30 June 2011

ஒற்றை மரமாய்...

எப்படி இருக்கிறாய் 
பெண்ணே ! 
நீ
எங்கே இருக்கிறாய்
என்ற கேள்விக்கு
விடை தெரியாமல்
விசும்பலுடன் நான்...காலத்தின் கைங்கர்யத்தால்
நாம் பிரிந்தாலும்
நம் காதலை
பிரிக்காமல்
பெயர்களில் தாங்கியபடி
நிற்கிறது ஒற்றை மரம்...

புத்தருக்கு ஞானம்
பிறந்தது
போதி மரத்தில்
எனக்கு
காதல் பிறந்தது 
ஒற்றை மரத்தில்...

மரத்தின் மடியில் 
நமக்கு நாமே நிழலாய் 
எத்தனை நாட்கள்
நின்றிருக்கிறோம்...

உன்னைப்  பார்த்த
பிறகு தான்
என் கிறுக்கல்களும்
கவிதைகளாயின...

உனக்காக நான் எழுதிய
கவிதைகளில்
பயன்பட்டவர்கள் பலர்...
இன்று
அவர்களெல்லாம்
கல்யாணமாகி குழந்தைகளுடன்...

நல்ல வேலை
நாம் சந்தித்த நாட்களில்
நம்மிடம்
கைபேசி இல்லை...
இருந்திருந்தால்
ஒரு நாள் பிரிவிற்கே
உதடுகளில் முத்தம்
கிடைத்திருக்குமா ?...
              
அந்த
முத்தத்தின் ஈரம்
என் இதழ்களில்
உன் பிரிவினால்
ஈரம் 
என் கண்களில்...

புகை பிடிப்பதை
குறைக்கச்  சொன்னாய் 
விட்டொழித்தேன்.!
கோபம் கூடாதென்றாய்
காந்தியைப் போலானேன்...

நீ
சொன்னதையெல்லாம் செய்தேன்
உன்னை
மறந்து விடச் சொன்னாயே
அதைத் தவிர..
மண்ணுக்குள் போனாலும்
மறக்க முடியுமா
அந்த நாட்களை!

ஒரு பார்வைக்கு
ஏங்கிய நாட்கள்...
ஒரே பார்வையில்
ஓராயிரம் அர்த்தம்
சொன்ன நாட்கள்...

கோடையில்
குளிர்ந்த நாட்கள்...
பனியில்
வேர்த்த நாட்கள்...

எத்தனை முறை
பேசிக் கொண்டாலும்
சாகும் வரை
சலிக்காத நாட்கள்...

உன்னைச் சந்திப்பதற்கு முன்
நான் வாழ்ந்த
வாழ்க்கையில்
நீ
ஏன் வரவில்லை 
என்று யோசித்தேன்...

இன்று
உன்னைப் பிரிந்திருக்கும்
இந்த நாட்களை
நான்
ஏன் வாழ்கிறேன்
என்று யோசிக்கிறேன்...

இருந்தும் வாழ்கின்றேன்!

நம்
மூன்றாண்டு காதலில்
மூச்சைப் பிடித்தபடி...

சயனைடு உண்டவன்
ருசியை உணறும் முன்  
செத்துப் போவான்...
நானும்
மனதால் மரித்துப் போனேன்
நீ
பிரிந்த அந்த நொடியில்...

நம் பிரிவின்
ஒரே பயன்
இது போன்ற
சில
நூறு கவிதைகள்...

அதில் ஒன்றாவது
உன்
கைகளில் சேரும்
என்ற நம்பிக்கையில்
நிமிர்ந்து நிற்கிறேன்
ஒற்றை மரமாய்...19 June 2011

அவன்-இவன் அழுத்தமில்லாதவன்

      பெரிய ஹீரோக்கள் ஆர்யா, விஷால் கூட்டணியில்   பாலா இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புடன் சென்றேன்..அதை படத்தின் பின்பாதி மட்டும்
ஓரளவுக்கு பூர்த்தி செய்தது  என்று தான் சொல்ல வேண்டும்....

                               
               
    பொதுவாக கடைநிலை மனிதர்களின் உறவுகளையும் ,உணர்வுகளையும் அழுத்தமாகவும்,அழகாகவும் படம் பிடிக்கும் பாலா அவன்-இவன் படத்தில்
ஏனோ அங்கும் இங்கும் தடுமாறி இருக்கிறார்.. முதல் பதினைந்து  நிமிடங்களுக்குள் கதை எதை நோக்கி செல்கிறது என்பதை
தெளிவாக உணர்த்துவது சிறந்த திரைக்கதைக்கு அழகு என்று சொல்வார்கள்.. இந்த படத்திலோ முதல் பாதி முடியும் வரை பாலா என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை .....

      திருட்டை குல தொழிலாக கொண்டவனின் (ஆனந்த் வைத்யா ) மூத்த
தாரத்து(அம்பிகா) மகன் வால்ட்டர் வணங்காமுடியாக விஷால் ,இரண்டாவது தாரத்தின் ( பிரபா ரமேஷ்) மகன் கும்பிடறேன் சாமியாக ஆர்யா , அதே ஊரில் சொத்துக்களை எல்லாம் பறி கொடுத்து விட்டு தனி மரமாக வாழும் ஜமீன் ஹைனசாக ஜி.எம். குமார்...ஊரில் உள்ள
எல்லோரும் இவரை மதிக்கிறார்கள்..அதிலும் குறிப்பாக விஷால் ,ஆர்யா
குடும்பத்தில் ஒருவன் போல ஹைனெஸ் நெருக்கமாக இருக்கிறார்....
இவர்களைத் தவிர வில்லனாக ஆர்.கே.. விஷால் , ஆர்யாவின் காதலிகளாக ஜனனி ஐயர் மற்றும் மதுஷாலினி நடித்திருக்கிறார்கள்....

     ஜமீனின் 60  வது பிறந்த நாள் விழாவில் பெண்கள் போடும் குத்தாட்டத்தோடு படம் தொடங்குகிறது..அதில் பெண்வேடமிட்டு விஷால்
போடும் ஆட்டம் நல்ல அறிமுகம்....விஷாலுக்கு இது முதல் படம்...
ஒரு முழு நடிகனாக அவர் பரிணமித்திருக்கும்  முதல் படம்..
                                              
          பெண்தன்மை கலந்த தோற்றம் ,மாறுகண் பார்வை,இரட்டைக் குரல் என படம் முழுவதும் வியாபித்து இருக்கிறார் விஷால்...சாவி தொலைந்து விட்டதால் ஒரு ஜட்ஜ் வீட்டிற்கு பீரோவை உடைப்பதற்கு அழைத்து வரப்படும் விஷால் அவரிடமே சாவி கேட்பது...ஓட்டைப் பிரித்து திருடப்போன இடத்தில் சின்ன பெண்ணிடம் நகையை புடுங்காமல் செண்டிமெண்ட் பார்ப்பது,..ஜனனி ஐயரை பார்க்கும் போது ஜொள்ளுடன் வழிவது என்று படம் 
முழுவதும் சிரிக்க வைக்கும் விஷால்  கிளைமாக்ஸ்இல் ஆர்.கே வை பழி தீர்க்கும் போது தான் ஒரு ஆக்ஸன் ஹீரோ தான் என்று நிரூபிக்கிறார்.....
சூர்யா வரும் ஒரு காட்சியில் முக பாவனைகள் மூலம் நவரசத்தையும் காட்டும் 
போது விஷால் தானா என்று நம்ப முடியவில்லை...அற்புதம்... (அதே காட்சியில் சூர்யாவின் முகபாவமும் சூப்பர் )

      விஷாலுக்கு சமமாக ஆர்யாவை விட ஒரு படி மேலாக எல்லோரையும் கவர்பவர் ஜமீன் ஹைனசாக வரும் ஜி.எம்.குமார்.. ஒட்டு மீசை வைத்துக்கொண்டு குழந்தைத்தனமாக விழுந்து விழுந்து சிரிக்கும்
முதல் காட்சியில் இருந்து முழு நிர்வாணமாக்கப்பட்டு  ஆர்.கே வால்  சாகடிக்கப்படும் கடைசி காட்சி
வரை மனதில் நிற்கிறார்..
                                                
         முன்பாதியில் விஷாலை வம்புக்கு இழுக்கும் ஆர்யா பின்பாதியில் விஷால் விஸ்வரூபம் எடுத்தவுடன் அடக்கி வாசிக்கிறார்..போலீஸ்காரர்களுடன் இவர் அடிக்கும் லூட்டி கல..கல..
பிதாமகனில் சூர்யா செய்தது போன்ற பாத்திரம் ஆர்யாவிற்கு இப்படத்தில் 
கொடுக்கப்பட்டிருக்கிறது...

        சுருட்டு பிடித்துக்கொண்டு சவடால் பேசும் அம்பிகா,குடித்து விட்டு மகனுடனே குத்தாட்டம் போடும் பிரபா ரமேஷ்,
இறைச்சிக்காக மாடுகளைக் கடத்தும் குரூர வில்லனாக ஆர்.கே , நெற்றி முழுவதும் விபூதி பூசிக்கொண்டு குற்றவாளிகளுடன் 
கெஞ்சிக்கொண்டும்,கொஞ்சிக்கொண்டும் அலையும் சப் இன்ஸ்பெக்டராக 
ராமராஜ் என்று எல்லோருமே கவனிக்க வைக்கிறார்கள்...

        ஜனனி , மதுஷாலினி இருவரில் முன்னவர் கண்களாலேயே கவர்கிறார்..   
                            

     "அம்மா மாவு மாவா போவுதுமா' - 'விடுடா என்ன வந்தவங்களுக்கு தோசையா சுட்டு தரப்போற!.. "உனக்காக என்ன செய்யணும் சொல்லு பீயக்கூட திங்குறேன்" போன்ற எஸ்.ராமகிருஷ்ணனின் வசனங்கள் கடைநிலை 
மக்களின் யதார்த்தமான பேச்சு வழக்கை பிரதிபலிக்கின்றன...

      இசையும்,ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்றார் போல அமைந்திருக்கின்றன..
குறிப்பாக ஆர்யா,மது சம்பத்தப்பட்ட காட்சிகளில் இசையும் , வானத்தைப் 
பின்னணியாக கொண்டு முழு பிரேமில் ஆர்யா வசனம் பேசும் இடத்தில் 
ஒளிப்பதிவும் அருமை... எடிட்டிங் தொய்வான திரைக்கதையை  ஓரளவு
சரிக்கட்டுகிறது..
                       
          இயக்குனர் பாலா பிதாமகனில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளில்
வைத்திருந்த காமெடியை  இன்றும் ரசிக்கலாம்..ஆனால் அதையே அவன்-இவன் படம் முழுவதும் செய்ய முயற்சி செய்தது ஏனோ ஒட்டவில்லை ..
விக்ரம்,சூர்யா,ஆர்யா வரிசையில் விஷாலையும் நல்ல நடிகனாக
மாற்றியதற்கு பாலாவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்....
அதே போல் ஜி.எம்.குமார் முழு நிர்வாணமாக ஓடும் காட்சியில் துளி கூட
அருவறுப்பு இல்லை ...அனுதாபமே மிஞ்சியது..அது பாலா டச்..
                         
        இந்தப்படம் பார்த்த பிறகு சேதுவை தவிர்த்து பாலா  செய்த
படங்கள் எல்லாம் ஒரே பாணியில் இருப்பது புலனாகிறது..
அசாதரணமாகவும் , அழுக்கேறியும் கதாநாயகன் , அவன் திருடனாய்,போக்கிரியாய் எப்படி இருந்தாலும் அவனைக் காதலிக்கும் 
வெள்ளைத் தோல் கதாநாயகி , குரூரமான வில்லன் , அவன் யாரையாவது 
சாகடிக்க அதற்கு பழி தீர்க்கும் ஹீரோ , பட முடிவில் சாவு நிச்சயம்(சேது உட்பட)... ..

     அவன்-இவன் பிதாமகன், நந்தாவின் கலவை என்று கூட சொல்லலாம்...
காட்சியமைப்புகளில் நிறைய வேற்றுமைகள் இருந்தாலும் அடிப்படை
விஷயங்கள் ஒன்று போலவே உள்ளன ..எல்லோரையும்  சேர்த்து சந்தோசமான பாடல் வரும்போதே யாரோ சாகப்போவதை நம்மால் ஊகிக்க முடிகிறது... pithamaganil  விக்ரம்-சூர்யா-சங்கீதா இவர்கள் கூட்டணியில்   இருந்த கெமிஸ்ட்ரி  இதில் மிஸ்ஸிங் ...

      முதல் பாதி படத்தில் காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்கிறார்கள்..அதிலும் ஆர்யாவுடன் கூடவே வரும் குண்டுப்பையன் சிரித்துக் கொண்டே இருக்கிறான்..நமக்கு தான் ஏனோ சிரிப்பு வரவில்லை..
இடைவேளையில் ஒரு திருப்பமாக ஒரு கோடி மதிப்புடைய சந்தனக்கட்டைகளை விஷால் கடத்துவது போல காட்டுகிறார்கள்..பிறகு
அது என்ன ஆச்சுதுனே தெரியல...

       வெயிலுக்குப் பின் அங்காடித்தெரு எடுத்த வசந்த பாலன்,ராம் படத்திற்கு பின் பருத்தி  வீரன் எடுத்த அமீர் ,  பொல்லாதவனுக்கு பிறகு ஆடுகளம் எடுத்த வெற்றி மாறன் இப்படி எத்தனையோ பேர் அடுத்தடுத்த படங்களில்
வேறு வேறு தளங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்..
        பாலா அவர்களும் தன் அடுத்த படத்தை  சற்று மாறுபட்ட கோணத்தில்
எடுக்க  வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு..


      

17 June 2011

ஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்

                                   
       நீண்ட நாட்களுக்கு பிறகு குறிப்பாக இந்த வருடத்தில் வந்திருக்கும்  தமிழ்
படங்களில் என்னை மிகவும் பாதித்த படம் "ஆரண்ய காண்டம்"....கடந்த ஆண்டு சர்வதேச திரை அரங்கில் தெற்கு ஆசியாவின் சிறந்த படத்திற்கான ஜூரி  விருதினைப் பெற்றதில் இருந்தே இந்த படத்தின் வரவிற்காக 
நான் காத்துக் கொண்டிருந்தேன்  என்று  சொல்லலாம்...சர்வதேச விருதிற்கான காரணத்தை  படமும் நிரூபித்திருக்கிறது....

        இயக்குனர் என்ன சொல்கிறார் என்பதை விட எப்படி சொல்கிறார் என்பதே முக்கியம் என்பது  படத்தின் திரைக்கதை மூலம் நிரூபணம் ஆகிறது...
                      எது தர்மம் ?
                      எது உனக்கு சரியோ அதுவே தர்மம்....   

     மேற்கண்ட வரிகளை படம் தொடங்கும் போதும் முடியும் போதும்
போடுகிறார்கள்..இதுவே படத்தின் மூலம் .

           பெரிய கடத்தல் தாதாவான சிங்கம்பெருமாள் ( ஜாக்கி ஷெராப் ), 
வயதானாலும்  அவன் கட்டாயப்படுத்தி  வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இளம்பெண் சுப்பு ( யாஸ்மின் பொன்னப்பா) , அவளுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் சப்பை ( ரவி கிருஷ்ணா ) , கடத்தல் கூட்டத்தில் ஒருவனான பசுபதி ( சம்பத் ), இவர்களின் கடத்தல் விளையாட்டுக்குள் வந்து சிக்கிக்கொள்ளும் கலையன் ( குரு சோமசுந்தரம் ) மற்றும் அவன் பையன் கொடுக்காப்புளி ( மாஸ்டர் வசந்த் ) இவர்களுக்கு இடையில் 
நடக்கும் சம்பவங்களே கதை....
                          
                     
             படம் மெதுவாக நகர்வது போல இருந்தாலும் இடையில் சிறிது நேரம் 
கூட நம்மை அங்கே,இங்கே நகர விடாமல் ஒன்ற வைப்பது திரைக்கதையும் , 
நடிகர்களும்...அதிலும் குறிப்பாக குரு சோமசுந்தரம் மற்றும் மாஸ்டர் வசந்த் 
வரும் காட்சிகளில் நகைச்சுவையை தெளித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்....
இயல்பான வசனங்களும் , புத்திசாலித்தனமான காட்சி அமைப்புகளும் படத்தை 
அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன ...

             எல்லோருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்..தன்னுடன் இருக்கும் 
இளம் பெண்ணை சந்தோசப்படுத்த முடியாமல் எரிச்சல் பட்டு   அவளை அடிக்கும்
முதல் காட்சியில் இருந்தே கலக்குகிறார் ஜாக்கி..அவர் பல்லைக் காட்டுவது  ,
ஆங்கிலம் பேசுவது  , மெதுவாக ஆடிக்கொண்டே மாடிப்படிகளில்
ஏறுவது என எல்லாமே அசத்தல்...ஒருவனை இரக்கமே 
இல்லாமல் அடித்து விட்டு அதன் ரத்தக்கறை சட்டை எங்கும் பரவி இருக்க அதை கொஞ்சம் 
கூட சட்டை செய்யாமல் தன் செருப்பின் அசுத்தத்தை துடைக்கும் 
ஒரு காட்சி ஜாக்கியின் நடிப்பிற்கும் , ஒருவனை கொடூரமானவனாக காட்ட வசனமோ , வீச்சறுவாலோ தேவையில்லை என்பதற்கும் 
ஒரு உதாரணம்.... 
 இவருக்கு பின்குரல் கொடுத்தவர் இன்னும் 
நேர்த்தியாக சென்னை பாஷை பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
                                           
               இந்த படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லா விட்டாலும் சம்பத் அந்த இடத்தில்
தானாக பொருந்துகிறார்.. தன் கூட்டாளிகளே எதிரியாக மாறியவுடன் சாமர்த்தியமாக 
அவர் தப்பும் இடம் அருமை... மனைவியை காப்பாற்றுவதற்க்காக இவர் 
மாஸ்டர் வசந்திடம் கத்தும் போது அரங்கமே அதிர்கிறது..இரண்டு கோஷ்டிகளுக்கு
இடையே சண்டையை மூட்டி விட்டு இவர் தப்பிப்பது பழைய பார்முலாவாக
இருந்தாலும் ரசிக்கும் படியாகவே இருக்கிறது...

        படத்தின் முக்கியமான இருவர் கூத்துப்பட்டறை சோமசுந்தரமும் அவர்
பையன் கொடுக்காப்புளியாக வரும் மாஸ்டர் வசந்தும்..வாழ்ந்து கெட்ட 
குடும்பத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறார்கள்.. அப்பா மகனாக இவர்கள் இருவரின் கூட்டணி , நடிப்பு , உடல் மொழி எல்லாமே அருமை..சேவல் சண்டையில்
வாய் சவடாளால் சேவலை பழி கொடுக்கும் அப்பாவுடன் சண்டை போடும் மகன் ஏக வசனங்களால் திட்டி விட்டு  பின்னர் அழுது கொண்டே   கட்டிக்  கொள்ளும் காட்சியை ஒரு உதாரணமாக சொல்லலாம்
இந்த இடத்தில் யுவனின் பின்னணி இசை உலகத்தரம்....
அடுத்த வேலை சோறு இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றி கவலைப்படாமல்  நிகழ்கால நொடியினை நேசிக்கும் , அனுபவிக்கும்
இவர்களின் இந்த மனம் நெகிழ வைக்கிறது...

       7g க்குப் பிறகு ரவி கிருஷ்ணா  நடித்திருக்கும் உருப்படியான  படம் இது..பொதுவாக யாரும் நடிக்க தயங்கும் "சப்பை" கதா பாத்திரத்தில் அவர் நடித்ததைப்  பாராட்டலாம்..
பொதுவாக கதா நாயகிகளை ஏமாளியாகவும் , முட்டாளாகவும் காட்டும்
தமிழ் சினிமாவில் யாஸ்மின் பொன்னப்பாவை கொஞ்சம் புத்திசாலியாகவும் , சுயநலவாதியாகவும்  காட்டியிருக்கிறார் இயக்குனர்...எனக்கு ஏன் சமோசா வாங்கி கொடுத்த ? என்று இழுத்து இழுத்து
இவர் ரவி கிருஷ்ணாவுடன் பேசும் போது குளுமை...கடைசியில் இவர் செய்யும் கொலை பெரிய திருப்பம்....
                        

         இவர்களை தவிர கஜபதி மற்றும் கஜேந்திரனாக வருபவர்களும் , அஜய் ராஜும் ஒரு காட்சியில் மட்டும் வந்தாலும் கிருஷ்ணாவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்....

          இதையெல்லாம் விட படத்தோடு நம்மை ஒன்ற செய்யும் முக்கிய
அம்சங்கள் இசையும் , ஒளிப்பதிவும்....புலிக்குப் பிறந்தது பூனையாகாது
என்று தன் பின்னணி இசை மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்து
இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா...இவரது இசை கதைக்குள் ஒரு கதை சொல்கிறது ..தேசிய விருதினை எதிர்பார்க்கலாம்...
             அதே போல பி.எஸ்.வினோத் தேவையான இடங்களில் போதுமான \
வெளிச்சத்தைக் கொடுத்து ஒளிப்பதிவில் அசதி இருக்கிறார்..
                                                       
               இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிற்க்கு  இது முதல் படம் என்று நம்ப முடியவில்லை..அந்த
அளவு நடிகர்களை வேலை வாங்கியிருக்கிறார்..இயல்பான  வசனங்களும் ,
நேர்த்தியான திரைக்கதையும் குமாரராஜாவின் கூடுதல் பலங்கள்..இவரை தமிழ் சினிமாவிற்கு
அறிமுகம் செய்த எஸ்.பி.பி.சரணை பாராட்டலாம்...குறிப்பாக அடுத்தடுத்த காட்சிகள் நேரடியாக தொடர்பில்லாதது போல் இருந்தாலும் சாமர்த்தியமாக அதை சேர்த்திருக்கும் திரைக்கதை உத்தி அருமை..
உதாரணமாக ஜாக்கி ஒரு காட்சியில் தன் கைத்துப்பாக்கியை காணவில்லை என்று தேடுகிறார்..உதவியாளர்களை சந்தேகப்படுகிறார்...ஆனால் கிளைமாக்ஸ் இல் யாஸ்மின் பொன்னப்பா
அதை உபயோகப்படுதும் போது தான் அவர் எடுத்திருப்பார் என்று நம்மால்
யூகிக்க முடிகிறது...
                   உனக்கு அப்பாவை ரொம்ப பிடிக்குமா?..
அப்படில்லாம் இல்ல...ஆனா அவர் எங்க அப்பா அதான்...
இது போன்ற வசனங்கள் எளிமை , அருமை ...

             படத்தில் இப்படி எவ்வளவோ சிலாகிக்கும் விஷயங்கள் இருந்தாலும்
குறைகளும் இல்லாமல் இல்லை..முதலில் இதன் தே...பையா, லூசு...கூ போன்ற
வசனங்களும், முதல் காட்சி உட்பட பல காட்சிகளும் குடும்பத்துடன் சென்று பார்க்கும் சூழலை
உருவாக்கவில்லை...இதன் நோக்கம் குடும்பப்படம் பார்ப்பவர்கள் அல்ல
என்றாலும் " "   சான்றிதழ் பெற்ற படம் என்று தெரிந்தோ தெரியாமலோ வந்து விட்டு அரை மணி நேரம் முடிந்தவுடன் பலர் ஏக வசனங்களில் இயக்குனரை
திட்டி விட்டு வெளியே சென்றதை பார்க்க முடிந்தது...காண்டம் என்று படத்தலைப்பில் இருக்கும் போதே அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
.
           அஜய் சொல்லும் ஆண்டிகளை கரெக்ட் செய்யும் விஷயம் , சேவல் சண்டை இவையெல்லாம் இடைசெருகல்கள்...படத்தோடு நாம் ஒன்றினாலும்
ஏதோ ஒன்று நம்மை அந்நியப்படுத்துகிறது.. கிளைமாக்ஸ்க்கு முந்தின
ஸ்லோ மோசென் சண்டைக்காட்சி இவ்வளவு பெரிய கடத்தல் கோஷ்டிகளிடம் ஒரு துப்பாக்கி கூட இல்லையா என்று
கேட்க வைக்கிறது...
         சில குறைகள் இருந்தாலும் நிச்சயம்
   "ஆரண்ய காண்டம் " - தமிழ் சினிமாவிற்கு ஒரு புது அத்தியாயம்

10 June 2011

சூன் 2 - இசை பிறந்த நாள்

           சூன் 2 - அன்னக்கிளியில் ஆரம்பித்து அழகர்சாமியின் குதிரை 
வரை தன்  இசையால்  இயற்கையில் பிரிந்து  கிடக்கும்  உயிர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி பிறந்த நாள் ..ஆம் இசை பிறந்த நாள்...
 இசையே நீ...இசைஞானி மட்டும் அல்ல,....இசையே நீ...
                               
            1943  ஆம் ஆண்டு பன்னைப்புரத்தில்  பிறந்தவருக்கு பெற்றோர்கள் தெரிந்தே தான் "ஞானதேசிகன்" என்று பெயரிட்டிருக்கிறார்கள்...தன்  இசை ஞானத்தால் எல்லோர் இதயங்களையும் இளமையாக வைத்து அதில் எப்போதுமே ராஜாவாக
சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் தான் "இசைஞானி" இளையராஜா...

            1976  இல் ஆரம்பித்து இன்று வரை 900த்துக்கும் மேற்பட்ட படங்கள் 
4000த்துக்கும்   மேற்பட்ட பாடல்கள் , இவர் இசைக்காகவே வணிக ரீதியாக வெற்றி பெற்ற நூற்றுக்கணக்கான படங்கள், நான்கு தேசிய விருதுகள்,  தமிழகம்,ஆந்திரம்,கேரளம்,மத்திய பிரதேசம்  என பல மாநில அரசுகளின்  விருதுகள்,  இந்தியாவின் மூன்றாவது பெரிய விருதான பத்ம  பூஷன் விருது ,

               ஆசியாவிலேயே சிம்பொனி இசை அமைத்த முதல்
இசையமைப்பாளர் , ஒரே வருடத்தில் 50  க்கும்  மேற்பட்ட படங்களுக்கு இசை
அமைத்த ஒரே இசையமைப்பாளர் , 2005   ஆம் ஆண்டு எம்.எஸ்.வி யுடன் இணைந்து வழங்கப்பட்ட துளசி விருது ,

        பி.பி.சி. வானொலி அறிவித்த உலகின் சிறந்த பத்து  பாடல்களில் இவர்
இசையமைத்த "ராக்கம்மா கையத்தட்டு" பாடல் தொடர்ச்சியாக இடம் பெற்றிருந்தது , 45 நிமிடங்களில்  சின்னத்தம்பி படத்திற்கான அத்தனை  ஹிட் பாடல்களையும் இசை அமைத்தது என்று இசைஞானியின் பெருமைகளை
சொல்லிக் கொண்டே போகலாம் ...நிச்சயம் இந்த ஒரு பதிவு போதாது..
ஆனால் இது அவரைப்பற்றிய புள்ளி விவரங்களை மட்டும் சொல்லும்  பதிவு அல்ல ...
           என்னைப் போன்ற கோடானு கோடி மக்களின் சந்தோசம்,துக்கம்,காதல்,காமம்,தனிமை,ஏக்கம்,பிரிவு, என எல்லா உணர்ச்சிகளிலும்  உறவாடும் அவர் இசையை பற்றிய பதிவு...

           தமிழ் திரையுலக வரலாற்றை இசைஞானிக்கு முன் இசைஞானிக்குப்  பின் என்று இரண்டாக பிரிக்கலாம்..அதுவரை இசை நன்றாக இருந்தாலும்
எம்.ஜி.ஆர் பாடல் , சிவாஜி பாடல் ,ஜெமினி பாடல் என்று சொல்லிக்கொண்டிருந்த மக்களை இளையராஜாவின் பாடல்கள் என்று சொல்லவைத்தது 'அன்னக்கிளி" பாடல்கள்...அன்றைய காலகட்டத்தில் ஹிந்தி பாடல்களை விரும்பி
கேட்டுக் கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்களை கேட்க வைத்ததோடு  மட்டும்  அல்லாமல் ஹிந்தி இசையமப்பாளர்களையே தமிழ் பாடல்களை திருடி 
மெட்டு போட வைத்தவர் இசைஞானி ..
                       
           ராமராஜன்,விஜயன் போன்ற சாமான்ய முகங்களையும் , மோகன் , கார்த்திக்,முரளி என்று பல புது
முகங்களையும் மக்கள் மனதில் பதிய வைத்தது இசைஞானியின் இசை ..

           இந்தியாவிலேயே பின்னணி இசைக்கு புது பரிணாமம் கொடுத்தது
இசைஞானியின் இசை..இன்றைய காலகட்டத்தைப் போல கைபேசி,,இணையதளம்  போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே
மனித மனமெங்கும் இசையை விதைத்தது  இசைஞானியின் இசை...
                       .
           சபா கச்சேரிகளில் புரிந்தோ,புரியாமலோ தலையாட்டிக் கொண்டிருந்து விட்டு
கிராமிய இசையை சாவுக் கொட்டு என்று சொன்ன கூட்டத்தின் பார்வையை
 "சிந்து பைரவி" படத்திற்கு பிறகு  தலை கீழாக திருப்பிப்போட்டது
 இசைஞானியின் இசை ..
                         
           இன்று மேற்கத்திய  பாடல்களை முழுவதும் திருடி விட்டு தன் பெயரை இசையமைப்பாளர் என்று போட்டுக்கொள்பவர்கள் மத்தியில்
"புன்னகை மன்னன்" படத்தின் மூலம் இசையின் எல்லைகளை விரிவு படுத்தியது இசைஞானியின் இசை....

             தமிழ் மொழி, இனம் என்று சொல்லி ஒரு கூட்டம்  ஏமாற்றிக்கொண்டிருக்க தமிழ் வரிகளை பட்டி தொட்டி எங்கும் பரப்பியது இசைஞானியின் இசை...

            தமிழனின் எந்த ஒரு விஷேசத்தையும் வியாபித்திருப்பது இசைஞானியின் இசை..தாயின் அரவணைப்பு , காதலியின் நேசம்,
நண்பனின் ஆறுதல் என எல்லாவுமாக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடன் கூடவே பயணப்படுவது
இசைஞானியின் இசை...

          பள்ளிப்பருவம் , முதல் காதல், கல்லூரி நாட்கள் , சுற்றுலா பயணம் ,
காதல் தோல்வி , நண்பர்களுடன் செய்த கூத்து என்று எல்லா நினைவுகளையும்
அசை போட  வைக்கும் இசைஞானியின் இசை ...
                                         
            இன்றும் பல படங்களின் பின்னணி இசையாக
ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது
இசைஞானியின் பழைய பாடல்கள் ,
தொலைக்காட்சித் தொடர்கள் கூட  இதை விட்டு வைக்கவில்லை... 
இசைஞானியின் இசை பாதிப்பு இல்லாமல் ஒருவரும் இசை அமைக்க முடியாது ....    
            
         ஒப்பிடுதல் செய்தே நேரத்தைக்கழிக்கும் தமிழன் ஏ.ஆர்.ஆர். என்ற
இளைஞனின் இசை ஒரு புத்துணர்வைக் கொடுத்தவுடன் இருவரையும்
ஒப்பிட்டதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை..
     இசைஞானியின் இசையில் புதிதாக ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு நீண்டது காது  கேளாதோர் பட்டியல்...

      ஏ.ஆர்.ஆர் வருகைக்குப் பிறகும் வள்ளி,வீரா,வால்டர் வெற்றிவேல்,அவதாரம்,காசி,காதலுக்கு மரியாதை,கண்ணுக்குள் நிலவு, சேது,விருமாண்டி,பிதா மகன்,நான் கடவுள் என்று தமிழில் இசைஞானி இசை அமைத்த
படங்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்,.... சீனி கம்,பா,பழசி ராஜா என்று பிற மொழி படங்களின் ஹிட் பாடல்கள், அதிகம் விற்பனை ஆன "திருவாசகம்" என்ற தனி இசைத்தொகுப்பு  என்று அடுக்கிக்கொண்டே போகலாம்...இருந்தும் "அம்னீசியா"வில் இருப்பவர்களை நாம் எழுப்ப முடியாது....

           76 ஆம்  ஆண்டுக்கு முன்னர் இறந்தவர்களையும், உயிரோடு இருந்தும்
இசைஞானியின் இசையினை உணராமல் நடை பிணமாக வாழ்பவர்களையும் எண்ணி வருத்தப்படுவதைத் தவிர நாம் வேறொன்றும்
செய்ய முடியாது ....
                                  
        இசை  மட்டுமே தெரிந்த இசைஞானிக்கு வியாபார நுணுக்கம், வெளி நாடுகளில் தன் முகவர்களை நியமித்தல் போன்ற விஷயங்களில் ஈடுபாடு
இல்லாததால் உலக அளவிலான ஆஸ்கர்,கிராமி விருதுகள் போன்றவை எட்டாமல் போயின..விருதுகள் வழங்கப்படுவது மட்டும் இல்லை..
சில நேரங்களில் வாங்கப்படவும் செய்கின்றன....இல்லையென்றால் நான்கு
தேசிய  விருதுகள் மட்டுமா கொடுத்திருப்பார்கள்??..

            இசைஞானிக்கு வாழும் காலத்திலேயே "பாரத் ரத்னா" பட்டம் வழங்கப்பட வேண்டும் , அவர் பெயரில் தேசிய அளவிலான
இசைப் பல்கழைக்கழகம் தொடங்கப்பட வேண்டும், இனி வழங்கப்படும் இசை சம்பந்தப்பட்ட எல்லா விருதுகளும் இசைஞானியின் பெயரிலேயே
வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளோடும், இசைஞானி வாழும்
காலத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம் என்று சந்தோஷப்படுவதொடும்
நின்று விடாமல் தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் இசைஞானியின்
பெருமையினை மேலும் மேலும் உலகமெல்லாம் பரப்ப வேண்டும்....

            இசைஞானி சம்பந்தப்பட்ட  பதிவு என்பதால் விரல்கள் தாளம் போடுவதை என்னால் தவிர்க்க முடியாததன் விளைவே இந்த நீண்ட பதிவு...
                

Related Posts Plugin for WordPress, Blogger...