15 August 2015

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -VSOP - வெட்டியா சிரிக்கணும்னா ஒருதடவ பாக்கலாம் ...


பாஸ் எ பாஸ்கரன் வெற்றிக்கு பிறகு ராஜேஸ் - ஆர்யா - சந்தானம் கூட்டணியில் ஆர்யாவின் 25 வது படமாக வந்திருக்கிறது வாசுவும் சரவணனும் ஒண்ணா குடிச்சவங்க சாரி படிச்சவங்க ( V S O P ) . 25 வது படத்தில் எந்தவித புதுமைக்கும் வழி கொடுக்காமல் சேம் அண்ட் டெஸ்டெட்  டைரக்டர் ராஜேசுடன்  கை கோர்த்ததில் நடிகராக ஆர்யா ஏமாற்றினாலும் தயாரிப்பாளராக  ஸேஃப் கேம் ...

வாசு ( சந்தானம் ) வும் , சரவணனும் ( ஆர்யா ) சிறு வயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள் . இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் பெண்களால்
( பானு , தமனா ) நட்பிற்கு ஏற்படும் விரிசலை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே V S O P . வழக்கம் போல கதைக்கு மெனக்கெடாத ராஜேஸ் & கோ என்ன தான் பழைய படங்களின் தேஜாவு போல இருந்தாலும் திரைக்கதைக்கு உழைத்திருக்கிறார்கள் ...


பொதுவாக ஹீரோ இருந்தால்  அவனுக்கு ஒரு நண்பன் இருப்பான் . இந்த படத்தில் யார் ஹீரோ யார் நண்பன் என்று பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு படம் முழுவதும் இருவருமே வியாபித்திருக்கிரார்கள் . ஆர்யா வழிசலான சில சிரிப்புகளில் மட்டும் தனியாக தெரிகிறார் . மற்றபடி அவர் சந்தானத்திடம் சரண்டர் . படத்தை தன் தோள்களில் தூக்கி நிறுத்துவது சந்தானத்துக்கு புதிதில்லை என்றாலும் எல்லோரையும் கலாயத்து அவர் செய்யும் காமெடி ஒரு லெவெலுக்கு மேல் கடி .  வெறும் வார்த்தை ஜாலங்களாக மட்டும் இருக்கும் காமெடிக்கு வித்யூ ராமின் ரியாக்சன்ஸ் பெரிய ரிலீஃப் . ஆனால் காமெடி  என்ற பெயரில் அவர் வீட்டில் சந்தானம் அண்ட் கோ அடிக்கும் லூட்டிகள் டூ மச் அண்ட் போரிங் . தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் கருணாகரன் இது போன்ற முக்கியத்துவம் இல்லாத ரோல்களை தவிர்க்கலாம் ...

இனிமேல் ராஜேஸ் படங்களுக்கு " மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு " என்று ஓரமாக டைட்டில் போடுவதுக்கு பதில் பெரிதாக எப்பொழுதுமே போட்டு விடலாம் . அந்த அளவுக்கு படத்தில் கடியை விட குடி அதிகம். நட்பு , காதல் , குடி , கலாய் ,,, கொஞ்சமாவது மாத்தி யோசிங்களேன் பாஸ் ?! . டி.இமானின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே . நீரவ்ஷா வின் ஒளிப்பதிவு பளிச் . ராஜேஸ் படங்களில் ஒரு அட்வான்டேஜ் . என்ன  நடக்கும் என்பது நமக்கு முன்பே தெரியும் . அது எப்படி நடக்கிறது என்று மட்டும் பார்த்தால் போதும் . அந்த விதத்தில் படம் ஆங்காங்கே நமக்கு கொட்டாவியை வரவைத்தாலும் ஆல் இன் ஆல் போல மொக்கையாக இல்லை . பாஸ் போல பெஸ்டாகவும் இல்லை . அவர்கள் பாஷையில் சொன்னால் பீர் போல வயிற்றை ரொப்பாமல் , ஃபுல் போல பெரிய போதையையும் கொடுக்காமல் கட்டிங் லெவெலுக்கு இருக்கிறது  V.S.O.P . வெட்டியா சிரிக்கணும்னா ஒருதடவ பாக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 39

ரேட்டிங் : 2.25* / 5* 


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...