Showing posts with label ஆதலால் காதல் செய்வீர். Show all posts
Showing posts with label ஆதலால் காதல் செய்வீர். Show all posts

18 August 2013

ஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...


கடந்த  ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால்  தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை  மனதில் அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் இயக்குனர் சுசீந்திரன் ராஜபாட்டையால்  தனக்கு ஏற்பட்ட சரிவை சமன் செய்து விட்டார் என்றே சொல்லலாம் ...

கல்லூரி மாணவ மாணவிகளிடையே காதல் என்ற பெயரில் நடக்கும் காம களியாட்டங்களையும் , அதனால் ஏற்படும் விபரீதங்களையும்  கார்த்திக்
( சந்தோஷ் ) , ஸ்வேதா ( மனிஷா ) ஆகிய இருவரின் வாழ்க்கையின் மூலம் ஆபாசமில்லாமல் படம் பிடித்துக்காட்டுவதே " ஆதலால் காமம் சாரி காதல் செய்வீர் " ...


ஹீரோ சந்தோஷ் பக்கத்து வீட்டுப்  பையன் போல என்றெல்லாம்  சொல்ல முடியாத படிக்கு படு சுமாராக இருக்கிறார் . அழகான பொண்ணுங்க அட்டு பசங்களுக்கு தான் மாட்டும் என்றெல்லாம்  லாஜிக் சொன்னாலும் இவரது காஸ்டிங் சறுக்கல் . ஆனால் ஒரு லெவலுக்கு மேல் அவரையும் உற்று கவனிக்க வைப்பதே திரைக்கதையின் பலம் . மனிஷாவுக்கு  வழக்கு எண்ணை விட இதில் வெயிட்டான கேரக்டர் .  கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . காதல்  காட்சிகளை விட சோக காட்சிகளில் நடிப்பு மிளிர்கிறது . இவர்களுடன் வரும் நண்பர்கள் குழுவும் நம்மை கவனிக்க வைக்கிறார்கள் ...

டெம்ப்ளேட் அம்மாக்களுக்கு மத்தியில் மனிஷாவின் அம்மாவாக வரும் துளசியின் நடிப்பு ரியலி சூப்பர்ப் . மகளிடம் கோபப்படும் போதும் சரி , மகளுக்காக மற்றவர்களுடன் சண்டை போடும் போதும் சரி யதார்த்த அம்மாவை கண் முன் நிறுத்துகிறார் "மகாநதி "  துளசி . இவரது நடிப்புக்கு முன்னால்  நீண்ட இடைவெளிக்குப் பின்  நடிக்க வந்திருக்கும் பூர்ணிமா பாக்யராஜ் , ஜெயப்ரகாஷ் போன்றோர் கொஞ்சம் மறைந்து விடுகிறார்கள். புதுமுகங்களை வைத்து குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு யுவனின் இசையும் , சூர்யாவின் ஒளிப்பதிவும் பெரிய பலம் . டைட்டில் பாடல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது ...


நாடோடிகள் , ராட்டினம் போன்ற படங்களின் சாயல் கதையில் இருந்தாலும் சொன்ன விதத்தில் நம்மை  சொக்க வைக்கிறார் சுசீந்தரன் . புரிதலை விட பைக் இருந்தால் போதும் என்று நினைக்கும் காதலி , காரியம் முடிந்தவுடன் காதலின் வீரியத்தை குறைக்கும்  காதலன் , வேறு வழியில்லாமல் பிள்ளைகளின் போக்கிற்கு தலையாட்டும் பெற்றோர் என்று எல்லா கதாபாத்திரங்களிலும் யதார்த்தத்தோடு அதில் உள்ள சுயநலத்தையும்  தோலுரித்துக் காட்டுகிறது படம் . திரைக்கதை டீட்டைலாக இருக்கும் அதே சமயம் என்ன என்று யோசிப்பதற்குள் படம் முடிந்தும் விடுவது மற்றொரு சிறப்பு ...

க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று யூகித்திருந்ததால் முடிவு பெரிய ஜெர்க்கை கொடுக்கா விட்டாலும் அதனை சொல்லி முடித்த விதம் நிச்சயம் நெகிழ்ச்சியை கொடுத்தது .  ஹீரோ , கவித்துவமாக இருந்தாலும் சம்பந்தமில்லாத படத்தின் தலைப்பு , திட்டமிட்டு தப்பு செய்பவர்கள் முக்கியமான விஷயத்தில் திட்டமிடாமல் கோட்டை விட்டது ( படத்தின் திருப்புமுனையான அந்த சம்பவம் ஆக்சிடண்டலாக நடந்திருந்தால் இன்னும் யதார்த்தமாக இருந்திருக்கும் ) போன்ற குறைகள் படத்தில் இருந்தாலும் ஏதோ இருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நேரில் நின்று பார்த்தது போன்ற ஒரு உணர்வை கொடுத்த விதத்தில் படம் நிச்சயம் பார்ப்பவர்களை கவரும் ...

ஸ்கோர் கார்ட் : 44 
Related Posts Plugin for WordPress, Blogger...