20 July 2015

மாரி - MAARI - மினிமம் காரண்டீட் ...


னது முதல் இரண்டு படங்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் பாலாஜி மோகன்  , இரண்டு ஹிட்களை தொடர்ந்து தனுஷ் இருவரும் இணைந்திருக்கும் படம் மாரி . இருவரின் காம்பினேஷன் , புதுப்பேட்டை க்கு பிறகு தனுஷ் போட்டிருக்கும் டான் வேஷம் , படத்தின் ட்ரைலர் எல்லாமே சேர்த்து கூடுதல் எதிர்பார்ப்பை கொடுத்திருப்பது  படத்துக்கு பலம் ஆனால் அதை பூர்த்தி செய்யாமல் விட்டது பலவீனம் ...

சின்ன கொலை மூலம் பெரிய டான் ஆகி விடும் மாரி ( தனுஷ் ) கட்டப் பஞ்சாயத்துடன் சேர்த்து புறா ரேசிலும் கொடிகட்டிப் பறக்கிறார் . இவரது எதிரி பேர்ட் ரவி ( மைம் கோபி ) , லோக்கல் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்  ( விஜய் யேசுதாஸ் ) இருவரும்  மாரியை ஒழிக்கும் திட்டத்தில் ஜெயித்தார்களா என்று நாம் நிறைய மசாலா படங்களில் மாறி மாறி பார்த்த சாதா கதையை தனுஷ் மூலம் மெருகேற்றி கொடுத்திருக்கிறார்கள் ...


எந்த வேடம் கொடுத்தாலும் அதை பெர்ஃபெக்டாக செய்யும் சில நடிகர்கள் வரிசையில் தனுஷ் எப்போதோ சேர்ந்து  விட்டார் . அந்த வகையில் புதுப்பேட்டையில் பார்த்த  சீரியஸ் கொக்கி குமாரில் இருந்து விலகி காமெடியும் கலந்த டான் வேஷத்தில் தனுஷ் கச்சிதம் . செஞ்சிருவேன்  என்று பஞ்ச் டயலாக் பேசிவிட்டு கடைசி வரை ஒன்றும்  செய்யாவிட்டாலும் கூலர்ஸ் , கழுத்து சங்கிலி , வாயில் சிகரெட் இத்தோடு ஆக்சன் காட்சிகளில் வேகம் என நிஜ ரவுடியாகவே ராவுடி செய்கிறார் தனுஷ் . ஆனால் இவர் ரவுடியாவதற்கு காரணமாக காட்டப்படும்  ஃப்ளாஷ்பேக் படு வீக் ...

இன்டர்வெல் ப்ளாக்கில் ஒரு ட்விஸ்ட் தருவதை தவிர காஜல் அகர்வாலுக்கு படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை . தனுஷின் அல்லக்கைகளாக வரும் இருவரும் படத்துக்கு  ப்ளஷ் . குறிப்பாக தனக்கு ஏன் சனிக்கிழமை என்று பேர் வந்தது என விளக்கும் சீனில் ஆரம்பித்து கிடைக்கிற கேப்பில் தனுஷை கூட விட்டு வைக்காமல் காமெடி கெடா வெட்டும் ரோபோ  சங்கர் ஆர்டினரி படத்துக்கு எக்ஸ்ட்ராடினரி எண்டெர்டைன்மெண்ட் . காமெடியன்கள் எல்லாம் ஹீரோவாகிக் கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு முன்னணி காமெடியனாக வருவதற்கு இந்த படத்தின் மூலம் நல்ல வாய்ப்பு . ஆல் தி பெஸ்ட் ...


தனுஷை பார்த்தாலே அல்லு விடும் மைம் கோபி , போலீஸ் வேஷத்துக்கு சுத்தமாக பொருந்தாத விஜய் யேசுதாஸ் ( அறிமுகம் ) என இரண்டு வில்லன்களுமே மாரி படத்துக்கு ரொம்ப ஸாரி . பாடல்களை அப்படியிப்படி சுட்டிருந்தாலும் ( டானு பாடல் - ஆத்தாடி ஆத்தாடி  தேன் மொட்டு தான் ) பி.ஜி யில் பின்னியெடுக்கிறார் அனிருத் . ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு இதம் ...

படத்தின் பரீ ரிலீஸ் மார்க்கெட்டிங் , தனுஷின் ஸ்டார் வால்யு , கலகலவென போகும் முதல் பாதி , பாட்ஷாவை நினைவுபடுத்தும் மார்கெட் சீன்கள் போன்றவை மாரிக்கு பூஸ்ட் . சொதப்பலான வில்லன்கள், சொதசொதப்பான இரண்டாம் பாதி , மாமனாரே  மறந்து விட்ட சிகரெட்டை தனுஷ்  படம் நெடுக ஸ்டைலாக புஸ்புஸ் என்று ஊதி நெகடிவ் பப்ளிசிட்டி கொடுப்பது போன்றவை படத்துக்கு ஸ்கேரி . மொத்தத்தில் படு மொக்கையாகவும் இல்லாமல் மாஸ் மசாலாவாகவும் இல்லாமல் தனுஷின் அடிமட்ட ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் வந்திருக்கும் மாரி - மினிமம் காரண்டீட் ...

ஸ்கோர் கார்ட் : 40

( பின்குறிப்பு  : படத்தில் வன்முறை , ஆபாச காட்சிகள் இல்லாததால் யு சான்றிதழ் கொடுத்ததுக்கு பதில் இளசுகளை அதிகம் இன்ஃப்லுயன்ஸ் செய்யும் வகையில் தனுஷ் படம் நெடுக சிகரெட் பிடித்ததற்கு தண்டனையாக யூஏ கொடுத்திருக்கலாம் )
14 July 2015

பாகுபலி - BAHUBALI - நல்ல ஆரம்பம் ...


நான் ஈ வெற்றியின் மூலம் தமிழகத்தில் கால் பதித்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலி மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் . 250 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படம் என்பதையும் தாண்டி தமிழில் ஒரு சரித்திர படம் ( என்ன தான் டோலிவுட ஹீரோவாக  இருந்தாலும் ) பார்க்க வேண்டும் என்கிற தாகத்தை தீர்த்து வைக்கிறது பாகுபலி ...

மகாபாரதத்தில் வரும் பங்காளி சண்டை தான் கதை . அர்ஜுனனுக்கு பதில் பிரபாஸ் , துரியோதனுக்கு ரானா , கர்ணனுக்கு சத்யராஜ் , சகுனிக்கு பதில் நாசர் இவர்களை நடிக்க வைத்து கதையை கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர் . என்ன அவ்வளவு நேரம் படத்தை பார்க்க வைத்து விட்டு க்ளைமேக்ஸ் இல் முடிவு சொல்லாமல் இன்டர்வெல் ப்ளாக் போட்டு 2016 பார்ட் 2 வில் பார்க்கலாம் என்று முடித்து விட்டார்கள் . இவ்வளவு பெரிய படத்தை இப்படி முடித்திருக்கும் இயக்குனரின் தையிரியத்தை பாராட்டினாலும் ஏமாற்றத்தை தவிர்க்க முடியவில்லை ...


பிரபாஸ் , ரானா இருவருமே சரித்திர கால வேஷத்துக்கேற்றபடி அட்டையில் செய்த கவசத்தை போடாமலேயே நல்ல உடற்கட்டுடன் இருக்கிறார்கள் . ஹீரோ பிரபாஸ் என்ட்ரிக்கு ஒருபடி மேலே இருக்கிறது ரானா வின் அறிமுகம் . ரொமான்ஸ் சீன்களில் மெழுகு பொம்மை போல போல வரும் தமனா சீரியாசக  சண்டையும் போட்டு உருக வைக்கிறார் . இவர்கள் இயக்கம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒட்டவில்லை . நாசர் , சத்யராஜ் , ரம்யாகிருஷ்ணன் எல்லோருமே தேர்ந்த நடிகர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள் . சத்யராஜுக்கு பெயர் படத்தில் கட்டப்பா . என்ன கொடுமைப்பா ! . அனுஷ்கா வின் அழகை ரசிக்க நினைத்து வந்த அங்கிள்களுக்கு ஏமாற்றமே . பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ...

ஒளிப்பதிவு , எங்கேயுமே பொம்மைப் படம் போல இல்லாமல் உண்மையிலேயே மிரள வைக்கும் சி.ஜி , அரண்மனை செட் , மிரட்டும் போர்க்காட்சிகள் , விசுவல்ஸ் என்று எல்லாமுமாய் சேர்த்து நம்மை பிரம்மாண்டமாய் கட்டிப் போடுகின்றன . இந்த பிரம்மாண்டத்தையும் தாண்டி நான் ஈ யில் உயிர்ப்பாக இருந்த கதை , திரைக்கதை இதில் மிஸ்ஸிங் . குறிப்பாக கிரேசி மோகனின் வசனங்கள் நான் ஈ க்கு ப்ளஸ் . இழுத்துக் கொண்டு போகும் முதல் பாதி , கொட்டாவியை வர வைக்கும் தமனா - பிரபாஸ் காதல் காட்சிகள் , கொஞ்சம் சலிப்பைத் தரும் நீண்ண்ண் ட சண்டைக் காட்சிகள் , சட்டென முடியும் படம் போன்ற சில குறைகள் இருந்தாலும்  இப்பூடி ஒரு படத்தை அதிக பொருட்செலவில் எடுத்து அதை வீணாக்காமல் ரசிக்கும் படி தந்த விதத்தில் பாகுபலி நல்ல ஆரம்பம் ...

ஸ்கோர் கார்ட் : 45

பின் குறிப்பு : ( தென் இந்திய இயக்குனரின் படம் இந்தியாவிலேயே பிரம்மாண்டமான படம் என்பதோடு முதல் மூன்று நாட்கள் வசூலிலேயே  எல்லா கான்களையும் தூக்கி சாபிட்டு விட்டது குறிப்பிடத்தக்கது )


9 July 2015

அரையாண்டு தமிழ் சினிமா 2015 - TAMIL CINEMA 2015 HALF YEARLY REVIEW ...
ந்த வருடம் பயங்கர எதிர்பார்ப்போடு வந்த , மாசு , உத்தமவில்லன் என்று பெரிய ஹீரோக்களின் படங்கள் சொதப்ப தேசிய விருது பெற்ற காக்காமுட்டை , டார்லிங் , டிமாண்டி காலனி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் பெற்றிருப்பது புது முயற்சிகளுக்கு என்றுமே தமிழ் ரசிகர்களின் ஆதரவு உண்டு என்பதை மீண்டும் நிரூபணம் செய்கிறது ...

ஐ படத்தில் பாடல் காட்சிகளை படமாக்குவதில் மெனக்கட்டதற்கு கால்வாசியாவது ஷங்கர் கதைக்கு பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். காஸ்ட்லி ஃபோனா இருந்தாலும் சிக்னலே வரலேன்னா எப்படி பாஸ் ? இருந்தாலும் பொங்கல் விடுமுறை தயாரிப்பாளருக்கு பொங்கலோ பொங்கல் சொல்லாமல் காப்பாற்றியிருக்கும் . Blessing in Disguise என்பது போல ஐ பட டிக்கெட் கிடைக்காமல் டார்லிங் போனவர்கள் டர் ஆகாவிட்டாலும் பேய் ட்ரெண்டில் மற்றுமொரு படத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் . தனது அழுத்தமான விமர்சனங்களால் படிப்பவர்களின் மனதை தொடும் கேபிள் சங்கர் நல்ல கதையை தேர்ந்தெடுத்தும் தொட்டால் தொடரும் மூலம் கொடுத்ததென்னமோ மைல்ட்  டச் தான் . அடுத்த படத்தில் சிக்சர் அடிக்க வாழ்த்துக்கள் ...

காக்க காக்க , வேட்டையாடு விளையாடு படத்தின் ரீமேக் போல இருந்தாலும் ஐந்து கெட்டப்களில் அஜித்தை அவ்வளவு அழகாக காட்டியதற்கும் , ஸ்டைலிஷான மேக்கிங்குக்கும் பேசப்பட்டது என்னை அறிந்தால் . புதிய மொந்தையில் பழைய கள் தான் என்றாலும் ருசிக்கலாம் . தோல்விகளால் துவண்டிருந்த தனுஷுக்கு வி.ஐ.பி க்கு பிறகு மற்றுமொரு வெற்றிப்படம் அனேகன் . க்ரைம் நாவல் போன்ற கதைக்காகவும் , வேகமான திரைக்கதைக்காகவும் வென்றான் இந்த அனேகன் . தந்திரமான திரைக்கதையால் ராஜதந்திரம் அனைவரையும் கவனிக்க வைத்தது . பி சி சென்டர்களில் வசூலோடு சர்ச்சையையும் சேர்த்து கிளப்பியிருக்கிறது கார்த்திக் நடிப்பில் வந்த கொம்பன் . காக்கி சட்டையின் வெற்றி சிவகார்த்திகேயனை சக்சஸ் ஹீரோவாக மீண்டும் நிரூபித்திருக்கிறது ...

பேய் சீசனின் பேய் ஹிட் காஞ்சனா 2 . இரண்டாம் பாதி கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் எல்லா சென்டர்களிலும் கல்லா கட்டியது காஞ்சனா . தனது படங்களில் வெரைட்டியை விரும்பும் அருள்நிதியை டிமாண்ட் நாயகனாக ஆக்கியிருக்கிறது டிமாண்டி காலனியின் வெற்றி . உலகநாயகனின் உத்தமவில்லன் இந்த அளவு சோதிப்பான் என்று யாரும் நினைக்கவில்லை . ஒரு நடிகனாக பிரமிக்க வைத்தாலும் கதை , திரைக்கதை ஆசிரியராக கமல் காலை வாரியது துரதிருஷடம் . ஐஸ்வர்யா தனுஷின் வை ராஜா வை ஏ சென்டர்களில் கை யை கடிக்காததாக கேள்வி . ஜனநாதனின் இயக்கத்தில் புறம்போக்கு மேம்போக்காக இருந்ததால் ரசிகர்களின் வரவேற்பை  பெறாவிட்டாலும் ஷாமின் நடிப்பு பாராட்டப்பட்டது ...

குரு எஸ்.ஜே சூர்யாவின் இசை சவுண்டாக வசூல் செய்யாவிட்டாலும் சிஷ்யன் லக்ஷ்மனின் ரோமியோ ஜூலியட் கமர்சியலாக ஜெயம் ரவிக்கு நல்ல ப்ரேக் கொடுத்திருக்கிறது . பல சர்வதேச விருதுகளோடு தேசிய விருதும் சேர்ந்து கொள்ள கிடப்பிலிருந்த காக்கா முட்டைக்கு டீசண்ட் ஓபனிங் கிடைத்தது . வன்முறை , சோகம் எதுவுமில்லாமல் மென்மையான படங்களாலும் அழுத்தமாக மனதை தொட முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்த படம் . வெறும் விமர்சகர்களால் மட்டும் பாராட்டப்படாமல் படம் வசூலிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியம் ...

ஓ காதல் கண்மணி மூலம் ரசிகர்கள் , விமர்சகர்கள் இருவரிடமும் டபுள் ஓ.கே வாங்கி விட்டார் மணிரத்னம் . கணவர் சூர்யாவின் மாசுவை துடைக்கும் வகையில் ஜோதிகாவின் 36 வயதினிலே படம் நல்ல ஹிட் . குட் கம் பேக் . தரமான படங்களை தயாரித்து வரும் சி.வி.குமாரின் மற்றுமொரு நல்ல படைப்பு இன்று நேற்று நாளை . டைம் மிஷின் கான்செப்ட் பழசு தான் என்றாலும் தமிழுக்கு சொன்ன விதத்தில் புதுசு . இரண்டாம் அரையாண்டின் ஆரம்பத்திலேயே பாபநாசம் மூலம் உத்தம வில்லனின் பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார் உலகநாயகன் . விஜய் நடிப்பில் புலி , சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயரிடப்படாத தல 56 இரண்டிற்காகவும் ரசிகர்கள் பசியுடன் காத்திருக்கிறார்கள் ...


4 July 2015

பாபநாசம் - PAPANASAM - ஆஸம் - AWESOME ...


நான் பார்த்து வியந்த மலையாள படங்களுள் முக்கியமானது த்ரிஷ்யம் . எந்த மொழிக்கும் பொருந்தக்கூடிய அந்த கதை ரீ மேக்கில் தெலுகு , கன்னட வெற்றியை தொடர்ந்து தமிழில் அதே  இயக்குனர் ஜீது ஜோசப்பின் கைவண்ணத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசமாக வந்திருக்கிறது . என்ன தான் ஒரிஜினல் இயக்குனர் எடுத்தாலும் கமல் எதையாவது புகுந்து கெடுத்து விடுவாரோ என்கிற பயம் இருந்தது . ட்ரைலரில் மீனா ரோலில் கவுதமியை க்ளோஸ் அப்பில் பார்த்த போது அந்த பயம் இன்னும் அதிகமானது . ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்க செய்யும் வகையில் சுயம்புலிங்கம் & ராணி யாகவே கமலும் கவுதமியும் வாழ்ந்து காட்டியிருக்கிரார்கள் ...

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தன் உழைப்பிலேயே சுயம்பாக வளர்ந்து சொந்தமாக கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் சுயம்பு லிங்கம்  ( கமல்ஹாசன் ) தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்ந்து வருகிறார் . நாலாம் க்ளாசை கூட தாண்டிறாத சினிமா பைத்தியம் சுயம்பு ஒரு அழையா விருந்தாளியால் ஏற்படும் பெரிய பிரச்சனையிலிருந்து த்ன்து குடும்பத்தை சினிமா தந்த அறிவிலிருந்து எப்படி புத்திசாலித்தனமாக காப்பாற்றுகிறார் என்பதே இந்த மூன்று மணிநேர பாபநாச பயணம் ...


கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமேயில்லை . ஆனால் நடிப்பதே தெரியாமல் அண்டர்ப்ளே செய்யும் மோகன்லால் கேரக்டரில் கமல் எப்படி சூட்டாவார் என்கிற தயக்கம் இருந்தது . கேசுவலாக நம்மை ஆளுமை செய்த ஜார்ஜகுட்டியை போலவே எமோஷனலாக சுயம்புவும் நம் நெஞ்சை தொடுகிறார் . என்னதான் கேசுவலாக இருந்தாலும் பெத்த பொண்ணுக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை வரும்போதும் மனுஷன் கல்லு மாதிரி நிக்கிறாரே என்று மோகன்லாலை பார்த்து நான் நினைத்ததுண்டு . அந்த குறையை கமல் நிவர்த்தி செய்கிறார் . அதே சமயம் க்ளைமேக்ஸ் நடிப்பில் கமல் நம்மை நெகிழ வைத்தாலும் ஐ.ஜி. கணவரிடம் உண்மையை கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டு ஒரு பாவ மன்னிப்பு போல பேசியது கொஞ்சம் நெருடுகிறது . த்ரிஷ்யத்தில் மோகன்லால் பேசும்போது இருந்த ஹீரோயிஸம் இதில் மிஸ்ஸிங் . ஒரு வேளை இயக்குனர் தெரிந்தே தமிழுக்காகவோ இல்லை கமலுக்காகவோ செண்டிமெண்டை சேர்த்திருக்கலாம் ...

கமல் - கவுதமி ஜோடி எப்பவுமே நல்ல பொருத்தம் . இப்பொழுது நிஜ வாழ்க்கையிலும் அவர்களுக்குள்ள நெருக்கம் படத்தின் கெமிஸ்ட்ரிக்கு நன்றாகவே வொர்கவுட் ஆகியிருக்கிறது . சொந்த குரல் என நினைக்கிறேன் கமலுக்கு ஈடாக கவுதமியும் நெல்லை தமிழில் நன்றாகவே பேசி நடித்திருக்கிறார் . குட் கம் பேக் . கமலின் மகள்களாக நிவேதா மற்றும் ஈஸ்தர் நல்ல தேர்வு . எம்.எஸ்,பாஸ்கர் , இளவரசு , சுயம்புலிங்கத்தை காவு வாங்கத்துடிக்கும் பெருமாள் ( கமல் குசும்பு ?! ) வேடத்தில் கலாபாவன் மணி என்று எல்லோருமே இயல்பான நடிப்பால் நம்மை கவர்கிறார்கள் . குறிப்பாக கடுமையான ஐ.ஜி யாகவும் , அதே சமயம் மகனை பறிகொடுத்த தாயாகவும் நடிப்பில் நம்மை மிரள வைக்கிறார் ஆஷா சரத் . அவருக்கு உறுதுணையாக அடக்கி வாசிக்கும் கணவர் ஆனந்த் மகாதேவன் க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரே டேக்கில் பேசி உருக வைக்கிறார் . கமல் & கவுதமி யை போலவே இந்த ஜோடியையும் நம் மனதில் அழுத்தமாக பதிய வைக்கிறார் இயக்குனர் . ஜிப்ரான் இசையில் இரண்டு பாடல்களுள் பின்னணி இசையும் இமயம் ...

ஜெயமோகன் - சுகா வசனங்களில் உள்ள சிலேடை ரசிக்க வைக்கின்றன. இடைவேளை வரை கொஞ்சம் நீளமாக இருந்தாலும் சுயம்பு லிங்கம் குடும்பத்தில் நடக்கும் காட்சிகள் அவர்களோடு சேர்த்து நம்மையும் ஒன்ற செய்வதால் போரடிக்கவில்லை  . குறிப்பாக குட்டிகோரா பவுடர் போடும் கமலை வாரும் மகள் , கார் வாங்கும் விஷயத்தில் கமல் - கவுதமி இடையே நடக்கும் ஊடல் - கூடல் எல்லாமே எல்லை மீறாமல் இயல்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன . இடைவேளைக்குப் பின் அங்கே இங்கே நகர விடாமல் திரைக்கதை  நம்மை கட்டிப்போடுகிறது . ஆடியன்ஸ் இப்படி கேட்பார்கள் என்பதை யோசித்து லாஜிக்கலாக சில பதில்களை சொல்லியிருப்பது புத்திசாலித்தனம். சில இடங்களில் உறுத்துகிற கமலின் ஒட்டு மீசை , நெல்லை பேச்சு போன்ற  குறையை  தவிர்த்து எளிமையான குடும்பத்தில் நடக்கும் அப்நார்மலான விஷயங்களை சினிமாத்தனமாக இல்லாமல் இயல்பான காட்சிகளால் நம்மை ஒன்ற செய்த விதத்தில் பாபநாசம் - ஆஸம் ...

ஸ்கோர் கார்ட் : 48 

பின்குறிப்பு : ( பல வருடங்கள் கழித்து குடும்பத்தோடு பார்க்க வேண்டிய கமல் படம் )
Related Posts Plugin for WordPress, Blogger...