30 August 2015

தனி ஒருவன் - THANIORUVAN - தலைவன் ...


ஜெயம் ரவிக்கு இந்த குருப்பெயர்ச்சி நன்றாக வொர்கவுட் ஆகியிருக்கிறது என நினைக்கிறேன் . ஒரே வருடத்தில் மூன்று  படம் , அதிலும் இதுவரை  அவர் நடித்த படங்களிலேயே தனித்து நிற்கிறான் இந்த தனி  ஒருவன் . ஜெயம் ரவியை வைத்து ரீமேக் மட்டுமே செய்து கொண்டிருந்த மோகன்ராஜா ( முன்னர் ஜெயம் ராஜா ) தனது தம்பிக்கு முதன்முறை ஆகச்சிறந்த சொந்த கதையை தேர்வு செய்து அதை எழுத்தாளர்கள் சுபா வோடு சேர்ந்து திரைக்கதையாக்கி முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியை அட்டகாசமாக நடிக்க வைத்து ஜெயித்திருக்கிறார் ...

தனது  வழியில் குறுக்கிடும் வில்லன்களை மட்டும் துவம்சம் செய்யும் ஹீரோக்கள் மத்தியில் தனக்கு நிகரான எதிரியை டார்க்கெட் செய்து தானாகவே சென்று அடிக்கிறான் இந்த தனி ஒருவன் . ஐபிஎஸ் போஸ்டிங்குக்கு முன்னரே சக பேட்ச் மேட்களுடன் சேர்ந்து இரவில் குற்றவாளிகளை பிடிக்கும் மித்ரன் ( ஜெயம் ரவி ) எல்லா குற்றங்களுக்கும்  மூலமான சித்தார்த் அபிமன்யு ( அரவிந்த்சாமி ) வை  தேடிப்பிடித்து களையறுப்பதே கதை ...

படத்தின் டைட்டிலே அரவிந்த்சாமிக்கு தானோ என்பது போல படமே அவரின் சிறு வயதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது . மங்காத்தா அஜித்துக்கு பிறகு இந்த அளவு நெகடிவ் கேரக்டருக்கு ரசிகர்களிடையே அவ்வளவு  வரவேற்பு . அஜித் போல ரசிகர் பட்டாளம் எல்லாம் இல்லாத ஒருவருக்கு இவ்வளவு கைதட்டல் கிடைக்க காரணம் அந்த கேரக்டரின் வடிவமைப்பும் , அதை தனது  அசால்டான நடிப்பால் அனாயசமாக செய்த அரவிந்த் சாமியும் . இந்த படத்திற்காக உடல் இளைத்து செம மேன்லியாக  இருக்கிறார் ரோஜா நாயகன் . இந்த படம் அரவிந்த்சாமிக்கு ஒரு மைல்கல் ...

ஜெயம்ரவி நிமிர்ந்து நில் மூலம் கவனிக்க வைத்தவர் தனி ஒருவனில் அதையும் தாண்டி மித்ரனாகவே மாறி ரசிக்க வைக்கிறார் . தோற்று விட்டோம் என்று கோபப்படும் இடத்திலும் , நண்பன் சாவை நேரில் பார்த்து கலங்கும் இடத்திலும் ஜெயம் ரவியிடம் தேர்ந்த நடிப்பு . சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்து விட்டு டகால்டி செய்யாமல் படத்தோடு வரும் முக்கியமான ரோலில் நயன்தாரா . க்ளோசப் காட்சிகள் அம்மணியின் வயதை காட்டுகிறது . அரவிந்த்சாமியின் அப்பாவாக வரும் தம்பி ராமையா தனியாக காமெடி ட்ராக் இல்லாமல் திரைக்கதையோடு சேர்ந்து சிரிக்க வைக்கிறார் . முதலமைச்சராக நாசர் , நண்பனாக கணேஷ் வெங்கட்ராமன் எல்லோருமே சரியான தேர்வு ...


ராம்ஜி யின் ஒளிப்பதிவு இருட்டுப் பக்கங்கள் நிறைந்த படத்துக்கு நல்ல வெளிச்சம் . ஹிப் ஹாப் தமிழா இசையில் காதல்  கிரிக்கெட் , தனி ஒருவன் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றான் . படத்திற்கு பிஜி ப்ளஸ். க்ரைம் நாவல் போன்ற விறுவிறுப்பை திரைக்கதையில் இயக்குனரோடு இணைந்து சுபா கொடுத்திருக்கிறார்கள் . அதிலும் அடுத்தடுத்த சீன்களுக்கான சிங்கிங் சூப்பர் . " மைனாரிட் டி  அரசு " போன்ற வசனங்கள் வரி விலக்குக்காக யாரையோ திருப்திப்படுத்த வைக்கப்பட்டதோ ?! ...

காக்க காக்க , என்னை அறிந்தால் ஸ்டைலில் நல்ல காப் , கொடூரமான வில்லன் மோதல் தான் கதை . ஆனால் போரடிக்காமல் , ட்ராக் மாறாமால் நிறைய யோசித்து புது புது சீன்களை வைத்த விதத்தில் நம்மை கட்டிப்போடுகிறான் தனி ஒருவன் . எல்லோரும் ட்ரைனிங் கில் இருக்கும் போது ஜெயம் ரவி மட்டும் சீனியர் போல ஆர்டர் போடுவது ஏன் ? , இவர்கள் செய்யும் இரவு வேலைகளை எந்த போலீசும் கண்டு கொள்ளாதது ஏன் ? , அரவிந்த் சாமியின் குற்றங்களில் முதலமைச்சர் நாசரின் பங்கு என்ன ? பல்லாயிரம் கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வரும் ஏன்ஜெலினா வுக்கு எதற்கு இவ்வளவு குறைவான பாதுகாப்பு ? மருந்து மாபியா அரவிந்தசாமிக்கு ஒரு கார் ட்ரைவர் கூடவா இல்லை ? கோர்ட்டில் வீடியோ ஆதாரத்தை எடிட் செய்து கொடுக்கும் ஜெயம் ரவிக்கு அதுவே ஆப்பாகி விடாதா ? போன்ற கேள்விகளை நமது ஆறாம் அறிவு எழுப்பினாலும் இரண்டேமுக்கால் மணி நேரம் நம்மை வேறெதையும் யோசிக்க விடாமல் மெஸ்மெரிசம் செய்து கூட்டத்தை கூட்டும் இந்த தனி ஒருவன் - தலைவன் ...

ஸ்கோர் கார்ட் : 45


ரேட்டிங் : 3.75* / 5*

16 August 2015

வாலு - VAALU - சமத்து ...


ரு படத்தில் பிரச்சனை வந்தால் அதை கிடப்பில் போட்டு விட்டு அடுத்தடுத்த படத்துக்கு தாவும் ஹீரோக்கள் மத்தியில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக வாலு படத்தின் ரிலீசுக்காக தன் சொந்த படத்தையே ஒத்தி வைத்த சிம்புவின் சின்சியாரிட்டியை பாராட்ட வேண்டும் . அதே போல படம் லேட்டாக வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஒப்பனிங் லேட்டஸ்டாகவே இருக்கிறது ...

வேலை வெட்டி எதுவும் இல்லாவிட்டாலும் வீட்டின் செல்லப்பிள்ளை ஷார்ப்
( சிம்பு ) . இது போன்றவர்களை முழு நேர பிசியாக்கும் காதல் , ப்ரியாவை
( ஹன்சிகா ) பார்த்தவுடன் அவருக்கு வருகிறது . ஆனால் முறைப்பையன்
( படம் பூரா முறைச்சுக்கிட்டே தான் இருக்காரு ) அன்பு ( ஆதித்யா ) வுடன் ப்ரியாவுக்கு திருமணம் செய்து வைப்பதாய் வீட்டில் பேசி வைத்திருக்கிறார்கள் . ( நல்ல வேளை  இதுவரை யாருமே சொல்லாத வித்தியாசமான கதைன்னு டைரக்டர் எந்த பேட்டிலையும் சொல்லல ) . சோ கடைசியில் இது போன்ற படங்களில் எது நடக்குமோ அது சுகமாவே நடந்து படம் முடிகிறது . ஆனால் சிம்புவின் ஸ்க்ரீன் ப்ரெசென்சும் , போரடிக்காத திரைக்கதையும் இந்த சாதாரண கதையை காப்பாற்றுகிறது ...


பாட்டு , டான்ஸ் , பைட் , பஞ்ச் , அளவான நடிப்பு என ஒரு சக்சஸ்புல் ஹீரோவுக்கு தேவையான  எல்லா திறமைகளும் சரிவரப் பெற்றவர் சிம்பு . ஆனால் சொந்த பிரச்சனையோ அல்லது சுழியோ அவரை அலைக்கழிக்க அந்த இடைவெளியில் சில ஸ்டார்கள் மேலும் தங்களை ஸ்ட்ராங் ஆக்கிக் கொண்டார்கள் . ஒரு வழியாக வாலு மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் சிம்பு ஒரே பாணி கதைகளை மட்டும் தேர்ந்தெடுக்காமல் வெரைட்டியாக படங்களில் நடித்து மேலும் வளர வாழ்த்துக்கள் ...

படத்தின் கால தாமதத்துக்கு சாட்சி போல மைதா மாவு ஹன்சிகா சில இடங்களில் சப்பாத்தி போல இளைத்தும் , சில இடங்களில் புரோட்டா போல பெருத்தும் இருக்கிறார் . ஆனாலும் சின்ன குஷ்பு சிரிப்பில் மயக்குகிறார் . ஹன்சிகா வோடு மட்டுமல்ல சந்தானம் - விடிவி கணேஷ் இருவரோடும் சிம்புவின் கெமிஸ்ட்ரி வழக்கம் போல நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருப்பது படத்தின் பலம்  . அப்பா வாக வரும் நரேன் சில காட்சிகளில் நெகிழ வைக்கிறார் . தமனின் இசையில் சிம்பு வின் நடனம் தாளம் போட வைக்கும் ...

என்ன தான் படத்தின் டிளே கூடுதல் ஆதரவைக் கொடுத்திருந்தாலும் அதை கெடுக்காத வகையில் எண்டெர்டைன்மெண்டாக  படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் விஜய் சந்தர் . படத்தின் க்ளைமேக்சுக்கு முன் வரும் சண்டை தேவையில்லாதது போல பட்டாலும்   ஓவர் ஆக்ஷன் காட்சிகளை  காட்டி நம் உடம்பை ரணமாக்காமல் விட்டதற்கு இயக்குனருக்கு நன்றி . பழைய கதை , படத்தின் நீளம் போன்ற குறைகளை தாண்டி சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி தல , தளபதி ரசிகர்களையும் இழுக்கும் வகையில் ஸ்மார்ட்டாக சொன்ன விதத்தில் சிம்பு விட்ட இடத்தை பிடிக்க உதவியிருக்கும் இந்த வாலு - சமத்து ...

ஸ்கோர் கார்ட் : 40

ரேட்டிங் : 2.5* / 5*

15 August 2015

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -VSOP - வெட்டியா சிரிக்கணும்னா ஒருதடவ பாக்கலாம் ...


பாஸ் எ பாஸ்கரன் வெற்றிக்கு பிறகு ராஜேஸ் - ஆர்யா - சந்தானம் கூட்டணியில் ஆர்யாவின் 25 வது படமாக வந்திருக்கிறது வாசுவும் சரவணனும் ஒண்ணா குடிச்சவங்க சாரி படிச்சவங்க ( V S O P ) . 25 வது படத்தில் எந்தவித புதுமைக்கும் வழி கொடுக்காமல் சேம் அண்ட் டெஸ்டெட்  டைரக்டர் ராஜேசுடன்  கை கோர்த்ததில் நடிகராக ஆர்யா ஏமாற்றினாலும் தயாரிப்பாளராக  ஸேஃப் கேம் ...

வாசு ( சந்தானம் ) வும் , சரவணனும் ( ஆர்யா ) சிறு வயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள் . இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் பெண்களால்
( பானு , தமனா ) நட்பிற்கு ஏற்படும் விரிசலை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே V S O P . வழக்கம் போல கதைக்கு மெனக்கெடாத ராஜேஸ் & கோ என்ன தான் பழைய படங்களின் தேஜாவு போல இருந்தாலும் திரைக்கதைக்கு உழைத்திருக்கிறார்கள் ...


பொதுவாக ஹீரோ இருந்தால்  அவனுக்கு ஒரு நண்பன் இருப்பான் . இந்த படத்தில் யார் ஹீரோ யார் நண்பன் என்று பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு படம் முழுவதும் இருவருமே வியாபித்திருக்கிரார்கள் . ஆர்யா வழிசலான சில சிரிப்புகளில் மட்டும் தனியாக தெரிகிறார் . மற்றபடி அவர் சந்தானத்திடம் சரண்டர் . படத்தை தன் தோள்களில் தூக்கி நிறுத்துவது சந்தானத்துக்கு புதிதில்லை என்றாலும் எல்லோரையும் கலாயத்து அவர் செய்யும் காமெடி ஒரு லெவெலுக்கு மேல் கடி .  வெறும் வார்த்தை ஜாலங்களாக மட்டும் இருக்கும் காமெடிக்கு வித்யூ ராமின் ரியாக்சன்ஸ் பெரிய ரிலீஃப் . ஆனால் காமெடி  என்ற பெயரில் அவர் வீட்டில் சந்தானம் அண்ட் கோ அடிக்கும் லூட்டிகள் டூ மச் அண்ட் போரிங் . தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் கருணாகரன் இது போன்ற முக்கியத்துவம் இல்லாத ரோல்களை தவிர்க்கலாம் ...

இனிமேல் ராஜேஸ் படங்களுக்கு " மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு " என்று ஓரமாக டைட்டில் போடுவதுக்கு பதில் பெரிதாக எப்பொழுதுமே போட்டு விடலாம் . அந்த அளவுக்கு படத்தில் கடியை விட குடி அதிகம். நட்பு , காதல் , குடி , கலாய் ,,, கொஞ்சமாவது மாத்தி யோசிங்களேன் பாஸ் ?! . டி.இமானின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே . நீரவ்ஷா வின் ஒளிப்பதிவு பளிச் . ராஜேஸ் படங்களில் ஒரு அட்வான்டேஜ் . என்ன  நடக்கும் என்பது நமக்கு முன்பே தெரியும் . அது எப்படி நடக்கிறது என்று மட்டும் பார்த்தால் போதும் . அந்த விதத்தில் படம் ஆங்காங்கே நமக்கு கொட்டாவியை வரவைத்தாலும் ஆல் இன் ஆல் போல மொக்கையாக இல்லை . பாஸ் போல பெஸ்டாகவும் இல்லை . அவர்கள் பாஷையில் சொன்னால் பீர் போல வயிற்றை ரொப்பாமல் , ஃபுல் போல பெரிய போதையையும் கொடுக்காமல் கட்டிங் லெவெலுக்கு இருக்கிறது  V.S.O.P . வெட்டியா சிரிக்கணும்னா ஒருதடவ பாக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 39

ரேட்டிங் : 2.25* / 5* 


Related Posts Plugin for WordPress, Blogger...