13 May 2018

இரவுக்கு ஆயிரம் கண்கள் - பிரகாசம் ...


ரவுக்கு ஆயிரம் கண்கள் , இரும்புத்திரை இரண்டில் முன்னதை முதலில் பார்த்ததற்கு காரணம் அருள்நிதி  தேர்ந்தெடுக்கும் கதைக்களன் . இந்த முறையும் அவர்  முயற்சி வீண்போகவில்லை . ஒரு இரவு , ஒரு சம்பவம் , நான்கு பேர் இப்படி கதை முடிச்சுள்ள படங்களை நிறைய பார்த்திருப்போம் . சமீபத்திய உதாரணம் விழித்திரு . அந்த படம் போல நம்மை தூங்க வைக்காமல் இரவு முழுக்க விழிக்க வைத்த  இயக்குனர் மு.மாறனுக்கு பாராட்டுக்கள் ...

கால் டாக்ஸீ டிரைவர் பரத் ( அருள்நிதி ) தனது காதலி சுசீலா ( மஹிமா ) வுக்கு தொல்லை கொடுக்கும் கணேஷ் ( அஜ்மல் ) வீட்டுக்கு இரவில் போகிறார் . அங்கு ஒரு கொலை நடந்திருக்கிறது , ஏற்கனவே சிலர் கணேஷை கொலை செய்யும் நோக்கத்தோடு அங்கே வந்திருக்கிறார்கள் . பரத்தை ஏன் போலீஸ் துரத்துகிறது ? உண்மையான கொலையாளி யார் ? கணேஷை ஏன் கொலை செய்ய அலைகிறார்கள் . இந்த அத்தனை கேள்விகளுக்கும் அங்கங்கே க்ளூ வைத்து அழகாக தெளிவாக ( எக்கச்சக்க கேரக்டர்கள் கொஞ்சம் குழப்பினாலும் )  சொல்வதே இ.ஆ.க . ஒரே கண்டிஷன் ஒரு சீனையும் தவற விடக்கூடாது ...

அருள்நிதி வழக்கம் போல கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைதியாக நடித்திருக்கிறார் . எந்த இடத்திலும் ஹீரோயிசத்தை தலை தூக்க விடாமல் திரைக்கதையில் பயணித்திருப்பது அவரை மெச்சூரிட்டியை காட்டுகிறது . அவரது பயணம் இதே போல தொடர வாழ்த்துக்கள்  . மஹிமா சைனீஸ் மாமோ போல நன்றாக இருக்கிறார் . பதட்டப்படும் போது கண்கள் நன்றாக பேசுகிறது . அஜ்மல் கேரக்டர் திருட்டு பயலே பிரசன்னா வை நினைவு படுத்தினாலும் நல்ல தேர்வு . மெய்ன் கேரக்டர்களை தொடர்ந்து நம்மை அதிகம் கவர்பவர் ஆனந்தராஜ் ...



ஆடுகளம் முருகதாஸை வீணடித்திருக்கிறார்கள் . சாயா சிங் கேரக்டர் படத்தை நகர்த்துவதற்கு உதவியிருந்தாலும் இவருக்கும் ஜான் விஜய் கேரக்டருக்கும் சிங்க் ஆகவில்லை . காதலித்த பெண்ணை கை பிடிக்காததால்
சாயா வை தொடாமல் இருக்கும் விஜய் வேறொரு பெண்ணோடு ஏன் போக வேண்டும் ? பணக்காரியாக இருக்கும் சாயா சிங் விஜய் செய்யும் டார்ச்சர்களை ஏன் ஐந்து வருடங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் போன்ற கேள்விகள் எழாமல்  இல்லை ...

சம்பவங்கள் பெரும்பாலும் இரவில் நடந்தாலும் நம்மை விழித்துக்கொண்டே வைத்திருக்கும் திரைக்கதை  அருமை . ஒரு சில கேரக்டர்கள் வீண் போல தோன்றினாலும் கேரக்டர்களின் வாயிலாகவே சின்ன சின்ன பிளாஷ்பேக்கில் கதையை நகர்த்திய விதம் சிறப்பு . கமர்ஷியலுக்காக  பாட்டு , லவ் , செண்டிமெண்ட் என்று நேரத்தை வீணடிக்காமல் ஒரே ட்ராக்கில் பயணித்திருப்பது மிகச்சிறப்பு . சாம்.சி.எஸ் சின் பின்னணி இசை படத்திற்கு தேவையான பெப்பை கொடுக்கிறது ...

படத்தின் ஆரம்பத்திலேயே வரும் போலீஸ் அதன் பிறகு க்ளைமேக்ஷில் வந்து பழைய படம் போல யார் கொலையாளி என சொல்லி முடித்து வைப்பது சறுக்கல் . அவர்களின் விசாரணையை ஒரு வேலை படத்தின் நேரத்தை நினைத்து தவிர்த்திருக்கலாம் . இது போன்ற மிஸ்டரி படங்களில் க்ளைமேக்ஸ் மிகவும் முக்கியம் . ஹைப் கொடுத்து கடைசியில் சொதப்பி விடுவார்கள் . இதில் அது போலல்லாமல் இண்டெர்வெல் , கிளைமேக்ஸ் இரண்டையும் கட்சிதமாக முடித்திருக்கிறார்கள் . க்ரைம் நாவல் பிரியர்களுக்கு படம் பிரசாதம் . மொத்தத்தில் விறு விறு திரைக்கதையோடு வந்திருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் பிரகாசம் ...

ரேட்டிங்க்            : 3.25 * / 5 *

ஸ்கோர்  கார்ட் : 43 

Related Posts Plugin for WordPress, Blogger...