28 February 2016

ஆறாது சினம் - AARATHU SINAM - ஆக்கம் ...


வசரப்படாமல் தரமான கதைகளை தேர்ந்தெடுக்கும் அருள்நிதி ஈரம் பட இயக்குனர் அறிவழகனுடன் கை கோர்த்திருக்கும் படம் ஆறாது சினம் . கேரள இயக்குனர் ஜீத்து ஜோசப் பின் ஓல்ட் ஹிட் படம் மெமரீஸ் கொஞ்சம் ஆல்டர் செய்யப்பட்டு தமிழில் ரீ மேக்கப்பட்டிருக்கிறது ...

எதிரியால் தன் மனைவி , குழந்தையை கண் முன்னாலேயே இழந்ததால் ஆல்கஹாலுக்கு அடிமையான அரவிந்த் ( அருள்நிதி ) ஒரு சீரியல் கொலைகளின் இன்வெஸ்டிகேஷன் மூலம்  இழந்த தன்னை எப்படி மீட்டெடுக்கிறார் என்பதே படம் . பக்கா ஹாட் க்ரைம் த்ரில்லரை ஃபேமிலி எமோஷன்களால் நனைய விட்டிருந்தாலும் முடிந்தவரை நன்றாகவே பேலன்ஸ் செய்திருக்கிறார் அறிவழகன்  ...

ஸ்க்ரீன் இமேஜ் பற்றி கவலைப்படாத அருள்நிதி சோலோ ஹீரோவாக தன்னை மேலும் பலப்படுத்த கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . படம் முழுவதும் குடும்பத்தை இழந்த சோகத்துடன் அலைபவர் கோபத்தையும் காட்டத் தவறவில்லை . மனைவி , குழந்தை சுடப்பட்டவுடன் கதறி அழுவது இவரது நடிப்பிற்கு சான்று . எப்பொழுதுமே ஒரே சட்டையுடன் இவர் குடித்துக் கொண்டே வருவது போல காட்டுவதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் . அதே போல மனைவி , குழந்தை யுடன்   சேர்த்து இவருக்கு வலுவான சீன்கள் இல்லாததால் அவருடன் சேர்ந்து நம்மால் உருகமுடியாமல் வெறும் பாசிங் சீன்களாகவே  அது கடந்து போவது சறுக்கல் ...


படத்தின் மையப்புள்ளியாக அருள்நிதி இருப்பதால் மற்றவர்கள் வந்து போகிறார்கள் . அம்மாவாக வரும் துளசியை பயன்படுத்திய அளவிற்கு ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ் ஐ பயன்படுத்தாதது துரதிருஷ்டம் . மூஞ்சியே காட்டாமல் பில்ட் அப்புடன் வரும் சீரியல் கில்லர் கவுரவ் நாராயன் அந்த முக்கியமான ரோலுக்கு பெரிய கவுரவத்தை கொடுக்கவில்லை அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு , தமனின் பின்னணி இசை படத்திற்கு பலம் . ஆனந்த யாழை பாடலை நினைவுபடுத்தினாலும் " தனிமையே " பாடல் முணுமுணுக்க வைக்கிறது ...

படத்தின் முதல் என்கவுண்டர் சீன் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது . தொடர்ந்து நடக்கும் கொலைகளும் நமக்கு விறுவிறுப்பை கூட்டுகின்றன . இறந்து கிடக்கும் பாடிகளை வைத்து கொலைக்கான தொடர்பினை அருள்நிதி கண்டுபிடிப்பது ஆஸம் . ஆனால் இவ்வளவு ப்ளஷ்கள் இருந்தும் நம்மை A டு Z கட்டிப் போட்டிருக்க வேண்டிய படம் இடைச்செறுகல் போல் வரும் ரோபோ ஷங்கரின் காமெடி , சில ரிப்பீட்டட் சீன்கள் போன்றவற்றால் தடுமாறியிருக்கிறது . மாற்றுத்திரனாளியாக காட்டப்படுபவர் எந்த தடுமாற்றமும் இல்லாமல் ரன்னிங் ரேஸ் போல வேகமாக ஓடுவதும் , ஒருவரின் பெயரை வைத்தே அவரின் முழு ஜாதகத்தையும்  எடுக்கக்கூடிய அளவுக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகியிருந்தும் தோழிகள் விஷயத்தில் போலீஸ் அதை பெரிதாக பயன்படுத்தாமல் விடுவதும் லாஜிக் ஓட்டை ...

இன்னும் க்ரிப்பாக இருந்திருக்கலாம் என்பது போல பட்டாலும் அடுத்தடுத்து என்ன என்று போலீஸ் இன்வெஸ்டிகேஷனோடு சேர்த்து நம்மையும் பயணப்பட வைக்க தவறவில்லை படம்  . சில குறைகளை  தவிர்த்து பார்த்தால் அருள்நிதி + ஈரம் எனும் முதல் த்ரில்லர் படத்திலேயே நம்மை மிரட்டிய இயக்குனர் + அருமையான க்ரைம் திரில்லர் கதை என்கிற இந்த காம்போ வில் வந்திருக்கும் ஆறாது சினம் ஆக்கம் ...

ரேட்டிங்   :             3 * / 5 * 

ஸ்கோர் கார்ட் :  42 21 February 2016

சேதுபதி - SETHUPATHY - ஸ்லோ அண்ட் ஸ்டடி ...


ண்ணையாரும் பத்மினியும் பேசப்பட்ட அளவுக்கு பணம் பண்ணவில்லை . அதை நிவர்த்தி செய்யும் வகையில் விஜய் சேதுபதியை வைத்து இயக்குனர் அருண்குமார் எடுத்திருக்கும் மாஸ் ஆக்சன் படம் சேதுபதி . ஹீரோ போலீஸ் என்பதால் பஞ்ச் டயலாக் பேசி பத்து பேரை வானத்தில் பறக்க விடாமல் க்ரிப்பையும் விட்டுக் கொடுக்காமல் ரசிக்க வைக்கிறான் சேதுபதி ...

ஒரு எஸ்ஐ கொலையை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சேதுபதி ( விஜய் சேதுபதி ) அதற்கு காரணமான ஊர் பெரிய மனுஷன் வாத்தியாரை ( வேலு ராமமூர்த்தி ) கைது செய்ததால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் , அவர் எப்படி ஜெயிக்கிறார் என்பதையும் சொல்லும் வழக்கமான கதை தான் சேதுபதி . ஆனால் 2010 இல் காவல் துறை அதிகாரி கொலை செய்யப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து விஜய் சேதுபதி க்காக மாஸ் படத்தை கொஞ்சம் கிளாஸாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ...

சில வெற்றிகளை கொடுத்திருந்தாலும் தனது ரசிகர்களை கன்சாலிடேட் செய்யும் விதமாக விஜய் சேதுபதியை ஒரு ஆக்சன் ஹீரோவாக மாற்றியிருக்கிறான்  சேதுபதி . உடற்கட்டில் தெரியும் தொளதொளப்பை   கண்களிலும் , மீசையிலும் காட்டும்  போலீஸ் மிடுக்கில் சமன் செய்கிறார் சேதுபதி .  தன்னை முறைக்கும் வாத்தியாரின் மாப்பிள்ளையை பார்த்து " அப்படி பாக்காதய்யா எனக்கு சிரிப்பா வருது " என்று சொல்லும் இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது . என்ன தான் ஆக்சன் ஹீரோவாக இருந்தாலும் வீட்டில் காதலுடன் மனைவி காலில் விழும் இடத்தில் ரியல் ஹீரோவாக தெரிகிறார் விஜய் சேதுபதி ...

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பினும் பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அழகில் ரம்யா நம்பீசன் . காலில் தாராளமாக விழலாம் என்று சொல்லவைக்கும் காதல் கண்கள் . இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் கெமிஸ்ட்ரி செமையாக வொர்க் அவுட் ஆகியிருந்தாலும் ஹீரோ ஒரியண்டட் படத்தில் அடிக்கடி வரும் இவரது காட்சிகள் கொஞ்சம் நிறையவே ஸ்பீட் பிரேக்கர் ...


காப் படங்களில் ஹீரோயின் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகிறதோ இல்லையோ ஹீரோ - வில்லன் காம்பினேஷன் வொர்க் அவுட் ஆக வேண்டும், அதற்கு சமீபத்திய உதாரணம் தனி ஒருவன் . அந்த வகையில் வில்லன் வாத்தியார் ஆக வரும் வேலு ராமமூர்த்தி மதுரை பேக் ட்ராப்பிற்கு நன்றாக பொருந்தினாலும்  கம்பீர சேதுபதிக்கு முன்னால் ஸ்கூல் தமிழ் வாத்தியார் போல இருக்கிறார் . கைது செய்யப்பட பிறகு சொந்தமாக எதுவும் செய்யாமல் சேதுபதிக்கு வரும் வேறொரு பிரச்சனையை வைத்து அவரை காலி செய்ய நினைப்பது புத்திசாலித்தனமாக பட்டாலும் பெரிய இம்பேக்ட் இல்லை .
" இனிமே உன் வாழ்க்கையில வர ஒவ்வொரு நிமிஷமும் நான் எழுதினதாத்தான் இருக்கும் " என்று அவர் பேசும் வசனத்தில் இருக்கும் வீரியம் செயலில் இல்லாதது சறுக்கல் ...

நானே ராஜா பாடல் தவிர மற்றவை பெரிதாக கவரவில்லை . பின்னணி இசையில் இரைச்சலை தவிர்த்திருக்கலாம் . வாத்தியாரின் மாப்பிள்ளையாக நடித்திருப்பவர் , போலீஷ்காரர் மூர்த்தி , விசாரணைக்கமிஷன் ஹெட் ஆக வருபவர் என படத்தில் நிறைய பேர் கவர்கிறார்கள் ...

விஜய் சேதுபதியின் நடிப்பு , கொஞ்சம் நீளமாக இருந்தாலும் மனதை டச் செய்யும் லவ் சீன்கள் , போலீஸ்காரர்களின் நல்ல பக்கத்தை காட்டும் டைட்டில் சாங் , வாத்தியாரின் ஆட்களை ஸ்டேஷனில் காக்க வைத்து விட்டு அவரை செவிலில் அறைந்து கைது செய்வது , வீட்டை சூழ்ந்த அடியாட்களை கொஞ்சம் கூட பதட்டப்படாமல் மகனிடம் போனில் பேசி அவனை வைத்தே விரட்டுவது உட்பட நல்ல மாஸ் சீன்கள் போன்றவை கொஞ்சம் நீளமான முதல் பாதி , சட்டென்று முடியும் க்ளைமேக்ஸ் , சம பலம்  இல்லாத வில்லன் & கோ ஆகிய குறைகளை மறக்கடிக்கின்றன . மொத்தத்தில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் ஸ்டெடியாக இருக்கும் சேதுபதியை விஜய் சேதுபதிக்காகவும் , அப்ளாஸ் அள்ளும்  மாஸ் சீன்களுக்காகவும் பார்க்கலாம் ...

ரேட்டிங் : 3 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 42
14 February 2016

விசாரணை படமும் விகடனின் விமர்சனமும் ...


கிட்டத்தட்ட வருடத்திற்கு 200 படங்கள் வரும்  தமிழ் சினிமாவில் பத்து சதவிகித படங்கள் தான் வெற்றி பெறுகின்றன . அந்த பத்தில் பத்து சதவிகித படங்கள் தான் நம்மை பாதிக்கின்றன . அந்த வகையில் படம் பார்த்து ஒரு வாரத்திற்கு மேலாகியும்  பாதிப்பு நீங்காத படம் விசாரணை . பொதுவாக போலீசாக வரும் ஹீரோ எவனாக இருந்தாலும் அடித்து துவைத்து லாக் அப்பில் தள்ளி வீர வசனம் பேசும் படங்களை பார்த்திருக்கிறோம் . அதிலும் மேலதிகாரிகளே ஹீரோ வந்தவுடன் எழுந்து நின்று வணக்கம் சொல்லும் கொடுமைகளும்  உண்டு . அல்லது  ரவுடியாக வரும் ஹீரோ போலீஸ் ஸ்டேஷனையே அடித்து நொறுக்குவதையும்  ,  எல்லோரும் அவரை பார்ர்த்து பயந்து நடுங்குவதையும் பார்த்திருக்கிறோம் . இப்படி யதார்த்தத்திலிருந்து விலகி நிற்கும்  படங்களையே பெரும்பாலும் பார்த்து சலித்துப் போன நமக்கு விசாரணை போலீஸ்காரர்களின்  கறுப்புப் பக்கத்தையும் , அதிகாரம் பணமுள்ளவன் , இல்லாதவன் எவனையும் விட்டு வைப்பதில்லை என்பதையும் பொட்டிலடித்து சொல்கிறது . படம் பார்க்கும் நம்மை  வெளி உலகை மறக்கடித்து அந்த கேரக்டர்களுக்குள் உலவ  வைப்பதே இயக்குனரின் வெற்றி . அந்த வகையில் வெற்றிமாறன் மாபெரும் வெற்றிமாறன் ...

தன் சுயநலத்துக்காக மனிதர்கள் எந்த அளவு போகிறார்கள் என்பதை பதைபதைப்புடன் சொல்கிறது படம் . பொதுவாக  அடுத்த தடவை ஒரு படத்தை பார்க்கும் போது நமக்கு நிறைய குறைகள் நமது கண்ணுக்கு தெரியும் . இந்த படத்தில் பசியோடு இத்தனை அடி வாங்கியும் குறையாத முருகதாசின் தொப்பை தவிர புதிதாக ( எனது விமர்சனத்தில் சொன்னதை தவிர ) பெரிய குறைகள் தென்படவில்லை . ஆனால் லீவு கூட எடுக்காமல் , பசி  தாகம் பாராமல் உழைக்கும் போலீஷ்காரர்களும்  இரூக்கும் வேளையில் ஒட்டுமொத்த போலீசின் மேல் ஒரு ,வெறுப்பு அல்லது பயம் அல்லது அருவருப்பு வரும் படியாக படம் இருக்கிறதே என்கிற ஆதங்கமும் வருகிறது . ஆனால் ஒரு இயக்குனராக  படத்தின் மூலம் நமக்கு சொல்ல வேண்டியதை சரியாக சொல்லி விட்டார் வெற்றிமாறன் . பல ஊடகங்கள் படத்தை பாராட்டினாலும் இரண்டாவது அதிகபட்ச மார்க்காக 61 ஐ ( 16 வயதினிலே 62.5 ) வழங்கி படத்தை கவுரவித்திருக்கிறது ஆனந்த விகடன் . தனுஷ் + வெற்றிமாறன் தயாரிப்பில் கடந்த வருடம் வந்த காகாமுட்டை க்கு ஆவி 60 மார்க்குகள் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது . இப்போது மொபைல் வைத்திருக்கும் எல்லோரும் விமர்சகர்களாக மாறிவிட்ட நிலையிலும் ஆவி யில் என்ன மார்க் கொடுக்கிறார்கள் என்பதை ஆர்வமுடன் பார்க்கும் வாசகர்கள் எத்தனையோ பேர் இன்னும் இருக்கிறார்கள் . தூங்காவனத்திற்கு 42 , ரஜினிமுருகனுக்கு 43 என்று அவர்கள் கொடுக்கும் மார்க்குகள் நமக்கு சில சமயம் சிரிப்பை வரவைத்தாலும் பெரும்பாலும் அவர்கள் மார்க்குகள் சோடை போவதில்லை . ஆவி தொடர்ந்து படித்து வந்ததே நான் விமர்சனம் எழுவதற்கு ஒரு தூண்டுகோளாக இருந்தது என்றால் மிகையாகாது ... 

விசாரணை  விமர்சனத்திலும் ஆவிக்கே உள்ள நடையில் விரிவாக ( இவ்வளவு விரிவான விமர்சனம் நான் அதில் படித்ததில்லை ) தெளிவாக நிறைய நமக்கு படம் பார்க்கும் போது தோன்றாத கோணங்களில் இருந்தும் கூட விமர்சித்திருந்தார்கள் . ஆனால் கமல்ஹாசன் தனது  சிறந்த சில  படங்களில் கூட தேவையில்லாமல் சொந்த சித்தாந்தத்தை திணித்து பேரைக் கெடுத்துக்கொள்வது போல ஆனந்தவிகடன் செய்திருப்பது வேடிக்கை  . அவர்கள் விமர்சனத்தில் வந்த சில வரிகள் இதோ :
# ``நம்மளைக் கொல்ல மாட்டாங்கடா'' என மற்ற நண்பர்கள் சொல்லும்போது, ``இல்லல்ல... கண்டிப்பா கொன்னுடுவாங்க’' என்கிறான் அப்சல். ஒரு முஸ்லிம் இளைஞனுக்கே உரிய உள்ளுணர்வு அது #.  இந்த படத்தில் தினேஷ் உடன் வரும் மூவரில் அப்சல் என்ற  முஸ்லீம் இளைஞனும் இருக்கிறான் . எல்லோரை விடவும் அவன் தான் சிறியவன் . மற்ற மூவரை பற்றிய தகவல்களை  அடி தாங்க முடியாமல்  போலீசில் மாட்டிவிட்டாலும் அவர்கள் கூட அவன் மேல் இரக்கப்படும் அளவிற்கு அப்பாவி . படத்தில் ஆவி சொன்னது போல் அவன் எங்கேயும் சொல்லவில்லை . குறிப்பாக சில இடங்களில் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்கிற வகையில் தான் அவன் பேச்சு இருக்கிறது . மற்ற இருவரும் ஒரு வித குழப்பத்தில் இருக்க சமுத்திரக்கனியிடம் தையிரியமாக " எங்களை கொல்ல  போறீங்களா  சார் " என்று கேட்பவனும் அவனே . க்ளைமேக்சில் கூட நான் போய் கேட்கிறேன் என்று வேகமாக சென்று முதலில் உயிரை விடுபவனும் அவனே. படம் பார்த்தவர்களுக்கு நான் சொல்வது நன்றாக புரியும் . அப்படியிருக்க மீண்டும் # ``நம்மளைக் கொல்ல மாட்டாங்கடா'' என மற்ற நண்பர்கள் சொல்லும்போது, ``இல்லல்ல... கண்டிப்பா கொன்னுடுவாங்க’' என்கிறான் அப்சல். ஒரு முஸ்லிம் இளைஞனுக்கே உரிய உள்ளுணர்வு அது # என்கிற ஆவியின் விமர்சன வரிகள் இயக்குனரே யோசிக்காத ஏதோ புது கோணத்தை நமக்கு சொல்வது போல இருக்கிறது...

இதில் சொல்லப்பட்டது போல பார்த்தால் முஸ்லீம்கள் எல்லாம் ஒருவித பயத்தில் இங்கே ( தமிழகத்திலும் ) வாழ்ந்து கொண்டிருப்பது போல படுகிறது . எவ்வளவு விபரீதமான வார்த்தை விளையாடல் . போலீஸ் அடித்து துவைக்கும் போது எவனாக இருந்தாலும் பயப்படுவது சகஜம் தான் . இதில் எதற்கு தேவையில்லாத மதச்சாயம் ?! . ஊழல் செய்யும் கட்சிகள் எல்லாம் ஒன்று சேரும் போது பொத்தாம் பொதுவாக மதச்சார்பற்ற கூட்டணி என்கிற முகமூடியை போட்டுக்கொள்வது போல இருக்கிறது ஆவி யின் செயல் . அவர்களுக்கென்ன நெருக்கடியோ  ?! . படத்தில் ரமேஷ் , சந்திரன் , முத்துவேல் என எல்லோருமே இந்துக்களாகவே இருக்கிறார்கள் அப்படியானால் வெற்றிமாறன் இந்துக்களுக்கு எதிரானவரா ? என்கிற கேள்வியை ஒருவர் எழுப்பினால் அது எந்த அளவிற்கு முட்டாள்தனமாக இருக்குமோ அதைப்போலத்தான் இருக்கிறது இவர்களின் விமர்சனம் . உலகம் முழுவதும் நடக்கும் குண்டு வெடிப்புகளைப் பார்த்தால் வீட்டை விட்டு வெளியே வரும் எந்த மதத்தை  சேர்ந்தவனும்  உயிர் பயத்தில் தான் வாழ வேண்டுமென்கிற சூழ்நிலையில் ஆனந்த விகடனின் விஷமத்தனமான விமர்சனம் வேதனையளிக்கிறது . அரசியல்வாதிகள் தான் தங்கள் பிழைப்புக்காக மதத்தை பயன்படுத்துகிறார்கள் என்றால் 100 வருடங்கள் கடந்து பத்திரிக்கை நடத்தும் ஆனந்த விகடனுக்கு அப்படி என்ன நிர்பந்தம் ?! . படத்திற்கு போடுகின்ற மார்க்குகளில் சில நேரங்கள் பிசகினாலும் அவர்களின் நேர்மையை சந்தேகிக்காத என்னைப் போன்ற வாசகர்களுக்கு சமுதாயத்தை பிளவுபடுத்துகிற இது போன்ற வார்த்தைகள் பேரிடி ...

7 February 2016

விசாரணை - VISARANAI - வீ ஆர் சரண்டர்ட் ...


முதல் படம் ஜெயித்தவுடன் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணி சம்பாதிக்க நினைக்கும் நிறைய இயக்குனர்கள் மத்தியில் ஒன்பது வருடங்களில் பேர் சொல்லும் மூன்றே படங்களை  எடுத்திருப்பதே  இயக்குனர் வெற்றிமாறனின் தரத்தை சொல்லும் .
முந்தைய தனுஷ் + வெற்றிமாறன் தயாரிப்பில் வந்த காக்கா  முட்டை போலவே சர்வதேச அங்கீகாரத்துடன் இங்கே ரிலீஸ் ஆகியிருக்கிறது விசாரணை ... 

ஆந்திராவில் மளிகை கடையில் வேலை செய்யும் பாண்டி மற்றும் நண்பர்கள் ( அட்டக்கத்தி தினேஷ் & முருகதாஸ் )  மேல் போலீசாரால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை தோலுரித்துக் காட்டுவதே விசாரணை . அப்பாவி விளிம்பு நிலை மனிதர்களை காவல்துறை எந்தவித மனசாட்சியும் இல்லாமல் எப்படி பந்தாடுகிறது என்பதை நெற்றிப்பொட்டில் வைத்து சுடுவது போல சொல்லியிருப்பதே விசாரணை . விலங்குகளை விட கேவலமாக நடத்தப்படும் இந்த மனிதர்களின் வலியை படம்  முடிந்தும் அழியாத ரணமாக நம்முள் பதிய வைத்ததில் நீண்ட நாட்கள் வாழும் இந்த விசாரணை ...

படம் முழுவதும் ஒருவித மிரட்சியுடன் வரும் தினேஷ் நடிப்பால் நம்மை மிரட்டியிருக்கிறார்  . எந்த ஒரு இடத்திலும் இவர் நடிக்காமல் வாழ்ந்து காட்டியிருப்பதே இவர் ப்ளஸ் . ஆந்திரா போலீசிடம் அடி வாங்கும் போதும் சரி சமுத்திரக்கனியிடம் சாவு பயத்தில் கெஞ்சும் போதும் சரி எப்படியாவது இவங்க கிட்டருந்து ஓடிருடா என்று நம்மை பதற வைத்ததில் மிளிர்கிறது தினேஷின் நடிப்பு . வெறும் காமெடியனாக அறியப்பட்ட முருகதாசுக்கு இந்த படம் ஒரு மைல்கல் . பல்ல  ஒடச்சுட்டாங்க என்று சொல்லும் இடத்தில் சிரிப்பையும் , பரிதாபத்தையும் ஒரு சேர வரவைக்கிறார் மனுஷன் . நண்பர்களாக வரும் மற்ற இருவரும் நல்ல தேர்வு ...

சுப்ரமணியபுரத்துக்கு பிறகு பெயர் சொல்லும் கேரக்டர் சமுதிரக்கனிக்கு . சாதாரண வில்லனாக வந்து அடி வாங்குவதை தவிர்த்து இது போன்ற படங்களில் அவர் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவுக்கு நல்லது . மேலதிகாரியிடம் போனில் பணிவையும் , ஆத்திரத்தையும் காட்டுவது , தனது வேலையை காப்பாற்றிக் கொள்ள குற்ற உணர்ச்சியுடன் சதிக்கு உடன்படுவது என நேர்மை மனதில் ஒட்டியிருந்தும் வேறு வழியில்லாமல் குற்றத்துக்கு துணை போகும் பல போலீஸ் அதிகாரிகளின் பிம்பமாக கண்முன் நிற்கிறார் கனி . கொடூர ஆந்திர போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அஜய்கோஸ் , சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் தமிழ்நாடு போலீஸ்காரர் ராமதாஸ் , அரசியல்வாதிகளின் பலியாடு ஆடிட்டர் கே.கே வாக வரும் கிஷோர் மற்றும் படத்தில் சின்ன சின்ன ரோல்களில் வரும் எவருமே நல்லவேளை நடிக்கவேயில்லை ...


உலக சினிமாக்களை பார்த்து சுடாமல் திரு.சந்திரகுமார் தனது சொந்த அனுபவங்களை வைத்து எழுதிய லாக்கப் என்கிற உள்ளூர் நாவலை தழுவி அத்தோடு சாதிக் பாட்ஷா  தற்கொலை, வங்கி கொள்ளை தொடர்பாக சென்னையில் நடந்த என்கவுண்டர் இவற்றை வைத்து பின்னப்பட்ட விறுவிறுப்பான திரைக்கதையையும் சேர்த்து உலக தரத்திற்கு படமாக கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன் . இடைச்செருகல் போல படும் ஆனந்தி கேரக்டர் , கிஷோர் மரணத்தை சுற்றி நிகழும் சின்ன குழப்பம் , போலீஸ் டார்ச்சர்களாகவே நகரும் முதல் பாதி , ஒரு வழியாக அது முடிந்து தப்பிக்கும் தினேஷ் & கோ மூடிக்கொண்டு ஊருக்கு போகாமல் தேவையில்லாத மேட்டர்களில் மூக்கை நுழைக்கும் அதிகப்பிரசங்கித்தனம் போன்ற சில குறைகளை மட்டுமே படத்தில்,காண முடிகிறது . எடிட்டிங் , பின்னணி இசை , ஒளிப்பதிவு எல்லாமே நம்மை நன்றாகவே படத்தில் லாக் செய்கின்றன ,,,

வழக்கு எண் , மௌன  குரு உட்பட நிறைய படங்களில் பார்த்து பழகிய போலீசாரின் அதிகார துஷ்பிரயோகமும் , மனித உரிமை மீறல்களும் தான் படத்தின் கரு என்றாலும் அதை டீடைலிங்காக அதே சமயம் மிக மிக அழுத்தமாக சொன்ன விதத்தில் வித்தியாசப்படுகிறது விசாரணை . படமாக இருந்தாலும் தினேஷ் & கோ வினர் படும் டார்ச்சர்களில் இருந்து எப்போது தப்பிப்பார்கள் என்கிற பதைபதைப்பை படம் முழுவதும் கொடுத்த விதத்தில் வெற்றி பெறுகிறார்  வெற்றிமாறன் . குறிப்பாக இரண்டாம்பாதி அடுத்தடுத்து என்ன என்கிற ஆர்வத்தை கொடுத்துக்கொண்டே இருக்கிறது ...

நீண்ட வருடங்களுக்கு பிறகு நெஞ்சத்தை அழுத்தி பிசையும் ( என்ன தான் எதிர்பார்த்த முடிவாக இருந்தாலும் ) க்ளைமேக்ஸ் . அதே போல படத்தின் அந்த கடைசி பத்து நிமிடங்கள் கனமான இதயங்களை கூட கரைத்து விடும் . பொழுதுபோக்கிற்காக மட்டும் சினிமாவுக்கு போகிறவர்கள் இந்த படத்துக்கு குடும்பத்தோடு போய் வெற்றி மாறனை திட்டுவதை விட சிவகார்த்திகேயன் படங்களை கண்டுகளிக்கலாம் . மற்றபடி ஒரு உண்மையான சினிமா நம்மை எந்த அளவு பாதிக்க முடியும் என்று சோதித்துப் பார்க்க நினைப்பவர்கள் நிச்சயம் விசாரணைக்கு அழைக்காமலேயே சரண்டர் ஆகலாம் . படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது  நம்மை கடந்து செல்லும்  போலீஸ் பேட்ரோலை ஒருவித கொலைவெறியுடன் பார்க்க வைப்பது படத்தின் வெற்றியா இல்லை நமது ஜனநாயகத்தின் தோல்வியா என்கிற கேள்வி இன்னும் அரித்துக்கொண்டு தானிருக்கிறது ...

ரேட்டிங் : 4.25 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 52  


Related Posts Plugin for WordPress, Blogger...