27 November 2012

லைஃப் ஆஃப் பை - LIFE OF PI ...


ஸ்கார் விருது வாங்கிய இயக்குனர் ஆங் லீ யின் அற்புதமான படைப்பு லைஃப் ஆஃப் பை . பாண்டிச்சேரியில் தொடங்கும் படம் பசிபிக் பெருங்கடலில் சுனாமி போல பார்ப்பவர்களையும் இழுத்துக்கொண்டு செல்கிறது ...

பிஸ்சிங் படேல் ( எ ) பை ( இர்பான் கான் )கப்பல் விபத்தில் தன்  குடும்பத்தை இழந்ததையும் , லைப் ; போட்டில் தப்பித்துப் போகும் போது ஒரு வங்காளப் புலியிடம் சிக்கிக்கொண்டு  பல மாதங்கள் தனியாக நடுக்கடலில் போராடியதையும் தன் நண்பனிடம் விளக்குகிறான் . நாவலில் இருந்து தழுவப்பட்ட இந்த கதையை தத்ரூபமாக எடுத்து புலி மற்றும் பை யுடன் சேர்த்து நம்மையும் கடலில் பிரயாணப்பட வைத்ததே படத்தின் வெற்றி...

இர்பான் கான் பை கதாபாத்திரத்தில் இயல்பாக பொருந்துகிறார் . ஸ்லம் டாக் மில்லினியரை தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . பை யின் தாயாக தபுவும் , தந்தையாக நடித்திருப்பவரும் சரியான தேர்வு . இளம் வயது பை யாக நடித்திருக்கும் சூரஜ் ஷர்மா பயம் , கோபம் , பரிவு , காதல் என எல்லா உணர்ச்சிகளையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார் . முதலில் புலிக்கு பயந்தாலும் போக போக புலியோடு சேர்த்து நம்மையும் தன் நடிப்பால் அரவணைக்கிறார் ...

   
படத்தின் மற்றொரு முக்கியமான கேரக்டர் ரிச்சர்ட் பார்க்கர் என்று அழைக்கப்படும் வங்காள புலி . அழிந்து வரும் அரிதான இனங்களில் ஒன்றாகி விட்ட வங்காள புலி பை யை பிரியும் போது நமக்கும் ஏதோ நெருடுகிறது ... படத்தின் ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங் , கிராபிக்ஸ் எல்லாமே உலகத்தரத்திற்கு ஒரு படி மேலே நிற்கின்றன . பாண்டிச்சேரியை இவ்வளவு அழகாக வேறு எவரும் காட்டியிருக்க  முடியாது . டால்பின் , மங்கூஸ் என படத்தில் கிராபிக்ஸ் கலக்கல்கள் ஏராளம் . அட்வென்ட்சருடன் சேர்த்து கடவுளை பற்றிய கேள்விகளையும் ஆங்காங்கே தெளித்திருப்ப்து இயக்குனரின் புத்திசாலித்தனம் ...

பாண்டிச்சேரி பின்னணி , சில நிமிடங்களே வந்தாலும் கவனிக்க வைக்கும் பை - ஆனந்தி ( ஷ்ரவந்தி ) காதல் காட்சிகள் , புலியின் குணத்தை மகனுக்கு தந்தை புரிய வைக்கும் காட்சி , கழுதை புலி , குரங்கு , வரிக்குதிரை இவற்றுக்கிடையே நடக்கும் கூத்து , புலியையும் , அதே சமயம் அதனிடமிருந்து தன்னையும் காத்துக்கொள்ளும் பையின் போராட்டம் என படத்தின் நிறைய விஷயங்கள் பிரமிக்க வைக்கின்றன ...

       
நீண்ட நாள் பட்டினியால் புலி , பை இருவரின் உடல்களையும் இஅலைக்க வைத்ததில் காட்டப்பட்ட லாஜிக் நேர்த்தி கடல் விபத்து சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் காட்டப்பட்டிருக்கலாம் . அந்த காட்சிகளில் ஏதோ அவசரம்
தெரிகிறது . கிராபிக்ஸ் , அட்வென்ட்சர் , பிரமாண்டம் என எல்லாமே ஆங்கிலப் படங்களுக்குரியவையாக இருந்தாலும் இந்திய பின்னணியும் , இரண்டு வெவேறு உயிரினங்களுகிடையேயான நேசம் , பிரிவு , வேறுபாடுகள் இவற்றை அழமாக பதிவு செய்த விதத்திலும் லைஃப் ஆஃப் ஒரு லைஃப் டைம் மூவியாக நம் மனதில் நெருக்கமாக பதிகிறது . நல்ல திரையரங்கில் , 3 டியில் குடும்பத்தோடு கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...


21 November 2012

அஜ்மல் கசாப் கதம் கதம் ...


26/11/2008 ஆம் ஆண்டு மும்பையில்  நடந்த அதி பயங்கர தீவிரவாத தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது . பல இந்தியர்களின் உயிரை குடித்த அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களில் ஒருவனான  அஜ்மல் கசாப் அதே நவம்பர் மாதமான இன்று காலை 7.30 மணியளவில் புனே சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டான் ...

நம் நாட்டிற்க்கு எதிராக தீவிரவாதம் செய்த அயல் நாட்டவனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு நான்கு  வருடங்கள் பிடித்திருக்கின்றன . அவன் பாதுகாப்பிற்காக செலவிடப்பட்ட பல கோடிகள் இனி அரசாங்கத்திற்கு மிச்சம் . கசாப்பின் தூக்கு தண்டனைக்கு எதிரான  கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை தொடர்ந்து தண்டனையை சத்தமில்லாமல் நிறைவேற்றியிருக்கிறது அரசு . அரசாங்கம் செய்த துணிச்சலான , மிக உருப்படியான காரியங்களுள் இது ஒன்று என அடித்து சொல்லலாம் ...

தனிப்பட்ட முறையில் மரண தண்டனைக்கு எதிரான கருத்துடையவர்கள் கூட  இது போன்ற தீவிரவாதிகளுக்கு எதிராக கொடுக்கப்படும் மரண தண்டனையை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன் . இந்த மரண தண்டனையால் இறந்தவர்கள் திரும்ப உயிருடன் வந்து விடுவார்களா என்றோ தீவிரவாதத்தை முற்றிலும்  ஒழித்து விட முடியுமா என்றோ கேள்வி கேட்கும் அறிவாளிகள் கேட்டுக் கொண்டே இருக்கட்டும் . போன உயிர் திரும்ப வராது தான் , ஆனால் இனிமேலும் உயிர்கள் போகாமல் தடுக்கலாம் . தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் இது முடிவல்ல ஆரம்பமே ...

2001 ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளால் தான் அங்கு அதன் பிறகு எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் . நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எந்தவொரு குற்றத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதோ  அல்லது  அதில் சம்பந்தப்பட்டவர்களை ஜாதி , இன , மதங்களோடு ஒப்பிட்டுப்பார்ப்பதோ மறைமுகமாக தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு சமம் ...

அஜ்மல் கசாப் ஒருவனை தூக்கில் போட்டதோடு நின்று விடாமல் அப்சல் குரு உட்பட இது போன்ற தீவிரவாதிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனைகளை நிறைவேற்றி   , நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி தீவிரவாத சம்பவங்கள் நடக்காமல் தடுத்து மக்களை காப்பதிலும் அரசாங்கம் தன் கடமையை செவ்வென செய்யும் என அனைவரும் நம்புவோம் ...


போடா போடி - பொழுதுபோக்கு ...


நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்து விட்டு தீபாவளிக்கு வந்திருந்தாலும் விடிவி க்கு பிறகு விரல்வித்தைகள் காட்டாத சிம்புவை ரசிக்க வைத்திருக்கும் படம் போடா போடி . சிம்பு - வரலக்ஷ்மி ஜோடி படத்தின் பல குறைகளை மறக்கடிக்க  வைத்திருப்பது உண்மை . பெரிதாக எதையும் யோசிக்காமல் வெவ்வேறு மனநிலைகள் கொண்ட இருவரின் வாழ்க்கையை மட்டும் பொழுதுபோக்காக மெச்சூரிட்டியுடன் பதிவு செய்திருக்கிறார் புதுமுக இயக்குனர் விக்னேஷ் சிவன் ...

லண்டனில் வசித்தாலும் கலாச்சார ரீதியாக அந்த வாழ்க்கையோடு ஒத்துப்போகாத அர்ஜுன் ( சிம்பு ), அதே கலாச்சாரத்தில் ஊறிப்போன நிஷா
( வரலக்ஷ்மி ) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் , பின்பு ஒத்துவராமல் பிரிகிறார்கள் , கடைசியில் புரிந்து கொண்டு சேர்கிறார்கள் . இந்த ஒன் லைனை கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தாலும் சுவைபட சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...

சிம்புவிற்கு இது அல்டிமேட் கேரக்டர் . படம் முழுவதும் வரலக்ஷ்மியையும் வைத்துக் கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறார் . ஆட்டம் , பாட்டத்தோடு சேர்த்து குழந்தை மேலிருக்கும் அன்பை சொல்லி அழும் இடத்தில் தனக்கு நன்றாக நடிக்கவும் வரும் என்று நிரூபிக்கிறார் . தன் பழைய படங்களை  மேற்கோள் காட்டி சிம்பு பேசுவதை தவிர்த்திருந்தால் அவருடைய கேரக்டர் இன்னும் யதார்த்தமாக மனதில் பதிந்திருக்கும் ...


வரலட்சுமிக்கு இது முதல் படம் போல தெரியவில்லை , அந்த அளவிற்கு தன் மொத்த திறமையையும் காட்டி ( நடிப்ப மட்டும் தாங்க சொன்னேன் ! ) நடித்திருக்கிறார் . தயாரிப்பாளரின் பணப்பற்றாக்குறை வரு அணிந்திருக்கும் உடைகளில் நன்றாகவே தெரிகிறது.  அம்மணி முக்கால்வாசி படத்தில் வெறும் குட்டி  டவுசருடன் தான் வருகிறார் . படம் பல வருடங்கள் தயாரிப்பில் இருந்ததும் வருவின் உடல் எடையில் கூடுதலாகவே தெரிகிறது...

சிம்பு - கணேஷ் காம்பினேஷன் இந்த படத்திலும் நன்றாகவே வேலை செய்திருக்கிறது . கணேஷ் பேசும் போதெல்லாம் கைதட்டுகிறார்கள் ... ஷோபனாவிற்கு கண்ணை உருட்டுவதை தவிர பெரிதாய் வேலையில்லை . இவர் கேரக்டரில் பெரிய அழுத்தமுமில்லை ... தரன் இசையில் " லவ் பண்லாம " , " அப்பன்மவனே " பாடல்கள் அருமை . ஆனால் அடிக்கொரு தடவை பாட்டை போடுவதை தவிர்த்திருக்கலாம் .


லண்டனில் வளர்ந்த பெண்ணை கல்யாணம் செய்துவிட்டு தமிழ்ப்பொண்ணு இப்படித்தான் இருக்கணும்  என்றெல்லாம் ஓவர் வசனம் பேசும் இடத்தில் சிம்பு கேரக்டர், மனதில் ஒட்டாத வருவின் சல்சா நடனம் மற்றும் அந்த போட்டியில் ஜெயிப்பதற்காக இருவரும் எடுக்கும் முயற்சி , ரசிக்க வைத்தாலும் அளவுக்கு மீறிய  அடல்ஸ் ஒன்லி மேட்டர்ஸ்  , அனைத்து தரப்பினரையும் கவராமல் போகும் கதைக்களம் போன்ற குறைகள் படத்தில் இருந்தாலும் திருமணம் பற்றிய அட்வைஸ் எல்லாம் செய்யாமல் இருவரை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு ஒரு லவ் ஸ்டோரியை லைவாக போரடிக்காமல் சொன்ன விதத்திற்காகவே படத்தை பார்க்கலாம் .

எதைப்பற்றியும் சிந்திக்காமல் ரிலாக்ஸாக பார்த்தால் போகிற போக்கில் தெளிக்கப்படும் கா(ம)மெடிகளை நிறையவே ரசிக்கலாம் . படத்தை கால தாமதம் இல்லாமல் ரிலீஸ் செய்து , ஒஸ்திக்கு கொடுத்த ஓவர் பில்ட் அப்பில் பாதியையாவது கொடுத்து ப்ரமோ செய்திருந்தால் படம் நிச்சயம் சிம்புவின் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் ...

ஸ்கோர் கார்ட் :  41 


14 November 2012

துப்பாக்கி - ஏ. ஆர். 47...


மிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு விஜய்க்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்று நினைக்கிறேன் , வேலாயுதம் , நண்பன் வெற்றிகளை தொடர்ந்து  துப்பாக்கியிலும் ;சரவெடி வெடித்திருக்கிறார். வழக்கமாக விஜய் படங்களில் வரும் பஞ்ச் வசனங்கள் , குத்துப்பாட்டு , ஏய் , ஊய் என்று கத்தும் வில்லன்கள் ,  டாடா சுமோவில் வரும் அடியாட்கள் இவைகளெல்லாம் இல்லாமலேயே துப்பாக்கியை நன்றாக சுட வைத்திருக்கிறார் ஏ . ஆர் .முருகதாஸ் ...

விடுமுறைக்கு தன் குடும்பத்தை  பார்க்க மும்பைக்கு வரும் ஆர்மி மேன் ஜகதீஷ் ( விஜய் ) அங்கு தொடர் குண்டுவெடிப்பு நடக்கவிருப்பதை அறிகிறார் . தன் விடுமுறை முடிவதற்குள் குண்டுவெடிப்புகளையும் , அதற்கு காரணமானவனையும் எப்படி அழிக்கிறார் என்பதே கதை . ஆக்சனுக்கு நடுவில் அவ்வப்போது விஜய் ரிலாக்ஸ் செய்வதற்காக நிஷாவை ( காஜல் அகர்வால் ) லவ்வுகிறார் கம் கவ்வுகிறார் ...

ஆக்சன படத்தில் விஜய் அடக்கி வாசித்திருப்பது தான் புதுசே ஒழிய குறுந்தாடி தவிர கெட்டப்பில் விஜய்க்கு நோ சேன்ச். படம் முழுவதும் விஜய் துறுதுறுப்பாக இருப்பது பெரிய ப்ளஷ் . படத்தின் ஆரம்பத்திலும் , முடிவிலும் மட்டுமே  ராணுவ உடையில் வந்து விஜய் நம்மை பெருமூச்சு விடவைத்திருப்பது மிகப்பெரிய  ப்ளஷ் . மனிதர் ஆட்டம் , பாட்டத்தோடு ஹிந்தி , ஆங்கிலம் என்று மற்ற மொழிகளிலும் பேசி புகுந்து விளையாடியிருக்கிறார் .


விஜயுடன் சேர்த்து ரசிகர்களையும் ரிலாக்ஸ் ! செய்வதாய் நினைத்து கடுப்பேற்றுகிறார் மணிபர்ஸ் உதட்டழகி காஜல் அகர்வால் . கலகலவென்று அறிமுகம் ஆகும் காஜல் கேரக்டர் அதை தக்கவைத்துக் கொள்ளாமல் போனது  அவர் குற்றமல்ல . படத்திற்கு ஸ்பீட்  பிரேக்கர் போல இவர் வந்து போவது பெரிய குறை ...நண்பனில் கலக்கிய சத்யனுக்கு இந்த படத்தில் பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார் . பில்லா 2 வில் அஜித்திடம் அடி வாங்கிய வில்லன் வித்யுத் இதில் விஜயிடம் அடி வாங்குகிறார் அவ்வளவே . ஜெயராம் கொஞ்சம் அறுத்தாலும் கிச்சு கிச்சு மூட்டுகிறார் ...

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமை . எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம் , இயக்குனரின் விருப்பப்படி விட்டுவிட்டார் போல . ஹாரிஸ் " அண்டார்டிகா " , " கூகிள் " போன்ற தன் டெம்ப்ளேட் பாடல்களால் தாளம் போட வைக்கிறார் . மற்ற பாடல்கள் படத்தில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது போல சலிப்பை தருகின்றன .  பின்னணி இசைக்காக கொஞ்சம் முயற்சி செய்திருக்கிறார் என்று சொல்லலாம் ...

சாதாரணமான கதைக்கருவை சுவாரசியமாக்கும் திரைக்கதை , ரமணா , ஏழாம் அறிவு போல நீள , நீளமாக இல்லாமல் தேசப்பற்றை சுருக்கென்று ஏற்றும் பளிச் வசனங்கள் ,  எதிர்பாரா  நேரத்தில் வைக்கப்படும் ட்விஸ்ட் , அடுத்து என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்க வைக்கும் காட்சிகள் போன்றவை துப்பாக்கியை தூள்பாக்கி என்று சொல்ல வைக்கின்றன .


செல்போன் டவரை வைத்தே விஜய் எங்கிருக்கிறார் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம் எனும்போது அதை விட்டுவிட்டு வில்லன் விஜயை தேடி அலைவது  திரைக்கதைக்கு உதவியிருந்தாலும் லாஜிக்கை பொறுத்தவரை பெரிய சொதப்பல் . படத்தின் நீளம் , விஜய் - காஜல் காதல் காட்சிகள் , " நம்ம பயலுக அமெரிக்காவே போனாலும் அண்ட்ராயர் தான் போடுவாங்க்ய " என்பது போல விஜய் - வித்யுத் இருவருக்குமிடையே நடக்கும் ஒண்டிக்கு ஒண்டி க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி (  அதிலும் சண்டை  என்ற பெயரில் விஜய் டான்ஸ் ஸ்டெப்ஸ் போடுவதெல்லாம் ஓவர் ) போன்ற குறைகள் துப்பாக்கியை தப்பாக்குகின்றன .

" ஒன் மேன் ஆர்மி " யாக விஜய் சுற்றி வந்தாலும் அவரை அன்டர்ப்ளே செய்யவிட்டு அனைவரையும் ரசிக்க வைத்த விதத்திலும் ,  மாஸ் ஹீரோவாக  இருந்தாலும் இயக்குனரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தால் தன் ரசிகர்கள் வட்டத்தையும் தாண்டி ஹீரோக்கள் ரீச் ஆக முடியும் என்பதை நிரூபித்த விதத்திலும் ஏ . ஆர் . முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி - ஏ .ஆர் . 47...

ஸ்கோர் கார்ட் : 43 

9 November 2012

ஓர் புன்னகை ...!





ஆணாய் பிறந்து
அழகாய் வளர்ந்து 
அன்பில் திளைத்து
அறிவை பெற்று 
சேட்டைகள் செய்து 
முதல் காதல் பெற்று 
பொருள் தேடி 
தினம் உழன்று
வாயைக் கட்டி
வயிற்றைக் கட்டி
வீட்டைக் கட்டி
விருப்பமான மனைவியுடன்
அதில் குடி புகுந்து
மனைவியின் முறைப்பையும்
பொருட்படுத்தாமல்
கிறுக்கல்களை வலைத்தளத்தில்
பதிவாய் பதித்து
அதற்கும் வரும்
பின்னூட்டங்களால்
பரவசம் அடைந்து
சுலப தவணைகளில்
வேண்டியதை பெற்று
சினிமாவை சிலாகித்து
சண்டைகள் போட்டு
சறுக்கி விழுந்து
மீண்டும் எழுந்து
பரிசுகள் குவித்து
பாராட்டில் நனைந்து
நித்தம் வாழ்க்கையில்
கிடைக்கும்
நிம்மதிகள் எல்லாம்
மகளே
கன்னக்குழி விழ 
நீ பூக்கும்
ஓர் புன்னகைக்கு
ஈடாகுமா ?!













Related Posts Plugin for WordPress, Blogger...