30 December 2011

தமிழ் சினிமா 2011 - எனது பார்வையில் ...

             
இந்த வருடம் 128 நேரடி தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே வெற்றியடைந்திருக்கின்றன ... சில வருடங்களாகவே இந்த நிலை தொடர்வது துரதிருஷ்டமே , ஆனாலும் தியாகராஜன் குமாரராஜா,சரவணன் , சாந்தகுமார் போன்ற புதுமுக இயக்குனர்கள் நம்பிக்கை தருகிறார்கள் ...இந்த வருடத்தின் முதல் அரையாண்டு கால சினிமா சற்று மந்தமாகவே இருந்தாலும் அடுத்த ஆறு மாதங்கள் நன்றாக இருந்து அதனை சமன் செய்தது என்றே சொல்லலாம் ... காண்க  அரையாண்டு சினிமா (2011)-ஓர் அலசல் ... இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2011  

கவர்ந்த படங்கள் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில்  )

 1. ஆடுகளம் - காண்க ஆடுகளம் விமர்சனம் ...
 2. யுத்தம் செய்
 3. குள்ளநரி கூட்டம்
 4. கோ - காண்க கோ - விமர்சனம்
 5. அழகர்சாமியின் குதிரை - காண்க அழகர்சாமியின் குதிரை
 6. ஆரண்ய காண்டம் - காண்க ஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்
 7. எங்கேயும் எப்போதும் - காண்க எங்கேயும் எப்போதும் - நிறைவான பயணம்
 8. மங்காத்தா - காண்க மங்காத்தா - "தல" ஆட்டம்
 9. வாகை சூட வா
10. மௌனகுரு - காண்க மௌனகுரு - பேசப்படுவான் ...

டாப் டென் பாக்ஸ் ஆபீஸ்  ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )


 1. ஆடுகளம்
 2. சிறுத்தை
 3. கோ
 4. தெய்வதிருமகள் - காண்க தெய்வதிருமகள் - திருட்டு தேவதை
 5. முனி 2 காஞ்சனா - காண்க முனி 2 - காஞ்சனா - காமெடி பீஸ்
 6. மங்காத்தா
 7. எங்கேயும் எப்போதும்
 8. ஏழாம் அறிவு - காண்க ஏழாம் அறிவு - ஆறாம் அறிவே ...
 9. வேலாயுதம் - காண்க வேலாயுதம் - ரைட்ஸ் வாங்காத ரீமேக் ...
10. மௌனகுரு - ஒப்பனிங் சுமாராக இருந்தாலும் படம் நன்றாக இருப்பதால் வசூல் சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது

ப்ளாக்பஸ்டர் : மங்காத்தா

டாப் டென் பாடல்கள்

 1. யாத்தே யாத்தே ( ஆடுகளம் )
 2. கன்னித்தீவு பொண்ணா ( யுத்தம் செய் )
 3. எவண்டி ஒன்ன பெத்தான் ( வானம் )
 4. என்னமோ ஏதோ ( கோ )
 5. நெஞ்சில் நெஞ்சில் ( எங்கேயும் காதல் )
 6. ஆரிரோ ஆராரிரோ ( தெய்வதிருமகள் )
 7. விளையாடு மங்காத்தா ( மங்காத்தா )
 8. கோவிந்தா கோவிந்தா ( எங்கேயும் எப்போதும் )
 9. காதல் என் காதல் ( மயக்கம் என்ன )
10. வை திஸ் கொலைவெறி டி ( 3 )

கவர்ந்தவர்கள் 

 கவர்ந்த நடிகர் - தனுஷ் ( ஆடுகளம்,மயக்கம் என்ன )
 கவர்ந்த நடிகை - ரிச்சா ( மயக்கம் என்ன )
 கவர்ந்த குணச்சித்திர நடிகர் - ஜெயப்ரகாஷ் ( யுத்தம் செய் )
 கவர்ந்த காமெடி நடிகர் - சந்தானம் ( பல படங்கள் )
 கவர்ந்த வில்லன் நடிகர் - ஜானி ( ஏழாம் அறிவு )
 கவர்ந்த இசையமைப்பாளர் -ஜி.வி.பிரகாஸ்குமார்  (ஆடுகளம் , மயக்கம் என்ன)
 கவர்ந்த பின்னணி இசை - ஆரண்ய காண்டம் ( யுவன் ஷங்கர் ராஜா  )
 கவர்ந்த ஆல்பம் - எங்கேயும் காதல் ( ஹாரிஸ் ஜெயராஜ் )
 கவர்ந்த பாடல் - எம்மா எம்மா ( ஏழாம் அறிவு )
 கவர்ந்த பாடகர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் ( எம்மா எம்மா )
 கவர்ந்த பாடலாசிரியர் - பா.விஜய்  ( இன்னும் என்ன தோழா )
 கவர்ந்த ஒளிப்பதிவாளர் - ராம்ஜி ( மயக்கம் என்ன )
 கவர்ந்த இயக்குனர் - தியாகராஜன் குமாரராஜா ( ஆரண்ய காண்டம் )
 கவர்ந்த புதுமுகம் - இனியா ( வாகை சூட வா )


வசூல் ராஜாக்கள் 

 அஜித் ( மங்காத்தா )
 விஜய் ( வேலாயுதம் )
 சூர்யா ( ஏழாம் அறிவு )


ஏமாற்றங்கள் 

 நடு நிசி நாய்கள்
 அவன் இவன் - காண்க அவன்-இவன் அழுத்தமில்லாதவன்
 ராஜபாட்டை - காண்க ராஜபாட்டை - ரெண்டுங்கெட்டான் 













என்றென்றும் ராஜா ...

                              
சென்னை வானிலை மையம் இன்று " தானே " புயல் கரையை கடப்பதால் சென்னை உட்பட கடலோர பகுதிகளில் பெரும் புயலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று அறிவித்திருக்கிறது , ஆனால் அதற்கு முன்பே  நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் புயல் இல்லாத இசைஞானியின் இசை வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் இன்பமாக நனைந்தோம் ...

வார இறுதியில் வைக்காமல் வேலை நாளில் நிகழ்ச்சியை வைத்திருக்கிறார்களே கூட்டம் குறைவாக இருக்குமோ என்ற எள்ளளவு சந்தேகத்தை தவிடு பொடியாக்கியது வானை பிளந்த ரசிகர்களின் கூட்டம் ... தாமதமாக ஏழு மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி  முடிவதற்கு கிட்டத்தட்ட பனிரெண்டு மணி ஆகிவிட்டாலும்  இந்த பாட்டு இல்லையே  , அந்த பாட்டு இல்லையே என்ற ஏக்கத்துடனேயே ரசிகர்களை கலைய வைத்தது இசைஞானியின் இசை ...

பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய ஜெயா டி.வி யின் "என்றென்றும் ராஜா" லைவ் இன் கான்சர்ட்டின் சில முக்கிய அம்சங்கள் இதோ :
                     
*** குரு வணக்கத்துடன் துவங்கிய கான்சர்ட் இசைஞானியின் குரலில்
" ஜனனி ஜனனி " யில் ஆரம்பித்து எஸ்.பி.பி. யின் குரலில் " இளமை இதோ இதோ " வில் முடிவடைந்தது ***

                 
*** " அம்மா என்றழைக்காத " பாடலை பாட கே.ஜே.யேசுதாசை இசைஞானி அழைத்தவுடன் கூட்டத்தில் ஒரே கரகோஷம் ... " என் இனிய", "பூவே செம்பூவே " போன்ற மெலடி பாடல்களை பாடிய கே.ஜே முடிவில் " வச்ச பார்வை " என்ற குத்து பாடலையும் பாடி ரசிகர்களை அசர வைத்தார் ... " பூவே " பாடலில் இசை முடிவதற்கு முன்னரே இவர் பாட ஆரம்பித்து விட்டதால் அரங்கத்தில் பெரிய சலசலப்பு , பின் இருமுறை அவர் பாடிய பிறகே சலசலப்பு அடங்கியது ... பாடகரையும் , பாடல் வரிகளையும் தாண்டி இசைஞானியின் பின்னணி இசையின் மேல்  ரசிகர்கள் வைத்திருக்கும் வெறித்தனமான பக்திக்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம் ***

                       
*** இவரை நேரே பார்க்காதவர்கள் குரலை மட்டும் கேட்டால் நிச்சயம் இருபத்தைந்து வயதிற்கு மேல் சொல்ல மாட்டார்கள் ... அறுபத்தைந்தை தாண்டியும் குரலை அதே இனிமையில் வைத்திருக்கும் எஸ்.பி.பி யே ஷோவின் ஹைலைட் ... கான்சர்டில் அதிக பாடல்கள் பாடியவரும் இவரே...
 " நானாக நானில்லை " யில் ஆரம்பித்து " மடை திறந்து " , " கண்மணியே காதல் " , " சுந்தரி கண்ணால் " என்று மெலடிகளால் நம்மை கட்டிப் போட்டவர் " இளமை இதோ " வில் முடிக்கும் போது ஆட வைத்துவிட்டார் ... பாடல்களுக்கு நடுவில் எஸ்.பி.பி யின் இம்ப்ரோவைசெஷன் அருமை ***

*** இசைஞானி தன் குரலில் " ஜனனி " , " நான் தேடும் " , " ஒரு ஜீவன் " , அவரே முதன் முதலில் எழுதிய " இதயம் ஒரு கோவில் " என்று பாடல்கள் பாடியதோடல்லாமல் நடு நடுவே  சிம்பொனி , பாடல் கம்போசிங்கில் பாரதிராஜா எப்படி பேசுவார் என்றெல்லாம் சுவைபட விசயங்களை சொல்லி ரசிக்க வைத்தார் ... தொகுத்து வழங்க வேண்டிய பிரகாஷ்ராஜும் ஒரு பார்வையாளராக இதை ஓரமாக நின்று ரசித்துக்கொண்டிருந்தார் ***


*** உலகநாயகனால் நேரில் வர முடியாததால் அவர் பேசியதை வீடியோவில் காட்டினார்கள் ... கமல் பாடிய " சுந்தரி நீயும் " பாடலை ஹரிச்சரனும் , "நினைவோ ஒரு பறவை " , " ராஜா கைய வச்சா " பாடல்களை யுவனும் பாடினார்கள் ... யுவன் கமலை போல மிமிக்ரி செய்து எல்லோரையும் சிரிக்க வைத்தார் ***

*** தன் வசீகரிக்கும் குரலில் " சின்ன கண்ணன் " பாடலை பாடி முடித்தவுடன் பால முரளி கிருஷ்ணாவும் இசைஞானியும் இறுக தழுவிக்கொண்ட காட்சி உருக்கமாக இருந்தது ... பாடலை கேட்கும் போது ஜேம்ஸ் வசந்தனின் "கண்கள் இரண்டால் " பாடல் நினைவிற்கு வந்தது ***

*** சின்ன குயில் சித்ரா " புத்தம் புது காலை " , " பருவமே " , " சுந்தரி " உட்பட பல பாடல்களை பாடி உருக வைத்தார் ***

*** ஹரிஹரன் " நீ பார்த்த " பார்வையில் ராகத்தை மாற்றினாலும் குரலில் கிறங்கடித்தார் ... " என் மன வானில் " பாடலை சுருதி பிசகாமல் பாடினாலும் தமிழ் உச்சரிப்புகளை கொஞ்சம் கொலை செய்தார் ***

*** தீபன் சக்ரவர்த்தி - உமா ரமணன் குரலில் " பூங்கதவே " , கார்த்திக் - நான்சி  குரலில் " ஏதோ மோகம்  " , ஸ்ரீராம் குரலில் " இளங்காத்து வீசுதே " , பவதாரிணி குரலில் " கும் சும் " ஹிந்தி பாடல் இவையெல்லாம் சொக்க வைத்த மற்ற பாடல்கள் ***

                             
*** சிம்பொனி பின்னணியில் இசைஞானி பாடிய " இதயம் போகுதே " இரண்டே வரிகளானாலும் இதயத்தை வருடியது ...
" பா " , " அழகர் சாமியின் குதிரை " போன்ற படங்களின் பின்னணி இசையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன ***

*** " சீனி கம் " , " பா " போன்ற படங்களின் இயக்குனர் பால்கி இந்தியாவிலேயே பின்னணி இசையில் உண்மையான இசை இயக்குனர் இசைஞானி ஒருவர் தான் என்று புகழாரம் சூட்டியதோடு மட்டுமல்லாமல் இவர் பின்னணி இசையிலிருந்து தழுவி பல பாடல்களுக்கு இசையமைக்கலாம் என இளம் இசையமைப்பாளர்களுக்கு டிப்சும் கொடுத்தார்...இதை ஏற்கனவே பல இசையமைப்பாளர்கள் செய்து கொண்டு தானிருக்கிறார்கள் ***

***ஆறு வருடங்களுக்கு முன் இதே அரங்கத்தில் நடந்த இசைஞானியின் முதல் கான்சர்டில் இடம்பிடித்த மனோ , சாதனா சர்கம் , ஸ்ரேயா கோசல் போன்றோர் இதில் மிஸ்ஸிங் ... அதே போல் சினிமா பாடல்கள் தவிர இசைஞானியின் கீதாஞ்சலி உட்பட மற்ற ஆல்பங்களிலிருந்து  பாடல்கள் இடம் பெறாததும் சற்று ஏமாற்றமே ***

*** கமல் தன் வீடியோ உரையில் குறிப்பிட்டது போல இசைஞானி தன்னுடைய சோகத்தை மறைத்து தன் இசையின் மூலம் மற்றவர்களின் சோகத்தை குறைக்கிறார் என்பது தன்னுடைய துணைவியார் ஜீவா இறந்து சில காலமே ஆன நிலையிலும் தன் இசை வெள்ளத்தால் எல்லோரையும் நேற்று கவலைகளை மறக்க செய்த இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் புலனாகிறது ***


26 December 2011

ஹை ஹை ஹைக்கூ ...!




தேர்தல் 

ஐந்தாண்டுக்கு
ஒரு முறை ஆடும்
மங்காத்தா ...!

ஏழையின் கைகளில்
காந்தியை
காணும் நாள் ...!

ஐந்து வருட
அடிமை சாசனத்தில்
கைநாட்டு இடும் நாள் ...!

கள்ள காதல் 

அவளை பிடித்தது
அவளுக்கும் தான்
கணவனுக்கு மட்டும் ஏனோ ...!

வழி மேல்
விழி வைத்தேன் அவர்
வந்து விடுவாரோ என்று ...!

மரணம் 

நினைத்தாலும்
நிறுத்த முடியாத
நிகழ்வு ...!

நம் மேல்
வைத்த அன்பை
அடையாளம் காட்டும் உலகிற்கு ...!

துன்பத்திலிருந்து
விடுதலை பெற
தானாய் வந்த துருப்புசீட்டு ...!

குழந்தை 

நாம் காண முடியாத
நம் குழந்தை பருவத்தை
கண் முன் காட்டும் காணொளி ...!

முத்தம் 

காமமோ காதலோ
கடமையை செய்யும்
பரிமாற்றம் ...!

தற்கொலை 

கோழைகள்
எடுக்கும்
துணிவான முடிவு ...!

24 December 2011

ராஜபாட்டை - ரெண்டுங்கெட்டான் ...

                     
  கமல் பொதுவாக ஒரு சீரியஸ் படத்திற்கு பிறகு காமெடி படம் பண்ணுவார் , அந்த பாணியில் ஜாலியாக ஒரு படம் செய்யலாம் என்ற எண்ணத்தில் விக்ரமும், சுசீந்திரனும் கை கோர்த்திருக்கும் படம் " ராஜபாட்டை " ... காமெடி படமானாலும் அதையும் சீரியசாக திட்டமிட்டு எடுக்க வேண்டும் என்பதை ராஜபாட்டையில் ஏனோ கோட்டை விட்டிருக்கிறார்கள் ...

வில்லனாக வேண்டுமென்ற கனவோடு சினிமாவில் பைட்டராக வலம் வந்து கொண்டிருக்கும் அனல் முருகன் ( விக்ரம் ), அனாதை ஆஸ்ரம இடத்திற்காக தட்சிணா மூர்த்தியை ( கே.விஸ்வநாத் ) துரத்தும் நில மாபியா கும்பலிடமிருந்து அவரை காப்பாற்றுகிறார் ... கடைசியில் நில அபகரிப்பு மூலம் ஊரையே அடித்து உலையில் போடும் அரசியல்வாதி அக்காவிடமிருந்து விஸ்வநாத்தையும் , ஆஸ்ரமத்தையும் விக்ரம் மீட்டாரா என்பதே கதை ...


தெய்வதிருமகளில் நடித்தவரா இவர் என ஆச்சர்யப்பட வைக்கும் உடற்கட்டுடன் இருக்கிறார் விக்ரம் ... க்ளோஸ் அப் காட்சிகளில் வயது தெரிந்தாலும் கெட்அப்பில் மறைக்கிறார் ... முதல் காட்சியிலேயே காமெடி பைட் மூலம் அறிமுகமாகும் விக்ரம் பிறகு முப்பது , நாப்பது அடியாட்களை சீரியசாக அடிக்கும் போது கூட நமக்கு சிரிப்பு வருவது கேரக்டரைஷேஷன் கோளாறு ...

படத்தின் முதல் பாதியை நகர்த்தி செல்லும் இரண்டாவது ஹீரோ கே.விஸ்வநாத் ... கமலுக்கே நடிப்பு சொல்லி தந்தவர் என்பதை நிரூபிக்கிறார். இவர் கொடுக்கும் காதல் டிப்ஸ் எல்லாம் அதர பழசு என்றாலும் இவர் சொல்லும் போது அழகாக இருக்கிறது ... விக்ரமுக்கும் , இவருக்கும் இடையேயான நட்பில் அழுத்தம் இல்லாததால் வா , போ என்று விக்ரம் இவரை அழைக்கும் போது நெருடுகிறது ...


ஹீரோயினாக நடித்திருக்கும் தீக்ஷா சேத் உயரமாக இருக்கிறார் , முகத்தில் ஒரு பொலிவே இல்லை ... டூயட் தவிர படத்தில் அவருக்கு பெரிதாக வேலையும் இல்லை ... சொல்லப்போனால் ஹீரோயினை விட வில்லி அக்காவாக நடித்திருப்பவர்  முகத்தில் தெரிகிறது பொலிவு ... வில்லிக்கு பக்கபலமான வாப்பா கேரக்டரில் பிரதீப் பொருத்தமாக இருக்கிறார், விக்ரம் பல கெட்டப்களில் வந்து இவரிடம் குறுக்கு விசாரணை செய்யும் காட்சிகள் கல கல ...

" அசிங்கத்த பாத்தா அவார்ட் வாங்க முடியுமாப்பா " , " நான் கோ டைரக்டர் , கோ படத்தோட டைரக்டர் இல்ல " என்று சொல்லும் தம்பி ராமையாவின் காமெடியும் , விக்ரமிடம் பயந்து நடுங்கும் அருள்தாசின் காமெடியும் நம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் சமாச்சாரங்கள் ...

யுவனின் இசையில் " பொடி பையன் " , " பனியே " பாடல்கள் முனுமுனுக்க வைக்கின்றன ...யுவன் , மதி , ராஜீவன் இப்படி நிறைய டெக்னீஷியன்களின் உழைப்பும் வீணடிக்கப்பட்டிருக்கிறது ... பாஸ்கர் சக்தியின் வசனங்களும் பெரிதாக உதவவில்லை ...

       
விக்ரம்-விஸ்வநாத் நடிப்பு, விக்ரம் சாங் சீக்குவன்ஸ் யோசிக்கும் போது பைட்டர்கள் வந்தவுடன் சாங்கையே அவாய்ட் செய்வது  , பதிவாளர் அலுவகத்தில் புகுந்து புத்திசாலித்தனமாக இட பத்திர பதிவை நிறுத்துவது, வேகமாக செல்லும் இரண்டாம் பாதி , சில இடங்களில் தேவையில்லாத பைட்களை தவிர்த்திருப்பது போன்றவை படத்தின் ப்ளஸ் ...

விக்ரமின் கேரக்டரைஷேஷன் , இம்ப்ரெஸ் செய்யாத கதை , திரைக்கதை , என்ன தான் பைட்டராக இருந்தாலும் ஊரையே ஆட்டிப்படைக்கும் அரசியல்வாதி அனுப்பும் ஆட்களை கொட்டாவி விட வைக்கும் அளவுக்கு விக்ரம் அடித்துக் கொண்டேயிருப்பது , சப்பென்று முடிந்து விடும் க்ளைமாக்ஸ்  , லட்டு பிகர்களுடன் விக்ரம் ஆடியும் வீணடிக்கப்பட்ட " லட்டு லட்டு " பாடல் இவையெல்லாம் மைனஸ் ... மசாலா படம் எடுப்பது எவ்வளவு சீரியசான பிசினஸ் என்று இப்போது இயக்குனருக்கு புரிந்திருக்கும்...

இணை இயக்குனர் சீனுவிடம் இருந்து நடப்பு நிகழ்வான நில அபகரிப்பை வைத்து எழுதப்பட்ட கதை ! யை வைத்து முழு நீள ஆக்சன் மசாலாவாக எடுக்கலாமா ? அல்லது காமெடியாக எடுக்கலாமா ? என்ற குழப்பத்திலேயே படம் நெடுக சுசீந்திரன் இயக்கியிருப்பதால் ரசிகர்களுக்கு ராஜபாட்டை  ஒரு ரெண்டுங்கெட்டான் ...

ஸ்கோர் கார்ட் - 38 

22 December 2011

இந்த வருடத்தில் நான் - தொடர் பதிவு ...

            

படித்ததில் பிடித்தது :  ஜெனிபர் ( மூலம் : சிட்னி ஷெல்டன் )
                                                தமிழில் (  ரா.கி.ரங்கராஜன் )
" மக்கள் என் பக்கம் " படத்தை இதிலிருந்து தான் சுட்டிருக்கிறார்கள் என்பது நாவலை படிக்கும் போது தான் புரிந்தது ...

வாங்கிய பொருள்     :  கணினி 

                 
சென்ற இடம் : வால் பாறை , அதரப்பள்ளி நீர்வீழ்ச்சி , வைத்தீஸ்வரன் கோயில் திருவாரூர் உட்பட சில சிவ தளங்கள் , பூம்புகார் , தாராசுரம் ( என்ன அருமையான கட்டட வேலைப்பாடுகள் ! ) 

ரசித்த படம்    : ஆரண்ய காண்டம் , வாகை சூட வா ( இந்த படத்திற்கு விமர்சனம் எழுத முடியாமல் போனதை நினைத்து வருந்தியிருக்கிறேன் ) ...

உருகிய படம் : எங்கேயும் எப்போதும் 

சிரித்த படம்  : முனி 2 காஞ்சனா 

பிடித்த பாடல் :  எம்மா எம்மா ( ஏழாம் அறிவு ) 
                                   காதல் என் ( மயக்கம் என்ன )
                                   மழை வரும் ( வெப்பம் )

                        

மிகப்பெரிய சந்தோசம் : 50 வது பதிவிலேயே மூன்று லட்சம் ஹிட்ஸ்களை தாண்டியது ... 

புதிய நண்பர்கள் : மூன்றாம் கோணம் , நுண்மதி , ஹேமா உட்பட நிறைய பதிவுலக நண்பர்கள் ... 

சாதனை : லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2011 இல் என்னுடைய கட்டுரை வில்லனாகிய ஹீரோக்கள்... இடம்பெற்றதும் , அதை தினமணி நாளிதழ் குறிப்பிட்டு பாராட்டியதும் , மூன்றாம் கோணம் பன்ச் டயலாக் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்ததும் ... 

வருத்தம்    : இசைஞானியின் மனைவி ஜீவா அவர்களின் மரணம் ...

ஆச்சர்யம் : மயிலன் திடீரென என்னை தொடர் பதிவு போட அழைத்தது ...

இந்த தொடர் பதிவை தொடர நான் அழைக்கும் நண்பர்கள் 

1 .நுண்மதி
2 .ஹேமா
3 .ராஜராஜேஸ்வரி
4. ஷைலஜா 



17 December 2011

மௌனகுரு - பேசப்படுவான் ...

   
    இரண்டு படங்களே நடித்த ஹீரோ , புதுமுக இயக்குனர் , கவனிக்க வைத்த ட்ரெய்ளர் தவிர வேறெந்த பெரிய பில்ட் அப்பும் இல்லாமல் தலைப்பிற்கேற்ப மெளனமாக ரிலீஸ் ஆகியிருக்கும் படம் " மௌனகுரு " ... மெதுவாக ஆரம்பித்து போக போக விரைவாக படத்தோடு நம்மை ஒன்ற வைக்கும் திரைக்கதையே படத்தின் பலம் ...

சின்ன அடிதடியால் கல்லூரியில் டி.சி கொடுக்கப்பட்டு மதுரையில் இருந்து அம்மாவுடன் சென்னைக்கு வந்து அண்ணன் வீட்டில் தங்குகிறார் கருணாகரன் ( அருள்நிதி ) ... காதல் திருமணம் செய்துகொண்ட அண்ணனின் உதவியுடன் வேறு கல்லூரியில் சேர்ந்தாலும் அவருடன் தங்குவதற்கு வழியின்றி விடுதியில் தங்குகிறார் ... இதற்கு நடுவில் நான்கு போலிஸ் அதிகாரிகளின் குற்றத்தை மறைக்க பலிகடா ஆக்கப்படுகிறார் ... அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே மீதி கதை ...

                         
அருள்நிதிக்கு நிச்சயம் இது பெயர் சொல்லும் படம் ... படம் நெடுக சாதாரணமாக இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் மிரட்டுகிறார் ... அண்ணன் வீட்டில் தங்குவது அண்ணிக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் நாசூக்காக ஒதுங்குவதிலும் , தனக்கு யாருமே இல்லை என்று சொல்லி இனியாவிடம் வருத்தப்படுவதிலும் , சக மாணவன் வம்பிற்கு இழுக்கும் போது மிரட்டுவதிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் ....ஆனாலும் பட ஆரம்பத்திலிருந்தே இவர் முகத்தை உம்மென்று வைத்திருப்பது ஏனென்று தெரியவில்லை , காதல் காட்சிகளிலாவது கொஞ்சம் சிரித்திருக்கலாம் .


ஹீரோவை போல இனியாவின் கேரக்டர் தெளிவாக செதுக்கப்படாவிட்டாலும்  தன் சிம்பிளான நடிப்பால் அதை சமன் செய்கிறார் ... இவர் எந்த காரணமுமில்லாமல் அருள்நிதியின் மேல் காதல் வயப்படுவது வழக்கமான தமிழ் சினிமா ... படத்தின் வில்லன் மாரிமுத்துவாக ஜான் விஜய் தன்னுடைய அலட்டலை அடைப்பில் போட்டு விட்டு அளவாக , தேவைக்கேற்ப நடித்திருக்கிறார் ...

அருள்நிதியின் அம்மாவாக வருபவர் படம் நெடுக இயல்பாக நடித்திருந்தாலும், தன் மகனை மனநிலை சரியில்லாதவன் என்று டாக்டர் விளக்கும் காட்சியில் ஏதோ புடவை விளம்பரத்தை வேடிக்கை பார்ப்பது போல முகத்தை சாதாரணமாக வைத்திருக்காமல் கொஞ்சம் சோகத்தை காட்டியிருக்கலாம் ...

                     
அருள்நிதியின் அண்ணன் , அண்ணி , கிருஷ்ணமூர்த்தி உட்பட மற்ற இரு போலிஸ் அதிகாரிகள் , கர்ப்பிணி பெண்ணாக வந்து இன்வெஸ்டிகேட் செய்யும் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் உமா ரியாஸ் , விபச்சாரியாக வரும் பெண் , கல்லூரி முதல்வராக  வரும் பாதிரியார் , அருள்நிதியுடன் சண்டையிடும் சக மாணவன் , காலேஜ் வார்டன் , மனநிலை சரியில்லாதவராக நடித்திருப்பவர் இப்படி நிறைய பேர் மைனா , எங்கேயும் எப்போதும் வரிசையில் படம் பார்க்கும் போதே மனதில் பதிகிறார்கள் ...

படத்தில் பாடல்கள் பெரிதாக இல்லையென்றாலும் தமனின் பின்னணி இசை பிரமாதம் ... மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு தேவைக்கேற்ப வெளிச்சத்தை கொடுத்து படத்தின் இயல்பு நிலையை தக்க வைக்கிறது ... தரணியின் பட்டறையிலிருந்து வந்திருந்தாலும் குருவை போல நாலு பாட்டு, ஐந்து பைட் என கமெர்சியல் ரூட்டில் பயணிக்காமல் முதல் படத்திலேயே சஸ்பென்ஸ் பாணி திரைக்கதையை வைத்து மௌன குருவை தந்ததற்காக சாந்தகுமாருக்கு ஒரு சல்யூட் வைக்கலாம் ...

                 
வாய் பேச முடியாதவர்களுடன் உடல்மொழியில் அருள்நிதி பேசுவதற்கு சொல்லப்படும் லாஜிக் ,பாதிரியாரின்  பையன் தன் தரப்பு நியாயத்தை சொல்லும் காட்சி , ஹீரோயிசத்தை அளவாக பயன்படுத்திய விதம் , சின்ன சின்ன டிவிஷ்ட்களுடன் படத்தை நகர்த்திய பாங்கு இவற்றிற்காக இயக்குனரை பாராட்டலாம் ...

தோற்றத்தில் சாதரணமாக இருந்தாலும் நடவடிக்கைகளில் அசாதாரணமாக இருக்கும் ஹீரோ , ஹீரோ - ஹீரோயின் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் , காணாமல் போன பணம் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையையும் காட்டாமல் கிளைமாக்சில் மட்டும் அதை புகுத்தும் சினிமாத்தனம் , மருத்துவ கல்லூரி மாணவியாக வரும் இனியா அருள்நிதிக்காக வருத்தப்படுவதை தவிர உருப்படியாக எதையுமே செய்யாதது இப்படி சில குறைகள் இருப்பினும் , சமீப காலமாக எதிர்பார்ப்போடு வந்து ஏமாற்றிய படங்களுக்கு மத்தியில் வெறும் பொழுதுபோக்கை மட்டும் நம்பி தியேட்டருக்கு வருபவர்களுக்கு பிடிக்காமல் போனாலும் , வித்தியாசமான திரைக்கதை யுக்தியால் புது அனுபவத்தை விரும்பும் ரசிகர்களுக்கு மத்தியில் நிச்சயம் மௌனகுரு - பேசப்படுவான் ...

ஸ்கோர் கார்ட் : 43 

10 December 2011

ஒஸ்தி - வொர்ஸ்ட்தி ரீ மேக் ...

              
   தபங் படத்தை பார்த்த போதே அதை தமிழில் ரீமேக் செய்தால் சல்மான் நடித்த ரோலில் சூர்யா அல்லது விக்ரம் யாராவது நடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனாலும் எதிர்பாரா விதமாக எஸ்.டி.ஆர் ( எம்.ஜி.ஆர் , என்.டி.ஆர் ரசிகர்கள் தப்பா எடுத்துக்காதீங்க , இப்படி சொல்லலேன்னா சிம்பு கோவுச்சுப்பார் ) உடன் தரணி கை கோர்க்கவே கில்லி போல பெரிய வெற்றியை கொடுக்காமல் போனாலும் நிச்சயம் ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்பினேன் ...

  கடைசியில், படத்தை தரணி இயக்கினாரா அல்லது லொள்ளு சபா டீமிடம் கொடுத்து தபங் படத்தை கிண்டல் செய்து எடுக்க சொன்னாரா என்று சந்தேகப்படும் அளவுக்கு அவ்வளவு சொதப்பல்ஸ்... ரேவதியின் முதல் கணவருக்கு பிறந்தவர் சிம்பு , இரண்டாவது கணவர் நாசருக்கு பிறந்தவர் ஜித்தன் ரமேஷ் ...தன் வளர்ப்பு தந்தை,தம்பி இருவரையும் சிறு வயதிலிருந்தே ஏற்க மறுக்கிறார் சிம்பு ...

   பெரியவனானவுடன் அடாவடி இன்ஸ்பெக்டராகும் சிம்பு அரசியல்வாதி பாக்ஸர் டேனியலின் ( சோனு சூத் ) அடியாட்களிடம் இருந்து தொகுதி மக்களிடம் ஓட்டுக்கு விநியோகிப்பதற்க்காக கொண்டு செல்லும் ரூபாய் 75 லட்சத்தை அடித்து புடுங்கி கொள்கிறார் ... பணத்தை கேட்கும் வில்லனுடன் மோதல் , பானை செய்யும் ரிச்சாவுடன் காதல் , அம்மா இறந்து விடவே அப்பா - தம்பியுடன் ஊடல் , நடுநடுவே பாடல் என போகிறது படம் ...

                             
    இது போன்ற மசாலா படங்களின் பலமே ஹீரோ தான் ... மாஸ் அப்பீல் சிம்புவிற்கு இருந்தாலும் அவருடைய பொருந்தாத திருநெல்வேலி பேச்சு ( இதுல பஞ்ச் வேற ),  இருட்டில் கூட கூலிங் க்ளாஸ் போடும் அவருடைய ஸ்டைல் , ஆறடி இருக்கும் வில்லனை எக்கி எக்கி பார்த்து எகத்தாளம் செய்து விட்டு ஒவ்வொரு தடவையும் சுட்டி டி.வி குழந்தை போல அவர் போடும் ஆட்டம் , இதற்க்கெல்லாம் மேலே பேன்சி டிரஸ் காம்படீஷனில் வரும் சிறுவன் போல செயற்கை விறைப்புடன் அவர் போட்டுக் கொண்டு திரியும் போலீஸ் யுனிபார்ம் இவையெல்லாம்  ஹீரோயிஷமாக இருந்திருக்க வேண்டிய எல்லாவற்றையுமே ஜீரோயிஷமாக மாற்றியது தான் கொடுமை ... சிம்பு சல்மான் கானை காப்பியடித்ததற்கு பதில் தன் சொந்த ஸ்டைலான விரல் வித்ததையையே செய்திருக்கலாம் ...

   சிம்பு  ரிச்சாவுடன் பேசும் போதெல்லாம் காவல்துறை என்று சொல்லி கலங்கப்படுத்தினாலும் "உன்ன பாத்து நான் வியக்கேன்" என்று சொல்லும் வசனங்கள் மட்டும் ஒரே ஆறுதல் ... வில்லன் தன்னை கொல்ல ஏற்பாடு செய்தவனை வில்லன் கண் முன்னாலேயே கொல்வது , மந்திரி விஜயகுமாரை வில்லனுக்கு எதிராக திருப்பி விடுவது என சில இடங்களில் அட போட வைக்கிறார் ...
                         
   பானை செய்யும் பெண்ணாக வரும் ரிச்சாவுக்கு பேஷன் ஷோவில் வருவது போல இடுப்பை காட்டிக்கொண்டே நடப்பது , சிம்புவுடன் டூயட் பாடுவது தவிர வேறெந்த வேலையுமில்லை ... படத்தில் இவரின் பெயர் நெடுவாளியாம் ... நட்டுவாக்கிளி கேள்விப்பட்டிருக்கேன்  , அதென்ன நெடுவாளி ?... தபங்கில் உற்சாகமாக நடித்திருந்த சோனு சூத்தின் முகத்தில் ஏனோ ஒரு கலையே இல்லை ... ஒரு வேலை முடிவு முன்னாடியே தெரிஞ்சிருச்சோ ...?

   ஜித்தன் ரமேஷுக்கு யாராவது நடிக்க சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் ... எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் எப்படி தான் அவரால் நடிக்க முடிகிறதோ ...? நாசர் , விஜயகுமார் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள் ... படத்தின் உருப்படியான விஷயம் சந்தானத்தின் காமெடியும் , தமனின் இசையில் பாடல்களும் ...


   சந்தானம் தம்பி ராமையாவிடம் " அதான் அவார்ட் வாங்கிட்டேள்ள , அப்புறம் என்ன ஓவர் ஆக்டிங் " , மயில்சாமியிடம் " கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன் " , குட்லக் லட்சுமணனிடம் " கோவா பிரேம்ஜி மாதிரியே இருக்க " என சகட்டுமேனிக்கு கலாய்த்து தன் டைமிங் காமெடியால் படத்திற்கு உயிர்  கொடுக்கிறார் ...

                 
   "கலசலா " பாட்டுக்கு டி.ஆரையும் , எல்.ஆர். ஈஸ்வரியையும் பாட வைத்த காம்பினேஷன் சூப்பர் ... தமனின் இசையில் ரொம்ப நாள் கழிச்சு நல்ல குத்து ... இந்த பாட்டுக்கு நல்ல சதைப்பிடிப்பான யாரையாவது ஆட விட்டிருக்கலாம் ... நோயாளி போல இருக்கும் ஒல்லியான மல்லிகா ஒட்டவேயில்லை ...

   வில்லனின் அடியாளாக வருபவர் செய்யும் காமெடி, தம்பியின் மணவறையில் அமர்ந்து சிம்பு ரிச்சாவிற்கு தாலி கட்டுவது,அண்ணன் தம்பி சண்டையை வில்லன் பயன்படுத்தி கொள்வது இப்படி சிலவற்றை ப்ளஸ்ஸாக சொல்லலாம் ... ஹீரோ - வில்லன் மோதலை வைத்து சுவாரசியமாக பின்னப்படும் காட்சிகளே இது மாதிரியான படங்களுக்கு முதுகெலும்பு....


   தில் , தூள் இரண்டிலும் இதை தரணி நன்றாக கையாண்டிருப்பார் ... இதில் வில்லனின் பணத்தை அடித்து விடும் சிம்பு அதை அம்மாவிடம் கொடுத்து பீரோவில் பூட்டி வைத்ததை தவிர வேறெதையும் உருப்படியாக செய்யவில்லை ... சின்ன வயசு சிம்புவாக வரும் சிறுவன் , ஜித்தன் ரமேஸ் , ஹீரோயின் அப்பாவாக வரும் கணேஷ் இப்படி பொருந்தாத காஸ்டிங் என்றும்  நிறைய ஓட்டைகள் ...

                 
    இதே கதை தான் தபங் என்றாலும் சல்மான் அதை தன் தோளில் சுமந்திருப்பார் , அதோடு சோனாக்ஷி , சோனு இப்படி நிறைய ப்ளஸ் அதனால் தான் முப்பது கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 200 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்தது ...இந்த படம் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாகி விட்டது ...

    ஒரு வேலை " தபங் " படத்தோடு இதை கம்பேர் செய்வதால் தான் எனக்கு படம் பிடிக்கவில்லையோ என்ற எனது சின்ன சந்தேகத்தை இல்லவேயில்லை என்று சொல்லாமல் சொல்வது போல் படம் முடிவதற்கு முன்னாலேயே எழுந்து ஓடிய ரசிகர்கள் தீர்த்து வைத்தார்கள் ... வேறெந்த பெரிய பட ரிலீசும்  இல்லாததால் பி ,சி சென்டர்களில் படம் ஓடலாம் , மற்றபடி  " கில்லி " மூலம் பெஸ்ட் ரீமேக் கொடுத்த தரணியின் வொர்ஸ்ட் ரீமேக் தான் " ஒஸ்தி " ...

ஸ்கோர் கார்ட் : 36 

7 December 2011

இளைய தலைமுறை இயக்குனர்கள் ...

                   
    சினிமா உலகில் எத்தனையோ விதமான இயக்குனர்கள் இருந்தாலும் , அவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் ... வணிக ரீதியான வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழக்கமான பாணியில் இருந்து சற்றும் மாறுபடாமல் வசூலை நோக்கியே செல்லும் பார்முலா இயக்குனர்கள் ஒரு வகை , வெற்றி தோல்வியை மட்டும் கணக்கில் கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் ஏதாவதொரு பரீட்சார்த்த முயற்சிகள் மூலம் புது அனுபவத்தை கொடுக்கும் டிரென்ட் செட்டர் இயக்குனர்கள் மற்றொரு வகை ...

   இதில் இரண்டாவது வகை இயக்குனர்களே அதிகம் இளைய தலைமுறையினரை கவர்பவர்களாக இருக்கிறார்கள் ... அந்த வரிசையில் கடந்த பத்து வருடங்களில் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் மிக முக்கியமான இருவர் செல்வராகவன் மற்றும் கௌதம்மேனன்...இவர்கள் இருவரின் பின்னணியும் மாறுபட்டிருந்தாலும் இவர்களின் படங்கள் இளைஞர்களை கவர்வதில் மாறுபடவில்லை ...இருவரும் அதிகம் பேசுவதில்லை , ஆனால் இவர்களின் படங்கள் பேசுகின்றன...

                                                     
     செல்வராகவனின்  முதல் படம் "துள்ளுவதோ இளமை" விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டாலும் ரசிகர்களால் வசூலை குவித்தது ...நடுபக்கத்தில் ஆபாச படத்தை வெளியிட்டு விற்பனையை அதிகமாக்கிய நம்பர் ஓன் வார இதழ் கூட இப்படத்தை மோசமாக விமர்சித்தது ...ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அப்படத்தில் ஒரு உண்மை இருந்தது ...செல்வாவிடம் தைரியமும் இருந்தது...

   இந்த படம் முழுக்க முழுக்க செல்வராகவனின் உழைப்பாக இருந்தாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கஸ்தூரி ராஜாவின் பெயர் இயக்குனராக இடம்பெற்றது ... " காதல் கொண்டேன் " காதலை மையப்படுத்தினாலும் சிறு வயதில் ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் மன ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்பை சொல்ல தவறவில்லை...
   
   " 7 ஜி " ஒரு காதல் காவியம் ...படத்தில் ரவிகிருஷ்ணாவும் , சோனியாவும் தெரியவில்லை ...கதிரும் , அனிதாவுமே மனதில் நின்றதே இயக்குனரின் வெற்றி ...காதல் சம்பந்தப்பட்ட உறவுகளையும் ,உணர்வுகளையும் அழுத்தமாக பதிய வைப்பதில் தான் வல்லவர் என்பதை செல்வராகவன் நிரூபித்த படம் 7 ஜி...

                                   
   " புதுப்பேட்டை " வன்முறையின் புது கோணம் ... ரௌடிகள் உருவாவது உடல் பலத்தில்  அல்ல ... சூழ்நிலையும் , மன உளைச்சலுமே அதற்கு முக்கிய காரணம் என்பதை காட்சிகளில் தெளிவாக உணர்த்தி இருப்பார்...எதையுமே விசுவலாக சொல்லும் திறமை இவரிடம் அசாத்தியமாக இருக்கிறது ...இவரின் தெலுகு ரீமேக் படமான "யாரடி நீ மோகினி"  வெற்றி பெற்றதோடு மெல்லிய உணர்வுகளை மிகையில்லாமல் பதியவும் செய்தது  ...    

   "ஆயிரத்தில் ஒருவன் " பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சி....முதல் பாதி காட்சிகள் ஆங்கில படங்களுக்கு இணையாக இருந்தன. இரண்டாவது பாதியில் படம் தடம் மாறியிருந்தாலும் காட்சிகள் கண்ணில் நிற்கின்றன ...படம் குடும்பத்தோடு சென்றவர்களை முகம் சுளிக்க வைத்ததும் உண்மை ...எனினும் அப்படம் ஒரு மைல்கல் ...

                 
    தனுஷிற்கு இப்போது ஒரு ரசிகர் வட்டமும் , பிசினஷும் வந்து விட்ட பிறகு கூட " மயக்கம் என்ன" வில் அவரை கார்த்திக்காக பார்க்க வைத்ததே செல்வராகவனின் பலம்...யாமினியை மட்டும் யாரால் மறக்க முடியும் ?. படத்தை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் எல்லா தரப்பினரையும் மயக்கியிருக்கும் ... அதை பற்றி அதிகம் கவலைப்படாததே செல்வராகவனின் மற்றொரு பலம் ... இப்போது அவருடைய கூட்டணியில் யுவன் இல்லாதது ஒரு பெரிய குறையாக இருந்தாலும் அதை ஜி.வி யின் இசை நிவர்த்தி செய்து வருகிறது ...

                                                                       
     " மின்னலே" வில் ஆரம்பித்து "விண்ணைத்தாண்டிவருவாயோ  " வரை கௌதமிற்கு காதல் கை கொடுக்கிறது . நகர இளைஞர்களிடம் இவரின் படமும் ,பாடல்களும் பெரிய வரவேற்ப்பை பெற்று இருக்கின்றன ..."காக்க காக்க " சூர்யாவிற்கு  மட்டும் திருப்புமுனையாக அல்ல , அதன் பிறகு வந்த காவல்துறை சம்பந்தப்பட்ட மற்ற படங்களுக்கும் ஒரு முன்னோடி...இப்படத்தின் வில்லன் கதாபாத்திரமும் வித்தியாசமாக இருந்தது..

   இதன் அடுத்த பதிப்பாக வந்த " வேட்டையாடு விளையாடு " ஒரு சூப்பர் க்ரைம் த்ரில்லர் ...நீண்ட நாட்களுக்கு பிறகு கமலிற்கு அற்புதமான அறிமுக காட்சி... " வாரணம் ஆயிரம் " படத்தில் அப்பா - பையன் உறவை அவ்வளவு அழகாக சித்தரித்திருப்பார் கெளதம் ...காதல் தோல்வி பாட்டுக்கு அஞ்சலை ஒரு அக்மார்க் ...

                   
   இவரைப்போல ஹீரோயின்களை அவ்வளவு அழகாக யாரும் காட்டுவது இல்லை...ஆனால் சிம்புவையும் மிக அழகாக VTV யில் காட்டியிருப்பது புதுசு. காதலின் எல்லா கோணங்களும் இதில் அற்புதம் ...கௌதமின் பலம் உணர்ச்சிகளை துல்லியமாக எடுப்பது , இசைக்கு அதிக கவனம் செலுத்துவது ...

   காதலை வலிக்க வலிக்க சொல்லி விட்டு அடுத்த படத்திலேயே காமுக கொலைகாரனை வைத்து சைக்கோ த்ரில்லரை எடுக்க முடியுமா ? முடியுமென்பதை " நடுநிசி நாய்கள் " நிரூபித்தது .... வணிக ரீதியாக குரைக்காவிட்டாலும் குறைந்த செலவில் பாடல்களோ , வாத்தியங்களின் பின்னணி இசையோ இல்லாமல் எடுக்கப்பட்ட புது பாணி படம் ...

                                                           
    கௌதமை போல செல்வராகவன் கமலுடன் கைகோர்க்க முடியாமல் போனதில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ...இருவரும்  காதலை தாண்டி மற்ற பரிமாணங்களிலும் பயணம் செய்வதில் ரசிகர்களுக்கு சந்தோசம் ...தனுஷ் , சிம்பு  இருவரும் நடிப்பில் தேறி இருப்பது இவர்களின் ஆளுமை ...நிச்சயம் இவர்களின் அடுத்த படங்களிடம் உள்ள எதிர்பார்ப்பு இளைய தலைமுறையினரிடம் என்றும் நீங்காது என்பதே இருவரின் பலம் ... அனந்து

3 December 2011

போராளி - புதிய போர் பழைய களம் ...


                                               
     கடந்த சில வருடங்களில் நம்மை கவனிக்க வைத்த காம்பினேஷன்களுள் முக்கியமானது சசிகுமார் - சமுத்திரகனி இருவரின் கூட்டணி ... இந்த கூட்டணியின் நான்காவது படம் " போராளி " ...அழுத்தமான கதையம்சம் இல்லாததால் " நாடோடிகள் " போலவோ , காமெடியுடன் கூடிய வேகமான திரைக்கதையால் " ஈசன் " போலவோ அல்லாமல் புது மாதிரி நிற்கிறான்
" போராளி " ...

     ஒரு வீட்டிலிருந்து சசியும் , அல்லரி நரேஷும் தப்பிக்கும் முதல் காட்சியில் தொடங்கும் படம் , கஞ்சா கருப்பின் வீட்டில் இருவரும் தஞ்சம் அடைந்ததும் தங்கு தடையின்றி இடைவேளை வரை வேகமாக செல்கிறது ... பத்திரிக்கையில் இருவரின் படத்தையும் பார்த்து விட்டு ஒரு கும்பல் துரத்த , இவர்கள் ஓட சஸ்பென்சுடன் வருகிறது இடைவேளை ...

     காலனியில் வந்து தங்கிய கொஞ்ச நாட்களிலேயே எல்லோர் மனதிலும் ( குறிப்பாக ஒனர் மற்றும் அவர் பெண் ) நல்ல பெயர் எடுத்த சசியையும் , நரேஷையும் வந்த கும்பல் பைத்தியம் என்று சொல்ல ஏன் ? எதற்கு ? எப்படி ? என இப்படி சுருக்கமாக சொல்லாமல் இடைவேளைக்கு பின் கொஞ்சம் விர்ர்ரிவாக விளக்குகிறார்கள் ...

                 
    சிரிக்கும் போது வெகுளித்தனத்தையும் , முறைக்கும் போது ஆக்ரோஷத்தையும் நன்றாக காட்டும் சசிகுமாரிடம் மற்ற முக பாவங்கள் மிஸ்ஸிங் ... படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்கு பேசாமலேயே இருந்து வாய் பேச முடியாதவரோ என சந்தேகிக்க வைப்பவர் பின் அப்துல் கலாமில் ஆரம்பித்து அடுக்கடுக்காக பேசி சிரிக்கவும் , சலிக்கவும் வைக்கிறார் ... சிலோன் புரோட்டா கேட்கும் சுவாதியிடம் " எனக்கு சிலோனே பிடிக்காது இதுல  புரோட்டா வேற " என்று சசி சொல்லும் போது தியேட்டரில் விசில் ...

                 
   " சுப்ரமணியபுரம் " படத்திற்கு பிறகு சுவாதியை ஏன் தமிழில் யாரும் யூஸ் செய்யவில்லை என்று ஆச்சர்யமாக இருக்கிறது ... கண்களாலேயே பேசுகிறார். குறிப்பாக சசி காதலை ஏற்றுக்கொள்ளும் இடத்தில் வெட்கம் , அழுகை , சந்தோசம் என எல்லா உணர்ச்சிகளையும் கண்களாலேயே காட்டும் காட்சியில் சுவாதியின் நடிப்பு சூப்பர் ...

    அல்லரி நரேஷ் தன் குறும்பு நடிப்பால் கவர்கிறார் ... " நாடோடிகள் " பரணியை நியாபகப்படுத்துவதும் , பேச்சில் தெலுகு வாடை அடிப்பதும் மைனஸ் ...  நிவேதாவின் அமுல் பேபி முகத்திற்கு சென்னை பாஷை பேசும்
தமிழ் செல்வி கேரக்டரை புகுத்தியது , அவர் அக்காவின் பிரச்சனையை போலவே செயற்கையாகவே ஒட்டாமல் இருக்கிறது ...
         
    இவர்களை தவிர கரடி வேஷம் போட்டு பிழைப்பு நடத்தும் கஞ்சா கருப்பு ( அமீரை போலவே இவரை சரியாக உபயோகப்படுத்தும் சமுத்திரகனியை பாராட்டலாம் ) , " சாந்தி , சாந்தி " என்று கத்தி சாந்தியை இழக்கும் படவா கோபி , " முடிவ நான் தான் எடுப்பேன் " என மனைவியிடம் சொல்லும் ஹவுஸ் ஒனர் கு.ஞானசம்பந்தம் , காலனியில் குடியிருக்கும் குடிகாரன் , சுவாதியின் தங்கை, " நாங்க அப்பவே இப்படி , இப்ப சொல்லவா வேணும் " என்று சவடால் பேசும் சூரி , சசியின் சித்தியாக வருபவர் இப்படி பலர் ஸ்கோர் செய்கிறார்கள்  ... குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் வசுந்தராவும் , அவர் அப்பாவாக வரும் கிழவரும் மனதில் பதிகிறார்கள் ...

                                   
    டாக்டராக வரும் ஜெயப்ரகாஷிற்கும் , நிவேதாவின் மாமாவாக வரும் நமோ நாராயனாவிற்கும் பெரிய ஸ்கோப் இல்லை .... சுந்தர்.சி.பாபுவின் பின்னணி இசை படத்திற்கு படம் மெருகேறி வருகிறது ... குறிப்பாக சேசிங் சீன்களில் இவரின் ஆர்.ஆர் அருமை ... சென்னையையும் , கிராமத்தையும் பிரித்து காட்டும் கதிரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை ...
                           
    முதல் பாதியில் கதை எதை நோக்கி போகிறது என்ற குழப்பம் ஏற்பட்டாலும் , அதை அடக்கும் வேகமான திரைக்கதை , முதல் பாதியில் கஞ்சா கருப்பையும் , இரண்டாவது பாதியில் சூரியையும் சரியாக பயன்படுத்தியது , தன்னம்பிக்கை , மனித நேயம் இரண்டையும் கலந்து படைக்கப்பட்ட சசிகுமாரின் கேரக்டர் , சசி - சுவாதி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் ,

    " ஏதாவது ஒண்ணுன்னா வேடிக்கை மட்டும் பாப்பீங்க , உதவின்னு கூப்புட்டா ஓடிடுவீங்க " , " மூளை தான் அண்ணாச்சி மூலதனம் " , " சொந்தமா ஏதாவது பண்ணலாம்னு பாத்தா ஏண்டா இப்படிகெடுக்குறீங்க " , சுவாதி சசியிடம் சொல்லும் " அண்டா மாதிரி நினச்சு வேணா தூங்குங்க " போன்ற  நச் வசனங்கள் , சில நேரமே வந்தாலும் மனநிலை சரியில்லாதவர்கள் பற்றிய மிரட்டும் மருத்துவமனை காட்சிகள் , பாடல்களே இல்லாமல் பின்னணி இசை உதவியுடன் பின்பாதியை நகர்த்திய தைரியம் இவற்றிற்காக இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம் ....

                             
    முதல் காட்சியிலேயே தப்பியோடுவதை காட்டி விட்டு பிறகு எந்த க்ளூவும் இல்லாமல் வெறும் காமெடியாகவே முதல் பாதியை நகர்த்தியிருப்பது ,  நிவேதா அக்காவின் பிரச்னை , அது சம்பந்தப்பட்ட ஒட்டாத காட்சிகள் , போராளி என்று பெயர் வைத்ததால் சமூக அவலங்களை பற்றிய ஒரு அக்கறையான படமோ என நினைத்தால் , சொத்து தகராறு , சித்தி கொடுமை என வழக்கமான ட்ராக்கில் கதை பயணிப்பது ,

    சஸ்பென்ஸ் வைக்கிறேன் பேர்வழியென்று என்று கொஞ்சம் சுத்த விட்டிருப்பது , '" நாடோடிகள் " பாணியில் பஸ் பேக் ட்ராப்பில் தேவையில்லாமல் வரும் குத்து பாடலில் ஆரம்பித்து , புத்திசாலித்தனமாக யோசிக்கும் சசிகுமார் வித்தியாசமாக எதையும் செய்யாமல் ஒத்த ஆளாக ஒரு ஊரையே அடிக்கும் வழக்கமான கிளைமேக்ஸ் பைட்டுடன் படத்தை முடித்திருப்பது இவையெல்லாம் போராளியை போர்களத்தில்  வாகை சூட விடாமல் பின்னுக்கு இழுக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 41 

29 November 2011

குறும்பட கார்னர் - சொல்ல மறந்துட்டேன் ...

  
   காதலும் வன்முறையை போல இரு பக்கமும் கூர்மையான ஆயுதம் . அதை சரியான விதத்தில் புரிந்து கொண்டு கரையேறுபவர்களும்  உண்டு , ஆழம் தெரியாமல் காலை விட்டு அவஸ்தைப்படுபவர்களும் உண்டு ...

   " காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் " என்றான் பாரதி ... இன்றோ " காதல் காதல் காதல் போயின் காதல் காதல் காதல் பிறரோடு " என்பது வழக்கமாகிவிட்டது ... அப்படிப்பட்ட ஒரு காதல் மாயைக்குள் சிக்கிய கார்த்திக்கின் கதையே " சொல்ல மறந்துட்டேன் " குறும்படம் ...



    காதல் தோல்வியுடன் ஹளுஷினேஷனையும் , கொஞ்சம் திகிலையும் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் ... கதைக்கான கருவை தவிர டெக்னிக்கல் விஷயங்கள் பெரிதாக இல்லையென்றாலும் , ஒரே ரூமுக்குள் வைத்து படத்தை சுருக்கமாகவும் , சுவாரசியமாகவும் சொன்ன விதம்  அருமை ...

   கார்த்திக் கேரக்டரில் நடித்திருக்கும் உமாபதி நன்றாக நடித்திருந்தாலும் மற்ற மூவரின் நடிப்பு  ரொம்ப சுமார் ... பார்த்திபன் இயக்கிய " குடைக்குள் மழை " படத்தை இந்த குறும்படம் நியாபகப்படுத்தினாலும் முடிவில் வைத்த ட்விஸ்ட் அழகு ...

    " சொல்ல மறந்துட்டேன் " தலைப்பு பொருத்தமாக இருந்தாலும் அதையே இருபது தடவைக்கு மேல் சொல்ல வைத்ததை தவிர்த்திருக்கலாம் ...

இயக்கம் : கமலகண்ணன்

தயாரிப்பு : பி.கே.யு ப்ரொடக்சன்

26 November 2011

மயக்கம் என்ன - அரை மயக்கம் ...


   செல்வராகவனை நம்பி தனுஷ் தன்னை முழுதாக ஒப்படைத்திருக்கும் மூன்றாவது படம் " மயக்கம் என்ன " ... படம் பார்த்து முடித்த பிறகு தனுஷும் நம்மைப் போல நிச்சயம் ஏமாந்திருப்பார் என்று தான் சொல்ல வேண்டும் ... இடைவேளைக்கு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர் மயக்கத்தில் தத்தளித்ததே அதற்கு காரணம் ...

   பெற்றோர்கள் இல்லாததால் நண்பன் சுந்தரின் உதவியோடு வாழும் தனுஷிற்கு பெரிய வைல்ட் லைப் போட்டோகிராபராக ஆக வேண்டுமென்பதே லட்சியம் ... தான் மானசீக குருவாக நினைக்கும் மாதேஷிடம் உதவியாளராக சேர வேண்டுமென்பது உட்பட அவருடைய எல்லா முயற்சிகளும் தொடர்ந்து தோல்விகளையே சந்திக்கின்றன ...


   சுந்தர் காதலிப்பதாக சொல்லி அழைத்து வரும் ரிச்சாவுக்கும் , தனுஷுக்கும் மோதலில் ஆரம்பிக்கும் பழக்கம் வழக்கம் போல காதலில் முடிகிறது ... நண்பன் விட்டுக்கொடுத்த பின் ரிச்சாவை  மணக்கும் தனுஷ் தன் லட்சியத்தில் ஜெயித்தாரா என்பதே மீதி கதை ...

   புதுப்பேட்டை , ஆடுகளம் வரிசையில் தனுஷின் நடிப்பு பசிக்கு " மயக்கம் என்ன "  அருமையான தீனி ... மனிதன் கார்த்திக்காகவே வாழ்ந்திருக்கிறார் ...
" பிரியாணி எங்கடா வாங்கின கோழி ரொம்ப பழசா இருக்கு " என்று ரிச்சாவை கலாய்ப்பதும் , நண்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதாக நினைத்து குற்ற உணர்ச்சியில் துடிப்பதும் , தன் திறமையை அடுத்தவன் திருடி விட்டான் என்று தெரிந்தவுடன் தவிப்பதும் , தன் ஆற்றாமையை மனைவியிடத்திலும் , மற்றவர்களிடத்திலும் கோபமாக காட்டுவதும் என படம் முழுவதும் நடிப்பு தாண்டவமாடுகிறார் தனுஷ் ...

 
     தனுஷுக்கு ஈடு கொடுக்கும் முக்கியமான யாமினி கேரக்டரில் ரிச்சா ... முதல் பாதியில் மலச்சிக்கல் வந்தவர் போல தன் முட்டை கண்களால் தனுஷை முறைத்துக் கொண்டே இருப்பவர் பின் பாதியில் தனுஷின் மனைவியான பிறகு நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி காட்டுவதோடு , ஆளும் தனுஷுக்கு அக்கா போல மெச்சூர்டாக இருக்கிறார் ...

   ரிச்சாவுக்கு மன அழுத்தத்தில் முழு நேர குடிகாரனாகிய கணவன் தரும் இம்சைகளையும் பொறுத்துக்கொண்டு அவனை முன்னுக்கு கொண்டு வரும் பாசிடிவ் மனைவி கேரக்டர் ... ஆனால் ஒருவனுடன் டேட் செய்ய ஒப்புக்கொண்டு விட்டு பின் அவன் நண்பனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டதால் பாராட்டப்பட வேண்டிய கேரக்டர் படுகுழியில் தள்ளப்படுகிறது. அதிலும் குறிப்பாக , சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணவனின் நண்பன் ஒருவன் இவளை அடைய முயற்சிக்கும் போது அவனுக்கு ரிச்சா செய்யும் அட்வைசை ரசிப்பதற்கு பதிலாக தியேட்டரில் அனைவரும் கைகொட்டி சிரிக்கிறார்கள் ...

   மூன்றாவது முக்கிய பாத்திரம் தனுசின் நண்பனாக வரும் சுந்தர் ... முதல் காட்சியில் இவரை பார்க்கும் போதே அழகான காதலியை தனுஷ் கொத்திக்கொண்டு போய் விடுவார் என்று நமக்கு நன்றாகவே தெரிகிறது ... அவர் இயல்பாக நடித்திருந்தாலும் முகத்தில் சுத்தமாக பணக்கார கலையே இல்லை .. தனுஷை விட சுமாராக இருக்க வேண்டுமென்பதற்காகவே இவரை தேர்ந்தெடுத்திருப்பார்கள் போல ...


   தன் கேர்ள் பிரெண்டை தனுஷுக்கு கூட்டிக்கொடுக்கிறேன் என்று இவர் நேரடியாக சொல்லவில்லையே தவிர , மற்றபடி பாத்ரூம் கதவை திறந்து வைத்துக்கொண்டு குளிக்கும் ரிச்சாவை பார்த்துக்கொள்ள சொல்லி இவர் தனுஷிடம் பணிப்பது உட்பட எல்லா வேலைகளையும்  செய்கிறார் ...
" அவளுக்கு நீன்னா ஒ.கே டா " என்று இவர் தனுஷை பார்த்து சொல்லும்போதெல்லாம் " இவ்வளவு மொக்கையாவா ஒருத்தன் இருப்பான் " என பரிதாபப்பட வைக்கிறார் ...

   ராம்ஜியின் ஒளிப்பதிவும் , ஜி.வி யின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய தூண்கள் ... காட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கும் எல்லா காட்சிகளுமே கண்களுக்கு குளிர்ச்சி ... " ஓட ஓட " , " காதல் என் காதல் " இந்த இரண்டு பாடல்களுமே படம் வருவதற்கு முன்பே செம ஹிட் ... " காதல் " பாட்டுக்கு செல்வா , தனுஷின் வரிகள் சிம்ப்லி சூப்பர் ... பழைய நெடி அடித்தாலும் பின்னணி இசையே படத்தின் பின்பாதியை  தூக்கி நிறுத்துகிறது ...

   மனதில் பட்டதை தைரியமாக எடுக்கும் சில இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர் ... கேரக்டர்களை மனதில் பதிய வைப்பதிலும் , விசுவலாக எதையும் சொல்வதிலும் வல்லவர் ... 7 ஜி யும் , புதுப்பேட்டையும் இதற்கு சிறந்த உதாரணங்கள் ... இருவர் காதலிப்பதற்கு முன் டேடிங் செய்வது, ஆண் , பெண் பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒரே ரூமுக்குள் படுத்து உறங்குவது , நண்பர்களுக்கு அவர் தந்தையே சரக்கு ஊத்திக்கொடுப்பது என இந்த படத்திலும் இவருடைய போல்ட் அட்டெம்ப்ட் நிறைய ...

   தனுஷ் ,ரிச்சாவின் முதல் சந்திப்பு , " நீ என்ன கார்பரேசன் கக்கூஸ் ல தானே வேலை செய்யற " , " ஆமாமா உங்கப்பன் வேலை செய்யற எடத்துலதான் " ,
 " அப்படியா உங்கம்மா இதப்பத்தி சொல்லவே இல்ல " இப்படி தனுஷ் , ரிச்சா இருவரும் அடித்துக்கொள்ளும் காட்சி , தனுஷ் , ரிச்சா இருவரும் பாலத்தில் நடந்து கொண்டே பேசிக்கொள்ளும் காட்சி , " அவன் என் படத்தை ஆய்னுட்டான் " என அழுது கொண்டே சொல்லும் தனுஷை அணைத்து கொண்டே ரிச்சா காதலை வெளிப்படுத்தும் காட்சி என முதல் பாதி முழுவதும் செல்வராகவனின் டச்சிங் நிறைய ...


    செல்வராகவனுக்கு " செகண்ட் ஆப் சின்றோம் " என நினைக்கிறேன் ...
 " ஆயிரத்தில் ஒருவன் " போல இந்த படமும் இரண்டாம் பாதியில் எங்கெங்கோ தடுமாறி பிரயாணம் செய்கிறது ... இவ்வளவு பணக்கார நண்பர்களை வைத்துக்கொண்டு தனுஷ் தன்னை ஏமாற்றியவனுக்கு எதிராக எந்தவொரு சட்ட ரீதியான ஆக்சனையும் எடுக்காதது ஆச்சர்யமே ... விக்ரமன் படத்தில் ஹீரோ ஒரு பாடலில் பணக்காரன் ஆவது போல இந்த படத்தில் தனுஷ் பின்னணி இசையில் சர்வதேச விருதை பெறுகிறார் ... இடைவேளைக்கு பிறகு வசனங்களை குறைத்து விசுவலாக நகர்த்தியிருந்தாலும் அதை ஏதோ டாகுமெண்டரி அளவுக்கு ஜவ்வாக இழுத்திருக்க வேண்டாம் ...

   முதல் பாதியில் ரிச்சாக காட்டப்படும் ரிச்சா பின்பாதியில் மிடில் கிளாசாக மாறியது ஏனோ ?.. இவை தவிர தனுஷின் தங்கை , சுந்தரின் அப்பா என பொருந்தாத காஸ்டிங்க்ஸ் பெரிய குறை ... காதல் கொண்டேன் , 7 ஜி மயக்கத்தில் இருந்து செல்வராகவன் முழுதாக விடுபடாதது " மயக்கம் என்ன " வில் தெரிகிறது ... தனுஷ் , ரிச்சா நடிப்பு , ராம்ஜியின் ஒளிப்பதிவு , ஜி.வி. யின் இசை ," ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்" என்பதை உணர வைக்கும் கதை , இளமை துள்ளலான காட்சிகள் இப்படி நிறைய ப்ளஸ்கள் இருந்தும் தெளிவில்லாத திரைக்கதையும் , போரடிக்கும் பின்பாதியும் "மயக்கம் என்ன" வை அரை மயக்கத்திலே வைக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் - 40   

24 November 2011

தனிமை ...


அதிகாலை வேளையில்
எனை எழுப்ப
அருகே வரும்
உன் கைகள்
அதை அணைத்தபடியே
போடும் குட்டி தூக்கம் ...

வாசல் வரை
வந்து வழியனுப்பி விட்டு
பின்
ஏதோ ஒரு
பொய் சாக்கு சொல்லி
நான் திரும்ப
வருவேன் என்பதை
குறிப்பால் உணர்த்தும்
உன்
கண்களின் குறும்பு ...

உரிமையில்
என் பெயரை
சொல்லி விட்டு
உடனே
நாக்கை கடிக்கும்
உன் அழகு ...

இரவில்
நான் வீடு திரும்ப
வெகு நேரம் ஆனாலும்
செல்போனில் சிணுங்காமல்
என்
புகைப்படத்துடன் பேசும்
உன் பொறுமை ...

அடுத்த பெண்ணை
நான்
ரசிக்கும் போது
அக்கா ரொம்ப அழகு
என சொல்லும்
உன் சாமர்த்தியம் ...

காக்கா கரையும்
போதெல்லாம்
என் விழிகளை
வாசல் பார்க்க வைக்கும்
உன் காதல் ...

நினைவுகளை போர்த்தியபடி
தனிமையை
விரட்ட எண்ணி
வழக்கம் போல்
தோற்றுப்போகும்
என் கண்கள் ...






22 November 2011

குறும்பட கார்னர் - போஸ்ட்மேன் ...


Thumbnail

   "  பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் வகையினானே " என்ற நன்னூலின் கூற்றுக்கேற்ப உலகில் மாறாத ஒன்று மாற்றம் மட்டுமே ... இதை மற்றவர்களுக்கு எளிதில் சொல்லி விடலாம் , ஆனால் நமக்கு வரும் போது தான் அதன் உண்மையான வலியும், அர்த்தமும் புரியும் ... 

   தொலைபேசியின் வருகைக்கு பிறகு மக்கள் தபால்துறையை எப்படி மறக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்த்தும் தேசிய விருது பெற்ற குறும்படமே " போஸ்ட்மேன் " ... அந்த ஊரே அவனை வெறும் போஸ்ட்மேனாக பார்க்காமல் நண்பனாக , உறவினனாக பார்ப்பதில் மூர்த்திக்கு ரொம்ப பெருமை ... 


    எவராலும் எளிதில் தாங்கிக்கொள்ள முடியாதது தான் நேசிப்பவர்களால் உதாசீனப்படுத்தப்படுவது ... இந்த சோகத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் விசுவலாக விளக்கியதில் இயக்குனர் ஒரு படி மேலே நிற்கிறார்... போஸ்ட்மேனை கண்டுகொள்ளாமல் ஆளாளுக்கு தொலைபேசியில் பிஸியாக இருப்பது ஒரு நல்ல உதாரணம் ...

    திரைப்படத்திக்குண்டான காதல் , சென்டிமென்ட் , சோகம் , காமெடி  இதையெல்லாம் அழகாக இந்த குறும்படத்தில் புகுத்தியதே இயக்குனரின் சாமர்த்தியம் ... பாட்டிக்காக பேரன் எழுதுவது போல மூர்த்தி எழுதும் கடிதங்கள் க்யூட் ஹைக்கூ ... 

    ஹீரோவாக வரும் இஸ்வரின் முகம் அவரின் ஒட்டு தாடி போலவே தமிழுக்கு கொஞ்சம் அன்னியமாக இருந்தாலும் முக பாவங்கள் நன்றாக இருக்கின்றன ... தீனா காதல் காட்சிகளில் இசைஞானியின் பாடலை உபயோகப்படுத்தியிருந்தாலும் கிளைமாக்ஸ் உட்பட பின்னணி இசையில் மனதை வருடுகிறார் ... மற்றொரு முக்கியமான அம்சம் அபிநந்த ராமானுஜத்தின் ஒளிப்பதிவு ... ஆற்றுப்படுகையில் போஸ்ட்மேன் சைக்கிள் ஒட்டிக்கொண்டு வருவது கண்கொள்ளா காட்சி ... 

    படத்தை பார்த்து முடித்தவுடன் சின்ன வயதில் தீபாவளி , பொங்கலுக்கு நமக்கு வரும் வாழ்த்து அட்டைகளுக்காக வழி மேல் விழி வைத்து காத்துக்கிடந்த நாட்கள் கண்முன் வந்து போவதை யாரும் தவிர்க்க முடியாது ...

இயக்கம் : மனோகர்

தயாரிப்பு : எல்.வி.பிரசாத் அகாடமி


17 November 2011

கூட்டணி தர்மம் ...


            
    " ர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் " என்றார்  பாரதி . " எது தர்மம் " என்பது பற்றி அர்த்தசாஸ்திரத்தில் தெளிவாக விளக்கினார் சாணக்கியன் , ஆனால் இதையெல்லாம் விட தர்மம் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அரசியல்வாதிகளால் இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் தர்மம் " கூட்டணி தர்மம் " ...

    பொது ஜனம் எக்கேடு கெட்டுப்போனாலும் தங்கள் பதவி பறிபோய் விடக்கூடாதென்பதே இந்த தர்மத்தின் முக்கிய குறிக்கோள்..இது மட்டுமல்ல இன்னும் நிறைய கிளை குறிக்கோள்கள் , கொள்கைகள் ... இந்த கூட்டணி தர்மத்திற்காக கட்சி தலைவர்கள் என்னவெல்லாம்  செய்கிறார்கள் அல்லது செய்யலாம் என்பது பற்றிய சில குறிப்புகள் இதோ ...

    முதலில் தன் கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சர் ஊழல் செய்ய போகிறார் என்று திட்டவட்டமாக தெரிந்திருந்தாலும் பிரதமர் கடிதம் எழுவதை தவிர வேறொன்றையும் செய்து விடக்கூடாது , அதிலும் அந்த கடிதத்தில்  ஊழல் செய்யலாமா , கூடாதா என்பதையெல்லாம் தெளிவாக விளக்காமல் விட வேண்டும் ...

                                                         
     பதில் கடிதத்தில் அமைச்சர் இல்லையில்லை நான் என் கட்சிக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி ஊழல் தான் செய்வேன் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தாலும் அதை தடுப்பது போல நேரடியாக எந்தவொரு பதில் கடிதமும் போட்டு விடக்கூடாது , அதே சமயம் நீங்கள் செய்யப்போகும் ஊழல் நிச்சயம் நல்ல திட்டமே , இருப்பினும் பிற்காலத்தில் ஏதும் சிக்கல் வராமல் இருக்க மற்ற இலாக்கா அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து செய்யலாம் என்று வேண்டுமானால் அறிவுரை வழங்கலாம் ...

    இரண்டாவது , கூட்டாக எவ்வளவு கொள்ளையடித்தாலும் தனியாக யாரையும் மாட்டி விடக்கூடாது   , அப்படியே ஊழல் சில லட்சம் கோடிகளை தாண்டும் போது அது சம்பந்தமாக நடவடிக்கைகளே எடுக்காமல் ஏதாவது அறிக்கைகள்  விட்டும் பத்திரிக்கைகளும் , எதிர்க்கட்சிகளும் நிறைய அமளி துமளி செய்தால் கூட்டணி கட்சி தலைவருடன் அமர்ந்து பேசி அவர் கை காட்டும் நபரை சில நிபந்தனைகளுடன் மாட்டி விடலாம்...
                                       
    நிபந்தனைகளின் படி மாட்டிவிடப்படும் நபருக்கு சி.பி.ஐ ரெய்ட் வரப்போவதை  முன் கூட்டியே தெரிவித்து முடிந்தவரை சம்பந்தப்பட்ட ஆவணங்களை மறைக்குமாறு சொல்லிவிட வேண்டும் . அதையும் மீறி அவர் மாட்டும் போது சட்டம் தன்  கடமையை செய்யும் என்று அறிக்கை விடலாம்...

                         
    அடுத்ததாக , கைதானவரை வெளியில் விட சொல்லி கூட்டணி கட்சி தலைவர் நச்சரிக்கும் சமயத்தில் சட்டசபை தேர்தல் வந்தால் நிற்க வைப்பதற்கு வேட்பாளர்களே இல்லையென்றாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் போது , எப்படியிருந்தாலும் தோறகத்தானே போகிறோம் என்ற உண்மை தெரிந்தும் ஏன் இவ்வளவு தொகுதிகள் கேட்கிறார்கள் என்றெல்லாம் எதிர் கேள்வி கேட்காமல் கூட்டணி கட்சி தலைவரும் விட்டுக்கொடுத்து விட வேண்டும் ...

     இலங்கை அரசு ஈழ தமிழர்களை அழிப்பதற்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்வது தெரிந்திருந்தும் அதை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் .அதையும் மீறி  மனம் வெதும்பினால் ஏர் கூலரில் காற்று வாங்கியபடியே சொந்தங்கள் புடை சூழ  கூட்டணி கட்சி தலைவர் குடும்ப தொலைக்காட்சியில் கொலு பொம்மை போல அரை நாள் லைவ் ஷோ காட்டலாம் .

    அதுவும் போதாதென்றால் தன் தமிழ் உணர்வை வெளிப்படுத்த பிரதமருக்கு தமிழிலேயே கடிதம் எழுதலாம் , பிரதமருக்கு தான் தமிழ் தெரியாதே என்று யாராவது தமிழ் பற்றே இல்லாமல் கேள்வி கேட்டால் , புரிந்தாலும் பிரயோஜனம் இல்லை என்று சாமர்த்தியமாக பதில் சொல்லலாம் .

                               
     ஈழ தமிழர்களுக்காக என் உயிரையே தருவேன் என கட்டுரை எழுதலாம் , யாராவது ஏன் இன்னும் உயிரை விடவில்லை என்று குசும்பாக கேட்டால் நான் போய் விட்டால் தமிழர்களை யார் காப்பற்றுவார்கள் என்று பதில் கேள்வி கேட்டு மடக்கி விடலாம் ...

     தன் கட்சியை சேர்ந்த தமிழர்களின் பதவிக்காகவும் , தமிழச்சியான தன் மகளின் ஜாமீனுக்காகவும் தான் நாம் டில்லி போகிறோம் என்பது கூட  தெரியாமல் ஏன் ஈழ தமிழர்கள் பிரச்சனைக்காக நீங்கள் டில்லி செல்லவில்லை என்று யாராவது கேட்டால் அப்படி கேட்பவர்கள் தமிழர்களே அல்ல , ஆரியர்கள் என்று பதில் சொல்லலாம் ...

     பெட்ரோல் விலையை குறைக்கா விட்டால் நான் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன் என பிரதமர் நாட்டில் இல்லாத சமயம் பார்த்து சொல்லிவிட்டு , அவருடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு தனக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு மம்தா அந்தர் பல்டியடித்ததை விடவா என்  தமிழ்பற்று மோசம் என்று கூட சொல்லி மழுப்பலாம் ...

    விலைவாசி உயர்வுக்கு மக்கள் அதிகமாக மீன் முட்டை என்று உணவை வெளுத்து வாங்குவது தான் காரணம் என்று பிரணாப் சொன்னதை மேற்கோள்காட்டி அன்னா வழியில் எல்லோரையும் உண்ணாவிரதம் இருக்க சொல்லலாம்... ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு பிறகும் " தீவிரவாதம் மிகவும் கண்டிக்கத்தக்கது " என்று சொல்லும் பிரதமரை விட வேறு யாரால் தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்கவோ , ஒடுக்கவோ முடியும் என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்கலாம் ...


                           
     மக்களின் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல் , டீசல் , காய்கறி இவற்றின் விலைகளை ஏற்றி இந்திய பொருளாதாரத்தையே ஏற்றத்தில் வைத்திருக்கும் மத்திய அரசின் நல்லாட்சி கவிழ்ந்து விட கூடாது என்ற நல்லெண்ணத்தில் கூட்டணியில் தொடர்ந்தால் அது புரியாமல் மாநிலத்தில் ஆட்சி பறிபோய் ,  மகளும் ஜாமீனில் வர முடியாமல் இருக்கும் காரணத்தினால் தான் மத்திய அரசுடன் நீங்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி சுயமரியாதையை சுரண்டி பார்க்கும்  போது உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று சுயத்தை காட்டலாம் ...

     இப்படி பல கட்சிகள் தனித்தனியாக கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதோடு , தீவிரவாதம் , ஊழல் , விலைவாசி உயர்வு , சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் இப்படி மத்திய அரசுக்கு எதிராக நிறைய  குற்றச்சாட்டுக்கள் இருந்தும் தங்கள் ஆதரவை மட்டும் வாபஸ் பெற்று விடக்கூடாது என்ற தர்மத்தையும் கூட்டாக கடைபிடிக்கின்றன ...

    இதற்கு கட்சிகளின் பதவி ஆசையோ , இந்த கூட்டணி தொடர்ந்தால் தான் சௌகரியமாக கொள்ளையடிக்க முடியும் என்ற நினைப்போ , தேர்தலை சந்திக்க பயமோ மட்டும் காரணம் அல்ல . சினிமாவில் ஹீரோ என்ன வேண்டுமானால் செய்யலாம் , ஆனால் ஹீரோயின் மட்டும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என அடிமட்ட ரசிகன் நினைப்பது போல காங்கரஸின் குறைகள் மக்களுக்கே பழகிப் போன பிறகு , பல கட்சிகளுக்கு மாற்று கட்சியை விட காங்கிரசுடன் கூட்டு சேர்வது வசதியாகி விட்டதும் மிக முக்கிய காரணம் ...

14 November 2011

நூறாவது நூறு ...

                      
    நம் நாட்டில் எவ்வளவோ மதங்கள் இருந்தாலும் கிரிக்கெட்டை தங்கள் மதமாகவும் , சச்சினை அதன் கடவுளாகவும் வழிபடும் ரசிகர்கள் கோடிக்கணக்கானோர் ...

    சச்சின் நூறாவது நூறை அடிக்க வேண்டும் என்ற நூறு கோடி இதயங்களின் வேண்டுதலே சாதாரணமான இந்தய - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை  அசாதரணமான எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது ... அதிலும் கடந்த முதல் டெஸ்டில் சச்சின் 76 ரன்களுக்கு அவுட் ஆனார் ... அவர் படபடப்புடன் இருந்தது அவருடைய சாட் செலக்ஷனில் நன்றாகவே தெரிந்தது.

    இன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் சச்சின் பதட்டப்படாமல் தன்னுடைய  நேச்சுரல் கேமை ஆடினாலே தன் நூறாவது சதத்தை பூர்த்தி செய்வார் என்பது வல்லுனர்களின் கணிப்பு... அதிலும் போட்டி அவருக்கு லக்கியான ஈடன் மைதானத்தில் நடைபெறுவதும் , வீக்கான மேற்கிந்திய தீவுகளுடன் மோதுவதும் அவருக்கு சாதகமாக இருக்கும் மற்ற சிறப்பம்சங்கள். ஏற்கனவே சச்சின் ஈடன் மைதானத்தில் மூன்று முறை சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது ...

                                     
    இந்த வருடம் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக தன்னுடைய 99 வது அடித்த சச்சின் அதற்கு பிறகு மற்ற போட்டிகளில் நூறாவது சதத்தை அடிப்பார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க கடைசியில் மிஞ்சியது ஏமாற்றமே ...

    அதிலும் குறிப்பாக செமி பைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக 85 ரன்களுக்கு அவர் அவுட் ஆனதில் பலருக்கு பி.பி எகிறியது ... உலக கோப்பை வெற்றி தந்த மாபெரும் சந்தோசத்தில் அந்த ஏமாற்றம் சிறிது காலம் மறக்கப்பட்டது ...

    இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் அந்த பரபரப்பு தொற்றிக்கொண்டது ... இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் ஒட்டு மொத்த ஆட்டமும் சொதப்பலாக இருந்ததால் கடைசி டெஸ்டில் 9 ரன்களில் சச்சின் தவறவிட்ட சதம் பெரிய சத்தத்தை எழுப்பவில்லை ...இங்கிலாந்தை நாம் பழி தீர்த்த 5  ஒரு நாள் போட்டிகளிலும் காயம் காரணமாக சச்சின் இடம் பெறவில்லை ...

               
     சாதனையின் மறு பெயர் சச்சின் ... தன் பதினாறாவது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இன்று வரை அதிக டெஸ்ட் ரன்கள் , அதிக ஓ.டி,ஐ ரன்கள் , ஒரே வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் இப்படி எத்தனையோ சாதனைகள் அவருக்கு பின்னால் இருந்தாலும் கடந்த 8  மாதங்களில்  ஒ.டி.ஐ மற்றும் 5  டெஸ்ட் மேட்ச்கள் ஆடியும் தன் நூறாவது சதத்தை பூர்த்தி செய்யாததில்   அனைவருக்கும் வருத்தமே ...

     அவருக்கும் வருத்தம் இருக்காதா என்ன? .சாதனைகள் நிறைய படைத்த சச்சினுக்கு மற்றொரு நிறைவேறப்போகும் சாதனையே  நூறாவது சதம் என்றாலும் , அது இந்திய மண்ணில் , அதிலும் புகழ் பெற்ற ஈடன் மைதானத்தில் நிறைவேறுமானால் ரசிகனுக்கு அதை விட சிறந்த சந்தோசம் வேறொன்றும் இருக்க முடியாது ...
Related Posts Plugin for WordPress, Blogger...