26 December 2010

மன் மதன் அம்பு - விமர்சனம்

       "மன்" மன்னாராக கமல் , "மதன்" மதன கோபாலாக மாதவன் , "அம்பு" அம்புஜம் ( எ) நிஷாவாக த்ரிஷா இவர்கள்  மூவரை பற்றிய கதையே "மன் மதன் அம்பு"
                  கோடீஸ்வரன் மாதவன், நடிகை த்ரிஷா இருவரும் காதலிக்கிறார்கள் ...நிச்சயதார்த்தம் வரை செல்லும் காதல் மாதவனின் சந்தேக புத்தியாலும் ,இருவரின் ஈகோவாலும் விரிசல் அடைகிறது ...த்ரிஷா ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார் ..அவருடன் அவர் தோழி கீதா ( சங்கீதா) வும், அவளின் இரண்டு குழந்தைகளும் சேர்ந்து கொள்கிறார்கள் ...அங்கு த்ரிஷாவை வேவு பார்க்க மாதவனால் நியமிக்கப்படுகிறார் மேஜர் மன்னார் ( கமல் )...வேவு பார்க்க வந்த இடத்தில் இருவருக்கும் பரஸ்பர நட்பு ஏற்பட்டு அதுவே காதலாக மலர்கிறது ...முடிவில் யார் யாருடன்  சேர்கிறார்கள் என்பதே மீதி கதை ...
       முதல் காட்சியிலேயே மாதவனுக்கும் ,அவர் அம்மாவுக்கும் த்ரிஷா நடிகை என்பதால் ஏற்படும் சந்தேகத்தையும் , அதை தொடர்ந்து வரும் கார் பயணத்தில் மாதவன், த்ரிஷா இருவருக்கும் ஏற்படும் ஈகோ பிரச்சனையையும் தெளிவாகவும் , புத்திசாலித்தனமாகவும் சொல்லி இருக்கிறார்கள் ....அதே தெளிவும் , புத்திசாலித்தனமும் படம் முழுவதும் இல்லாதது பெரிய குறை ..........
       மன்னார் கமல் தன் வழக்கமான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார் ...அவர் அறிமுகமே அசத்தல் ..மேஜர் என்றவுடன் விறைபபுடன் அலையாமல் யதார்த்தமாக இருக்கிறார் ...தகிடத்த்தம் பாடலுக்கு அவர் ஆட்டம் இளமையாக இருந்தாலும் தொப்பை இடிக்கிறது .."ப்ளாஷ்பாக்" என்றாலும் இவர் மனைவி சம்பத்தப்பட்ட காட்சிகளை இழுக்காமல் ஒரு பாடலுடன் முடித்திருப்பதை பாராட்டலாம் ....
         தன் நண்பன் ( ரமேஷ் அரவிந்த் ) ஆபரேஷன் செலவிற்கு பணம் புரட்டவே வேவு பார்க்கும் வேலைக்கு வந்திருக்கிறார் என தெரியும் போது மனைதை தொடுகிறார் ..பணத்திற்காக இவர் மாதவனிடம் கெஞ்சும் போதும், பணம் தர மறுக்கவே அதை பெற குறுக்கு வழியை கையாளும் போதும் கைத்தட்டல் பெறுகிறார் ...
       மாதவனுக்கு காமெடி, சீரியஸ் இரண்டும் எளிதாக வருகிறது ..த்ரிஷாவை பிரியும் இடத்தில நல்ல முகபாவம் ...குடிபோதையில் உலறும் போதும், கழிவறையில் கைபேசியை தவற விட்டு பின் அதை கையில் எடுத்து அலம்பி, ஸ்ப்ரே அடித்து  பேசும் போதும் கல ...கல....ஆனால் படம் முழுவதும் மாதவனை ஏதோ மயில்சாமி போல போதையிலேயே உலவ விட்டிருப்பது அபத்தம் ..த்ரிஷாவை சந்தேகப்படுகிறார் என்பதற்காக அவரை முட்டாள் போலவும் , அம்மா பேச்சை அப்படியே கேட்கும் அசடாகவும் , கடைசியில் பணத்திற்காக விவாகரத்து வாங்கி இரண்டு பசங்களுடன் இருக்கும் சங்கீதாவுடன் சேருவதாக காட்டுவதும்  அவரின் கதாபாத்திரத்திற்கே பெரிய சறுக்கல் .......
          த்ரிஷா நடிகையாகவே வருவதால் இயல்பாக வந்து போகிறார் ..ஒரு காட்சியில் கமல் த்ரிஷாவிடம் இவ்வளவு அழகாக தமிழ் பேசும் நீங்கள் உங்கள் படங்களில் இது போல பேசுவதில்லையே என்று ஆதங்கப்படுகிறார் ..அனால் இந்த படத்திலேயே ஏதோ ஆங்கில படத்திற்கு வந்து விட்டோமோ என்று சந்தேகப்படும் அளவிற்கு எக்கச்சக்க ஆங்கில வசனங்கள் .......
            சீமான் , ஆகாஷ் சிறிது நேரமே வந்தாலும் கிச்சு ...கிச்சு ...களவானி படத்தில் மனதை திருடிய ஓவியா இதில் ஏதோ வேலைக்காரி போல வந்து போவது துரதிருஷ்டம் ...           இப்படத்தின் கதை ,திரைக்கதை , வசனம் , சில பாடல்கள் என நிறைய பொறுப்புகள் கமலின் தலையில் ..கதை மின்சார கனவு ,குரு என ஆளு போன்ற படங்களின் கலவை ..அதற்கு  காமெடி சாயம் பூச பார்த்திருக்கிறார்கள் ஆயினும் வெளுத்து விட்டது ..ஆள் மாறாட்ட கட்சிகளில் இவர்கள் செய்யும் காமெடி பெரிய குழப்பம் ..கிரேசி மோகன் வசனம் எழுதாது ஏமாற்றம் ...
         படத்தின் சில ஆறுதல்கள் சங்கீதாவின் பையனாக வரும் சிறுவன்  மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை.. குறிப்பாக பாடல்கள் ....
        மாதவன் அம்மா பேசுவது வலிய திணிக்கப்பட்ட பிராமண வசனங்கள் ...ஒரு நடிகை தன் மருமகளாக வருவதை விரும்பாத தாய் பிராமணராக தான் இருக்க வேண்டுமா ? ??..
"வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை " , " நேர்மையானவனுக்கு திமிர் தான் ஆயுதம் " போன்ற வசங்கள் அருமை ...கமல் அதே நேர்மையை இந்த படத்திலும் காட்டி இருக்கலாம் ..ஏனெனில் ஒரு காட்சியில் கமல் தனக்கும் வழி பிறக்கும் எனும் போது  சர்ச் மணி ஒலிக்கிறது ...காவி உடை தரித்த கள்ளகாதலன் என்று கமல் மாதவனிடம் காவியையும் , கள்ளகாதலையும் இணைத்து பேசுவது போல  காட்சி வருகிறது ...கடவுளே இல்லை என்று பகுத்தறிவு வாதம் பேசும் கமலிடம்  ஏன் இந்த முரண்பாடு ?...
கள்ள காதலுடன் சம்பத்தப்பட்டவரும் ஒரு நடிகை தான் என்பதை ஏனோ மறந்து விட்டார் ....செலக்டிவ் அம்னீசியா போலும் ....
            கமல் அவர்களே உங்கள் கருத்துக்களை திணிப்பதற்கும் , மக்களை குழப்புவதற்கும் , பதவியில் இருப்பவர்களை குஷி படுத்துவதற்கும் தான் டிவி பேட்டி இருக்கிறதே .. அதை விட்டு விட்டு ஏன் காசு கொடுத்து படத்தை பார்க்க வரும் ரசிகர்களை கொல்கிறீர்கள்....
         திரைப்பட விமர்சனங்களில் பொதுவாக தனிப்பட்ட எவரையும் நான் விமர்சிப்பதில்லை ...இருந்தும் இந்த படத்தை விமர்சிப்பதற்கு பெரிதாக எதுவும் இல்லை என்பதாலும் , சமீப காலமாகவே உங்கள் படங்களில் கருத்து திணிப்பு அதிகமாக இருப்பதே இந்த தனிப்பட்ட விமர்சனத்திற்கு காரணம்.... 
       மொத்தத்தில் வலுவில்லாத கதை , திரைக்கதையாலும் வலுக்கட்டாய வசன திணிப்புகளாலும் மண்ணை கவ்வியது - " மன் மதன் அம்பு "

 

18 December 2010

ஈசன் திரைவிமர்சனம்

                        கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு பிறகு இயக்குனர் சசிகுமார் அவர்களின் இயக்கத்தில்
 வந்திருக்கும் இரண்டாவது படம் ..முதல் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகர பின்னணியில்
 எடுத்திருக்கிறார் ..முதல் பட கூட்டணி இதிலும் தொடர்கிறது ...
                அரசியலில் பெரும் புள்ளியாக இருக்கும் அமைச்சர் தெய்வநாயகமாக அழகப்பன் , அவரின் ஒரே பையன் செழியனாக வைபவ், நேர்மையான துணை ஆணையர் (ACP ) சங்கையாவாக சமுத்திரகனி   நடித்திருக்கிறார்கள் ..

                     பணக்கார இளைஞர்,இளைஞிகள் இடையே உள்ள போதைபழக்கம் , இரவு நேர விடுதி (பப்) கலாச்சாரம் ,  சட்ட திட்டங்களை மதிக்காத ஆணவம் , அரசியல் பலம் , இதற்கு மத்தியில் நேர்மையான காவல் துறை அதிகாரியின் தைரியம் என்று இதை வைத்து  அடுத்தடுத்து பின்னப்பட்ட
சுவாரஸ்யமான காட்சிகள் முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றன ..திடீரென காணாமல் போகிறார் வைபவ் ..இரண்டாவது பாதியில் அவரை தேடி விசாரணை மேற்கொள்கிறார் சமுத்திரக்கனி ...முடிவில் கொலையாளியை கண்டு பிடிப்பதோடு அவனை அழகப்பனிடம் இருந்தும் காப்பாற்றுகிறார் ....வைபவ் ஏன் கடத்தப்பட்டார் ? அவர் நண்பன் வினோத் ஏன் கொல்லப்பட்டான் ? இதனை விளக்க சற்று நீண்ட ப்ளாஷ்பாக்....    இதற்கு காரணம் பழி  வாங்கல் எனும்போது ஏமாற்றம் ... நிறைய ரத்த சிதறல்களோடு முடிகிறது கிளைமாக்ஸ்
                       .நண்பர்களுடன் இரவு நேர விடுதிகளில் கூத்தடிக்கும் வைபவ்      ஒரு பெண்ணின் கொலைக்கு காரணம் ஆகி விடும்    தன் நண்பர்களை ACP யின்  காவலில் இருந்து     தன்   அப்பாவின் உதவியோடு வெளியே கொண்டு வருகிறார் ....
             நண்பர்களுடன் ஊரை  சுற்றுவதோடு தனக்கு பிடித்த பெண்ணையும் காதலிக்கிறார் ...இதை தவிர இவருக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை ...இரவு நேர விடுதியில் ஒரு பெண்ணை முதல் முறையாக பார்த்து விட்டு அவளை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று நண்பரிடம் சொல்லும் போது சிரிப்பு வருகிறது ......
                   நேர்மையான காவல் துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி கட்சித பொருத்தம்... விறைப்புடனே இருக்கும் இவர் கொஞ்சம் உடற்கட்டையும் ஏற்றி இருந்தால் கன கச்சிதம் ஆகி  இருக்கும்..  அமைச்சர் வீட்டிற்கே  சென்று அவர் மகனை மிரட்டும் இடம் அற்புதம் .. கமிசனர் இவரிடம் அரசியல்வாதிகளுக்கு பணிந்து போக சொல்லி அறிவுரை வழங்கும் காட்சி யதார்த்தம் ... கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் இவர் நடிப்பு அருமை ...
                            
                  தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல அறிமுகம் அரசியல் வில்லன் அழகப்பன்.... .கண்களில் .கருப்பு கண்ணாடி  ,வெள்ளை வேட்டி சட்டை , வட்டார பேச்சு என அமைச்சர் தெய்வ நாயகமாகவே கண் முன் நிற்கிறார் ...இட பிரச்சனைக்காக ஒரு பெண்ணையும் , அவள் குழந்தையையும் கொலை செய்து விட்டு காவல் துறையிடம்  கள்ள காதல் என்று சொல்லி வழக்கை முடித்து விடுங்கள் என்று சொல்லும் இடம் குரூரம் ...
                  கோடிஸ்வர பெண்ணாக வரும் அபர்ணா வைபவை காதலிப்பதோடு நிறுத்தி கொள்கிறார் ...இவர் இன்னும் அழகாக இருந்திருந்தால் பார்த்தவுடன் காதலிக்கும் வைபவின் செயலிற்கு நியாயம் கிடைத்திருக்கும் ... நமோ நாராயனாவிற்கு நல்ல வாய்ப்பு  நன்றாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்  ..இவர் பிரமாதம் சொல்லும் இடம் உண்மையிலேயே பிரமாதம் .... ஏசி வண்டிக்குள்ளேயே     ஏசி இல்லையா  என்று நக்கல் செய்யும் போது கைதட்டல் ....
                     சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் அபிநயா, இவர் தம்பியாக வரும் ஈசன் நல்ல தேர்வு....தோற்றத்தில் அப்பாவியாக இருந்தாலும் கண்களில் கொலை வெறி ...என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் ஒரு பள்ளி சிறுவன் ஈ மெயில் ஹாக் செய்வதாக காட்டுவது கொஞ்சம்  ஓவர்...அபிநயாவின் தோழியாக வரும் பெண் , விபச்சாரம் செய்யும் அக்கா, அதிகாரி நீதிராஜன் , பெண் ப்ரோக்கர் என அனைவரும் கவனிக்க வைக்கிறார்கள் ....
                 பின்னணி இசை பிரமாதம் , படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் அதில்  மூன்று மட்டுமே முனுமுனுக்க  வைக்கின்றன...குறிப்பாக கடற்கரை கானா பாடலில் அக்காவின் ஆட்டம் அருமை ...கதிரின் ஒளிப்பதிவிற்கு ஒரு கைகுலுக்கல் ....
                         சுப்ரமணியபுரம் வெற்றிக்கு பிறகு அதன் பாணியில் பலர் படம் எடுத்து கொண்டிருக்க  அதன் பாதிப்பே இல்லாமல் படம் எடுத்திருக்கும் இயக்குனர் சசிகுமாருக்கு பாராட்டுக்கள் ... வசனங்களாக மட்டும் இல்லாமல் இல்லாமல்  காட்சிகளில்  நேர்த்தி , பாத்திர தேர்வு ,   முதல் பாதியில் இருந்து சற்றும் எதிபாராமல்  திரைகதையில்  திருப்பம் என ஒவ்வொன்றிலும் இயக்குனரின் டச் ...
                        இவை எல்லாம் இருந்தும் பழிவாங்கும் கதை  அதிலும்  ஒரு பெண்ணிற்காக பழி வாங்குகிறான் என்னும் போது பெரிய சறுக்கல் ...பழிவாங்குவதற்கு என்ன தான் நியாயம் கற்பித்தாலும் இதை எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் செய்கிறான் என்று தெரியும் போது நெருடல் ..தொடர்ந்து வரும் பப் காட்சிகள் போர் ..விசாரணைக்காக தோழியின் வீட்டிற்கு செலும் சமுத்திரக்கனியை யார் என்று அவள் கணவன் விசாரிப்பதும் பின்னர் போலீஸ் என்று தெரிந்தவுடன் பம்முவதும் , வேலைக்கு செல்லும் அந்த பெண் வீட்டில் அடக்கமாக இருந்து விட்டு வேலைக்கு சென்றவுடன் முடியை விரித்து விட்டு பரவலாக பழகுவதாக காட்டுவதும் , தானுண்டு தன்  வேலையுண்டு என்று இருக்கும் நடுத்தர வர்க்கத்தையும் , பொருளாதார நெருக்கடிக்காகவும் , முன்னேற்றத்திற்காகவும் வேலைக்கு செல்லும் பெண்களையும் இழிவு படுத்துவது போல உள்ளது .....
                        காவல்துறை சம்பத்தப்பட்ட காட்சிகளை நேர்மையாக எடுத்திருக்கும் இயக்குனர் செல்வாக்குள்ள ஒரு குடும்பம் கிராமத்தில்  இருந்து சென்னைக்கு வருவதற்கு பேஷன் டெக்னாலஜி படிப்பை காரணமாக காட்டுவது நம்பும் படியாக இல்லை ...சம்பத்தப்பட்ட காட்சிகளை தெளிவாக சேர்த்திருக்கலாம் ...
                 சுப்ரமணியபுரம் படம் முடிந்தவுடன் ஏற்பட்ட பிரமிப்பு நிச்சயம் இல்லை ...இந்த படத்தை அப்படத்தோடு ஒப்பிடுவது நியாயம் இல்லை....இரண்டும் வெவ்வேறு களம் ...சுப்ரமணியபுரம் படத்தை பார்த்து விட்டு எல்லோருக்கும் போன் செய்து போய் பார்க்க சொன்னதும், படம் நிச்சயம் பெரிதாக ஓடும் என்று சான்றிதழ் கொடுத்ததும் நினைவிற்கு வருகிறது ....
       அந்த படத்தை நினைவில் வைத்து கொள்ளாமல் இப்படத்தை புதிதாக பார்த்தால் நன்றாக இருக்கும் ......
 ,
Related Posts Plugin for WordPress, Blogger...