28 August 2012

தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா - நடந்தது என்ன ? ...


சென்னையில் கடந்த ஞாயிறன்று ( 26.08.2012 ) தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு  நடைபெற்றது ... காலையில்  சி.பி , கேபிள் , பட்டிக்காட்டான் ஜெய் முன்னிலையில் பதிவர்கள் அறிமுகம் , பிறகு மதியம் 1.30க்கு லஞ்ச் , அதை தொடர்ந்து பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தலைமையில் மூத்த பதிவர்களை கெளரவப்படுத்துதல் , கவியரங்கம் , கடைசியில் பி.கே.பி யின் உரை மற்றும் மதுமதியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் சில முக்கியமான துளிகள் இதோ :

  • காலை முழுவதும் பதிவர்களின் அறிமுகம் தொடர்ந்து நடைபெற்றது ... தமிழ்நாடு தவிர மும்பை , மலேசியா போன்ற இடங்களில் இருந்தும் பதிவர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது ... பதிவர்கள் அறிமுகத்தின் போது  அதிக கைதட்டல் வாங்கியவர் " நாய் நக்ஸ் நக்கீரன் " ...   (எல்லாருக்கும் பேமென்ட் கரக்டா போய் சேந்திருச்சா பாஸ்

  • சுரேகா அவர்களின் அறிமுகத்தின் போது கேபிள் " நீங்கள் பாடலாசிரியர் தானே , ஒரு பாட்டு பாடுங்கள் " என்று கேட்க , அதற்கு அவர் " பாட்டு எழுதறது தான் என் வேல , பாடுறது இல்ல " என்று பதிலடி கொடுத்தார் ...    ( அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

  • ஒரு பதிவர் தன்  குடும்பத்தில் உள்ள ஏழு பேரும் தன்  பதிவுக்கு ஒட்டு போட்டு அதை முன்னணிக்கு வர வைத்து விடுவார்கள் என்ற தகவலை சொன்னார் ... (  நல்ல விவரமான புள்ளையா தாம்பா இருக்கு ! ) 

  • என் பதிவின் பெயரை " வாங்க ப்ளாகலாம் " என்பதற்கு பதில் " வாங்க பழகலாம் " என்றே நிறைய பேர் குறிப்பிட்டார்கள் ... ( எதுக்கு இந்த விளம்பரம்

  • எனக்கு அருகில்  அமர்ந்திருந்தவர்  ஒவ்வொரு பதிவரின் அறிமுகத்தின் போதும் அவர்களின் பெயர்களை தவறாமல் எழுதிக்கொண்டிருந்தார் ... நான் முதலில் அவரை பத்திரிக்கைக்காரர் என்று தான் நினைத்தேன் , பிறகு தான் தெரிந்தது அவர் பதிவர் ஈகைவேந்தன் என்பது ... அவர் குருநானக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருவதாகவும் , பி.ஹெச்.டி படிப்பிற்காக பதிவுலகம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிரு ப்பதாகவும் தன் அறிமுகத்தின் போது  குறிப்பிட்டார்...   (சொல்லவேயில்ல )   

  • ஜாக்கி சேகர் சிங்கிளாக தான் வந்தார் , ஆனால் அவரை சுற்றி ஒரு கூட்டமே சேர்ந்துவிட்டது ... ( இது அன்பால தானா சேர்ந்த கூட்டமோ ! ) 

  • பதிவர் கோவை நேரம் வெள்ளை வெட்டி சட்டையில பளபளவென்று வந்திருந்தார் , கேட்டதற்கு இது தமிழ் பதிவர்கள் சந்திப்பல்லவா என்று தமிழ்ப்பற்று காட்டினார் ... ( அய்யோ நான் தமிழன் ! ) 

  • சுரேகா நகைச்சுவை ததும்ப நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கினார் ... இவரும் , இவரின் பதிவுலக நண்பர் கேபிள் சேகரும்               ( இருவரும் வைத்திருப்பது ஒரே கலர் நானோ கார் ) இணைந்து " கேட்டால் கிடைக்கும் " என்ற அமைப்பின் மூலம் இதுவரை இருபதுக்கும் மேற்ப்பட்ட நுகர்வோர் சிக்கல்களை தீர்த்து வைத்திருப்பதாக சொன்னார்.... யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்றால் இவர்களை அணுகலாம் ... ( பிரபா ஒய்ன்ஷாப்ப எப்போ சார் தெறப்பாங்க ! ) 

  • ரமணி , சென்னைப்பித்தன் , வலைச்சரம் சீனா , லக்ஷ்மி உட்பட மூத்த பதிவர்கள் பலர் கௌரவிக்கப்பட்டார்கள் ... ( ஓல்ட் இஸ் கோல்ட்

  • நிகழ்ச்சி முடியும்வரை பம்பரம் போல சுற்றிக் கொண்டிருந்தார் பிலாசபி பிரபாகரன் ... ( ஹே ! நான் ரொம்ப பிஸி , ரொம்ப பிஸி ! ) 

  • ஆரூர் மூனா செந்தில் அரையடி கிருதாவுடன் அமர்க்களமாய் இருந்தார் .  (  நாங்கல்லாம் அப்பவே அந்த மாதிரி இப்போ கேட்கவா வேணும்  ! )

  • ஈரோடு வழக்கறிஞர் ராஜசேகர் ( நண்டு @ நொரண்டு ) மக்கள் தொலைகாட்சி பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போது  என்னை அழைத்துச் சென்று பேச வைத்தார் ... ( உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • தமிழ்வாசி பிரகாஷ் , ராஜ் , ரமணி , தமிழ் ராஜா ஆகியோருடன் நான் அளவளாவிக் கொண்டிருந்தேன் .. ( இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புது )

  • மதியம் உணவருந்தும் போது கேபிள் சிறு முதலீட்டுப் படங்களின் தற்போதைய நிலை , சினிமா செய்திகள் , அவர் இப்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கும் படங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் என்னுடன் மனம் திறந்து பேசினார் ... அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே ஒரு பதிவுலக நண்பர் கேபிள் எழுதிய புத்தகத்தில் அவரிடமே ஆட்டோகிராப் வாங்கினார் ...     ( இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்

  • உணவு இடைவெளி முடிந்த பிறகு யாரையும் தூங்க விடாமல் செய்வதற்காக கவியரங்கம் தொடங்கும் என்று சுரேகா அறிவுத்தவுடனே சிலர் எஸ்கேப் ஆகி விட்டார்கள் ... ( அப்பா ! இப்பவே கண்ண கட்டுதே !)

  • மயிலன் தன் சிறு வயதில் ஆரம்பித்து நடைபெறப்போகும் கல்யாணம் வரை தன் காதல் அனுபவங்களை கவிதை மழையாய் பொழிந்தார் ... அக்டோபரில் திருமணம் செய்து கொள்ளும் அவருக்கு எல்லோர் சார்பாகவும் வாழ்த்துக்கள் ... ( நண்பா உங்க காதல் மேட்டர்லாம் உட்பிக்கு தெரியுமா ?!

  • நான் கவிதை வாசிக்க செல்லும் போதே அருகிலிருக்கும் யாரையாவது கைதட்டி விட்டு வரச் சொல்லுங்கள் என்று சுரேகா அறிவுரை செய்தார் ... நல்ல வேலை அருகிலிருப்பவர்கள் மட்டுமல்லாமல் அரங்கத்தில் நிறைய பேர் கவிதைக்காக ! கை தட்டியது என் கல்லூரி நாட்களை நினைவு படுத்தியது ... ( இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல !? ) 

  • சி.பியுடன் பேசும் போது அவர்  காபி , டீ . சிகரட் , தண்ணி , பாக்கு என்று எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர் என்று சொன்ன  போது எனக்கு லேசாக நெஞ்சை அடைத்தது ... ( ஒர்த்தர் நல்லா இருந்தா உனக்கு பொறுக்காதே )  

  • ராஜி , கோவை சரளா போன்ற பெண் பதிவர்கள் என்னனயும் , என் ப்ளாகையும் அடையாளம் கண்டு கொண்டு பேசினார்கள் ( ஐ லேடீஸ் !) 

  • பி.கே.பி பேச ஆரம்பிக்கும் போது சிலர் போண்டாவை நோக்கி படையெடுப்பதை பார்த்த சுரேகா இது போல நடந்து கொள்ளக் கூடாது என்று கடிந்து கொண்டார் ... பி.கே.பி பேசி முடித்ததும் பதிவர் கிராமத்துக் காக்கையுடன் வந்திருந்த ஒரு நண்பர் சீரியசாக " இப்போ போண்டா கிடைக்குமா பாஸ் " என்று அப்பாவியாக கேட்டார் ... ( அய்யோ வடை போச்சே ! ) 

  • பி.கே.பி அவர்கள் பதிவுலகில் இன்று வரை நடந்து வரும் சமாசாரங்களை அப்படியே சொன்ன போதே அவர் நிகழ்ச்சிக்கு வெறும் ஒப்புக்காக வரவில்லை , முழு ஆர்வத்துடன் வந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது ... பதிவர்கள் தனி மனித தாக்குதல்களையும் , ஆபாசமான , அருவருக்கத்தக்க பதிவுகளையும் தவிற்க  வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார் ... ( சரியா சொன்னீங்க

  • நிகழ்ச்சி வலையகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது ...அதே போல மக்கள் தொலைக்காட்சியில் செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 8 மணிக்கும் ஒளிபரப்பாக போகிறது ... ( நமக்கும் பப்ளிசிட்டி வேணுமில்ல

  • இது போன்ற சந்திப்புகள் பதிவுலகத்தை நிச்சயம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியே ... தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு நல்ல படியாக நடப்பதற்கு காரணமாய் இருந்த அனைவருக்கும் , உறுதுணையாய் இருந்த மக்கள்சந்தை .காம் நிறுவனத்திற்கும் நாம்  நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் . கருத்துக்களால்  நாம் வேறுபட்டிருந்தாலும்   , அனைவரும் பதிவர்களாக ஒன்றுபட்டுள்ளோம் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு காட்டுகிறது . இந்த பதிவிற்கு எல்லா தளங்களிலும் ஓட்டுக்களை போட்டு அந்த ஒற்றுமையை நாம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்வோமாக ... ( ஹி ...ஹி









      

     

25 August 2012

18 வயசு - பேதலிக்கும் திரைக்கதை ...


ரேணிகுண்டா  வெற்றியை தொடர்ந்து  மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் பன்னீர்செல்வம் - ஹீரோ ஜானி கூட்டணியில் வந்திருக்கும் படம் 18 வயசு ... படத்தை பார்த்த பிறகு இந்த படத்திற்கா இத்தனை வருடங்கள் எடுத்துக்கொண்டார்கள் என்று நினைத்து தலை சுற்றுகிறது ...

கார்த்திக் ( ஜானி ) சின்ன வயதிலிருந்தே அப்பா கோண்டு , அம்மா யுவராணியோ  அப்பாவை சட்டை செய்யாமல் வேறு ஒருவருடன் கள்ள தொடர்பிலிருக்கிறார் ... இது தெரிந்தவுடன் அப்பா தற்கொலை செய்து கொள்ள   அதை மிக அருகிலிருந்து பார்த்ததாலும் , அம்மாவின் அரவணைப்பில்லாத தனிமையாலும் விலங்குகளை கண்டவுடன் அதே போல மாறிவிடும் மன நிலை பாதிப்புக்குள்ளாகிறார் ஜானி ... ஹீரோயின் காயத்ரியை பார்த்தவுடன் இவருக்கு காதல் வந்து விடுகிறது ... முதலில் ஜானியுடன் பழகும் காயத்ரி இவர் குணம் தெரிந்து விலக , அதற்கிடையில் தன்   தாயையும் ,  தன் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வந்திருக்கும் அம்மாவின் கள்ளக்காதலனையும் ஜானி கொன்று விட்டு காயத்ரியுடன் காட்டுக்குள் சென்றுவிடுகிறார் ... கடைசியில் தன்னை தேடும் இன்ஸ்பெக்டரிடம் இருந்து ஜானி தப்பித்தாரா ? காயத்ரியை கைபிடித்தாரா ? என்பதை பார்ப்பவர்களையும் மனநிலை பாதிப்புக்குள்ளாக்கி சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...

குணா , காதல்கொண்டேன் கதையுடன் " ANIMAL " என்ற  ஆங்கிலப்படத்தையும் கலந்து வடிகட்டி எடுத்த கதையே " 18 வயசு " ... கதையை சுட்டிருந்தாலும் திரைக்கதையில் டீட்டைளிங்கான ட்ரீட்மென்ட் கொடுத்திருந்தால் நிச்சயம் ஒரு நல்ல த்ரில்லராக படம் வந்திருக்கும் ...

கமல் குணாவில் " அபிராமி அபிராமி " என்றார் ரசிக்க முடிந்தது , விக்ரம் தெய்வத்திருமகளில் " நில்லா நிலா " என்றதையும் ரசிக்க முடிந்தது , ஆனால் இவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு ஜானி இல்லையென்றாலும் அடிக்கடி இவர் " காட்டுக்கு போகணும்" என்று சொல்வதை சகிக்க கூட முடியவில்லை ... மற்றபடி தன்னுடைய லிமிட்டேசன் தெரிந்து ஜானி முடிந்தவரை கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார் ... " ரேணிகுண்டா " போன்று ஒரு கதைக்களம் அமையாமல் போனது அவரது துரதிருஷ்டமே ...


ஹீரோயின் காயத்ரி பக்கத்து வீட்டுப்பெண் போல பளிச்சென்று இருக்கிறார்... இரண்டு , மூன்று வெற்றிப் படங்களில் நடித்தால் நல்ல எதிர்காலம் இருக்கிறது ... ஜானியின் நண்பன் மனநலம் குன்றிய ஜாக்கியாக நடித்திருப்பவர் புதுமுகம் என்று நினைக்கிறேன் , சேட் பாஷையில் இவர்
" நண்பா , காதல் வாழ்க " என்று வசனம் பேசி தன் நடிப்பால் கவர்கிறார்...ஜானிக்கு எதுவும் வசனம் இல்லாததால் படம் முழுவதும்  இவரே பேசி ரசிக்கவும் வைக்கிறார் , அதே சமயம் பொறுமையையும் சோதிக்கிறார் ...

முதல் பாதியில் ஜானியை காதலிப்பதற்காக வரும் பெண்ணின் நடிப்பிற்கும் , " 150 ரூபாக்கு ரீ சார்ஜ் பண்ணிடுங்க " என்று அவர் பேசும் வசனத்திற்கும் தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ். சைக்கோ படம் எடுக்கிறேன் என்று ரசிகர்களுக்கு கொடுத்த காயத்திற்கு அந்த பெண் வரும் நாலு சீன்கள் நல்ல மருந்து ... இன்ஸ்பெக்டராக நடித்திருப்பவர் , மருத்துவராக நடித்திருக்கும் ரோகினி , ஜானியின் நண்பராக வருபவர் இவர்களெல்லாம் நல்ல தேர்வு ...

அம்மாஞ்சி போல இருக்கும் ஒருவரை யுவராணியின் கள்ளக்காதலனாக போட்டது படத்தின் பெரிய ஓட்டை , அதே போல ரோகினி யின் கணவனாக நடித்திருப்பவர் ரோகினி " கிருஷ்ணா ஏதாவது செய்ங்க " என்று உணர்ச்சிப்பூர்வமாக வசனம் பேசும் போது ஞே என்று பரிதாபமாக முழிக்கிறார் ... இவர்களை நடிக்க வைத்திருக்கலாம் அல்லது நடிக்க தெரிந்த யாருக்காவது இயக்குனர் இந்த வாய்ப்பை கொடுத்திருக்கலாம் ... சார்லஸ் - கணேஷ் இருவரின் இசையில் " உன்னை ஒன்று " உள்ளிட்ட மெலடி பாடல்களும் , பின்னை இசையும் அருமை ... ஒளிப்பதிவு  படத்தின் தேவைக்கேற்றபடி இருக்கிறது  ... எடிட்டிங் சீராக இல்லை ... உதாரணத்திற்கு ஒரு சீனில் கையில் அடிபட்டு பேண்டேஜுடன் வரும் இன்ஸ்பெக்டர் அடுத்த சீனில் சாதாரணமாக வருகிறார் , அதற்கடுத்த சீனில் திரும்பவும் பேண்டேஜுடன் வருகிறார் ...



தன்  முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் உள்ள படத்தை கொடுத்ததற்காக   இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம்... வன்முறை , ஆபாசம் இரண்டிற்கும் அதிக ஸ்கோப் கதையில் இருந்தும் அதை தொடாத தைரியம் , முதல் பாதியை கொண்டு சென்ற விதம், ஹீரோயினின் குடும்ப சூழலை நாசூக்காக சொன்ன பாங்கு இவைகளெல்லாம் 18 வயசை ரசிக்க வைக்கின்றன ...

தன் மனைவி ஒருவன் கையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதை பார்த்தவுடன் தன் ஒரே மகனின் எதிர்காலத்தை மறந்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொள்வது போல காட்டுவது , தந்தையின் மறைவுக்குப் பிறகு ஜானி தாயால் அடைந்த கொடுமைகளை விஷுவலாக  காட்டாமல் ஏதோ ஒரு வரியில் ஜானி சொல்வது , ஜானி ஏன் இது போன்ற மனநோய்க்கு ஆளானார் என்பதை டீட்டைளாக சொல்லாமல் செய்தி வாசிப்பது போல ரோகினி சில வரிகளில்  சொல்லிவிடுவது , ஜானியின் நிலைமையை நினைத்து பரிதாபம் வருவதற்கு பதில் நமக்கு சிரிப்பு வருவது போல அமைக்கப்பட்ட காட்சியமைப்புகள் ,

" திருநங்கைகளே சந்தோசமாக இருக்காங்க " என்று என்னமோ அவர்கள் சந்தோசமாக இருக்கக் கூடாது என்பது போல சொல்லிவிட்டு அவர்களின் சோகத்தை விளக்குவது போல ஒரு பாடலை கதைக்கு சம்பந்தமேயில்லாமல்  திணித்தது , விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் " விடுங்கடா சாமி " என்கிற அளவிற்கு பொறுமையை சோதிக்கும் இரண்டாம் பாதி  திரைக்கதை இவைகளெல்லாம் 18 வயசை பேதலிக்க வைக்கின்றன ... படம் முடிந்து வரும் போது " ரேனிகுண்டா " வை எடுத்த பன்னீர்செல்வம் தான் இந்த படத்தையும் எடுத்தாரா ? என்ற சந்தேகம் லேசாக எட்டிப் பார்க்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 38  

21 August 2012

வலைச்சரத்தில் நான்...


திரு.சீனா அவர்களின் வேண்டுகோளை ஏற்று வலைச்சரத்திற்கு ஆகஸ்ட் 6 - 12 வரை நான் ஆசிரியர் பொறுப்பேற்று என்னால் முடிந்த வரை 21 பதிவர்களை அறிமுகம் செய்தேன் ... ஒரு மாதமாக தள்ளிப் போய்க் கொண்டேயிருந்த பொறுப்பினை ஒரு வழியாக நல்ல  படியாக முடித்ததில் எனக்கு மகிழ்ச்சி ...  அந்த ஒரு வாரத்தில் நான் பதிவு செய்த சில ஹைக்கூக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் ... இதில் எனது பழைய ஹைக்கூக்களும் அடக்கம் ... 

பெண்ணே ...!

ஆணாதிக்கம் பேசுகிறாய்

என்னை 
அடிமைப்படுத்திக்   கொண்டே ...

நீ சிரிக்கிறாய் 
பைத்தியக்காரனாவது 
நான் மட்டும் தான் ...

தொலைந்த என்னை தேடுகிறேன்
நீ கொடுத்த
உன் திருமண அழைப்பிதழில் ...

சுற்றுச்சூழல் 


மரங்கள் தலைப்பில் 
கவிதை வராமல் 
கசக்கி எறிந்தேன் காகிதத்தை ...

பகுத்தறிவு


கடவுளே இல்லை 
சொன்னவருக்கு 
சிலை வைத்தான் பகுத்தறிவுவாதி ...

ரசிகன் 


தியேட்டர் சண்டையில் 
வாயில் ரத்தம் வருத்தப்பட்டேன் 
விசிலடிக்க முடியாமல் போனதற்கு ....

எயிட்ஸ்


தீண்டாமை பெருங்குற்றம் 
தவறாக புரிந்து கொண்டார்கள் 
விளைவு எயிட்ஸ் ...





12 August 2012

இன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...



ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவுட்டு வந்து விடுவான் ... அவுட்டு வருவதால் என் வாழ்க்கை மாறப்போவதில்லை , ஆனால் அவன்  கொண்டு வரும் மூணு கோடி ரூபாய் என் வாழ்க்கையை மாற்றப் போகிறது ... அவன் வருவதற்குள் நீங்கள் என்னை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ... 

வாழ்க்கைக்கு எது முக்கியம் ?  மன நிம்மதி , சந்தோசம் , சந்ததி , பதவி , புகழ் என்று எவ்வளவையோ அடுக்கிக்கொண்டே போகலாம் , ஆனால் இவையெல்லாம் பணத்திற்கு முன்னாள் பம்மாத்து என்பது என்னைப் போல வாழ்க்கையில் அடிபட்ட எவனுக்கும் நன்றாகவே தெரியும் ... ஆமாம் பணம் மட்டும் தான் எனது கடவுள் , கர்த்தா , குரு எல்லாமே ... பணம் இல்லாததால் தான் பெற்றோர்களால் என்னை நினைத்தது போல வளர்க்க முடியவில்லை ... அவர்களிடம் பணம் இல்லாததை பற்றி நான் குற்றம் சொல்லவில்லை , ஆனால் அதை அடைவதற்காக அவர்கள் எந்த முயற்சியையும் செய்யாமல் விலங்குகள் போல வாழ்ந்துகொண்டிருந்ததை தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை ... 

அதனால் தான் எனக்கு விவரம் தெரிந்த வயதுக்கு மேல் அவர்களோடு இருக்க முடியாமல் சென்னைக்கு ஓடி வந்துவிட்டேன் ... கெட்டும் பட்டணம் போ என்பார்கள் , நான் பெரியவர்கள் சொன்னதில் செய்தது  இதை மட்டும் தான் ... முதலில் ஏதேதோ வேலை செய்து வயிற்றை கழுவிக் கொண்டிருந்த  என் வாழ்க்கை  பால் சேட்டின் நட்பு கிடைத்த பிறகு தான் மாறத்தொடங்கியது ... என் போன்ற படிக்காதவர்கள் கூடிய விரைவில் பணம் பார்ப்பதென்பது நடக்காத காரியம் , எனவே என்னைப் பொறுத்தவரை எப்படி பணம் சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமில்லை , எப்படியோ சம்பாதிக்க வேண்டும் ... சேட் மூலமாக இரண்டு மூன்று பொருட்களை கை மாற்றி விட்ட போது நல்ல பணம் கிடைத்தது , கிடைத்த  பணத்தை நண்பர்களுடன் உடனே குடித்தழித்தேன்.

இங்கே நண்பர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது , கடத்தல் தொழிலில் எவனும் எப்பொழுது வேண்டுமானாலும் எதிரியாக மாறலாம் , இருந்தாலும் ஒன்றாக அமர்ந்து குடிக்கும் போது எல்லோரும் சந்தோசமாகவே இருப்போம் ... குடிக்கு எவ்வளவோ சைடிஷ் இருந்தாலும் எங்களுக்கு அவுட்டு தான் ஊறுகாய் ... அவனுக்கு அவுட்டு என்பது இயற்பெயரா அல்லது யாராவது வைத்த பெயரா என்றெல்லாம் தெரியாது , ஆனால் நாங்கள் அப்படித்தான் கூப்புடுவோம் ... ஆறடிக்கு வளர்ந்திருந்தாலும் அவுட்டு அறிவா கிலோ என்ன விலை என்று கேட்பான் , அதனால் தான் சில ரிஸ்கான வேலைகளை அவனிடம் தள்ளி விடுவோம் , எங்களைப் பொறுத்தவரை அவுட்டு ஒரு பலிகடா ... இங்கே பாவ , புண்ணியமெல்லாம் பார்த்தால் பிழைப்பு நடத்த முடியாது ... 

அவுட்டு தான் இப்படி ஆனால் அவன் மனைவி அழகி , பேரழகி ... ஒரு முறை நல்ல போதையில் பெண்களை பற்றிய பேச்சு வந்தது , நானும் சேட்டும் போதையில் இருக்கும் போது மட்டும் தான் பெண்களை பற்றி பேசுவோம் , அது என்னவோ அந்த வஸ்து உள்ளே போய் விட்டாலே காம வெறி தலைக்கு ஏறி விடுகிறது...சேட் வழக்கமாக கூட்டிச் செல்லும் பெண்ணிடம் போக வேண்டாமென்று நான் ஏற்கனவே முடிவு செய்திருந்தேன் , என்னமோ சலித்து விட்டது , ஆனால் சேட்டுக்கு மட்டும் அவள் நடிகை என்பதாலோ என்னமோ அலுக்கவே இல்லை ... இந்த முறை நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன் , வேறு எங்காவது போகலாம் என்று முடிவு செய்த பின் சேட் என்னை ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்றான் ... நான் அவளை பார்த்தவுடன் அசந்துவிட்டேன் , அவள் அவ்வளவு அழகு ... ஆனால் அவள் அவுட்டுவின் மனைவி என்று தெரியவந்ததும்  கொஞ்சம் அதிர்ச்சி , சேட் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாத போதே அவன் அடிக்கடி இங்கே வருகிறான் என்று தெரிந்து கொண்டேன் ...

" ஒன்னும் யோசிக்காத  இதெல்லாம் அவுட்டுக்கு தெரியாது , சேட்டுக்கு அப்புறம் நீ தான்" அவள் எத்தனை பேரிடம் இப்படி சொல்லியிருப்பாள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு எனக்கு அப்போது நேரமில்லாததால் நான் வந்த வேலையில் இறங்கினேன் ... எல்லாம் முடிந்த பிறகு சேட்டுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவுட்டு வந்தான் .. " எப்போ வந்தீங்க சார் , சொல்லியிருந்தா நானே உங்கள கூட்டியாந்திருப்பேனே"  அவன் சொன்ன போது என் கண்கள் அவனை நேரடியாக பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டது ... அங்கிருந்து இருவரும் திரும்பி வரும் வழியில் தான் சேட் என்னிடம் அந்த விஷயத்தை சொன்னான் ... 

இது வரை சின்ன சின்ன சரக்குகளை கை மாற்றி விட்டு சில லட்சங்களை பார்த்த எங்களுக்கு இது போட்டியில் கலந்து கொள்ளாமலேயே கைகளில் கிடைக்கப் போகும் மூணு கோடி ... இந்த முறை கடத்தப் போவது விலையுயர்ந்த போதை வஸ்து , மாட்டினால் தொலைந்தோம் , அவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடியாது ... ஆனாலும் இந்த வாய்ப்பை விட எங்களுக்கு மனதில்லை என்பதால் ரிஸ்க் எடுக்க முடிவெடுத்தோம் ... வழக்கம் போல அவுட்டுவை வைத்து பொருளை கை மாற்றிவிடலாம் , அவன் மாட்டினாலும்  எங்களுக்கு பிரச்சனையில்லை , அவன் உயிரே போனாலும் எங்களை காட்டிக் கொடுக்க மாட்டான் ... இருவரும் முடிவு செய்த பின் அவுட்டு வீட்டிற்கு திரும்பி சென்றோம் ... 

வழக்கம் போல சில ஆயிரங்களை கொடுத்து விஷயத்தை சாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்த எங்களுக்கு அவுட்டுவின் மனைவி பெரிய ஷாக் கொடுத்தாள்.. "உயிரை பணயம் வச்சு உங்களுக்காக வேல செய்யுராறு , அதான் இந்த தடவ வரதுல சரி  பங்கு கொடுத்தீங்கன்னா , சொந்த ஊருக்கே போயி செட்டிலாயிடலாம்னு இருக்கோம் " அவள் தீர்க்கமாய் சொன்னதிலிருந்தே அவுட்டு மாதிரியில்லை என்று தெளிவாக தெரிந்தது ... " நீ நினைக்கிற மாதிரியெல்லாம் பெருசா ஒண்ணுமில்ல, வேணுமின்னா எப்பவும் தரத விட ஜாஸ்தியா தரோம் "  சேட் சொன்னவுடன்  , அவள் கோணலாய் சிரித்தபடி" என்ன மூணு கோடியா " என்று கேட்ட போதே அவள் நிறைய விஷயம் தெரிந்தவள் என்பது எங்களுக்கு தெளிவாக புரிந்தது ... நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம் ... எங்கள் இருவருக்குள்ளும் ஒரே எண்ணம ஓடவே நாங்கள் அவள் சொன்னபடி பங்கை இரண்டுக்கு பதில் மூன்றாய் போட முடிவெடுத்தோம் ... இதில் எதிலுமே சம்பந்தம் இல்லாதது போல் அவுட்டு எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ... அவனுக்கு இந்த பணம் ரொம்ப அதிகம் தான் என்றாலும் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை ... 

" மூணு கோடி கைக்கு வந்ததும் முதல்ல அவுட்டையும் , அவளையும் போட்டுரனும் " நான் மனதில் நினைத்ததையே சேட்டும் சொன்னான் ... நான் ஆமாம் என்பது போல தலையாட்டினேன் , அந்த நொடி சேட்டையும் போட்டுவிட்டால் மூணு கோடியும் எனக்கே என்று என் மனம் நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது ... இதோ நினைத்தது படியே அவுட்டு வேலையை முடித்துக்கொண்டு பணத்தோடு வந்து கொண்டிருக்கிறான் என்று சேட் செல்போனில் சொன்ன போதே என் திட்டத்தை மனதிற்குள் நான் பட்டை தீட்டிக் கொண்டிருந்தேன் ... சந்தோசமோ , துக்கமோ சேட் சரக்கடிக்காமல் இருக்க மாட்டான் , நான் ஏற்கனவே திட்டமிட்டபடி சரக்குடன் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டால் சேட் மூர்ச்சையாகி விடுவான் , அவுட்டு சரக்கடிக்க மாட்டான் , எனவே அவன் வந்தவுடன் பணத்தை எடுத்துக் கொண்டு கைத்துப்பாக்கியை  வைத்தே அவன் கதையை  முடித்து விடலாம் ... 

எங்கள் திட்டப்படி சேட் அவள் மனைவியை இந்நேரம் முடித்திருப்பான் , நினைக்கும் போதே என் செல்போன் சினுங்கியது ...  " சொல்லு சேட் " அவன் விஷயத்தை சொன்னவுடன் என் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது ... " சரி நான் அவ பாடிய வர வழில டிஷ்போஸ் பண்ணிடுறேன் , நீ நம்ம அயிட்டத்த வாங்கி வை " அவன் அயிட்டமும் அவனுக்காக நான் வாங்கிய அயிட்டமும் தயாராகவே இருந்தன ... 
" வா சேட் எல்லாம் ரெடியா இருக்கு " போனை வைத்துவிட்டு ஒரு முழு சிகரெட்டை முழுவதுமாய் புகைத்தேன் ... சேட் வந்தவுடன் கத்தியின்றி ரத்தமின்றி அவன் கதை முடிந்தது , வாயெல்லாம் நுரையுடன் ஒரு பக்கம்  கோணிக் கொண்டே அறைக்குள் செத்துக் கிடந்தவனை வெறித்துப் பார்த்தபடியே இரண்டு சிப் அடித்தேன் ... 

எனக்கு புது வாழ்க்கையை காட்டியவனின் வாழ்க்கையை முடித்துவிட்டேன் , லேசாக ஏதோ ஒரு உணர்வு என்னைத் தாக்க அதை தவிர்ப்பதற்காக டி.வி யை ஆன் செய்தேன் ... வெஸ்டர்ன் ஆல்பத்திலிருந்து சுட்ட பாடலுக்கு தமிழ் பட ஹீரோயின் இடுப்பை ஆட்டிக் கொண்டிருந்தாள் ... டி.வி சத்தத்தை மீறி கதவை தட்டும் சத்தம்  கேட்கும் போதே வந்தது அவுட்டு தான் என்று எனக்கு விளங்கியது ... " இருடா வரேன் " சேட் செத்துக் கிடந்த அறையை சாத்தி விட்டு கதவை நோக்கி நான் போவதற்கு முன் டேபிளின் மேல்    துப்பாக்கி  இருப்பதை ஒரு முறை உறுதி செய்து கொண்டேன் ... " வாடா ஏதாவது சாபுட்றையா " வேகமாக மண்டையை ஆட்டினான் .. அவனிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு சேட்டுக்காக வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலத்தை அவனிடம் கொடுத்தேன் ... 

சேட் தான் சாப்பிடமாலேயே போய் சேர்ந்து விட்டான் , இவனாவது சாபிடட்டுமே என்ற எண்ணத்தை விட அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள் பணத்தை எண்ணி முடித்து விடலாம் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கியிருந்தது ... பணத்தை பல தடவை மோர்ந்து பார்த்துக் கொண்டேன் , அதை அழகாக பைக்குள் அடுக்கி வைத்து விட்டு கைகளில் உறைகளை மாட்டிக் கொண்டேன் , அவன் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ... வாசல் கதவு தாழ்ப்பாள் சரியாக  போட்டிருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பார்த்து விட்டு திரும்பிய போது தான் கூர்மையான ஏதோ ஒன்று என் வயிற்றுக்குள் வேகமாக இறங்கியது ... 

கைகளில் கத்தியுடன் அவுட்டு நின்று கொண்டிருந்தான் , அவன் கழுத்தை நெறிக்க நான் நினைப்பதற்குள் மறு முறை முன்பை விட வேகமாக கத்தி என் வயிற்றுக்குள் இறங்கியது ... மயக்கத்தில் கண்கள்  சொருக அவன் மேல் விழுந்த என்னை தள்ளி  விட்டு விட்டு  அவுட்டு பணம் இருந்த அறையை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருந்தான் ... கண்கள் சொருகி செத்துக் கிடந்த சேட் ஒரு முறை என் நி...னை..வு...க்..கு  வ..ந்....தா ... 

4 August 2012

அன்னா - மற்றுமொரு மன்மோகன் ?! ...



ழலுக்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை பத்து நாட்களுடன் முடித்துக் கொண்ட அன்னாஹசாரே தான் தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்...
இதற்கு முன் அன்னா உண்ணாவிரதம் இருந்ததை  அன்னாவின் விரதமும்,மன்மோகனின் மௌனமும்  என்ற பெயரில் பதிவிட்டிருந்தேன் ... ஊழலுக்கு எதிராக , அதிலும் குறிப்பாக காங்கிரஸ் அரசின் உச்சக்கட்ட ஊழலை பார்த்து கொதிப்படைந்து போயிருக்கும் கோடானுகோடி இந்தியர்களுள் நானும் ஒருவன் ... 


என்ன தான் எதிர்க்கட்சிகளான பி.ஜே.பி யும் , கம்யூனிஷ்டும காங்கிரஸின் ஊழலை எதிர்த்தாலும் அதை அரசியலாகத்தான் மக்கள் பார்ப்பார்கள் , அதையே அரசியல் சாராத ஒரு தனி மனிதன் செய்யும் போது அனைவரிடமும் ஒருவித பரவசமும் , உத்வேகமும் தொற்றிக்கொள்ளும் ... ஒரு கிராமத்தையே முன் மாதிரியாக மாற்றிக் காட்டிய காந்தியவாதி அன்னா ஹசாரே முதன் முதலில் ஜன் லோக் பாலை வலியிறுத்தி உண்ணாவிரதம் இருந்த போது அனைவருக்கும் ஒரு உற்சாகம் பிறந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை ...  அன்னா ஹசாரேவின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு இரட்டடிப்பு செய்த போது மீண்டும் அன்னா களத்தில் குதித்த போதும் மக்களிடையே அதே வரவேற்பு இருந்து ... 


ஒரு பக்கம் அன்னாவிற்கு ஆதரவு பெருகிக் கொண்டே போனாலும் மறுபக்கம் அன்னாவின் ஊழலுக்கு எதிரான மசோதா நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் , அவர் ஒரு விளம்பர விரும்பி என்பதுமான விமர்சனங்களும் வளர்ந்து கொண்டே தானிருந்தன ... பழுத்த அரசியல் விமர்சகரும் , காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை தன் பத்திரிக்கையில் விமர்சித்து வருபவருமான சோ அவர்களே அன்னா அண்ட் குழுவினரை கோமாளிகளாகவே தொடர்ந்து சித்தரித்து வருகிறார் ... சோவுடைய நையாண்டிகளை நான் ரசிப்பவனாக இருந்தாலும் இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்தே கொண்டிருந்தேன் ... 


இருப்பினும் கொஞ்சம் நுணுக்கமாக ஜன்  லோக் பாலின் நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்த போதும் , அன்னாவை சுற்றியிருப்பவர்கள் அடிக்கும் கூத்துக்களை பார்க்கும் போதும் , முன்னுக்கு பின் முரணான சில கருத்துக்களை அவர்கள் கூறும் போதும் ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது ... அதனால் தானோ என்னவோ இந்த முறை அன்னா அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது எனக்கு பெரிதாக எந்த சலனமும் ஏற்ப்படவில்லை ... அது மட்டுமல்லாமல் இப்போது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட அன்னா அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் , ஆனால் தான் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் அறிவித்திருப்பது மேலும் நெருடலையே கொடுக்கிறது .. 


அரசியலே சாக்கடை , அரசியல்வாதிகள் எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருந்த அன்னா குழுவினர் இப்போது தடாலடியாக அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்திருப்பது அவர்கள் நம்பகத்தன்மையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது... சட்டத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வர நிச்சயம் அரசியல் ரீதியான ஆதரவு தேவை , அரசியல்வாதிகள் எல்லோரும் ஒத்துழைத்தால் தான் அந்த வகையான சட்டத்தை கொண்டு வர முடியும் ... ஊழலில்  ஊறிப்போன அரசியல்வாதிகள் அதற்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்து சொந்தக் காசிலேயே சூனியம் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் , இதே சட்டத்தை வைத்து உயர் பதவியில் இருக்கும் ஊழல் செய்யாதவர்களை கூட ப்ளாக்மெயில் செய்யும் அபாயமும் இருக்கிறது ... 





ஆரம்பத்திலிருந்தே அன்னா குழுவினருக்குள்ளே கருத்து வேறுபாடு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது , அதனால் தான் ஒரு நாள் மத்திய அரசை ஆதரித்தவர்கள் அடுத்த நாள் திட்டித் தீர்த்தார்கள் ... இப்போது இருக்கும் சூழ்நிலையில் அன்னா கட்சி ஆரம்பித்தாலும் ஆட்சியை பிடிப்பதென்பது நடக்காத காரியம் , அப்படியே பிடித்தாலும் இந்த மசோதாவை நடைமுறைப் படுத்த முடியுமா என்பது இமாலய கேள்வி ... தற்போதைய நிலையில் தனித்து ஆட்சி என்பது எட்டாக்கனியாகி விட்ட நிலையில் அன்னா யாருடன் கூட்டு சேர்வார் ? 


காங்கிரஸுடன் சேர முடியாது , பி.ஜே,பி யுடன் சேர்வதற்கு தனிப்பட்ட முறையில் அவருக்கு விருப்பமிருந்தாலும் யாராவது மதவாதி என்று சொல்லி விடுவார்களோ என்ற பயத்தால் அதையும் செய்ய முடியாது ... ஏற்கனவே ஊழலில்லாத மோடியின் ஆட்சியையும் , அவரையும் நியாமாக பாராட்டி விட்டு பின்னர் போலி மதவாதத்திற்கு பயந்து தன் கருத்துக்களை மாற்றியவர் அன்னா ... இந்த சம்பவத்தின் போதே அரசியலில் குதிப்பதற்கு  அவர் ஆர்வமாய் இருப்பது ஒரளவு புலனானது , ஏனெனில் அரசியல்வாதிகள் தான் ஓட்டுக்கு பயந்து போலி மதவாதம் பேசுகிறார்கள் என்றால் அரசியல் சாரா இயக்கத்திலிருக்கும் அன்னா பயந்திருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை ...


ஒவ்வொரு உண்ணாவிரதத்தின் போதும் தவறாமல் அவரை லைவாக ஆங்கில சேனல்கள் காட்டிய போது சில சமயங்களில் அவையெல்லாம் தமிழககத்தில் கடந்த ஆட்சியின் போது கலைஞர் டி.வி யில் ஒளிபரப்பான " முத்தமிழ்கலைஞர்  " அவர்களை நாயனாக வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றை நியாபகப்படுத்தின ... நிச்சயம் இதற்கு அன்னாவை குறை கூற முடியாது , ஆனாலும் இந்த சம்பவங்கள் அனைத்தும் அன்னாவையும் ஒரு விளம்பர பிரியரோ என்ற அச்சத்துடனே பார்க்க வைத்தன ... 




அரசியலில் ஈடுபடவும் , கட்சி ஆரம்பிக்கவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது , அதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடுமில்லை , ஆனால் அன்னா அரசியலில் ஈடுபட்டு தான் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதே எனது கேள்வி . எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆரம்பத்தை பார்த்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு தான் கட்சியை தொடங்கியிருப்பார்கள் , ஆனால் அது போக போக மக்களுக்கு பயன்பட்டதோ இல்லையோ அவர்களுடைய மாக்களுக்கும் , சுற்றியிருக்கும் கூட்டதிற்குமே பயன்பட்டிருக்கிறது ... 


அதே போல அன்னாவின் உண்ணாவிரதங்களும் அரசியல் ஸ்டண்டா ? தனிப்பட்ட முறையில் அன்னா நேர்மையாக இருந்தாலும் கட்சியிலிருப்பவர்கள் அனைவரையும் அதே போல கட்டுக்கோப்பாக வைக்க முடியுமா ? என்பது கேள்விகளெல்லாம் நம்மை குடைகின்றன ... ஏனெனில் நம்மூரில் மன்மோகன்சிங் என்று ஒரு நல்லவர் இருந்தார் ... ஒரு காலத்தில் சிறந்த பொருளாதார நிபுணராகவும் , நடுத்தர வர்க்கத்தினரின் நாயகனாவும் , அப்பழுக்கற்ற நேர்மையாளராகவும் பார்க்கப்பட்டவர் இன்றோ முதலாளிகளின் மீது கொண்ட விசுவாசத்திற்காகவும் , அவர் கடைபிடிக்கும் கூட்டணி தர்மத்திற்காகவும் , அவர் மீதே எழுந்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகவும் அதே நடுத்தர வர்க்கத்தினரால் எதிரி போல பார்க்கப்படுகிறார் ... அதைப் போல அரசியலில் குதிக்கப் போகும் அன்னாவும் மற்றுமொரு மன்மோகன் போல மாறிவிடக் கூடாது என்பதே மக்களின் ஆதங்கம் ... 
Related Posts Plugin for WordPress, Blogger...