27 December 2020

சிறந்த தமிழ் படங்கள் 2020 | TOP 10 TAMIL MOVIES 2020




2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் படம் தர்பாருடன் அமர்க்களமாக ஆரமபித்தாலும்  கொரொனா எல்லா துறைகளையும் விட கூடுதலாகவே சினிமாவை பாதித்திருக்கிறது குறிப்பாக  தியேட்டர் ரிலீஸ் இல்லாததால் நிறைய பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஆயினும் ஒடிடி ஓரளவிற்கு ப்ரொடியூசர்களின் பாதிப்பை குறைத்திருக்கிறது என்றே சொல்லலாம் . 

இநஂத வருடம் தமிழ் சினிமா விற்கு சிறந்ததாக இல்லா விட்டாலும் ஓ மை கடவுளே , கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்கள் காசையும் , கவனத்தையும் பெறத் தவறவில்லை . 2020 ன் சிறந்த பத்து படங்களும் சில சிறந்த பங்களிப்பாளரகளின் பட்டியலும் இதோ உங்களுக்காக : 

சிறந்த 10 படங்கள்: 

1. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் .

2 . ஓ மை கடவுளே. 

3 . சைக்கோ .

4 . பாரம் .

5 . சூரரை போற்று. 

6 . அந்தகாரம். 

7 . க.பெ.ரணசிங்கம். 

8 . லாக் அப்  

9 . வானம் கொட்டட்டும் .

10. தர்பார் . 

சிறந்த நடிகர்: அர்ஜுன்தாஸ்.

( அந்தகாரம்)

சிறந்த நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ் 

( க.பெ.ரணசிங்கம்) 

சிறந்த குணச்சித்திர நடிகர் : 

விஜய் சேதுபதி ( ஓ மை கடவுளே)

சிறந்த குணச்சித்திர நடிகை :

நித்யா மேனன் ( சைக்கோ )

சிறந்த புதுமுகம் : 

ராஜ்குமார் ( சைக்கோ )

சிறந்த இயக்குனர் : 

மிஸ்கின் ( சைக்கோ ) 

சிறந்த இசையமைப்பாளர்: 

இளையராஜா ( சைக்கோ ) .

சிறந்த படம் : 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். 

சிறந்த பாடல் : 

உன்ன நினைச்சு நினைச்சு

 ( சைக்கோ).

சிறந்த பாடகர் : 

சித் ஸ்ரீராம் ( உன்ன நினைச்சு).

இந்த தொகுப்பை வீடியோவில் காண கீழே சொடுக்கவும் . 

https://youtu.be/whZS7TscEL8

அன்புடன் , 

வாங்க ப்ளாகலாம் அனந்து ...



 

16 November 2020

மூக்குத்தி அம்மன் | இந்துக்கள் மட்டும் இளிச்சவாயர்களா?!

ஆர்.ஜே.பாலாஜி தயாரித்து நடித்து என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியிருக்கும் படம் மூக்குத்தி அம்மன். இவர் முந்தைய எல்.கே.ஜி படத்தில் அரசியலை நையாண்டி செய்து வெற்றியடைந்ததைப் போல இதில் போலி சாமியார்களை கிண்டலடித்து வெற்றியடைந்தாரா? மூக்குத்தி அம்மன் ஜொலித்தாளா ?வாங்க பார்க்கலாம் ....

அப்பா ஓடிப்போனதால் மூன்று தங்கைகளையும் கரையேற்றும் பொறுப்பில் திணறிக் கொண்டிருக்காறார் பாலாஜி.  ஒரு நாள் குலதெய்வம் கோவிலில் மனமுறுகி வேண்ட நேரில் வரும் அம்மன் ( நயன்தாரா) இவரின் குறையை தீர்க்காமல் அவரின் மூலமாக ஊரையே வளைத்துப் போட நினைக்கும் போலி சாமியாரின் முகத்திரையை கிழிக்கிறார் ...

படத்திலேயே சொல்வது போல உண்மையிலேயே அழகான அம்மனாக நயன்தாரா படத்திற்கு பெரிய பலம் . ஆர்ஜே வாக இருந்து இயக்குனராக உயர்ந்திருக்கும் பாலாஜி திறமைசாலி ஆனால் ரேடியோ ஷோ போல படம் முழுவதுமே இவரே பேசிக் கொண்டிருப்பது போர் . ஊர்வசி ஓவர் ஆக்டிங்க் செய்து மேலும் வெறுப்பேற்றுகிறார் . மௌலி படத்தில் இருக்கிறார் அவ்வளவே!..

படத்தில் ஆங்காங்கே வசனங்கள் கிச்சு கிச்சு மூட்டுகின்றன . இடைவேளை வரை தேறும் படம் வில்லன் வந்த பிறகு படு மொக்கையாகி விடுகிறது . அதிலும் குறிப்பாக உலகமே வியக்கும் சாமியார் கதாபாத்திரத்தை படு கேவலமாகவா காட்டுவது . கவுண்டரிடம் அடி வாங்கும் செந்தில் போல ஆள் படு வீக் ...

இந்துக்கள் என்றுமே விமர்சனங்களை சகித்துக் கொள்பவர்கள் எனபதற்காக அம்மனை " உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் " என்றெல்லாம் பாடி அழைப்பது சுத்த கேப்மாரித்தனம் . மனோபாலா வை வைத்து எடுத்த பவர் பாஸ்டர் கிண்டல் சீன்களை மட்டும் நீக்கியிருக்கிறார்கள் . இந்துக்கள் மட்டும் இளிச்சவாயர்களோ?! . நடுநிலையில்லாத படத்தில் நாகர்கோவிலை மட்டும் அழகாக காட்டியிருக்கிறார்கள் . மொத்தத்தில் மொக்கை காமெடிகளின் தொகுப்பாக இருக்கும் மூக்குத்தி அம்மன் ஜொலிக்கவில்லை ....

ரேட்டிங்க் :  2.25 * 

ஸ்கோர் கார்ட் : 38  

வாங்க ப்ளாகலாம் அனந்து ...

இப்படத்தின் வீடியோ விமர்சனம் காண கீழே சொடுக்கவும் ...

https://youtu.be/iYAs7PWZyo4

15 November 2020

சூரரை போற்று | போற்றலாமா ? தூற்றலாமா ?!! I SOORARAI POTRU ...

சூர்யா தயாரிப்பு, நடிப்பில் சுதா கொங்குரா இறுதிசுற்று வெற்றிக்கு பிறகு நான்கு வருட இடைவெளியில் இயக்கியிருக்கும் படம் சூரரை போற்று . சாதாரணமான ஆட்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமென்கிற கனவை நிஜத்தில் நிஜமாக்கிய கேப்டன் கோபிநாத் எழுதிய அவரின் சுயசரிதை Simply fly புனைவை சினிமாவுக்காக மட்டுமில்லாமல் தனக்ககேற்றபடியும் சூர்யா - சுதா மாற்றியிருப்பதே சூரரை போற்று...

பெரியாரிய , கம்யூனிஸ சிந்தனைகளோடு வரும் சூர்யா பேசியே கொல்லப்போகிறார் என பயந்தால் நல்ல வேளை அடக்கி வாசித்திருப்பது ஆறுதல் . அதுவும் அபபாவை பார்க்கப் போக டிக்கட் காசில்லாமல் ஏர்போர்ட்டில் கெஞ்சும் இடம் அருமை.  பாரக்க ஊர்வசியின் தங்கை போலிருந்தாலும் நடிப்பிலும் , பாத்திரப் படைப்பிலும் அபர்ணா அசத்துகிறார் . பல கோடி ரூபாய் தேவைப்படும் இடத்தில் பதினோராயிரம் கொடுத்து விட்டு போதாதா என அப்பாவியாய் கேட்கும் கருணாஸ் கவனிக்க வைக்கிறார் ...

முகம் சாந்தமாய் இருந்தாலும் சகுனித்தனமான பார்வையில் வில்லத்தனத்தை காட்டத் தவறவில்லை பரேஷ் ராவத் . ஜி.வி.பிரகாஸ் குமாரின் இசையில் பின்ணணியும் , பாடல்களும் அருமை ...

சாதாரண மனிதன் பல போராட்டங்களை தாண்டி ஜெயிக்கும் தெரிந்த கதை தானென்றாலும் அதை திரைக்கதையில் சொன்ன விதத்தால் ஜெயிக்கிறார் சுதா . உண்மைக்கதையை அப்படியே எடுக்க முடியாது தான் அதற்காக அதை சொன்ன விதத்தில் கொஞ்சமாவது உண்மை வேண்டாமா ? சூர்யா அப்துல் கலாமை சந்திப்பது , ஊர் மக்கள் நிலத்தை அடமானம் வைத்து அவருக்கு பணம் அனுப்புவது , ஃப்ளைட்டை தரையிரங்க விடாமல் வில்லன் தடுப்பது என படத்தில் நிறைய பூ சுத்தல் ...

நிஜத்தில் இப்புத்தகத்தை எழுதியவர் ஐயங்கார் . ஆனால் அவர் கதாபாத்திரத்தை பிற்படுத்தப்பட்ட பெரியாரியவாதியாக காட்டுவதில் சுதா கொங்கரா , ஜுமித் மாங்கா என சாதியை பெயருடன் தாங்கியவர்களுக்கு என்ன அவசியமோ இல்லை அழுத்தமோ தெரியவில்லை . அமேசான் ப்ரைமுக்கும் , தொடர்  தோல்விகளால் தவித்த சூர்யாவுக்கும் இந்த சூரரை போற்று - சூர்யாவை தேற்று ...

ரேட்டிங்க்   : 3.25

ஸ்கோர் கார்ட்: 43

Pls Click below link to watch Video Review ...

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/1bFWGqPzCvI" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>






 



4 October 2020

அவன் - அவள்- நிலா ( 20 ) ...



கார்த்திக்கால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை . நேற்று வரை அவனிடம் உள்ளூர் சினிமாவிலிருந்து உலக சினிமா வரை பேசிக்கொண்டிருந்தவர் , எதிர்காலத்து அச்சம் , இறந்த காலத்து கசப்பு என எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டவர் , பணத்தாலும் , மனத்தாலும் நீயே ஆறுதல் என்று அங்கலாய்த்தவர் இன்று அவனிடம் சொல்லாமல் அல்லது சொல்ல வேண்டுமென்று கூட நினைக்காமல் தயாரிப்பாளரை பார்க்க தாவி ஓடியிருக்கிறார் . மனிதன் எவ்வளவு பெரிய சுயநலப்பிசாசு . அவனுக்கு துக்கத்தை பகிர்ந்து கொள்ளத்தான் ஆள் அதிகம் தேவைப்படுகிறது ...

அவரும் ராமசுப்பு போல இருப்பாரென அவன் எதிர்பார்க்கவில்லை . ராமசுப்பு அவனால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டவன் . பேசிய சிறிது நேரத்துக்குள்ளேயே அனைவரையும் கவர்ந்து விடும் வசீகரம் அவனிடம் இருந்தது . கேட்பவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் பெரும்பாலும் பேசுவான் . அவன் முகஸ்துதி செய்வதை மற்றவர்கள் அறியா வண்ணம் செய்வது அவன் தனிச்சிறப்பு . ஒருவரால் ஆவதற்கு காரியம் ஒன்றுமில்லை என தெரிந்த  பிறகு அவர்களுடன் பழகி அவன் நேரத்தை  வீணடிப்பதில்லை.
தன்னை விட மேம்பட்டவர்களிடம் சிறு வயதிலிருந்தே அவனுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது . அந்த இடத்தை அடைய வேண்டுமென்பதில் மட்டுமே முனைப்பாக இருப்பான் . அதற்கு இடையூறாக காதல் , கல்யாணம் இருக்குமென நினைத்ததால் அந்த பக்கமே அவன் இன்று வரை போகவில்லை ...

ஜானி படத்தில் வரும் தீபா கதாபாத்திரம் போல ஒன்றை விட மற்றது சிறந்ததென்றால் அதற்கு தாவும் மனநிலையில் தான் அவனிருந்தான் . அதனால் பாதிக்கப்படும் நட்புகளை அவன் பெரிதுபடுத்துவதில்லை . சினிமா என்கிற புள்ளி இணைத்ததால் தான் சென்னைக்கு வந்த புதிதில் வேலை பார்த்த ஆட் கம்பெனியில் கார்த்திக் அவனையும் சேர்த்து விட்டிருந்தான் .
சேர்ந்த சில நாட்களிலேயே அனைவருக்கும் அவனை பிடித்து விட்டது . இரவு எத்தனை மணி நேரமானாலும் கார்த்திக் வரும் வரை காத்திருந்து பேசி விட்டு செல்பவன் சிறிது காலம் கடந்தவுடன் விளம்பர ஏஜென்ஸியின்  ரெகுலர் கஸ்டமர் ரகுவுடன் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தான் . கார்த்திக்கை விட பணத்தாலும் , பழக்கத்தாலும் சென்னையில் ரகு பெரியவனாக இருந்ததே அதற்கு முக்கிய காரணம் ...

ஒரே இடத்தில் தேங்காமல் ஆறு போல ஓடிக்கொண்டேயிருப்பதில் தவறில்லை தான் ஆனால் சுழலில் சிக்கிக் கொள்ளாமலிருக்க வேண்டும் . என்றுமே யாருடைய வளர்ச்சியையும் கண்டு கார்த்திக் கவலைப்பட்டதில்லை ஆனாலும் அந்த வளர்ச்சியில் கொஞ்சமாவது எதிக்ஸ் இருக்க வேண்டுமென்று நினைத்தான் . அதிலும் குறிப்பாக செய்நன்றி கொன்றவர்களை அவன் ஒரு போதும் மதிப்பதில்லை . சொப்பணசுந்தரியை இன்று யார் வைத்திருக்கிறார்கள்  என்பது போல நட்புகளை மாற்றி மாற்றி வளர்ந்து கொண்டே போன ராமசுப்பு இன்று ஏதோ பெரிய ப்ரொட்யூசருடன் ஒட்டிக்கொண்டிருப்பதாக கேள்வி ...

ஆனால் மகாலிங்கம் கதை வேறு என்பது போலவே அவனுக்கு பட்டது. அவருக்கு பெரிதாக சூட்சுமமெல்லாம் தெரியாது . அவர் அவனை தன்னை விட திறமைசாலி என்றே நினைத்திருந்தார் . அந்த நினைப்பே அவருக்கு ஒரு பயத்தை கொடுத்திருக்கலாம் . சினிமாத்துறையில் தூங்கும் போது கூட காலை ஆட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் இல்லையெனில் பிணமென நினைத்து கிடாசி விடுவார்கள் . அதீத எச்சரிக்கை உணர்வே ஒரு இனம் புரியாத பயத்தை கொடுக்கிறது . பயம் நல்லவன் யார் கெட்டவன் யாரென நம்மை யோசிக்க விடுவதில்லை . சுற்றியிருப்பவர்களை சந்தேகக் கணணோடு பார்க்க வைக்கிறது . சுந்தரி ஆண் நண்பர்களுடன் நிறைய பேசினாலும் அவன் சண்டையின் போது கிண்டல் செய்திருக்கிறானேயொழிய சந்தேகப்பட்டதில்லை . ஏனெனில் என்றுமே அவள் அவனை விட்டு விடுவாளோ என்கிற பயம் அவனுக்கில்லை . ஆனால் நாம் போடும் அதே கணக்கையே காலமும் போடுவதில்லை ...

இரவு பத்து மணிக்கு மேல் மகாலிங்கம் வந்தார் . அவர் போன காரியம் என்ன ஆனதென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கிருந்தது ஆனால் அவரே சொல்வது தான் முறையென நினைத்தான் அதுவும் அவனிடம் சொல்லிக் கொள்ளாமல் தான் அவர் சென்றிருக்கிறார் . அவன் மொட்டை மாடிக்கு படுக்க போய் விட்டான் . அவர் குளித்து விட்டு மேலே வந்தார்.  சிறிது நேர மௌனத்திற்கு பிறகு
 " என்ன தம்பி தூங்கியாச்சா ?" என்று அவரே ஆரம்பித்தார் . " நம்ம இவ்வளவு சீக்கிரம் எப்பண்ணே தூங்கிருக்கோம் !"  என்று பதில் சொல்லிக்கொண்டே அவர் பக்கம் திரும்பினான் கார்த்திக்...

தெரு விளக்கு வெளிச்சத்தில் அவர் முகம் பிரகாசமாக தெரிந்தது ஆனால் அவர் முகத்தில் அந்த பிரகாசம் இல்லை . " திரும்பவும் க்ளைமாக்ஸ மாத்தனுமாம் கொஞ்சம் பழசா இருக்காம் " அவர் அவனிடம் இதை சொல்லி விட்டு சட்டென முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் . அவனுக்கு அதற்கான அர்த்தம் புரிந்தது.  ஏற்கனவே க்ளைமாக்ஸில் அவனுக்கு முழு உடன்பாடு இல்லை ஆனால் அவர் தான் பிடித்த முயலுக்கு மூணு கால் போல பிடிவாதமாக இருந்தார் . அவனும் ஒரு லெவலுக்கு மேல் அதில் தலையிடுவது சரிப்படாது என்று விட்டு விட்டான் . உண்மையில் அவர் சொன்ன கதை அவனுக்கு பிடித்திருந்தது . அதில் சில சமரசங்கள் செய்து கொண்டால் வேறு லெவலில் இருக்குமென்பது அவன் கணிப்பு ...

என்ன தான் கதையை மாற்றி மாற்றி யோசித்து எழுதினாலும் கடைசியில் அதன் வெற்றி தோல்வி மக்கள் கைகளில் இருக்கிறது . எவ்வளவு தான் உழைப்பை கொட்டினாலும் அதிர்ஷ்டமும் கை கொடுக்க வேண்டும் . அதுவும் சினிமா உலகத்தில் அதிர்ஷ்டத்தின் தேவை அதிகமாகவே இருந்தது . காலையில் அவர் சொன்னாமல் போனதற்கு அவர் மேல் கோபத்தில் இருந்தான் . இரவோ அவர் நிலையை அறிந்ததும் அவருக்காக யோசிக்கத் தொடங்கி விட்டான் . அது தான் அவன் . என்றுமே அவன் யார் மேலும் வன்மமாக இருந்ததேயில்லை அந்த நேரத்தில் கோபத்தை அடக்க முடியாமல் கத்தியிருக்கிறான் ஆனால் சிலர் போல வெளியில் சிரித்து உள்ளே பகையை வளர்த்ததில்லை . அதனால் தான் அவனால் அவருடன் சேர்ந்து கதைக்கு இன்னும் பெட்டராக என்ன க்ளைமேக்ஸ் வைக்கலாம் என்று யோசிக்க முடிகிறது . அவன் அவருக்காக யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் காலம் அவனுக்கான எதிர்காலத்தை வேறு மாதிரி எழுத ஆயத்தமாகிக் கொண்டிருந்தது ...

தொடரும் ...


23 August 2020

லாக்அப் - LOCK UP - படம் எப்படி? ...

                                                                   

வெங்கட் பிரபு , வைபவ் காம்போவில் அவர்களது நண்பர் நிதின் சத்யா தயாரித்து Zee 5 ல் நேரடியாக ரிலீஸ் ஆகியிருக்கும் படம் லாக்அப் . புதுமுக இயக்குனர் சார்லஸ் இயக்கியிருக்கிறார் ...

வெங்கட் பிரபவிற்கு ஏற்ற டெய்லர் மேட் கேரக்டர் . கட்சிதமாக நடித்திருக்கிறார் . அமைதியாகவே வந்து போனாலும் தேவைப்படும் போது வில்லத்தனம் காட்டத்தவறவில்லை . வைபவ் தான் ஹீரோ என காட்டவோ என்னவோ ஒரு ஃபைட் அவர்க்கு எக்ஸட்ரா பார்ஸல் . வழக்கை விசாரிக்கும் ஈஸ்வரி ராவ் ரவுடியை அடிப்பதும் , வெங்கட் கலாய்ப்பதும் ஹைலைட் ...

இன்ஸ்பெக்டரை கொலை செய்தவனை கண்டுபிடித்து ப்ரமோசன் வாங்கலாமென நினைக்கும் வெங்கட்பிரபுக்கு அவன் கொலைகாரனல்ல என முட்டுக்கட்டை போடும் ஈஸ்வரி ராவிடமிருந்து ஆரம்பிக்கும் படம் இடைவேளை வரை விறுவிறுப்பாகவே போகிறது . வெங்கட்பிரபு _ வைபவ் இடையே நடக்கும் தில்லுமுல்லு திரைக்கதைக்கு உதவுகிறது ...

திரில்லர் படத்தில் படம் எதை நோக்கி போகுமென ஊகிக்க முடிவது சறுக்கல் . சுவாரசியத்துக்காக லாஜிக்கை கண்டுகொள்ளவில்லை . இரண்டு மணி நேரத்துக்குள் விறு விறு திரில்லராக வந்திருக்க வேண்டிய லாக்அப் சில தடுமாற்றங்களால் ஸ்டரக் அப் ஆகி நிற்கிறது ...

ரேட்டிங்க்: 2.75* / 5 * 

ஸ்கோர் கார்ட்: 41 .

இந்த விமர்சனத்தினை வீடியோவில் காண கீழே சொடுக்கவும் ...


<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/SvOu7m0MYto" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>



26 July 2020

DIL BACHERA - தில் பச்சேரா - HEART TOUCHING ...


கை போ சே ( Kai po che ) வில் அறிமுகமாகி தோணி மூலம் மிக பிரபலமாகி
சிச்சோர் ( CHICHCHORE ) வெற்றியின் மூலம் பாலிவுட்டின் கவனிக்கத்தக்க முன் வரிசை ஹீரோக்களுல் ஒருவரானவர் சுஷாந்த் சிங்க் ராஜ்புட் . ஆனால் துரதிருஷ்டவசமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார் . இவரது கடைசி படம் தில் பச்சேரா ( DIL BACHERA ) வை டிஷ்னீ + ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிட்டிருக்கிறார்கள் . அபோவ் ஆவெரேஜ் காதல் படம் ஹீரோவின் தற்கொலையால் அதிக முக்கியத்துவம் அடைந்திருக்கிறது ...

இரண்டு கேன்சர் நோயாளிகளின் காதல் கதையே தில் பச்சேரா . சாவை நினைத்து கவலைப்படும் கிஸீ பாசு ( சஞ்சனா சங்கி ) வாழ்வில் அதை துளியும் சட்டை செய்யாத இளைஞன் ராஜ்குமார் இமானுவேல் ஜுனியர் 
( சுஷாந்த் சிங்க் ராஜ்புட் ) நுழைந்த  பிறகு என்ன நடக்கிறது என்பதே படம் . 
ஹீரோயின் பாய்ண்ட் ஆஃப் வியூவில் கதையை சொல்வதால் என்ன நடந்திருக்கும் என்பதை முன்பே யூகிக்க முடிகிறது ...

சுஷாந்த் மணிரத்னம் பட ஹீரோ போல துறுதுறு வென இருக்கிறார். கேன்சரால் ஒரு காலை இழந்தாலும் செயற்கை காலுடன் இவர் ஆட்டம் பாட்டம் என வலம் வருவது லேசாக இடித்தாலும் தனது துள்ளலான நடிப்பால் அதை மறக்கடிக்கிறார் . இந்த படத்தை பார்க்க அவர் இல்லாதது காலக்கொடுமை . சஞ்சனா ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் ஹீரோயினாக இதுவே முதல் படம் . ஹீரோவிற்கோ இது கடைசி படம் . 
சஞ்சனா படம் நெடுக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியோடு வந்து நம்மையும் உச் கொட்ட வைக்கிறார் . ஹீரோயின் பெற்றோர்கள் இருவரும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்கள்  . அதிலும் ஹீரோயின் அம்மா அவரை விட அழகாக பெங்காலி ரசகுல்லா  போல இருக்கிறார் . கேசன்சரால் கண்ணை இழந்தாலும் நம்பிக்கை இழக்காமல் வரும் ஹீரோவின் நண்பர் கவனிக்க வைக்கிறார் ...

சைஃப் அலி கான் சின்ன ரோலில் வந்தாலும் தனக்கே உரிய பாணியில் கவர்கிறார் . அவருடைய கேரக்டர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை .  
ஆனாலும் அவர் பேசும் " LIFE itself is Incomplete " என்கிற வசனம் யோசிக்க வைக்கிறது . இந்த படம் " The Fault in our Stars " என்கிற நாவலை  எடுக்கப்பட்டிருக்கிறது , ஆனால் இதே கதையம்சம் உள்ள இதயத்தை திருடாதே என்கிற படத்தை மணிரத்னம் முப்பது வருடங்களுக்கு முன்னரே எடுத்திருப்பார் . அந்த படமும் , இசைஞானியின் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் . இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நன்றாக இருந்தாலும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை ... 

இரண்டரை மணி நேரம் படத்தை  இழுக்காமல் ஒண்ணே முக்கால் மணி நேரத்தில் முடித்தது நல்லது . ஆனாலும் டீட்டைலிங் இல்லாமல் ஒரு அவசர கதியில் முடித்ததும் , முன்னரே படம் எதை நோக்கி போகும் என்பதை யூகிக்க முடிந்ததும் சறுக்கல் . சுஷாந்த் சிங்க் அண்ட் சஞ்சனா நடிப்பு , சுஷாந்தின் நிஜ மரணம் , இதில் அவர் ரஜினியின் ரசிகராக வருவது இந்த கவன ஈர்ப்புகளுக்காக கூடுதல் ரேட்டிங் வழங்கலாம் . 

DIL BACHERA - HEART TOUCHING 

RATING : 3.5 * / 5 * 

இந்த படத்தின் விமர்சனத்தை யூ டியூபில் காண கீழே சொடுக்கவும் ...


19 July 2020

1917 - FOREVER ...




1917 - இது 2019 இல் மூன்று ஆஸ்கார் விருதுகளையும் , 10 நாமினேஷன்களையும் மற்றும் பல பாஃடா விருதுகளையும் இல் தட்டிச்சென்ற ஹாலிவுட் மூவி சோனி லிவ் ( OTT ) வில் ஜுலை 17 முதல் ஒளிபரப்பாகிறது . சாம் மெண்டெஸ் இயக்கத்தில் மெக்கே , டீன் சார்லஸ் நடிப்பில் வெளிவந்த இந்த படம் இன்னும் சில ஆஸ்கார் விருதுகளையும்  மயிரிழையில் இழந்திருக்கிறது ...

1917 இல் முதல் உலகப்போரில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது . 2 ஆம் உலகப்போரை மையமாக வைத்து ஏற்கனவே வந்திருந்த சேவிங்க் ப்ரைவேட் ரியான் , டன்கிர்க் போன்ற படங்களை போலவே தரமாக வந்திருக்கும் மற்றுமொரு படம் . பிரிட்டிஷ் - ஜெர்மன் இடையே உக்கிரமாக போர் நடந்து கொண்டிருக்கும் போது பிரிட்டிஷின் ஒரு கேம்பிலிருந்து இன்னொரு கேம்பிற்கு தகவலை சொல்லும் பொறுப்பு இரண்டு வீரர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது . தாக்குதலை நிறுத்த சொல்வதற்கான இந்த தகவல் மூலம் அந்த வீரரின் சகோதரர் உட்பட 1500 வீரர்களை சேதத்திலிருந்து காப்பாற்ற முடியும் . ஜெர்மன் படைகளின் தாக்குதல்களை தாண்டி இந்த ஆபத்தான சவாலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா என்பதை விறுவிறுப்பாக சொல்வதே 1917 .

நேரத்தை வீணடிக்காமல் முதல் சீனிலேயே கதையை தொடங்கி  விடுகிறார்கள் . சகோதரருக்காக ஒரு வீரர் உடனடியாக கிளம்ப மற்றொருவர் முதலில் தயங்குகிறார் ஆனால் கடைசியில் அவரே அந்த மிஷனை முடித்து வைப்பது சிறப்பு . போர் சம்பந்தமான படமென்பதால் குன்டுகள் சத்தத்தால் காதுகளை துளைக்கமால் , தேசப்பற்று வசனங்களால் புழிந்து எடுக்காமல் காட்சிகளின் மூலம் சொல்ல வந்ததை சிம்பிளாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் சொன்ன விதத்தில் இயக்குனரின் உலகத்தரம் தெரிகிறது . போகும் வழியெல்லாம் வீரர்கள் சந்திக்கும் சடலங்களின் வாயிலாக போரின் கொடூரத்தை உணர்த்தியது இயக்குனரின் சாமர்த்தியம் ...

இரு வீரர்களும் தடைகளை தாண்டி கடப்பதை விறுவிறுப்பாக சொல்கிறது திரைக்கதை . ஒரு வீரர் மாற்றுவரின் பதக்கத்தை பற்றி ஆர்வமாக கேட்க அவரோ அதை வைத்து சரக்கடித்து விட்டேன் என்று கூலாக சொல்லும் வசனங்கள் சீரியஸான வார் படத்தின் ஹைக்கூ . நடக்கும் வழியில் ஜெர்மன் வீரரால் நேரும் கொடுமை , பாழடைந்த வீட்டில் குழந்தையோடு இருக்கும் பெண்ணிற்கு தனது உணவை கொடுக்கும் வீரரின் பரிவு என எல்லாமுமே ஓவர் டோஸாக இல்லாமல் மனத்தில் பதியும் படி இருப்பது ஹைலைட் ...

ஒளிப்பதிவு , சவுண்ட் டிசைன் , விசுவல் எஃ பெக்ட்ஸ் இதற்காக ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்ற படம் நிச்சயம் கலை , எடிட்டிங்க் , திரைக்கதைக்காகவும் விருதுகளை அள்ளியிருக்கலாம் . ஒரு வார் ஜோனுக்குள் நாம் போய் வந்த உணர்வை கொடுப்பதும் , யாரோ சிலரின் அதிகார பசிக்காக ஏன் பல லட்சம் உயிர்கள் பலியாக வேண்டுமென்கிற கேள்வி வலுவாக எழுவதும் படத்தின் மிகப்பெரிய வெற்றி .

1917 - எக்காலத்துக்கும் பொருந்தும் ...

இந்த விமர்சனத்தைய யூ டியூபில் காண கீழே சொடுக்கவும் ...









21 June 2020

PENGUIN - பெண்குயின் - பணிப்பெண் ...



கீர்த்தி சுரேஷ் நடிப்பில் , கார்த்திக் சுப்புராஜ் வெளியிட , புதுமுக இயக்குனர் ஈஸ்வர்  கார்த்திக் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் நேரடியாக வந்திருக்கும் வந்திருக்கும் படம் பெண்குயின். ஹீரோயின் ஓரியண்டட் படமென்பதால் தமிழில் பென்குயின் என்று வைக்காமல் பெண்குயின் என வைத்திருக்கிறார்கள்...

ஆறு வருடங்கள் முன் தொலைந்து போன தனது மகனை நம்பிக்கை இழக்காமல் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் ரிதத்தின் ( கீர்த்தி சுரேஷ் ) கதையே பெண்குயின். மகனை கண்டுபிடித்த  ரிதம் மகனை கடத்தியவனை கண்டுபிடித்தாரா ? என்பதை ஒரு விதமாக சொல்லி முடிக்கிறது படம் ...

சில படங்களில் ஹீரோயினாக வந்து போயிருந்தாலும் ஒரு நடிகையாக தனது திறமையை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்திய முதல் படம் நடிகையர் திலகம் . அதன் பிறகு அவரை முழமையாக நம்பி எடுக்கப்பட்டிருக்கும் பெண்குயினில் குறை வைக்காமல் குயினாகவே கடைசி வரை படத்தை தோள்களில்  சுமக்கிறார் . ஆனால் அதுக்காக கர்ப்பிணிப்பெண் உடம்பை பார்த்துக்கொள்ளாமல் சூப்பர் வுமன் போல சாகசம் செய்வதெல்லாம் ஓவர். கீர்த்தி நடிப்பு மட்டும் போதுமென்பது போல மற்ற நடிகர்கள் யாரும் பெரிதாக சோபிக்காமல் போனது துரதிருஷ்டமே ....

கீர்த்தியின் முன்னாள் , இன்னாள் கணவன்களாக இருவர் வருகிறாரகள் . விஜயசாந்தி பட ஹீரோக்கள் கூட எவ்வளவோ தேவலாம் . முன்னவர் ஓவர் ஆக்டிங்க் செய்தால் பின்னவர் நடிப்புன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பார் போல . அதிலும் அவரை ஆடியன்ஸ் சந்தேகப்படும் படியாக வைக்கப்பட்ட சில சீன்களில் மிக்ஸர் சாப்பிட்டுக் கொணடிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ் ...

கீர்த்தி சுரேஷ் நடிப்பு ,  கொடைக்கானல் லொக்கேஷன் , அதை கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டிய  கார்த்திக் பழனி யின் ஒளிப்பதிவு, படத்தின் ட்ரைலர் , இரண்டு ப்ளாட்களை இணைத்த விதம் மற்றும் ஆரம்ப காடசிகள் இவையெல்லாமே படத்துக்கு ப்ளஸ் . சந்தோஷ் நாராயணனுக்கு சம்பள பாக்கியோ என்னவோ ?!!

தொலைந்த மகனை தேடும் கர்ப்பிணித்தாயை மையமாக வைத்து ஒரு சீரியல் கில்லர் கதையை யோசித்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் . ஆனால் அது மடடும் போதுமா ? கிட்னாப் என்றொரு ஆங்கிலப் படததில் ஆறு வயது மகனை தன் கண் முன்னால் கடத்தியவிடமிருந்து காப்பாற்றும் தாயின் கதையை அவ்வளவு விறுவிறுப்பாக எடுத்திருப்பார்கள் . இதில் அது டோட்டலி  மிஸ்ஸிங் . படம் சைலனஸ் ஆஃப் த லேம்ப் , Dr.ஹனிபல் , ஃபாரன்ஸிக் போன்ற படங்களை நினைவுபடுத்துவது சறுக்கல்...

பொதுவாக பழைய தமிழ் படங்களில்  போலீஸ் கடைசியாக வருவார்கள் ஆனால் இதில் முதலிலேயே வந்து கடைசிவரை ஒன்றுமே செய்யவில்லை .
அதிலும் க்ரைம் சீனிற்குள் போய் கீர்த்தி எவிடன்ஸை எடுப்பதை கூடவா ஒரு இன்ஸபெக்டர் தடுக்காமலிருப்பார் ? எந்த வித சடலமும் கிடைக்காமல் எப்படி கீர்த்தியின் மகன்  இறந்து விட்டதாக அவர் சொல்கிறார் ? கடைசியில் கீர்த்தியின் நாய் தான் கில்லரை கண்டுபிடிக்கிறது. போலீஸ் தரப்பில் தேட ஒரு நாயை கூட கண்ணில் காட்டவில்லை . ஒரு நாய்க்கு தான் பிஸ்கட் போட பட்ஜெட் இருந்ததோ ?!

கீர்த்தி சுரேஷ் - கார்த்திக் சுப்புராஜ் காம்போவில் ஒரு திரில்லர் , அட்டகாசமான ட்ரைலர் இதெல்லாம் படத்துக்கு ஒரு பெப்பை கொடுத்தன . ஆனால் அதை படம் நெடுக இயக்குனர் கொடுக்காமல் பிட்ஸ் அண்ட் பார்ஸலாக  கொடுத்ததால் குயினாக இருந்திருக்க  வேண்டிய பெண் வெறும் பணிப்பெண்ணாகிப் போனாள் ...

ரேட்டிங்க்  : 2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 39 .

இந்த படத்தின் ரிவியூவை யூ டியூபில் பார்க்க கீழே சொடுக்கவும் ...




14 June 2020

அவன் - அவள் - நிலா (19) ...



சென்னைக்கு கார்த்திக் செலவில்  வந்த அந்த முன்னாள் உதவி இயக்குனர் அர் வேலைகளை பெரும்பாலும் முடித்துக்கொண்டு அவனையும் சில கம்பெனிகளுக்கு கூட்டிக்கொண்டு போய் காட்டி கடமையை முடித்ததாக நினைத்துக்கொண்டு ஒரு வழியாக மதுரைக்கு புறப்பட்டு போனார் . கார்த்திக் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் . அவர் அறிமுகப்படுத்திய ஆட்களை சென்று பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும் , அப்பொழுது தான் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என்பது அவனுக்கு தெரிந்தது . சினிமா வெற்றி பெற்றவர்களின் பக்கம் மட்டுமே நிற்கிறது . தோல்வியடைந்தவர்களுக்கு ஆறுதலும் , அனுதாபமும் கிடைக்கிறதோ இல்லையோ கேலியும் கிண்டலும் நிறையவே கிடைக்கிறது  . தெரிந்த ஆள் மூலமாக போனதால் கொஞ்ச நேர காத்திருப்பலுக்கு பின் அவனை உள்ளே அனுமதித்தார்கள் இல்லையேல் அவர்களின்  பந்தாவுக்காக அவன் வாசலிலேயே தவமிருந்திருக்க வேண்டும்..

வயது வித்தியாசம் காரணமாக அழைத்து வந்தவரின் நண்பர்களுடன் இனி தங்க முடியாது என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது . அதிலும் இனிமேலும் தொடர்ந்து அங்கே தங்கினால் அவன் கையிருப்பு அதிகமாகவே கரைந்து விடும் அபாயமும் இருந்தது . அவர்கள் நிலைமை அவனை விட இன்னும் மோசமாகவே இருந்தது . " என்ன தம்பி தூக்கம் வரலையா ? " , கேட்டுக்கொண்டே வந்து பாயை அருகில் போட்டுக்கொண்டு அமர்ந்தவாறே சிகரட்டை பற்ற வைத்துக்கொண்டார் மகாலிங்கம் . அவரை பார்த்தவுடன் படுத்தவாறே கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தவன் அதை நிறுத்தி விட்டு அமர்ந்து கொண்டான் . அங்கிருப்பவர்களிலேயே ஓரளவு சினிமா ஞானமும் அவன் எதிர்காலம் மேல் கொஞ்சம் அக்கறை கொண்டவராகவும் அவரிருந்தார் . "  இல்லேண்ணே " என்று சொல்லிக்கொண்டே சிகரெட் பாக்கெட்டை நீட்டியவரிடம் வேண்டாமென்று மறுத்தான் . அவரும் அந்த சிகெரட்டை காலைக்கடன் கழிக்கும் போது அடித்துக்கொள்ளலாம் என்கிற நினைப்பில் சட்டைப்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு விட்டு லேசாக சிரித்தார் ...

" என்னென்ணே சிரிக்கிறீங்க ?! " கார்த்திக் கேட்டவுடன் அவனை பார்த்தவர்
" ஒண்ணுமில்லை தம்பி என் வாழ்க்கையில நடந்த ஒரு சம்பவத்தை நினைச்சு சிரிச்சேன் " . அவன் என்ன என்பது போல் பார்க்க ஒரு இழுப்பை இழுத்து புகை விட்டுக்கொண்டே பேசத்தொடங்கினார் . " நான் அப்போ சென்னைக்கு வந்து லோல்பட்டு ஒரு வழியா ஓரளவு பிரபலமான ஒருத்தர்ட்ட அசிஸ்டெண்டா சேர்ந்தேன் . டிஸ்கசன் அப்போ டைரக்டர் கேசுவலா சிகெரெட்டை நீட்ட மத்தவங்கல கவனிக்காம நான் வாங்கி அவரோட சேர்ந்து அடிக்க ஆரம்பிச்சுட்டேன் . அடுத்த நாள் வழக்கம் போல ஷூட்டிங் போயாச்சு.
என் பேர சொல்லி டைரக்டர் கூப்பிட நான் அஸோஸியேட்ட தானே கூப்பிடுவாங்க நம்மள கூப்புடுறாரேன்னு புரியாம ஓடினேன் " . நிதானமாக தம்மை இழுத்து புகையை விட்டார் . என்கிட்டே செட் ப்ராப்பர்ட்டி பத்தி கேக்க ஆரம்பிச்சார் . நான் அது வேற ஒருத்தர் தானே பாக்குறார்ன்னு சொல்ல
" ஏன் உனக்கு தெரியாதா என்ன புடுங்குற வேலை பாக்கறியா " ன்னு டக்னு கத்திட்டாரு .  தண்டத்துக்கு வந்து சேர்ந்து என் தாலிய அறுக்குறானுங்கன்னு அவர் பாட்டுக்கு கன்னாபின்னான்னு கத்த ஆரம்பிச்சுட்டாரு . அன்னிக்கு முழுக்கவே எனக்கு நிறைய அர்ச்சனை தான் . எனக்கு ஒண்ணுமே புரியாம அன்னிக்கு நைட் சீனியர் சொல்லி தான் எல்லாம் வெளங்கிச்சு " ...

" அவர் சிகரட்டை நீட்டி நான் வாங்கினது ஒரு பெரிய கொலைக்குத்தம்  இல்ல . ஆனா இங்க நிறைய பேர் தனக்கு கீழ இருக்கறவனுக்கு இடம் கொடுத்தா  நமக்கு ஆப்பு வந்துடுமோன்னு தேவையில்லாத ஒரு பயத்துல இருக்காங்க . அதனால தான் அவனுங்க ஈகோ அதிகமாகி தான் யாருன்னு காட்டறதா நினைச்சு நம்மள நோகடிக்குறாங்க " . சினிமா பிரபலங்களின் முகத்துக்குள் இன்னொரு முகம் இருக்கிறது . " ஆனா ஒரு பியூட்டி  என்னென்னா தம்பி , ரெண்டு வாரம் முன்னாடி அவரை பார்த்தேன் . நான் சிகரெட் பாக்கட்டை நீட்ட சில வருஷம் முன்னாடி அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி அவர் உடனே வாங்கிக்கிட்டாரு . கடைசியா எடுத்த ரெண்டு ஃப்ளாப் அதிலயும் ப்ரொட்யூசரும் அவர் தான் , கேக்கவா வேணும் மனுசன்  ரொம்பவே நொடிஞ்சுட்டாரு " . சடுதியில் வெற்றியும் தோல்வியும் வந்து ஆளையே தூக்கியடிக்கும் துறை சினிமா ...

எல்லா துறைகளிலும் ஏற்றமும் , இறக்கமும்  ஒன்று தான் ஆனால் சினிமாவில் அவையிரண்டுமே அந்த  துறையை போலவே அபரிமிதமாக இருக்கின்றன . மூத்த உதவி இயக்குனர்கள் சொல்வதையெல்லாம் கேட்கும் போது இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி நம்மால் கரையேற முடியுமா என்று அவனுக்கு பல தடவை தோன்றியதுண்டு ஆனாலும் ஒரு வைராக்கியம் அவனை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தது . பாம்குரோவ் ஹோட்டலை தாண்டும் போதெல்லாம் அந்த வாசலில் தான் சூப்பர் ஸ்டார் ஒரு காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் படுத்திருப்பார் என்றெல்லாம் சொல்லி கேள்விப்படும் போது அந்த வைராக்கியம் அதிகமாகும் . அவர் மட்டுமல்ல இன்று சினிமாவில் சாதித்த பலரும் அந்த வைராக்கியத்தோடு எங்கோ இருந்து சென்னைக்கு வந்தவர்கள் தான் . அக்கடலில் நீந்தி மேலே வந்தவர்களை மட்டும் கொண்டாடுகிறோம் அதில் கரையேற முடியாமல்
மூழ்கிப் போரானவர்கள் ஏராளம் ...

" தம்பி ரொம்பெல்லாம் யோசிக்காதீங்க , மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்" அவன் முகத்தை வைத்து உள்ளே ஓடும் எண்ண ஓட்டங்களை படித்துக் கொணடிருந்தார் மகாலிங்கம் . " அப்டில்லாம் இல்லேண்ணே , எவ்வளவோ பேர் ஒண்ணுமில்லாம வந்து இங்கே எவ்ளோ பெரிய ஆளாகியிருக்காங்கன்னு யோசிச்சேன் " . அதை ஆமோதிப்பது போல அவர் தலையாட்டினார் . " ஆனா நானும் பார்த்துட்டேன் தம்பி , பெரும்பாலும் சினிமாவுல சாதிக்கணும்னா ஒன்னு எல்லா வசதியும் இருக்கறவனா இருக்கணும் , இல்லேன்னா ஒன்னுமே இல்லாதவனா  இருக்கணும் , இந்த ரெண்டுங்கட்டானா அதான் மிடில் க்ளாஸா மட்டும் இருந்தா கரையேறுரது ரொம்ப கஷ்டம் " . அவர் சொன்னதில் புதைந்து கிடைக்கும் உண்மை அவனுக்கு நன்றாகவே உரைத்தது ...

இரண்டு பேரும் சில நிமிடங்கள் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் . வாசலில் பேசிக்கொண்டிருந்த பெண்களின் குரல்கள் சீரியலின் உபயத்தால் வெகுவாகவே குறைந்திருந்தன  . விரக்தி , அச்சம் , மலைப்பு எல்லாமே ஒரு சேர வந்து ஒரு வித சோர்வை உருவாக்கி விடுகிறது . " பணம் மாதிரி தான் தம்பி படிப்பும் " , அவர் சொன்னவுடனே அவன் புரியாமல் பார்த்தான் . " படிப்பு நிறைய இருக்கிறவன் இந்த பக்கம் வர மாட்டான் , சுத்தமா படிக்காதவன் எந்த வேலையையும் ஈகோ பார்க்காம செய்வான் , ஆனா ஓரளவு டிகிரி வரை படிச்சவனுக்கு ரெண்டு பக்கமும் சாய முடியாம நடுவுல நின்னாகனும் " . அவர் சொல்வது எல்லாமே  அவனோடு சேர்த்து அவருக்கும் பொருந்துவதாகவே இருந்தது . தஞ்சாவூரில் ஒரு மிடில் கிளாசில் இருந்து டிகிரி  வரை முடித்து விட்டு சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர் . இன்று நாம் யோசிக்கும் அல்லது செய்யும் விஷயத்தையும் உலகத்தில் எவனோ செய்திருக்கிறான் , செய்து கொண்டிருக்கிறான் அல்லது இனிமேல் செய்வான் என்பது ஒரு நியதி போலும்  ...

பொதுவான சில விஷயங்களை பேசிக்கொண்டிருந்தாலும் அவர் ஏதோ ஒன்றில் அவனுடைய ஆலோசனைகளையோ அல்லது கருத்துக்களையோ கேட்பதற்காக வந்தது போலவே இருந்தது  .ஏற்கனவே அவர் சொன்ன கதையை பற்றியதாக இருக்கலாமென அவன் நினைத்தான் . அவர் ஒன் லைனர் சொன்ன போதே அவனுக்கு பிடித்திருந்தது . அதை அவர் ரெடி பண்ணி முழு கதையாக ஒன்றரை மணி நேரம் நடேசன் பூங்காவில் வைத்து சொன்னது பசுமரத்தாணி போல அவன் மனதில் இருந்தது . அதிலும் குறிப்பாக கதையில் அவன் மனதுக்கு பட்ட சில குறைகளை வெளிப்படையாக சொன்னது அவருக்கு பிடித்திருந்தது ஆனால் கூட இருந்த அல்லக்கைகளுக்கு பிடிக்கவில்லை . சினிமா பத்தி உனக்கு என்ன தெரியும் என்பது போல அவனுடன் சண்டைக்கு வந்தார்கள் . அவர் சொன்ன சில சீன்களை  அவன் நன்றாக மேம்படுத்தியது அவர்களுக்கு ஏனோ பிடிக்கவில்லை . அவர் அவனுக்கு அதிக முக்கியத்துவம் தருவது அவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது . அவர் டைரக்டரானவுடன் உடனே
அஸிஸ்டன்ட்களாக சேர்ந்து விடலாமென நினைத்தவர்களுக்கு அவன் வரவு எங்கே வேலைக்கு உலை வைத்து விடுமோ என்கிற பயத்தை தந்தது ...

அவர் நிறைய தடவை மற்றவர்களுக்கு தெரியாமல் அவனுடன் மட்டும் கதையை விவாதம் செய்திருக்கிறார் . தன்னிடம் எந்தவித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் நேர்மையாக கதை விவாதத்தில் அவன் கலந்து கொண்டது அவருக்கு பிடித்திருந்தது . அவருக்கே சில சமயம் மொக்கையாக தெரியும் சீன்களை அவனை தவிர மற்றவர்கள் புகழ்ந்த போது அவருக்கு எரிச்சலே மிஞ்சியது . அதற்காகவே அவர் அவனுடன் கதை பற்றிய விவாதத்தில் ஈடுபடுவதையே அதிகம் விரும்பினார் . ஒரு இயக்குனருக்கு முதல் படம் எடுத்து முடித்து வெற்றிகரமாக ஓட வைப்பதென்பது தலைப்பிரசவத்தை விட
அதிக சிக்கலானது என்பது அவர் அனுபவம் சொல்லித்தந்த பாடம் . இன்னும் சில நாட்களில் அவர் கதை ப்ரொட்யூசரிடம் ஓகே ஆகி அட்வான்ஸ் வாங்கக்கூடிய நிலையில் இருப்பது அவனுக்கு தெரியும் . கதைக்கான ஃபைனல் டச்சுக்காக பேசப்போகிறாரோ என அவன் எதிர்பார்த்தான் ...

சிறிது நேரத்திற்கு பிறகு அவரே மவுனத்தை கலைத்தார் . " தம்பி நாம லாஸ்ட்டா பேசினது ஃபுல்லா ஓகே தானா  இல்ல ஏதாவது மாத்தணுமா ?!"
பொதுவாக இது தான் பெஸ்ட் என்று எதையுமே சொல்லவே முடியாது யோசிக்க யோசிக்க அது மாறிக்கொண்டே வரும் ஆனாலும் பல
திருத்தங்களுக்கு பிறகு ஒன்றை செலக்ட் செய்து விட்ட பின் அதை மாற்ற வேண்டாமென்பதே அவன் யோசனையாக இருந்தது . " ம் அப்போ இத அப்படியே வச்சுக்கலாம்ன்ற " என அவர் கேட்க அவன் ஆமாம் என்பது போல தலையசைத்தான் . " ஓகே தம்பி படுக்கலாம் " அவர் சொல்லிக்கொன்டே தலையணை மேல் சாய்ந்தார் . அவனும் அப்படியே கண்ணயர்ந்தான் . காலையில் எழுந்தவனுக்கு அவர் அங்கே இல்லாதது ஆச்சர்யம் அதிலும் பாய் , தலையணை , போர்வை எல்லாவற்றையும் அவர் எடுத்துக்கொண்டு போயிருந்தது கூடுதல் வியப்பை தந்தது . கீழே ரூமிலும் ஆளில்லையே என்று ரூம் மேட்டிடம் விசாரிக்க அவர் அவனை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டே
" என்னப்பா உனக்கே தெரியாதா ?! என்று அவனை நம்பாமல் பார்த்தார் .
" சீரியஸா தெரியாதுன்னே " என்ற பின் " அவர் காலையிலேயே சீக்கிரம் கிளம்பி ப்ரொட்யூசர் கிட்ட அட்வான்ஸ் வாங்க போயிருக்கார் " என்று சொல்லி முடிப்பதற்குள் அவனுக்கு தொண்டையில் ஏதோ கனத்தது ...

தொடரும் ...











30 May 2020

பொன்மகள் வந்தாள் - PONMAGAL VANDHAL - பொருள் பாதி தந்தாள் ...


சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஃபெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா - பார்த்திபன் - பாக்யராஜ் என நட்சத்திர பாட்டாளத்துடன் லாக்டவுன் பஞ்சாயத்தால் தியேட்டரில் ரிலீசாக முடியாமல் ஓடிடி ( Over The Top ) வாயிலாக அமேசான் ப்ரைமில் நேரடியாக வந்திருக்கும் படம் பொன்மகள் வந்தாள் ...

பப்ளிசிட்டிக்காக வழக்குகள் போடும் பெட்டிஷன் பெத்துராஜ் ( பாக்யராஜ் ) 15 வருடங்களுக்கு முன் ஜோதி எனும் வட நாட்டு பெண்ணை குழந்தைகளை கடத்தி கொலை செய்ததற்காகவும், இரண்டு இளைஞர்களை சுட்டுக்கொன்றதற்காகவும் போலீசார்  என்கவுண்டர் செய்த  வழக்கை தூசி தட்டி எடுத்து தன் மகள் வெண்பா பெத்துராஜிடம்
( ஜோதிகா ) வாதாட கொடுக்கிறார் . குழந்தைகளை கொலை செய்த அந்த சைக்கோ கொலைகாரி ஜோதி யார் ? அந்த கொலைகளை அவர் தான் செய்தாரா என்பதை நீதிமன்றத்தில் வாத  பிரதி வாதங்களுடன் விளக்குவதே பொன்மகள் வந்தாள் ...

ஐந்து ரூபா கொடுத்தால் ஐநூறுக்கு நடிக்கும் ஜோதிகா இதில் அடக்கி வாசித்திருப்பது ஆறுதல் ஆனால் இவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தும் படம் முழுக்க இவரே டாமினேட் செய்வது போரிங்க் . அரசு வழக்கறிஞராக வரும் பார்த்திபன் முதலில் பிரமிக்க வைத்து பின் பம்மி  விடுகிறார் . மரியாதைக்காக மல்லாடும் பெரிய மனுஷராக தியாகராஜன் கச்சிதம் . கோர்ட்டில் பார்த்திபனையே மடக்கும் சீனில் பாக்யராஜின் சீனியாரிட்டி பளிச்சிடுகிறது . நீதிபதியாக வரும் பிரதாப் போத்தன் கேரக்டரில் தெளிவு இல்லை ...

ஒரு தாயின் சபதம் , விதி , நான் சிவப்பு மனிதன் இவையெல்லாம் கோர்ட் சீன்களுக்காகவே பேசப்பட்டு ஹிட் ஆனவை . சமீப காலத்தில் வந்த மனிதன் , நேர்கொண்ட பார்வை எல்லாம் ரீ மேக்காக இருந்தாலும் மேக்கிங்கால் வெற்றியடைந்த படங்கள் . அந்த வரிசையில் ஒரு கோர்ட் டிராமாவை தனது முதல் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் . அதிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை பற்றி பேசும் கதையை கையில் எடுத்ததற்கு கூடுதல் பாராட்டுக்கள் . சரியான நட்சத்திர தேர்வு , ஒரே லொகேஷனில் வைத்தே படத்தை சிக்கனமாக முடித்தது , லக்ஷ்மி சரவணகுமாருடன் சேர்ந்து எழுதிய கூர்மையான வசனங்கள் , படத்தை  எங்கும் அனாவசியமாக அலையவிடாமல் இரண்டு மணி நேரத்தில் முடித்தது இவையெல்லாம் இயக்குனருக்கு ப்ளஸ் ...

கோர்ட் டிராமா படம் எனும் போது  நிறைய மர்ம முடிச்சுகளை போட்டு
அவிழ்ப்பதில் தான் இருக்கிறது சூட்சுமம் ஆனால் அதை விட வெறும் வசனங்களாலேயே படத்தை ட்ராமா போல கொண்டு போனது சறுக்கல் . இயக்குனர் நல்ல சீன்களுக்காக இன்னும் மெனக்கட்டிருந்தால் கலக்கியிருக்கலாம் . ஜட்ஜாக வரும் லேடியை பெத்துராஜ் கோர்ட்டில் மாமி என்று அழைக்கிறார் . ஜட்ஜிடம் இப்படியெல்லாம் தெனாவெட்டாக பேசினால் பொத்துராஜ்  என்று வாயிலேயே போட்டு உள்ளே தள்ளி விடுவார்கள் . காமெடி என்கிற பெயரில் வைக்கப்பட்ட கேவலமான சீனுக்கு இது ஒரு உதாரணம் ...

பெண்களுக்கு ஆதரவாக ஜோதிகா பேசும் போது கோர்ட்டில் நிறைய பேர் அழுகிறார்கள் , நமக்கு தான் காட்சியில் எந்த அழுத்தமும் இல்லாததால் ஒரு எழவும் வரவில்லை . பிங்க் படத்தில் இதே போன்ற சீன்களும் , வசனங்களும் பெரும் வரவேற்பை பெற்றவை . இந்த இடத்தில் தனக்கான பெரிய வாய்ப்பை இயக்குனர் நழுவ விட்டிருக்கிறார் . அதிலும் வெண்பா என்று பெயரை வைத்துக்கொண்டு ஜோதிகா தனது மோசமான உச்சரிப்பால்  தமிழை நிறையவே துன்பா செய்கிறார் . சாட்சி , ஆதாரங்கள் எதுவும் பெரிதாக  இல்லாமல் வில்லனை வெறுப்பேற்றியே உண்மையை வரவைப்பதெல்லாம் பி.எஸ்.வீரப்பா காலத்து ஃபார்முலா .  பெண்களை டார்கெட் ஆடியன்ஸாக வைத்து வந்திருக்கும் படம் ஓடிடி யில் ரிலீசாகி இருப்பது கூடுதல் பலம் . ஏனெனில் சீரியலுக்கு இது எவ்வளவோ மேல் மற்றபடி ஒரு முழு நீள படமாக பொன்மகள் வந்தாள் பொருள் பாதி தந்தாள்  ...

ரேட்டிங்க்  : 2.75 * / 5 *   

ஸ்கோர் கார்ட் : 41

இந்த விமர்சனத்தை யூ டியூபில் காண கீழே சொடுக்கவும் ...







22 March 2020

அவன் - அவள் - நிலா (18) ...


வள் சில நாட்களாகவே யாருடனும் அதிகம் கலந்து கொள்ளாமல் தனியாகவே இருந்தாள் . முன்பெல்லாம் என்ன தான் புத்தகங்களுக்குள் மூழ்கினாலும் ப்ரேக் எடுத்து ரூமை விட்டு வந்து பேசி விட்டு போவாள் . கூட்டுக்குடும்பம்  என்பதால் யாராவது எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள் . அவர்கள் சொல்லும் கதைகளை சுந்தரி ஆர்வமுடன் கேட்பாள் . அதிலும் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது அம்மாவும் அத்தையும் அவள் தூங்கி விட்டதாக நினைத்து ரகசியமாய் ஏதோ பேசிக்கொண்டிருக்க புகுந்து ஏதாவது டவுட் கேட்டு வாங்கிக் கட்டிக்கொள்வாள் . பாட்டியிடம் இருந்து நிறைய கதைகள் கேட்டு வளர்ந்தவளுக்கு கதை சொல்லிகளை பிடிக்கும் . கதை சொல்லிகளின் டெக்னிக்கல் வடிவம் தானே சினிமா . அதனால் தானோ என்னவோ நேரடியாக சினிமாவின் மேல் ஈடுபாடு இல்லாவிட்டாலும் அதில் கதை சொல்ல கிளம்பியிருக்கும் கார்த்திக்கின் மேல் அவ்வளவு ஈடுபாடு வந்துவிட்டது . அவன் பேரை நினைக்கும் போதே ஏதோ மனம் கட்டுக்கடங்காமல் எங்கெங்கோ செல்கிறது ...

அவனை முதன்முதல் திருமணத்தில் வைத்து பார்த்தது , பேசியது , பழகியது எல்லாமே அவள் கண்முன் வரும் . உண்மையிலேயே நிஜத்தை விட அந்த கற்பனையில் அவள் அதிக சந்தோசத்துடனே இருப்பாள் . கற்பனையில் அவளுக்கேற்றவனாக , அவள் சொல்வதை கேட்பவனாக , கோபப்படாதவனாக , அவள் கேட்காமாலேயே ஏதாவது சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து சர்ப்ரைஸ் செய்பவனாக  என அவளுக்கேற்ற டெய்லர் மேடாக கார்த்திக் இருப்பான் . அவன்  பேசாமல் அவளை அதிகம் பேச வைத்து கேட்பான் , அவள் வெட்கப்படுவது பார்த்து ரசிப்பான் , திடீரென தொட்டு வெட்பம் ஏற்றுவான் , எதிர்காலத்தில் அவளுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதற்கான ஏற்பாடுகளில் இருப்பான் , மொத்தத்தில் அவன் உலகத்தில் இல்லாமல் அவளையே உலகமாக நினைப்பான் . பெண்களுக்கு கடவுள் கொடுக்கும் ஒரு வரப்பிரசாதம் இந்த கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பது . அதில் எந்த பிக்கல் பிடுங்கலும் அவர்களுக்கு இல்லை ...

அவனை வேண்டுமென்றே கொஞ்சம் சீண்டி விட்டு கோபப்படுத்தி அழகு பார்த்திருக்கிறாள் . ஆனால் அந்த சந்தோசமெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு மேல் நிலைக்காது . அந்த விளையாட்டை கூட புரிந்து கொள்ளாமல் அவன் மூர்க்கமாகி விடுவான் . அதன் பிறகு அவனை சமாதானப்படுத்துவதற்குள் அவளுக்கு போதும் போதென்றாகி விடும் . எவ்வளவு கத்தினாலும் மனதளவில் அவன் குழந்தை என்பது அவளுக்கு புரியும் . ஆனாலும் அதற்காக ஒவ்வொரு முறையும் அவனை பொறுமையாக கையாள்வதென்பது அவளுக்கு இயலாத காரியம் . ஆண்கள் அம்மாவை போலவே தங்கள் மனைவியை / காதலியை எதிர்பார்க்கிறார்கள் . நிச்சயமாக ஒரு தாயை யாராலும் சமன் செய்ய முடியாது . செய்ய வேண்டுமென்கிற அவசியமும் இல்லை . இரண்டும் வெவ்வேறு உறவுகள் , வெவ்வேறு உணர்வுகள் அவையிரண்டையும் ஆண்கள் தன்னவளிடத்தில் எதிர்பார்ப்பதும் , அதை நிறைவேற்ற பெண்கள் முயற்சிப்பதும் , முடியாமல் தோற்பதும் பெரிய சிக்கல்களின் சின்ன புள்ளியாக உருவெடுக்கிறது ...

கதவை யாரோ படபடவென தட்டும் சத்தம் கேட்டு தன்னிலைக்கு வந்தாள் சுந்தரி . " வரேம்மா " என்று சொல்லிக்கொண்டே வேகமாக கதவை திறந்தாள்.
" எந்த லோகத்துலடி இருக்க " . " பூலோகத்துல தான் " என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்  சுந்தரி . " இப்படி எதையாவது சொல்லி மழுப்பிடு , எத்தனை தடவ கூப்பிட்டேன் தெரியுமா ?" , அம்மா படபடவென பேசினாள் . " ஏம்மா எந்த ஏரோப்ளேன பிடிக்க இந்த அவசரம் ?" சுந்தரி ஆர்வமுடன் கேட்டாள் . " ஆமாம் பிடிக்குறாங்க , ஜானகி மாமி வந்துருக்கா , சீக்கிரம் ரெடி ஆயிட்டு வா , ஹால்ல இருக்கா " .  அம்மா ஏன் பம்பரமாக சுற்றுகிறாள் எனபது சுந்தரிக்கு இப்போது புரிந்தது . ஜானகி மாமி ஏற்கனவே இங்கே வந்திருக்கிறாள் . அவளுக்கு ஒரு வகையில் தூரத்து சொந்தம் .  ஒரு முறை பார்த்ததிலிருந்து அவளுக்கும் அவள் மகனுக்கும் சுந்தரியை மிகவும் பிடித்துவிட்டது . ஏற்கனவே அதை ஜானகி மாமி அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள் . அம்மாவுக்கும் அவர்கள் குடும்பத்தை பிடித்திருக்கிறது. சுந்தரி அப்பாவிடம் சொல்லி படிப்பை காரணம் காட்டி தட்டிக் கழித்து விட்டாள் . இப்போது அவள் கல்லூரி படிப்பு முடியப்போகும் தருவாயில் மறக்காமல் வந்திருக்கிறாள் மாமி  ...

போகவில்லையென்றால் அம்மா விட மாட்டாள் என்பதற்காகவே மனமில்லாமல் முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு ஹாலுக்கு போனாள் சுந்தரி . அம்மா அவளை பார்த்து பவுடர் போட சொல்லி  சைகை செய்ய அதைப் பார்த்த மாமி " நம்ம குழந்தைக்கு எதுக்கு அதெல்லாம் சும்மாவே கோவைப்பழம் மாதிரி இருக்கா " என்றாள் . அந்த புகழ்ச்சி சுந்தரிக்கு அதீதமாக பட்டது கூடவே ஏனோ ஒரு பயம் வந்தது . மாமி அவளை பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு தலையை தடவிக்கொண்டே பேசினாள் .
" நெறைய புக்ஸ் படிப்பியாமே , அம்மா சொன்னா " . " ம் " என்பது போல சுந்தரி தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் . " இங்கிலிஷ் நாவல் கூட நெறைய படிப்பா " . அம்மாவை ஒரு முறை முறைத்தாள் சுந்தரி . இது ஏதோ பெண் பார்ப்பதற்கு முந்தைய ஒத்திகை போல பட்டது அவளுக்கு . சும்மாவே அம்மாக்கள் " காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு போல " பீற்றிக்கொள்வார்கள் . இப்போது ஒரு பெரிய இடத்து மாமி சுந்தரியை தனது மருமகளாக்க வீடு தேடி வந்திருக்கிறாள் , அந்த சந்தர்ப்பத்தில் மகளை பாராட்டாமல் அவள் அம்மா விட்டு விடுவாளா ?!.

மாறி மாறி மாமி கேட்டுக்கொண்டிருந்த கேள்விகளுக்கு ஏனோதானோ வென்று பதில் சொல்லிவிட்டு ஒரு  வழியாக தப்பித்து மீண்டும் ரூமுக்கு வந்து சேர்ந்தாள் சுந்தரி . " மாமி நீங்க ஒன்னும்  தப்பா எடுத்துக்காதீங்கோ , அவளுக்கு செத்த தலைவலின்னு படுத்திருந்தா , அதான் " . சுந்தரிக்கு அவள் அம்மா சமாளிப்பது நன்றாகவே கேட்டது . " சே சே அதனாலென்ன மாமி குழந்தை ரெஸ்ட் எடுக்கட்டும் " . ஜானகி மாமி குழந்தை என்று கூப்பிடும் போதெல்லாம் சுந்தரிக்கு அன்னீஸியாக இருந்தது . தான்  எப்படி அழைக்கப்பட வேண்டுமென்கிற உரிமையை நாம் தான் தரவேண்டும் , ஆனால் அதை மற்றவர்கள் எடுத்துக்கொள்ளும் போது ஒரு வித எரிச்சல் வந்து விடுகிறது . அதுவும் இது திருமணம் சம்பந்தப்பட்டது என்பதால் அவளுக்கு எரிச்சலும் , பயமும் கூடுதலாகவே இருந்தது . சுந்தரிக்கு உடனடியாக கார்த்திக்கோடு பேச வேண்டும் போல இருந்தது ...

கார்த்திக் முன்பு கொடுத்திருந்த நம்பரை புக் செல்ஃபில் இருந்து சுந்தரி தேடியெடுத்தாள் . மதுரையில் இவர்கள் டாப்படிக்கும் இட்லி கடையின் நம்பர் அது . மாமி போனவுடன் அம்மா இல்லாத நேரமாக பார்த்து ஹாலில் இருந்து அந்த நம்பருக்கு ஃபோன் செய்ய வேண்டும் . முன்பு சுரேஷ் வீட்டு நம்பர் கொடுத்திருக்கிறான் , அதில் பேசியிருக்கிறாள் . அதன் பிறகு இந்த கடை நம்பர் தான் . ஒரே ஆளே எப்பொழுதும் எடுப்பதில்லை ஆனால் யார் எடுத்தாலும் கார்த்திக் என்றவுடன் சுந்தரியா என்று கேட்பார்கள் . அப்படி கேட்டவுடன் அவளுக்கு ஒரு வெக்கம் வரும் . தான் இன்னாருடைய ஆள் என்பதை வேறொருவர் சொல்லக்கேட்பதே பெண்களுக்கு அலாதிப்பிரியம் தான் . தன் தோழியை அவள் காதலன் பேரை சொல்லி கூப்பிடும் போது அவளுக்கு வெக்கம் பிடிங்கித்தின்னும் . அதை சொல்லி சொல்லியே அவளை தோழிகள் ஓட்டுவார்கள் . சுந்தரிக்கு அது போன்றதொரு கொடுப்பினை அமையவில்லை . யாரிடமும் பகிரங்கமாக சொல்ல முடியாத சூழல் . யாராவது ஒருவருடன் சொன்னாலும் எல்லோருக்கும் வைரஸ் போல பரவிவிடும் அபாயம் . கொக்கு  மீனுக்கு காத்திருப்பது போல அவள் நல்ல சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தாள்  ...

சுந்தரி கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்ல காத்திருந்த அதே நேரத்தில் சரக்குக்கு தண்ணீரையும் , சோடாவையையும் மிக்சிங் செய்துகொண்டே சரியா இருக்கிறதா  என்று அவன் சென்னைக்கு தன்னை கூட்டிக்கொண்டு வந்தவரிடம் கண்களாலேயே வினவிக்கொண்டிருந்தான் .
" போதும் போதும் " என்பது போல கையை ஆட்டினார் அந்த முன்னாள் உதவி இயக்குனர் . இதே மதுரையில் நண்பன் மர்ரு மிக்சிங் செய்து கொடுத்ததை  அடித்து தான் அவனுக்கு பழக்கம் . இன்று நிலைமை உல்டாவாக மாறியிருப்பதை நினைத்து நொந்து கொண்டான் . ஆனால் இதெல்லாம் பார்த்தால் சினிமாவில் காலம் தள்ள முடியாது என்பது அவனுக்கு புரிந்தது . " தம்பி என்னடா அண்ணன் சரக்கு மண்டியா இருக்கேன்னு நினைக்காதீங்க , ஊருக்கு போனா அடிக்க முடியாது " .
ஓசி யில எவனும் வாங்கித்தர மாட்டானென்பதை அவர் நாசூக்காக சொல்வது போல காரத்திக்கிற்கு பட்டது . " அதெல்லாம் ஒன்னும் இல்லென்னே " , சொல்வதற்காக சொல்லி வைத்தான் . " இன்னிக்கு பார்த்தோம்ல அவன்லாம் ரெண்டு வருஷம் முன்னால ஒண்ணுமே இல்லாம வந்தான் , இப்போ  என்னடான்னா நம்மக்கிட்டயே பகுமானம்  பண்றான் " என்று போதையில் அவர் பொரும ஆரம்பித்தார் . ஒவ்வொரு முறையும் யாரையாவது பார்த்து விட்டு வரும் போது அவருடைய பொருமலும் அவனுடைய செலவும் அதிகமாகிக்கொண்டே இருந்தன ...

தொடரும் ...

8 March 2020

அவன் - அவள் - நிலா ( 17 ) ...


சென்னைக்கு போவதென முடிவானது . இதற்கு மேலும் கார்த்திக்கின் அப்பாவிற்கு அவன் மதுரையில் இருப்பது சரியென படவில்லை . இப்படியே போனால் ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவன் கொலை செய்யப்படுவான் அல்லது யாரையாவது ஏதாவது செய்து விட்டு ஜெயிலுக்கு போவான் என்பது அவருக்கு தெளிவாக புரிந்தது . திடுதிடுப்பென இப்படி கிளம்ப வேண்டியது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஏற்கனவே சினிமா ஆசையில் சென்னைக்கு போகும் முடிவெடுத்திருந்தவனுக்கு பேரதிர்ச்சியாக இல்லை . அதோடு அப்பா இப்போதிருக்கும் நிலையில் அவனால் எதுவுமே பேச முடியாது என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
ஒரு பக்கம் அவனது அப்பா அங்கு சென்னையில் வேலை பார்க்கும் தனது நண்பனின் மூலம் கார்த்திக்கிற்கு வேலை வாங்கி தருமாறு பேசிக்கொண்டிருக்க அவன் எந்த டைரக்டரிடம் முதலில் போய் வாய்ப்பு
கேட்கலாம்  என்று யோசித்துக்கொண்டிருந்தான் ...

சூப்பர் குட்ஸ் ஃபிலிம்ஸ் இல் ப்ரொடக்ஷனில் இருக்கும்  சீனியர் சரவணனின் நண்பர் மதுரைக்கு வந்திருப்பது தெரிய வர அவரை போய் சந்திக்க கிளம்பினான் கார்த்திக் . கல்லூரி நண்பன் கௌசிக் அவருடன் தொடர்பிலிருப்பதால்  அவனையும் கூட்டிக் கொண்டு போவதென முடிவெடுத்தான் . அவரை பார்ப்பதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது . அவர்கள் முன் பந்தாவாக இருக்க வேண்டுமென்பதற்காகவே அவர்  லேட்டாக வந்தது போல அவனுக்குப்  பட்டது. கௌசிக் ஏதோ பேச முற்பட அவர்  வெளியில் போய் பேசிக்கொள்ளலாம் என்பது போல சைகை  காண்பித்தார் . மூவரும் தெரு
முக்கில் இருந்த பெட்டிக்கடைக்கு போனார்கள் ...

கடையில் இரண்டு வடையை எடுத்துக்கொண்டவர் இவர்களிடம் நீட்ட கௌசிக் மட்டும் ஒன்றை வாங்கிக்கொள்ள அவர் அவனுக்கு ஒன்றை கொடுத்து விட்டு இன்னொன்றை எடுத்துக்கொண்டார்  . ஒரு பாக்கெட் வில்ஸ் வாங்கி அதில் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டவர் " சிகரெட் புடிக்கிற பழக்கம்லாம் இல்லேல்ல ? " என்று சொல்லிக்கொண்டே சிகரெட் பாக்கெட்டை பாண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் . இருக்கு  இல்லை என்பது போல இரண்டுக்கும் பொதுவாக அவர்கள் தலையை ஆட்டி வைத்தார்கள் . சிகரெட் வீணாகி விடுமோ என்கிற பயத்திலேயே அவர் அவசரமாக உள்ளே வைத்துக்கொண்டது போலவே  அவனுக்கு பட்டது . " அண்ணே நான் சொன்ன ஃப்ரெண்ட் இவன் தான் " என்று கௌசிக் கை காட்ட அவன் கை குலுக்கிக்கொண்டான் . சம்பிரதாய அறிமுகங்கள் முடிந்தவுடன் டீ வர அவர் அதோடு சேர்த்து நேரடியாக விஷயத்துக்கு வந்தார் ...

" அண்ணன் சிபாரிசுல அசிஸ்டன்டா  யாருகிட்டயாவது சேர்த்து விட்டுரலாம் , இல்லேன்னா அது அவ்வளவு ஈசி இல்ல "
" அதாண்ணே உங்க கிட்ட கூட்டிட்டு வந்தேன் " என்று கௌசிக்கும் அவன் பங்குக்கு ஐஸ் வைத்தான் . ,
 " அண்ணன்லாம் சென்னைக்கு போய் கஷ்டப்பட்டு ஒன்னரை வருஷம் கழிச்சு தான் அசிஸ்டண்டாக முடிஞ்சது " என்று அவர் சொன்னவுடன்  " பத்து வருஷமா அப்படியே தானே இருக்கீங்க " என்று சொல்ல வந்த கௌசிக் அதை வாயோடு அடக்கிக்கொண்டான் . " தம்பி ஏதோ சொல்ல வந்தீங்க " . " இல்லேண்ணே நீங்க சொல்லுங்க " .
" அப்புறம் நானே தொல்லை தாங்காம அதுல இருந்து ப்ரொடக்ஷனுக்கு மாறிட்டேன்னா பாரேன் " என்று அதை ஏதோ பெருமையாக சொல்லிக்கொண்டார் .  " உங்களாலேயே முடியலேன்னா எப்படிண்ணே "
கௌசிக் பக்க வாத்தியம் வாசித்தான் . ஒருவரை புகழுவதில் என்ன காசா ? பணமா ? அடித்து விடுவோமே என்பது தான் அவனது சைக்காலஜி ...

" தம்பி எதுவும் பேச மாட்டாப்லயா ? என்று கார்த்திகை பார்த்து அவர் கேட்க
" உங்கள நம்பி தான்னே வந்திருக்கான் , நல்ல டைரக்டர் கிட்ட சேர்த்து விட்டுடுங்க " என்று கௌசிக் சொல்ல  " யார் நல்ல டைரக்டர் சொல்லு பார்ப்போம் " என்று கார்த்திகை பார்த்து கேட்டார் உடனடியாக .
ஏதாவது சொல்லப்போய் கருத்து வேறுபாடு வந்து விடுமோ என்று யோசித்தவன் " மணிரத்னம் " என்றான் . அவனை சட்டென்று பார்த்தவர்
" அதெல்லாம் பெரிய இடம் , இன்ஸ்டூட்ல இருந்து வந்தாலே  திரும்பி கூட பார்க்க மாட்டாங்க  " என்றார் . அவனுக்கு சப்பென்று ஆகி விட்டது .
" இல்லேண்ணே ஆழ்வார்ப்பேட்டை ல தான் அவர் வீடு நேர போகலாம்னு இருந்தேன் " .  . " தம்பி நீ போய்ட்டு அங்க இருக்குற வாட்ச்மேனுக்கு பொழுதை வேணா போக்கலாம் மத்தபடி ஒன்னும் நடக்காது " அவர் சொல்லி விட்டு சிரித்தார் ...

" வேற யாராவது சொல்லு " , அவன் உடனே ஷங்கர் என்றான் . அவர் சீரியசாக  அவனை பார்த்தார் . " தம்பி நீ சொல்ற யாரையுமே  கிட்ட கூட நெருங்க முடியாது " . சொன்னவரை ஒருமுறையும் கவுசிக்கை ஒருமுறையும் அவன் திரும்பி பார்க்க , ஏதோ யூகித்தவராய் , " அண்ணனால முடியாததுன்னு ஒன்னும் இல்ல , இருந்தாலும் கால விரயம் ன்னு ஒன்னு இருக்குல்ல " என்று சமாளித்து விட்டு மூன்றாவது சிகெரெட்டை பற்ற வைத்துக்கொண்டவர் இரண்டாவது முறையாக டீ சொன்னார் . அவர் ஆசுவாசமாக செய்வதையெல்லாம் பார்த்தால் அடுத்து அவருக்கு ஒரு வேலை வெட்டியுமில்லை என்பது தெளிவாக தெரிந்தது , அதற்கு ஏன் ஒன்  அவர் ஆக காக்க வைத்தார் என்பது மட்டும் அவனுக்கு அப்போது புரியவில்லை  . அவர் சினிமாவில் தன்  பிரதாபங்களையெல்லாம் அடுக்கிக்கொண்டு போக அவனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல்  இதையெல்லாம் நம்புறதா வேணாமா என்று விவேக் மாடுலேஷனில் அவனுக்கு யோசனை வந்தது . நாயகன் படத்தில் வருவது போல " நீங்க நல்லவரா கெட்டவரா " என்று கேட்க வேண்டும் போல இருந்தது ...

பேச தொடங்கியதிலிருந்து  அவனுக்கு தீர்க்கமாக அவர் நிறைய கமர்சியல் படங்களை தான் விரும்பி பார்ப்பார் என்பதும் , சினிமாவில் தான் நிறைய பணம் சம்பாதிக்க முடியுமென்கிற எண்ணத்தில் மட்டுமே அவர் அந்த துறையை தேர்ந்தெடுத்தார் என்பதும் தெரிந்தது . தரமான படங்கள் மேல் அவருக்கு பெரும்பாலும் ஈடுபாடு இல்லையென்பதும் , டெக்னிக்கல் விஷயங்களிலும் அவர்  பத்து ஆண்டுகளுக்காவது பின் தங்கியிருந்ததும்  அவனுக்கு ஆச்சர்யமாகவும் , அதிர்ச்சியாகவும் இருந்தது . உண்மையில் சாதிக்க முடியாமல் போனவர்களுக்கு தான் தங்களை யாராவது புகழ வேண்டுமென்றோ , அது கிடைக்காத பட்சத்தில் அவர்கள்  தன்னைத்தானே புகழ்ந்து கொள்வார்கள் என்றும் எங்கோ படித்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது . இப்படி பல்வேறு எண்ணங்கள் அவன் மனதுக்குள் ஓடினாலும் சினிமாவில் சேர நிச்சயம் அவர் ஒரு  துருப்புசீட்டு என்பது மட்டும்  புரிந்தது...

இந்த வாரக்கடைசியில் சென்னைக்கு போவதாக சொன்னவர் அவனிடம் எப்படி போகப்போவதாக விசாரித்தார் .  அவன் வைகையில் வருவேன் என்று சொல்ல , அது தனக்கு சரிப்படாது என்றும் கே.பி.என் பஸ்ஸில்  இந்த வாரக்கடைசிக்கு புக் செய்யுமாறு பணித்தார்  . ரயில் டிக்கெட்டை  விட அது பல மடங்கு அதிகமாச்சே  என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவர் கவுசிக்கை டீ இத்யாதிக்கு பணம் கொடுக்க சொல்ல அவன் கார்த்திக்கை பார்க்க அவன் செட்டில் செய்தான்  . பிறகு தான் கையில் வேறு பைசா இல்லையென்பது தெரிய வர அவரிடம் கேட்கலாமா என்ற யோசைனையை புறந்தள்ளிவிட்டு " அண்ணே ஒரு சிகரெட் கொடுங்க " என்று கேட்டு வாங்கிக்கொண்டான் . அதற்கு மேல் அங்கிருந்தால் மூஞ்சியிலேயே ஊதி விடுவான் என்று பட அவர் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார் ...

" என்ன மாப்ள பெரிய அடைப்பா இருப்பாரு போல " என்று சொல்லிக்கொண்டே கௌசிக் சிகரெட்டுக்கு கை நீட்ட கார்த்திக் முறைக்கவே அவன் கடைக்காரிடம் இருந்த சில்லறைகளை பொறுக்கிக்கொடுத்து தம்  வாங்கி பற்ற வைத்துக்கொண்டான் . " ஆரம்பமே இப்படி இருக்கே அங்க எத்தனை முதலைங்க இருக்கோ " என்றான் கௌசிக் . உண்மையில் சினிமா உலகத்தை பற்றிய  உண்மை பிம்பத்தை அவர் கோடிட்டு காட்டி விட்டார் . அங்கே முதலைகள் மட்டுமல்ல  திமிங்கலம் , அனகோண்டா எல்லாமே வாயை திறந்து வைத்துக்கொண்டு அவனுக்காக காத்திருப்பது போலவே பட்டது . ஒரு சாங்கிலேயே ஹீரோவை பெரிய ஆளாக மாற்றும் விக்ரமனுக்கே  ஒரு படத்தை இயக்க பல வருடங்கள் ஆகியிருக்கும் . நடந்த உரையாடலலிருந்து சினிமாவில் முதல் அடி எடுத்து வைப்பதே எவ்வளவு கடினமென்பது அவனுக்கு புரிய வந்தது . அதே போல் எல்லா செலவுக்கும் அப்பாவை எதிர்பார்க்க முடியாதென்பதும் அவனுக்கு உரைத்தது ...

தொடரும் ...

1 March 2020

திரௌபதி - DRAUPATHI - தைரியம் ...


மாஸ் ஹீரோ / இயக்குனர் இல்லாத படங்களுக்கு ஓப்பனிங் கிடைப்பது மிக கடினம் . படம் நன்றாக இருந்து பார்த்தே ஆக  வேண்டுமென்கிற ஆர்வம் ரசிகர்களுக்கு எழுந்தாலொழிய பணம் பார்ப்பது கஷ்டம் . ஆனால் இயக்குனர் மோகன்.ஜி எடுத்துக்கொண்டகதைக்களம் , அதை ப்ரமோட் செய்த விதம் இரண்டுமே இந்த சின்ன பட்ஜெட் படத்துக்கு பெரிய வரவேற்பையும் , எதிர்பார்ப்பையும்  கொடுத்திருக்கிறது . அதை திரௌபதி  நிறைவேற்றினாளா?
பார்க்கலாம் ...

மனைவியையும், மச்சினிச்சியையும் ஆணவக்கொலை செய்து விட்டு சிறையில் இருந்து பெயிலில் வரும் ருத்ர பிரபாகரன் ( ரிஷி ரிச்சர்ட்) தன்  நண்பனின் உதவியோடு சிலரை போட்டுத்தள்ளுகிறார் . எதற்கு அப்படி செய்கிறார் , அவர் தான் மனைவி திரௌபதி ( ஷீலா ) யை  கொலை செய்தாரா போன்ற கேள்விகளுக்கு விசுவலாக இல்லாமல் நாடகத்தனமாக விடை சொல்கிறாள் திரௌபதி ...

காதல் வைரஸ் வந்து பல வருடங்கள் கடந்தும் ரிச்சர்ட் நடிப்பில் பெரிதாக தேறவில்லை . கருணாஸ் தவிர புதுமுகங்களாக இருக்கும் படத்தில் இவருக்கு நல்ல ஸ்கோப் ஆனால் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை .
சில சீன்களை தவிர பெரும்பாலும் இவர் நடிப்பு  ஃப்ளாட்டாகவே  இருப்பது மைனஸ் . திரௌபதியாக வரும் ஷீலா உண்மையிலேயே படத்துக்கு பெரிய ப்ளஸ் . பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவனுக்கு அவர் கொடுக்கும் தண்டனை அசாத்தியம் . படத்தின் குறிப்பிடத்தக்க சீன்களில் இதுவும் ஒன்று .
கருணாஸ் போலித் திருமணங்கள் பற்றி கோர்ட்டில் பேசி கவனிக்க வைக்கிறார் . ஜாக்காக வருபவரும் , தன் மகளுக்கு நடந்ததை கோர்ட்டில் விவரிப்பவரும் நல்ல தேர்வு ...


அந்தஸ்து , பணம் உள்ளவர்களின் வீட்டு பெண்களை நாடக காதல் மூலம் வசப்படுத்தி பணம் பறிக்கும் கும்பலை பற்றிய கதைக்கருவில் எல்லோரையும் அட போட வைத்திருக்கிறார் இயக்குனர் . ஆனால் அதை விட  பத்திர அலுவலகத்தில் நடக்கும் போலித் திருமணங்களிலேயே அதிக கவனம் செலுத்தியது சறுக்கல் . படம் லோ பட்ஜெட் தான் அதுக்காக நடிப்பதற்கு ஆட்களே கிடைக்கவில்லையா ? எல்லோரும் சொல்லித்தந்தது போலவே பேசி போரடிக்கிறார்கள் ...

ஆரம்ப கட்ட சீன்கள் படத்தின் மேல் ஆர்வத்தை கொடுப்பதென்னமோ உண்மை . அப்படியிப்படி இடைவேளை வரை தொய்வில்லாமல் போகும் படம் அதன் பின் தடுமாறுகிறது . திரௌபதி உயிரோடிருக்கும் போது அவரை கொலை செய்த குற்றத்திற்கு ரிச்சர்ட் கைதாவது , இரண்டு கொலை செய்தவருக்கு ஆறே மாதத்தில் பெயில்  கொடுப்பது , என்னதான்  காசு வாங்கிக்கொண்டு போலி பத்திரம் தயார் செய்தாலும் விழுப்புரத்தில் இருக்கும் பெண்ணிற்கு சென்னையில் இருந்து திருமண சான்றிதழ் இரண்டே மணி நேரத்தில் தயாரிப்பது , எம்ஜிஆர் கால பாணியில் ஹீரோ தொப்பியை போட்டதும் வில்லன் அடையாளம் தெரியாமல் முழிப்பது இவையெல்லாம் லாஜிக்கை சமாதிக்குள் தள்ளுகின்றன ...

நாடக காதலை பற்றி எடுப்பதாக  சொல்லிக்கொண்டு படத்தையே நாடகத்தனமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் . பொதுவாக படத்தின் ஹைலைட் சீன்களை ட்ரைலராக வைத்திருப்பார்கள் ஆனால் இதில் படம் மொத்தத்துக்கும் நல்ல சீன்கள் அது மட்டும் தானென்பது துரதிருஷ்டம் .
இப்படி மேக்கிங்கில் நிறைய குறைகள் இருந்தாலும் நாணயத்துக்கு இரு பக்கம் இருப்பது போல பெண்ணை பெற்றவர்களை  வில்லன்களாக காட்டும் சினிமாவில்  காதலை வைத்து பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் கும்பலின் மறுபக்கத்தை துகிலுரித்த திரௌபதியின் தையிரியத்தை நிச்சயம் பாராட்டலாம் ...

ரேட்டிங்க்     : 2.25 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 39





26 January 2020

சைக்கோ - PSYCHO - ஸ்டன்னிங்க் ...



இசைஞானி - மிஸ்கின் கூட்டணி யில் உதயநிதி பார்வை இழந்தவராக நடித்திருக்கும் சைக்கோ திரில்லர் படம் சைக்கோ. ஏற்கனவே அஞ்சாதே , யுத்தம் செய் , பிசாசு போன்ற படங்களால்  நம்மை கவர்ந்த மிஸ்கின் பொலிவிழந்த உதயநிதியின் நடிப்போடு  இசை , ஒளிப்பதிவு , இயக்கம் என எல்லா டெக்கினிக்கல் சமாச்சாரங்களாலும் தமிழ் சினிமா உலகிற்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் ...

The Chaser என்றொரு கொரியன் படம் அதில் சைக்கோ வில்லன் பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வான் . அவனிடம் சிக்கிக்கொள்ளும் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அவளுடைய ஓனரால் எவ்வளவு முயன்றும் காப்பாற்ற முடியாமல் போகும் . PSYCHO என்றொரு தமிழ் படம் அதில் சைக்கோ வில்லன் ( ராஜ்குமார் ) பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறான்  . அவனிடம் சிக்கிக்கொள்ளும் ரேடியோ ஜாக்கி ( அதிதி ) யை கண் பார்வையிழந்த காதலன் ( உதயநிதி ) கஷ்டப்பட்டு மீட்கிறான் . The Chaser படத்தின் நாட்டை தனக்கேற்ற பாணியில் மிஸ்கின் கவனிக்கும் படி சொல்லியிருக்கும் படமே சைக்கோ ...

அமுல் பேபி போல முகம் இருந்தாலும் ( The Chaser லும் அப்படியே ) க்ளோஸ் அப் காட்சிகளில் பார்வையாலேயே மிரட்டுகிறார் புதுமுக வில்லன் அங்குலுமாலியாக வரும் ராஜ்குமார். அடிக்காதீங்க டீச்சர்  என்று இவர் க்ளைமேக்ஸ் காட்சிகளில் கதறும் நடிப்பில் கவருகிறார் . அம்மாவையே வாடி போடீ என்று வசைபாடும் முதல் சீனிலேயே அதிரடியாக அறிமுகம் ஆகிறார் நித்யா மேனன் . வீல்சேரிலேயே வலம் வந்தாலும் இவருடைய கேரக்டர் படத்தை தொய்வில்லாமல் நிமிர வைக்கிறது  . பொதுவாக மிஸ்கின் படங்களில் ஹீரோக்கள் செய்யும் எக்சன்ட்ரிக் ரோலை இதில் நித்யா மேனன் திறம்பட செய்திருக்கிறார் ...

ஆர்ஜே வாக வரும் அதிதி பார்வையில்லாதவனையே கவரும் அளவுக்கு அழகாக இருக்கிறார் . காதலையே கன்ஃபார்ம் பண்ணாமல் இன்னும் ஒரு வாரத்தில் கவுதம் ( உதயநிதி ) உன்னை கொன்று விட்டு என்னை காப்பாற்றுவான் என தலையை வெட்ட வரும் வில்லனிடம் டயலாக் விடுவது சினிமாத்தனம் . அதே போல தலையை வெட்டி கொடூரமாக கொல்லும் சைக்கோவை இவர் குழந்தை என்று கடைசியில் சொல்வது நமக்கு கொலைவெறியை ஏற்றுகிறது . மேற்படி மூன்று கேரக்டர்களுக்கு பிறகே ஹீரோ உதயநிதி நமக்கு தெரிகிறார் . அவருடைய அலட்டிக்கொள்ளாத நடிப்பு ஓகே . அழுகின்ற சீன்களில் மூஞ்சியை மூடி ஒப்பேற்றுகிறார் . தேர்தல் பிரச்சாரங்களில் காட்டிய நடிப்பில் பாதியையாவது படத்தில் காட்டியிருக்கலாம் ...


மிஸ்கின் படம் என்பதையும் தாண்டி இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் ஓப்பனிங்கிற்கு முக்கிய காரணம் இசைஞானியின் இசையும் , சித் ஸ்ரீராம் குரலில் " உன்னை நெனைச்சு " பாடலும் தான் . அதை தவிர " நீங்க முடியுமா" பாடலிலும் பிஜிஎம் மிலும் தனது இசையால் மெஸ்மெரிஸம் செய்கிறார் இசைஞானி . பி.சி  யின் மாணவர் தன்வீரின் ஒளிப்பதிவு குருவை போலவே  கனகச்சிதம் . பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே நடந்தாலும் இவரது ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் ஒளியேற்றுகிறது . சிங்கம் புலி யின் கதாபாத்திரமும் அவரது முடிவும் சிம்ப்ளி சூப்பர்ப் . இன்ஸ்பெக்டராக வரும் ராமை விட டீச்சராக வரும் கேரக்டர் தான் படத்துக்கு பெரிய ஹைலைட் ...

முதல் சீனிலேயே சைக்கோ அறிமுகத்தால் நம்மை உறைய வைப்பது , காதல் காட்சிகளில் நேரத்தை வீணடிக்காமல் ஒரே பாடலில் அதன் வீரியத்தை உணர்த்தியது , நித்யா மேனன் கேரக்டரால் படத்துக்கு தேவையான பெப்பை கூட்டியது , வழக்கமான தமிழ் சினிமா போல கொலைகாரானுக்கு பெரிய
ப்ளாஸ்பேக்கெல்லாம் வைக்காமல் சில சீன்களிலேயே அதை உணர வைப்பது, பெண்ணின் உடலை அடையாளம் காட்டி விட்டு அழுது கொண்டே போகும் தாயாரை ஏரியல் சாட்டில் காட்டுவது என படம் நெடுக மிஸ்கினத்தனங்கள் நம்மை கட்டிப்போடுகின்றன ...

ஒவ்வொரு கொலைக்கு பிறகும் போலீஸ் வந்து தொப்பியை கழட்டுவதை தவிர கொலைகாரனை பிடிக்க வேறு எதையும் தீவிரமாக செய்யாதது சறுக்கல் . அதிலும் இந்த கொலைகாரனை பிடிக்கும் வேளையில் பிஸியாவே இருந்ததால் பொண்டாட்டியே ஓடிட்டா என்று சொல்லும் ராம் ஒரு சிசிடிவி யை கூட செக் செய்யாமல் இருப்பது பெருத்த  பின்னடைவு . சைக்கோ கொலைகாரனுக்கு ப்ளாஷ்பேக் இல்லாதது ஓகே ஆனால் அவர் பெண்களை மட்டும் கொலை செய்வதற்கும் அவர்கள் தலையை வெட்டி விட்டு உடலை மட்டும் உள்ளாடைகளுடன் பப்ளிக்கில் டிஸ்பிளே செய்வதற்கும் உளவியல் ரீதியாக ஒரு விளக்கம் கொடுக்காமல் விட்டது பெரிய மைனஸ் . வில்லனுக்கு கட்டை விரல் இல்லை என்கிற க்ளூவை சிங்கம் புலி விட்டுச்செல்வதை வில்லனை கண்டுபிடிக்கிறார்கள் ஆனால் க்ளோஸ் காட்சிகளில் வில்லனுக்கு கட்டை விரல் இருப்பது இமாலய கவனக்குறைவு ...

The Chaser , Red Dragon , I SAW Devil போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு Psycho
பெரிய அதிர்வை தராது ஆனால் தமிழ் படங்களை மட்டும் பார்க்கும் திரில்லர் விரும்பிகளுக்கு இந்த படம் மஸ்ட் வாட்ச் .  கடந்த வருடம் வெளி வந்த சீரியல் கில்லர் மூவி ராட்சனில் இருந்த நிறைவு சைக்கோ வில் மிஸ்ஸிங்.  ஆனாலும் கொலைகளை பட்டவர்த்தனமாக காட்சிப்படுத்திய விதங்களில் தமிழ் சினிமா உலகுக்கு சைக்கோ நிச்சயம் ஒரு ஸ்டன்னிங்க்  எக்ஸ்பீரியன்ஸ்...


ரேட்டிங் : 3.25 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 44 










17 January 2020

அவன் - அவள் - நிலா ( 16 ) ...


ப்பாவை பார்த்தவுடன் கார்த்திக்கின் போதை அப்படியே இறங்கியது . அவர் அவன் நண்பர்களையும் சேர்த்து முறைத்துப் பார்த்துக்  கொண்டிருந்தார் . ரமேஷ்  அண்ணனுக்கு என்று  ஏதோ சொல்ல வாய் திறந்தவன் பிறகு மூடிக்கொண்டான் . கடைக்காரர் மட்டும் வெளியே வந்து " உங்க பிள்ளையா சார் , தண்ணி போட்டா கண்ணு முன்னு தெரில பார்த்து சூதானமாக கூட்டிக்கிட்டு போங்க " என்று அக்கறையாக சொல்வது போல அவன் அப்பாவிடம் போட்டுக்கொடுத்தார் . கார்த்திக் என்ன செய்வதென்று புரியாமல் சுற்றிமுற்றி பார்த்தான் . அவனுக்கு உடனே தம்மடிக்க வேண்டும் போலிருந்தது . அப்பாவிடம் " நீ போப்பா நான் வீட்டுக்கு வரேன் " என்றான் . அவனையே முறைத்துப் பார்த்த அப்பா " ஏன் இன்னொரு ரவுண்டு பாக்கி இருக்கா ?! " என்றார் . " அப்பா அதெல்லாம் ஒண்ணுமில்ல நீ போன்றேன்ல " .
" போக முடியாதுடா நீ வந்தா தான் போவேன் " அவன் அப்பா பிடிவாதமாக நின்றார் ...

ரமேஷ் " மச்சி நீ வீட்டுக்கு போ , காலையில பேசிக்கலாம் "  என்று காதுக்குள் சொன்னான் . கார்த்திக்கிற்கு அப்படி நடுவிலே போவது சுத்தமாக பிடிக்கவில்லை . எத்தனை பேரோடு தண்ணியடித்தாலும் கடைசியில் ரமேஷும் , அவனும் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு ரமேஷ் வீட்டு  மொட்டை மாடியில் படுத்து விடுவது தான் வழக்கம் . அதிலும் ரமேஷ் அண்ணனை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் அவன் அருகில் இருக்க வேண்டும் . சுற்றியிருப்பவர்கள் நிச்சயம் அவனை ஏற்றிவிட்டு பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி விடுவார்கள் . அவன் யோசிப்பது புரியாமல் ரமேஷ் " வீட்டுக்கு போடா அப்பா அங்கேயே நிக்குறாரு " என்றான் . " என்ன துரைக்கு வீட்டுக்கு வர மனசு இல்லையா ? இப்போ வரலேன்னா ஜென்மத்துக்கும் வர வேண்டாம்னு சொல்லிடு " கார்த்திக் அப்பா தீர்க்கமாக சொன்னார் .
" இல்ல மாமா இப்போ வந்துடுவான் " ரமேஷ் அவன் கையை பிடித்து வலுக்கட்டாயமாக அப்பாவிடம் விட்டான் ...

" தள்ளுப்பா நான் ஒட்டுறேன் " என்றவனை " இன்னும் என்ன சுமக்கிற வயசும், திறனும் உனக்கு வரலடா " என்று சொல்லி அவனை பின்னால்  உட்கார வைத்து விட்டு சைக்கிளை மிதித்தார் அப்பா . அப்பா பின்னால்  உட்கார்ந்து சைக்கிளில் போகும் போது அவனுக்கு சின்ன வயதில் அவனை உட்கார வைத்து அவன் அப்பா தங்கம் தியேட்டருக்கு சிவாஜி படம் பார்க்க அழைத்து சென்றது நினைவுக்கு வந்தது . அப்பாவின் பிடியிலேயே அப்படியே சின்னப்பையனாகவே இருந்திருக்கக் கூடாதா என்று அவன் மனம் ஏங்கியது . அவன் தூங்கி விடக்கூடாதே என்பதற்காக அப்பா சிவாஜி பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே வருவார் . சிவாஜி என்றால் அவருக்கு உயிர் . சிவாஜியுடன் ஒரு முறை சேர்ந்து  எடுத்துக்கொண்ட ஃபோட்டோ அவர் வீட்டில் நடுநாயகமாக வீற்றிருக்கும் . சிவாஜி என்னமோ அவனுக்கு பெரியப்பா என தோன்றுமளவிற்கு அவரை பற்றிய பேச்சு என்றுமே நிறைந்திருக்கும் ...

" ஏம்பா யாராவது மிருதங்கம் வாசிக்கும் போது இப்படி ரத்தம் கக்கி சாவாங்களா ? , எல்லாம் ஓவர் ஆக்டிங் " என்று வேண்டுமென்றே அவன் அப்பாவை வம்பிழுப்பான் . வேறு யாராவது இப்படி சொல்லியிருந்தால் அவன் அப்பா வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போயிருப்பார் . அவன் கேட்டதுமே சிரித்துக்கொண்டே " டே அதெல்லாம் டைரக்டர் சொல்லனும்டா , அவர் நடிப்புல மெய் மறந்து செட்டே வாயடச்சு போயிருக்கும் " என்பார் . 
" இங்கிலிஷ் படத்துலல்லாம் யாராவது இப்படி ஓவரா அழறாங்களா ?" . 
" டே அவனுங்க அப்பா அம்மா  செத்தாக்கூட பெருசா அலட்டிக்காம அடுத்த வேலைய பார்க்கப் போயிடுவாங்க , நாம அப்படியா ? அந்தந்த சமூகத்துக்கு ஏத்த மாதிரி தாண்டா நடிப்பும் " என்று விளக்கமாக சொல்வார் . அவர்  சொன்னதில் நிறையவே அர்த்தம் இருந்தது ...

" அவ்வளவு ஏன் , இன்னிக்கு  இருக்குற ரெண்டு பெரிய ஸ்டார்களுக்குமே குரு சிவாஜி தான் . அதுவும் உன் ஹீரோ கமல் டாணா நடிச்சாரே என்ன படம் ?" 
" நாயகன் " உடனே பதில் சொல்வான் . " ம் அதோட ஒரிஜினல் " காட் ஃபாதர் " ஓட ஹீரோ மார்லன் ப்ராண்டோ , அவரையே தன்  நடிப்பை பார்த்து வாயப்பொளக்க  வச்சவர் டா நடிகர் திலகம் , சின்னப்பயலே " என்று ஓங்கி அவன் தொடையில் தட்டுவார் . " அப்பா " என்று கத்திக்கொண்டே அவன் அங்கிருந்து ஓடுவான் . அப்பா மகன் இருவருக்குமே ஆதர்ச நாயகர்கள் நடித்த தேவர் மகன் படத்தை அவன் பல முறை பார்த்திருப்பான் . ஆனாலும் அப்பாவுடன் அதை பார்க்க வேண்டுமென்று அவன் ப்ளான் செய்த போதெல்லாம் ஏனோ அது முடியாமலேயே போய் விட்டது . இதோ ரஜினியுடன் சிவாஜி நடித்த படமே வந்து விட்டது . அப்பா எதுவும் பேசாமல் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தார் . " அப்பா நான் ஓட்டவாப்பா " என்றவனை " பேசாம வாடா "  என்று கடிந்து கொண்டார் ...

இருவருக்குள்ளும் இருக்கும் அளவு கடந்த பாசத்தை இருவருமே வெளியில்  காட்டிக்கொண்டதில்லை. பத்து நிமிடம் சேர்ந்த மாதிரி உட்கார்ந்து பேசினாலே அது ஏதோ வாக்குவாதத்திலோ அல்லது  சண்டையிலோ போய் முடிந்துவிடும் . அப்பாவின் அளவு கடந்த கோபத்தை அம்மா மட்டுமல்ல  அனைவரும் சகித்துக்கொள்வது எப்படி என்கிற ஆச்சர்யம் அவனுக்கு எப்பொழுதுமே இருக்கும் . கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது போல அவர் சுற்றியிருப்பவர்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் , ஒரு பிரச்சனை என்றால் ஓடி வந்திருக்கிறார் . அதுவே கூட அவரை மற்றவர்கள் சகித்துக்கொள்வதற்கு காரணமாக இருந்திருக்கலாம் . ஆனால் அவனால்  மட்டுமென்னவோ அவர் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை .அப்பாவை எதிர்த்து பேசாதே என்று  அம்மா பல தடவை சொல்லியும் அவன் அதை சட்டை செய்ததில்லை ...

இருவருக்குமிடையே  அடிக்கடி வரும் சண்டைகளுக்கு கிரக கோளாறு தான் காரணம் என்றார் ஜோசியர் . இருவருக்குமிடையேயான அதிக அளவு வயது
( 44 ) வித்தியாசம் தான் காரணம் என்றார்கள் குடும்ப நண்பர்கள் . ஆனால் இருவருக்குள்ளும் இருக்கும் அதீத அன்பு தான் அனைத்து சண்டைகளுக்கு காரணம் என அப்போது அவனுக்கு புரியவில்லை . ஒரு முறை தங்கம் தியேட்டரில் பட இண்டெர்வெல்லில் அப்பா சிகெரெட் பிடிப்பதை பார்த்து அவனும் கேட்டு அடம் பிடிக்க அந்த சிறுவனின் எதிர்காலம் கருதி அன்றிலிருந்து அவனுக்கு முன் சிகெரெட் பிடிப்பதையே விட்டுவிட்டார். அந்த சம்பவத்திற்கு பிறகு அப்பா காலைக்கடன் கழித்து வந்தவுடன் டாய்லெட் உள்ளே போகும் போது சிகெரெட் ஸ்மெல் நன்றாகவே அடிக்கும் . அதை பயன்படுத்தி அவனும் நிறைய தடவை திருட்டு தம் அடித்திருக்கிறான் . அவன் ஓரளவு பெரியவனானதும் அவன் அப்பா அவனை கண்டும் காணாமல் பெருந்தன்மையாக இருந்திருக்கிறார் . ஆனால் இன்று தண்ணியடித்து விட்டு  தகராறு பண்ணும் போது கையும் களவுமாக அவரிடம் மாட்டுவோமென்று அவன் நினைத்திருக்கவில்லை ....

நேராக வீட்டுக்கு வந்ததும் சைக்கிளை  மெயின் ஸ்டான்ட் போட்டு விட்டு அவனை சைட் வழியாக பின்னால் இருக்கும் பாத்ரூமுக்கு கூட்டிக்கொண்டு போனார் . ஷவரை திறந்து விட்டு அதில் பதினைந்து நிமிடம் நின்ற பிறகு தான் அவனுக்கு போதை இறங்கியது . கதவிலேயே துண்டு கிடந்தது . அவன் சிறு வயதில் அப்பா இதையெல்லாம் அவனுக்கு செய்திருக்கிறார் . ஆனால் அவனுக்கு இப்போது தர்ம சங்கடமாக இருந்தது . இந்த மனுஷன் எதுக்கு இதெல்லாம் பண்ணி இன்னும் நம்மள நாறடிக்கிறார் என்றே அவனுக்கு தோன்றியது . ஆனால் அவர் செய்த எதிலுமே துளி எதிர்பார்ப்போ , செயற்கைத்தனமோ இல்லையென்பது அவனுக்கு புரிந்தது . அவனுடைய  எதிர்காலம் குறித்த கவலையே அவருக்கு அதிகமாக இருந்தது . தான் சரியாக கவனிக்காததால் தான் அவன் இந்த அளவுக்கு போய்  விட்டானோ என்கிற குற்ற உணர்வும்  அவருக்கு மேலோங்கியிருந்தது ...

அவன் உள்ளே வந்த நடையிலிருந்தே என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்த அம்மா அவன் குளித்து விட்டு வருவதற்காக காத்திருந்தவள் போல கத்த ஆரம்பித்தாள் . அவன் அப்பா ஒரு முறை முறைத்தவுடன் அடங்கி அடுப்பங்கரைக்கு போனவள் பாத்திரத்துடன் போட்ட சண்டை ஹாலில் நன்றாகவே கேட்டது . " உங்க புள்ளையாண்டான் ஏதாவது சாப்பிடுறானான்னு கேட்டு சொல்லுங்க " என்று அம்மா கேட்டவுடன் தான் அவனுக்கு பசி உரைத்தது . ஆம்லெட்டுக்கு சீனி கேட்டு அவன் செய்த களேபரத்தில்  ஒழுங்காக சாப்பிடவேயில்லை . தட்டை எடுத்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தான் . என்ன அமளி துமளி நடந்தாலும் வயிற்றுக்கு உணவிட வேண்டும் என்பதை பற்றி எப்பொழுதுமே சிந்திக்கும் ஒரே  ஜீவராசி அம்மா தான் . " என்ன மிளகாப்பொடி தானா ? சட்னி இல்லையா " அவன் கேட்டவுடனே " ஆமாமா நீ பண்ணிட்டு வந்த வேலைக்கு சட்னி , சாம்பார் லாம் பண்ணி வைக்கிறாங்க " என்று சத்தம் போட்டு விட்டு " பக்கத்துல சீனி வேணா இருக்கு போட்டுக்கோ " என்று சொல்லவே அவனுக்கு குபீரென்று சிரிப்பு வந்தது. அவன் எதற்கு சிரிக்கிறான் என்று புரியாமலேயே அவனை பார்த்தவுடன் அவன் அம்மாவுக்கும் சிரிப்பு தானாக வந்தது ...

சாப்பிட்டு முடித்தவுடன் வாசல் வராண்டாவை தாண்டி தெருவுக்கு போக முற்பட்டவனை அவன் அப்பா குரல் தடுத்தது . " கொஞ்சம் உட்காரு உன் கூட பேசணும் " . அவன் எதை அவாய்ட் செய்ய வேண்டுமென்று நினைத்தானோ அது முடியாமல் போனது . " சொல்லுப்பா " என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான் . " இது  வரைக்கும் உன் விஷயத்துல நான் குறுக்க வந்ததில்லை ஆனா நான் இனிமேலும் வராம இருக்கறது நல்லதா படல " . அப்பா ஏதோ முடிவெடுத்தது போல பேசத்  தொடங்கினார் .  " நானும் நீ எல்லாத்தையும் நிறுத்திட்டு நார்மலாயிடுவேன்னு பாத்தேன் ஆனா எதுவுமே நடக்கல " அவர் பேசும் போதே அவன் குறுக்கிட்டு " இப்போ என்ன " என்று ஆரம்பிக்கும் போதே " இனிமேலும் என்னடா நடக்கணும் " என்று அவர் தெருவே கேக்கும்படி கத்தினார் . " இன்னிக்கு கடைக்காரன போட்டு அடிக்கிற , அடுத்து ரமேஷ் அண்ணனை கொன்னவன  ஏதாவது பண்ணிட்டு ஜெயிலுக்கு போவ , நீ திரும்ப வந்தவுடனே சும்மா விடுவாங்களா ? உன்ன அவனுங்க எதாவது பண்ணுவானுங்க , இதுக்காகவாடா உன்ன படிக்க வச்சேன் " . அவன் அப்பாவின் கண்களில் முதன்முதலாக கண்ணீரை பார்த்தவுடன் அவனால் எதுவும் பேச முடியவில்லை . " நான் முடிவு பண்ணிட்டேன் இனிமே நீ இங்க இருக்க வேணாம் , மெட்ராஸ் ல இருக்குற என் தம்பி வீட்டுக்கு போ , அங்க ஏதாவது வேலை தேடிக்கோ " . அவர் சொன்னவுடன் தனது  சினிமாக்கனவுக்கு மெட்ராஸ்  உகந்தது தான் என்று யோசித்தவன் " அப்பா என்னால வேற வேலைக்குல்லாம் போக முடியாது நான் ஆட் ஏஜென்சில சேரப்போறேன் " என்று சொன்னான் . அவனை ஏற இறங்க பார்த்தவர்  " நீ என்ன எழவு வேணா பண்ணு  ஆனா இங்க பண்ணாத மெட்ராஸ் ல போய் பண்ணு  " . அவர் தீர்க்கமாக சொல்லிவிட்டு நகர்ந்தார் . அந்த கடையிலிருந்து அவனை வீட்டுக்கு கூட்டி வந்து அவனது எதிர்காலத்தையே  அப்பா மாற்றியிருக்கிறார் என்பது அவனுக்கு சில காலங்கள் கழித்து  புரிந்தது ...

தொடரும் ...


11 January 2020

தர்பார் - DARBAR - நோ ஏஜ் பார் ...




மணா , கஜினி , துப்பாக்கி என மாஸ் ஹிட்ஸ் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் அதற்கு மேல் மாஸ் ஹிட்ஸை கையில் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டாருடன் முதன்முதலாக இணைந்திருக்கும் படம் தர்பார் . இரண்டு கமர்ஸியல் ஜாம்பவான்கள் இணைந்ததால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை . அதை நிறைவேற்றினார்களா ? அலசலாம் ...

மும்பையில் கேங்க்ஸ்டர்களை தொடர்ந்து  என்கவுன்டர் செய்கிறார் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் ( ரஜினி ) . அவர் ஏன் டில்லியிலிருந்து மும்பைக்கு வந்தார் ? அவரின் வெறித்தனத்துக்கு என்ன காரணம் ? அவரின் ஒரே மகள் வள்ளிக்கு ( நிவேதா தாமஸ் ) நடந்தது என்ன ? வேர்ல்ட் கேங்க் லீடர் ஹரி சோப்ராவை ( சுனில் ஷெட்டி ) அவர் அழித்தாரா ? என எல்லா கேள்விகளுக்கும் விடையை முதல்பாதியில் எக்ஸ்பிரஸ் வேகத்திலும் , இரண்டாம் பாதியில் பேசஞ்சர் வேகத்திலும் சொல்லியிருப்பதே தர்பார் ...

70 வயதிலும் அதே வேகம் , அதே ஸ்டைல் , அதே குறும்பு என படம் முழுவதும் ரஜினி சும்மா கிழித்திருக்கிறார் . நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வருபவர்களுக்கு " கண்ணா இங்கே பார் " என்று தனக்கு ரிட்டையர்மெண்ட் இல்லையென நிரூபித்திருக்கிறார் . யோகி பாபுவின் நக்கல்களுக்கு " இரு உன்னை வச்சுக்கிறேன் " என வித்தியாசமான மாடுலேஷன்களில் சொல்வதெல்லாம் சூப்பருக்கு மட்டுமே கை வந்த கலை.
ஆக்சன் அதிரடிகளை  தாண்டி மகளுக்காக அவர் உருகும் காட்சிகள் படத்தின் ஹைலைட் . இப்படியே போச்சுன்னா மனுஷன் 2026 க்கு கூட அரசியலுக்கு வருவது அதிசியம் தான் போல ?! ...

நயன்தாராவுக்கு கஜினி யிலாவது தனியாக ஒரு அயிட்டம் சாங்க்  இருந்தது . ஆனால் இதில் யோகி பாபு அளவுக்கு கூட அவருக்கு சீன்கள் இல்லாதது நயன் பேரவை ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே ! இமாலய சூப்பர் ஸ்டாருக்கு முன்னாலும் தன் உருக்கமான நடிப்பால் கவர வைக்கிறார் நிவேதா தாமஸ் . 
ஐ.சி.யு வில் படுத்திருக்கும் அப்பாவுக்கு அருகில் கட்டிக்கொண்டு படுக்கும் காட்சி கல் மனதையும் கரைய வைத்துவிடும் ...


முதல் பாதியில் சீரியசான என்கவுன்டர்களுக்கு மத்தியில்  தன் கவுண்டர்களால் நன்றாகவே  கிச்சு கிச்சு மூட்டுகிறார் யோகி பாபு . இடைவேளைக்கு பின்னரும் இவரை  யூஸ் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது . மெய்ன் வில்லன் சுனில் ஷெட்டி ஆரம்பத்தில் கவனிக்க வைத்து பின் வழக்கம் போல ஹீரோ கையால் அடி வாங்கி சாகிறார் . அனிருத் அருணாச்சலம் பட பிஜிஎம் மை  புது பாணியில் போட்டு மிரட்டுகிறார் . மற்றபடி " சும்மா கிழி " பாடல் தவிர அவர் பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை. பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டிருக்கின்றன...

சூப்பர் ஸ்டார் படம் , பொங்கல் விடுமுறை , ஹீரோ - இயக்குனர் இருவருக்குமே முந்தைய  படங்களின் வெற்றி இவையெல்லாமே படத்தின் கமர்ஸியல் சக்ஸசுக்கு  பெரிய கை கொடுக்கும் . ரஜினி இந்த வயதிலும் ஃப்ரெஸ்ஸாக , துடிப்பாக  இருக்கிறார் ஆனால் அதே போல கதையும் , திரைக்கதையும் இல்லாதது துரதிருஷ்டமே . மாஸ் ஹீரோ  படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாது தான் . அதுக்காக இப்படியா ? ரஜினி நிஜத்தில் தான் சூப்பர் ஸ்டார் ஆனால் கதைப்படி அவர் கமிஷனர் தானே தவிர கடவுள் இல்லையென்பதை இயக்குனர் ஏனோ மறந்து விட்டார் . இரண்டாம் பாதியை ஹீரோ - வில்லன் விளையாட்டாக சுவாரசியமாக கொண்டு செல்லாமல் வெறும் சென்டிமென்டை மட்டும் நம்பியது சறுக்கல் ...

ரஜினி - நயன் உறவுக்குள்ளான குழப்பம் , க்ளைமேக்சில் துப்பாக்கியை தூக்கிப்போட்டு விட்டு சவடால் பேசி அடி வாங்கும் வில்லனின் டெம்ப்லேட் காட்சிகள் , ஹீரோ தான் ஜெயிப்பான் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதில் எந்தவிதமான சேலஞ்சும் இல்லாமல் போகும் ஃப்ளாட்டான ஸ்க்ரீன்ப்ளே , கபாலி , பேட்ட என்று ரஜினியின் சமீபத்திய படங்களையே நினைவுபடுத்தும் சீன்கள் இவையெல்லாம் தாறுமாறாக இருந்திருக்க வேண்டிய தர்பாரை தடம் மாற்றுகின்றன ...

ரத்தம் , சதை , நாடி நரம்பெல்லாம் ரஜினி வெறி ஊறிப்போன ரசிகர்களுக்கும்  , பொங்கலுக்கு குடும்பத்தோட ஏதோ ஒரு படத்துக்கு போனும் என்று நினைப்பவர்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும் . ஹீரோவையும் தாண்டி படமே நல்ல அனுபவமாக இருக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு
( பாட்சா , படையப்பா )  ரஜினியே படத்தில்  " எம்ஜிஆர் ஏன் மூணு தடவ அடி  வாங்குறார் தெரியுமா " என்று சொல்வது போல " நாம ரஜினிக்காக மூணு அடிக்கு மேலயே வாங்குறோமோ ?! என்றே தோன்றும் ஆனால்
" நம்புறவங்களுக்கு வயசு வெறும் நம்பர் " என்று டயலாக் மட்டும் பேசாமல் நிரூபித்தே காட்டியிருக்கும் சூப்பர் ஸ்டாருக்காக அதை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்  ...

( டிஸ்கி : நான் ரஜினி யின் அரசியல் வருகையை வரவேற்கிறேன் , நடிகராகவும் மதிக்கிறேன் ஆனால் ஒரு விமர்சகனாக அவர் நடிக்கும் படம் எப்படி இருந்தாலும் பாராட்ட வேண்டுமென்பதில்லை . இது புரியாதவர்கள் சுற்றும் கம்புக்கு நிர்வாகம் பொறுப்பல்ல ) ...

ரேட்டிங் : 2.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 41 








4 January 2020

அவன் - அவள் - நிலா (15) ...


கார்த்திக்கிற்கு எல்லாமே வெறுமையாக இருந்தது . எல்லோரும்  கூட்டம் கூட்டமாக அண்ணனை  எப்படி சம்பவம் செய்தார்கள் என்பது பற்றி விவாதத்தில் இருந்தார்கள் . அண்ணன் காரியம் முடியறதுக்குள்ள அவிய்ங்கள போட்ரனும் ரமேசு என்று அவனுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் . கார்த்திக் எதிலுமே கலந்து கொள்ளாமல் ஒரு ஓரமாக மரத்தடியில் உட்கார்ந்திருந்தான் . ரமேஷ் தன்னைப்போல ஆகாமல் நல்ல படியாக படித்து பெரிய ஆளாக வேண்டுமென்று அண்ணன் அடிக்கடி சொன்னது மட்டும் கார்த்திக் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது .
" சிங்கம் மாதிரி நடந்து வருவானே இப்படி செதச்சிட்டாய்ங்களே " ரமேஷ் அம்மா இடைவிடாது அழுது கொண்டே இருந்தாள் . கடந்த முறை அவர் வீட்டுக்கு போயிருந்த போது ரமேஷ் அம்மா ஒரு பெண்ணின் படத்தை காட்டி
" கார்த்தி தம்பி பொண்ணு மூக்கும் முழியுமா லட்சணமா ஹீரோயினி மாரி இருக்காள்ல "? , கார்த்திக் அம்மா காட்டிய ஃ போட்டோவை பார்த்தான் .
" தேவர் மகன் படத்துல வர  ரேவதி மாதிரி இருக்காம்மா " .
" அப்படி சொல்றா கண்ணு , அண்ணனுக்காக பார்த்திருக்கேன் , அப்புறமா அவன் கிட்ட நீயே சொல்லு " என்று ஃபோட்டோவை அவனிடம் கொடுத்து விட்டு உலையை இறக்க அடுப்பங்கரைக்கு ஓடினாள் ...

எப்பொழுது வீட்டுக்கு போனாலும் அவனை சாப்பிட சொல்லாமல் இருந்ததேயில்லை . அவன் வேண்டாம் என்று சொன்னாலும் எதையாவது கொடுக்காமல் விட மாட்டாள் . " ஏண்டி நீ பாட்டுக்கு அவனுக்கு கோழியா வைக்குற , நமக்கு பாவம் வரதுக்கா ?" ஒரு முறை ரமேஷ் பாட்டி கேட்ட பொழுது " ஆமா அப்படியே வரப்போகுது , அவன் பொறந்தது மட்டும் தான் அங்க , மத்தபடி நம்ம பய " என்று ரமேஷ் அம்மா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் பாவ புண்ணியத்தையெல்லாம் கணக்கு பார்க்காமல் நாட்டுக்கோழியை ருசித்துக்கொண்டிருந்தான் . அப்படி பார்த்த பெண்மணியை இன்று தலைவிரி கோலமாக பார்க்க என்னமோ போலிருந்தது .  கணவன் இறந்த போது கூட கல்லு போல தைரியமாக இருந்தவரை புத்திர சோகம் உருக்குலைய செய்து விட்டது . பழசையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தவன் விரல்களை தம் சுட்டவுடன் சுருக்கென்று எரிய அதை தூக்கிப்போட்டு விட்டு நிமிர்ந்தான் . பலதரப்பட்ட கும்பலுக்கு நடுவே பேசிக்கொண்டிருந்த ரமேஷ் மற்றும் நண்பர்கள் சிறிது விலகி அவனை நோக்கி நடந்து வந்தார்கள் ...

அவர்கள் அருகே வந்ததும் கார்த்திக் மரத்தடியில் இருந்து எழுந்து நின்றான் .
" மச்சி சண்முகம் அண்ணன் வந்தாருடா " அவன் தெரியும் என்பது போல மண்டையாட்டினான் . " அண்ணன ராஜாவும் அவன் கூட்டாளிகளும் தான் ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கானுங்க , நாம மடக்கறதுக்குள்ள கோர்ட்ல
சரண்டர் ஆயிடலாம்னு பிளான் போட்ருக்காய்ங்கலாம் " . " ம்ம் " என்று கார்த்திக் கேட்டுக்கொண்டான் . " என்னடா சீரியஸா சொல்லிட்டிருக்கேன் , ம்ம்ன்ற " ரமேஷ் கோபத்தோடு கேட்க , " அண்ணன் ப்ரொட்யூசர் கொடுப்பாருன்னு கனவுல இருந்தான் , இப்போ அது போயிடுச்சேன்னு கவலையில இருப்பான் " , வேண்டுமென்றே கூட்டத்தில் ஒரு அல்லக்கை ரமேஷை ஸ்க்ரூ செய்தான் . கார்த்திக் பதில் சொல்வதற்குள் " ஒம்மால உன் வாய மூடுறீயா " என்று ரமேஷ் அவன் வாயை அடைத்தான் . " நீ சொல்லு மச்சி " என்று மறுபடியும் ரமேஷ் கேட்டான் . " என்ன அவிய்ங்களுக்கு ஸ்கெட்ச் போடணுமா ?" , கார்த்திக் கேட்க ரமேஷுக்கு புது தெம்பு வந்தது ...

" ஆனா என்ன ஸ்கெட்ச் போட்டாலும் மாட்டாம இருக்க முடியாது , அண்ணன போட்டது யாருன்னு இந்நேரம் போலீசும் ஸ்மெல் பண்ணியிருக்கும் , அவிய்ங்களுக்கு  எதாவது ஆச்சுன்னா நம்ம கிட்ட தான் வரும் " .
" அப்போ யாரு அண்ணனை  போட்டதுன்னு தெரிஞ்சும் பொட்ட மாதிரி பம்மிக்கிட்டு இருக்க சொல்றியா " ரமேஷ் வெடித்தான் .
" மாப்பிள்ளை நான் சத்தியமா அப்படி சொல்லல , ஆனா ஒரு நிமிஷம்  உன் அம்மாவை பாரு , நீயும் ஏதாவது பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்ட்டா  அவங்களுக்கு யாரு இருக்கா " கார்த்திக் கை காட்டிய திசையில் அவன் அம்மா ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள் . கல் மனதையும் கரைத்து விடும் கதறல் அது . ரமேஷ் டென்ஷனில் ஒரு தம்மை பற்ற வைத்தான் . ஒரே  இழுப்பில் அதை தூர போட்டு விட்டு ஓவென்று கார்த்திக்கை கட்டிக்கொண்டு அழுதான் .
" மச்சி ஒரே நாள்ல இப்படி எல்லாத்தையும் பொரட்டிப் போட்டுட்டாய்ங்களேடா " . அவன் அழுவதை பார்க்கும் போது கார்திக்கிற்கும் அழுகையும் , ஆத்திரமும் பொத்திக்கொண்டு வந்தது . எதிர்காலமாவது மண்ணாவது அப்படியே போய் அவனுங்களை போட்டுத்தள்ளிட்டு உள்ளே போய் விடலாம் போல இருந்தது .  ஆனால் அவன் உள்ளுணர்வு அதற்கு எதிராக எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருந்தது ...

துக்கம் விசாரித்த பிறகு ஒவ்வொருவராக சொல்லிக்கொள்ளாமல்
கிளம்பிக்கொண்டிருந்தார்கள் . ரமேஷ் அப்பாவின் நண்பர்கள் ஒரு குழுவாக சாராயம் அடித்துக்கொண்டிருந்தார்கள் . சொந்தக்காரர்கள் ஓரளவு கிளம்பி விட கார்த்திக் , ரமேஷ் மற்றும் நண்பர்கள் என்ன செய்வதென்று குழம்பிப் போயிருந்தார்கள் . அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வழக்கம் போல மர்ரு வும் மொக்கையும் போய் சரக்கை வாங்கிக் கொண்டு வந்தார்கள் . ரமேஷ் அவன் அம்மாவை ஒரு முறை பார்த்துக்கொண்டான் . சொந்தக்காரர்களுடன் அண்ணனின் பழைய கதைகளை பேசிக்கொண்டிருந்தாள் . நிச்சயமாய் அங்கிருந்து நகர மாட்டாள் . ரமேஷும் கார்த்திக் அண்ட் நண்பர்களுடன் சேர்ந்து மொட்டை மாடிக்கு போனான் . அங்கிருந்தஒரு போர்வையை உதறிப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்கள் .  பொதுவாக சரக்குடன் சோடா , தண்ணீர் சேர்த்து மெதுவாக அடிக்கும் ரமேஷ் அன்று ராவாக அடித்தான் . அதை தடுக்கும் நேரத்தில் கார்த்திக் தன்னுடைய மிக்சிங்கை மறந்து அப்படியே அடித்து விட்டான் . இருவருக்கும் தலை சுற்றி என்னமோ செய்தது . ஆனால் நிறுத்தாமல் அடித்துக்கொண்டிருந்தார்கள் ...

" அண்ணனை கொன்ன ஒவ்வொருத்தன் கதையையும் முடிக்கணும் மாப்பிள்ளை "கார்த்திக் கத்திக்கொண்டே பீர் பாட்டிலை தரையில் அடித்து உடைத்தான் .  சரக்கு ஏறினாலே அவனை சமாளிப்பது கஷ்டம் அதிலும் எதையும் கலக்காமல் ராவாக அடித்திருக்கிறான் என்ன நடக்குமோ என்று மற்றவர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள் . " ஒர்த்தனையும் விடக்கூடாதுடா " என்று கார்த்திக் கத்த ரமேஷும் சேர்ந்து  கொண்டான் . மொக்கை உடனே கீழே எட்டிப்பார்த்து விட்டு வந்து " மச்சி கத்தாதடா அம்மா சத்தம் கேட்டு மேல வந்துடப்போறாங்க " அவன் அம்மா பேரை சொன்னவுடன் கார்த்திக் லேசாக குரலை தாழ்த்தினான் . " என் அம்மாவே அருவாளை  எடுத்துட்டுப்போய் அவிய்ங்களை வெட்டுவாடா " ரமேஷ் கத்தினான் . " மச்சி ஓவர் ஆயிருச்சு அப்படியே விட்ட நீ சாப்புடாம இங்கயே மட்டையாயிடுவ "மர்ரு சொல்லிக்கொண்டே இருவரையும் கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு போய் அங்கிருந்த தொட்டிக்குள் தலையை முக்கினான் ...

தண்ணீருக்குள் தலையை முக்கியும் போதை இறங்காமல் லெமனை அப்படியே வாயில் பிழிந்து கொண்டார்கள் . ஒரு  வழியாக அவர்களை கடத்திக்கொண்டு போய்  வண்டியில் ஏற்றினார்கள் . விழுந்து விடக்கூடாதென்று  முன்னாடியும் பின்னாடியும் இருவர் உட்கார வண்டி புரோட்டா கடைக்கு பறந்தது . வண்டியை சைட் ஸ்டான்ட் போடுவதற்குள் விழுந்து எந்திரித்து கடை பெஞ்சில் உட்கார்ந்தார்கள் . அவர்கள் அமர்ந்த மாத்திரத்திலேயே கடைக்காரனுக்கு லேசாக பீதி வந்தது . பையன் வந்து என்ன வேண்டுமென கேட்க ஆளாளுக்கு புரோட்டா , கொத்து , சிக்கன் என்று ஆர்டர் கொடுக்க கார்த்திக் வழக்கமாக அதோடு சேர்த்து ஆம்லெட் சொன்னான் . கடைப்பையன் எடுத்து வருவதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்க ரமேஷ் டேபிளோடு கவிழ்த்து விட்டான் . உடனே கடையிலிருந்து ஒரு குண்டு ஆள் ரமேஷின் சட்டையை கொத்தாக பிடித்து கேள்வி கேட்க கார்த்திக் திமிறி எழுந்து அவனை உதைத்து தானும் கீழே விழுந்தான் ...

குண்டு ஆள் திரும்பவும் சுதாரித்து அடிக்க போகும் முன் நடுவில் புகுந்த
மர்ரு " அண்ணே , குடி ஓவர் ஆயிருச்சு , ராவா வேற போட்டானுங்க தப்பா  எடுத்துக்காதீங்க " என்று சமாதானம் செய்ய ஆரம்பித்தான் .
" அப்படியெண்ணயா குடி " என்று குண்டன் வினவ " இல்லேண்ணே ' என்று ரமேஷ் யாருடைய தம்பி என்பதை அவன் எடுத்து சொன்னான் . அந்த குண்டன் நேராக போய் கடைக்காரரிடம் அதை சொல்ல அவர் இன்னும் பிரச்னை வேண்டாமென்பது போல யோசித்தார் . " என்ன தான் குடின்னாலும் பொண்டாட்டிக்கும்  , அக்கா தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாதாப்பா ?"
என்று எதையோ கேட்டு வைக்க " வேணும்னா உங்க வீட்ல இருந்து ஆள அனுப்புங்க வித்தியாசம் தெரியுதான்னு பார்த்து சொல்றோம் " என்று ரமேஷ் குழறி குழறி பேசினான் . அவன் சொன்னது அவருக்கு சரியாக புரியாமல்
" என்னப்பா சொல்றான் " என்று குண்டனை கேட்க அவன் ஒண்ணுமில்லை என்பது போல தலையாட்டி வைத்தான் ...

ஒரு வழியாக பழைய படி டேபிளை எடுத்துப்போட்டு சாப்பிட உட்கார ஒவ்வொன்றாக வந்து கொண்டிருந்தது . புரோட்டாவை பலவாறாக பிச்சுப்போட்டு சால்னா வை ஊற்றிப்பிசைந்து வாயில் போட ஆரம்பித்தான் கார்த்திக் . எவ்வளவு கோடி கொடுத்தாலும் இந்த புரோட்டா சால்னாவுக்கு ஈடாகாது என்று நினைத்துக்கொண்டான் . அவனுக்கு ஆம்லெட் வர லேட்டாகவே ஒரு சவுண்ட் விட உடனே வந்தது . அதை சாப்பிட ஆரம்பிக்கும் போது  அவனுக்கு ஒரு வினோத ஆசை வந்தது . உடனே ஆம்லெட்டுக்கு தொட்டுக்கொள்ள சீனி கேட்டான் . அவன் கேட்டவுடன் கடைக்காரன் இல்லையென சொல்ல எனக்கு இப்போ வேணும் என்று எழுந்து நின்று  தகராறு செய்ய ஆரம்பித்தான் . " இது புரோட்டா கடைப்பா டீக்கடை இல்ல , இந்த மாதிரி கருமம் பிடிச்சவய்ங்களா பார்த்து என்கிட்டே அனுப்புறியே ஆண்டவா " என்று அவர் அங்கு மாட்டியிருந்த பெருமாள் படத்தை பார்த்து புலம்ப ஆரம்பித்து விட்டார் . " எனக்கு ஆம்லெட்டுக்கு தொட்டுக்கர சீனி வேணும் " அவன் 16 வயதினிலே கமல் மாதிரி சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான் ...

அவன் செய்யும் கலாட்டாவை பார்த்து அங்கிருந்த சிலர் சிரிக்க அவன் மேலும் உஷ்ணமானான் . " என்னப் பார்த்த என்ன கேன மாதிரி இருக்கா " என்று கத்திக்கொண்டே ஒரு சேரை தூக்கி விட்டெறிந்தான் . திரும்பவும் கடைக்குண்டன்  உள்ளே இருந்து ஓடிவர மறுபடியும் கைகலப்பானது .
அங்கே ஒரே களேபரமாகி ஆளாளுக்கு எதையெதையோ தூக்கியடிக்க கடைக்காரர் வெளியே ஓடி வந்து கையெடுத்து கும்பிட ஆரம்பித்து விட்டார் .
அவன் நண்பர்கள் ஓவ்வொருவராக அமைதியாக ஆரம்பிக்க கார்த்திக் மட்டும் கத்திக்கொண்டே  இருந்தான் . அவனை  அமைதியாக இருக்கும் படி அவன் நண்பர்கள் சைகை  செய்து கொண்டே இருந்தார்கள் . " என்னடா ரொம்ப பண்றீங்க , நீங்க காரணமே இல்லாம டேபிளை கவுக்கலாம் நான் ஆம்லெட்டுக்கு சீனி கேட்டு சேரை தூக்கி அடிக்கக்கூடாதா ? " .
அவன் சொல்ல சொல்ல நண்பர்கள் பின்னால் பார்க்க சொல்லி சைகை செய்து கொண்டேயிருந்தார்கள் . அவன் உடனே ஒருவேளை போலீஸ் வந்துவிட்டதோ என்று திரும்பிப்பார்க்க அவன் அப்பா வேலையை வேலையை முடித்து  விட்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர் அப்படியே நின்று கொண்டு அவனை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தார். அவனுக்கு பிடிக்குமே என்று அவர் வாங்கி வைத்திருந்த மசால் தோசை சூடாக ஹேண்டில் பாரில் மாட்டியிருந்த பையில் ஆடிக்கொண்டிருந்தது ...

தொடரும் ...

Related Posts Plugin for WordPress, Blogger...