Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

9 January 2016

புத்தாண்டே ...



புத்தாண்டே நீ
ஒவ்வோர் வருடமும்
வருகிறாய் போகிறாய்
நாங்களும் உன்னை
வைத்து நிறைய திட்டமிடுகிறோம் ...

அதை செய்து முடிப்பதற்குள்
நீ
மீண்டும் வருகிறாய்
நாங்களும் வெக்கமேயில்லாமல்
மீண்டும் திட்டமிடுகிறோம்
அதில் மீண்டும் தோற்கிறோம் ...

இப்படி விழுவதும்
எழுவதும் தானே
வாழ்க்கை - அது
கூட இல்லையென்றால்
வேறென்ன கேளிக்கை ?! ...

நாங்கள் மதத்தை சொல்லி
குண்டு வைப்போம்
சாதியை சொல்லி  சக மனிதனை
தள்ளி வைப்போம்
ஏரியை நிரப்பி
வீடு கட்டுவோம்
வெள்ளம் வந்தால்
கடவுளை திட்டுவோம்
வெப்பமயமாதல் பற்றி
நிறைய சொல்வோம்
பக்கத்து கடைக்கு கூட
பைக்கில் தான் செல்வோம் ...

காக்கைக்கும் தன் குஞ்சு
பொன் குஞ்சு போல
நீயும்  எங்கள் குறைகளை
மறந்து ஒவ்வொரு வருடமும்
வருகிறாய் .
உன்னை வெறுங்கையுடன் அனுப்பாமல்
நாங்களும் ஏதேதோ
பொய் சத்தியம்
செய்து கொடுக்கிறோம் ...

தனியாக பிறந்து
தனியாக மாயும்
இந்த மாய உலகில்
சேர்க்கும் பொன் பொருளை விட '
நாம் போன பின்
நமக்காக கண்ணீர் விட
சில இதயங்களை சேர்ப்பதே
சிறந்தது என
நாங்கள் எப்போது உணர்வோம்  ?! ...

( அப்பார்ட்மெண்ட்டில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது படித்தது )



11 December 2012

மகாகவி ...


தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ்  சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ ?

- மகாகவி பாரதியார்

என்றென்றும் எங்கள் நெஞ்சிலே
வீழாதிருக்கும் மகா கவியே
உன்னை வணங்குகிறேன் ...

9 November 2012

ஓர் புன்னகை ...!





ஆணாய் பிறந்து
அழகாய் வளர்ந்து 
அன்பில் திளைத்து
அறிவை பெற்று 
சேட்டைகள் செய்து 
முதல் காதல் பெற்று 
பொருள் தேடி 
தினம் உழன்று
வாயைக் கட்டி
வயிற்றைக் கட்டி
வீட்டைக் கட்டி
விருப்பமான மனைவியுடன்
அதில் குடி புகுந்து
மனைவியின் முறைப்பையும்
பொருட்படுத்தாமல்
கிறுக்கல்களை வலைத்தளத்தில்
பதிவாய் பதித்து
அதற்கும் வரும்
பின்னூட்டங்களால்
பரவசம் அடைந்து
சுலப தவணைகளில்
வேண்டியதை பெற்று
சினிமாவை சிலாகித்து
சண்டைகள் போட்டு
சறுக்கி விழுந்து
மீண்டும் எழுந்து
பரிசுகள் குவித்து
பாராட்டில் நனைந்து
நித்தம் வாழ்க்கையில்
கிடைக்கும்
நிம்மதிகள் எல்லாம்
மகளே
கன்னக்குழி விழ 
நீ பூக்கும்
ஓர் புன்னகைக்கு
ஈடாகுமா ?!













9 September 2012

ஞாபகங்கள் ...


ஒரு வயதில் உனக்கு
காது  குத்திய போது 
உன்னை விட 
அதிகமாய் நான் 
அலறிய ஞாபகம் ...

ஐந்து வயது ஆனபோதும் 
தனியாய் நடக்காமல் 
என் கைகள் கோர்த்தே 
நீ நடந்த ஞாபகம் ...

பத்து வயதில் உன் 
அழுகையை நிறுத்த 
மரத்திலிருந்து குதித்து 
என் கால்களை 
உடைத்துக்கொண்ட ஞாபகம் ...

பனிரெண்டு வயதில் 
தூக்கத்திலே  என் 
கால்கள் மேல் படர்ந்திருந்த 
உன் கால்களை 
அகற்றும் போது 
நீ ஒரு முறை 
உற்றுப்பார்த்து விட்டு 
மீண்டும் கண்களை 
மூடிக்கொண்ட  ஞாபகம் ...

பதினைந்து  வயதில் 
உன்னை கடைசியாய் 
பாவாடை சட்டையில் 
பார்த்த ஞாபகம் ... 

பதினெட்டு வயதில் 
என்னுடன் தனியாக 
பேசிக்கொண்டிருந்த உன்னை 
உன் அம்மா 
போட்ட சத்தத்தால் 
பலர் 
திரும்பிப்  பார்த்த ஞாபகம் ... 

இருபத்தியொரு  வயதில் 
நீ படிப்பை 
முடித்த பிறகும் 
நான் நண்பர்களுடன் 
ஊர் சுற்றிக் கொண்டிருந்த ஞாபகம் ...  

இருபத்தி மூன்றாம் வயதில் 
உனக்கு மாப்பிள்ளை 
பார்க்க ஆரம்பித்த  
போது  
என்னை வேலை 
தேடச் சொல்லி 
நீ வற்புறுத்திய ஞாபகம் ... 

இருபத்தைந்தாம் வயதில் 
உன் கழுத்தில் தாலி 
ஏறிய பிறகு தான் 
அயல்நாடு செல்வதில் 
உனக்கும் ஆசை 
இருந்தது என்பதை 
நான் தெரிந்து கொண்ட ஞாபகம் ... 

இருபத்தியேழாம் வயதில் 
உனக்கு பிறந்த 
முதல் பையனுக்கு 
என் பெயரை 
வைத்ததாய் ஞாபகம் ... 




2 September 2012

தமிழ் வலைப்பதிவர்கள் கவியரங்கம் - நட்பிற்கினியவளே ...!


ன்முறை இரண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம் என்றார் அறிஞர் அண்ணா ... என்னைப் பொறுத்த வரை கவியரங்கத்தில் கவிதை வாசிப்பதும் அது போலத்தான் ... கவிதை நன்றாக இருந்தால் பாராட்டு பெறலாம் இல்லையேல் கல்லடி தான் ... அதிலும் நமக்கு முன்பாக வாசித்தவர்களின் கவிதை சரியில்லை என்றால் நாம் வரும் போதே அரங்கத்தில் உள்ளவர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பி விடும் , அதே சமயம் அவர்கள் அருமையாக கவிதை வாசித்திருந்தால் நம் கவிதையும் அதற்கு ஈடு கொடுக்கும் படி இருக்க வேண்டும் , இல்லையேல் நாம் அம்பேல் ... ஏதோ ஒரு தைரியத்தில் நானும் எனது கவிதையை கவிதையை கவியரங்கத்தில் வாசிக்க முடிவு செய்தேன். ( எவ்வளவோ செஞ்சாச்சு இத செய்ய மாட்டோமா).
கேபிள் சங்கர் அவர்கள் வானமே வீழ்ந்தாலும் அவரது என்டர் கவிதையை படித்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நின்றதை பார்த்த போது எனக்கு மேலும் தைரியம் கூடியது ... மயிலன் கவிதைக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த போது எனக்கும் நம்பிக்கை பிறந்தது ...

எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து நானும் சில கவிதைகளை ஓட்டிக் கொண்டிருந்தேன் , பிறகு நானே கவிதை வாசிக்க போகிறேன் என்று தெரிந்த போது சுற்றியிருந்தவர்கள் சற்று அதிர்ச்சியுடன் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு எஸ்கேப் ஆக பார்த்தார்கள் ... கவிதை சரியில்லை என்றால் குவாட்டர் வாங்கித் தருகிறேன் என்றெல்லாம் சொல்லி அவர்களை ஒரு வழியாக சமாதானப்படுத்தி வைத்தேன் ... கவிதை என்ற பெயரில் நான் கிறுக்க ஆரம்பித்தது பத்தாவது படிக்கும் போது தான் ... மதுரை கல்லூரியல் படிக்கும் போது திருச்சி ஆர்.ஈ.சி கல்லூரியில் கணையாழி ஆசிரியர் திரு.ஞானக்கூத்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கல்லூரிகளுக்கான கவிதைப் போட்டியில் " நட்பு " என்ற தலைப்பில் நான் வாசித்த எனது கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது ... அதன் பிறகு எந்த ஒரு மேடையிலும் கவிதை வாசிப்பதற்க்காக நான் ஏறியதில்லை ...

இது வரை எனது வலையில் பத்துக்கும் மேற்ப்பட்ட கவிதைகளை பதிவிட்டிருக்கிறேன் ...அவற்றுள்  " நட்பிற்கினியவளே  " , " உண்மையை சொல்கிறேன் " ,  அல்லது " தனிமை " இந்த மூன்றில் எதையாவது ஒன்றை வாசிக்கலாம் என முடிவு செய்து அருகிலிருந்த நண்பர் நண்டு @ நொரண்டுவிடம் ( அவர் தான் பாக்க எதையும் தாங்கும் இதயம் போல தெரிஞ்சாரு )எனது மொபைல் போனில் டவுன்லோட் செய்திருந்த கவிதைகளை காண்பித்தேன்... அவர் படித்து விட்டு முதல் கவிதையை தேர்ந்தேடுத்ததோடு மூன்றுமே நன்றாக இருக்கின்றன என்று பாராட்டினார் ( என்ன பெருந்தன்மை ! ) ...ஒருவழியாக எனது கவிதையை பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் ( யாருக்கு , யாருக்கோ ) வாசித்து முடித்தேன் ... கவியரங்கத்தின் போது சக பதிவர் சசிகலா அவர்களின் " தென்றலின் கனவு " என்கிற கவிதை தொகுப்பும்  பிரபல எழுத்தாளர் பி.கே.பி அவர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது ... மொபைல் போன் மூலம் கவிதை வாசித்ததை திரு.பி.கே.பி அவர்கள் தன் உரையின் போது நினைவு கூர்ந்தார்... இந்த கவிதையை தேர்ந்தெடுத்த ராஜசேகர் ( நண்டு @ நொரண்டு ) , படிக்க சொல்லி ஊக்கமளித்த கடம்பவன் ,  நான் கவிதை வாசிக்கும் போது  அதை படம் பிடித்து ட்விட்டருக்கும் அனுப்பி வைத்த சி.பி.செந்தில்குமார்  ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . இதோ உங்களுக்காக ( எதுக்கு இந்த பில்ட் அப் ! ) ...

                                                                        நட்பிற்கினியவளே ...!




வகுப்பறையில்
வேற்று கிரக வாசிகள் போல்
ஆண்களும் பெண்களும்
வெறுமையாய் அமர்ந்திருக்க
பார்வையிலேயே புரிந்து கொண்டு
கை குலுக்களில்
தொடங்கியது
நம் நட்பு....

நான்கே நாட்களில்
புரிந்து விட்டது
நட்பிற்கினியவள்
நீயென்று....

எவன் சொன்னது ?
பெண்ணின் மனது
பெண்ணிற்குத் தான்
தெரியுமென்று..
மௌனத்தில் நீயிருந்தும்
உன்
மனதைப் படிப்பதில்
சிறந்தவர்
எனைத் தவிர
வேறெவரும் உண்டா ?...

நம் நட்பு
உயிர் வாழ
நாம் சந்தித்த
சங்கடங்கள் பல
ஆனால்
நம் மனதில்
சஞ்சலங்கள் இருந்ததில்லை...


                                       
எனக்கு
இளையராஜா பிடிக்கும்
உனக்கு ஏ.ஆர்.ரஹ்மான்...
மதில் சுவரில் அமர்ந்து
மணிக்கணக்கில் 
சண்டைகள் போட்டிருக்கிறோம்...
என்
பிறந்த நாளில்
உன் பரிசாக
கைகளில் தவழ்ந்தது
இசைஞானியின் இசை பேழை...

சுயநலம் மறந்தும்
சுயத்தை இழக்கவில்லை...

வெட்கத்துடன்
திருமண அழைப்பிதழ்
கொடுத்த போது தான்
நீ
பெண் என்பதை
நான் உணர்ந்தேன்...

அதை
என் மூலம் கொடுத்து
ஊர் வாயை அடைத்தாய்...


என் காதலுக்கு
தூது போனவள்
நீ..
நம் நட்பை
கொச்சைப்படுத்திய காதலையே
தூக்கியெறிந்தவன்   நான்...

இன்று அவள்
எங்கே இருக்கிறாள்
தெரியவில்லை...

இத்தனை வருடங்கள்
ஆனாலும்
வாசம் மாறாமல்
வீசிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு...





21 August 2012

வலைச்சரத்தில் நான்...


திரு.சீனா அவர்களின் வேண்டுகோளை ஏற்று வலைச்சரத்திற்கு ஆகஸ்ட் 6 - 12 வரை நான் ஆசிரியர் பொறுப்பேற்று என்னால் முடிந்த வரை 21 பதிவர்களை அறிமுகம் செய்தேன் ... ஒரு மாதமாக தள்ளிப் போய்க் கொண்டேயிருந்த பொறுப்பினை ஒரு வழியாக நல்ல  படியாக முடித்ததில் எனக்கு மகிழ்ச்சி ...  அந்த ஒரு வாரத்தில் நான் பதிவு செய்த சில ஹைக்கூக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் ... இதில் எனது பழைய ஹைக்கூக்களும் அடக்கம் ... 

பெண்ணே ...!

ஆணாதிக்கம் பேசுகிறாய்

என்னை 
அடிமைப்படுத்திக்   கொண்டே ...

நீ சிரிக்கிறாய் 
பைத்தியக்காரனாவது 
நான் மட்டும் தான் ...

தொலைந்த என்னை தேடுகிறேன்
நீ கொடுத்த
உன் திருமண அழைப்பிதழில் ...

சுற்றுச்சூழல் 


மரங்கள் தலைப்பில் 
கவிதை வராமல் 
கசக்கி எறிந்தேன் காகிதத்தை ...

பகுத்தறிவு


கடவுளே இல்லை 
சொன்னவருக்கு 
சிலை வைத்தான் பகுத்தறிவுவாதி ...

ரசிகன் 


தியேட்டர் சண்டையில் 
வாயில் ரத்தம் வருத்தப்பட்டேன் 
விசிலடிக்க முடியாமல் போனதற்கு ....

எயிட்ஸ்


தீண்டாமை பெருங்குற்றம் 
தவறாக புரிந்து கொண்டார்கள் 
விளைவு எயிட்ஸ் ...





17 June 2012

வழிப்போக்கன் ...



மயிலிறகால் வருடிவிட்டு
முள்ளால் தைப்பது
போலிருந்தது
ஒரே நாளில்
நடந்து முடிந்த
நம் சந்திப்பு ...

உயிருக்கும் வரை
உறையப் போகும்
நினைவுகளுக்கு முன்னாள்
உன் பெயரொன்றும்
பெரிதில்லை ...

பார்வையிலேயே
புரிந்து போன பிறகு
பெயரெதற்கு ?

வெறுமையுடன் வந்து
அடி மனதில்
பத்திரப்படுத்திய
உன் புன்னகையுடன்
திரும்புகிறேன் ...

வாழ்க்கையை பொறுத்தவரை
நாம் அனைவருமே
வழிப்போக்கர்கள் தான் ...

வழிப்போக்கனின் வாழ்க்கையையும்
அர்த்தமாக்கிக் கொண்டிருக்கும்
இது போன்ற
கரையாத
கடந்த கால நிமிடங்கள் ...

அந்த நிமிடங்களின்
அனுபவ சுவைக்காக
நீடித்துக் கொண்டிருக்கும்
வழிப்போக்கனின் வாழ்க்கை ...


24 January 2012

உண்மையை சொல்கிறேன் ...


உண்மையை சொல்கிறேன் ...

நான் 
கவிதை எழுவதில்லை
அவள் 
பெயரை எழுதி
பத்திரப்படுத்துவதை தவிர ...

நான் 
பொய் சொல்வதில்லை
அவள் மட்டும் தான் 
உலக அழகி 
என்பதை தவிர ...

நான் 
உணர்ச்சி வயப்படுவதில்லை
அவள் மூச்சுக்காற்று 
மிக அருகாமையில் 
எனை உரசும் 
நேரங்கள் தவிர ...

நான் 
தூங்குவதில்லை 
அவள் 
கனவுகளில் வரும்
பொழுதுகள் தவிர ...

நான் 
கவலைப்படுவதில்லை 
அவள் 
என்னுடன் இல்லாத 
நிமிடங்கள் தவிர ...

நான் 
தற்பெருமை கொள்வதில்லை 
அவள் 
என் கைகளை 
கோர்த்து நடக்கும் 
தருணங்கள் தவிர ...

உண்மையை சொல்கிறேன் ...

நான்
உருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர ...!





11 January 2012

நம் காதல் ...!



எந்தவித கணக்கீடுகளுக்குள்ளும்
அடங்குவதில்லை
நம் காதல் ...

விழுந்து எழுந்து
வளைந்து நெளிந்து
ஏதோ ஒரு விகிதத்தில்
அது
ஓடிக்கொண்டேயிருக்கும் ...!

உன்னுடன் இனி பேசுவதில்லை
என்று சொல்லியாவது
முறிந்த
நம் பேச்சுவார்த்தை
மீண்டும் தொடங்கும் ...

பூமராங் போல
எங்கே போனாலும்
என் மனம்
மீண்டு வந்து
உன் கைகளுக்குள்ளேயே அடங்கும் ...!

அழகான பெண்கள்
கடக்கும் போது
அடடா என வழிந்தாலும்
முறைப்புடன் உன் முகம்
கண் முன் ஒரு கணம்
வந்து போகும் ...

உனக்காக கவிதைகள்
என்ற பெயரில்
நான்
ஏதேதோ கிறுக்கியதால் தான்
சொன்னான் பாரதி
தமிழ் இனி மெல்ல சாகும் ...!

கடன் கொடுத்தார்
நெஞ்சம் போல்
பதைபதைக்க வைத்தாலும்

பிரிந்திருக்கையில்
உலகமே நீயாய்
உன்னோடிருக்கையில்
நீயே உலகமாய்
எல்லாமுமாய் என்னுள்
எரிந்து கொண்டேயிருக்கும்
தீயாய்
நம் காதல் ...!




26 December 2011

ஹை ஹை ஹைக்கூ ...!




தேர்தல் 

ஐந்தாண்டுக்கு
ஒரு முறை ஆடும்
மங்காத்தா ...!

ஏழையின் கைகளில்
காந்தியை
காணும் நாள் ...!

ஐந்து வருட
அடிமை சாசனத்தில்
கைநாட்டு இடும் நாள் ...!

கள்ள காதல் 

அவளை பிடித்தது
அவளுக்கும் தான்
கணவனுக்கு மட்டும் ஏனோ ...!

வழி மேல்
விழி வைத்தேன் அவர்
வந்து விடுவாரோ என்று ...!

மரணம் 

நினைத்தாலும்
நிறுத்த முடியாத
நிகழ்வு ...!

நம் மேல்
வைத்த அன்பை
அடையாளம் காட்டும் உலகிற்கு ...!

துன்பத்திலிருந்து
விடுதலை பெற
தானாய் வந்த துருப்புசீட்டு ...!

குழந்தை 

நாம் காண முடியாத
நம் குழந்தை பருவத்தை
கண் முன் காட்டும் காணொளி ...!

முத்தம் 

காமமோ காதலோ
கடமையை செய்யும்
பரிமாற்றம் ...!

தற்கொலை 

கோழைகள்
எடுக்கும்
துணிவான முடிவு ...!

24 November 2011

தனிமை ...


அதிகாலை வேளையில்
எனை எழுப்ப
அருகே வரும்
உன் கைகள்
அதை அணைத்தபடியே
போடும் குட்டி தூக்கம் ...

வாசல் வரை
வந்து வழியனுப்பி விட்டு
பின்
ஏதோ ஒரு
பொய் சாக்கு சொல்லி
நான் திரும்ப
வருவேன் என்பதை
குறிப்பால் உணர்த்தும்
உன்
கண்களின் குறும்பு ...

உரிமையில்
என் பெயரை
சொல்லி விட்டு
உடனே
நாக்கை கடிக்கும்
உன் அழகு ...

இரவில்
நான் வீடு திரும்ப
வெகு நேரம் ஆனாலும்
செல்போனில் சிணுங்காமல்
என்
புகைப்படத்துடன் பேசும்
உன் பொறுமை ...

அடுத்த பெண்ணை
நான்
ரசிக்கும் போது
அக்கா ரொம்ப அழகு
என சொல்லும்
உன் சாமர்த்தியம் ...

காக்கா கரையும்
போதெல்லாம்
என் விழிகளை
வாசல் பார்க்க வைக்கும்
உன் காதல் ...

நினைவுகளை போர்த்தியபடி
தனிமையை
விரட்ட எண்ணி
வழக்கம் போல்
தோற்றுப்போகும்
என் கண்கள் ...






25 September 2011

மீளா நிலை ...



எதிர்பாரா நேரத்தில்
அழைக்கிறாய்
எதிபார்க்கும் தருணங்களில்
ஏனோ அலைக்கழிக்கிறாய் ...

எது சொன்னாலும்
சிரிக்கிறாய்
என்னை 
பைத்தியக்காரனாக்கி விட்டு ...

ஆணாதிக்கம் என்கிறாய்
என்னை
அடிமைப்படுத்தியது தெரியாமல் ...

காந்தீயம் பேசுகிறாய்
கண்களில்
பொய் சொல்லிக் கொண்டே ...








ஏனிந்த முரண்பாடு ?

முரண்பாடுகளின்
மொத்த உருவமாய்
நீ
இருந்தாலும்
மனம்
உன்னிடம் மட்டும் மண்டியிடுகிறது ...

உன்னுடன்
கைகள் கோர்ப்பதற்காகவே
நீண்டன என் பயணங்கள் ...

ஆயுளில்
ஒரு வருடம்
குறைவது தெரிந்தும்
கொண்டாடப்படும்
பிறந்த நாளை
போல

மீண்டு வர முடிந்தும்
பிடித்திருக்கிறது
இந்த
மீளா நிலை ...











7 August 2011

நட்பிற்கினியவளே...


வகுப்பறையில்
வேற்று கிரக வாசிகள் போல்
ஆண்களும் பெண்களும்
வெறுமையாய் அமர்ந்திருக்க
பார்வையிலேயே புரிந்து கொண்டு
கை குலுக்களில்
தொடங்கியது
நம் நட்பு....

நான்கே நாட்களில்
புரிந்து விட்டது
நட்பிற்கினியவள்
நீயென்று....

எவன் சொன்னது ?
பெண்ணின் மனது
பெண்ணிற்குத் தான்
தெரியுமென்று..
மௌனத்தில் நீயிருந்தும்
உன்
மனதைப் படிப்பதில்
சிறந்தவர்
எனைத் தவிர
வேறெவரும் உண்டா ?...

நம் நட்பு
உயிர் வாழ
நாம் சந்தித்த
சங்கடங்கள் பல
ஆனால்
நம் மனதில்
சஞ்சலங்கள் இருந்ததில்லை...
                                       
எனக்கு
இளையராஜா பிடிக்கும்
உனக்கு ஏ.ஆர்.ரஹ்மான்...
மதில் சுவரில் அமர்ந்து
மணிக்கணக்கில் 
சண்டைகள் போட்டிருக்கிறோம்...
என்
பிறந்த நாளில்
உன் பரிசாக
கைகளில் தவழ்ந்தது
இசைஞானியின் இசை பேழை...

சுயநலம் மறந்தும்
சுயத்தை இழக்கவில்லை...

வெட்கத்துடன்
திருமண அழைப்பிதழ்
கொடுத்த போது தான்
நீ
பெண் என்பதை
நான் உணர்ந்தேன்...

அதை
என் மூலம் கொடுத்து
ஊர் வாயை அடைத்தாய்...
                               
என் காதலுக்கு
தூது போனவள்
நீ..
நம் நட்பை
கொச்சைப்படுத்திய காதலையே
தூக்கியெறிந்தவன்   நான்...

இன்று அவள்
எங்கே இருக்கிறாள்
தெரியவில்லை...

இத்தனை வருடங்கள்
ஆனாலும்
வாசம் மாறாமல்
வீசிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு...



5 August 2011

கண்களில் விழுந்தாய்...

          
கண்களில் விழுந்தாய்
காதலில் கரைந்தாய்..
                                    
சந்தோசம் கொடுத்தாய்
கவலைகள் கெடுத்தாய்...

எனக்கு வலித்தால்
நீ துடித்தாய்
துன்பம் காட்டாமல்
நடித்தாய்...

எனை பார்த்துக்கொண்டாய்
குழந்தையாய்
உனை பார்த்ததில்லை
அகந்தையாய்...
                                       
என் மீது
எனக்கே
நம்பிக்கை ஊட்டினாய்
என்னுள்
ஞானத்தீ மூட்டினாய்...

துவண்ட போது
தேற்றினாய்
திறமைகளை போற்றினாய்...

எனக்காக பிறந்தாய் 
சுயநலம் மறந்தாய்...

இப்படி எல்லாமே தந்தாய்...

காமமற்ற பொழுதுகளில் 
நீ
மேலும் ஒரு தாய்...  

 

9 July 2011

முக்காலம்...

            
நினைவுகள்
இறக்க மறுக்கும்
இறந்த காலம்...

நினைப்பவை
நிகழ மறுக்கும்
நிகழ்  காலம்...

எது நடக்குமோ
என்ற அச்சத்தில்
எதிர் காலம்...

மொத்தத்தில்
முரண்பாடுகள் நிறைந்ததே
முக்காலம்...



30 June 2011

ஒற்றை மரமாய்...

எப்படி இருக்கிறாய் 
பெண்ணே ! 
நீ
எங்கே இருக்கிறாய்
என்ற கேள்விக்கு
விடை தெரியாமல்
விசும்பலுடன் நான்...



காலத்தின் கைங்கர்யத்தால்
நாம் பிரிந்தாலும்
நம் காதலை
பிரிக்காமல்
பெயர்களில் தாங்கியபடி
நிற்கிறது ஒற்றை மரம்...

புத்தருக்கு ஞானம்
பிறந்தது
போதி மரத்தில்
எனக்கு
காதல் பிறந்தது 
ஒற்றை மரத்தில்...

மரத்தின் மடியில் 
நமக்கு நாமே நிழலாய் 
எத்தனை நாட்கள்
நின்றிருக்கிறோம்...

உன்னைப்  பார்த்த
பிறகு தான்
என் கிறுக்கல்களும்
கவிதைகளாயின...

உனக்காக நான் எழுதிய
கவிதைகளில்
பயன்பட்டவர்கள் பலர்...
இன்று
அவர்களெல்லாம்
கல்யாணமாகி குழந்தைகளுடன்...

நல்ல வேலை
நாம் சந்தித்த நாட்களில்
நம்மிடம்
கைபேசி இல்லை...
இருந்திருந்தால்
ஒரு நாள் பிரிவிற்கே
உதடுகளில் முத்தம்
கிடைத்திருக்குமா ?...
              
அந்த
முத்தத்தின் ஈரம்
என் இதழ்களில்
உன் பிரிவினால்
ஈரம் 
என் கண்களில்...

புகை பிடிப்பதை
குறைக்கச்  சொன்னாய் 
விட்டொழித்தேன்.!
கோபம் கூடாதென்றாய்
காந்தியைப் போலானேன்...

நீ
சொன்னதையெல்லாம் செய்தேன்
உன்னை
மறந்து விடச் சொன்னாயே
அதைத் தவிர..
மண்ணுக்குள் போனாலும்
மறக்க முடியுமா
அந்த நாட்களை!

ஒரு பார்வைக்கு
ஏங்கிய நாட்கள்...
ஒரே பார்வையில்
ஓராயிரம் அர்த்தம்
சொன்ன நாட்கள்...

கோடையில்
குளிர்ந்த நாட்கள்...
பனியில்
வேர்த்த நாட்கள்...

எத்தனை முறை
பேசிக் கொண்டாலும்
சாகும் வரை
சலிக்காத நாட்கள்...

உன்னைச் சந்திப்பதற்கு முன்
நான் வாழ்ந்த
வாழ்க்கையில்
நீ
ஏன் வரவில்லை 
என்று யோசித்தேன்...

இன்று
உன்னைப் பிரிந்திருக்கும்
இந்த நாட்களை
நான்
ஏன் வாழ்கிறேன்
என்று யோசிக்கிறேன்...

இருந்தும் வாழ்கின்றேன்!

நம்
மூன்றாண்டு காதலில்
மூச்சைப் பிடித்தபடி...

சயனைடு உண்டவன்
ருசியை உணறும் முன்  
செத்துப் போவான்...
நானும்
மனதால் மரித்துப் போனேன்
நீ
பிரிந்த அந்த நொடியில்...

நம் பிரிவின்
ஒரே பயன்
இது போன்ற
சில
நூறு கவிதைகள்...

அதில் ஒன்றாவது
உன்
கைகளில் சேரும்
என்ற நம்பிக்கையில்
நிமிர்ந்து நிற்கிறேன்
ஒற்றை மரமாய்...



22 May 2011

உன் நினைவுகளோடு....

ஒவ்வொரு முறையும்                               
உன்னைப்  பார்த்து விட்டு
திரும்பும் போது                                            
உயிரற்ற உடலாய் 
பயணப்படுகிறேன்..........                                                  
                                                     
                                                                                                                                                                                        
பேருந்துப்  பயணங்களில்
பின்னோக்கி விரையும்  
மரங்களைப்  போல
உன்னை நோக்கித்  தாவுது
என் மனக்குரங்கு .....

நிலவினைக்  காட்டி
சோறூட்டும் அன்னை 
விரலினை பிடித்துக் கொண்டு 
அடங்கள் செய்யும்
சிறு குழந்தை போல
உன்
நினைவுகளில் தவழ்கிறது
என் மனக்குழந்தை .......

எனக்கு
உயிர் கொடுத்தாள்  தாய்
என்
பேனாவிற்கு "உயிர்மை"
கொடுத்தவள் நீ...                           
                                           
                                                                                                    
கல்லூரிக்  காலங்களில்
கன்னியரை மயக்க
கவிதைகள் புனைந்தேன் பல...
"கண்டதும் காதல்"-
காமக் கிளர்ச்சிகளை காதல் என 
தப்பாக கற்பிதங்கள் 
செய்து கொள்ளும்
வயது அது ....

இது
உன்னை பற்றிய கவிதை
மட்டும் அல்ல 
உண்மையை பற்றியதும் கூட...

என் 
ஒவ்வொரு பயணத்தின் போதும்
எனை மறக்காமால் 
எடுத்து  வரச்  சொல்லி
நீ
எழுதிக் கொடுக்கும்
பொருட்கள் பல..
ஆனால்
நான் எதை மறந்தாலும்
மறவாமல் சுமந்து வருவது
உன் நினைவுகள் .....
                                                                            
பிரசவம்
பெண்களுக்கு மறு ஜென்மம்
என்பார்கள்
எனக்கும் கூடத்தான் 
உன்னை பிரிந்திருப்பதால் ...

உன்னைக் காணும்
அந்த
ஒரு நாளிற்காக
ஒவ்வொரு நாட்களையும்
பிரயத்தனப்பட்டு
கடத்திக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளோடு......


29 June 2010

புதிதாய் பிறப்போம்

தொலைந்த என்னை தேடுகிறேன்
நீ கொடுத்த உன்
திருமண அழைப்பிதழில்

தீண்டாமை பெருங்குற்றம்
இங்குள்ளவர்கள் தவறாக புரிந்து
கொண்டார்கள்
விளைவு  aids


பிரம்மாவிற்கு ஏன்
கோவில் இல்லை என்று
வருத்தப்பட்டேன்  உன்னை
பார்த்த பிறகு


காதல் ரோஜாவை பறிக்க
கைகள் நீட்டினேன்
மிஞ்சியது
முகத்தில் தாடி முட்கள்




அடுத்த பிறவியில் எனக்கு
நம்பிக்கை இல்லை
எனவே தினமும்
புதிதாய் பிறப்போம்







Related Posts Plugin for WordPress, Blogger...