25 August 2012

18 வயசு - பேதலிக்கும் திரைக்கதை ...


ரேணிகுண்டா  வெற்றியை தொடர்ந்து  மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் பன்னீர்செல்வம் - ஹீரோ ஜானி கூட்டணியில் வந்திருக்கும் படம் 18 வயசு ... படத்தை பார்த்த பிறகு இந்த படத்திற்கா இத்தனை வருடங்கள் எடுத்துக்கொண்டார்கள் என்று நினைத்து தலை சுற்றுகிறது ...

கார்த்திக் ( ஜானி ) சின்ன வயதிலிருந்தே அப்பா கோண்டு , அம்மா யுவராணியோ  அப்பாவை சட்டை செய்யாமல் வேறு ஒருவருடன் கள்ள தொடர்பிலிருக்கிறார் ... இது தெரிந்தவுடன் அப்பா தற்கொலை செய்து கொள்ள   அதை மிக அருகிலிருந்து பார்த்ததாலும் , அம்மாவின் அரவணைப்பில்லாத தனிமையாலும் விலங்குகளை கண்டவுடன் அதே போல மாறிவிடும் மன நிலை பாதிப்புக்குள்ளாகிறார் ஜானி ... ஹீரோயின் காயத்ரியை பார்த்தவுடன் இவருக்கு காதல் வந்து விடுகிறது ... முதலில் ஜானியுடன் பழகும் காயத்ரி இவர் குணம் தெரிந்து விலக , அதற்கிடையில் தன்   தாயையும் ,  தன் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வந்திருக்கும் அம்மாவின் கள்ளக்காதலனையும் ஜானி கொன்று விட்டு காயத்ரியுடன் காட்டுக்குள் சென்றுவிடுகிறார் ... கடைசியில் தன்னை தேடும் இன்ஸ்பெக்டரிடம் இருந்து ஜானி தப்பித்தாரா ? காயத்ரியை கைபிடித்தாரா ? என்பதை பார்ப்பவர்களையும் மனநிலை பாதிப்புக்குள்ளாக்கி சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...

குணா , காதல்கொண்டேன் கதையுடன் " ANIMAL " என்ற  ஆங்கிலப்படத்தையும் கலந்து வடிகட்டி எடுத்த கதையே " 18 வயசு " ... கதையை சுட்டிருந்தாலும் திரைக்கதையில் டீட்டைளிங்கான ட்ரீட்மென்ட் கொடுத்திருந்தால் நிச்சயம் ஒரு நல்ல த்ரில்லராக படம் வந்திருக்கும் ...

கமல் குணாவில் " அபிராமி அபிராமி " என்றார் ரசிக்க முடிந்தது , விக்ரம் தெய்வத்திருமகளில் " நில்லா நிலா " என்றதையும் ரசிக்க முடிந்தது , ஆனால் இவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு ஜானி இல்லையென்றாலும் அடிக்கடி இவர் " காட்டுக்கு போகணும்" என்று சொல்வதை சகிக்க கூட முடியவில்லை ... மற்றபடி தன்னுடைய லிமிட்டேசன் தெரிந்து ஜானி முடிந்தவரை கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார் ... " ரேணிகுண்டா " போன்று ஒரு கதைக்களம் அமையாமல் போனது அவரது துரதிருஷ்டமே ...


ஹீரோயின் காயத்ரி பக்கத்து வீட்டுப்பெண் போல பளிச்சென்று இருக்கிறார்... இரண்டு , மூன்று வெற்றிப் படங்களில் நடித்தால் நல்ல எதிர்காலம் இருக்கிறது ... ஜானியின் நண்பன் மனநலம் குன்றிய ஜாக்கியாக நடித்திருப்பவர் புதுமுகம் என்று நினைக்கிறேன் , சேட் பாஷையில் இவர்
" நண்பா , காதல் வாழ்க " என்று வசனம் பேசி தன் நடிப்பால் கவர்கிறார்...ஜானிக்கு எதுவும் வசனம் இல்லாததால் படம் முழுவதும்  இவரே பேசி ரசிக்கவும் வைக்கிறார் , அதே சமயம் பொறுமையையும் சோதிக்கிறார் ...

முதல் பாதியில் ஜானியை காதலிப்பதற்காக வரும் பெண்ணின் நடிப்பிற்கும் , " 150 ரூபாக்கு ரீ சார்ஜ் பண்ணிடுங்க " என்று அவர் பேசும் வசனத்திற்கும் தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ். சைக்கோ படம் எடுக்கிறேன் என்று ரசிகர்களுக்கு கொடுத்த காயத்திற்கு அந்த பெண் வரும் நாலு சீன்கள் நல்ல மருந்து ... இன்ஸ்பெக்டராக நடித்திருப்பவர் , மருத்துவராக நடித்திருக்கும் ரோகினி , ஜானியின் நண்பராக வருபவர் இவர்களெல்லாம் நல்ல தேர்வு ...

அம்மாஞ்சி போல இருக்கும் ஒருவரை யுவராணியின் கள்ளக்காதலனாக போட்டது படத்தின் பெரிய ஓட்டை , அதே போல ரோகினி யின் கணவனாக நடித்திருப்பவர் ரோகினி " கிருஷ்ணா ஏதாவது செய்ங்க " என்று உணர்ச்சிப்பூர்வமாக வசனம் பேசும் போது ஞே என்று பரிதாபமாக முழிக்கிறார் ... இவர்களை நடிக்க வைத்திருக்கலாம் அல்லது நடிக்க தெரிந்த யாருக்காவது இயக்குனர் இந்த வாய்ப்பை கொடுத்திருக்கலாம் ... சார்லஸ் - கணேஷ் இருவரின் இசையில் " உன்னை ஒன்று " உள்ளிட்ட மெலடி பாடல்களும் , பின்னை இசையும் அருமை ... ஒளிப்பதிவு  படத்தின் தேவைக்கேற்றபடி இருக்கிறது  ... எடிட்டிங் சீராக இல்லை ... உதாரணத்திற்கு ஒரு சீனில் கையில் அடிபட்டு பேண்டேஜுடன் வரும் இன்ஸ்பெக்டர் அடுத்த சீனில் சாதாரணமாக வருகிறார் , அதற்கடுத்த சீனில் திரும்பவும் பேண்டேஜுடன் வருகிறார் ...தன்  முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் உள்ள படத்தை கொடுத்ததற்காக   இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம்... வன்முறை , ஆபாசம் இரண்டிற்கும் அதிக ஸ்கோப் கதையில் இருந்தும் அதை தொடாத தைரியம் , முதல் பாதியை கொண்டு சென்ற விதம், ஹீரோயினின் குடும்ப சூழலை நாசூக்காக சொன்ன பாங்கு இவைகளெல்லாம் 18 வயசை ரசிக்க வைக்கின்றன ...

தன் மனைவி ஒருவன் கையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதை பார்த்தவுடன் தன் ஒரே மகனின் எதிர்காலத்தை மறந்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொள்வது போல காட்டுவது , தந்தையின் மறைவுக்குப் பிறகு ஜானி தாயால் அடைந்த கொடுமைகளை விஷுவலாக  காட்டாமல் ஏதோ ஒரு வரியில் ஜானி சொல்வது , ஜானி ஏன் இது போன்ற மனநோய்க்கு ஆளானார் என்பதை டீட்டைளாக சொல்லாமல் செய்தி வாசிப்பது போல ரோகினி சில வரிகளில்  சொல்லிவிடுவது , ஜானியின் நிலைமையை நினைத்து பரிதாபம் வருவதற்கு பதில் நமக்கு சிரிப்பு வருவது போல அமைக்கப்பட்ட காட்சியமைப்புகள் ,

" திருநங்கைகளே சந்தோசமாக இருக்காங்க " என்று என்னமோ அவர்கள் சந்தோசமாக இருக்கக் கூடாது என்பது போல சொல்லிவிட்டு அவர்களின் சோகத்தை விளக்குவது போல ஒரு பாடலை கதைக்கு சம்பந்தமேயில்லாமல்  திணித்தது , விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் " விடுங்கடா சாமி " என்கிற அளவிற்கு பொறுமையை சோதிக்கும் இரண்டாம் பாதி  திரைக்கதை இவைகளெல்லாம் 18 வயசை பேதலிக்க வைக்கின்றன ... படம் முடிந்து வரும் போது " ரேனிகுண்டா " வை எடுத்த பன்னீர்செல்வம் தான் இந்த படத்தையும் எடுத்தாரா ? என்ற சந்தேகம் லேசாக எட்டிப் பார்க்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 38  

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம். மொத்தத்தில் பார்க்கக் கூடாதுன்னு தெரிஞ்சுது.

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல விமர்சனம்


நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் said...

இதற்கு மேல் இந்தப் படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

Tamilraja k said...

இன்னும் நான் இத்திரைப்படத்தை பார்க்கவில்லை. முதல் முறை உங்கள் தளத்தில் ஒரு திரைவிமர்சனத்தைப் படித்தேன். நல்ல திறனாய்வு.

சி.பி.செந்தில்குமார் said...

நான் 41 மார்க் ஜட்ஜ் பண்ணேன், ஆனா இப்போ உங்க மார்க் தான் கரெக்ட்னு தோணுது ;-0

சி.பி.செந்தில்குமார் said...

பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி, இப்போதான் அடையாளம் தெரிஞ்சுது ;-0

Doha Talkies said...

படம் மொக்கையாக இருந்தாலும் உங்கள் விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு.
http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...