30 December 2013

மதயானைக் கூட்டம் - MADHAYANAIKOOTTAM - மிரள வைக்கும் ...


ருடக் கடைசியில் எதிர்பாராமல் வரும் சில படங்கள் நம்மை ஏகாதிபத்தியம் செய்து  விடுவதுண்டு . அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வந்திருக்கும் மதயானைக்கூட்டத்தை சேர்க்கலாம் . அரிவாள் , கத்தியுடன் அவிங்க , இவிங்ய என்று அலையும் மதுரை மாந்தர்களை பற்றிய மற்றுமொரு படம் தான் என்றாலும் அதை மண்  மணம் மாறாமல் யதார்த்தமாக சொன்ன விதத்தில் ஸ்கோர் செய்கிறார் சுகுமாரன் ...

ரெண்டு பொண்டாட்டிக் காரரான  ஜெயக்கொடி தேவரின் ( முருகன் ஜி ) மறைவுக்கு பிறகு குடும்ப  பகை கொளுந்து விட்டு எரிகிறது .  மூத்த மனைவி செவனம்மா ( விஜி ) ,  அவள் மகன் , அவளுடைய சகோதரன் வீரத் தேவர்
( வேல ராமமூர்த்தி ) , இளைய மனைவியின் மகன் பார்த்திபன் ( கதிர் ) இப்படி காதாப்பாத்திரங்களின் உணர்ச்சித்  தீயில் நம்மை குளிர் காய வைக்கிறார் இயக்குனர் ...

முதல் படமே கதிருக்கு இப்படி அமைந்தது அதிர்ஷ்டம் . அதனை  இன்னும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளாமல் போனது துரதிருஷ்டம் . நிறைய இடங்களில் உணர்ச்சிகளை காட்டாமல் உம்மென்றே இருக்கிறார் . அடுத்தடுத்த படங்களில்  தேறி விடுவார் என்று நம்பலாம் . எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் அதில் கல் தோன்றா காலத்து காதலியின் அத்தியாவசியத்துக்காக ஓவியா ...விஜி க்கு இந்த படம் ஒரு மைல்கல் . படம் முழுவதும் ஒரு விதமான வெறித்த பார்வையால் நம்மை மிரள வைப்பவர் க்ளைமேக்ஸ் காட்சியில் கதறி அழுது நம்மை கலங்க வைக்கிறார் . இவருக்கும் இவர் சகோதரராக  நடித்திருக்கும் எழுத்தாளர் வேல ராமமூர்த்திக்கும் இடையேயான சீன்கள் குட்டி கிழக்கு சீமையிலே . படத்தில் வரும்  எல்லோரும் யதார்த்தமாக நடித்திருப்பது பெரிய பலம் . ரகுநந்தனின் பின்னணி இசை ரம்யம் ...

சாவில் தொடங்கி சாவில் முடியும் படம் வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் சின்ன சின்ன சடங்குகளுக்கும் காட்டப்படும் டீட்டைளிங்கில் நம்மை கட்டிப் போடுகிறது . தேவர் மகன் , விருமாண்டி போல தேவர் பின்னணி படம் தான் என்றாலும் அதிலிருந்த ஸ்டார்டம் இதில் இல்லாததால் படத்துடன் இயல்பாக ஒன்ற முடிகிறது . சாவு ஒப்பாரியிலேயே எல்லா கதாபாத்திரங்களையும் விளக்கிய விதம் , அவரவர் கோணத்திலிருந்து பார்க்கும் போது செய்வது சரி தான் என்பது போன்று அமைக்கப்பட்ட பாத்திரப் படைப்பு , யதார்த்தமாக இருந்தாலும் சின்ன சின்ன ட்விஸ்டுடன் நகரும் திரைக்கதை என எல்லாமே மனதில் பதிகின்றன ...

படத்தோடு ஒன்றாத காதல் , யதார்த்த சினிமாவில் திடீரென க்ளைமேக்ஸ் இல் புகுத்தப்படும் ஹீரோயிசம் , " புள்ளக் குட்டிங்கள படிக்க வைங்கடா " என்று கமல் சொல்லி 23 வருடங்களாகியும் இன்னும் பயபுள்ளைங்க திருந்தலையோ என்று லேசாக வரும் சலிப்பு இப்படி குறைகள் இருந்தாலும் படம் பார்த்து சில  நாட்கள் ஆகியும் தன் நினைவுகளால் இந்த மதயானைக் கூட்டம் நம்மை மிரள வைக்கும் ...

ஸ்கோர் கார்ட் : 45

28 December 2013

2014 - மோடி ஆர் நோபடி - MODI OR NOBODY ...


திர்பார்த்ததைப் போலவே 2014 தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்ததும்  , தி.மு.க காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியிருப்பதும் நடந்திருக்கிறது . வாஜ்பாயை பாராட்டிய கையோடு  பி.ஜே.பி கூட்டணிக்கு தாவுவார்  என்று எதிர்பார்த்த நிலையில் அதனுடன் கூட்டு இல்லை என்று கலைஞர் அறிவித்திருப்பது ஆச்சர்யமே . ஆனால் இன்னும் தேர்தலுக்கு குறைந்தது நான்கு மாதங்கள்  உள்ள நிலையில் இது தான் அவருடைய உறுதியான முடிவா என்பதையும் சொல்வதற்கில்லை...

ஏனெனில் முன்பொரு முறை மத சார்புடைய  (!) பி.ஜே.பி யுடன் கூட்டு  இல்லை என்று சொன்ன  கலைஞர்  அதனோடு கூட்டணி வைத்துக் கொண்ட பின் " நான்  இருக்கும் இடத்தில் தான் மதசார்புக்கு இடமில்லையே " என்று மழுப்பியதை யாரும் மறந்திருக்க முடியாது . பெரிய கட்சியான தி.மு.க கூட்டணியில் சேர்ந்திருந்தால்  பி.ஜே.பி க்கு அது வலு சேர்க்கும்  என்றாலும் ஊழலுக்கு எதிரான அதன் பிரச்சாரத்திற்கு   பெரிய சறுக்கலை ஏற்படுத்தியிருக்கும்  ...

கடைசியில் ஒரு வழியாக இரண்டு பிரதான கழகங்களும் காங்கிரசை  கை கழுவியிருக்கும் இந்த வேளையில் ம.தி.மு.க ., பா.ம.க போன்ற இதர கட்சிககளை  தன்னுடன் இணைத்துக் கொண்டு பி.ஜே.பி தேர்தலை சந்திப்பது தன்னை மேலும் வலுப்படுத்திக்கொள்ள அதற்கு பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை . பி.ஜே.பி யை தீண்டத்தகாத கட்சி போல வர்ணித்து வந்த காங்கிரசிற்கு இன்று அதே நிலை ஏற்பட்டிருப்பதும்  எதிர்பார்த்ததே...

தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதை விட தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதே தே.மு.தி.க விற்கு வலிமை சேர்க்கும் . 2016 இல் நடக்கவிருக்கும் சட்டசமன்ற தேர்தலுக்கும் தன்  தலைமையில் கூட்டணியை தயார்படுத்திக் கொள்ள விஜயகாந்திக்கு இந்த கூட்டணி அருமையான சந்தர்ப்பம் . காங்கிரஸ் மேல் எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கும் இந்த நிலையில்  பி.ஜே.பி யுடன் சேர்வது அவரது சரிந்த செல்வாக்கை கொஞ்சமேனும் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கலாம் ...

நடந்து முடிந்த ஐந்து சட்டமன்ற தேர்தல்களில் பி.ஜே.பி மூன்றில் ஜெயித்திருப்பதும் , பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக டில்லியில் உருவெடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது . மூன்று மாநிலங்களை கைப்பற்றியதை கணக்கில் கொள்ளாமல் டில்லியில் தோற்றதையே காரணமாக்கி மோடி அலையெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல சில மீடியாக்கள் விஷமமாக பிரச்சாரம் செய்து வருவது வேடிக்கையாக இருக்கிறது . டில்லியை பொறுத்த  வரை காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் பி.ஜே.பி க்கு மட்டும் விழாமல் ஆம் ஆத்மி க்கும் சென்றதே பி.ஜ.பி யின் சறுக்கலுக்கு காரணம் . ஆனால் தேசிய அளவில் காங்கிரஷிற்கு வலுவான மாற்றாக பி.ஜே.பி மட்டுமே உள்ளது ...

அதே நேரத்தில் திரிமூணல் , எஸ்.பி , அ.தி.மு.க உள்ளிட்ட வலுவான பிராந்திய கட்சிகள் காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள்  பி.ஜே.பி க்கு மட்டும் போகாமல் பார்த்துக் கொள்ளும் . பிஹார் , ஓடிஸா இரண்டிலும் தனக்கிருந்த வலுவான கூட்டணியை பி.ஜே.பி  இழந்திருப்பதும் அதற்கு பெரிய சறுக்கல் . மோடி அலை இதையனைத்தும் சரிக்கட்டுவது கஷ்டமே . இருப்பினும் பி.ஜே.பி வலுவாக உள்ள  குஜராத் , மத்திய பிரதேஷம் , ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களையும் சேர்த்து 200 இடங்களுக்கு மேல் கிடைத்து விட்டால் அது ஆட்சியமைப்பது உறுதி . இதை மனதில் வைத்து அவர்கள் தேர்தல் வியூகம் அமைப்பார்கள் என்று நம்பலாம் ...

தங்களால் ஆட்சி அமைக்க முடியாதது கிட்டத்தட்ட உறுதியானதால் பி.ஜே.பி யை வர விடாமல் தடுப்பதே காங்கிரசின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் . பிராந்திய கட்சிகளின் களப்பில் அமையும் மூன்றாவது  அணிக்கு அது வெளியிலிருந்து ஆதரவு தரலாம் . இந்த கட்சிகளுக்குள் யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது இமாலய சிக்கல் . அப்படியே ஒருவரை  ஒருமித்த ஆதரவுடன் தேர்ந்தெடுத்தாலும் அவர் எத்தனை நாட்கள் பிரதமாராக நீடிப்பார் என்பது கேள்விக்குறி . ஏற்கனவே இது போன்ற சிக்கலான சந்தர்ப்பங்களை இந்திய ஜனநாயகம் சந்தித்திருக்கிறது ...

பல விதமான பிரச்சனைகளையும் தாண்டி இன்று மக்கள் முன் நிற்கும் மிகப்பெரிய பிரச்னை விலைவாசி உயர்வு . அடுத்து பி.ஜே.பி ஆட்சியமைத்தாலே இதனை உடனடியாக சரிக்கட்ட முடியாது , அப்படியிருக்க யார் வழி நடத்தப் போகிற தலைவர் என்பது தெரியாமலேயே பல கட்சிகள் அணி சேர்ந்து ஆட்சியமைத்தால் ஏற்கனவே படு குழியில் இருக்கும் நமது பெருளாதாரம் அதள பாதாளத்திற்குள்  போவது உறுதி ...

இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் குழப்பமில்லாத நிலையான ஆட்சியை மத்தியில் அமர்த்துவதே ஒவ்வொரு குடிமகனின் தலையாய ஜனநாயக கடமை . அதற்கு பி.ஜே.பி , காங்கிரஸ் , அ.தி.மு.க , தி.மு.க என்று கட்சிகளின் தனிப்பட்ட நிறை குறைகளையும் தாண்டி நாட்டை வழிநடத்துவதற்கு ஒரு  நல்ல தலைவன் தேவை . இன்று நம் கண் முன் தெரியும் ஒரே  தலைவன் மோடி . அவர் வந்து மட்டும் பெரிதாக என்ன செய்து விடப்போகிறார் என்று எதிர்மறையாக கேட்காமல் , ஒரு சாதாரண டீ வியாபாரியாக இருந்து இன்று ஒரு மாநிலத்திற்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலைமைச்சராகி அதை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் ஒருவர் ஏன் இந்திய நாட்டிற்க்கு பிரதமாராக வரக் கூடாது என்று ஒவ்வொருவரும் யோசிக்க ஆரம்பித்தால் ஒரு விடிவு பிறக்கும் ...

எது நடந்தாலும் காங்கிரஷிற்கு தான் ஓட்டுப் போடுவேன்  என்பவர்கள் போட்டு விட்டுப் போகட்டும் . ஆனால் காங்கிரஸ் ஆட்சியின் மேல் வெறுப்பிலிருப்பவர்கள் தங்கள் ஓட்டுக்களை பி.ஜே.பி க்கு போடுவது மட்டுமே சரியான தீர்வு .  ஏனெனில் டில்லி யில் மக்கள் எடுத்த குழப்பமான முடிவால் அவர்கள் எந்த கட்சியை தூக்கியெறிய நினைத்தார்களோ அதே கட்சியின் ஆதரவுடன் தான் இன்று ஆம் ஆத்மி யே அரசமைக்க முடிகிறது . அதே போல 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் அனைத்தும் பி.ஜே.பி க்கு சென்றடையாத நிலையில் காங்கிரசின் ஆதரவுடன் மீண்டும் பல கட்சிகளின் கூட்டணியாட்சி அமையக் கூடிய பரிதாபமான நிலைக்கு நாளை மீண்டும் நாம் தள்ளப்படலாம் . அப்படி ஒரு நிலைமை வராமல் இருப்பதற்கு ஒரே தீர்வு மோடி ஆர் நோபடி ...


22 December 2013

பிரியாணி - BIRIYAANI - சுவைக்கலாம் ...


ல் இன்ஆல் அழகுராஜா விற்காக ஒன்றரை மாதம் தள்ளி இப்பொழுது ரிலீஸ் ஆகியிருக்கும் வெங்கட் பிரபு வின் பிரியாணி ரசிகர்களுக்கு முழுமையான விருந்தாக அமையாமல் போனாலும் தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றிக்காக காத்திருக்கும் கார்த்தி யின் பசியை  தீர்க்கும் என்று நம்பலாம் ...

சுகன் ( கார்த்தி ) , பரசு ( ப்ரேம்ஜி  ) இருவரும் இணைபிரியா நண்பர்கள் . ஜொல்சுடன் லெக் பீசுக்கு ( மாண்டி தாக்கர் ) ஆசைப்பட்டு இருவரும்  இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் .  பின் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே கதை ( ! ) ... 


கார்த்தி க்கு பிரேம்ஜி பார்க்கும்  பெண்களையும் சேர்த்து உஷார் செய்யும் ப்ளேபாய் கேரக்டர் . ரசித்து நடித்திருக்கிறார் . பழக்க தோஷத்திற்காக இரண்டு சண்டைகள் போட்டாலும் அளவாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார் . படத்திற்கு  பெரிய ப்ளஸ் ப்ரேம்ஜி . ஒவ்வொரு பெண்ணாக தேடிப்பிடித்து கடைசியில் கார்த்திக்கு தாரை வார்க்கும் போது ரசிக்க வைக்கிறார் ...


ஹன்சிகா படத்தில் இருக்கிறார் . நாசர் , ராம்கி , சம்பத் என எல்லோருமே பொருத்தமாக நடித்திருக்கிறார்கள் . முக்கியமான கதாபாத்திரத்திற்கு மாண்டி நல்ல தேர்வு . பொதுவாக வெங்கட் பிரபு வின் படங்களுக்கு நன்றாக இசையமைக்கும் யுவனுக்கு இது 100 வது படம் என்பது கூடுதல் சிறப்பு . " நா நனனா " , " மிஷிஷிப்பி " பாடல்கள் முணுமுணுக்க  வைக்கின்றன ...


வழக்கம் போல கதைக்கு மெனெக்கெடாமல் விறுவிறுப்பான திரைக்கதையை கையிலெடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு . நீளமாக தெரிந்தாலும் சுவாரசியமாக போகும் முதல் பாதி , அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்கும் திரைக்கதை , பாடல்களை படமாக்கிய விதம் எல்லாமே பிரியாணியை மணக்க வைக்கின்றன ...

சரக்கடிப்பது தவிர வாழ்க்கையில் ஒன்றுமே இல்லையென்பது போல ஹேங்ஓவர் கொடுக்கும் ஓவர் டோஸ் சீன்கள் , பெண்களை மட்டப்படுத்தும் வசனங்கள் , நாசர் வேஷத்தில் பிரேம்ஜி போகும் ஜெய்சங்கர் காலத்து பார்முலா , ட்விஸ்ட் இருந்தாலும் நிறைவை தராத க்ளைமேக்ஸ் போன்றவை பிரியாணியின் காரத்தை குறைத்தாலும் பொழுதுபோக்கிற்காக ஒரு முறை சுவைக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41


4 December 2013

விடியும் முன் - VIDIYUM MUN - வெளிச்சம் ...
புற்றீசல் போல வரும் லோ பட்ஜெட் படங்களுள் அத்திப் பூத்தாற்ப் போல ஒன்றிரண்டு மட்டும் கூர்ந்து கவனிக்க வைக்கும் . அப்படி கவனிக்க வைத்த படங்களுள் ஒன்று விடியும் முன் . இப்படியுமா ஒருவன் வக்கிரமாக சிந்திப்பான் என்றும் , இப்படிப்பட்ட இருட்டு சம்பவங்களை வைத்து  படமெடுக்கும் தையிரியம் ஒருவனுக்கு இருக்கிறதே என்றும் இரு வேறு வகையான எண்ண ஓட்டங்களை மனதிற்குள் விதைக்கிறார்  இயக்குனர் பாலாஜி குமார் ...

விலை மாது ரேகா ( பூஜா ) ஒரு 12 வயது சிறுமியுடன்  ( மாளவிகா ) மழை இரவில் தப்பியோடுகிறாள் . பணக்காரன் சின்னையா ( வினோத் ) , ரவுடி துரைசிங்கம் , பிம்ப் சிங்காரம் ( அமரேந்திரன் ) , அவன் நண்பன் லங்கேஷ் ( ஜான் விஜய் ) என நால்வரும் அந்த இருவரையும் துரத்துகிறார்கள் . அது  ஏன் ? எதற்கு ? எப்படி என்பதை விறு விறு திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள் ...

அசிங்கமான பிச்சைக்காரியாக நடித்ததாலோ என்னவோ நான் கடவுளுக்கு பிறகு வாய்ப்பில்லாமல் இருந்த பூஜா விற்கு இந்த படத்தில் பெயர் சொல்லும் வேடம் . குற்ற உணர்ச்சி , விரக்தி இரண்டையும் அவர் கண்கள் இயல்பாகவே வெளிப்படுத்துகின்றன . சின்ன பெண் மாளவிகா கொஞ்சம் கொஞ்சமாய்  மனதை ஆக்ரமிக்கிறாள் . அவளுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்கிற பதைபதைப்பை ஏற்படுத்துவதே திரைக்கதையின் தனிச்சிறப்பு . அவளுக்கும் பூஜாவுக்கும் இடையேயான சீன்கள் குட்டி ஹைக்கூ ...


அமரேந்திரன் , ஜான் விஜய் இருவரும் சில இடங்களில் படத்தின் மேல் நமக்கு ஏற்படும் அயர்ச்சியை  போக்க உதவியிருக்கிறார்கள் . வசனங்கள் அதிகம் இல்லாமல் கண்களால் மட்டும் பேசும் வினோத் நல்ல தேர்வு . சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு , கிரீஸ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பலம் ...

அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது பிடிக்காத கதை , விறுவிறுப்பு இருந்தாலும் ஆங்காங்கே தொய்வுடன் செல்லும் மிஸ்கின் பாணி திரைக்கதை , சலிப்பை தரும் க்ளைமாக்ஸ் , உடல் ரீதியான ஆபாசங்கள் இல்லாவிட்டாலும் அதைவிட அதிகமாக மன ரீதியான கிளர்ச்சியை அல்லது வக்கிரத்தை தூண்டி விடக்கூடிய அபாயமுள்ள சீன்கள் இப்படி விடியும் முன் நிறைய  இருட்டுப் பக்கங்களை கொண்டிருக்கிறது ...

தர்க்க ரீதியான விவாதங்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஒரு சினிமாவாக கிட்டத்தட்ட இரண்டரை  மணி நேரம் திரைக்கதைக்குள் நம்மை ஒன்ற வைத்த தந்திரம் , கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு , படம் முடிந்த பிறகும் அது நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு போன்றவை இருட்டையும் தாண்டி படத்திற்கு வெளிச்சத்தை கொடுக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 45

Related Posts Plugin for WordPress, Blogger...