17 May 2011

அழகர்சாமியின் குதிரை

                                                            
        திருவிழா பாடலில் இருந்து தொடங்கும் படம் முடியும் வரை 
சொந்த ஊர் திருவிழாவிற்கு நேரே சென்று பார்த்து விட்டு வந்த அனுபவத்தை 
தருகிறது...படம் முடிந்து வரும்போது சுந்தர ராமசாமி , கி.ராஜநாராயணன் நாவலை 
படித்து முடித்தது போன்ற உணர்வு ....
        இலக்கியம் படமாக்கப்படும் போது  வணிக ரீதியான சமாதானங்களால் வழி மாறி போய் விடுவதுண்டு ...ஆனால் 
பாஸ்கர் சக்தியின் கதையை அதன் மண் மனம் மாறாமல் இயக்கி இருக்கும் 
சுசீந்தரனின் சாமர்த்தியத்திற்கு என் பாராட்டுக்கள்...
        மழை வரம் வேண்டி அழகர் சாமிக்கு திருவிழா எடுக்க ஒரு கிராமமே
ஆயத்தமாகிறது..உள்ளூர் பகையையும் மீறி எல்லா ஏற்பாடுகளும் நடந்து
கொண்டிருக்க திடீரென அழர்சாமியை வைத்து ஊர்வலம் செல்ல வேண்டிய மரக்குதிரை  காணாமல் போய் விடுகிறது...காவல் துறையினரிடம் புகார் சொல்லியும் பிரயோஜனம் இல்லை..
           இதற்கிடையில்  ஒரு நிஜ குதிரை இவர்கள் கையில் சிக்க அது அழகர் சாமியே அனுப்பி வைத்ததாக நம்பும் கிராமம் உண்மையான குதிரைக்காரன் வந்து கேட்கும் போது கூட
தர மறுத்து விடுகிறது... கடைசியில் திருவிழா நடந்ததா ?. குதிரைக்காரனுக்கு குதிரை கிடைத்ததா ?..
                                     என்ற மீதி கதையை
காதல் , ஜாதி பிரச்சனை , மக்களின் மூட நம்பிக்கை, கிராமத்து மக்களின்
வெள்ளந்தி மனது இவற்றுடன் பிணைந்து எளிமையாகவும், நகைச்சுவையுடனும் சொல்லி இருக்கிறார்கள்.....
                 திருவிழாவிற்கு பணம் கேட்டு வீடு வீடாக ஊர் பெரியவர்கள் பயணப்படும் போதே சிரிப்பும் நம்முடன் சேர்ந்து படம் நெடுக பயணம் செய்கிறது...ஊர் தலைவரின் பையனாக வரும் "இனிகோவும் , அவரின் காதலியாக நடித்திருக்கும் பெண்ணும் கண்களாலேயே பேசிக்கொள்ளும் காட்சிகள் அற்புதம்
                                                   
                 இவர்கள் மட்டும் அல்ல படத்தில் வரும் ஊர் தலைவர்,கோடங்கி ,ஆசாரி,மைனர்   என்று அனைவரும் இயல்பாக நடித்து இருக்கிறார்கள்....காவல் துறை அதிகாரியாக வரும் அருள்தாசை
குறிப்பிட்டு சொல்லலாம்..
               சூரி நிறைய சிரிக்க வைக்கிறார்..சில இடங்களில் நாகேஷின்
 உடல் மொழியை நினைவு படுத்துகிறார்..மலையாள மாந்திரீகராக வரும்
கிருஷ்ணமூர்த்தியின் பொய் மூட்டைகளை முழுமையாக நம்பும்
மக்களின் மூட நம்பிக்கைகள் படம் நெடுக தெளிக்கப்பட்டிருக்கின்றன....
பட முடிவில் கடவுள் நம்பிக்கை உண்மையா ? பொய்யா ? என்ற கேள்வி
எழாமல் இல்லை...
              கதையின் நாயகனாக வரும் அப்புக்குட்டிக்கு இப்பட வாய்ப்பு ஒரு 
வரபிரசாதம் ...கோபமாக சண்டை போடும் போது  ,சோகமாக அழும் போது  ,
குழந்தைத்தனமாக சிரிக்கும் போது என படம் நெடுக உணர்வு பூர்வமாக 
நடித்திருக்கிறார்...சரண்யாவுடனான இவர் காதல் காட்சிகளை விட குதிரைக்காக 
இவர் போடும் சண்டை காட்சிகள் மனதில் நிற்கின்றன...
                                                            
              கதை, திரை கதையை தவிர படத்தின் மற்ற இரண்டு பலங்கள்
இசை மற்றும் ஒளிப்பதிவு...இசை ஞானி வாத்தியங்களில் மட்டும் நம்மை 
தாலாட்டாமல் மெளனமாக இருந்தும் கதையோடு நம்மை ஒன்ற செய்கிறார்...
அப்புக்குடியின் அறிமுக காட்சியில் இவரின் இசை அற்புதம்..
"பூவ கேளு" பாடல் கேட்டது போல  இருந்தாலும் கேட்கும் படியாக இருக்கிறது.... "தேனீ" ஈஸ்வரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி..
                தன் பிழைப்பை கெடுத்த கிராமத்து மக்கள் மீது அப்புக்குட்டி காட்டும் ஆவேசம், அதே மக்கள் திருவிழா கொண்டாடுவதற்காக தன்
குதிரையை விட்டுக்கொடுக்கும் பரிவு , குதிரையை தர மறுக்கும் கிராமத்து
மக்களின் இயல்பு இவை எல்லாமே யதார்த்தம்....
                 படம் நெடுக யதார்த்தமாக இருந்தாலும் அப்புக்குட்டி-சரண்யா
இவர்களுக்கு இடையேயான காதல் சினிமா சாயம் பூசியது போல் தெரிகிறது ...குதிரையுடன் செல்லாவிட்டால்
சரண்யா செத்து விடுவாள் என்றெல்லாம் சொல்வது  சினிமாத்தனம்....
                  உலக சினிமாக்களை உல்டா அடித்து விட்டு
கதை,திரைக்கதை,வசனம் என்று தங்கள் பெயரை போட்டுக் கொள்ளும்
இயக்குனர்கள் மத்தியில் நல்ல இலக்கியத்தை அதன் தரம் மாறாமல்
எடுத்திருக்கும் இயக்குனர் சுசீந்தரனுக்கு ஒரு சலாம்...இனி வரும் இயக்குனர்களும் இது போன்ற நல்ல கதைகளை படமாக்கும் முயற்சிகளுக்கு முன் வந்தால்
தமிழ் சினிமாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்...
                    அழகர்சாமியின் குதிரை - அனைவருக்கும் ஏற்ற சவாரி

               

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...