்து தனக்கு தெரிந்த திரைக்கதையை தெளிவாக செய்திருக்கிறார் சுந்தர் .சி ... சந்தானம் என்ட்ரிக்கு பிறகு படத்தை முடியும் வரை விறுவிறுவென கொண்டு செல்கிறார்கள் ...

கிரி படத்தில பேக்கரியை உயர்த்த வடிவேலு -அர்ஜுன் செய்யும் காமடியை மையக்கருவாக வைத்துக்கொண்டு மேட்டுக்குடி , நாம் இருவர்  நமக்கு இருவர் பட சமாசாரங்களை திரைக்கதையில் புகுத்தியது , கவர்மென்ட் வேலை பார்க்கும் அஞ்சலி போகிற போக்கில் அதை கண்டு கொள்ளாமல் சொந்த வேலையாக அலைவது , பாடல்கள் , ஏற்கனவே பார்த்து பழகிப் போன காட்சிகள் இவையெல்லாம் புல் மீல்ஸ் ஆக இருந்திருக்க வேண்டிய மசாலா கபேவை மினி மீல்ஸ் ஆக மாற்றுகின்றன ...

ஸ்கோர் கார்ட் : 40

9 May 2012

ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் நல்லதோர் வீணை குறும்படம்


குறும்படம் எடுப்பவர்களை இணையதளங்கள் தவிர தொலைக்காட்சிகளும் சிறந்த குறும்படங்களை ஒளிபரப்புவதன் மூலம் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன ...

அந்த வகையில் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமை ஒளிபரப்பாகும் " மாற்றுத்திரை " நிகழ்ச்சி முக்கியமானது... ஏற்கனவே யுடியுப் , பேஸ்புக் , மூன்றாம்கோணம் போன்ற இணைய தளங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள " நல்லதோர் வீணை "  குறும்படத்தை இந்த வாரம் " மாற்றுத்திரை " நிகழ்ச்சியில் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள் ...

இந்த நிகழ்ச்சியை பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் எனக்கு அளித்து வரும் ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு இந்த பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன் ...எனக்கு இந்த வாய்ப்பினை அளித்த ஜெயா தொலைக்காட்சியினருக்கு எனது மனமார்ந்த நன்றியை  தெரிவித்துக்கொள்கிறேன் ...

5 May 2012

வழக்கு எண் 18/9 - வளர்ச்சிக்கான பாதை ...






பெரிய நடிகர்களை நம்பாமல் தன் கதையை மட்டுமே நம்பி முற்றிலும் புதுமுகங்களை வைத்து படமெடுத்து அதை ஜெயிக்கவும் வைப்பதற்கு தைரியம் மட்டும் இருந்தால் போதாது , நல்ல திட்டமிடுதலும் நிறைய திறமையும் வேண்டும் ...இவையிரண்டும் தன்னிடம் இருப்பதை மீண்டும் ஒரு முறை இயக்குனர் பாலாஜி சக்திவேல் நிரூபித்திருக்கும் படம் " வழக்கு எண் 18/9 " ...

ஆசிட் வீசப்பட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கும் ஜோதி
( ஊர்மிளா ) என்ற வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் போலிஸ்;இன்ஸ்பெக்டர் குமாரவேல் (முத்துராமன் ) மேற்கொள்ளும்;விசாரணையிலிருந்து தொடங்குகிறது படம்...

முதல் பாதியில் சந்தேகத்தின் ;பேரில் ரோட்டோர கடையில்வேலைசெய்யும் வேலு ( ஸ்ரீ ) விசாரிக்கப்பட,;இரண்டாம் பாதியில் +2 படிக்கும் வீட்டுக்கார பெண் ஆர்த்தி ( மனிஷா );கொடுக்கும் புகாரின் பேரில் தினேஷ் ( மிதுன் ) என்ற +2 படிக்கும் பணக்கார பையன் விசாரிக்கப்ப்டுகிறான் ...சட்டம் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமிடையே எப்படி தன் கடமையை எப்படி செய்கிறது என்பதை;காதல் , காமம் , நட்பு , துரோகம் இவற்றையெல்லாம் சரியான விகிதத்தில் கலந்து சமூக அக்கறையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...



ஸ்ரீ விளிம்பு நிலை இளைஞனாக அப்படியே பொருந்துகிறார்.இவர்;சம்பந்தப்பட்ட ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் அழுகையாய் இருந்தாலும் ;அழுத்தமாய் இருக்கின்றன ...இவர் ஊர்மிளாவை ஒரு தலையாய் காதலிப்பதாலோ என்னவோ இவர் மேல் வரும் பச்சாதாபம் இவர் காதல்;மேல் வரவில்லை ...படம் முழுவதும் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக;சாதாரணமக வந்து போகும் ஊர்மிளா கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க;வைக்கிறார் ...இவர் அம்மாவாக நடித்திருக்கும் வயதான பெண்மணி ;கவனத்தை ஈர்க்கிறார் ...



மனிஷா , மிதுன் இருவரும் ட்ரையான முதல் பாதியிலிருந்து கலகலப்பான இரண்டாம் பாதிக்கு நம்மை அழைத்து செல்கிறார்கள் ...ஆசையும் ,பயமும் கலந்த மிடில் கிளாஸ் பெண்ணையும் , பெண்ணாசை பிடித்து அலையும் பணக்கார பையனையும் மனிஷா ,மிதுன் இருவரும் நம் கண் முன்னே நிறுத்துகிறார்கள் ...

எங்கே பிடித்தார்கள் என்று தெரியவில்லை , இன்ஸ்பெக்டராக வரும்;முத்துராமனின் நடிப்பு அவ்வளவு அழகாக இருக்கிறது ...இவர் மட்டுமல்ல ;விபச்சார பெண் ,ரோட்டோர கடை ஓனர் , கூத்துக்கார சிறுவன் , மிதுனின் அம்மா , மனிஷாவின் தோழி இப்படி நிறைய பேர் தங்கள் இயல்பான ;நடிப்பால் படம் பார்க்கிறோம் எனற உணர்வையே மறக்கடிக்கிறார்கள் புதுமுகங்களை இவ்வளவு இயல்பாக நடிக்க வைத்தற்க்கே இயக்குனருக்கு;ஒரு விழா எடுக்கலாம் ...

படத்தின் இயல்பு மாறாமல் டிஜிட்டலில் எடுத்திருக்கும் விஜய் மில்டனின் ஒளிப்பதிவு அருமை ...புதுமுக இசையமைப்பாளரி பிரசன்னாவின் இசையில்;வாத்தியமே இல்லாத இரண்டு பாடல்களும் ,பின்னணி இசையும் சூப்பர் ...


தினசரி பத்திரிக்கைகளில் படிக்கும் சம்பவங்களின் பின்னணியில் தொடுக்கப்பட்ட கதை , படத்தோடு நம்மை ஒன்ற செய்யும் திரைக்கதை , அனைவரின் நடிப்பு , ஆங்காங்கே வைக்கப்பட்ட சிம்பாலிக் ஷாட்கள் , பள்ளி மாணவ மாணவிகள் செக்ஸ் ஆசைகள் மூலம் மொபைலை தவறாக பயன்படுத்தும் விதத்தை அபாய கோட்டை தாண்டாமல் தரமாக சொன்ன விதம் , ராம் , விருமாண்டி ஸ்டைலில் இருவரின் பார்வையிலிருந்து கதையை சொன்னாலும் கன்டினுட்டி மாறாமல் சொன்ன நேர்த்தி இவையெல்லாம் வழக்கு எண்னை வழக்கமான சினிமாவிலிருந்து வித்தியாசப்படுத்துகின்றன ...;

நீளமாக விவரிக்கப்படும் ஆரம்ப காட்சிகள் ,செல்போனால் தன்னை படம்பிடிப்பது கூட தெரியாமல் பழகிக் கொண்டிருக்கும் மனிஷாவின்;கதாபாத்திரம் ,தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்ற ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக வைக்கப்பட்டது போன்ற கிளைமாக்ஸ் இது மாதிரியான சில குறைகள் இருந்தாலும் கதைக்காக உலக டி.வி.டி க்களை தேடி அலையாமல் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களை ;வைத்தே உலக சினிமாவை கொடுக்க முடியுமென்ற நம்பிக்கையை ;கொடுத்திருக்கும் வழக்கு எண் 18/9 நிச்சயம் வளர்ச்சிக்கான பாதை ...

ஸ்கோர் கார்ட் : 45 
Related Posts Plugin for WordPress, Blogger...