7 November 2021

அண்ணாத்த - Annaatthe Tamil Movie Review

சூப்பர் ஸ்டார் - சிறுத்தை சிவா காம்பினேஷனில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு எந்த போட்டியுமில்லாமல் அல்லது போட்டியை ஓரங்கட்டி எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் அண்ணாத்த ‌‌. ரஜினி - நயன்தாரா ஜோடி சேர்ந்த தைரியத்தில் அதரப்பழசான அண்ணன் தங்கை பாச டெம்ப்ளேட் கதைக்கு அதை விட அதரப்பழசான திரைக்கதையுடன் அண்ணாத்த யை களமிறக்கியிருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா ...

 71 வயதிலும் இன்றைய நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் படி துடிப்பாக இருக்கிறார் ரஜினி. பச்சக்கிளி என்று அவர்  ‌‌‌சூரியை அழைப்பதே தனி ஸ்டைல் . ஸ்டேஷனில் பிரகாஸ்ராஜை கலாய்ப்பது , முறைப்பெண்கள் மீனா , குஷ்பு வை சமாளிப்பதென என எல்லாமே ரஜினி ஸ்டைல் கலகலப்பு . வக்கீல் நயன்தாரா ரஜினி யை பார்த்தவுடனே எந்த வாதமும் பண்ணாமல் விழுந்து விடுகிறார் . கீர்த்தி சுரேஷ்க்கு இயக்குனர் இது சன் டிவி யின் சீரியல்  என்று சொல்லிவிட்டார் போல படம் முழுவதும் ஒரே மாதிரியான சோக முகபாவம் . வில்லன்கள் பெரிய எதிர்ப்பு இல்லாமல் சரணடைவது சறுக்கல் ...

இமானின் இசையில் சாரக்காற்று பாடல் வருடுகிறது மற்றபடி பிண்ணனி இசை  வெறும் இரைச்சல் . ரஜினி யின் எனர்ஜி , சன் மார்க்கெட்டிங் , மெகா ரிலீஸ் எல்லாமே ப்ளஸ் மற்றவை எல்லாம் மைனஸ் தான் . மாஸ் ஹீரோ படத்தில் கதை லாஜிக் எல்லாம் பெரிதாக யோசிக்க வேண்டாம் ஆனால் திரைக்கதை என்கிற வஸ்துவையும் சிவா தீபாவளி தள்ளுபடியில் விட்டது தான் வேதனை ...

அண்ணாத்த கிராமத்தில் இருக்கும் வரை அப்படியிப்படி நம்மை சமாளித்து விடுகிறார் ஆனால் கொல்கத்தா போனவுடன் வில்லன்களோடு சேர்ந்த நம்மையும் வதம் செய்கிறார் . தீபாவளி விடுமுறையாலும் , பெரிய போட்டி இல்லாததாலும் முதல் வாரம்  அண்ணாத்த வசூல் செய்வார் . மற்றபடி சீரியலை மிஞ்சும் ஓவர் செண்டிமென்ட் , ஒட்டாத ஆக்சன் , திருப்பாச்சி கதை , வேதாளம் காட்சிகள் என கம்பீரமாக நிற்காமல் அந்தரத்தில் தொங்குகிறார் இந்த அண்ணாத்த ...

ரேட்டிங்க். : 2* 

வீடியோ விமர்சனத்தை கீழே காணவும் ...

https://youtu.be/JtQKKxypwYw














  


3 November 2021

ஜெய் பீம் - JAI BHIM Movie Review



சூரரை போற்று வெற்றியை தொடர்ந்து ஓடிடி யின் சூப்பர் ஸ்டார் சூர்யா முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்த போது காவல்துறையின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு நீதி வாங்கி கொடுத்த நிஜ சம்பவத்தை படமாக தயாரித்து நடித்திருப்பதே ஜெய் பீம் . பெயருக்கேற்றது போலவே படம் பழங்குடி மக்களுக்கான நியாயத்தை பேசுகிறது ‌‌...

சூர்யா படம் ஆரம்பத்து அரைமணி நேரத்தை நெருங்கும் போது தான் வருகிறார் . தனக்காக ஹீரோயிசம் செய்யாமல் கதையோடு இயல்பாக வருவது ஆறுதல் ‌‌. பழங்குடி தம்பதிகள் மணிகண்டன் , ஜோஸ் இருவருமே வாழ்ந்திருக்கிறார்கள் . ஸஜயன், எம்.எஸ் பாஸ்கர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள் ‌‌. அதிலும் எம்எஸ் சம்பந்தமில்லாமல் சிவாயநம என்கிறார் . பிராகாஸ் ராஜின் பங்களிப்பு அருமை ‌‌.‌கதிரின் ஒளிப்பதிவு பலம் . ஷான் ரோல்டனின் இசை சில இடங்களில் இரைச்சலாக இருந்தாலும் ரசிக்க முடிகிறது ...

உண்மை சம்பவத்தை சினிமாவுக்கேற்ற மாதிரி அழகாக வடிவமைத்திருக்கிறார்கள் .‌ விறுவிறுப்பான திரைக்கதையும் உதவியிருக்கிறது . ஹீரோவுக்கென தனி காட்சிகள் இல்லாமல் கதையோடு ஒன்றி வருவதற்கு பாராட்டுக்கள் ...

படம் விசாரணை , கர்ணன்‌ படங்கள் போல போலீஸ் வன்முறையை காட்டுகிறது ஆனால் அதிலேயே நீண்ட பயணம் செய்வது அலுப்பை தருகிறது . ஹீரோயிசம் இல்லையென்றாலும் ஹீரோ ஈஸியாக எல்லாவற்றையும் கண்டுபிடிப்பது சறுக்கல் . பலர் பாராட்டுவது போல குறிப்பாக ஆனந்தவிகடன் 57 மார்க் ! தருமளவிற்கெல்லாம் படம் வொர்த் இல்லை இருந்தாலும் உண்மை சம்பவத்தை போரடிக்காமல் சொன்ன விதத்தில் ஜெய் பீம் ஜெயம் ...

ரேட்டிங்க் - 3.50* 

வீடியோ விமர்சனத்திற்கு கீழே காணவும் .

https://youtu.be/tQ1e2DN_Ztc


31 October 2021

என்னங்க சார் உங்க சட்டம் - Yennanga Sir Unga Sattam Review


புதுமுக இயக்குனர் பிரபு  ஜெயராம் உண்மையிலேயே இது வரை தமிழ் சினிமாவில் வராத அல்லது தொடவே தயங்குகிற ஒரு கதையை படமாக்கியிருக்கியிருப்பதே என்னங்க சார் உங்க சட்டம் . இந்த படம் டூப்ளக்ஸ் வகையறா அதாவது முதல் பாதி ஒரு படம் இரண்டாவது பாதி வேறு படம் இரண்டும் க்ளைமேக்ஸில் இணையும் ...

அப்பாவின் சாதி வெறி பிடிக்காமல் எல்லா சாதி , மதத்திலும் பெண்களை காதல் பண்ணும் வழக்கமான தமிழ் சினிமாவின் லட்சிய ஹீரோவின் அட்டக்கத்தி ஜாலி  பயணம் முதல் பாதி ‌‌. ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு சாதிய அடிப்படையில் இல்லாமல் பொருளாதார , திறமை அடிப்படையில் அனைவருக்கும்  அர்ச்சகர் , அரசாங்க வேலை இரண்டுமே கிடைக்க வேண்டுமென்கிற கருத்தை எந்த காம்ப்ரமைசும் இல்லாமல் நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி சொல்லும் சீரியஸ் பயணம் இரண்டாம் பாதி ...

ஹீரோ ஆர்.எஸ்.கார்த்திக் முதலில் அட்டக்கத்தி தினேஸை நினைவு படுத்தினாலும் போகப்போக கவர்கிறார் . எல்லா சமூக பெண்களிடமும் இவர் அடிக்கும் காதல் லூட்டி கலகல ‌‌. ரோகிணி முதல் பாதியில் அப்பாவி அம்மா , இரண்டாம் பாதியில் சீரியஸ்  பத்ரகாளி என இரண்டிலுமே ஜொலிக்கிறார் . ஜுனியர் பாலையா தேர்ந்த நடிப்பில் தானொரு சீனியர் என நிரூபிக்கிறார் .‌‌‌‌‌ பாடல்கள் , பிண்ணனி இசை இரண்டுமே பலம் ...

இரண்டு படங்களை கோர்க்கும் ஐடியா நன்றாக இருந்தாலும் ஜென்டில்மேன் போல சீரியஸ் படத்தை கமர்சியல் எலிமெண்ட்ஸோடு ஒரே படமாக எடுத்திருந்தால் இன்னும் சுவாரசியமாக படத்தோடு ஒன்ற முடிந்திருக்கும் . முதல் பாதி சம்பவங்கள் நன்றாக இருந்தாலும் சம்பவமாகவே தொடர்வது பொறுமையை சோதிக்கிறது . சில குறைகளை தவிர்த்து பார்த்தால் இட ஒதுக்கீடு , அர்ச்சகர் நியமனம் உட்பட சீரியஸ் சப்ஜெக்டை தொட்ட தைரியம் , " எல்லோரும் என்ன ஏன் சாமின்னு ஒதுக்குறா? நான் மட்டும் ஏன் மாஞ்சு மாஞ்சு படிக்கணும் ? யாரோ பண்ண தப்புக்கு நான் எப்படி பொறுப்பாவேன் ? எல்லா சாதியிலும் மலம் அள்ள துடிக்குறாளா ? என்பது போன்று ஐயர் பையன் கேட்கும்  சாட்டையடி கேள்விகள் இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது படம் ஒரு உண்மையான சமூக நீதி ...

ரேட்டிங்க் : 3.25*

முழு விமர்சனத்தை கீழே உள்ள வீடியோவில் காணவும் ...

https://youtu.be/2jluAAGQ3iI


15 October 2021

வினோதய சித்தம் - Vinodhaya Sitham Movie Review ...


நீண்ட இடைவெளிக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கி , தம்பி ராமையா வுடன் இணைந்து நடித்திருக்கும் படம் வினோதய சித்தம் . குரு பாலச்சந்தர் போலவே பிரபலமான நாடகத்தை படமாக்கியிருக்கிறார் சிஷ்யன் சமுத்திரக்கனி ...

பெரிய கம்பெனியில் ஏஜிஎம் ஆக இருக்கும் பரசுராம் ( தம்பி ராமையா ) குடும்பமும் , ஆஃபீசும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ,  அவரில்லாமல் எதுவும் நடக்காதெனனவும்  நினைக்கிறார் . திடீரென விபத்தில் அவர் இறந்து விட காலனிடம் ( சமுத்திரக்கனி ). கெஞ்சி தனது கடமைகளை முடிக்க மூன்று மாதம் அவகாசம் வாங்கி  மீண்டும் பூமிக்கு வருகிறார் . அவர் நினைத்து நடந்ததா என்பதை ஒன்றரை மணி நேரத்திற்கு சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்வதே வினோதய சித்தம் ...


வழக்கம் போல அறிவுரைகளை அள்ளி வழங்காமல் படத்திற்கு தேவையானதை மட்டும் தந்திருக்கும் சமுத்திரக்கனி பெரிய ஆறுதல் ‌‌. நாடகத்தை ரீமேக் செய்தாலும் முடிந்தவரை நாடக பாணியியை தவிர்த்தது நலம் . தம்பி ராமையா கேரக்டரை நமக்கு தெரிந்து இறந்த யாருடனாவது தொடர்பு படுத்தி பார்க்க வைப்பது படத்தின் பலம் ...


ஆங்காங்கே தம்பி ராமையா வின் ஓவர் ஆக்டிங் , எதிர்பார்த்தது போலவே நடக்கும் சில சீன்கள் , இந்து மத தத்துவங்களை பேசினாலும் கருப்பு சட்டையுடன் வரும் சமுத்திரக்கனி யின் முரண் இவற்றை தவிர்த்து பார்த்தால் வினோதய சித்தம் உணர வேண்டிய விசித்திர அனுபவம் ..‌‌

ரேட்டிங்க். :  3.25 * 




 

 

19 September 2021

அனெபல் சேதுபதி - ANNABELLE SETHUPATHY - ஆள விடுங்க சேதுபதி ...


விஜய் சேதுபதி - டாப்சீ பன்னு நடிப்பில் பிரபல இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி யில் நேரடியாக ரிலீஸ் ஆகியிருக்கும் படம் அனெபல் சேதுபதி . கதையை பற்றியெல்லாம் கவலைப்படாமல் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி க்கு இந்த அனபெல் ஒரு அலார்ம் பெல் ...

ஷாஜகான் மும்தாஜுக்கு தாஜ்மஹால் கட்டியது போல தன் வருங்கால பிரிட்டீஷ் மனைவி அனபெல்லுக்காக ( டாப்ஸீ ) அரண்மனை கட்டுகிறார் மன்னர் வீர சேதுபதி( விஜய் சேதுபதி )  ‌‌. அதை மற்றொரு மன்னர்  ( ஜெகபதி பாபு ) அபகரிக்க அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் என்ன ஆகிறதென்பதை ஹரர் காமெடியில் !  சொல்வதே அனெபல் சேதுபதி . 


வதவதவென்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஎஸ் இதில் நடித்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் டாப்ஸீ இந்த அதரப்பழசு கதைக்கு எப்படி ஒத்துக்கொண்டார் என தெரியவில்லை . அரண்மனை , சங்கிலி புங்கிலி கதவை திற படங்கள் மாதிரியான கதைக்கு திரைக்கதை யும் கை கொடுக்கவில்லை ...

ஹாரர் , காமெடி , காதல் மூன்றும் படத்தில் இருக்கிறது . ஆனால் எதுவும் உருப்படியாக இல்லை . படத்தில் வரும் பேயை பார்த்து பயம் வரவில்லை ஆனால் அடுத்து பார்ட் 2 வரும் என்கிறார்கள் அதை நினைத்தால் தான் பயந்து வருகிறது . யோகி பாபு , மதுமிதா , தெலுகு காமெடியன் ராஜேந்திர பிரசாத் இவர்களெல்லாம் இருந்தும் காமெடி சுத்தமாக இல்லை . அரண்மனை டிவி செட் போல இருக்கிறது . பிண்ணனி இசை ஆறுதல் . மொத்தத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓடும் இந்த அனபெல் சேதுபதி - ஆள் விடுங்க சேதுபதி ....

ரேட்டிங் : 2 * 

இந்த படத்தின் வீடியோ விமர்சனத்தை கீழே காணவும் ...


https://youtu.be/_AXyCxqlrPA






11 September 2021

தலைவி - THALAIVII - பட விமர்சனம் ...


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரை அறிமுகம் 1965 ல் இருந்து முதல்வராக அறிமுகமான 1991 வரை உள்ள காலகட்டத்தை திரை வடிவில் பதிவு செய்வதே தலைவி .‌‌ இளைய தளபதி விஜய்யுடன் கை கோர்த்தும் தலைவா வில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட இயக்குனர் விஜய் அதை கங்கனா வுடன் சேர்ந்து  தக்க வைத்துக்கொண்டாரா ? பார்க்கலாம் ....          

16 வயது முதல் 41 வயது வரையான முன்னாள் முதல்வரின் வாழ்க்கையை பல மொழிகளில் எடுக்கும் படத்திற்கு கங்கனா கரெக்டான தேர்வு ‌‌. சின்ன வயது குறும்பு , பெரிய வயது வெறுப்பு எல்லாவற்றையும் கண் முன் நிறுத்துகிறார் . தொப்பை , குண்டடிக்கு பிறகு பேச்சு இது தவிர மற்றதில் எம்ஜிஆர் ஆக மாறி நிற்கிறார் அரவிந்த்சாமி .‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ எம்ஆர்வி வேடத்தில் சமுத்திரக்கனி சரியான தேர்வு ‌...


கலை இயக்கம் , மேக்கப் , நடிக நடிகையர் நடிப்பு , ஒளிப்பதிவு என எல்லாமே படத்துக்கு பலம் ‌‌. எம்ஜிஆர்- ஜெ நட்பு காதலாவது , யாரையும் எம்ஆர்வி எம்ஜெஆர் உடன் நெருங்க விடாதது , எம்ஜெஆர் - கருணா ஈகோ என எல்லாவற்றையும் அழகாக பதிவு செய்கிறார் இயக்குனர் . சட்டசபையில் ஜெவை எதிர்க்கட்சியினர் அடித்து வெளியேற்றும் முதல் காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து அதன் பிறகு ஃப்ளாஷ்பேக்கில் இடைவேளை வரை சீராக செல்கிறது படம் ...

செட்டுக்குள் நடக்கும் காதல் காட்சிகளை தத்ரூபமாக எடுத்த இயக்குனர் நிஜத்தில் வரும் அரசியல் களத்தில் சினிமாத்தனத்தை புகுத்தி தடுமாறியிருக்கிறார் . சோ, நடராசன் இவர்களை பற்றிய எந்த சீனும் இல்லாதது இருட்டடிப்பு . சில காட்சிகளில் உள்ள செயற்க்கைத்தனம் நம்மை ஒன்ற விடாமல் தடுக்கிறது ‌‌. சில தடுமாற்றங்கள் இருந்தாலும் பல வருடங்களாக வெற்றியே இல்லாமல் தேங்கியிருக்கும் இயக்குனர் விஜய் நல்ல படி மீண்டு வந்த விதத்தில் தலைவி - தன்னம்பிக்கை ...

 ரேட்டிங்க்.     : 3 *

இந்த விமர்சனத்தை வீடியோவில் காண இங்கே சொடுக்கவும் ...


<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/0vNEYzLUY3Y" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

15 August 2021

நெற்றிக்கணஂ - NETRIKANN - மாலைக்கண் - திரை விமர்சனம் ...


நயன்தாரா நடிப்பில் அவரது காதலர் விக்னேஸ் சிவன் தயாரிப்பில் டிஸ்னி ப்ளஸ்  ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் நெற்றிக்கணஂ . இது பத்து ஆண்டுகளுக்கு முன் வந்த ப்ளைண்ட் கொரியன் படத்தின் ரீ மேக் . நெற்றிக்கண் திறந்ததா பார்க்கலாம் ...

சிபிஐ ஆபீசர் துர்கா ( நயன்தாரா ) கார் ஆக்சிடெண்டில் தன் தம்பி , வேலை , பார்வை எல்லாவற்றையும் இழந்து தடுமாரி வாழ்ந்து கொண்டிருக்கிறார் . அவர் வாழ்க்கையில் பெண்கள்  கடத்தி செக்ஸ் டார்ச்சர் செய்யும் ஒரு டாக்டர் சைக்கோ ( அஜ்மல் ) குறுக்கே  வருகிறான் . அவன் செய்கையில் சந்தேகம் கொள்ளும் துர்கா போலீசை நாடுகிறார் . போலீஸ் உதவியுடன் அவர் அந்த சைக்கோவை பிடித்தாரா என்பதே படம் ...



மாயா , அறம் வெற்றிக்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டாராக மாறியிருக்கும் நயனுக்கு இது ஏற்ற படம் . நயன் போலீசிடம் தகவல் சொல்லும் காட்சி , அஜ்மலை விசரரிக்கும் காட்சிகளில் தியெட்டரில் ரிலீஷ் அகியிருந்தால் விசில் பறந்திருக்கும் . அஜ்மலுக்கு வழக்கமான சைக்கோ கேரக்டர் அதனால் பெரிதாக எடுபடவில்லை . சப் இன்ஸ்பெக்டராக வந்து நயனுக்கு உதவி செய்யும் மனிகண்டன் ஜொலிக்கிரார் . இதுவும் கடந்து போகும் பாடல் , பின்னணி இசை இரண்டிலும் கிரிஸ் கோபாலகிருஷ்னன் ஸ்கோர் செய்கிறார் . 

படத்தின் ஆரம்ப காட்சிகளில் , இன்டர்வெல் வரை அடுத்தடுத்த நகர்வுகள் படத்துக்கு பலம் . மெட்ரோ வில் நயன் நாயுடன் போவது , எந்த செக்யூரிட்டியும் இல்லாமல் மெட்ரோ ,  மால் எல்லாம் இருப்பது, விடியோ காலில் ஸ்கிரீன் ஷாட் எடுக்காமல் நம்பியார் காலத்து பாணியில் ஸ்கெட்ச் வரைந்து குற்றவாளியை கண்டுபிடிப்பது எல்லாம் லாஜிக் சொதப்பல். சுருக்கமா சொன்னால் சின்னதம்பி கவுன்டமணிக்கு ஆறு மணி வரை ஆறு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் அண்டாவின் கரையை பார்க்கும் அளவுக்கு  கண் பார்வை இருந்தும் ஆறு மணிக்குப் பின் எதுவுமே தெரியாதது  போல இண்டர்வெல் வரை நன்றாக  போய் அதன் பிறகு தடுமாறும் நெற்றிக்கண் -  மாலைக்கண் ...   

ரேட்டிங்க் : 2.75 *  

இதன் வீடியோ விமர்சனத்தை Vanga Blogalam  யூ டியூப் சேனலில் காணவும் ...

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/jKYY7GG6GI4" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

1 August 2021

திட்டம் இரண்டு திரை விமர்சனம் | THITTAM IRANDU FILM REVIEW BY VANGA BLOGALAM ...


கனா , க.பெ.ரணசிங்கம் வெற்றியை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷை யின் மெயின்லீடாக வைத்து சீரியல் மற்றும் குறும்பட பிரபலம் விக்னேஷ் கார்த்திக் இயக்கி சோனிலிவ் ஓடிடி யில் நேரடியாக ரிலீஸ் ஆகியிருக்கும் தமிழ்ப்படம் திட்டம் இரண்டு . இவர்கள் இருவரும் இணைந்து தீட்டிய திட்டம் பலித்ததா ? பார்க்கலாம் ...

இன்ஸ்பெக்டர் அ(ஆ)திரா ( ஐஸ்வர்யா ராஜேஷ் ) வுக்கு பேருந்து பயணத்தின் சக பிரயாணி அர்ஜுனை ( சுபாஷ் செல்வம் ) பிடித்துப் போக காதலிக்க ஆயத்தமாகிறார் ‌‌இதற்கிடையில் தனது பால்ய தோழி சூர்யா காணாமல் போனதாக தகவல் வர கொஞ்சம் காதலை மறந்து விட்டு குறுக்கு விசாரணையில் இறங்குகிறார் . சூர்யா விபத்தில் இறந்ததாக அனைவரும் நம்ப அதிராவோ நம்பாமல் சூர்யாவின் கணவர் கிஷோர் , க்ளாஸ் மேட்  என அனைவரிடமும் விசாரணையை தீவிரமாக்குகிறார் . இதில் அவர் ஜெயித்தாரா ? சூர்யாவுக்கு என்ன தான் ஆனது என்பதை சாவகாசமாக அதே நேரம் க்ளைமேக்ஸில் சவுக்கடியாக சொல்வதே திட்டம் இரண்டு ...


ஐஸ்வர்யா ராஜேஷ் க்கு இன்ஸ்பெக்டராக பொருத்தமான வேடம் தான் ஆனால் படம் முழுவதும் ஒரே குழப்பமாகவே இருக்கிறார் ‌‌‌‌. மப்டியிலேயே பெரும்பாலும் வருவதும் எந்த ஆக்சன் சீனும் இல்லாததும் இவரை மனம்  இன்ஸ்பெக்டர் என்பதை நம்ப மறுக்கிறது ‌‌. ஆனால் சென்டிமென்ட் காட்சிகளில் ஜொலிக்கிறார் . அமைதியாகவே வந்தாலும் குரூரமாக சிரிக்கும் இடங்களில் சபாஷ் வாங்குகிறார் சுபாஷ் செல்வம் . சூர்யாவாக நடித்திருக்கும் அனன்யாவுக்கு கத்துவதை தவிர பெரிதாக வேலையில்லை இவர் கணவர் கிஷோர் கதாபாத்திரம் மெளனராகம் மோகனையே மிஞ்சும் படி இருக்கிறது ...

ஒளிப்பதிவு ,  பிண்ணனி இசை படத்திற்கு பலம் . எடிட்டிங் ஐஸ்வர்யா போலவே சம்பந்தம் இல்லாமல் ஜம்ப் ஆகிறது ‌‌. சமூக சிந்தனையுள்ள வித்தியாசமான கதை  , சின்ன பட்ஜெட்டில் சிம்பிளாக எடுத்த விதம் , ஆச்சர்யப்படுத்தும் க்ளைமேக்ஸ் எல்லாமே திட்டம் இரண்டில் பலிக்கின்றன . யார் கொலையாளி என்பதை சுத்தலில் விட்டாலும் மிகவும் சுவாரசியம் இல்லாத திரைக்கதை , பெரிதும் எடுபடாத மாற்றுத்திறனாளி ட்விஸ்ட், லாஜிக் சொதப்பல்கள் இவையெல்லாம் திட்டத்தில் பல்லிளிக்கின்றன . மொத்தத்தில் கதையாக நல்ல திட்டம் தீட்டிய இயக்குனர் திரைக்கதை வடிவத்தில் திட்டம் இரண்டை நன்றாக தீட்டாமல் விட்டு விட்டார் ...

ரேட்டிங் : 2.75 * 

இந்த விமர்சனத்தை வீடியோ வடிவில் காண கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/PNEZKk5l4YI?controls=0&amp;start=10" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

நன்றி , வணக்கம் 🙏 

வாங்க ப்ளாகளாம் அனந்து ...

திட்டம் இரண்டு , திரை விமர்சனம் ,  சினிமா









24 July 2021

சார்பட்டா பரம்பரை - SARPATTA PARAMBARAI - சக்சஸ் பரம்பரை


அட்டக்கத்தி , மெட்ராஸ் வெற்றிக்குப் பிறகு சூப்பர்ஸ்டாருடன் இணைந்து  கபாலி , காலா வில் சினிமா வெற்றியை விட தன் சித்தாந்தத்தை அதிகம் முன்னிறுத்தி தடம் மாறிய ரஞ்சித் , நான் கடவுள் படத்திற்கு பின்  தன்னை பெரிய நடிகராக நிரூபிக்க முடியாமல் தடுமாறிய ஆர்யாவும் இணைந்திருக்கும் படம் சார்பட்டா பரம்பரை . படம் வழக்கமான ஸ்போர்ட்ஸ் டெம்ப்ளேட் ட்ராமா  தான் என்றாலும் 1970களில் மெட்ராஸ் வடக்கு பகுதிகளில் பிரபலமான குத்துச்சண்டை குழுக்களை பற்றி நேர்த்தியாக எடுத்த விதத்தில் ரசிக்க வைக்கிறார் ரஞ்சித் ‌‌...

பரம்பரை என அழைக்கப்படும் குழுக்கள் பல இருந்தாலும் மிக பிரபலமான இரண்டு அணிகள் சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை . ‌‌தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சார்பட்டா பரம்பரை யின் வாத்தியார் ரங்கன்  ( பசுபதி ) வெற்றி பெற தனது மகன் வெற்றியை   ( கலையரசன் ) நம்பாமல் மற்றொரு சிஷ்யன் ராமுவை ( சந்தோஷ் ) நம்ப அவரோ குருவை நம்பாமல் வெளியூர் ஆளோடு பயிற்சியில் இறங்க கடுப்பாகிறார் கோச் ‌‌. அந்த நேரத்தில் ஏகலைவன் போல தூரமாகவே குத்துச்சண்டை யை கற்றுக்கொண்ட  குரு பக்தியுள்ள கபிலன் ( ஆர்யா ) ஆபத்பாந்தவனாக வருகிறார் . அவர் எதிரணியின் வேம்புலியை வென்று குருவின் மானத்தை காத்தாரா என்பதை விறுவிறுப்பாக இருந்தாலும் இடைவெளிக்குப்பின் கொஞ்சம் நீ...ட்டி சொல்வதே சார்பட்டா பரம்பரை....

ஆர்யா வின் கடும் உழைப்பு படத்திற்கு பெரிய பலம் . குறிப்பாக உடலை வருத்தி சிக்ஸ் ஆப்ஸோடு வருவதோடல்லாமல் குடிகாரனாகி தொப்பையோடு பழைய வெற்றியை நோக்கி ஏங்கும் இடங்களில் அதிகம் ஆச்சர்யப்படுத்துகிறார் . முதலிரவில் குத்தாட்டம் போட்டு முகம் சுளிக்க வைத்தாலும் " வாடா வந்து சோறு ஊட்டு " என்று ஆர்யாவை மிரட்டும் இடங்களில் அட போட வைக்கிறார் ஹீரோயின் துஷாரா . பசுபதி , கலையரசன்‌, சந்தோஷ் , ஜான் விஜய் எல்லோருமே கதாபாத்திரங்களாகவே  மாற்றியிருக்கிறார்கள் . அதிலும் டான்ஸிங் ரோசாக வரும் சமீர் , ஆர்யாவின் அம்மாவாக வரும் அனுபமா இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் ...                                                          

படம் முழுவதும் மிகப்பெரிய பட்டாளமே நடித்திருந்தாலும் பீடி ராயப்பா , ராமுவின் மாமா , வேம்புலியின் கோச் ‌, எம்ஜிஆர் ரசிகராக வரும் மாறன் என அனைவரையும் கவனிக்க வைக்கிறார் இயக்குனர் . செட் என்றே நம்ப முடியாத கலை இயக்கம் , சந்நதோஷ் நாராயணின் இசை என எல்லாமே அவருக்கு கை கொடுக்கின்றன . இதில் ஹீரோ வெற்றிக்கு பிறகு குடிக்கு அடிமையாகி பின் தெளிவானது போல ரஞ்சித்தும் கபாலி , காலா வுக்கு பிறகு தெளிவாகி  தனக்கான சரியான படத்தை தயாரித்து இயக்கியிருப்பதற்கு பாராட்டுக்கள் ...

கதை காலகட்டத்தின் படி எமர்ஜென்ஸி யின் போது திமுக எதிர்த்ததை பதிவு செய்த ரஞ்சித் குத்துச்சண்டை யில் ஆர்வம் கொண்டு அதை ஊக்குவித்த எம்ஜிஆர் அவர்களின் படத்தை படம் முடிவில் சின்னதாக போட்டு சுருக்கியது சீப் அரசியல் . சார்படடா பரம்பரை யில் சாதி, மதம் இல்லை என சொல்லப்பட்டாலும் இதிலும் வழக்கம் போல குறியீடுகள் மூலம் தனது சாதிப்பற்றை காட்டி சுய இன்பம் அடைந்திருக்கிறார் இயக்குனர் . ஆனால் கபாலி , காலா போல அதை ஓவர்டேக் பண்ண விடாமல் அடக்கி வாசித்ததால் நாம் பிழைத்தோம் . இன்டர்வெல் வரை வேகமாக செல்லும் படத்தை அதன் பிறகு இழுத்திருப்பதை தவிர்த்திருக்கலாம் . இது போன்ற சில குறைகளை ஒதுக்கி விட்டு பார்த்தால் நல்ல படமாகவும் , வணிக ரீதியாகவும் சார்பட்டா பரம்பரை - சக்சஸ் பரம்பரை ...

ரேட்டிங்.    : 3.5 *

இந்த படத்தின் யூடியூப் விமர்சனத்தை காண கீழே சொடுக்கவும் ‌‌. மறக்காமல் VANGA BLOGALAM  சேனலை சப்ஸ்க்ரைப் செய்யவும் .




                            நன்றி ! வணக்கம்  🙏  அனந்து ...




Related Posts Plugin for WordPress, Blogger...