27 August 2011

அன்னாவின் விரதமும்,மன்மோகனின் மௌனமும்...

       
      இன்று  நாடாளுமன்ற இரு அவைகளிலும் அன்னாவின் மூன்று கோரிக்கைகளையும் ஏற்று தீர்மானம் நிறைவேற்ற ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டவுடன் நாடாளுமன்ற சிறப்பு விவாதம் முடிவுக்கு வந்தது.. இன்றோடு அண்ணாவும் தன் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்...

       கீழ்மட்ட அரசு அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருதல், அந்தந்த மாநிலங்களில் உள்ள லோகாயுக்தாவை நடைமுறைப்படுத்துதல்,மக்கள் சாசனம் போன்ற மூன்று கோரிக்கைகள் உட்பட ஜன் லோக்பால் மீதான சிறப்பு விவாதம் இன்று மக்களவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமாக நடைபெற்றது...

      கடைசியில் வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் லோக்பால்   மசோதாவை நிலைக்குழுவிற்க்கு  அனுப்ப ஒருமனதாக ஏற்கப்பட்டது.. ஒருவழியாக 12  நாட்கள் எந்த சுயநலமுமில்லாமல் உண்ணாவிரதம் இருந்த அன்னாவிற்கு  வெற்றி கிடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்..இது அவருக்கான வெற்றி மட்டுமல்ல ஊழழுக்கு எதிரான மக்களின் மனப்பான்மைக்கு கிடைத்த  வெற்றி..

      இதை முழுமையான வெற்றி என்று இப்போது சொல்ல முடியாவிட்டாலும் என்னென்னமோ செய்து இதை கலைத்து விட வேண்டும் என நினைத்த மத்திய அரசையே மடிய வைத்ததால் நிச்சயம் வெற்றிக்கான ஆரம்பம் என சொல்லலாம்..
                         
     இந்த 12 நாட்களில் காங்கிரஸ் செய்த கண்கட்டு வித்தைகள் தான் என்னென்ன?..சென்ற முறை அன்னா உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட  போதே நமக்கு  
அன்னாவின் உண்ணாவிரதம் வெற்றியா ?  என்ற சந்தேகம் எழாமல் இல்லை...              
      
     எதிர்பார்த்தது போலவே ஜூன் மாத கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றப் போவதாக அண்ணாவிடம் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் அதை வழக்கமான தேர்தல் வாக்குறுதி போல காற்றில் பறக்க விட்டது..
                   
     முதலில் உண்ணா விரதத்திற்கு அனுமதி மறுத்து அண்ணாவை கைது செய்து திகாரில் அடைத்த மத்திய அரசு நாடு முழுவதும்  கிளம்பிய எதிர்ப்பை பார்த்து பயந்து பின் மூன்று நாட்கள் , பத்து நாட்கள்    என பேரம் பேசி கடைசியில் 15  நாட்களுக்கு ஒப்புக்கொண்டது.. 

      இந்த முறை அன்னா இவ்வளவு பிடிவாதமாக இருப்பார் என்றோ,முன்பு இருந்ததை விட நாடெங்கும் மக்களின் குறிப்பாக இளைஞர்களில் ஆதரவு கிடைக்குமென்றோ மத்திய அரசு நிச்சயம் எதிர்பார்த்திருக்காது... அனாவசியமான விசயங்களுக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் மீடியா இந்த முறை முழு கவனத்தையும் அன்னா மேல் திருப்பியது அவர்களுக்கு மேலும் சங்கடத்தை உண்டாக்கியிருக்கும் ...

      2 ஜி அலைவரிசை , காமன்வெல்த் ,ஆதர்ஷ் குடியிருப்பு இப்படி எல்லாவற்றிலும் ஊழலை உரம் போட்டு வளர்த்த காங்கிரஸ் , இதெல்லாம் தெரிந்தும் தெரியாமல் , அறிந்தும் அறியாமல் மௌனம் காத்த மன்மோகன் சிங் , இவருக்கு  வாயாக செயல்படும் கபில்சிபில் , லோக்பாலுக்கு இப்போது அவசியம் என்ன ? தேர்தல் கமிசன் போல தனி அமைப்பை ஏற்படுத்தலாமே என்று அறிவு ஜீவி போல அவ்வப்போது பேசும் ராகுல் இவர்களெல்லாம் செய்த கூத்துக்களை மறக்க முடியுமா ?
                            
      எந்த ஊழல் பற்றி கேட்டாலும் எனக்கு தெரியும் , ஆனா தெரியாது என "என்னத்த" கண்ணையா போல விளக்கம் சொல்லும் பிரதமர் கடைசியாக நான் நேர்மையானவன் , இந்த 41 வருட அரசியல் வாழ்க்கையில் என்னையோ என் குடும்பத்தையோ யாரும் குறை கூற முடியாது என கொஞ்சம் வாய் திறந்தார்.. 

       இதிலிருந்து இவரோ,இவர் குடும்பமோ எந்த ஊழலிலும் நேரடியாக ஈடுபட்டதில்லை , ஆனால் மற்றவர்கள் இவருக்கு தெரிந்தே  ஏதாவது செய்தால் அதற்கு இவர் பொறுப்பல்ல என்று சொல்வது மட்டும் தெளிவாகிறது..என்ன ஒரு நேர்மை ? .

      ஒரு பக்கம் மன்மோகன் எந்த விசாரணைக்கும் தயார் என்பாராம், ஆனால் கபில்சிபில் பிரதமரை லோக்பால் வரையறைக்குள் கொண்டு வரக்கூடாது என வாதாடுவாராம்..அன்னா அணியுடன் எங்கே வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் பேச தயார் என்று பொதுக்கூட்டத்தில்   சொல்வார் பிரதமர்..ஆனால் அன்னா அணியினரிடம் 
அதனை தெரியப்படுத்துவதில் மட்டும் அவருக்கு ஏனோ அப்படியொரு    தயக்கம்...
         
                          
      இப்படி  லோக்பாலை கொண்டு வருவதை விட தட்டிக் கழிப்பதிலேயே மத்திய அரசின் கவனம் முழுவதும்   இருந்தது..இதையும் மீறி இந்த தீர்மானம் நிறைவேறியதற்கு பி.ஜே.பி,இடதுசாரிகள் உட்பட எதிர்கட்சிகள் கொடுத்த ஆதரவும் மிக முக்கிய காரணம்...  

     முதலில் அன்னா மீதே ஊழல் புகார் சொல்லிப் பார்த்த காங்கிரஸ் பின் அது எடுபடாமல் போகவே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவாளர், மோடியை பாராட்டினார் என்று கூறி பின் மத சாயம் பூச பார்த்தது.. ஊழல் அற்ற முதல்வராய் இருப்பதோடு மட்டுமல்லாமல் குஜராத் மாநிலத்தையே முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் மோடியை அவர் பாராட்டியதில் என்ன தவறு ?..பாவம் எந்த ஒரு விசயமாக இருந்தாலும் போலி மத சார்பின்மையை புகுத்தும் காங்கிரஸ் இதை தவிர வேறெந்த யுக்தியை கையாள முடியும் ?
                  

   தனி மனிதனாக எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் அன்னா தொடங்கிய போராட்டத்திற்கு நாடு முழவதும் கிடைத்த வரவேற்பு ஊழலுக்கு எதிராக மக்கள் விழித்தெழ தொடங்கி விட்டார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது ...இனிமேல் "ஆம்  ஆத்மி" என்று சொல்லி யாராவது வந்தால் அவர்களுக்கு ஆப்பு தான்...

      2 ஜி அலைவரிசை ஊழல்  உலகையே உலுக்கிய நேரத்தில்  நிச்சயம் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கான விதை இங்கிருந்து தான் முளைத்து இருக்க வேண்டும் ...ஆனால் சென்ற முறையை போல அல்லாமல் இந்த முறை தமிழகத்தில் இதற்கு கிடைத்த வரவேற்பு அலாதியானது...

     முன்பே சொன்னது போல லோக்பால் மசோதாவை நிறைவேற்ற நிலைக்குழுவிற்கு  அனுப்பியதாலும் , அதன் மூலம் அன்னா தன் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டதாலும் மட்டுமே   இதை முழு வெற்றி என கொண்டாடி விட முடியாது..ஏனெனில் பாதி கிணறு மட்டுமே தாண்டியிருக்கிறோம்...

     லோக்பால் மூலம் ஊழலை கட்டுப்படுத்துவதோடு மட்டும் நின்று விடாமல் ஊழல் புரிபவர்களுக்கும் , அந்த கட்சிக்கும் தகுந்த தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் ..மேலும் வெளி நாடுகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரம் கோடி கருப்பு பணமும் முழுமையாக இங்கு கொண்டு    வரப்பட வேண்டும்
என்பதும்  பொது மக்களின் கோரிக்கை ..25 August 2011

மூட்டைபூச்சி - சிறுகதை

                   
        "கலைமகள்"  - எழுத்தாளர்கள் அமைப்பின் ஐந்தாவது  ஆண்டு விழா"  என்று நுழைவாயிலில் கட்டப்பட்டிருந்த பெரிய பேனரை பார்த்துக்கொண்டே அந்த ரிசார்ட்சுக்குள் நுழைந்தான் பரத்.. 

      ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இது போன்ற சந்திப்புகளால் புதிய எழுத்தாளர்களின் நட்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல்,இயற்கை எழில் மிகுந்த இடங்களில் நடப்பதால் , சென்னையின் இயந்திரத்தனத்திலிருந்து இரண்டு நாட்கள் விடுப்பு
கிடைக்கும்  என்பதாலும் ஒரு முறை கூட இந்த விழாவை தவறவிட்டதில்லை 

     அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போலவே இந்த முறை காடுகளுக்கு மத்தியில் அழகாக அமைந்திருந்தது அந்த ரிசார்ட்ஸ்..

     'சார்,என் பேர் பரத்"  என சொல்லி தனக்கென கொடுக்கப்பட்டிருந்த அடையாள அட்டையை காண்பிக்க , தொப்பைக்கு கீழே இறங்கி கொண்டிருந்த பேண்டை ஏற்றி பிடித்தபடியே சற்று  இறங்கியிருந்த மூக்கு கண்ணாடி வழியே பரத்தை மேல் நோக்கி பார்த்தார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த மேனேஜர்...
     "பிரயானம்லாம் எப்படி இருந்தது சார்"   தன் டைக்கு சற்றும் பொருத்தமே இல்லாத வெத்தலைப் பாக்கு வாயுடன் நலம் விசாரித்துக் கொண்டே ..இவன் பதிலை எதிர்பார்க்காமல் சாவியை தேடி மேஜை மீது வைத்தன அவர் கைகள்..சம்பிரதாயமான பதிலை சொல்லிவிட்டு சாவியோடு விரைந்தவனை அவர் குரல் தடுத்து நிறுத்தியது..
                              
    "சார், நேரே போய் லெப்டுல திரும்புங்கோ,அப்புறம் அது ரெண்டு பேர்  தங்குற ரூம்,உங்க கூட அனேகமா பிறைசூடன்னு ஒருத்தர் தங்கலாம்", சொல்லிவிட்டு அவர் தன் வேலையில்  மூழ்கினார் 

     அதை பெரிதும் சட்டை செய்து கொள்ளாமல் தன் ரூமை நோக்கி விரைந்த  பரத்..பையில் தடவி கையில் சிக்கிய ஒரு புத்தகத்துடன் கட்டிலில் சாய்ந்தான்.. படித்துக்கொண்டே கண்ணயர்ந்து விட்டவன் ரூமை யாரோ தட்டும் சத்தம் கேட்டு திறந்தான்..

     தடித்த உருவம்,கொஞ்சம் குள்ளமான உடல்வாகுடன் நின்று கொண்டிருந்தவரை பார்த்தவுடன் "சாப்பாடல்லாம்   எதுவும் வேணாம்பா" என சொல்ல நினைத்தவன் அதை உதறி விட்டு "சொல்லுங்க சார்" என்றான்...

     'சார்' நான் தான் பிறைசூடன்" என்றார் வந்தவர்..
     "வாங்க சார் உள்ள வாங்க சொல்லிக்கொண்டே அவருடைய இருக்கைகளைக் காட்டினான் பரத்..

    "நான், உங்களை இதுக்கு முந்தின விழாவுல பார்த்ததில்லையே இதான் முத தடவையா" இவன் வினவ ,  "ஆமாம் சார் , ஆனா இந்த ஊருக்கு பல தடவ வந்திருக்கேன், சொல்லிக்கொண்டே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் வந்தவர்..
                                         
     சிறிது நேர விசாரிப்புகளுக்கு பிறகு கதை,இலக்கியம்,சினிமா என அவர்களின் உரையாடல் நீண்டது..  பேசிக்கொண்டிருக்கும் போது தான் தன் உடலில் ஏதொ ஊர்வது போலவும்,அரிப்பது போலவும் உணர்ந்தவன் ..

    'என்னனே தெரியல சார், ஏதொ கடிக்கற மாதிரி இருக்கு ஆனா என்னனு தெரியல" அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே   "வேறொன்னுமில்லை சார் , அது மூட்டைபூச்சி" என்று அவர் சொல்ல ,

   "மூட்டைபூச்சியா" - அதிசயமாக  வாய் பிளந்தான்  அவன்...நகரத்தில் வளர்ந்து கொசு தொல்லையை அனுபவித்திருந்தவன் மூட்டைப்பூச்சி பற்றி அவ்வளவாக அறியாததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.   

  "என்ன சார்   இப்படி கேட்டுட்டீங்க இந்த ஊரிலேயே இதானே  விசேஷம் " ஏதொ சுற்றுலா தளத்தை விவரிப்பது போல சொல்ல ஆரம்பித்தவர்,

   "மூட்டைபூச்சி இருக்கே அது கண்ணுக்கே தெரியாம மெல்லிசா இருக்கும்,கடிச்சதுன்னா  தடிப்பு வரும், சுர்ருன்னு இருக்கும், உங்களுக்கு ஒன்னு தெரியுமா சார்  , மூட்டப்பூச்சிய கொன்னா அது ரத்தத்துல இருந்து நெறைய பூச்சி வரும் .அவ்வளோ சீக்கிரம் சாவாது , பெருகினே போகும்"  ..

     "இந்த பூச்சிய ராட்சசன்னு சொல்லுவாங்க" . கண்களை உருட்டிக் கொண்டே ஆர்வத்துடன் விவரித்தார் பிறைசூடன்..அவனவன் இங்க அவஸ்தை பட்டுட்ட்ருக்கான்  விவஸ்தையில்லாம என்னமோ விசேசம்னு சொல்றாரே, என்று மனதில் நினைத்துக்கொண்டே அவரை வித்தியாசமாக பார்த்தான் பரத்...

    "புரியிது சார் என்ன விசேசம்னு தானே பாக்கறீங்க, மயிலு, நாய், மாடுன்னு எவ்வளவோ சிலைய கோயில்ல பாத்திருப்பீங்க..ஆனா இந்த ஊரில மட்டும் தான் மூட்டைப்பூச்சிக்கு சிலையும் இருக்கு , ஒரு கதையும் இருக்கு"..
                               
    'தீய எண்ணங்களோடும் , தீரா ஆசைகளோடும் இறக்கரவுங்க பூச்சியாவும் பொறவு மனுசனாவும் மாறி மாறி அலையருதா இந்த பக்கத்துல ஒரு நம்பிக்கை...உங்களுக்கு சாமி, பூதம் இதுலெல்லாம் நம்பிக்கை உண்டா ?..
                                         
    "சாமி மேல உண்டு"  அவன் இழுக்க .."அப்போ பூதம் மேலயும் உண்டு"..இளித்தார் அவர்..."அதப் பத்தி பெருசா எந்த யோசனையும் இல்ல" சொல்லிக்கொண்டே உறங்குவதற்கு அவன் ஆயத்தமாக,

    "என்ன மூட்டைபூச்சி பத்தி பேசி ரொம்ப போரடிசுட்டேனோ" அவர் கேட்க, அவனுக்கு என்னவோ போல் இருந்தது "சே,சே அதெல்லாம் ஒண்ணுமில்ல சார், வந்த களைப்பு அவ்வளோ தான்'  - நாசூக்காக மறுத்தான்..

     எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை , கண் முழித்து பார்த்த போது 
 கசகச வென்று இருந்தது.. முதலில் குளித்து விட்டு கிளம்ப வேண்டும் என நினைத்துக்கொண்டே பாத்ரூமிற்கு செல்லும் போது தான் கவனித்தான் அங்கு பிறைசூடன் இல்லை.. காபி, டீ சாப்பிட போயிருப்பார் என்று எண்ணிக்கொண்டே குளித்து ரெடியானான் ...

                                                    
      "என்ன சார் ரூம்லாம் சௌகரியமா இருந்ததா? தொப்பையின் மேல் படர்ந்திருந்த டையை தடவியபடியே கேட்டார் மேனேஜர்..

     "ஒ.கே சார்" என்று மட்டும்  சொல்லிவிட்டு வந்த வேலையை முடித்துக் கொண்டு அப்படியே கிளம்புவதற்கு ஆயத்தமானான்.. 

    "சார் , என்கூட தன்கிருந்தாரே பிறைசூடன் அவர பாத்தீங்களா? '

    "சார், நான் சொல்லவே மறந்திட்டேன் , அவர் இங்க வரலேன்னு அப்பவே ..போன் பண்ணி சொல்லிட்டார்'.

    "என்ன சார் சொல்றீங்க என்கூட ரூம்ல இருந்தாரே' பரத் குழப்பமாக சொல்ல , அவனை ஏற இறங்க பார்த்தவர் 

     "சார் நான் இங்கேயே தான் இருக்கேன் , அந்த வாட்ச் மேனும் இங்க தான் இருக்கான் எங்கள தாண்டி யாரும் போகவும் முடியாது,வரவும் முடியாது, நீங்க ஏதாவது கனவு கண்டீங்களோ" - எந்த சலனமுமில்லாமல் கேட்டார் ..

     "அப்போ நேத்து ராத்திரி என்கூட இருந்தது யாரு"   கொஞ்சம் பயத்துடன் யோசித்துக்கொண்டே   வேகம் வேகமாக விரைந்தவனின்   முதுகில்   மெதுவாக , மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது அந்த  மூட்டைபூச்சி ....


 

15 August 2011

நாம் இந்தியர்...

                    
          இந்தியர்களாகிய நாம்  ஆகஸ்ட் 15 ஆன இன்று 65 வது சுதந்திர தினத்தில்  அடியெடுத்து வைக்கிறோம்..  விடுமுறை நாளான இன்று தொலைகாட்சி பெட்டிக்கு முன்னாள் அமர்ந்தோ அல்லது குடும்பத்தினர்,நண்பர்களுடன் வெளியில் சென்றோ பொழுதைக் கழிக்கலாம் என்று நினைப்பவர்கள் ஒரு வகை, இன்று ஒரு நாள் மட்டும் நெஞ்சில் தேசியக் கொடியை குத்திக்கொண்டு விறைபபுடன் அலைபவர்கள் மற்றொரு  வகை..

       எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல்   ஆனால் "டாஸ்மாக்" மூடியிருப்பார்களே என்று மட்டும் கவலை கொள்ளும் "குடி" மகன்கள் ஒரு வகை.  ."வெள்ளைக்காரனே ஆண்டிருக்கலாம்.அவனைப்போல வருமா" என்று
ஐந்தறிவோடு பேசும் அடிமைபுத்தியுள்ளவர்கள் மற்றொரு  வகை..

.       இப்படி பல தரப்பட்ட வகையினரையும் , பல ஜாதி,மத,இன,மொழி கொண்ட பல்வேறு தரப்பினரையும் தாங்கிக் கொண்டிருப்பதே நம் பாரதத்தாயின் பெருமை..அந்த பாரதத்தாயை எந்நேரமும் நெஞ்சில் தாங்கிக்கொண்டிருக்கும் வகையினரும் இங்கு ஏராளம்..பெருமையோடு நின்று விடாமல்
"நாம்  இந்தியர்" என்ற உணர்வினை உயிர் போனாலும் போகாமல் போற்றிக் காப்பதே இந்தியனாகப் பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமை...

       அந்நியர்களின் படையெடுப்புகளையும் மீறி, பலதரப்பட்ட கலாச்சார வேறுபாடுகளையும் தாண்டி இந்தியாவைப் போல உலக வரலாற்றில் எந்த ஒரு  நாடும் நிமிர்ந்து நின்றதுமில்லை,நிற்கப் போவதுமில்லை..
                    
       வணிகம் செய்வதாக கூறி உள்ளே நுழைந்து தங்களின் புத்தி சாதுர்யத்தாலும் , பிரித்தாளும் கொள்கைகளாலும் , மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களின் உதவியினாலும் இந்தியாவை ஆங்கிலேயர்கள் தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் .இவர்களின் வருகை இந்தியாவை முழு தேசமாக அவர்களுக்கு   எதிராக ஒன்றுபடுத்தியது .. இந்த ஒற்றுமை முன்பே இருந்திருந்தால் நம்மை விட 12 மடங்கு சிறிய நாடான இங்கிலாந்தால் நம்மை அடிமைப் படுத்தியிருக்க முடியாது..
  
                                                                                                                                                     
        "பட்ட காலிலேயே படும்,கெட்ட குடியே கெடும்" எனும் கூற்றிற்கேற்ப பல்வேறு இன்னல்களையும் தொடர்ந்து அனுபவித்து வந்த நம்  பாரத தேசம் பின்னர் திலகர்,காந்தி,பகத்சிங்,போஸ்,பாரதி போன்ற பல்லாயிரக்கனக்கானோரின் தியாகங்களாலும் , இரத்தம் சிந்தினாலும் இலச்சியத்தை சிதற விடாத போராட்டங்களினாலும் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 நாள் சுதந்திரம் அடைந்தது...

       உலகிலேயே இரண்டாவது பெரிய ஜனநாயக நாடாகவும் , இராணுவ பலத்தில் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்கும் இந்தியா சுதந்திரம்அடைந்து 64 ஆண்டுகள் முடிவடைந்த போதிலும் போதுமான முன்னேற்றத்தை நிச்சயம் அடையவில்லை...

       நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் முக்கியமான இரண்டு காரணிகள் ஊழலும்,தீவிரவாதமும்..  நம் 
தேசத்தை பல  முறைகள்  ஆண்டும், இப்போது இரண்டாவது  முறையாக தொடர்ந்து ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தும் காங்கிரஸ் இரண்டு காரணிகளையும் ஒழிக்காததோடு மட்டுமல்ல , அதற்கு துணை போய்க்கொண்டும்,ஒழிப்பதற்கு போதுமான முயற்சிகளை எடுக்காமல் இருப்பதும் நம் துரதிருஷ்டம..
                                    
       சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரஸ் கட்சியை  கலைக்க சொன்னார் காந்தி..அப்படி செய்த்திருந்தால் இன்று   அந்த கட்சிக்கு எதிராக   ஒரு  காந்தியவாதியே கொடி பிடிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.. அன்னா ஹசாரே முதல் முறை உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட போது எல்லோரும்   இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்..அப்பொழுதே அன்னாவின் உண்ணாவிரதம் வெற்றியா ? என்ற கேள்வி நம்முள் எழாமல் இல்லை..
                                                    
       இன்று எதிர்பார்த்ததைப் போலவே அவர் பணியவில்லை என்றவுடன் அவர் மீதும் இரண்டு லட்ச ரூபாய்க்கு ஒரு ஊழல்  குற்றச்சாட்டை  சுமத்தியிருக்கிறது மத்திய அரசு ...இரண்டு லட்சம் கோடி ஊழல் செய்பவர்களை கூட அமைச்சர்களாக்கி அழகு பார்க்கும் காங்கரஸின் இந்த செயலில் வியப்பு ஒன்றுமில்லை...
                          
       இவ்வளவு முட்டுக்கட்டைகள் இருப்பினும் இவற்றையெல்லாம் ஆட்சி மாற்றத்தினாலோ , கடுமையான சட்டங்களினாலோ,வளர்ச்சித் திட்டங்களினாலோ நிவர்த்தி செய்து விட முடியும்..ஆனால்  "நாம்  இந்தியர்" என்ற உணர்வு மேலோங்கி நிற்காமல் மேலோட்டமாக இருக்கும் வரையிலும் நம்  தேசம் வல்லமை படைத்த நாடாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை..

        நம் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் பாதைகள் வேறுபட்டிருந்தாலும் , இலக்கை நோக்கிய பார்வைகளில் வேறுபாடில்லை... இன்று சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் நம்மிடையே  மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள் ?  
                                
         ஆறுகள் காடு,மலை தாண்டி எங்கிருந்து ஓடி வந்தாலும் கடலில் கலப்பது போல நாம் அனைவரும் இந்தியா என்ற ஒரே குடைக்குள் ஒன்று பட வேண்டும்.. கார்கில் போர் , கிரிக்கெட் மேட்ச் என்று ஏதாவது நடக்கும் போது மட்டும் தேசிய ஒருமைப்பாட்டை காட்டும் நாம் , இரவு, பகல் பாராமல் வெயிலிலும், குளிரிலும் நமக்காக எல்லைப் பாதுகாப்பில் ஈடுபடும் இராணுவ வீரர்களைப் போல எந்நேரமும் தேசப்பற்றோடு இருக்க வேண்டும்..

       அண்டை நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகளைப் பார்த்து இரத்தம் கொதிக்கும் நாம் , உலகின்  எந்த ஒரு மூலையில் சக இந்தியன் துயரபட்டாலும் கொதிக்க வேண்டும் , துடிக்க வேண்டும்..அதுவே உண்மையான தேசிய உணர்வு..

        தேசிய ஒருமைப்பாட்டையும் , இந்திய இறையாண்மையையும் நாம் இரு கண்களாக பார்க்காவிடில்  நாம் கண்ணிருந்தும் குருடர்களே...

       சுதந்திர தினமான இன்றிலிருந்து நான் தமிழன் , தெலுங்கன் , மராட்டியன் என்றோ இல்லை  நான் இந்து , முஸ்லிம் , கிறிஸ்துவன்  என்றோ  சொல்லாமல்

                             "நாம்  இந்தியர்   என்று   சொல்வோம்
                              சொல்வதில் பெருமை கொள்வோம் "

              எல்லோருக்கும் என்  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

ஜெய்ஹிந்த்                                                                                                             வாழ்க பாரதம்
          


 

7 August 2011

நட்பிற்கினியவளே...


வகுப்பறையில்
வேற்று கிரக வாசிகள் போல்
ஆண்களும் பெண்களும்
வெறுமையாய் அமர்ந்திருக்க
பார்வையிலேயே புரிந்து கொண்டு
கை குலுக்களில்
தொடங்கியது
நம் நட்பு....

நான்கே நாட்களில்
புரிந்து விட்டது
நட்பிற்கினியவள்
நீயென்று....

எவன் சொன்னது ?
பெண்ணின் மனது
பெண்ணிற்குத் தான்
தெரியுமென்று..
மௌனத்தில் நீயிருந்தும்
உன்
மனதைப் படிப்பதில்
சிறந்தவர்
எனைத் தவிர
வேறெவரும் உண்டா ?...

நம் நட்பு
உயிர் வாழ
நாம் சந்தித்த
சங்கடங்கள் பல
ஆனால்
நம் மனதில்
சஞ்சலங்கள் இருந்ததில்லை...
                                       
எனக்கு
இளையராஜா பிடிக்கும்
உனக்கு ஏ.ஆர்.ரஹ்மான்...
மதில் சுவரில் அமர்ந்து
மணிக்கணக்கில் 
சண்டைகள் போட்டிருக்கிறோம்...
என்
பிறந்த நாளில்
உன் பரிசாக
கைகளில் தவழ்ந்தது
இசைஞானியின் இசை பேழை...

சுயநலம் மறந்தும்
சுயத்தை இழக்கவில்லை...

வெட்கத்துடன்
திருமண அழைப்பிதழ்
கொடுத்த போது தான்
நீ
பெண் என்பதை
நான் உணர்ந்தேன்...

அதை
என் மூலம் கொடுத்து
ஊர் வாயை அடைத்தாய்...
                               
என் காதலுக்கு
தூது போனவள்
நீ..
நம் நட்பை
கொச்சைப்படுத்திய காதலையே
தூக்கியெறிந்தவன்   நான்...

இன்று அவள்
எங்கே இருக்கிறாள்
தெரியவில்லை...

இத்தனை வருடங்கள்
ஆனாலும்
வாசம் மாறாமல்
வீசிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு...6 August 2011

தி.மு.க வினர் கைது பழியா? பாடமா?

                                           
       கடந்த இருபது ஆண்டு கால கழக ஆட்சியில் எது நடந்ததோ இல்லையோ எதிர் கட்சியினரை கைது செய்வது என்பது வழக்கமாக நடந்தேறி வருகிறது ... இருவரில் எவர் இதை முதலில் ஆரம்பித்திருந்தாலும் புரையோடிவிட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியை இனி யாரும் கலைப்பது கடினம்...

            இந்த முறை ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம்,ஒழுங்கை நிலை நாட்டுவதே முதல் இலக்கு என்று சொன்ன முதல்வர் அதை செய்தும் காட்டி வருகிறார்..இது வரை 50க்கும் மேற்பட்ட தி.மு.க வினர் நில அபகரிப்பு வழக்குகளிலும்,குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்..

      சாதாரண நிர்வாகிகளில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் , அன்பழகன் போன்ற பெருந்தலைகள் வரை யாரையும் காவல் துறை விட்டு வைக்கவில்லை..தேசிய மனித உரிமை கழகத்திடம் தி,மு.க வினர் நேரில் சென்று முறையிடும் அளவிற்கு விஷயம் முற்றி விட்டது...
                                           
      சென்ற ஆட்சி காலத்தில் நில அபகரிப்புகள்,கொலை மிரட்டல்கள் இவையெல்லாம் நிறைய நடந்திருந்தும் இதில் சம்பத்தப்பட்டவர்கள் ஆளும் கட்சியினர் என்பதால் காவல் துறையினரால் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை..இப்போது ஆட்சி மாற்றத்தால் சம்பத்தப்பட்டவர்கள் நேரில் வந்து கம்ப்ளைன்ட் கொடுப்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது அதி.மு.க தரப்பினரின் வாதம்...

       அரசியல் பழி வாங்கும் நோக்காத்தல் மட்டுமே இந்த கைது படலம் தொடர்கிறது என்பது தி.மு.க வினரின் வாதம்..நில அபகரிப்பு விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருந்தும் இது போன்ற நடவடிக்கைகளை ஏன் சொந்த கட்சியை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கருப்பையா போன்றவர்களின் மீது எடுக்கவில்லை என்பது தி.மு.க வினர் வைக்கும் குற்றச்சாட்டு....

        சொத்து குவிப்பு, டான்சி உட்பட இருபத்தியேழு வழக்குகள் தி.மு.க வின் ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா மீது போடப்பட்டன..ஆனால் அதில் ஒன்றை தவிர மற்ற வழக்குகளில் இருந்து கோர்ட் அவரை விடுவித்தது..இவையெல்லாம் அப்போது எந்த வித ஆதாரமும் இல்லாமல் போடப்பட்டவையா ? அப்படியென்றால் அது பழி வாங்கும் நடவடிக்கை இல்லையா ?..இந்த கேள்விகளுக்கு தி.மு.க விடம் பதில் இல்லை...

        செஸ் விளையாட்டில் முதலில் சிப்பாய்,மந்திரி,ராணி என ஒவ்வொன்றாய் அடித்து விட்டு கடைசியில் ராஜாவிற்கு வருவார்கள்..காங்கிரஸின் கைங்கைர்யத்தால் முதலில் ராஜாவே கைது செய்யப்பட்ட பிறகு கனிமொழி கைது செய்யப்பட்டார்...தி.மு.கவும் தேர்தல் கூட்டணி என்று சொல்லி சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்டது ....
                                 
      ஒரு பக்கம் எல்லோரும் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்க, மு.க.ஸ்டாலினோ "ஏய் நானும் ஜெயிலுக்கு போறேன், எல்லோரும்  நல்லா பாத்துங்குங்க,நானும் ரவுடி தான் ரவுடி தான்"  என்று "தலைநகரம்" வடிவேலு பாணியில் கலைவாணனை கைது செய்வதற்கு                       முன்னாள் தானாகவே வலிய வந்து வேனுக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டார் ..

         பொதுவாக பேரணி என்றாலே சலசலக்கும் மதுரை மு.க.அழகிரியின் வலது,இடதுகளான அட்டாக் பாண்டி,பொட்டு சுரேஷ் இவர்களின் கைதால்
வெலவெலத்துப் போனது...பேரணியில் கூடிய சிலரும் காவல்துறையினரை                                                                                                                     பார்த்ததும் "ஏய் ..கை முறுக்கு, சுண்டல் " என்று கூவி விட்டு பேருந்துகளை நோக்கி விரைந்ததாக ஒரு நம்பத்தகுந்த தகவல்...
                                              
        தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த வித இரண்டாம் யோசனைக்கும் இடமே இல்லை..அதிலும் குறிப்பாக இப்போது கைது செய்யப்பட்டு வரும் பெரும்பாலானோர் மக்களுக்கு சேவைகள் மட்டுமே புரிந்த தியாகிகளும் அல்ல...

         கட்டப் பஞ்சாயத்து, காவல் துறையின் செயல்பாட்டில் தலையீடு போன்ற செயல்களில் ஈடுபடும் ஆளும்கட்சியினருக்கும்                                     முதல்வர் எச்சரிக்கை விடுத்திருப்பது ஆரோக்கியமான ஆரம்பம்..

        தி.மு.கவினர் கைது பழி வாங்கும் படலமா? பதர் அறுக்கும் வைபவமா? எதுவாக இருந்தாலும் மக்களின் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிப்பவர்களின் மீது எந்த வித கட்சி பேதமுமின்றி காவல் துறை நடவடிக்கை வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ....


5 August 2011

கண்களில் விழுந்தாய்...

          
கண்களில் விழுந்தாய்
காதலில் கரைந்தாய்..
                                    
சந்தோசம் கொடுத்தாய்
கவலைகள் கெடுத்தாய்...

எனக்கு வலித்தால்
நீ துடித்தாய்
துன்பம் காட்டாமல்
நடித்தாய்...

எனை பார்த்துக்கொண்டாய்
குழந்தையாய்
உனை பார்த்ததில்லை
அகந்தையாய்...
                                       
என் மீது
எனக்கே
நம்பிக்கை ஊட்டினாய்
என்னுள்
ஞானத்தீ மூட்டினாய்...

துவண்ட போது
தேற்றினாய்
திறமைகளை போற்றினாய்...

எனக்காக பிறந்தாய் 
சுயநலம் மறந்தாய்...

இப்படி எல்லாமே தந்தாய்...

காமமற்ற பொழுதுகளில் 
நீ
மேலும் ஒரு தாய்...  

 

1 August 2011

யார் கடவுள் - சிறுகதை

                                                                                     
     மதிய உணவுக்குப்பின் முழிப்பும் இல்லாத ,தூக்கமும் இல்லாத ஒரு மந்தமான சூழலுக்குள் சிவா ஆட்பட்டுக்கொண்டிருக்கும் போது 'என்னமோ ஏதோ" என்ற கோ பாடலுடன் அவன் செல்போன் ஒலித்தது.. சலிப்புடன் எடுத்தவன் சுரேஷ் பெயரைப்பார்த்ததும் சந்தோசமானான்...

     "டே மச்சி எப்படிடா இருக்க" -
    "ரொம்ப சந்தோசமா இருக்கேண்டா..எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்குடா" 
  "ஹே கன்க்ராட்ஸ்...சுகப் பிரசவம் தானே! ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க.?" -
   "ரொம்ப நல்லா இருக்காங்கடா! நாலு வருஷம் கடவுள வேண்டினது வீணா போகல, இல்லேனா இத்தனை கஷ்டத்துக்கப்புறமும் சுகப்பிரசவமா ஆகியிருக்குமா" -

    "டே திருந்தவே மாடியாடா? கண்ணுக்கு தெரிஞ்சு கஷ்டப்பட்டு காப்பாத்தின டாக்டர்ஸ விட்டுட்டு கண்ணுக்கே தெரியாத கடவுள போய் பாராற்றியேடா! -     "டே அப்படில்லாம் சொல்லாதடா..நிச்சயம் நான் கும்புடுற சாமி தாண்டா இதுக்கு காரணம்..இல்லேனா இத்தனை நாளா  ஏன் இது நடக்கல.. உனக்கு நம்பிக்கை இல்லேனா அதுக்காக இப்படி சொல்றதா ?.....
                                          
   "சரிடா..கடவுள் இருக்கார்னா ஏன் டாக்டர்சா தேடி தேடி போய் டெஸ்ட் பண்றாங்க... கோவிலுக்கு போயிட்டு அப்படியே விட்டுற வேண்டியது தானே!....
  "அததுக்கு நேரம் வரும் போது கடவுளே பாத்து செய்வாரடா." -

 " ஆமா அவருக்கு ஒவ்வொன்னா பாத்து செய்யருது தான் வேல , போடா உலகத்திலேயே மனுஷன் கண்டுபிடிச்ச ரெண்டு மோசமான விஷயம் சொல்லு"

     சிவா இப்படி கேட்டவுடன் சட்டென்று சுரேஷ் " அணு ஆயுதமும்,மதமும்" என்றான்..ஆனால் அவன் சிவாவிடமிருந்து இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை....
                                                       
  "இல்லவே இல்ல " கடவுளும் , காசும் " நீ சொன்ன மத்ததெல்லாம் இத வெச்சு வந்ததுதான்...இப்ப கூட நீ கடைசியா பாத்த டாக்டர் தான் சரியான ட்ரீட்மென்ட் கொடுத்து இத நடத்திருக்காங்க புரிஞ்சுக்கோ" -

சிவா இப்படி சொல்லவே சுரேஷ் கொஞ்சம் குழம்பி போனான்.....

"சரி அதெல்லாம் விடு..குழந்தைக்கு என்ன பேர் வைக்கப் போற..நல்ல மாடர்ன் பேரா வைடா.."

 "அதாண்டா ஒண்ணுமே புரியல..என்ன பேர் வைக்கிறதுன்னு" -
                                                        
  "நான் ஒரு ஐடியா சொல்லட்டா , பேசாம உன் மனைவிக்கு பிரசவம் பாத்த லேடி டாக்டர் பேரே வைச்சுடு..என்னைக் கேட்டா உன் சந்தோசத்துக்கு அவங்க தான் காரணம்.."

   இது சரியான யோசனையாகப் படவே சுரேஷ் சரியென சொல்லி போனை கட் செய்தான்.....

   இனிப்புகள்,பழங்களுடன் டாக்டர் அறைக்குள் சென்றான் சுரேஷ்.....

 "டாக்டர் ரொம்ப தேங்க்ஸ்...எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல..."

"நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்..குழந்தைக்கு என்ன பேர் வைக்க போறீங்க"

"உங்க பேரை தான் டாக்டர் வைக்க போறேன்" -
  "என் பேரா ..ஏன்னு தெரிஞ்சுக்கலாமா ?"

"என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க..நீங்க கொடுத்த ட்ரீட்மென்ட் தான் குழந்தை பொறக்க காரணம் . .நீங்க எனக்கு கடவுள் மாதிரி."
                                                   
"அப்படியா ? யார் சொன்னா?..என் கைல எதுவும் இல்ல..எல்லாம் கடவுள் செயல்..நீங்க ஒரு பிரதோஷம் விடாம சிவன் கோவிலுக்கு போவீங்கன்னு உங்க மனைவி சொன்னாங்க...
அதனால சிவன் பேரையோ ,சக்தி பேரையோ வைங்க அதான் பொருத்தமாக இருக்கும்"..

நாங்கல்லாம் வெறும் மனுஷங்க எங்கள கடவுளாக்கிடாதீங்க"

     டாக்டரின் அறையை விட்டு சுரேஷ் புது நம்பிக்கையுடன் வெளியே வந்தான்...

Related Posts Plugin for WordPress, Blogger...