28 April 2011

கோ - விமர்சனம்

                                                                         கோ - 
       அரசன்  ஆவதற்கு  ஒருவன் அரசியலில் செய்யும் சதிகளை மையமாக கொண்டு பின்னப்பட்டதே இப்படம் .
            ..                               
           படத்தை  ...காதல்,ஆக்ஸன்,நட்பு,சோகம்,
துரோகம் என எல்லா மசாலாவையும் தூவி  தனிப்பட்ட பாணியில் கின்டி இருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்....
        "தின அஞ்சல்" பத்திரிக்கையில் புகைப்பட கலைஞராக வேலை செய்கிறார் ஜீவா...வங்கியில் 
கொள்ளையடித்து விட்டு வேனில் தப்பித்து ஓடுபவர்களை விரட்டி விரட்டி அவர்
 போட்டோ எடுக்கும் அறிமுக காட்சியே நல்ல விறுவிறுப்பு...பியா மற்றும் கார்த்திகா (ராதாவின் மகள் இதில் அறிமுகம் ) இருவரும் ஜீவாவுடன் வேலை செய்கிறார்கள்..பியா ஜீவாவை சுற்றி சுற்றி வருவதை தவிர வேறு எதுவும் வேலை செய்ததாக தெரியவில்லை ....
                                 
             தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது , நடிகையை வைத்து பிரச்சாரம் செய்வது , ஆளுங்கட்சி எதிர்க்கட்சி போட்டி விவாதங்கள் என்று நடப்பு தேர்தல் களத்தை கண் முன் நிறுத்துகிறார்கள் ....தேர்தலுக்கு முன் வந்திருந்தால் நல்ல பொருத்தமாக 
இருந்திருக்கும் ...அதற்காகவே படத்தை வாங்கி தேர்தலுக்கு பின் வெளியிட்டது 
போல தெரிகிறது .....
              ஆளுங்கட்சி முதல் அமைச்சராக பிரகாஷ்ராஜ் , எதிர்க்கட்சி தலைவராக   கோட்டா சீனிவாசராவ்  , இவர்களுக்கு நடுவில் மாற்றத்தை கொண்டு 
வர வேண்டும் என்ற லட்சியத்தில் தேர்தலில் நிற்கும் "சிறகுகள்" அமைப்பின் 
தலைவன்,படித்த இளைஞன்  வசந்தனாக "அஜ்மல்"....அனைவரும் படத்தில் 
எளிதாக பொருந்துகிறார்கள் ..
            ஜன நெரிசலில் வண்டியை விட்டு இறங்கி நடக்கும் போதும் , தப்பாக கேள்வி
கேட்கும் நிருபரை செருப்பால் அடிக்கும் இடத்திலும் தெரிவது பிரகாஷ்ராஜ் "டச்" ..ஆனால் அதையே ஜீவா "தின அஞ்சல்" பத்திரிக்கையில் போட்டு கிழிப்பது இயக்குனர் "டச்"...
         "கோட்டா" பதிமூணு வயசு சிறுமியை  ரகசியமாக திருமணம் செய்வதை ஜீவா தெரியாமல் படம் பிடிப்பதும் அது சம்பத்தப்பட்ட காட்சிகளும் அற்புதம் ...ஆனால் "தின அஞ்சல்" மட்டுமே பத்திரிக்கை போலவும் ,இவர் ஒருவர் மட்டும் தான் எல்லா வேலையும் செய்வதாக காட்டுவதும் திரும்ப
திரும்ப ஒரே காட்சிகளே வருவது போல சலிப்பை ஏற்படுத்துகின்றன ....
       ஜீவா தான் துப்பறிகிறார் என்றால் கார்த்திகாவும் அவர் பங்கிற்கு ஒரு
பழைய போட்டோவை வைத்து கொண்டு ஜீவா , அஜ்மல் இருவரும் பழைய கல்லூரி நண்பர்கள் என்று கண்டுபிடிக்கிறார் .. , அதற்காக ஒரு பிளாஷ்பேக் பாடல் வேறு ....இழுவையை தவிர்த்திருக்கலாம்..
                         
       "ராம்" , "ஈ" வரிசையில் ஜீவாவின்  நடிப்பிற்கு பெரிய தீனி "கோ" படத்தில் இல்லையென்றாலும் தன் பங்கை ஜீவா இயல்பாக செய்திருக்கிறார்.."பியா" இறந்த பின் உருகும் இடம் உதாரணம் .."கார்த்திகா"விற்கு  நல்ல உயரம் ,அழகான கண்கள் ..ஆனால் அவரை போலவே அவர் புருவத்தையும் உயரமாக வரைந்தது ஏனோ உறுத்துகிறது ..."பியா" குறுகுறுப்பான நடிப்பில் மனதை
கொள்ளை அடிக்கிறார்...ஒரு சிறுவன் இவரை சைட் அடிப்பது போல் வைத்த காட்சியில் விரசத்தை தவிர்த்து இருக்கலாம்....
        இவர்கள் எல்லோரையும் விட மனதில் பதிவது வசந்தனாக வரும் 
அஜ்மலின் கதாபாத்திரம்.. கட்சிகாரர்களிடம் அடிவாங்குவது ,
 மேடையில் வீராவேசமாக பேசுவது ,ஆட்சியை பிடிப்பதற்கு இவர் செய்யும் சூழ்ச்சிகள் , கடைசி காட்சியில் ஜீவாவை வழிக்கு கொண்டு வர இவர் செய்யும் தந்திரம் என எல்லாமே நன்றாக அமைந்து இருக்கின்றன...
ஆனால் இவர் உடல் மொழியில் முன்னேற்றம் தேவை ..
            சுபா வசனங்கள் சுருக்கம் பிளஸ் தெளிவு..ஒளிப்பதிவு பலம் ,இசை பலவீனம்..."என்னமோ ஏதோ" பாடல்கள் தவிர மற்றவை "அயன்"-"ஆதவன்" கலவை ...
            பத்திரிக்கைக்காரன்  கதை என்றதும் இப்படத்தில் புதுமையான , 
வித்தியாசமான இதழியல்  சம்பத்தப்பட்ட காட்சிகள் இருக்கும் என்று எதிபார்த்தால் ஏமாற்றமே .."அயன்" படம் கடத்தல் பின்னணியை கொண்டு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டதை போல இல்லாமல் 
இதில் வழக்கமான  அரசியல் நிகழ்வுகளே வருவதால் ஈடுபாடு குறைகிறது ..
               உண்மையை எழுதுவதால் ஏற்படும் இடர்பாடுகளையும் உரக்க சொல்லியிருக்கிறார்கள்.....
        கல்லூரியை முடிக்கும் நண்பர்கள் திடீரென ஒரு நாள் அரசியலில் குதிப்பது
 மற்றும் குடிசையில் எரியும் தீயை அணைப்பது, ஏழைகளுக்கு மருத்துவம் பார்ப்பது ,
பிரச்சார மேடையில் வெடிக்கும் குண்டு - அதன் மூலம் ஏற்படும் பரிதாபம் இதையெல்லாம் வைத்து ஒரே தேர்தலில் 
"சிறகுகள்" கட்சி ஜெயித்து   ஆட்சியை பிடிப்பது என லாஜிக் மீறல்கள் ஏராளம்...
சில காட்சிகள் "ஆயுத எழுது" படத்தை நினைவுபடுத்துகின்றன  ...          
         அதிலும் ஆட்சியை பிடிப்பதற்கு தீவிரவாதிகளின் உதவியை நாடுவது ரொம்ப பழைய "பார்முலா"....இருப்பினும் முடிந்த அளவு பழைய நெடியை
 தவிர்த்து இருக்கிறார்கள்...படத்தின் முடிவு நிறைவை தருகிறது...
 . .இன்றைய சூழலில்  நல்லவனாகவே இருந்தாலும் நேர்மையான முறையில் வெற்றியை
அடைய முடியாது என்பது படம் உணர்த்தும் உண்மை ...




19 April 2011

தேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள்

        இந்த முறை தேர்தலை நல்ல முறையில் நேர்மையாக நடத்தியதற்காகவும் , விழிப்புணர்வு  பிரச்சாரங்கள்  மூலம் அதிகமான வாக்குப்பதிவு ஏற்பட காரணமாக இருந்ததற்காகவும் , எந்த ஒரு கட்சி சார்புமின்றி நடுநிலையுடன் நடந்ததற்க்காகவும் எல்லா தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை
பாராட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில் ...
       தேர்தலை நல்ல முறையில் நடத்தியதற்கு   காட்டிய அக்கறையை தேர்தலில் பணி புரிந்த பணியாளர்களிடம் தேர்தல் ஆணையம் காட்ட வில்லை என்ற  நிதர்சன உண்மையை பத்திரிக்கையாளரான திரு.பத்மன் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி இருந்தார்......
      இந்த பதிவு தேர்தல் ஆணையம் கட்சிக்காரர்களிடம் மட்டும் கடுமையாக நடந்து கொள்ளவில்லை ..தன் பணியாளர்களிடத்திலும் மிக கடுமையாக
நடந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையின் மறுபக்கத்தை 
 உணர்த்துவது  போல உள்ளது...இந்த பதிவில் உள்ள கருத்துக்களை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளுமானால் அதன்
வலிமைக்குள் உள்ள "வலி"க்கு ஒரு "வழி" பிறக்கும்...

                   தேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள்
                                                              பத்மன்





                                      உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதற்கு வலுவான தேர்தல் ஆணையமே அடிப்படைக் காரணம் என்பதை தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி அனைத்திந்திய அளவிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை, பெருமளவில் வன்முறைக் கீறலின்றி பேரமைதியாகவே தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது. சில குற்றச்சாட்டுகள் வீசப்படுகின்றபோதிலும், பணப்பாய்ச்சலைத் தடுத்துவிட்டதாகப் பாராட்டு மழையில் நனைகிறது தேர்தல் ஆணையம். இரவு 10 மணிக்குமேல் உண்மையிலேயே பிரசார கூக்குரல்கள் ஏதுமில்லை. வழக்கமான சுவரொட்டிகளும் வர்ண விளம்பரங்களும் இல்லாமல் வீட்டுச்சுவர்கள் வெறிச்சோடிக் கிடந்தாலும் பொதுமக்களிடம் நிம்மதி பளிச்சிட்டது. புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடிச் சீட்டு அறிமுகத்தால் கள்ளவாக்குகளையும் 99.9 சதவீதம் தடுத்திருக்கிறது. வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் தேர்தல் ஆணையம் பெருவெற்றி பெற்றிருப்பதற்கு வாக்குப்பதிவு சதவீதமே சாட்சி.

இத்தனை விஷயங்களும் ஜனநாயகத்தின் முதுகெலும்பான தேர்தல் ஆணையத்தின் வலிமையைப் பறைசாற்றினாலும், அதன் நடைமுறைகளில் சில முட்கள் அதன் சதையைக் கிழித்து வழியை ஏற்படுத்துகின்றன. அரசியல் ரீதியில் சில கட்சிகள் அவ்வப்போது தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் அல்ல இவை. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் அமைப்பான தேர்தல் ஆணையத்தின் போக்கில் ஒருவித சவாதிகரம் புரையோடிக் கிடப்பதைக் கண்டதால் எழுந்த வேதனையின் வெளிப்பாடு இது.

அரசுப் பணியாளர்களுக்கு ஆங்கிலத்தில் கவர்மென்ட் சர்வன்ட் என்ற பெயர் இருப்பதை அப்படியே அச்சுஅசல் பிசகாமல் கடைப்பிடிப்பது தேர்தல் ஆணையம் மட்டும்தான். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களை அது நடத்துகின்ற விதத்தில் பழைய பிரிட்டிஷ் தர்பார் மாறாமல் நீடிக்கிறது. ஜனநாயகத் திருவிழாவான தேர்தலை சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும் என்ற அசுர வேகத்தில், அந்த ஜனநாயகப் பணியில் ஈடுபடும் ஊழியர்களிடம் அசுரனாகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மனிதநேய முகத்தைக் கழற்றி எறிந்துவிட்டுத்தான் இந்த ஜனநாயகப் பணியை தேர்தல் ஆணையத்தால் ஆற்றமுடிகிறது என்பது முரண்சுவை.

தேர்தல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் விருப்பத்தின் பேரில் வருவதில்லை, கட்டாயத்தின் பேரில் நியமிக்கப்படுகிறார்கள். இதற்கு, தேர்தல் பணியை ஆற்ற அவர்களுக்கு விருப்பம் இல்லை என்று அர்த்தமல்ல, அந்தப் பணிகளை ஆற்றுவோருக்கு அளிக்கப்படும் 'உபசரிப்பு' யாருமே விரும்பாத வகையில் இருக்கிறது என்பதே உண்மை. தேர்தலை வெற்றிகரமாகத் தேர்தல் ஆணையம் நடத்தினாலும், அதன் திறமை, நேர்த்தி இதில் பளிச்சிட்டாலும் தேர்தல் பணியாளர்களிடம் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையில் ஒரு தொழில் நேர்த்தி இல்லை, திறமைக் குறைவும் தென்படுகிறது. சரி, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு அப்படி என்னதான் இன்னல்கள் இழைக்கப்படுகின்றன என்கிறீர்களா?

தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அவசர கதியிலும், அலைக்கழிக்கப்பட்டும் இதற்குத் தயார் செய்யப்படுகிறார்கள். தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் வீட்டுக்கும் அவர் பணியாற்ற வேண்டிய வாக்குச்சாவடிக்கும் உள்ள தொலைவு, அந்தச் சமயத்தில் தேர்தல் பணியாற்ற வேண்டியவருக்குள்ள இதர கடமைகள் உள்ளிட்டவை கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை. தேர்தலுக்கு முந்தைய நாள் தொடங்கி, ஏறக்குறைய தேர்தல் தினத்தன்று நள்ளிரவு வரையில் நீடிக்கும் இந்த இமாலாயப் பணியில் இம்சைகள் அதிகம். கடினமான இந்த வேலைக்குப் பெண்களே அதிக அளவில் தேர்ந்தெடுக்கப் படுவது ஏன் என்று தெரியவில்லை. அவர்களுக்கே உரியப் பிரத்யேகப் பிரச்சினைகளும் கண்டுகொள்ளப்படுவதில்லை. உதாரணத்துக்கு, கைக்குழந்தையுடன் இருக்கும் பெண் என்றாலும், 5 மாதம் வரியுடைய குழந்தையாக இருந்தால் மட்டுமே விதிவிலக்கு. அதுவும் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடில், அவர்களது கைக்குழந்தைகள் 2 நாட்களுக்கு தாயார் இல்லாமல் தவிக்க வேண்டியதுதான்.

உண்மையான காரணங்கள் இருந்தாலும்கூட, இந்தக் கட்டாய ஜனநாயகப் பணியில் இருந்து சில அரசு ஊழியர்களால் தப்ப முடியவில்லை. மகன் அல்லது மகள் அல்லது நெருங்கிய உறவினர் திருமணத்தை வைத்துக்கொண்டு தவிர்க்க முடியாமல் பணிக்கு வந்து தவித்தவர்களும் உண்டு. வெளிநாடு சென்று உடனடியாகத் திரும்ப முடியாத நிலையில் இருந்த அதிகாரிகளுக்கும் கட்டாயம் அவர்கள் கடமையை ஆற்றத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டது தேர்தல் ஆணையம். இல்லையேல் உடனடி நடவடிக்கை. தாயகம் திரும்பிய பிறகு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து அவர்கள் தண்டனையைப் போக்கிக்கொள்ளலாம் என்று 'காருண்யத்துடன்' கூறிவிட்டது தேர்தல் ஆணையம். ஒரு அரசு வங்கிக் கிளையில் அனைத்து ஊழியர்களுக்குமே தேர்தல் பணி. ஒருசிலரையாவது வங்கிப் பணிக்கு விட்டுவைக்குமாறு வங்கிக் கிளை அதிகாரி கெஞ்சியும் மசியவில்லை தேர்தல் ஆணையம். வேறு கிளைகளில் இருந்து தற்காலிக ஊழியர்கள் தருவிக்கப்பட்டு நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டது.

தேர்தல் பணிக்கு நியமிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் ஆசிரியர்களே. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு, பிளஸ்டூ விடைத்தாள் திருத்தும் வேலை ஆகிய பணிகளும் ஆசிரியர்களை ஏற்கனவே ஆக்கிரமித்திருந்தன. மத்தளத்துக்கு இருபக்கம் இடி. ஆசிரியர்களுக்கோ எல்லாபக்கமும் இடி. பல்வேறு பணிகளால் ஆசிரியர்களுக்குப் பணமழை பொழிவதாக மற்றவர்கள் வயிறு எரிந்தாலும், தேர்தல் பணிக்குக் கிடைத்த ஊதியத்தைவிட போக்குவரத்து, சாப்பாடு உள்ளிட்டவற்றுக்கு அவர்கள் செலவழித்ததும், பணிச்சுமையால் ஏற்பட்ட மன உளைச்சலும் அதிகம் என்பதே உண்மை.

இந்த முறை தேர்தல் பணி நியமன உத்தரவு, தேர்தலுக்கு முதல் நாள் காலை 8 மணியளவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், இதற்கான பணியாளர்கள் அனைவரும் அரக்கப்பரக்க வந்து சேர்ந்தனர். ஆனால், பணி நியமன ஆணை நண்பகல் 12 மணிக்குத்தான் கொடுக்கப்பட்டது. அவர்கள் பணியாற்ற வேண்டிய வாக்குச்சாவடியோ, பலருக்குப் பல மைல் தூரத்தில் இருந்தது. இந்த ஆணை கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு அவர்கள் சென்றாக வேண்டும். ஆனால் இதற்குரிய வாகன ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யவில்லை. ஆணையம் என்பதால் ஆணையிட்டதோடு தேர்தல் ஆணையத்தின் பணி முடிந்துவிட்டது. பொறுப்புணர்வுள்ள அலுவலர்கள் தங்களுக்குரிய இடங்களுக்கு வந்து சேர வேண்டியது அவைகளுடைய பொறுப்பு.

சரி, வந்து சேர்ந்த இடத்திலாவது உரிய வசதிகள் உண்டா? 2 நாள் இரவு தங்க வேண்டுமே? அதுவும் பிரத்யேகப் பிரச்சினைகள் கொண்ட பெண்களின் கதி என்ன? பாதுகாப்புக்கு போலீசார் உண்டு. ஆனால், இரவில் தங்குவதற்கு, இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு, காலையில் குளிப்பதற்கு உரிய வசதிகள் கிடையாது. நகர வாக்குச்சாவடிகள் என்றால் பரவாயில்லை. கிராமப்புற வாக்குச்சாவடிகள் என்றால் சரியான சாப்பாடும் கிடையாது. கிராம, குக்கிராம வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் உணவுப் பொட்டலம் எதுவும் வழங்கவில்லை. பரிதாபப்பட்டு கிராம நிர்வாக அதிகாரிகள் வாங்கிக் கொடுத்தால்தான் உண்டு. இல்லையேல், கையேடு கொண்டு சென்ற பிஸ்கட்டுகளும் பழன்க்களும்தன் 2 நாட்களுக்கும் ஆகாரம்.

அதுவும் இந்த முறை, கட்சி முகவர்கள் வாங்கிக் கொடுக்கும் காபி, டீயைக்கூட குடிக்கக் கூடாது என்ற கட்டளை வேறு. ஐயோ பாவம் என்று அந்த முகவர்கள் சாப்பாடு, வெயிலுக்கு குளிர்பானம் என்று தருவித்துக் கொடுத்தாலும்கூட அதைப் பெற்றுக்கொண்டால் அரசியல் தீட்டு ஒட்டிக்கொள்ளுமே! அவ்வாறெனில், அடிப்படைத் தேவையான உணவு உள்ளிடவற்றிற்கான உரிய ஏற்பாடுகளை வருவாய் அதிகாரிகள், கிராம அலுவலர்கள் மூலம் தேர்தல் ஆணையமே முறைப்படி செய்ய வேண்டும் அல்லவா? தேர்தல் வாக்குப்பதிவுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தலாம், ஆனால் தேர்தல் பணியைச் செய்பவர்கள் இயந்திரங்கள் இல்லையே?

இதேபோல், வாக்குப்பதிவு மாலை 5 மணியோடு முடிவடைந்து, மற்ற நடைமுறைகள் ஐந்தரை 6 மணிக்கு நிறைவடைந்தாலும்கூட தேர்தல் பணியாளர்கள் வீட்டுக்குத் திரும்ப முடியாத சூழ்நிலை. வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாங்கினால்தானே அந்த இடத்திலிருந்து அவர்கள் நகர முடியும். ஒரு மண்டலத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடியாக வந்து பரிசோதித்து, இந்த இயந்திரங்களை வாங்கிச் செல்வது நடைமுறை. இதனால் சில வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு நேரத்தில்தான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டன. தேர்தல் பணியாளர்களைப் பொறுத்தவரை அத்தோடு தேர்தல் ஆணையத்தின் கடமை முடிந்துவிட்டது. அத்துவானக் காட்டில் நள்ளிரவு நேரத்தில் தேர்தல் பணி கடமையை பூர்த்தி செய்த பணியாளர்களின் கதி அதோகதிதான். அவர்கள் சொந்த வாகனத்தில், அல்லது வாகன ஏற்பாடுகளில் திரும்பிச் செல்ல வேண்டியதுதான். இல்லையேல், துணைக்கு யாரும் இல்லாவிட்டாலும் வாக்குச்சாவடியிலேயே தங்கிச் செல்ல வேண்டியதுதான். ஆண்களாக இருந்தால் பரவாயில்லை. பெண்களின் கதி? ஒன்று, பாதுகாப்பான இடவசதி, இல்லையேல் முறையான வாகன வசதி செய்து தர வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை அல்லவா?

பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி மனமுவந்து விருப்பத்துடன் வாக்களிக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கொண்டுவந்துவிட்டது. பாராட்டுகள். அதேபோல், தேர்தல் பணியாற்றுவோரும் எவ்வித அச்சமுமின்றி விருப்பத்துடன் பணியாற்றவரும் சூழ்நிலையை தேர்தல் ஆணையம் எப்போது கொண்டுவரும்?

9 April 2011

அன்னாவின் உண்ணாவிரதம் வெற்றியா ?

             நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து நாட்டையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார் 72 வயது இளைஞர் அன்னா ஹசாரே ...ஒரு கிராமத்தையே முன் மாதிரியாக மாற்றி காட்டியதற்காக 1992  ம் ஆண்டு "பத்ம பூஷன்"   வாங்கிய சமூக தொண்டர் இந்த "அன்னா ஹசாரே "..
                  
             ஊழலுக்கு எதிராக "ஜன் லோக்" மசோதாவை கடுமையான சட்ட திருத்தங்களுடன் நிறைவேற்றக்கோரி அற வழியில் அவர் செய்த போராட்டத்திற்கு மத்திய அரசு இப்போது பணிந்திருக்கிறது...ஜூன் மாத பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதனை நிறைவேற்றுவதாக உறுதியும் அளித்திருக்கிறது ..
                .தனி மனிதனாக எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் அவர் தொடங்கிய போராட்டத்திற்கு நாடு முழவதும் கிடைத்த வரவேற்பு ஊழலுக்கு எதிராக மக்கள் விழித்தெழ தொடங்கி விட்டார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது ...
               "அண்ணா" வழியில் வந்ததாக சொல்லிக்கொள்ளும் அரசியில்வாதிகள் தமிழகத்தில் ஊழலுக்கு உரம் போட்டு வளர்த்துக் கொண்டிருக்க அங்கு நடந்த அன்னாவின் உண்ணாவிரதம் ஜனநாயகவாதிகளுக்கு  ஒரு உற்சாக டானிக் .... 
                                   
     2 ஜி அலைவரிசை ஊழல் மூலமாக உலகமே தமிழகத்தை கேவலமாக  பார்த்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நிச்சயம் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கான விதை இங்கிருந்து தான் முளைத்து இருக்க வேண்டும் ...ஆனால்  வாக்குக்கு பணம்  கொடுத்தால் கூட வாங்கிக்கொள்ளுங்கள் ஏன் என்றால் அது உங்கள் பணம் என்று மக்களைப் பார்த்து
கூறும் அளவிற்கு இங்கு ஊழல் பழகி விட்டது வேதனைக்குரிய விஷயம் ... 
        மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஒத்துக்கொண்டதாலேயே இதனை ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கான முடிவாக எடுத்துக்கொள்ளலாமா ? நிச்சயம் முடியாது ....ஏனென்றால் மகளிர் இட ஒதுக்கீடு பல முறை விவாதிக்கப்பட்ட 
போதும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது நாடறிந்த விஷயம் ...
           அரசியல்வாதிகளின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது என்பது நிதர்சன உண்மை ..
  .     இந்த   மசோதாவை நிறைவேற்றுவதற்க்கான   திட்டக்குழுவில் "அன்னா", "பூஷன்" போன்றவர்கள் இடம் பெற்றிருந்தாலும்  மத்திய அரசின் அமைச்சர்கள் ஐந்து பேர் இடம் பெற்றிருக்கிறார்கள் ...இவர்களுக்கு எதிராக பெரிய அளவில் எந்த ஊழல் வழக்கும் இல்லா விட்டால் கூட இவர்கள் சார்ந்திருக்கும் கட்சி ஊழலையே மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பதை உலகமே அறியும் ....
                               
          அதிலும்  2 ஜி  அலைவரிசை ஊழலில் அரசிற்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை  என்று கூசாமல் பொய் சொன்ன கபில் இந்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார் ...            லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைவராக தாமசை நியமித்ததற்கு முழு பொறுப்பையும்    நான் ஏற்றுக் கொள்கிறேன் ,கூட்டணி தர்மத்திற்காக வளைந்து கொடுக்க வேண்டி இருக்கிறது என்றும் ஒப்புக்கொண்டதன் மூலம் அப்பழுக்கற்றவர் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருந்த மன்மோகன் சிங்கின் நேர்மை
மண்ணைக்கவ்வியதையும் நாம் அறிவோம் ... 
          மசோதா நிறைவேற்றப்பட்டால் ஊழலுக்கு எதிராக பிரதமர் உட்பட உயர் பதவி வகிக்கும் எவரையும் கேள்வி கேட்கும் உரிமை குழுவிற்கு வந்து விடும்.  அது மட்டும் அல்லாமல் ஒரு வருடத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும்..ஊழல் செய்தது நிரூபணம் ஆனால் கொள்ளையடித்த பணம் முழுவதும் 
பறிக்கப்படும் என்பவை இதன் மற்ற சாரம்சங்கள் ...
              .
           ஆனாலும் எவ்வளவு பெரிய ஊழலாக இருந்ததாலும் அதற்கு எதிராக கொடுக்காப்படும் 
கடுங்காவல் தண்டனை மட்டும் போதுமானதா ? அந்த ஊழல் பணம் மூலம் தங்களை வளர்த்துக்கொண்ட மற்றவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாதா ?
ஊழல் புரிபவரை அமைச்சராக்கிய கட்சிக்கு என்ன தண்டனை ? ஊழலுக்கு நேரடியாகவோ , மறைமுகமாகவோ , கூட்டணி தர்மத்திர்க்காகவோ ஒத்துழைப்பு கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கும் , தொழிலதிபர்களுக்கும் 
என்ன தண்டனை ?....இப்படி பல கேள்விகள் நம்முள் எழாமல் இல்லை ...
               அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொன்னால் போதுமா ?..இலவசமாக கொடுக்கிறார்கள் 
என்பதற்காக எல்லாம் இருந்தும் அதை ஓடி ஓடி வாங்கியது குற்றம் இல்லையா ?....நம்முடைய காரியத்தை சாதித்துக்கொள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதும் , ஊழல் நடக்கிறது என்று தெரிந்தும் அதற்கு எதிராக
முறையிடாமல் ஒதுங்கிப்போவதும் குற்றம் இல்லையா ? இப்படி பல கேள்விகள் நம்முள் எழாமல் இல்லை ....
         முன்பே சொன்னது போல் இது ஊழலுக்கு எதிரான முடிவு அல்ல ...ஒரு ஆரம்பம் .."அக்னிக் குஞ்சொன்று கண்டேன் " - மகாகவியின் பாடலுக்கு ஏற்ப ஒரு தீப்பொறியின் ஆரம்பம் ....
          மசோதா நிறைவேற்றப்பட்டு , ஊழல் புரிபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு, ஊழல் முற்றிலும் மலிந்து இன்னுமொரு "அன்னா" இதற்காக "உண்ணா" விரதம் இருக்கும் நிலை ஏற்படாமல் இருப்பதே
முழுமையான வெற்றி ...
                  
                  

        
                 

7 April 2011

விஜயகாந்த் பிரச்சாரம் உளறலா ? உண்மையா ?

               
         இப்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அதிகமாக தலைப்பு செய்திகளில் இடம்பிடித்திருப்பது விஜயகாந்தின் பிரச்சாரம்...
          குடித்து விட்டு உளறுகிறார் ...தன் கட்சி வேட்பாளரையே போட்டு அடிக்கிறார்...கூட்டணிக் கட்சிக்காரர்களையே மிரட்டுகிறார் ..கோயம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்று தினமும் ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது ..
           போதாக்குறைக்கு இவரை விமர்சித்து வடிவேலு செய்யும் பிரச்சாரம் தி.மு.க ஆதரவு தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது....வடிவேலுவின் பிரச்சாரம் சிரிக்க வைத்தாலும் உண்மை என்ன என்பதை சிந்திக்க வேண்டியதும் நமது கடமை ..
            "கண்ணால் காண்பதும் பொய் , காதால் கேட்பதும் பொய் , தீர விசாரிப்பதே மெய் " என்னும் கூற்றுக்கேற்ப விஜயகாந்தின்  பிரச்சாரங்களை கூர்ந்து கவனித்தால் தான் ஏன் தி.மு.க அவரை குறி வைத்து தாக்குகிறது என்று புரியும் ...இந்த முறையும் விஜயகாந்த் தனியாக நின்றிருந்தால் யாருக்கு லாபம் என்று எல்லோருக்கும்  தெரியும் ..
       
                                      
    பிரசாரங்களில் விஜயகாந்த் பேசும் பேச்சுக்களில் முக்கியமான சிலவற்றை கீழே காணலாம்....
     "நான் கருணாநிதி மாதிரி அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்கலை ,,சம்பாதிச்சுட்டு தான் அரசியலுக்கு வந்தேன்" - -   "நான் என் வேட்பாளரை அடிக்கலை .."அய்யோ கொலை பண்றாங்கன்னு" பொய்யா டி.வியில் போட்டாங்களே அது மாதிரி தான் இதுவும் --
       " அப்படியே பார்த்தாலும் நான் கழுத்துல தான் அடிச்சேன் , ஆனா அவங்க சொந்த கட்சி காரர் தா.கிருஷ்ணன் கழுத்தையே எடுத்துட்டாங்களே " - 
                               "நான் ஏன் அ.தி.மு.க வோட கூட்டணி வைச்சேன் ..அர்ஜுனனுக்கு எப்படி கிளியோட கழுத்து தான் 
குறியா இருந்தததோ அதே போல என்னோட முக்கிய நோக்கமே அராஜக தி.மு.க ஆட்சியை கீழே
இறக்குவது தான் ..அதனால தான் எனக்கு 500 கோடி கொடுக்க முன் வந்த போதும் நான் அவங்க 
கூட சேரலை , புரிஞ்சுக்குங்க மக்களே"
   "மதுரை தினகரன் ஆபீசில் மூணு பேர் அநியாயமா செத்தாங்களே அதுக்கு என்ன தண்டனை கிடைத்தது ?..
   "தன குடும்பத்துக்கு பதவி வேணும்னா டெல்லி போறாரே கருணாநிதி ..இலங்கையிலே இத்தனை தமிழன் செத்தானே அதுக்கு என்ன செஞ்சாரு ? ...
     " நான் ஒன்னும் பதவிக்காக இந்த கூட்டணியோட சேரலை ..எனக்கு பதவி ஆசையே இல்லை என்று சொல்லும் கருணாநிதி ஆறாவது முறையா என்னை முதல்வர்  
ஆக்குங்கன்னு ஏன் கெஞ்சனும் ? சிந்தியுங்க மக்களே ...
   "உங்களுக்கு (தி.மு.க ) ஆப்பு அடிச்சா தான் சரிப்படுவிங்க"- இதை ஹாப் என்று மாற்றியது
வேறு விஷயம்....
          "உண்மையிலே அவர் மக்களுக்கு நல்லது செஞ்சிருந்தா ஏன் தேர்தல் கமிசன் நடவடிக்கைகளை 
 பார்த்து பயப்படனும் ?  ...
       இப்படி எல்லா இடங்களிலும் சூடு பிடிக்க பிரச்சாரம் செய்து வருகிறார் ..அதனால் தான் சரியான   
நேரத்தில் வடிவேலுவை தன பக்கம் இழுத்து இருக்கிறது தி.மு.க ...விஜயகாந்துடன் தனக்கு
இருக்கும் சொந்த பிரச்சனைக்கு பழி தீர்க்க அவரும்    ஒத்து கொண்டிருக்கிறார் ..அதே முறையை தான் சிங்கமுத்துவை தன் பக்கம் இழுத்ததன் மூலம் அ.தி.மு.கவும் செய்து இருக்கிறது...
            இப்படி தன் சொந்த பகைமைக்காக அரசியலை கையில் எடுப்பவர்கள் மத்தியில் நேரடியாக அரசியலில் அடி எடுத்து வைத்தவர் விஜயகாந்த்..தன் கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டதை கூட அவர் பெரிய அரசியலாக்கவில்லை...தன் குடும்ப உறுப்பினர்கள் கட்சியில் இருந்தாலும் இந்த முறை யாருக்கும் அவர் சீட் வழங்கவில்லை ...அதே போல
பணப்பெட்டியுடன் நிறைய பேர் அவரை முற்றுகை இட்டாலும் தன் ஆரம்ப காலத்தில் இருந்து தன் கூட இருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கே அவர் சீட் வழங்கியிருக்கிறார் என்று ஒரு செய்தி ...

                        
           தி.மு.க , அ.தி.மு.க இரண்டிற்கும் மாற்று சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட   தே .மு.தி.க இந்த முறை கூட்டணி சேர்வதை தவிர வேறு வழியில்லை ..சென்ற முறை தனித்து நின்று பெற்ற கணிசமான வாக்குகளை இந்த முறையும் தனித்து நின்றால் பெற முடியும் என முழுமையாக சொல்ல முடியாது ...
      கிராமப்புறங்களில் ஓரளவு செல்வாக்கு பெற்றிருக்கும் தே.மு.தி.க நகரங்களில் குறிப்பாக                                                                                              படித்தவர்களிடத்தில் வளர்ச்சி அடைவது ரொம்ப முக்கியம் .."கருப்பு எம்.ஜி.ஆர்." என்று சொல்லிக்கொள்ளும்                                               விஜயகாந்த்  படித்தவர்களிடத்தில் எம்.ஜி.ஆர்க்கு இருந்த செல்வாக்கை
மறந்து விடக்கூடாது ..
       அ.தி.மு.க தலைமையில் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளாவிட்டாலும் அதே நேரத்தில்   அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்....      
    அவர் நிதானம் இல்லாமல் நடந்து கொள்வதும் , அதிகமாக கோபப்படுவதும் பெரிய குறை.. 
ஊடகங்களை தன் கையில் வைத்து இருக்கும் தி.மு.க விஜயகாந்திற்கு எதிராக பிரச்சாரம்
செய்து வருவதில் எந்த ஆச்சிரியமும் இல்லை .ஆனால் இந்த அளவிற்கு விஜயகாந்திற்கு
முக்கியத்துவம் கொடுப்பதில் இருந்தே அவர்கள் பயந்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.....

        தன் மீது வைக்கப்படும் " குடிகாரன்" என்ற விமர்சனத்திற்கு அதே பாணியில்  பதில் சொல்லாமல் கௌரவமாக நடந்து கொண்டாலும் இதனால் ஏற்பட்ட சந்தேகத்தை
முழுமையாக நிவர்த்தி செய்வது விஜயகாந்தின் கடமை ....
          ஒரு வேலை அ.தி.மு.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி சோனியா காந்தியிடம் சரணாகதி அடைந்தது போல விஜயகாந்தும் ஜெயலலிதாவிடம்  சரணாகதி அடைவாரா ? அல்லது தனித்துவத்தை காப்பாற்றுவாரா என்பது பொதுமக்களின் கேள்வி ...
          விஜயகாந்தின் பிரச்சாரம் தள்ளாட்டமா ? ஆட்சியை பிடிப்பதற்கான வெள்ளோட்டமா ?  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ......
         

Related Posts Plugin for WordPress, Blogger...