29 September 2011

பதிவு 50 ...

       
        ஒரு வருடம்  தாண்டி போனதே தெரியவில்லை ,  ஏதோ பதிவு எழுத ஆரம்பித்தது  நேற்று போல் இருக்கிறது இன்று இதோ ஐம்பதாவது பதிவு ...
 
 
      " வாங்க ப்ளாகலாம் " என்ற என்னுடைய அழைப்பை ஏற்று என்  பளாகுக்குள்  வருகை புரிந்து மூன்று லட்சம் ஹிட்ஸ்களுக்கு மேல் செல்வதற்கு காரணமாயிருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்  என் மனமார்ந்த   நன்றியை தெரிவித்துக் கொள்வதற்கும்  , இது வரை  எழுதிய பதிவுகளை ஒரு முறை திரும்பி பார்ப்பதற்கும்  இந்த பதிவினை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கிறேன் .. 
 
      மூன்று மணிநேர சினிமாவை பார்த்து விட்டு மூன்று நாட்கள் அதை பற்றி விவாதம் செய்யும் வழக்கம் உள்ள எனக்கு , அதையேன் விமர்சனமாக ப்ளாகில் பதிவு செய்ய கூடாது என்று ஒரு விதையை தூவிய பெருமை இயக்குனர் திரு.அமீரிடம் உதவி இயக்குனராக இருக்கும் என் அருமை நண்பன்  சேஷனையே சாரும் ... நன்பெண்டா ... 
 
              
      என் முதல் பதிவான கோரிபாளையம் விமர்சனம்  அவசரம் அவசரமாக பதட்டத்துடன் எழுதியதால் படத்தை போலவே எழுத்து பிழைகளுடன் மொக்கையாக இருக்கும் ... இதற்கு முதல் பின்னூட்டம் அளித்த                                     முத்துலட்சுமி முத்துலட்சுமி என்ற பதிவர் என் பிழைகளை  சுட்டிக் காட்டியதையும் நான் இங்கு நினைவு கூர்கிறேன் ...
 
     முடிந்த வரை எழுத்து பிழைகளை திருத்திக் கொண்டு வெளியிட்ட இராவணன் விமர்சனம் ஓரளவு கவனிக்க வைத்தது ... பாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்  திரைமனத்தில் நீண்ட நாட்கள் முதல் பக்கத்தில் இருந்தது மகிழ்ச்சியை தந்தது ...
 
      தேர்தல் பிரச்சாரத்தின்  போது வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததாக சன் டி.வி. யில் ஒளிபரப்பான ஆக்சன் காட்சி சினிமாவை விட பரபரப்பாக பேசப்பட்ட நேரமது ... அதில் நிறைய உள்நோக்கமும் , கேமரா ஜாலமும் இருந்ததை வெளிப்படுத்தும் விதமாக அமைந்ததே

விஜயகாந்த் பிரச்சாரம் உளறலா ? உண்மையா ?  எதிர்ப்பையும் , வரவேற்பையும் ஒரு சேர பெற்றது இந்த பதிவை இன்ட்லியில்
பிரபலப்படுத்திய அனைவருக்கும் நன்றி ..

       தமிழ் புலமையும்  , ஆர்வமும் உடைய பத்திரிக்கையாளர் திரு.பத்மனை அண்ணனாக பெற்றது என் பாக்கியம் ... இவர் எழுதிய   "மூன்றாவது கண் " என்ற புத்தகம் தமிழக அரசின் விருதினை பெற்றது    குறிப்பிடத்தக்கது ...    

        தேர்தல்                        ஆணையத்தை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அதன் கருப்பு 
பக்கங்களை விளக்கும் மின்னஞ்சலை எனக்கு பத்மன் அனுப்பியிருந்தார்...
அதுவே நான் வெளியிட்ட தேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள்  பதிவு ... இந்த பதிவினை  வலைச்சரத்தில் வெளியிட்ட பதிவர் ஆனந்திக்கும் ,( மேடம் இப்போல்லாம் இந்த பக்கம் ஆளையே காணோம் ) ... இன்ட்லியில் இப்பதிவை பிரபலப்படுத்திய அனைவருக்கும் என் நன்றி ...அதேபோல் என் நிறைகுறைகளை தொடர்ந்து சுட்டிக் காட்டி வரும் திரு.ஸ்ரீநிவாசன் மற்றும் திரு.கணேசன் இருவருக்கும் என் நன்றிகள் ...

             
       நான் கமலின் தீவிர ரசிகன் , ஆனால் அவருடைய போலி  பகுத்தறிவு வாதம் அவருடைய ரசிகர்களையே வெறுப்படைய செய்யும் ... அந்த வெறுப்பின் வெளிப்பாடே கமல் - "நிஜ" நடிகன் பதிவு ... இனிய தமிழில் இப்பதிவிற்கு அதிக வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி ...நான் அஜித்தின் ரசிகன் அல்ல ... இருப்பினும் அவரின் நேர்மை , தைரியம் , முயற்சி இவையெல்லாம் என்னை கவர்பவை ... அந்த ஈர்ப்பின் மிகுதியே  "அசல்" நாயகன் அஜித் ... இன்ட்லியில் இப்பதிவை பிரபலப்படுத்திய அனைவருக்கும் என் நன்றி ...

       நான் ரசித்த இயக்குனர்களுள் பாலாவும் ஒருவர் .. ஆனால் இவர் ஒரே வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருப்பது " அவன் இவன் " படம் பார்த்த போது புலப்பட்டது ... என்னைப் பொறுத்த வரை அவன்-இவன் அழுத்தமில்லாதவன்  ... வலைச்சரத்தில் இந்த பதிவை குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து என் பதிவுகளுக்கு பின்னூட்டம் அளித்து வரும் இராஜராஜேஸ்வரிக்கு  என் நன்றி ...

       தனி படங்கள் பற்றிய விமர்சனங்களை  தாண்டி இந்த வருடத்தின் முதல் ஆறு மாத கால சினிமாக்களை பற்றிய  பதிவே  அரையாண்டு சினிமா (2011)-ஓர் அலசல் ... எழுத ஆரம்பித்த புதிதில் ஹைக்கூ கவிதைகளை பதிவிட்டிருந்தாலும் என் முழுமையான முதல் கவிதை உன் நினைவுகளோடு... அன்னையர் தினத்தில்   தாய்க்கு கவிதை எழுதலாம்
என யோசித்து பின் மனைவிக்கான கவிதையாய் அது மறுவியதே கண்களில் விழுந்தாய்...  ( பின் அம்மாவுக்கு கவிதை ரொம்ப பிடித்து போனது வேறு விஷயம் ) ... தொடர்ந்து எனக்கு பக்க பலமாய் இருக்கும் இந்த இருவருக்கும் என் நன்றி...

       என்
தெய்வதிருமகள் - திருட்டு தேவதை மற்றும் முனி 2 - காஞ்சனா - காமெடி பீஸ்  இரண்டையும் மூன்றாம் கோணத்தில் போட்டு பிரபலப்படுத்தியதோடு
மட்டுமல்லாமல் தொடர்ந்து எனக்கு  மூன்றாம் கோணத்தில் எழுத வாய்ப்பளித்து வரும் ஷஹிக்கும் , அபிக்கும் என் நன்றி...

  
       மங்காத்தா - "தல" ஆட்டம்  வரவேற்பை தொடர்ந்து எழுதிய
வில்லனாகிய ஹீரோக்கள்...  இவ்வளவு பெரிய வரவேற்பை பெறுமென்று நான் நிச்சயம்
எதிபார்க்கவில்லை ...இன்ட்லியில் இவையிரண்டையும் பிரபலமாக்கிய அனைவருக்கும் என் நன்றி ... அதேபோல் பிரபலமாகாவிட்டாலும் என் உயிரை வருடும் இசையைக் கொடுக்கும்   இசைஞானியை பற்றிய பதிவான
சூன் 2 - இசை பிறந்த நாள் எனக்கு ஆத்ம திருப்தியை கொடுத்த பதிவு ....

     கதை எழுதலாம் என யோசித்து கிறுக்கியதில் எனக்கு பிடித்தது மூட்டைபூச்சி சிறுகதை..என் சிறுகதையை தன்னுடைய லேடீஸ் ஸ்பெசல்
தீபாவளி மலரில் பயன்படுத்திக் கொள்வதாக சொல்லி எனக்கு உற்சாகமளித்த
திருமதி.கிரிஜா ராகவன் அவர்களுக்கு என் நன்றி ...

     மனதை பாதிக்கும்  படமாகவும் இருந்து வசூலையும் அள்ளுவது போல ஒரு படமும் வரவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த
போது வந்த  எங்கேயும் எப்போதும் - நிறைவான பயணம் ...


   
      சொந்த  விருப்பு , வெறுப்புகளை தாண்டி தொடர்ந்து என் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வாயிலாக உற்சாகங்கள் அளித்து வரும் அனைவருக்கும் என் நன்றி  ... இதோடு மட்டுமல்லாமல் பதிவர்களின் அனைத்து பதிவுகளையும் வெளியிட தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்10 , இனியதமிழ், உளவு , திரட்டி, வலைபூக்கள், உடான்ஸ், தினமணி போன்ற அனைத்து வலை பக்கங்களுக்கும்  என் மனமார்ந்த நன்றிகள் ...

25 September 2011

மீளா நிலை ...எதிர்பாரா நேரத்தில்
அழைக்கிறாய்
எதிபார்க்கும் தருணங்களில்
ஏனோ அலைக்கழிக்கிறாய் ...

எது சொன்னாலும்
சிரிக்கிறாய்
என்னை 
பைத்தியக்காரனாக்கி விட்டு ...

ஆணாதிக்கம் என்கிறாய்
என்னை
அடிமைப்படுத்தியது தெரியாமல் ...

காந்தீயம் பேசுகிறாய்
கண்களில்
பொய் சொல்லிக் கொண்டே ...
ஏனிந்த முரண்பாடு ?

முரண்பாடுகளின்
மொத்த உருவமாய்
நீ
இருந்தாலும்
மனம்
உன்னிடம் மட்டும் மண்டியிடுகிறது ...

உன்னுடன்
கைகள் கோர்ப்பதற்காகவே
நீண்டன என் பயணங்கள் ...

ஆயுளில்
ஒரு வருடம்
குறைவது தெரிந்தும்
கொண்டாடப்படும்
பிறந்த நாளை
போல

மீண்டு வர முடிந்தும்
பிடித்திருக்கிறது
இந்த
மீளா நிலை ...24 September 2011

குறும்பட கார்னர் - அப்பா வந்தார் ...

            
       " அப்பா " சிறு வயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் முதல் ஹீரோ ... வெளியில் சண்டை போட்டுக்கொண்டாலும் உள்ளே அழ வைக்கும் மனிதர்  ... கல்யாணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருப்பவர் கூட ஒரு அவசரம் என்றால் அணுகும் நபர் ...

     "அப்பா வந்தார் " குறும்படம் இந்த பாசத்தை குறைவான நிமிடங்களில் நிறைவாக பதிய வைக்கும் குறும்படம் ... அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக வெளிநாட்டு பெண்ணை மணந்து கொண்டு அங்கேயே செட்டிலாகி விட்ட ஒரு மகனுக்கு முன்னால் திடீரென பத்து வருடங்கள் கழித்து அப்பா வந்து நின்றால் எப்படி இருக்கும் ? ...

    அப்பாவாக சுவாமிநாதன் நடராஜனும் , மகனாக நவீன் நாதனும் நன்றாக  நடித்திருக்கிறார்கள் ... அதிலும் அப்பாவாக வருபவர் அப்பப்பா என்ன இயல்பான நடிப்பு ... ஒளிப்பதிவு அருமை ... இசை ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும் முடிவில் மனதில் நிற்கிறது ... வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து நம்மவர்கள் பணியாற்றியிருக்கும் படம் ...

      படத்தின் ஆரம்ப காட்சிகளில் கிளைமாக்ஸ் காட்சிக்கான லீட் கொடுத்ததை தவிர்த்திருக்கலாம் ... வேலை நிமித்தமாகவோ , குடும்ப சூழ்நிலையாலோ அப்பாவை பிரிந்து வாழ்பவர்களுக்கு ஒரு நிமிடம் அவரை நினைவுபடுத்தும் படம் ...


இயக்கம் : வெங்கடேஷ் பாபு தயாரிப்பு : தீபா ராமானுஜம்22 September 2011

குறும்பட கார்னர் - பண்ணையாரும் பத்மினியும்


                  
       சிலு சிலுவென வீசும் தென்றல் , மழைக்கு முன் வரும் தூறல் ,  குழந்தையின் சிறு புன்னகை , மனக்க மனக்க குடிக்கும் பில்டர் காபி இவையெல்லாம் தரும் சுகத்தையும் , சிலிர்ப்பையும் குறும்படத்திலும் காண முடியும் ... அப்படிப்பட்ட  குறும்படங்களை பகிர்ந்து கொண்டால் என்ன என்று எனக்கு தோன்றிய எண்ணத்தின் விளைவே இந்த " குறும்பட கார்னர்"...

      என்ன தான் பணம் சம்பாதித்தாலும் ,  ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்  வகை வகையாய் தின்றாலும் அம்மா கைகளில் குவித்து குடுக்கும்
ஒரு பிடி சோறுக்கு ஈடாகுமா ? ...
   இந்த கேள்விக்குள்  புதியது வந்தாலும் பூர்வீகத்தை மறக்காத எத்தனையோ விஷயங்கள் உள்ளடக்கம் ...  இந்த மெசேஜை நேரடியாக சொல்லாமல் நகைச்சுவையாக சொல்லியிருக்கும் குறும்படமே " பண்ணையாரும் பத்மினியும் "

   பாரதிராஜாவிடம் பல  படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த "தேனீ" முருகன் பண்ணையாராகவும் , பாலா சரவணன் கார் ஒட்டுபவராகவும் நடித்திருக்கிறார்கள்... கிராமத்து மக்களின் வெள்ளந்தி மனதையும் , அவர்கள் எதன்  மீதும் காட்டும் அன்பையும் பிரதிபலிக்கும் குறும்படம்...

    தலைப்பை பார்த்தவுடன் வேறு மாதிரி நினைப்பவர்கள் பார்க்கும் போது விழுந்து , விழுந்து சிரிப்பதே இந்த குறும்படத்தின் முக்கிய சாராம்சம் ...

இயல்பான நடிப்பு , நேர்த்தியான ஒளிப்பதிவு , அருமையான இசை
இதன் மற்ற சிறப்பம்சங்கள்  ...  

இயக்கம் : எஸ் . யு .  அருண் குமார்18 September 2011

எங்கேயும் எப்போதும் - நிறைவான பயணம்

                 
                                   
      " எங்கேயும் எப்போதும் " ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான  FOX ஸ்டூடியோவுடன் ஏ . ஆர் . முருகதாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ... ஜெய் , அஞ்சலி , சரவ்   , அனன்யா நடிப்பில் புது முக இயக்குனர் சரவணன் இயக்கியிருக்கிறார் ...   எங்கேயோ எப்போதோ ( சமீப  காலங்களில் அடிக்கடி ) கேள்விப்படும் பேருந்து விபத்தினை மையமாக வைத்து , இரண்டு காதல் ஜோடிகளின் கதைகளையும் இணைத்து ரசிக்கும்படியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ...
 
     ஆம்னி பஸ்சும் , அரசு பஸ்சும்  மோதிக்கொள்ளும்   முதல் காட்சியே நம்மை உறைய வைக்கிறது ...  பின்னர் பிளாஷ்பாக்கில் விறு  விறுவென பயணப்படுகிறது படம் ...  பிளாஷ்பாக் , கரண்ட் என மாறி மாறி வரும் சிக்கலான திரைக்கதையை  சுவாரசியமாக கையாண்டிருக்கிறார்கள் ...
     
     திருச்சியில் இருந்து இன்டர்வியு அட்டென்ட் பண்ண வரும் அப்பாவி பெண்ணாக  அனன்யாவும் , சாப்ட்வேர்                        இஞ்சினியராக சரவும்  அழகாக பொருந்துகிறார்கள் ... ஆட்டோவில் போவோம் என்றவுடன் அக்கா ஷேர் ஆட்டோவுல தான் போக சொன்னாங்க எனும் போதும் , நகரத்து பெண்களை பார்த்தவுடன் வயிற்றை  எக்கிக் கொண்டு நடக்கும் இடத்திலும் அனன்யா அசத்துகிறார் .... 

     இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கும் பெண் அக்காவுடனே வந்திருக்கலாமே என்ற லாஜிக் இடையிடையே வந்தாலும்  ஒவ்வொரு காட்சியையும்  ரசிக்கலாம் ... நகரத்து பையனை கண் முன் கொண்டு வரும் சரவ்  சென்னையில் இருப்பவர்களுக்கு வக்காலத்து வாங்கும் போது  கைதட்டல் பெறுகிறார் ...


                 
     சரவ்  - அனன்யா ஜோடியை விட நம்மை அதிகம் ஈர்ப்பது ஜெய் - அஞ்சலி ஜோடியே ...  அதிலும் குறிப்பாக அஞ்சலி நடிப்பு பசிக்கு நல்ல தீனி ... அவர் கேரக்டர் அசாதாரணமாக இருந்தாலும் அழகாக   செதுக்கப்பட்டிருக்கிறது ... காதலை சொல்லும் ஜெய்யை சுத்த விடுவதும்  , அவர் சம்பள பணம் முழுவதையும் செலவு செய்வதும்  , திருமண பதிவு பத்திரமா என கேட்கும் ஜெயிடம் உடல் தான படிவத்தில் சைன் வாங்குவதும் என அஞ்சலி கைதட்டல் வாங்கும் இடங்கள் நிறைய ...  அஞ்சலிக்கு அடங்கிப் போவபராக வரும் ஜெய் அட போட வைக்கிறார் ... ஆனால் படம் முழுவதும் அதையே செய்து வெறுப்பேற்றுகிறார் ...

       முக்கிய கதாபாத்திரங்களை தவிர பேருந்தில் பயணம் செய்யும் இளஞ்சோடிகள் , தூங்கி வழிபவர் , ஐந்து வருடங்கள் வெளிநாட்டில் இருந்து விட்டு வீடு திரும்பும் நபர்  , பயணத்திலேயே காதல் வயப்படும் இருவர் ( அந்த பெண் அழகாக இருக்கிறாள் ) என்று பிரயாணிகளையும் வைத்து திரைக்கதையை சுவாரசியமாக்கியது இயக்குனரின் சாமர்த்தியம் ..
         
      " கோவிந்தா " பாடல்  முனு முணுக்க வைக்கிறது ...  மற்ற பாடல்களும் ஏற்கனவே ஹிட் லிஸ்டில் இருக்கின்றன ... குட் வொர்க் சத்யா  ...  விபத்து காட்சிகளில் தத்ரூபமான கேமரா கோணங்கள் அருமை ... " ச்சே இந்த கதைய யோசிக்காம விட்டுட்டமே " என சக இயக்குனர்களை நினைக்க வைக்கும்படியான கதையை தேர்வு செய்ததற்கே இயக்குனரையும் , தயாரிப்பாளர்களையும் பாராட்டலாம் ...

              
     இருப்பினும் முதலிலேயே விபத்தைக் காட்டி விடுவதால் முடிவை ஓரளவு யூகிக்க முடிகிறது ... சர்வா - அனன்யா ஜோடி ஒரு நாள் சந்திப்பிலேயே காதல் வயப்படுவதும் , தொலை தொடர்பு சாதனங்கள் பரவிக் கிடக்கும் நிலையில் செல் பொன் நம்பரை கூட பரிமாறிக் கொள்ளாத லாஜிக்கும் , இவர்களை தவிர ஜெய் - அஞ்சலி ஜோடியின் தனி ட்ராக்கும் , இந்த ஜோடி ஒன்று  சேர வேண்டுமென்ற ஆர்வத்தையோ , தவிப்பையோ நம்முள் ஏற்படுத்தவில்லை ...

    அதுபோல ஒரு காட்சியில் இளம் ஜோடியாக வரும் மனைவி விபத்தில் சிக்கிய கணவனை மடியில் போட்டுக் கொண்டு அழும் காட்சியில் துளி கூட அடியில்லாமல் முழு மேக் அப்பில் இருக்கிறார் ... கன்டினியுட்டி பார்த்த உதவி இயக்குனர் யாரோ ? ...

     சின்ன சின்ன குறைகள் இருப்பினும் படம் பார்க்கும் போது அவை பெரிதாக உருத்தாததும் , படம் முடிந்து வெளியேறும் போது நமது அடுத்த பேருந்து பயணத்தை பற்றிய பயத்தை நம்முள் ஏற்படுத்தியதும்    இயக்குனரின் வெற்றி ....

ஸ்கோர் கார்ட் : 46 
 

11 September 2011

வில்லனாகிய ஹீரோக்கள்...


    அஜித் நெகடிவ் கேரக்டரில் நடித்த "மங்காத்தா" படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது...இந்த வெற்றியின் மூலம்  ரசிகர்கள் தங்கள் மனதைக் கவர்ந்த ஹீரோக்களை  வழக்கமான இமேஜ் வட்டத்தை தாண்டி வேறு வேறு களங்களில் பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்பது புலனாகிறது....

    கதைக்கேற்றபடி ஹீரோக்கள் வில்லன் வேடம் தரிப்பது தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல..ரசிகர்களின் ஆதரவைப் பொறுத்து அந்தந்த கால கட்டங்களில் வெளிவந்த இது போன்ற படங்கள் வெற்றி ,தோல்வி இரண்டையும் சந்தித்திருக்கின்றன...

   "பராசக்தி" மூலம் அறிமுகமாகி நடிப்பிற்கு புது இலக்கணம் வகுத்த "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் கதைக்கேற்றபடி  எந்த விதமான ரோலையும் இமேஜ் பற்றி கவலைப்படாமல் தைரியமாக ஏற்று நடிப்பதில் வல்லவர்..
இவர் தேச துரோகம் செய்பவனாக நடித்த "அந்த நாள்" ( வீணை பாலச்சந்தர் இயக்கத்தில் பாடல்களே இல்லாமல் எடுக்கப்பட்ட 
எடுக்கப்பட்ட அருமையான கிரைம் படம் ),  பெண்களை காம  வலைக்குள் சிக்க வைப்பவனாக நடித்த "திரும்பிப்பார்" ,   
எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்து இவர் வில்லனாக நடித்த "கூண்டுக்கிளி" ,
இது மாதிரியான படங்கள் சில உதாரணங்கள்..
                          
                       
    அந்தக்காலத்தில் சிவாஜி   பெரிய ஹீரோவாக இருந்து கொண்டே
இது போன்ற வேடங்களில் நடித்தது மிகப்பெரிய விஷயம்...ஹீரோ என்றால் ரொம்ப நல்லவனாக இருக்க வேண்டும் , தீமை கண்டால் பொங்கி எழ வேண்டும் , நிச்சயம் ஏழையாக இருந்து பணக்காரர்களை எதிர்க்க வேண்டும் , மது அருந்தாமை ,சிகரட் குடிக்காமல் இருத்தல் , தாய் சொல்லை தட்டாமை , பெண்களை தெய்வம் போல மதிப்பது ( கனவில் ஹீரோயின் கூட டூயட் பாடுவதற்கு எந்த தடையும் இல்லை ) இப்படி பல எழுதப்படாத சட்டங்கள் இருந்த கால கட்டத்தில் , அதிலும் குறிப்பாக சம கால ஹீரோவான எம்.ஜி.ஆர்  இது போன்ற இமேஜ் வட்டத்தை சிறிதும் தாண்டாத நேரத்தில்  சிவாஜி எடுத்த முயற்சிகள் போற்றுதலுக்குரியவை... 
 
   வில்லன் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் "நடிகவேள்" எம்.ஆர்.ராதா.. ஹீரோவாக, அதே நேரத்தில் நெகடிவ் கேரக்டரில் இவர் நடித்த "ரத்தக்கண்ணீர்" , எம்.ஆர்.ராதாவின் குரல் ஏற்ற இறக்கங்களுக்காகவும், நக்கல் பேச்சு கலந்த நடிப்புக்காகவும் இன்று வரை பேசப்படும் படம்...
 
   வில்லன்களான மனோகர் , அசோகன் இருவரும் ஹீரோக்களாக நடிக்க ஹீரோவான "ஜெமினி" கணேசன் வில்லனாக நடித்த படம் "வல்லவனுக்கு வல்லவன்"..இந்தப் படம் பெரிய வெற்றியடைந்தது...
 
    காதல் மன்னனைப் போலவே காதல் இளவரசனான கமல் "சொல்லத்தான் நினைக்கிறேன்" படத்தில் வில்லனாக நடித்தார்...ஹீரோவாக சிவகுமார் நடித்திருப்பார்...புது புது முயற்சிகளுக்கு எப்போதுமே தோள் கொடுக்கும் கமல்  ஆன்டி ஹீரோவாக  நடித்த "மன்மத லீலை", "சிகப்பு ரோஜாக்கள்" போன்ற படங்களில் கலக்கியிருப்பார்..படங்களும் பெரிய வெற்றி பெற்றன... 
 
   வில்லன்களில் ஜாம்பவான்களான வீரப்பா  , நம்பியார் , மனோகர் , அசோகன் போன்றவர்களுக்கிடையே கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட வித்தியாசமான வில்லன் "ரஜினி காந்த்"...
                       
    "புவனா ஒரு கேளிவிக்குறி" படத்தின் கதையைக் கேட்ட ஹீரோ சிவகுமார் வில்லன் கேரக்டரில் நடிக்க ஆசைப்பட , வில்லனாக கலக்கிக் கொண்டிருந்த ரஜினிக்கு அந்த சான்ஸ் அடித்தது...மக்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவரை வில்லனாக பார்க்க வேண்டுமென்ற ஆசை ரசிகர்களுக்கு எப்போதுமே உண்டு...அவரும் அதற்கு நெற்றிக்கண், பில்லா,  எந்திரன் உட்பட பல படங்களின் மூலம் இன்று வரை
தீனி போட்டுக் கொண்டு தானிருக்கிறார்....
 
    சூப்பர் ஸ்டாரை வைத்து "முரட்டு காளை" படத்தை எடுக்க முடிவு செய்த A .V .M  ஹீரோவுக்கு சமமான வில்லனை தேடிக் கொண்டிருந்தது...15  வருடங்களுக்கும் மேலாக ஹீரோவாக நடித்த   "தென்னகத்து ஜேமஸ் பாண்ட்"  A .V .M இன் கண்களில்  பட ,  வில்லனாக அறிமுகம் ஆனார் ஜெய்சங்கர்...

   "காதலிக்க நேரமில்லை" படத்தில் அறிமுகமாகி "அதே கண்கள்" ,
"உத்தரவின்றி உள்ளே வா" உட்பட  வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் , எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம் குறைந்து ரஜினி - கமல் காலம் கோலோச்சிய நேரத்தில் பெரிய ஹீரோவாக தன்னை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனவர்களில் ரவிச்சந்திரனும் ஒருவர்..
"ஊமை விழிகள்" இவரை வில்லனாக பேச வைத்தது....
                                        
   வில்லன்களின் அடையாளங்களான பெரிய கண்கள் , பயங்கரமான தோற்றம் , விகாரமான சிரிப்பு இவையெல்லாம் மக்களுக்கு போரடிக்க தொடங்கிய கால கட்டத்தில் ,
உருவ அமைப்பில் ஒல்லியாக இருந்தாலும் தன் கில்லியான  குரல் வளத்தால்
இலக்கணங்களை உடைத்த வசீகர வில்லன் ரகுவரன்...இவர் "ஏழாவது மனிதன்"
படத்தில்   ஹீரோவாக அறிமுகம் ஆகியிருந்தாலும் "உதயம்" படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்தார்..புரியாத புதிர் படத்தில் இவர் பேசிய "ஐ நோ" வசனம் இன்னும் காதுகளில் ஒலித்துக் மொண்டிருக்கிறது...

   கன்னடத்திலிருந்து வந்திருந்தாலும் இயல்பான நடிப்பும் , இசைஞானியின் பாடல்களுக்கு இவரின்  வாயசைப்பும் இங்கே மோகனை வெள்ளி விழா நாயகனாக வலம் வர வைத்தன...மோகனின் பல படங்கள் நூறு நாட்களுக்கு மேலாக ஓடியிருக்க இவர் "நூறாவது நாள்" படத்தில் வில்லனாக நடித்தது பலரை புருவம் உயர வைத்தது....

  "நீர்க்குமிழி" படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகி , தொடர்ந்து "சர்வர் சுந்தரம்" , "எதிர் நீச்சல் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நகைச்சுவை மன்னனாக பல வருடங்கள் அமர்ந்திருந்தவர்
நாகேஷ்..."தில்லானா மோகனாம்பாள்" படத்தில் நெகடிவ் கேரக்டரில் இவர் அருமையாக நடித்திருந்தாலும் , "அபூர்வ சகோதரர்கள்" படத்தில் முழு நீள
வில்லனாக மிரட்டியிருப்பார்...

   நாகேஷைப்  போலவே "பிறந்தேன் வளர்ந்தேன்" உட்பட சில படங்களில் ஹீரோவாக நடித்த அருமையான காமெடி நடிகரான கவுண்ட மணி "ரகசிய போலீஸ்" படத்தில்  வில்லனாக  ரவுசு கட்டியதை ஏனோ யாரும் ரசிக்கவில்லை....

    வில்லனாக நடிக்கும் ஆசை இருந்தாலும் முழு நேர வில்லனாக தன்னை காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள் இரு வேடங்களில் நடித்து ஓரளவு தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வார்கள்...அப்படி விஜய் தன்னை  ஆசுவாசப்படுத்திய படம் "அழகிய தமிழ் மகன்"...வில்லன் விஜய் கிளைமாக்ஸ்   இல் கொஞ்சம் காம்ப்ரமைஸ் ஆகாமல் இருந்திருந்தால் பேசப்பட்டிருப்பார்..( ஒரே விதமான கெட் அப்புக்கு நான் பொறுப்பல்ல.)
                                
    இன்றைய கால கட்டத்தில் ஹீரோ பிரசன்னா வில்லனாக நடித்த "அஞ்சாதே" படத்தையும் , அதே படத்தில் ஹீரோவின் நண்பனாக நடித்த அஜ்மல் வில்லனாக நடித்த "கோ" படத்தையும் குறிப்பாக சொல்லலாம்...அதே போல "ஆய்த எழுத்து" படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்த மாதவனையும் மறக்க முடியாது...

    நடிகைகளை போல வில்லன்களையும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையில் இன்றைய தமிழ் சினிமா இருப்பது துரதிருஷ்டமே...வீரப்பா , எம்.ஆர்,ராதா ,  ரகுவரன் என்று தங்கள் குரல்களிலேயே கலக்கியவர்களைப் பார்த்த நமக்கு ஆசிஷ் வித்யார்த்தி ,  சியாஜிசிண்டே போன்றவர்களின் நடிப்பு  நன்றாக இருந்தாலும் டப்பிங் வாய்ஸ் ஒன்ற விட மறுக்கிறது...பாவம் பிரகாஷ்ராஜ் தான் எத்தனை படங்களில் வில்லனாக நடிப்பார்...

  கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்நேரத்தில் ஹீரோ , வில்லன் என்றெல்லாம் பெரிய பாகுபாடுகள் தேவையில்லை என்றாலும் ஹீரோக்களை  வில்லன்களாக வெள்ளித்திரையில் பார்க்கும் போதே சுவாரஷ்யம் நம்மை தொற்றிக் கொள்கிறது...

7 September 2011

சந்திப்போம் பிரிவோம்...- சிறுகதை

   
    இரயில் பயணங்களின்  போதெல்லாம் பழைய நினைவுகள் தட தட என மனதுக்குள் ஓடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது...சுரேஷ் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல...ஆனாலும்  அவன் எப்போதும் அவள் நினைவிலிருந்தாலும்  இன்னும் சில  நிமிடங்களில் அவளை பார்க்க போகிறோம் என்று  நினைக்கவில்லை...

     அவள் பெயர் ரேவதி , பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் அழகு..  இருவரும் காதலித்தார்கள்...இவர்கள் காதல் கல்லூரி முழுவதும் பிரபலம்...இன்று  அவள் வேறொருவன் மனைவி...அவன் கனவுகளில் வந்தவள்  இன்றோ வெறும்  நினைவுகளாய்...

   கல்லூரி நாட்களில் எப்போதும் நன்பர்களுடனே இருப்பவன் கடந்த ஆறு வருடங்களாக தனியாளாகவே இருக்கிறான்..அதுவே அவனுக்கு பிடிக்கிறது...தனிமையை நிரப்ப சினிமாவும், புத்தகங்களும்...கூடவே சில உதவி இயக்குனர்களும், அவர்களுடன் சினிமா பற்றிய விவாதங்களும்...


    இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தில் சென்னைக்கு வந்து இத்தனை வருடங்களில் தனிமை,  துக்கம், அவமானம் எல்லாம் அவனுக்கு பழகி விட்டது...ரேவதியின் பிரிவு கொடுக்காத துக்கமா ? இல்லை அவள்  குடும்பம் தராத அவமானமா?.."ரேவதி" அவனால் எந்த நிலையிலும் மறக்க முடியாத பெயர்...

    முதல் காதலையும், அதோடு முடிந்த காதலையும் யாரால் தான் மறக்க முடியும்..இரயில் தாமதமாக வரும் என அறிவுப்பும் வரவே நினைவுகளில் மூழ்கினான் சுரேஷ்...

     'என்ன சுரேஷ்,பயமா இருக்கா ? காலேஜ் முடிச்சு ரெண்டு    வருஷம் ஆச்சு..இன்னும் வீட்ல பேசலேனா எப்படி ?..ரேவதி கேட்டவுடன் ஏதோ சிந்தனையில் இருந்தவன் சட்டென்று நிமிர்ந்தான்...

    "இல்ல இல்ல கண்டிப்பா பேசணும்,ஆனா இப்ப தான் என் ப்ரோக்ராம்லாம் லோக்கல் சானல்ல வர ஆரம்பிச்சுருக்கு..இன்னும் ஒரு வருஷம் போச்சுன்னா கொஞ்சம் ஸ்டடி ஆயிடுவேன்"...

   "ம்ம்..அப்புறம்  என் புருசனோட உட்காந்து உன் ப்ரோக்ராம் பாப்பேன் பரவாயில்லையா ?...

   "என்ன ரேவதி இப்படி சொல்ற ?

   "வேற எப்படி சொல்வாங்களாம்..நானே வீட்ட இந்த ரெண்டு வருஷம் சமாளிக்கறுதுக்குள்ள போதும், போதும்னு ஆயிருச்சு...நான் உனக்கு
வேணும்னா  என் வீட்டுக்கு நாளைக்கு நாலு மணிக்கு வந்து அப்பாட்ட
பொண்ணு கேளு".. அவள் சொல்லிவிட்டு விறு விறு வென சென்று விட சென்ற தடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் சுரேஷ் ...
                                
                
     காதல் இருவர் சம்பத்தப்பட்டது,  ஆனால் கல்யாணம் இரு  குடும்பம் சம்பத்தப்பட்டது எனவே  பல கேள்விகள் முளைக்கின்றன..அங்கும் முளைத்தது...

     "சார்,உங்க பொண்ண எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு, அவளுக்கும் தான், எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னா   நல்லா இருப்போம்"

     "என்னடா , ஏதோ பொண்ணோட   கூட படிச்சவன்னு ஒட்கார வைச்சு பேசினா என்னமோ உளர்ற"

    "இல்ல சார், உங்க பொண்ணு சொல்லி தான் வந்தேன் "

    "ஓஹோ , இது வேறவா" அவர் பொண்ணைப் பார்க்க அவள் தூணின் பின் மறைந்தாள்...

    "ஏம்ப்பா உங்களுக்கு காதல் வேணா விளையாட்டா இருக்கலாம், கல்யாணம் அப்படியில்ல' என்னோட மூத்த மாப்பிள அமெரிக்காவுல இருக்கார்..உனக்கு என்ன தகுதி இருக்கு என் பொண்ண கட்ட, நீ என்ன வேல பாக்குற , என்ன  சம்பளம் ? "

    "சார்,நான் லோக்கல் சானல்ல இப்ப தான் தனியா ப்ரோக்ராம் பண்ற அளவுக்கு வளந்துக்கிட்டு வரேன், பெரிய சம்பளம் இல்லேன்னாலும் மனசுக்கு பிடிச்ச வேல சீக்கிரம் முன்னுக்கு வந்துருவேன்"

    "இதெல்லாம் ஒரு வேலையா, மனசுக்கு புடிச்சுருந்தா அதையே கட்ட வேண்டியது தானே, எதுக்கு என் பொன்னு ?. இந்த வேலைல்லாம்  நிரந்தரம் இல்ல, ஒரு நாள் இழுத்து மூடிடுவான் ..என் ஆபீஸ்ல   கேட்டா  காறித் துப்புவா"   

    "உங்க ஆபீஸ்ல  கூட தான் அப்பப்போ  ஸ்ட்ரைக் வருது,அப்போ அத மூடிடுவாங்களா ?..தன் வேலையைக் குத்தவும் சுருக்கென கேட்டான் சுரேஷ்...

    "உன் வாயை மூடு, அபசகுனமா பேசாத,அது எத்தனை பேருக்கு சோறு போடுற கம்பெனி, அதப்போய் உன்னோட துக்கடா கம்பனியோட சேத்து பேசறதா..? முதல்ல வெளில போடா"..கோபத்தில் கத்தினார் அப்பா...

    "உங்க பொண்ணு இல்லாம நான் வெளியே போக மாட்டேன்"  திடமாக சொன்னான் சுரேஷ்...நிலைமையை இன்னும் விபரீதம் ஆக்குவது போல்
"அம்மா" என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தாள் ரேவதியின் அம்மாள்..

   "சுரேஷ் , முதல்ல நீ போ இங்கிருந்து" , யார் சொல்லி வந்தானோ அவளே இப்படி சொல்ல ஒரு நிமிடம் அவன் ஆடிப் போனான்...

   "நான் தான் சொல்றேன்ல ,காதலும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் எனக்கு என் அம்மா தான் முக்கியம்"... 

    "டே , முதல்ல வாடா , அப்புறம் பாத்துக்கலாம்" அவன் நண்பன் கையை பிடித்து இழுத்து சென்றான்..அவனுடன் நடைபிணமாய் நடந்தான் சுரேஷ்...
                                      
    அதன் பிறகு எவ்வளவோ முயற்சி செய்தும் அவளை பார்க்கவோ,பேசவோ முடியவில்லை...அம்மாவின் உடல்நிலையோடு சேர்த்து உலக நடப்பும் , உத்தியோகத்தின் அவசியமும் சொந்தக்காரர்களால் அவளுக்கு ஓதப்பட்டது...அவளும் திருமணத்திற்கு சம்மதித்தாள்...ஏதோ ஊரில்  வைத்து திருமணம் செய்து விட்டதாக அவள் தோழி சொன்னவுடன் பூமிக்குள் போவது போல் இருந்தது அவனுக்கு...

    காலம் எதையும் மறக்கடிக்க செய்யும் மருந்து...சினிமாவும் ,சூழலும் அவனையும் ஓரளவு மாற்றின...இவ்வளவு நடந்தும் அவள் மேல் அவனுக்கு கோபம் இல்லை..இவன் நிலையை நினைத்தே நொந்து கொண்டான்..அதுவே காதல்...

   அவன் யாரை இனிமேல் பார்க்கவே மாட்டேன் என்று  நினைத்தானோ அவளை மீண்டும் பார்த்தான்...ஆம் ஒரு அம்மாவாக நான்கு வயது சிறுவனுடன்...அவள் சம்மதித்தால் அவளை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்  என்று நினைப்பு தோன்ற அதை உடனே பொசுக்கி விட்டு ,

   "எப்படி இருக்கே ரேவதி" என்றான்...

   "ம்ம்.ரொம்ப  நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க, என்ன  பண்ற ? உன் மனைவி எங்க ?  - எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் ரேவதி ..

   "நான் உதவி இயக்குனரா இருந்து இப்போ தனியா படம் டைரக்ட் பண்ற முயற்சில இருக்கேன், இன்னும் கல்யாணம் பண்ணிக்கல" இந்த இடத்தில்   கொஞ்சம் கம்மியது அவன் குரல்..

   "என்னது பண்ணிக்கலையா ? ஆவலன்னு சொல்லு, என்னமோ பெரிய மாசம் பல லட்சம் சம்பாதிச்சு யாரும் பொண்ணு கொடுக்காத மாதிரி சொல்ற, இன்னும் ஒரு உருப்படியான வேல இல்லாம சினிமான்னு தான சுத்திக்கிட்டு இருக்க,  நல்ல வேலை நான் தப்பிச்சேன் "

   "என்ன ரேவதி, இப்படி பேசுற ? எப்படி எல்லாத்தையும் மறந்த , என்னால உன்ன சுத்தமா மறக்க முடியல..இன்னும் ஒரு வருசத்துல நான் எப்படியும் படம் பண்ணிருவேன் "...

   "இன்னும் எத்தன வருஷம்  தான் இப்படி சொல்ல போரையோ, அவருக்கு இந்த சினிமா, டிராமால்லாம் சுத்தமா பிடிக்காது, எல்லாம் வேஸ்ட் அப்படிம்பார் ,  சரி,சரி என்னையே பராக்கு பாத்துகிட்டு எங்கயாவது ட்ரைன்ல கியின்ல மோதிடாத , அந்த பாவம் என்ன சுத்தும்"

                  
    இனிமேல் தான் இவள் பாவம் செய்ய வேண்டுமா என்று கேட்பது போல அவளை ஒரு பார்வை பார்த்த சுரேஷ் , அங்கே வரும் இரயில் முன் சென்று குதித்து விடலாமா என்று கூட நினைத்தான்...

   "ச்சே,ச்சே, போயும் போயும் இவளுக்காக நான் சாகுறதா,இவளப் போய் காதலிச்சோமே ,இன்னும் ஒரு வருஷம் போகட்டும்டி அப்போ நான் யாருன்னு தெரியும்" என்று மனதுக்குள் நினைத்தவனாய் ,

   "உன்ன காதலிச்சது மட்டும் இல்ல இப்போ பார்த்ததையே கெட்ட கனவா நினைக்கறேன், என் மூஞ்சிலே முழிக்காத , குட் பை "  அங்கிருந்து விடு விடு வென நடந்தான் சுரேஷ்...

    "நீ நல்லா இருக்கணும் சுரேஷ் , பெரிய டைரக்ட்ராவனும் , என்  வாழ்க்கை தான் முடிஞ்சு போச்சு, எப்போ என் புருஷன் வெளி நாட்ல வேறொரு பொண்ண கல்யாணம் பண்ணான்னு தெரிஞ்சதோ அப்பவே பாதி செத்துட்டேன் , கேள்வி கேட்டதுக்கு "நீ என்ன பெரிய பத்தினியா ?..உன் மேட்டர்லாம் எனக்கும் தெரியும், பேசாம என்கூட இருக்கறுதுனா இரு இல்ல மூடிட்டு உன் அப்பன் வீட்டுக்கு போ"  என்று சொன்ன போது முழுசா செத்தேன்..

     உனக்கு பண்ண துரோகத்துக்கு  நல்லா அனுபவிச்சுட்டேன்..நீ நல்லவன் சுரேஷ், என் டிவேர்ஸ் விஷயம் தெரிஞ்சா என்ன விட மாட்ட , நான் உனக்கு வேணாம்...நீ ஜெயிச்சதுக்கப்புறம் நல்ல  பொண்ணா கிடைப்பா" 

    "அம்மா ஏம்மா அழுவுற யார் அந்த அங்கிள்" ,

    கேட்ட தன் மகனை  "இனிமேல் என் உலகமே  நீதானடா" என்பது போல் அழுகையுடன்  அள்ளி அணைத்தாள் ரேவதி...அங்கு அடுத்த இரயில் வருவதற்கான டிராக்குகளை மாற்றிக் கொண்டிருந்தார்கள்...

2 September 2011

மங்காத்தா - "தல" ஆட்டம்

       
    அஜித்தின் 50  வது படம் என்பதை குறிக்கும் விதத்தில் "தல" 50 என்ற லேபிளை தாங்கி வந்திருக்கும் படம் "மங்காத்தா"..அஜித்தின் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கவரும் விதத்தில் ஜனரஞ்சகமாக இருக்கிறது படம்....கிளௌட் நைனிடம் இருந்து கடைசி நேரத்தில் சன் பிச்சர்ஸ் படத்தை வாங்கியிருப்பது வியாபாரத்திற்கு உதவும்...

      கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய கதை என்பதால் படம் மும்பையில் நடக்கிறது..பெட்டிங் பணம் 500 கோடியை சூதாட்ட டான் செட்டியாரிடம் ( ஜெயப்ரகாஷ்) இருந்து கொள்ளையடிக்க நினைக்கும் நான்கு பேர்  ( வைபவ்,பிரேம்,கணேஷ்,பகத் ) , இவர்களுடன் இதே எண்ணத்துடன் ஐந்தாவதாக கூட்டு சேரும் சஸ்பென்ட் செய்யப்பட காவல்துறை அதிகாரி வினாயக் ( அஜித் )..இவர்   செட்டியாரின் மகள் சஞ்சனாவின்  (த்ரிஷா) காதலன்  கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிப்பதற்காக நியமிக்கப்படும் சிறப்பு துணை ஆணையர் ப்ரித்வி ( அர்ஜுன் ) இவர்களுக்கிடையே நடக்கும் விறு விறு 
ஆட்டமே "மங்காத்தா"... 

     கதை சில ஆங்கில படங்களையும் , தமிழில் சரியாக ஓடாமல் போன "சிந்தனை செய்" படத்தையும் நினைவு படுத்தினாலும் , அஜித் - அர்ஜுன் நடிப்பு ,ஒன்ற செய்யும் திரைக்கதை ,"நச்" என்ற  கிளைமாக்ஸ் , நளினமான பிரசெண்டேசன்  இவற்றின் மூலம் மற்றதிலிருந்து மாறுபடுகிறது "மங்காத்தா"...
                      
     தன் 50 படத்தை வழக்கமான ஹீரோயிச படமாகவோ , சுற்றியிருப்பவர்கள் ஹீரோ புகழ் பாடும் தனியாவர்தனமாகவோ இல்லாமல் , எல்லா நடிகர்களுக்கும் சம வாய்ப்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் , "நெகடிவ்" கேரக்டர்  வினாயக்காகவும்  வருவதால் சற்று  "தல" தூக்கி நிற்கிறார் அஜித்

     அஜித்  40 வயது காரராக நரைத்த தலையுடன் வந்தாலும் அழகாக இருக்கிறார்..இவர் தோற்றத்தால் மற்றவர்கள் இவரை "அண்ணே" என்றோ "தல"   என்றோ அழைப்பது தனியாக தெரியவில்லை...பைக் சேசிங் சீனில் நம் கண் முன் நிற்பது   "அசல்" நாயகன் அஜித்..
                            
     த்ரிஷாவிற்கு பயந்து லக்ஷ்மி ராயை வீட்டை விட்டு அனுப்பும் இடத்திலும் , குடி போதையில் பேசிக்கொண்டே பிரேம்ஜியிடம் இருந்து உண்மையை கறக்கும் இடத்திலும் , குத்தாட்டத்திற்கு நடுவே "மப்பு ஏறினாலே இசைஞானி பாட்டு தான் " என சொல்லும் இடத்திலும் , அர்ஜுனின் மனைவியை கடத்தி வைத்துக் கொண்டு "ஆக்ஷன் கிங்" என்று அர்ஜுனை கிண்டல் செய்யும் இடத்திலும் என படம் முழுவதும் அசத்தியிருக்கிறார் அஜித்...

      நெகடிவ் கேரெக்டரில் "இமேஜ்" பார்க்காமல் நடித்திருந்தாலும் பணத்திற்காக த்ரிஷாவை காதலித்து கழட்டி விடுவது, எந்நேரமும் சிகரெட் , குடி,குட்டியென  இருப்பது , வைபைவிடம் " இவ இல்லேனா என்னடா பணம் இருந்தா ஆயிரம் பொண்டாட்டி " என கத்துவது , லக்ஷ்மி ராயை கொன்று விட்டு "தே.." என திட்டுவது இவையெல்லாம் கேரெக்டருக்கு பலம் சேர்த்தாலும் பெண்களிடையே அஜித்தின் "இமேஜ்" சறுக்குவதற்கும் வாய்ப்பாக  இருக்கலாம்..
                        
     அழகாய் இருக்கிறார் என்பதற்காக "பில்லா"வில் கூலிங் க்ளாசை அடிக்கடி கழட்ட விட்டதைப் போல் இதில் சும்மா , சும்மா சிகரெட் ஊத விட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்..."பில்லா" வை தொடர்ந்து 'அசல்","மங்காத்தா" அடுத்து "பில்லா 2 " இப்படி எல்லா படங்களுமே அஜித்தை வெறும் ஹை கிளாஸ் டானாக மட்டும் காட்டிக் கொண்டிருக்குமோ என்ற பயமும் நமக்கு ஏற்படாமல் இல்லை...

     சண்டைக்காசிகளையும் தாண்டி குறைவான சீன்களில் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார் "ஆக்ஷன் கிங்" அர்ஜுன்..தன் மனைவி கடத்தப்பட்டது   தெரிந்ததும் இவர் காட்டும் முக பாவம் அனுபவம்..
 
                                 
     கொள்ளையடிக்க முயற்சி செய்யும் நான்கு பேரும் நன்றாக நடித்திருந்தாலும் கவனிக்க வைப்பவர்கள் வைபவும் , பிரேம்ஜியும்..."சரோஜா". "ஈசன்" இப்போது "மங்காத்தா" என நல்ல வாய்ப்புகள் வைபவுக்கு  வந்து கொண்டிருக்கின்றன.. ."என் அண்ணன் படங்கள் தவிர வேறு படங்களில் காமெடியாக நடிக்க மாட்டேன்' என்று பிரேம்ஜி சொன்னது ஏனென்று  இந்த படம் பார்த்த பிறகு புரிகிறது.. "என்ன வாழ்க்கைடா இது"  இப்படி சாகும் போது கூட சிம்பு பாணியில் பேசி சிரிக்க வைக்கிறார்..
                 
      ஜெய பிரகாஷ், சுப்பு , அரவிந்த் அனைவரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள் .. த்ரிஷா,அஞ்சலி,லக்ஷ்மி ராய் மூவரில் ராய் மட்டும்  தன்  திறமையை "காட்டி" நடிப்பதற்கு வந்த வாய்ப்பை நன்றாக ராய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்...
பட முடிவில் டைட்டில் கார்டு போடும் போது  த்ரிஷாவின் பெயரை கடைசியில் போடுவது ஏனோ ?..
                      
       ஒளிப்பதிவும் , இசையும் அருமை..."உன் மேடை" கிறங்க வைத்தால் "மச்சி" பாடல் ஆட வைக்கிறது... சில இடங்களில் வார்த்தைகளை  மீறி வரும் பின்னணி இசையை தவிர்த்திருக்கலாம்..

      ."கோவா" வில் சறுக்கியதை "மங்காத்தா" வில் சரிகட்டி விட்டார் வெங்கட் பிரபு...இவருடைய வழக்கமான நடிகர்கள் கூட்டணியுடன் அஜித்,அர்ஜுன்  இவர்களையும் இணைத்து தெளிவான கதை பண்ணியிருப்பதை பாராட்டலாம்..குறிப்பாக நான்கு பேரையும் எப்படி கொல்லலாம் என்று அஜித் ரீவைண்ட் செய்து பார்க்கும் காட்சி வெங்கட்  "டச்"...
                                            
      அடுத்தடுத்து கேரெக்டர்களை அறிமுகப்படுத்துவதால் கொஞ்சம் தடுமாறும் முதல்  பாதி , காவல் துறை அதிகாரி "சுப்பு"  வின் தற்கொலை நாடகம் , 500 கோடி பெட்டிங் பணத்தை பலத்த பாதுகாப்பில்லாமல் எடுத்து செல்லும் லாஜிக் சொதப்பல் , ஜேம்ஸ் பாண்ட் படம் போல தொடர்ந்து வரும் துப்பாக்கி சண்டைகள் இப்படி சில குறைகள் இருந்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்று பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் விறுவிறு மங்காத்தா - "தல" ஆட்டம் ..

ஸ்கோர் கார்ட் : 43 
Related Posts Plugin for WordPress, Blogger...