Showing posts with label SIMBU. Show all posts
Showing posts with label SIMBU. Show all posts

7 June 2015

காக்கா முட்டை - KAKKA MUTTAI - குயில் ...


சில வருடங்களுக்கு முன்னாள் நண்பன் ஒருவன் மூலம் காக்கா முட்டை படம் பற்றி கேட்ட மாத்திரத்திலேயே அந்த டைட்டிலுக்காக பிடித்திருந்தது . பிறகு அவ்வப்போது படத்தின் போஸ்டர் பார்க்கும் போதே ஒரு விதமான ஆவலைக் கொடுத்தது . பல வருடங்கள் ரிலீசாகாமல் கிடப்பில் இருந்த படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் என்று தெரிந்ததுமே நிச்சயம் பார்க்க வேண்டுமென தோன்றியது . கடைசியில் படத்தை பார்த்த பிறகு சினிமா ஆசையில் சென்னைக்கு வந்துவிட்டு இன்னும் என்னடா புடுங்கிட்டு இருக்க என்று என் மனசாட்சியின் கேள்வி எனை தூங்க விடாமல் செய்தது ...

சேரியில் இருக்கும் இரண்டு ஏழை சிறுவர்களின்  ( ரமேஷ் , விக்னேஷ் ) பீட்சா தின்ன வேண்டுமென்கிற கனவும் , அதற்கான போராட்டமுமே காக்கா முட்டை . டிக்கெட் பின்னால் எழுதிவிடக் கூடிய கதை , ஆனால் அதை அந்த இரண்டு சிறுவர்களுடன் பீட்சா வுக்காக நம்மையும் சேர்த்து இரண்டு மணிநேரம் பயணிக்க வைத்த விதத்தில் பிரமிக்க வைக்கிறார் புதுமுக இயக்குனர் மணிகண்டன் ...

சிறுவர்களுக்கு தேசிய விருது கிடைத்ததில் எந்த ஆச்சர்யமுமில்லை . ஏனெனில் ஒரு சீனில் கூட அவர்கள் நடிக்கவில்லை . பீட்சா வுக்காக காசு சேர்த்தாலும் திருடாத , பிச்சை எடுக்காத அண்ணன் பெரிய காகா முட்டை , அப்பாவித்தனமான ரியாக்சன்களால் மனதை அள்ளும்  தம்பி சின்ன காக்கா முட்டை இருவருக்கும் , அவர்களை இந்த விதத்தில் வேலை வாங்கிய இயக்குனருக்கும் வாழ்த்துக்கள் . சிறுவர்களை  நமக்கு ஏற்ற மாதிரி நடிக்க வைப்பது அவ்வளவு சுலபமல்ல . சிறுவர்கள்  மட்டுமல்ல பசங்களின் அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா , பாட்டி , ரயில்வே தொழிலாளி பழரசம் ( ஜோ ) , அதிகம் பேசாத பீட்சா கடை ஓனர் பாபு ஆண்டனி , பேசியே தொல்லை கொடுக்கும் அவர் பால்ய நண்பன் கிருஷ்ணமூர்த்தி , வெள்ளை சட்டை லுங்கியுடன் பேட்டி  கொடுக்கும் அரசியல்வாதி , பாபு ஆண்டனியை ப்ளாக்மெயில் செய்யும் இரண்டு சேரி திருடர்கள் என்று எல்லோருமே இந்த எளிமையான படத்துக்கு வலிமையான தூண்கள் ...


இயக்குனர் படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இருந்தது சவுகரியம் . நாம் சட்டென்று கடந்து போகும் சேரியை சற்றும் சலிக்காமல் காட்டியிருக்கிறார் மணிகண்டன் . " கருப்பு கருப்பு " பாடல் மற்றும் பின்னணி இசையில் ஜி.வி நன்றாகவே தெரிகிறார் . இது போன்ற தரமான படத்தை தயாரித்ததற்கு தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள் . தனியாக சீன்கள் வைக்காமல் படம் நெடுக கேரக்டர்களின் சின்ன சின்ன வசனங்கள் மூலம் நம்மை சிரிக்க வைப்பது இயக்குனரின் திறமை ...

இரண்டு சேரி சிறுவர்களின் அறிமுகத்திலிருந்து ஆரம்பிக்கும் படம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் பீட்சா பாய்ண்டுக்கு வந்தவுடன் சூடு பிடிக்கிறது . பீட்சா வுக்காக பணம் சம்பாதிக்க சிறுவர்கள் செய்யும் முயற்சிகள் , பணம் கிடைத்தும் பீட்சாவை சாப்பிட முடியாமல் அடையும்  அவமானங்கள் , அதை வைத்து சுயலாபம் அடைய நினைக்கும் மற்றவர்கள் என்று  எல்லாமே எதையோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருக்கும் நம் எல்லோரின் ஆசைகளையுமே தோலுரித்துக் காட்டுகிறது . ஏழை என்றாலே நல்லவன் , பணக்காரன் எல்லோருமே கெட்டவன் என்பது போல நாடகத்தனமான சீன்களை வைக்காமல் இயல்பாக இரண்டு பக்கங்களையும் காட்டியிருப்பது உண்மையான யதார்த்தம் . சுருக்கமாக சொன்னால் பக்கம் பக்கமான வசனங்களால் உணர வைக்க முடியாத கம்யூனிசத்தை படம் பார்க்கும் போது ஒன்றாக வாழும் நம் மனிதர்களுக்குள் ஏனித்தனை வேறுபாடுகள் ? என்ற எண்ணத்தை எழுப்பியதன் மூலம் அறிய வைக்கிறது இந்த காக்கா முட்டைக்குள் இருக்கும் குயில் ...

ஸ்கோர் கார்ட் : 52

( பின்குறிப்பு : கமல் ஒரு பேட்டியில் அன்பே சிவம் படத்தை இப்பொழுது டிவிடி , நெட்டில் பார்த்து விட்டு அருமை என்று பாராட்டுகிறவர்கள் அப்பொழுதே தியேட்டரில் பார்த்திருந்தால் தயாரிப்பாளர் தப்பித்திருப்பார் என்று சொல்லியிருப்பார் . அதே மாதிரியொரு பேட்டி சின்ன பட்ஜெட் படம் என்பதாலும் , இன்றைய காலகட்டத்தில் இணைய தளங்கள் மூலம் நல்ல படங்களுக்கு நிறைய வரவேற்பு கிடைப்பதாலும் தனுஷ் வாயிலிருந்து நிச்சயம் வராது என்று நம்பலாம் )


21 November 2012

போடா போடி - பொழுதுபோக்கு ...


நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்து விட்டு தீபாவளிக்கு வந்திருந்தாலும் விடிவி க்கு பிறகு விரல்வித்தைகள் காட்டாத சிம்புவை ரசிக்க வைத்திருக்கும் படம் போடா போடி . சிம்பு - வரலக்ஷ்மி ஜோடி படத்தின் பல குறைகளை மறக்கடிக்க  வைத்திருப்பது உண்மை . பெரிதாக எதையும் யோசிக்காமல் வெவ்வேறு மனநிலைகள் கொண்ட இருவரின் வாழ்க்கையை மட்டும் பொழுதுபோக்காக மெச்சூரிட்டியுடன் பதிவு செய்திருக்கிறார் புதுமுக இயக்குனர் விக்னேஷ் சிவன் ...

லண்டனில் வசித்தாலும் கலாச்சார ரீதியாக அந்த வாழ்க்கையோடு ஒத்துப்போகாத அர்ஜுன் ( சிம்பு ), அதே கலாச்சாரத்தில் ஊறிப்போன நிஷா
( வரலக்ஷ்மி ) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் , பின்பு ஒத்துவராமல் பிரிகிறார்கள் , கடைசியில் புரிந்து கொண்டு சேர்கிறார்கள் . இந்த ஒன் லைனை கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தாலும் சுவைபட சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...

சிம்புவிற்கு இது அல்டிமேட் கேரக்டர் . படம் முழுவதும் வரலக்ஷ்மியையும் வைத்துக் கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறார் . ஆட்டம் , பாட்டத்தோடு சேர்த்து குழந்தை மேலிருக்கும் அன்பை சொல்லி அழும் இடத்தில் தனக்கு நன்றாக நடிக்கவும் வரும் என்று நிரூபிக்கிறார் . தன் பழைய படங்களை  மேற்கோள் காட்டி சிம்பு பேசுவதை தவிர்த்திருந்தால் அவருடைய கேரக்டர் இன்னும் யதார்த்தமாக மனதில் பதிந்திருக்கும் ...


வரலட்சுமிக்கு இது முதல் படம் போல தெரியவில்லை , அந்த அளவிற்கு தன் மொத்த திறமையையும் காட்டி ( நடிப்ப மட்டும் தாங்க சொன்னேன் ! ) நடித்திருக்கிறார் . தயாரிப்பாளரின் பணப்பற்றாக்குறை வரு அணிந்திருக்கும் உடைகளில் நன்றாகவே தெரிகிறது.  அம்மணி முக்கால்வாசி படத்தில் வெறும் குட்டி  டவுசருடன் தான் வருகிறார் . படம் பல வருடங்கள் தயாரிப்பில் இருந்ததும் வருவின் உடல் எடையில் கூடுதலாகவே தெரிகிறது...

சிம்பு - கணேஷ் காம்பினேஷன் இந்த படத்திலும் நன்றாகவே வேலை செய்திருக்கிறது . கணேஷ் பேசும் போதெல்லாம் கைதட்டுகிறார்கள் ... ஷோபனாவிற்கு கண்ணை உருட்டுவதை தவிர பெரிதாய் வேலையில்லை . இவர் கேரக்டரில் பெரிய அழுத்தமுமில்லை ... தரன் இசையில் " லவ் பண்லாம " , " அப்பன்மவனே " பாடல்கள் அருமை . ஆனால் அடிக்கொரு தடவை பாட்டை போடுவதை தவிர்த்திருக்கலாம் .


லண்டனில் வளர்ந்த பெண்ணை கல்யாணம் செய்துவிட்டு தமிழ்ப்பொண்ணு இப்படித்தான் இருக்கணும்  என்றெல்லாம் ஓவர் வசனம் பேசும் இடத்தில் சிம்பு கேரக்டர், மனதில் ஒட்டாத வருவின் சல்சா நடனம் மற்றும் அந்த போட்டியில் ஜெயிப்பதற்காக இருவரும் எடுக்கும் முயற்சி , ரசிக்க வைத்தாலும் அளவுக்கு மீறிய  அடல்ஸ் ஒன்லி மேட்டர்ஸ்  , அனைத்து தரப்பினரையும் கவராமல் போகும் கதைக்களம் போன்ற குறைகள் படத்தில் இருந்தாலும் திருமணம் பற்றிய அட்வைஸ் எல்லாம் செய்யாமல் இருவரை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு ஒரு லவ் ஸ்டோரியை லைவாக போரடிக்காமல் சொன்ன விதத்திற்காகவே படத்தை பார்க்கலாம் .

எதைப்பற்றியும் சிந்திக்காமல் ரிலாக்ஸாக பார்த்தால் போகிற போக்கில் தெளிக்கப்படும் கா(ம)மெடிகளை நிறையவே ரசிக்கலாம் . படத்தை கால தாமதம் இல்லாமல் ரிலீஸ் செய்து , ஒஸ்திக்கு கொடுத்த ஓவர் பில்ட் அப்பில் பாதியையாவது கொடுத்து ப்ரமோ செய்திருந்தால் படம் நிச்சயம் சிம்புவின் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் ...

ஸ்கோர் கார்ட் :  41 


7 December 2011

இளைய தலைமுறை இயக்குனர்கள் ...

                   
    சினிமா உலகில் எத்தனையோ விதமான இயக்குனர்கள் இருந்தாலும் , அவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் ... வணிக ரீதியான வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழக்கமான பாணியில் இருந்து சற்றும் மாறுபடாமல் வசூலை நோக்கியே செல்லும் பார்முலா இயக்குனர்கள் ஒரு வகை , வெற்றி தோல்வியை மட்டும் கணக்கில் கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் ஏதாவதொரு பரீட்சார்த்த முயற்சிகள் மூலம் புது அனுபவத்தை கொடுக்கும் டிரென்ட் செட்டர் இயக்குனர்கள் மற்றொரு வகை ...

   இதில் இரண்டாவது வகை இயக்குனர்களே அதிகம் இளைய தலைமுறையினரை கவர்பவர்களாக இருக்கிறார்கள் ... அந்த வரிசையில் கடந்த பத்து வருடங்களில் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் மிக முக்கியமான இருவர் செல்வராகவன் மற்றும் கௌதம்மேனன்...இவர்கள் இருவரின் பின்னணியும் மாறுபட்டிருந்தாலும் இவர்களின் படங்கள் இளைஞர்களை கவர்வதில் மாறுபடவில்லை ...இருவரும் அதிகம் பேசுவதில்லை , ஆனால் இவர்களின் படங்கள் பேசுகின்றன...

                                                     
     செல்வராகவனின்  முதல் படம் "துள்ளுவதோ இளமை" விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டாலும் ரசிகர்களால் வசூலை குவித்தது ...நடுபக்கத்தில் ஆபாச படத்தை வெளியிட்டு விற்பனையை அதிகமாக்கிய நம்பர் ஓன் வார இதழ் கூட இப்படத்தை மோசமாக விமர்சித்தது ...ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அப்படத்தில் ஒரு உண்மை இருந்தது ...செல்வாவிடம் தைரியமும் இருந்தது...

   இந்த படம் முழுக்க முழுக்க செல்வராகவனின் உழைப்பாக இருந்தாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கஸ்தூரி ராஜாவின் பெயர் இயக்குனராக இடம்பெற்றது ... " காதல் கொண்டேன் " காதலை மையப்படுத்தினாலும் சிறு வயதில் ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் மன ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்பை சொல்ல தவறவில்லை...
   
   " 7 ஜி " ஒரு காதல் காவியம் ...படத்தில் ரவிகிருஷ்ணாவும் , சோனியாவும் தெரியவில்லை ...கதிரும் , அனிதாவுமே மனதில் நின்றதே இயக்குனரின் வெற்றி ...காதல் சம்பந்தப்பட்ட உறவுகளையும் ,உணர்வுகளையும் அழுத்தமாக பதிய வைப்பதில் தான் வல்லவர் என்பதை செல்வராகவன் நிரூபித்த படம் 7 ஜி...

                                   
   " புதுப்பேட்டை " வன்முறையின் புது கோணம் ... ரௌடிகள் உருவாவது உடல் பலத்தில்  அல்ல ... சூழ்நிலையும் , மன உளைச்சலுமே அதற்கு முக்கிய காரணம் என்பதை காட்சிகளில் தெளிவாக உணர்த்தி இருப்பார்...எதையுமே விசுவலாக சொல்லும் திறமை இவரிடம் அசாத்தியமாக இருக்கிறது ...இவரின் தெலுகு ரீமேக் படமான "யாரடி நீ மோகினி"  வெற்றி பெற்றதோடு மெல்லிய உணர்வுகளை மிகையில்லாமல் பதியவும் செய்தது  ...    

   "ஆயிரத்தில் ஒருவன் " பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சி....முதல் பாதி காட்சிகள் ஆங்கில படங்களுக்கு இணையாக இருந்தன. இரண்டாவது பாதியில் படம் தடம் மாறியிருந்தாலும் காட்சிகள் கண்ணில் நிற்கின்றன ...படம் குடும்பத்தோடு சென்றவர்களை முகம் சுளிக்க வைத்ததும் உண்மை ...எனினும் அப்படம் ஒரு மைல்கல் ...

                 
    தனுஷிற்கு இப்போது ஒரு ரசிகர் வட்டமும் , பிசினஷும் வந்து விட்ட பிறகு கூட " மயக்கம் என்ன" வில் அவரை கார்த்திக்காக பார்க்க வைத்ததே செல்வராகவனின் பலம்...யாமினியை மட்டும் யாரால் மறக்க முடியும் ?. படத்தை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் எல்லா தரப்பினரையும் மயக்கியிருக்கும் ... அதை பற்றி அதிகம் கவலைப்படாததே செல்வராகவனின் மற்றொரு பலம் ... இப்போது அவருடைய கூட்டணியில் யுவன் இல்லாதது ஒரு பெரிய குறையாக இருந்தாலும் அதை ஜி.வி யின் இசை நிவர்த்தி செய்து வருகிறது ...

                                                                       
     " மின்னலே" வில் ஆரம்பித்து "விண்ணைத்தாண்டிவருவாயோ  " வரை கௌதமிற்கு காதல் கை கொடுக்கிறது . நகர இளைஞர்களிடம் இவரின் படமும் ,பாடல்களும் பெரிய வரவேற்ப்பை பெற்று இருக்கின்றன ..."காக்க காக்க " சூர்யாவிற்கு  மட்டும் திருப்புமுனையாக அல்ல , அதன் பிறகு வந்த காவல்துறை சம்பந்தப்பட்ட மற்ற படங்களுக்கும் ஒரு முன்னோடி...இப்படத்தின் வில்லன் கதாபாத்திரமும் வித்தியாசமாக இருந்தது..

   இதன் அடுத்த பதிப்பாக வந்த " வேட்டையாடு விளையாடு " ஒரு சூப்பர் க்ரைம் த்ரில்லர் ...நீண்ட நாட்களுக்கு பிறகு கமலிற்கு அற்புதமான அறிமுக காட்சி... " வாரணம் ஆயிரம் " படத்தில் அப்பா - பையன் உறவை அவ்வளவு அழகாக சித்தரித்திருப்பார் கெளதம் ...காதல் தோல்வி பாட்டுக்கு அஞ்சலை ஒரு அக்மார்க் ...

                   
   இவரைப்போல ஹீரோயின்களை அவ்வளவு அழகாக யாரும் காட்டுவது இல்லை...ஆனால் சிம்புவையும் மிக அழகாக VTV யில் காட்டியிருப்பது புதுசு. காதலின் எல்லா கோணங்களும் இதில் அற்புதம் ...கௌதமின் பலம் உணர்ச்சிகளை துல்லியமாக எடுப்பது , இசைக்கு அதிக கவனம் செலுத்துவது ...

   காதலை வலிக்க வலிக்க சொல்லி விட்டு அடுத்த படத்திலேயே காமுக கொலைகாரனை வைத்து சைக்கோ த்ரில்லரை எடுக்க முடியுமா ? முடியுமென்பதை " நடுநிசி நாய்கள் " நிரூபித்தது .... வணிக ரீதியாக குரைக்காவிட்டாலும் குறைந்த செலவில் பாடல்களோ , வாத்தியங்களின் பின்னணி இசையோ இல்லாமல் எடுக்கப்பட்ட புது பாணி படம் ...

                                                           
    கௌதமை போல செல்வராகவன் கமலுடன் கைகோர்க்க முடியாமல் போனதில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ...இருவரும்  காதலை தாண்டி மற்ற பரிமாணங்களிலும் பயணம் செய்வதில் ரசிகர்களுக்கு சந்தோசம் ...தனுஷ் , சிம்பு  இருவரும் நடிப்பில் தேறி இருப்பது இவர்களின் ஆளுமை ...நிச்சயம் இவர்களின் அடுத்த படங்களிடம் உள்ள எதிர்பார்ப்பு இளைய தலைமுறையினரிடம் என்றும் நீங்காது என்பதே இருவரின் பலம் ... அனந்து
Related Posts Plugin for WordPress, Blogger...