28 November 2014

மதுரை பசங்க - MADURA GUYS ...


சொந்த ஊர் மதுரைக்கு சென்று இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும் . இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லூரி நண்பன் பத்ரி வாட்ஸ் ஆப்பில் மதுரை கல்லூரி பி.காம் க்ளாஸ் மேட்ஸ் அனைவருக்காகவும் ஒரு க்ரூப்பை ஏற்படுத்தியிருந்தான் . அதில் வெட்டியாக அளவளாவிக் கொண்டிருந்த போது திடீரென ஒருநாள் அனைவரும் ஏன் மதுரையில்  மீட் செய்யக்  கூடாது என்று அவனே திரியை கிள்ளிப்போட அதுவே பற்றியெரிந்து நவம்பர் மாதம் மதுரையில் கெட் டுகெதர் என்று முடிவானது . நண்பர்கள் சிலருடன் ஏற்கனவே தொடர்பிலிருந்தாலும் பி.காம் முடித்து பதினைந்து வருடங்கள் கழித்து எங்கள் செட்டில் உள்ள அனைத்து நண்பர்களும் ஒரே இடத்தில் அதுவும் மதுரையில் மீட் செய்யப் போகிறோம் என்று நினைக்கும்போதே மனசு ஏனோ மலரும் நினைவுகளுக்குள் போனது  ...

மதுரை கல்லூரியை என்னால் மறக்கவே முடியாது.  மூன்று வருடங்கள் அங்கே படித்தேன் என்பதை விட நண்பர்களுடன் சேர்ந்து நிறைய லூட்டி அடித்தேன் என்பதே நிஜம். வேறு வேறு பள்ளிகளில்  படித்ததாலோ என்னவோ எனக்கு பள்ளி நாட்களில் பள்ளி நண்பர்களை விட ஏரியா நண்பர்களே அதிகம் . ஏரியா நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதற ஆரம்பிக்கும் போது  தான் நான் கல்லூரியில் முதல் வருடம் காலடி எடுத்து வைத்தேன் . மதுரை கல்லூரி ரெகுலரில் கண்டிப்பாக சீட் கிடைக்கும் என்று தெரிந்தும் அப்பாவுக்கு தெரியாமல் அப்ளிக்கேஷனை கிழித்துப் போட்டதற்கு காரணம் ஈவினிங் காலேஜ் கோ - எட் என்பது மட்டுமே . அதோடு அண்ணன்கள் இருவரும் ரெகுலரில் படித்திருந்தாலும்  ஈவினிங் காலேஜில் படித்துக் கொண்டிருந்த என் அத்தை பெண் ( ரெண்டு வருடம் சீனியருங்க ) காலேஜ் பற்றி கொடுத்திருந்த பில்ட் அப் மனதை பட்டாம்பூச்சி போல பறக்க வைத்திருந்தது ...

ஆண்கள் பள்ளியிலேயே படித்ததாலோ என்னவோ சில சுமாரன பெண்கள் கூட சூப்பராகவே தெரிந்தார்கள் . ஆனால் அதற்கும் இருந்த போட்டி இருக்கிறதே அடடடடா !. முதல் பெஞ்சில்  உட்காருபவனெல்லாம் மூளைக்காரன் என்று நினைப்பார்கள் என்கிற நினைப்பில் அமர்ந்திருந்த என் நம்பிக்கை வீண் போகவில்லை . யார் செட் ஆவார்கள் என்கிற டவுட்டில் இருந்த என்னிடமே சிலர் டவுட் கேட்டார்கள் . முதல் பெஞ்சை விட கடைசி  பெஞ்சே கவனிக்க வைக்கும் என எனக்கு போகப் போக புரிந்தது . கடைசி பெஞ்சில் இருந்து மொக்கை கேள்வி கேட்டால் கூட கிளாசே திரும்பிப் பார்க்கும் . முதலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆர்வமாக பதில் சொன்ன வாத்தியார்கள் எங்களின்  உள்நோக்கம் புரிந்த பிறகு நாங்கள் இருக்குமிடம் வந்தே பதில் சொன்னார்கள்...

பிறகு அதுவும் குறைந்து எங்களின் கேள்விகளுக்கு வகுப்பறைக்கு வெளியே விடை தேடிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள் . அந்த டீலிங் ரொம்பவே பிடித்திருந்ததால் வெறும் அட்டன்டென்சில் சைன் செய்து விட்டு கேலரியில் எங்கள் வாழ்க்கைப் பாடத்தை படித்துக் கொண்டிருந்தோம் . ஆனாலும் கட்டடிக்கும் எங்கள் க்ரூப்பில் முக்கால் வாசி பேர் ஆங்கிலம் மற்றும் புள்ளியியல் வகுப்புகளுக்கு மட்டும் கடலோர கவிதைகள் சத்யராஜ் போல முகத்தை வைத்துக் கொண்டு ஆஜராகி விடுவோம் . அது  ஏனென்று சொல்லாமலேயே புரியும் என்று நினைக்கிறேன் . என்னைப் போலல்லாமல் கோ எட்டில் படித்திருந்த மாணவ மாணவிகளிடமுமே கூட ஒருவித இறுக்கம் இருந்தது . முதல் வருட முடிவில் அந்த இறுக்கம் தளர்ந்ததை நன்றாகவே உணர முடிந்தது ...

முதல் வருடம் நண்பன் சேஷனுக்கு அவன் ஆளை சைட் அடிக்க மாட்டேன் என்று செய்து கொடுத்திருந்த  சத்தியத்தை சாயங்கால காலேஜ் என்பதால் சில சமயங்களில் மீறியிருந்தாலும் படித்த மூன்று வருடங்களில் முடிந்தவரை காப்பாற்றினேன் என்றே சொல்லலாம். அவனுக்கு பெண்கள் மத்தியில் க்ரேஸ் இருந்தாலும் ( மச்சி இதுக்கெல்லாம் அழக் கூடாது சரியா ! ) ஏனோ ஒரே பெண்ணையே கடைசி வரை காதலித்தான் . எங்கள் செட்டை  தவிர்த்து கல்லூரிக்கு செல்ல வேண்டுமென்கிற ஆர்வத்தை அதிகம் கொடுத்தது கல்சுரல்ஸ் . அதற்கான தாகத்தை என்னுள் விதைத்து நண்பன் மைக் மது . பி.எஸ்.சி யில் படித்தாலும் எங்கள் பிகாம் செட்டுடனேயே அதிகம் சுற்றியவன் . ரஜினி , கமல் , ரகுவரன் என்று நிறைய குரல்களில் அசால்டாக மிமிக்ரி செய்து எல்லா போட்டிகளிலும் அப்லாசோடு சேர்த்து கப்சையும் அள்ளுபவன் . கெஸ்ட் ப்ளேயராக எங்கள் டீமில் கிரிக்கெட் ஆட வந்து எங்களையே கெஸ்ட்களாக மாற்றியவன் ,..

இரண்டாம் வருடத்திலிருந்து மதுரை மட்டுமல்லாமல் திருச்சி , பாண்டி , கோவை என எல்லா யுனிவர்சிட்டி லெவல் போட்டிகளிலும் பதக்கங்களோடு  சேர்த்து பணமும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால் நான் , சேஷன் , மது , தோசை ( மற்றொரு பி.எஸ்.சி நண்பன் ) அனைவரும் க்ளாசை மறந்து கல்சுரல் அறையிலேயே கதியென கிடப்போம் . இப்படி ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்த அந்த சின்ன  கேப்பில் நண்பன் ரம்மி ரெகுலர் காலேஜ்  பெண்ணை காதலித்து கல்யாணம் முடிக்கும் அளவிற்கு பெரிய ஆட்டமே  ஆடி முடித்திருந்தான் . வெளியில் முரட்டுத் தோற்றத்தில் இருந்தாலும் நட்புக்காக எதையும் செய்யக் கூடியவன் ரமேஷ் எ ரம்மி ...

எங்கள் கல்சுரல் செட் ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பாக  ஃபாத்திமா காலேஜ் பெண்களின் நட்பு கிடைத்த பிறகு வேறொரு உலகத்தில் பிரயாணிக்கத் தொடங்கியிருந்தோம் . நான் , மது , தோசை மூவருக்கும் ஆல் இந்தியா கல்ச்சுரல் மீட்டிற்காக டிசம்பரில் சென்ற ஹைதராபாத் பயணம் இன்று வரை மறக்க முடியாத அனுபவமாக இருக்குமென்றே நம்புகிறேன் . ஏனெனில் அப்போது தான்  ஃபாத்திமா காலேஜ் பெண்களின் நட்பு கிடைத்தது . தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த பயணம் பெண்களைப் பற்றிய சரியான புரிதலைக் கொடுத்தது . காமம் மட்டும் சார்ந்த குறுகிய வட்டத்திலிருந்து விலகி பெரிய விசாலமான பார்வையை கொடுத்தது . இன்று அதில் ஒரு பெண்ணை தவிர வேறு யாருடனும் எனக்கு தொடர்பில்லா  விட்டாலும்  உலகில் எங்கோ ஒரு மூலையில் இதே போன்றதொறு நினைவில் அவர்கள் வாழ்ந்து  கொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன் ...

கோபுவை காரணம் காட்டி நான் , ரம்மி , சேஷன் மூவரும் காலேஜுக்கு எதிராக நடத்திய  ஸ்ட்ரைக் ( இந்த விஷயத்தில் ஜூனியர்கள் கொடுத்த ஒத்துழைப்பு அபாரம்  ) , கல்சுரலுக்கு போனோமா , காசு பாத்தாமோ என்று இல்லாமல் பாண்டியில் லோக்கல் ஆட்களுடன் நாங்கள் கூட்டிய பஞ்சாயத்து , அந்த பஞ்சாயத்துக்காக பயந்து ஊருக்கு வராமல் அடுத்த நாள் " இவர்கள் சந்தித்தால் " போட்டியில் நானும் சேஷனும் ஜெயித்தது , வேலியில்  போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாக லவ் லெட்டெர் எழுதிக் கொடுக்க வந்தவன் லவ்வரையே உஷார் செய்தது ( மச்சி குடும்பத்துக்குள்ள குழப்பம் வேணான்னு பேர் போடல ) , சிவகாசியில் எங்கள் கல்லூரி எல்லா கப்புகளையும் வென்றதோடு எனக்கு மேன் ஆ ஃப் தி சீரியஸ் கிடைத்தது , திருச்சி யில் கவிதைப் போட்டிக்கான முதல் பரிசை கணையாழி ஆசிரியர் ஞானக்கூத்தன் கைகளால் வாங்கியது , பத்ரி பிறந்தநாள் பார்ட்டிக்கு சரக்கடித்து விட்டு க்ளாசுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்தது என்று எல்லாமே மறக்க முடியாத நினைவுகள் . இன்று வேலை , குடும்பம் என்று எல்லோரும் பிரிந்திருந்தாலும் கல்லூரியை பற்றிய நினைவுகள் எங்களை பாலமாக இன்னும் இணைத்துக் கொண்டு தானிருக்கிறது ...

இந்த பதிவை எங்கள் கெட் டுகதெருக்கு ப்ளான் போட்டுக் கொடுத்த பத்ரி , அதற்கு செயல் வடிவம் கொடுத்த துபாய் கார்த்தி , மாப்பிளை அழைப்புக்கு கூப்புடும் பொண்ணு வீட்டுக்காரன் போல முதல் நாளே மதுரையில் டேரா போட்டு நண்பர்களுக்கு தண்ணியாக  அல்லாமல் தண்ணிக்காக மட்டும் பணத்தை செலவு செய்த கட்டிங் ( என்ன பெயர் பொருத்தம் ) ,  150 ரூபாய் ப ஃபே வில்  ஒரே ஒரு இட்லி மட்டும் தின்ற சவூதி ஷேக் சபரி , தேவையில்லாத வாக்கு வாதங்களில் ஈடுபடாமல் காரியத்தில் மட்டும் கண்ணாயிருந்து ஆ ஃப் பாட்டிலை சைலெண்டாக காலி செய்த சேஷன் , சரக்கடிக்கா விட்டாலும் பில்லை பார்த்தாலே  போதையேறும் அளவிற்கு சைட் டிஸ்ஷை ஆர்டர் செய்யும் கோபால் , நட்பிற்காக நிறைய  வருடம் கழித்து தீர்த்தா ஸ்நானம் செய்து கொண்ட யோகி , நீங்க அடுத்து கோவாவுக்கு போவீங்களோ , குவைத்துக்கு போவீங்களோ  , யாரு ஸ்பான்சருன்னு முடிவு பண்ணிக்குங்க என்று கார்த்திக் , கட்டிங் இருவருக்கும் வயிற்றை  கழங்க வைத்த ரம்மி மற்றும் கெட் டுகதெருக்கு வந்திருந்த , வராத அனைத்து மதுரை கல்லூரி நண்பர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் ...


Related Posts Plugin for WordPress, Blogger...