17 January 2020

அவன் - அவள் - நிலா ( 16 ) ...


ப்பாவை பார்த்தவுடன் கார்த்திக்கின் போதை அப்படியே இறங்கியது . அவர் அவன் நண்பர்களையும் சேர்த்து முறைத்துப் பார்த்துக்  கொண்டிருந்தார் . ரமேஷ்  அண்ணனுக்கு என்று  ஏதோ சொல்ல வாய் திறந்தவன் பிறகு மூடிக்கொண்டான் . கடைக்காரர் மட்டும் வெளியே வந்து " உங்க பிள்ளையா சார் , தண்ணி போட்டா கண்ணு முன்னு தெரில பார்த்து சூதானமாக கூட்டிக்கிட்டு போங்க " என்று அக்கறையாக சொல்வது போல அவன் அப்பாவிடம் போட்டுக்கொடுத்தார் . கார்த்திக் என்ன செய்வதென்று புரியாமல் சுற்றிமுற்றி பார்த்தான் . அவனுக்கு உடனே தம்மடிக்க வேண்டும் போலிருந்தது . அப்பாவிடம் " நீ போப்பா நான் வீட்டுக்கு வரேன் " என்றான் . அவனையே முறைத்துப் பார்த்த அப்பா " ஏன் இன்னொரு ரவுண்டு பாக்கி இருக்கா ?! " என்றார் . " அப்பா அதெல்லாம் ஒண்ணுமில்ல நீ போன்றேன்ல " .
" போக முடியாதுடா நீ வந்தா தான் போவேன் " அவன் அப்பா பிடிவாதமாக நின்றார் ...

ரமேஷ் " மச்சி நீ வீட்டுக்கு போ , காலையில பேசிக்கலாம் "  என்று காதுக்குள் சொன்னான் . கார்த்திக்கிற்கு அப்படி நடுவிலே போவது சுத்தமாக பிடிக்கவில்லை . எத்தனை பேரோடு தண்ணியடித்தாலும் கடைசியில் ரமேஷும் , அவனும் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு ரமேஷ் வீட்டு  மொட்டை மாடியில் படுத்து விடுவது தான் வழக்கம் . அதிலும் ரமேஷ் அண்ணனை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் அவன் அருகில் இருக்க வேண்டும் . சுற்றியிருப்பவர்கள் நிச்சயம் அவனை ஏற்றிவிட்டு பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி விடுவார்கள் . அவன் யோசிப்பது புரியாமல் ரமேஷ் " வீட்டுக்கு போடா அப்பா அங்கேயே நிக்குறாரு " என்றான் . " என்ன துரைக்கு வீட்டுக்கு வர மனசு இல்லையா ? இப்போ வரலேன்னா ஜென்மத்துக்கும் வர வேண்டாம்னு சொல்லிடு " கார்த்திக் அப்பா தீர்க்கமாக சொன்னார் .
" இல்ல மாமா இப்போ வந்துடுவான் " ரமேஷ் அவன் கையை பிடித்து வலுக்கட்டாயமாக அப்பாவிடம் விட்டான் ...

" தள்ளுப்பா நான் ஒட்டுறேன் " என்றவனை " இன்னும் என்ன சுமக்கிற வயசும், திறனும் உனக்கு வரலடா " என்று சொல்லி அவனை பின்னால்  உட்கார வைத்து விட்டு சைக்கிளை மிதித்தார் அப்பா . அப்பா பின்னால்  உட்கார்ந்து சைக்கிளில் போகும் போது அவனுக்கு சின்ன வயதில் அவனை உட்கார வைத்து அவன் அப்பா தங்கம் தியேட்டருக்கு சிவாஜி படம் பார்க்க அழைத்து சென்றது நினைவுக்கு வந்தது . அப்பாவின் பிடியிலேயே அப்படியே சின்னப்பையனாகவே இருந்திருக்கக் கூடாதா என்று அவன் மனம் ஏங்கியது . அவன் தூங்கி விடக்கூடாதே என்பதற்காக அப்பா சிவாஜி பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே வருவார் . சிவாஜி என்றால் அவருக்கு உயிர் . சிவாஜியுடன் ஒரு முறை சேர்ந்து  எடுத்துக்கொண்ட ஃபோட்டோ அவர் வீட்டில் நடுநாயகமாக வீற்றிருக்கும் . சிவாஜி என்னமோ அவனுக்கு பெரியப்பா என தோன்றுமளவிற்கு அவரை பற்றிய பேச்சு என்றுமே நிறைந்திருக்கும் ...

" ஏம்பா யாராவது மிருதங்கம் வாசிக்கும் போது இப்படி ரத்தம் கக்கி சாவாங்களா ? , எல்லாம் ஓவர் ஆக்டிங் " என்று வேண்டுமென்றே அவன் அப்பாவை வம்பிழுப்பான் . வேறு யாராவது இப்படி சொல்லியிருந்தால் அவன் அப்பா வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போயிருப்பார் . அவன் கேட்டதுமே சிரித்துக்கொண்டே " டே அதெல்லாம் டைரக்டர் சொல்லனும்டா , அவர் நடிப்புல மெய் மறந்து செட்டே வாயடச்சு போயிருக்கும் " என்பார் . 
" இங்கிலிஷ் படத்துலல்லாம் யாராவது இப்படி ஓவரா அழறாங்களா ?" . 
" டே அவனுங்க அப்பா அம்மா  செத்தாக்கூட பெருசா அலட்டிக்காம அடுத்த வேலைய பார்க்கப் போயிடுவாங்க , நாம அப்படியா ? அந்தந்த சமூகத்துக்கு ஏத்த மாதிரி தாண்டா நடிப்பும் " என்று விளக்கமாக சொல்வார் . அவர்  சொன்னதில் நிறையவே அர்த்தம் இருந்தது ...

" அவ்வளவு ஏன் , இன்னிக்கு  இருக்குற ரெண்டு பெரிய ஸ்டார்களுக்குமே குரு சிவாஜி தான் . அதுவும் உன் ஹீரோ கமல் டாணா நடிச்சாரே என்ன படம் ?" 
" நாயகன் " உடனே பதில் சொல்வான் . " ம் அதோட ஒரிஜினல் " காட் ஃபாதர் " ஓட ஹீரோ மார்லன் ப்ராண்டோ , அவரையே தன்  நடிப்பை பார்த்து வாயப்பொளக்க  வச்சவர் டா நடிகர் திலகம் , சின்னப்பயலே " என்று ஓங்கி அவன் தொடையில் தட்டுவார் . " அப்பா " என்று கத்திக்கொண்டே அவன் அங்கிருந்து ஓடுவான் . அப்பா மகன் இருவருக்குமே ஆதர்ச நாயகர்கள் நடித்த தேவர் மகன் படத்தை அவன் பல முறை பார்த்திருப்பான் . ஆனாலும் அப்பாவுடன் அதை பார்க்க வேண்டுமென்று அவன் ப்ளான் செய்த போதெல்லாம் ஏனோ அது முடியாமலேயே போய் விட்டது . இதோ ரஜினியுடன் சிவாஜி நடித்த படமே வந்து விட்டது . அப்பா எதுவும் பேசாமல் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தார் . " அப்பா நான் ஓட்டவாப்பா " என்றவனை " பேசாம வாடா "  என்று கடிந்து கொண்டார் ...

இருவருக்குள்ளும் இருக்கும் அளவு கடந்த பாசத்தை இருவருமே வெளியில்  காட்டிக்கொண்டதில்லை. பத்து நிமிடம் சேர்ந்த மாதிரி உட்கார்ந்து பேசினாலே அது ஏதோ வாக்குவாதத்திலோ அல்லது  சண்டையிலோ போய் முடிந்துவிடும் . அப்பாவின் அளவு கடந்த கோபத்தை அம்மா மட்டுமல்ல  அனைவரும் சகித்துக்கொள்வது எப்படி என்கிற ஆச்சர்யம் அவனுக்கு எப்பொழுதுமே இருக்கும் . கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது போல அவர் சுற்றியிருப்பவர்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் , ஒரு பிரச்சனை என்றால் ஓடி வந்திருக்கிறார் . அதுவே கூட அவரை மற்றவர்கள் சகித்துக்கொள்வதற்கு காரணமாக இருந்திருக்கலாம் . ஆனால் அவனால்  மட்டுமென்னவோ அவர் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை .அப்பாவை எதிர்த்து பேசாதே என்று  அம்மா பல தடவை சொல்லியும் அவன் அதை சட்டை செய்ததில்லை ...

இருவருக்குமிடையே  அடிக்கடி வரும் சண்டைகளுக்கு கிரக கோளாறு தான் காரணம் என்றார் ஜோசியர் . இருவருக்குமிடையேயான அதிக அளவு வயது
( 44 ) வித்தியாசம் தான் காரணம் என்றார்கள் குடும்ப நண்பர்கள் . ஆனால் இருவருக்குள்ளும் இருக்கும் அதீத அன்பு தான் அனைத்து சண்டைகளுக்கு காரணம் என அப்போது அவனுக்கு புரியவில்லை . ஒரு முறை தங்கம் தியேட்டரில் பட இண்டெர்வெல்லில் அப்பா சிகெரெட் பிடிப்பதை பார்த்து அவனும் கேட்டு அடம் பிடிக்க அந்த சிறுவனின் எதிர்காலம் கருதி அன்றிலிருந்து அவனுக்கு முன் சிகெரெட் பிடிப்பதையே விட்டுவிட்டார். அந்த சம்பவத்திற்கு பிறகு அப்பா காலைக்கடன் கழித்து வந்தவுடன் டாய்லெட் உள்ளே போகும் போது சிகெரெட் ஸ்மெல் நன்றாகவே அடிக்கும் . அதை பயன்படுத்தி அவனும் நிறைய தடவை திருட்டு தம் அடித்திருக்கிறான் . அவன் ஓரளவு பெரியவனானதும் அவன் அப்பா அவனை கண்டும் காணாமல் பெருந்தன்மையாக இருந்திருக்கிறார் . ஆனால் இன்று தண்ணியடித்து விட்டு  தகராறு பண்ணும் போது கையும் களவுமாக அவரிடம் மாட்டுவோமென்று அவன் நினைத்திருக்கவில்லை ....

நேராக வீட்டுக்கு வந்ததும் சைக்கிளை  மெயின் ஸ்டான்ட் போட்டு விட்டு அவனை சைட் வழியாக பின்னால் இருக்கும் பாத்ரூமுக்கு கூட்டிக்கொண்டு போனார் . ஷவரை திறந்து விட்டு அதில் பதினைந்து நிமிடம் நின்ற பிறகு தான் அவனுக்கு போதை இறங்கியது . கதவிலேயே துண்டு கிடந்தது . அவன் சிறு வயதில் அப்பா இதையெல்லாம் அவனுக்கு செய்திருக்கிறார் . ஆனால் அவனுக்கு இப்போது தர்ம சங்கடமாக இருந்தது . இந்த மனுஷன் எதுக்கு இதெல்லாம் பண்ணி இன்னும் நம்மள நாறடிக்கிறார் என்றே அவனுக்கு தோன்றியது . ஆனால் அவர் செய்த எதிலுமே துளி எதிர்பார்ப்போ , செயற்கைத்தனமோ இல்லையென்பது அவனுக்கு புரிந்தது . அவனுடைய  எதிர்காலம் குறித்த கவலையே அவருக்கு அதிகமாக இருந்தது . தான் சரியாக கவனிக்காததால் தான் அவன் இந்த அளவுக்கு போய்  விட்டானோ என்கிற குற்ற உணர்வும்  அவருக்கு மேலோங்கியிருந்தது ...

அவன் உள்ளே வந்த நடையிலிருந்தே என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்த அம்மா அவன் குளித்து விட்டு வருவதற்காக காத்திருந்தவள் போல கத்த ஆரம்பித்தாள் . அவன் அப்பா ஒரு முறை முறைத்தவுடன் அடங்கி அடுப்பங்கரைக்கு போனவள் பாத்திரத்துடன் போட்ட சண்டை ஹாலில் நன்றாகவே கேட்டது . " உங்க புள்ளையாண்டான் ஏதாவது சாப்பிடுறானான்னு கேட்டு சொல்லுங்க " என்று அம்மா கேட்டவுடன் தான் அவனுக்கு பசி உரைத்தது . ஆம்லெட்டுக்கு சீனி கேட்டு அவன் செய்த களேபரத்தில்  ஒழுங்காக சாப்பிடவேயில்லை . தட்டை எடுத்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தான் . என்ன அமளி துமளி நடந்தாலும் வயிற்றுக்கு உணவிட வேண்டும் என்பதை பற்றி எப்பொழுதுமே சிந்திக்கும் ஒரே  ஜீவராசி அம்மா தான் . " என்ன மிளகாப்பொடி தானா ? சட்னி இல்லையா " அவன் கேட்டவுடனே " ஆமாமா நீ பண்ணிட்டு வந்த வேலைக்கு சட்னி , சாம்பார் லாம் பண்ணி வைக்கிறாங்க " என்று சத்தம் போட்டு விட்டு " பக்கத்துல சீனி வேணா இருக்கு போட்டுக்கோ " என்று சொல்லவே அவனுக்கு குபீரென்று சிரிப்பு வந்தது. அவன் எதற்கு சிரிக்கிறான் என்று புரியாமலேயே அவனை பார்த்தவுடன் அவன் அம்மாவுக்கும் சிரிப்பு தானாக வந்தது ...

சாப்பிட்டு முடித்தவுடன் வாசல் வராண்டாவை தாண்டி தெருவுக்கு போக முற்பட்டவனை அவன் அப்பா குரல் தடுத்தது . " கொஞ்சம் உட்காரு உன் கூட பேசணும் " . அவன் எதை அவாய்ட் செய்ய வேண்டுமென்று நினைத்தானோ அது முடியாமல் போனது . " சொல்லுப்பா " என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான் . " இது  வரைக்கும் உன் விஷயத்துல நான் குறுக்க வந்ததில்லை ஆனா நான் இனிமேலும் வராம இருக்கறது நல்லதா படல " . அப்பா ஏதோ முடிவெடுத்தது போல பேசத்  தொடங்கினார் .  " நானும் நீ எல்லாத்தையும் நிறுத்திட்டு நார்மலாயிடுவேன்னு பாத்தேன் ஆனா எதுவுமே நடக்கல " அவர் பேசும் போதே அவன் குறுக்கிட்டு " இப்போ என்ன " என்று ஆரம்பிக்கும் போதே " இனிமேலும் என்னடா நடக்கணும் " என்று அவர் தெருவே கேக்கும்படி கத்தினார் . " இன்னிக்கு கடைக்காரன போட்டு அடிக்கிற , அடுத்து ரமேஷ் அண்ணனை கொன்னவன  ஏதாவது பண்ணிட்டு ஜெயிலுக்கு போவ , நீ திரும்ப வந்தவுடனே சும்மா விடுவாங்களா ? உன்ன அவனுங்க எதாவது பண்ணுவானுங்க , இதுக்காகவாடா உன்ன படிக்க வச்சேன் " . அவன் அப்பாவின் கண்களில் முதன்முதலாக கண்ணீரை பார்த்தவுடன் அவனால் எதுவும் பேச முடியவில்லை . " நான் முடிவு பண்ணிட்டேன் இனிமே நீ இங்க இருக்க வேணாம் , மெட்ராஸ் ல இருக்குற என் தம்பி வீட்டுக்கு போ , அங்க ஏதாவது வேலை தேடிக்கோ " . அவர் சொன்னவுடன் தனது  சினிமாக்கனவுக்கு மெட்ராஸ்  உகந்தது தான் என்று யோசித்தவன் " அப்பா என்னால வேற வேலைக்குல்லாம் போக முடியாது நான் ஆட் ஏஜென்சில சேரப்போறேன் " என்று சொன்னான் . அவனை ஏற இறங்க பார்த்தவர்  " நீ என்ன எழவு வேணா பண்ணு  ஆனா இங்க பண்ணாத மெட்ராஸ் ல போய் பண்ணு  " . அவர் தீர்க்கமாக சொல்லிவிட்டு நகர்ந்தார் . அந்த கடையிலிருந்து அவனை வீட்டுக்கு கூட்டி வந்து அவனது எதிர்காலத்தையே  அப்பா மாற்றியிருக்கிறார் என்பது அவனுக்கு சில காலங்கள் கழித்து  புரிந்தது ...

தொடரும் ...


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...