27 July 2013

பட்டத்து யானை - PATTATTHUYANAI - பழைய யானை ...


முதல் மூன்று படங்களிலேயே தொடர் வெற்றியை கொடுத்து தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கிக்கொண்டவர் விஷால் . இப்பொழுது தொடர் தோல்விகளால் தவித்துக் கொண்டிருப்பவரை பூபதி பாண்டியனின் பட்டத்து யானை தூக்கி விட்டதா ? பார்க்கலாம் ...

காரைக்குடியில் சமையல் கான்ட்ராக்டர் கௌரவத்திடம் ( சந்தானம் ) வேலைக்கு சேரும் சரவணன் ( விஷால் ) அவரது பிசினசை காலி செய்து விட்டு திருச்சிக்கு கூட்டி செல்கிறார் . விஷால் அங்கு ஒரு பெண்ணை
( ஐஸ்வர்யா அர்ஜூன் ) லவ்வ சந்தானத்தை சந்தியில் விட்டு விட்டு ஐஸ்வர்யாவிற்க்காக வில்லன் கோஷ்டியை பின்னி பெடலெடுக்கிறார் . கடைசியில் வழக்கமாக என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து சுபமாய் படத்தை முடிக்கிறார்கள் ...

விஷால் வழக்கம் போல தலைக்கு பதில் முகத்தில் எண்ணெய் வடிய வருகிறார். பார்த்தவுடன் ஒரு பெண்ணை காதலிக்கிறார் , அந்த பெண்ணிற்க்காக தனி ஆளாக ஊரையே அடிக்கிறார் , அதிலும் முதலில் தனியாக வரும் அடியாள் இவரிடம் இடது கன்னத்தில் அடி வாங்கி வலது பக்கம் பறந்து விழுகிறான் . வழக்கம் போல இவருக்கு ஒரு மொக்கை ப்ளாஷ்பேக் . இந்த வழக்கமான வழக்கங்களில் பொறுமையை சோதிக்கும் பஞ்ச்கள் இல்லாதது மட்டும் பெரிய ஆறுதல் ...


ஹீரோயின் அறிமுகத்தின் போது புன்னகைத்துக் கொண்டே வரவேண்டுமென்று விதியோ என்னமோ ! . ஆனால் இதில் அதற்காக ஐஸ்வர்யா பஸ் ஏறுவதற்காக ஓடி வரும் போதும் இளித்துக் கொண்டே வருவது லூசோ என்று எண்ணத்தோன்றுகிறது . பள்ளிக்கூட மாணவியாக காட்டினாலும் முகத்தில் முதுமை தெரிகிறது ...

கிரி படத்தில் வடிவேலுவுக்கு என்ன வேடமோ அதே தான் சந்தானத்துக்கும் . இதில் பேக்கரிக்கு பதில் ஹோட்டல் . மொட்டை ராஜேந்திரனுடன் இவர் காம்பினேஷன் வழக்கம் போல கல கல . இவர் உடல் மொழியில் கவுண்டமணியின் இமிடேஷன் இதில் ஓவராகவே இருக்கிறது . பட்டத்துயானை முதல் பாதியில் இவரை வைத்து நன்றாகவே சவாரி செய்திருக்கிறது . ஜான் விஜய் மற்றும் அவரது அடியாட்கள் , மயில்சாமி போன்றோர் சிரிக்க வைக்கிறார்கள் . நண்டு ஜெகனை  இன்னும் நன்றாக உபயோகப்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது . அதே போல தடையர தாக்க வில் நல்ல அறிமுகம் கிடைத்த வில்லனை இதில் வீணடித்திருக்கிறார்கள் ...


தமன் இசையில் 20 - 20 பாடல் மட்டும் ஹம்மிங் செய்ய வைக்க மற்றதெல்லாம் ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் . பின்னணி இசைக்கு இசைஞானி , எம்.எஸ்.வி இருவரும் கை கொடுத்திருக்கிறார்கள் . ஆனால் டைட்டிலில் பெயர் சபேஷ் முரளி என்று வருகிறது . படத்தின் கதை இதற்கு முன் பூபதிபாண்டியன்   எடுத்த மலைக்கோட்டை யை நினைவுபடுத்தினாலும் கிரி வலம் வந்திருக்கிறார்கள் ...

திருச்சியில் தனியாக தவிக்கும் சந்தானத்தின் காமெடி , அது தவிர வில்லன் கோஷ்டியை வைத்து காமெடி செய்த விதம் , போவது தெரியாமல் போகும் முதல் பாதி , ஆக்சன் படங்களில் குறிப்பாக விஷால் படங்களில் வரும் வளவளா பஞ்ச் வசனங்களை தவிர்த்திருப்பது போன்றவை பட்டத்துயானையை பவனி வர வைக்கின்றன ...

கதை , லாஜிக் இதையெல்லாம் தவிர்த்து விட்டு பார்க்கும் போது இந்த படத்திலும் ரசிக்கும் படியாக கமர்சியல் எலிமென்ட்ஸ் சரியாக பொருந்தியிருந்தாலும் தேவையேயில்லாமல் இரண்டு வில்லன் கோஷ்டி, இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் என்ற பெயரில் திணிக்கப்பட்ட எந்தவித பாதிப்பையும் ஏற்ப்படுத்தாத ப்ளாஷ்பேக் , பெண்ணை பார்த்தவுடன் ரேப் செய்யும் வில்லன் , பழி வாங்கும் ஹீரோ , மலைக்கோட்டை , கிரி போன்ற படங்களை கலந்து கட்டிய கதை இவையெல்லாம் சந்(தா)ன காப்பு செய்தும் பட்டத்துயானையை பழைய யானையாகவே காட்டுகின்றன ...

ஸ்கோர் கார்ட் : 40


20 July 2013

மரியான் - MARIYAAN - மாரத்தான் ...


தேசிய விருதுக்கு பிறகு தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சமுள்ள படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ் . அந்த வரிசையில் ராஞ்சானா  வெற்றிக்கு பிறகு பாரத்பாலா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் அவர் கை கோர்த்திருக்கும் படம் மரியான் . அவர் நடிப்பு அருமை . ஆனால் படம் ? அலசலாம் ...

வெளிநாடு  செல்ல வேண்டுமென்கிற தன்  தாயின் விருப்பத்தை மீறி கடலை நம்பி வாழும் மீனவன் மரியான் ( தனுஷ் ) . சிறு வயதிலிருந்தே தன்னை விரும்பும் பனிமலரின் ( பார்வதி ) காதலை ஏற்றுக்கொண்ட பிறகு அவள் வீட்டுக் கடனை அடைப்பதற்காக இரண்டு வருட காண்ட்ராக்டில் மரியான் சூடான் செல்கிறான் . நாடு திரும்பும் வேளையில் அங்கே தீவிரவாதிகளிடம் பயக்கைதியாக பிடிபடும் மரியான் மீண்டு வந்தானா ? என்பதை தனுஷ் , பார்வதி நடிப்பை மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார்கள் ...


பத்து வருடங்களுக்கு முன் பார்த்த பையனா  என்று நம்ப முடியாத அளவிற்கு நடிப்பில் மெருகேறியிருக்கிறார் தனுஷ் . உடல்மொழியில் கமல் , ரஜினி யை சிற்சில இடங்களில் நினைவுபடுத்தினாலும் தனியாளாக மரியானை மேலே தூக்கி நிறுத்தியிருக்கிறார் . காதலியை உதைக்கும்  இவர் கதாபாத்திரம் பழசாக இருந்தாலும் நடிப்பை ரசிக்க முடிகிறது . குறிப்பாக கம்பெனிக்கு போன் பேசுவதாக சொல்லி விட்டு காதலியிடம் தன் நிலைமையை விளக்கும் இடம் க்ளாஸ் . கமர்சியல் வெற்றிக்கு பின்னால் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் நடிகர்கள் மத்தியில் தனுஷ் ஆரோக்கியமான விதிவிலக்கு ...

பூ படத்திற்கு பிறகு மலையாளத்துக்கு போய் விட்ட பார்வதி ஐந்து வருட இடைவெளி விட்டு வந்திருந்தாலும் மரியானில் பனிமலராய் நடிப்பில்  மலர்ந்திருக்கிறார் . இறுக்கமான பாவாடை சட்டையில் வந்து லோ ஆங்கில் சாட்களில் கிறங்கடிக்கிறார் . இவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் தனுஷ் நடிப்பிற்கு முன் காணாமல் போயிருப்பார்கள் . காதலன் தன்னை அடித்த பிறகு ஆதங்கமும் , அழுகையும் கலந்த நடிப்பில் பார்வதி படு பாலன்ஸ்ட் . தமிழ் இயக்குனர்கள் இவரை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்லது ... 

லீட் நடிகர்களை தவிர அப்புக்குட்டி , உமா ரியாஸ் , சலீம் குமார் , ஜெகன் என்று பாத்திரத்தேர்வுகள் அருமை . சூடான் தீவிரவாதிளை தேர்ந்தெடுத்ததில் மட்டும் கோட்டை விட்டிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் மார்க் கோனிக்ஸ் , இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் படத்திற்கு சர்வதேச தரத்தை கொடுத்திருக்கிறார்கள் .  ஏ.ஆர்.ஆர் இசையில் " நெஞ்சே எழு " , " கடல் ராசா " , " நேற்று அவள் " போன்ற பாடல்கள் இனிமை . பின்னணி இசையில் இரண்டாம் பாதி பிரமாதம் . வாலிப கவிஞர் வாலியின் கை வண்ணத்தில் " நிலவே அந்த நேற்றுகளை கொண்டு வா " போன்ற வரிகள் அவர் மறைவிற்கு பொருத்தமாக அமைந்திருப்பது சோகத்திலும் ஆச்சர்யம் ... 


பாரத் பாலா இயக்கிய " வந்தே மாதரம் " ஆல்பம் சர்வதேச அளவில் புகழ் பெற்று ஏ.ஆர்.ரஹ்மானை பல படிகள் மேலே கொண்டு சென்றது . இந்த படத்திலும் அதே போல ஒரு சர்வதேச டச் இருப்பதை மறுக்க முடியாது . தனுஷ் - பார்வதி நடிப்பில் கெமிஸ்ட்ரி , பயாலஜி , பிஸிக்ஸ் என்று எல்லாவற்றையும் வெளிக்கொணர்ந்து அவர்களை கையாண்ட விதத்திற்காக இயக்குனரை பாராட்டலாம் . பார்வதி தனுஷை லிப் கிஸ் அடிக்கும் இடம் கூட விரசமாக தெரியாமல் படத்தோடு ஒன்றியிருப்பது நேர்த்தி . தனுஷ் கடத்தப்பட்ட பிறகு வரும் சூடான் காட்சிகள் ரியாலிட்டி ... 

யதார்த்தமான படம் என்றாலும் ஒரு லெவலுக்கு மேல் தனுஷ் , பார்வதி மாறி மாறி அழும் சோக காட்சிகள் ரசிகர்களை சோதிப்பது , எல்லோரையும் யோசிக்காமல் சுடும் தீவிரவாதி தனுஷிடம் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும் , லோக்கல் ரவுடியிடம் பேசுவது போல தனுஷ் அவரிடம் கத்துவதும் என்று ரியாலிட்டியை சிதைப்பது , கடத்தல் மேட்டரை இடைவேளையில் வைத்து ஜெர்க் கொடுத்து விட்டு அதன் பிறகு படத்தை ஜவ்வாக இழுத்திருப்பது என்று படத்தின் குறைகளை அடுக்கலாம் . நடிப்பு , டெக்னிக்கல் விஷயங்கள் போன்றவை சர்வதேச தரத்தில் இருந்தாலும் ரசிகனை கட்டிப்போடும் சமாச்சாரங்கள் எதுவும் இல்லாமல் படம் மாரத்தான் போல மெதுவாக செல்வதை தவிர்த்திருந்தால் மரியான் மரித்திருக்க மாட்டான் ... 

ஸ்கோர் கார்ட் : 40 
9 July 2013

அரையாண்டு சினிமா 2013 ...


ந்த வருடம் இதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் தந்த படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் தேசிய விருதோடு  விஸ்வரூபம் பெரிய வெற்றியடைந்ததும் , பரதேசி பெரிய வரவேற்பைப் பெற்றதும் ஆறுதல் . எப்பொழுது பார்த்தாலும் சலிக்காத இன்று போய் நாளை வா வை கண்ணா லட்டு தின்ன ஆசையா தந்து சந்தானம் விநியோகஸ்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் கொடுத்து விட்டார் . சமர்சுமாராக இருந்த போதும் விஸ்வரூபம் 
ரிலீஸ் தள்ளிப்போனதால் தியேட்டரில் சிறிது நாட்கள் கூடுதலாகவே அமர்ந்தது என்று சொல்லலாம் . முதல் படத்தில் சம்பாதித்த நல்ல பெயரை வருட்த்திற்கு ஒரு மொக்கை படம் மூலம் காலி செய்து கொண்டிருக்கும் கார்த்தியின் இந்த வருட கணக்கில் அரைத்த மாவு  அலெக்ஸ் பாண்டியன்...

ஓரளவு மட்டுமே வெற்றி பெற்றிருக்கக் கூடிய விஸ்வரூபம்தடையாலும் , உலகநாயகனின் விவேகமான நடவடிக்கைகளாலும் விஸ்வரூப வெற்றியை பெற்றது . உண்மையிலேயே உலக நாயகனின் கைவண்ணத்தில் வந்த உலகத்தரமான படம் விஸ்வரூபம் . ஸ்டான்ட் அப் காமெடிகளின் கோர்வையாக இருந்தாலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா வணிக ரீதியாக வெற்றிப்படம் . இந்தியாவே கூர்ந்து நோக்கும் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல்கலங்கலாகிப் போனதில் வருத்தமே ...

சன் பிக்சர்ஸ் நல்லாசியுடன் வந்த சென்னையில் ஒரு நாள்நல்ல கரு இருந்தும் கஞ்சஸ்டடான திரைக்கதையால் ட்ராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டது போலாகிவிட்டது . பரதேசிபாலாவின் படங்களில் ஒரு மைல்கல். இது போன்ற படங்களை வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியடைய வைத்திருக்க வேண்டியது தரமான சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவனின் கடமை . புதுமுகத்தை ஆக்சன் ஹீரோவாக்கும் முயற்சியில் வத்திக்குச்சி 
நமுத்து விட்டது . இல்லையேல் வத்திக்குச்சி பற்றி  எரிந்திருக்கும் ...

ஹிந்தியில் ஹிட்டடித்த டெல்லி பெல்லியை தமிழாக்கம் செய்யும் முயற்சியில்  சேட்டைசறுக்கி விட்டது . யாருடா மகேஷ்ஆய்ப்பையனாக இருந்தாலும் நண்டு ஜெகனின் காமெடிப் பிடியால் ரசிக்க முடிந்தது . சாக்லேட் பாய் சித்தார்த்திற்கு தமிழில் உதயம் NH4ஒரு சீரியஸ் ப்ரேக் . உதயம் NH 4 இல் கொஞ்சம் தடம் மாறினாலும் சாதாரண காதல் கதையை ஸ்டைலிஷான திரைக்கதையால் ரசிக்க வைத்திருப்பார்கள் ...

மே 1 இல் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் அதில் அனைவரின் மனதையும் கவ்வி வசூலில் முன்னணி வெற்றி பெற்றதென்னமோ சூது கவ்வும்மட்டும் தான் . சிவ கார்த்திகேயனுக்கு சுக்ர  திசை போல . கேடி பில்லாவை தொடர்ந்து எதிர்நீச்சலும் வெற்றிப்படமாக அமைந்து விட்டது . மூன்று பேர் மூன்று காதல் நிறைய திரையரங்குகளில் மூன்று நாட்கள் கூட ஓடாமல் போனது  இயக்குனர் வசந்த் இளம் தலைமுறையினரின்  பல்சை  சரியாக பிடிக்காமல் போனதை காட்டுகிறது . ஒரு சின்ன தீமை 2 மணிநேர திரைப்படமாக கொடுத்து நம் நேரத்தை வீணாக்காமல் ரசிக்க வைத்த படம் நேரம்.  குட்டிப்புலிகமர்சியல் புலியாக இருந்தாலும் கதை , திரைக்கதையை நம்பாமல் சசிக்குமாரை மட்டுமே நம்பியதால் ஒன்டிப்புலியாகி விட்டது ...

தமிழ் சினிமாவில் தற்போது நடந்து கொண்டிருப்பது காமெடி சீசன் என்பதை மீண்டும் ஊர்ஜிதமாக்கும் வகையில்  ஜூன் 14 ம் தேதி வெளியான இரண்டு படங்கள் தீயா வேலைசெய்யணும் குமாரு மற்றும் தில்லு முல்லு . இரண்டுமே போரடிக்கவில்லை என்றாலும் வெல்டன் சொல்ல வைத்தவன் குமாரு மட்டுமே . பழம் பெரும் இயக்குனர் பாரதிராஜா ராதாவின் பெண்ணை வைத்து இயக்கிய அன்னக்கொடி - அவலக்கொடியானதில் வருத்தமே . அடுத்த அரையாண்டின் ஆரம்பமே சிங்கம் 2வின் கமர்சியல் கர்ஜனையுடன் தொடங்கியிருக்கிறது . வரும் ஐந்து மாதங்களும் இது போல வெற்றிப்படங்கள் தொடர்ந்து வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ...


6 July 2013

சிங்கம் 2 - SINGAM 2 - கமர்ஸியல் கிங் ...சூர்யா - ஹரி காம்பினேஷனில் இது வரை வெளிவந்திருக்கும் மூன்று படங்களுமே ஹிட் , அதிலும் மெகா ஹிட்டடித்த சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் என்பது எதிர்பார்ப்பை கொடுத்திருந்தாலும் சூர்யா பேசும் வீர வசனங்களை ட்ரைலரில் பார்த்து விட்டு கொஞ்சம் பயந்ததென்னமோ உண்மை . ஆனாலும் சிங்கத்தின் வேகமான ஓட்டம் ரெண்டே முக்கால் மணி நேரத்தை மறக்க செய்ததென்றே சொல்லலாம் ...

போலீஸ் வேலையை பொய்யாக உதறிவிட்டு பள்ளியில் என்.சி.சி மாஸ்டராக வேலை செய்து கொண்டே தூத்துக்குடியில் நடக்கும் கடத்தல் வேலைகளை துப்பறிகிறார் துரைசிங்கம் ( சூர்யா ) . உள்ளூர் கடத்தல்காரர்ளை மட்டுமின்றி இண்டர்நேஷனல் கடத்தல் மன்னன் டேனி யையும் தன்  ஆபரேஷன் டி மூலம் சூர்யா அடித்தாரா சாரி பிடித்தாரா என்பதே கதை  . ஆக்சன் சிங்கத்தை அவ்வப்போது கூல்  செய்ய பழைய காதலி காவ்யா ( அனுஷ்கா ) , புதிய காதலி சத்யா ( ஹன்சிகா ) என்கிற இரண்டு புள்ளி மான்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் ...

சூர்யா மிடுக்கான போலீஸ்காரனாக கம்பீரம் காட்டுகிறார் . ஆக்சன் காட்சிகள் அனல் பறக்கிறது. அன்பு செல்வனிடம் இருந்த ரியாலிட்டி துரை சிங்கத்திடம் இல்லாத போதும் கண்களில் அதே குறும்பு மின்னுகிறது . ஹீரோ வொர்ஷிப் படம் என்பதால் சூர்யா  சகட்டுமேனிக்கு எல்லோரையும் சரிப்பதை கூட சகித்துக் கொள்ளலாம்  ஆனால் அவர் பேசிக்கொண்டேயிருப்பதையும் , அதிலும் இவர் ஆர்டர் போட உள்துறை அமைச்சர் ( விஜயகுமார் ) என்னவோ சரக்கு கடை அண்ணாச்சி  போல ஆ வென்று கேட்டுக்கொண்டிருப்பதையும் மட்டும் தாங்க முடியவில்லை ...சேட்  வீட்டு ரசகுல்லா போல ஹன்சிகா இருந்தாலும் அவரை  +2 மாணவி என்னும் போது இடிக்கிறது . ஆன்டி போல தெரிந்தாலும் அரை ட்ராயருடன் ஆட்டம் போடும் போது அனுஷ்கா மனதை அள்ளுகிறார் . சந்தானம் வழக்கம் போல தன் ஒன் லைனர்களால் கலக்குகிறார் . முதல் பாதி படம் மூவ் ஆவதற்கு இவர் காமெடி பெரிதும் உதவியிருக்கிறது . விவேக் தன் பஞ்ச்களால் கொஞ்சம் கவர்ந்தாலும் சந்தானத்திற்கு முன் எரிமலை பெரிதாக எடுபடவில்லை . நாசர் , ராதாரவி என முதல் பாகத்தில் இருந்த அனைவரும் இதிலும் வந்தாலும் நாசரின் மனைவியாக நடித்தவர் மட்டும் கவனிக்க வைக்கிறார் . மூன்று வில்லன்கள் இருந்தும் சூர்யாவிடம் தோற்றுக் கொண்டேயிருப்பதால் கொஞ்சம் போரடிக்கிறது ...

முதல் பாகத்திலிருந்து கதை கொஞ்சம் மாறுபட்டிருந்தாலும் டி.எஸ்.பி யின் இசையில்  எந்த மாற்றமுமில்லை . " சிங்கம் டான்ஸ் " மட்டும் தாள போட வைக்கிறது . ஹரி - ப்ரியன் கூட்டணி இந்த படத்திலும் ஒளிப்பதிவில் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது . எடிட்டிங்கில் மட்டும் ஜம்பை தவிர்த்திருக்கலாம் . ஏற்கனவே ஹிட் டடித்த படத்தின் பார்ட் 2 வாக இருந்தாலும் திரைக்கதையில் வேகத்தை கூட்டி முதல் பாகத்தின் சாயல் வராமல் தவிர்த்தற்காக இயக்குனரை பாராட்டலாம் . சூர்யா சார்ஜ் எடுத்தவுடன் சாதி கலவரத்தை தடுப்பதில் ஆரம்பித்து மெயின் வில்லனை பிடிப்பது வரை படம் படு ஸ்பீட் . ஏழாம் அறிவு போல தமிழ் , தமிழன் என்றெல்லாம் சொல்லாமல் இந்தியன் போலீஸ் என்று சொன்னதில் இன்னும் பெருமைப்படலாம் ...


இடைவேளையில் நல்ல ப்ரேக் கொடுத்து விட்டு அதன் பிறகு தடுமாறியிருக்கிறார்கள் . கேரளாவிற்கு செல்ல மூன்று மணிநேரம் ஆகும் என்று சொல்லும் சூர்யா அடுத்த சீனிலேயே தன் படையுடன் அங்கிருப்பது லாஜிக் சொதப்பல் . சகாயத்தை சூர்யா கொலை செய்யும் இடம் சூப்பர் . ஆனால் ஏன் மூன்று வில்லன்களையும் கைதோடு மட்டும் விட்டு விடுகிறார் ? ஒரு வேளை  சிங்கம் 3 க்காகவா ? வில்லனை பிடிக்க சூர்யா சவுத் ஆப்பிரிக்கா போவது கொஞ்சம் மாற்றானை நினைவு படுத்துகிறது . பொதுவாக ஹீரோயிச படங்களிலும் இருக்கும் ஹீரோ  - வில்லன் மோதலில் ஹீரோவும் தோற்று ஜெயிக்கும் போதே படம் சுவாரசியம் பிடிக்கும்  . அதற்கு சிங்கம் 1 ஐயே உதாரணமாக சொல்லலாம் . சிங்கம் 2 அது போலல்லாமல் ப்ளாட்டாக இருப்பது பின்னடைவு . இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும் சரிந்து கொண்டிருக்கும் சூர்யாவின் மார்க்கட்டை சிங்கம் 2 தூக்கி நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை ...

ஸ்கோர் கார்ட் : 42 


Related Posts Plugin for WordPress, Blogger...