5 October 2010

எந்திரன் திரை விமர்சனம்

                                   
   மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ரஜினி , ஷங்கர், ரஹ்மான் கூட்டணியில் ஒரு படம் , சன் பிச்சர்ஸ் நேரடி தயாரிப்பில் முதல் படம் , பட்ஜெட் 150 கோடி , உலகமெங்கும் மூன்று மொழிகளில் மூவாயிரம் பிரிண்ட் ரிலீஸ் , படம் வருவதற்கு முன்பே நிறைய எதிர்பார்ப்புகள் , விவாதங்கள் , விளம்பரங்கள் .......
     ஒரு வழியாக படத்தை பார்த்தாகிவிட்டது ...இது ஷங்கர் பாணி படமும் அல்ல , ரஜினி பாணி படமும் அல்ல , முழுவதும் கிராபிக்ஸை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம் ....
     விஞ்ஞானி வசீ ( ரஜினி ) பத்து வருட கடுமையான உழைப்பில் ஒரு ரோபோவை தயாரிக்கிறார் .... ரோபோவின் பெயர் சிட்டி ( ரஜினி ) ... அதை ராணுவத்தில் கொடுத்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது அவர் லட்சியம் ....ஆனால் இதற்கு அனுமதி அளிக்கும் பதவியில் இருக்கும் வசீயின் குருவான ப்ரோ . தோரா ( வில்லன் டானி )   பொறாமையுடன் மறுக்கிறார் .... ரோபோவிற்கு நல்லது கெட்டது தெரியாததால் நம் ராணுவதினரையே அது அழித்து விடும் அபாயம் இருக்கிறது என்று நிரூபித்து அதனை நிராகரிக்கிறார் .....வசீ சிட்டிக்கு உணர்ச்சிகளை சொல்லி கொடுக்க அது வசீயின் அழகான காதலியான  சனாவையே  ( ஐஸ்வர்யா ராய் ) , காதலிக்க தொடங்கி விடுகிறது......
       இதில் ஆத்திரமடையும் வசீ சிட்டியை அழித்து விடுகிறார் , பின்னர் அது வில்லன் கைக்கு போய் எவரையும் அழித்து விடக்கூடிய அபாயகரமான சக்தியாக மாறி விடுகிறது.....தன்னை போல ஆயிரம் ரோபோவை அது உருவாக்கி ஐஸ்வர்யா ராயை சிறை பிடிக்கிறது ....கடைசியில் ரோபோக்களை அழித்து விட்டு வசீ ராயை எப்படி மீட்கிறார் என்பதே கிளைமாக்ஸ் ....
          விஞ்ஞானி வசீ , ரோபோ சிட்டி , வில்லன் ரோபோ என மூன்று வேடங்களில் வருகிறார் ரஜினி ... எந்த வித ஒபெனிங் பில்ட் அப்பும் இல்லாமல் சாதாரணமாக அறிமுகம் ஆகிறார் சூப்பர்  ஸ்டார் ...காதலியின் கையை பிடிப்பவனை ( கலபாவன் மணி ) அடிக்காமல் கண்ணில் மண்ணை தூவி விட்டு ஓடுகிறார் ... இப்படி முற்றிலும் வித்தியாசமாக வசீ கதாபாத்திரத்தில் ரஜினி ...அவரை அவ்வளவு அழகாக காட்டியிருந்தும் ஒட்டு தாடி ஏனோ ஒட்டவில்லை....கடைசியில் சிட்டியை  அழிக்கும் இடத்தில மனதை தொடுகிறார் ....
       வசியை விட எல்லோரையும் வசீகரித்து இருபது சிட்டி ... சந்தானம் , கருணாஸை அடிக்கும் போதும் , பார்பர் ஷாப்பில் புக்ஸ் படிக்கும் போதும் , ஹனிபாவுடன் ( இவர் உயிருடன் இல்லாதது நிச்சயம் கலை துறைக்கு பெரிய இழப்பு )  உல்டாவாக பேசும் போதும்  , ஐஸ்வர்யாவிர்காக வசியுடன் சண்டை போடும் போதும் போதும், மக்னெடிக் பவர் மூலம் அடியாட்களின் பேண்டை உருவும்  இடத்திலும் என எங்கு பார்த்தாலும் சிட்டியின் சாம்ராஜ்யம் ...கோர்ட் உத்தரவின் படி தன்னை தானே அழித்து கொள்ளும் இடத்தில லேசாக மனம் கனக்கிறது......
             அசத்தலாக அறிமுகம் ஆகும் வில்லன் ரோபோ போக போக ஆயிரம் ரோபோக்கலாக மாறியவுடன் போரடிக்கிறார்....குரூர பார்வையுடன் ராயை அணுகும் போதும் , வில்லன் டானி யை கொல்லும் போதும் , ஸ்டைலாக சிரிக்கும் போதும் அந்த கால வில்லன் ரஜினியின் பஞ்ச் ....
           பொதுவாக ரஜினி படங்களில் பாடல்களுக்கு மட்டும் வரும் ஹீரோயினாக இல்லாமல் இதில் ஐஸ்வர்யா ராய்க்கு படம் முழுவதும் வருகின்ற முக்கியமான வேடம் , நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு .... நன்றாக பயன் படுத்தி இருக்கிறார் .....சிட்டிக்கு உறவு முறை பற்றி விளக்கும் இடம் உதாரணம் ....இடைவேளை வரை சிட்டியுடன்  கதையை இவரே நகர்த்துகிறார் ....பாடல்களில் நல்ல கவர்ச்சி ....
                 இசை , கேமரா , சண்டை , நடனம் என எல்லோரும் நன்றாக உழைத்து இருக்கிறார்கள் ..கிராபிக்ஸ் காட்சிகளை ஷங்கரே நேரடியாக மேற்பார்வை செய்து இருக்கிறார் ....
           இது போன்ற மிக பெரிய பட்ஜெட் படங்களை தமிழில் ஷங்கரை தவிர யாராலும் இயக்க முடியுமா என்பது கேள்விக்குறியே ..இருப்பினும் கதையை விட கிராபிக்ஸில் தான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார் .. .பாடல் , சண்டை காட்சிகளுக்கு செய்த செலவில் கொஞ்சமாவது  வசீயின் ஆராய்ச்சி கூடத்திற்கு செய்திருக்கலாம் .
                    பொதுவாக ஷங்கர் படங்களில் லாஜிக் பார்க்க கூடாது ....இருந்தும் இதில்  லாஜிக் சொதப்பல் ஏராளம் .....பத்து வருடமாக கஷ்டப்பட்டு ரோபோவை தயாரித்து அதை  எந்த வித எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் ஐஷ்வர்யா ராயுடன் அனுப்புகிறார் .... இதை தயாரித்தே ஏதோ எடுபிடி வேலை செய்வதற்கோ என யோசிக்கும் அளவிற்கு நிறைய காட்சிகள் .....முதலில் ரோபோ போல ஸ்டிப்பாக வரும் சிட்டி பின்னர் வில்லன் ஆக மாறியவுடன் சாதாரண மனிதன் போல நடந்து  கொல்வது சுத்த பேத்தல் ...எல்லா வித ஆற்றலும் படைத்த ரோபோ தன் இடத்தில  நுழைந்து  விட்ட வசியை கண்டுபிடிக்க ஏனோ இத்தனை குழப்பம் ....கிளைமாக்ஸ் கோர்ட் காட்சியில் வசிக்கு மரண தண்டனை விதிக்கும் நீதிபதி சிட்டி ரோபோ சாட்சி சொன்னவுடன் விடுதலை செய்வது ஆண்டாண்டு கால " தமிழ்படம் " .ENTHIRAN
             ஷங்கரின் ஜென்டில்மேன் ,  இந்தியன் , அந்நியன் , சிவாஜி என எல்லா படத்திலும் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் வேகமான திரைக்கதையும் , அழுத்தமான கதையும் அதை மறைத்து விடும் , ஆனால் இப்படத்தில் முழுவதும் கிராபிக்ஸ் ஆக்ரமித்து இருப்பதால் ரஜினி படம் என்பதை விட ஏதோ ஆங்கில படத்தின் டப்பிங் படம் பார்த்த உணர்வை தவிர்க்க முடியவில்லை .       ...
         ஒரே நாளில் இப்படம் பல கோடிகளை வசூலித்து   விட்டது என தெரு கோடியில் நின்று கொண்டு நிறைய பேர்  பேசிக்கொள்கிறார்கள் ....... ஆனால் எல்லா தரப்பு மக்களும் உடனே பார்க்க முடியாத படி எக்கச்சக்க டிக்கெட் விலை  .......இதனால் நான் படம் ரிலீஸ்  ஆன  அடுத்த நாளே பார்த்த போதும் கூட அரங்கம் பாதி கூட நிரம்ப வில்லை ...
சன் பிச்சர்ஸ் கவனிக்குமா ? .. ...
    ஒரு முழுமையான சூப்பர் ஸ்டார் படத்தை பார்ப்பது எப்போது ?.அரங்கத்தின் வெளியே ஒரு வெறி தனமான ரசிகனின் கேள்வி ..Related Posts Plugin for WordPress, Blogger...