20 July 2015

மாரி - MAARI - மினிமம் காரண்டீட் ...


னது முதல் இரண்டு படங்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் பாலாஜி மோகன்  , இரண்டு ஹிட்களை தொடர்ந்து தனுஷ் இருவரும் இணைந்திருக்கும் படம் மாரி . இருவரின் காம்பினேஷன் , புதுப்பேட்டை க்கு பிறகு தனுஷ் போட்டிருக்கும் டான் வேஷம் , படத்தின் ட்ரைலர் எல்லாமே சேர்த்து கூடுதல் எதிர்பார்ப்பை கொடுத்திருப்பது  படத்துக்கு பலம் ஆனால் அதை பூர்த்தி செய்யாமல் விட்டது பலவீனம் ...

சின்ன கொலை மூலம் பெரிய டான் ஆகி விடும் மாரி ( தனுஷ் ) கட்டப் பஞ்சாயத்துடன் சேர்த்து புறா ரேசிலும் கொடிகட்டிப் பறக்கிறார் . இவரது எதிரி பேர்ட் ரவி ( மைம் கோபி ) , லோக்கல் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்  ( விஜய் யேசுதாஸ் ) இருவரும்  மாரியை ஒழிக்கும் திட்டத்தில் ஜெயித்தார்களா என்று நாம் நிறைய மசாலா படங்களில் மாறி மாறி பார்த்த சாதா கதையை தனுஷ் மூலம் மெருகேற்றி கொடுத்திருக்கிறார்கள் ...


எந்த வேடம் கொடுத்தாலும் அதை பெர்ஃபெக்டாக செய்யும் சில நடிகர்கள் வரிசையில் தனுஷ் எப்போதோ சேர்ந்து  விட்டார் . அந்த வகையில் புதுப்பேட்டையில் பார்த்த  சீரியஸ் கொக்கி குமாரில் இருந்து விலகி காமெடியும் கலந்த டான் வேஷத்தில் தனுஷ் கச்சிதம் . செஞ்சிருவேன்  என்று பஞ்ச் டயலாக் பேசிவிட்டு கடைசி வரை ஒன்றும்  செய்யாவிட்டாலும் கூலர்ஸ் , கழுத்து சங்கிலி , வாயில் சிகரெட் இத்தோடு ஆக்சன் காட்சிகளில் வேகம் என நிஜ ரவுடியாகவே ராவுடி செய்கிறார் தனுஷ் . ஆனால் இவர் ரவுடியாவதற்கு காரணமாக காட்டப்படும்  ஃப்ளாஷ்பேக் படு வீக் ...

இன்டர்வெல் ப்ளாக்கில் ஒரு ட்விஸ்ட் தருவதை தவிர காஜல் அகர்வாலுக்கு படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை . தனுஷின் அல்லக்கைகளாக வரும் இருவரும் படத்துக்கு  ப்ளஷ் . குறிப்பாக தனக்கு ஏன் சனிக்கிழமை என்று பேர் வந்தது என விளக்கும் சீனில் ஆரம்பித்து கிடைக்கிற கேப்பில் தனுஷை கூட விட்டு வைக்காமல் காமெடி கெடா வெட்டும் ரோபோ  சங்கர் ஆர்டினரி படத்துக்கு எக்ஸ்ட்ராடினரி எண்டெர்டைன்மெண்ட் . காமெடியன்கள் எல்லாம் ஹீரோவாகிக் கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு முன்னணி காமெடியனாக வருவதற்கு இந்த படத்தின் மூலம் நல்ல வாய்ப்பு . ஆல் தி பெஸ்ட் ...


தனுஷை பார்த்தாலே அல்லு விடும் மைம் கோபி , போலீஸ் வேஷத்துக்கு சுத்தமாக பொருந்தாத விஜய் யேசுதாஸ் ( அறிமுகம் ) என இரண்டு வில்லன்களுமே மாரி படத்துக்கு ரொம்ப ஸாரி . பாடல்களை அப்படியிப்படி சுட்டிருந்தாலும் ( டானு பாடல் - ஆத்தாடி ஆத்தாடி  தேன் மொட்டு தான் ) பி.ஜி யில் பின்னியெடுக்கிறார் அனிருத் . ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு இதம் ...

படத்தின் பரீ ரிலீஸ் மார்க்கெட்டிங் , தனுஷின் ஸ்டார் வால்யு , கலகலவென போகும் முதல் பாதி , பாட்ஷாவை நினைவுபடுத்தும் மார்கெட் சீன்கள் போன்றவை மாரிக்கு பூஸ்ட் . சொதப்பலான வில்லன்கள், சொதசொதப்பான இரண்டாம் பாதி , மாமனாரே  மறந்து விட்ட சிகரெட்டை தனுஷ்  படம் நெடுக ஸ்டைலாக புஸ்புஸ் என்று ஊதி நெகடிவ் பப்ளிசிட்டி கொடுப்பது போன்றவை படத்துக்கு ஸ்கேரி . மொத்தத்தில் படு மொக்கையாகவும் இல்லாமல் மாஸ் மசாலாவாகவும் இல்லாமல் தனுஷின் அடிமட்ட ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் வந்திருக்கும் மாரி - மினிமம் காரண்டீட் ...

ஸ்கோர் கார்ட் : 40

( பின்குறிப்பு  : படத்தில் வன்முறை , ஆபாச காட்சிகள் இல்லாததால் யு சான்றிதழ் கொடுத்ததுக்கு பதில் இளசுகளை அதிகம் இன்ஃப்லுயன்ஸ் செய்யும் வகையில் தனுஷ் படம் நெடுக சிகரெட் பிடித்ததற்கு தண்டனையாக யூஏ கொடுத்திருக்கலாம் )




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...