24 January 2012

உண்மையை சொல்கிறேன் ...


உண்மையை சொல்கிறேன் ...

நான் 
கவிதை எழுவதில்லை
அவள் 
பெயரை எழுதி
பத்திரப்படுத்துவதை தவிர ...

நான் 
பொய் சொல்வதில்லை
அவள் மட்டும் தான் 
உலக அழகி 
என்பதை தவிர ...

நான் 
உணர்ச்சி வயப்படுவதில்லை
அவள் மூச்சுக்காற்று 
மிக அருகாமையில் 
எனை உரசும் 
நேரங்கள் தவிர ...

நான் 
தூங்குவதில்லை 
அவள் 
கனவுகளில் வரும்
பொழுதுகள் தவிர ...

நான் 
கவலைப்படுவதில்லை 
அவள் 
என்னுடன் இல்லாத 
நிமிடங்கள் தவிர ...

நான் 
தற்பெருமை கொள்வதில்லை 
அவள் 
என் கைகளை 
கோர்த்து நடக்கும் 
தருணங்கள் தவிர ...

உண்மையை சொல்கிறேன் ...

நான்
உருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர ...!





17 January 2012

இனி என் படங்கள் பேசும் - மௌனகுரு அருள்நிதியின் பிரத்யேக பேட்டி ...


                                              An Exclusive Interview with Actor Arulnithi

இன்று தன் மௌனமான வெற்றியின் மூலம் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்திருப்பவர் நடிகர் அருள்நிதி ... ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட முதல்வரின் பேரன் , பெரிய தயாரிப்பாளரின் மகன் , முன்னணி தயாரிப்பாளர்களின் தம்பி , வெற்றி பட ஹீரோ என்று எந்தவித பந்தாவும் இல்லாமல் பேட்டி என்றவுடன் தன் முக்கியமான அலுவல்களுக்கிடையேயும் நமக்காக நேரம் ஒதுக்கினார் ... மூன்றாம்கோணம் தமிழ்  வலைப்பத்திரிக்கையின் பொங்கல் சிறப்பு மலருக்காக கைபேசி மூலம் வெகு இயல்பாகவும் , தெளிவாகவும் முதன்  முறையாக நடிகர் அருள்நிதி அளித்த பிரத்யேக பேட்டி இதோ :

அனந்து : வணக்கம் ... முதலில் என் சார்பாகவும் , மூன்றாம்கோணம் வலைபத்திரிக்கை சார்பாகவும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்களையும், பொங்கல் நல் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி ...

அருள்நிதி : வணக்கம் சேம் டு யு ...



                                                        *** குழந்தைபருவம் *** 


அனந்து : சின்ன வயசுல நீங்க எப்படி சார் ? மௌனகுரு மாதிரி அமைதியா ? இல்ல பயங்கர வாலா ?

அருள்நிதி : அமைதியால்லாம் இல்ல ... கொஞ்சம் வாலு தான் ... நல்லா படிக்கணும்னு பூந்தமல்லியில்  இருக்கிற ஒரு ஹாஸ்டல்ல போட்டாங்க ... அங்க சிம்பு சார் கூட என் சீனியர் தான் ...

அனந்து : அப்போ பயங்கர சுட்டித்தனம் பண்ணிருப்பீங்கன்னு சொல்லுங்க !

அருள்நிதி : அதெல்லாம் இல்ல ( சிரிக்கிறார் ) ... வேற வேற க்ளாஸா இருந்ததினால ஹாய் - பாய் தான் சொல்லிக்க முடிஞ்சது ...


                                                            ***  குடும்பம் ***   


அனந்து : நீங்க எவ்வளவு பெரிய குடும்ப பாரம்பரியத்திலிருந்து வந்திருக்கீங்கன்னு எல்லோருக்கும் தெரியும் ... இருந்தாலும் தெரியாத சுவாரசியமான விசயங்களை தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கோம் !

அருள்நிதி : நான் சின்ன வயசா இருக்கும் போது எல்லாரும் தாத்தாவோட கோபாலபுரம் வீட்ல தான் கூட்டு குடும்பமா இருந்தோம் ... எனக்கு உதய் அண்ணன் தான் அப்போ ரோல் மாடல் ... அவர் என்னவாக போறாரோ அதே தான் நானும் ஆவேன்னு சொல்லுவேன் ... இப்ப கூட அவர்  மாதிரியே சினிமாவுக்கும் வந்துட்டேன் ...!



                                                         ***  கல்லூரி வாழ்கை ***


அனந்து : பள்ளி பருவத்துல சிம்பு உங்க சீனியர் , அதே போல விஜய் , சூர்யா படிச்ச லயோலா கல்லூரியில தான் நீங்களும் படிச்சிருக்கீங்க , அந்த அனுபவத்தை பத்தி சொல்ல முடியுமா ?

அருள்நிதி : நான் காலேஜ் முடிச்சு ஒரு தடவ ஆட்டோல போகும் போது , ஆட்டோ ஓட்டும் அண்ணன் " தம்பி இதுல விஜய் , சூர்யா லாம் வந்திருக்காங்க தெரியுமான்னு " கேட்டார் ...

அனந்து : பிற்காலத்துல நீங்களும் அவங்கள மாதிரி பெரிய ஹீரோ ஆவீங்கன்னு அவரே ஹின்ட் கொடுத்திருக்காரோ ...!

அருள்நிதி : அதெல்லாம் தெரியல ... என் குடும்ப பின்னணி அவருக்கு நல்லாவே தெரியும் ... அப்போ எனக்கு கிடைச்ச பேரு என் தாத்தாவால வந்தது..

அனந்து : பரவாயில்ல , இப்போ யாராவது அந்த ஆட்டோல போனா அருள்நிதி வந்த ஆட்டோன்னு நிச்சயம் சொல்லுவார் !

அருள்நிதி : அடடா ! ( சிரிக்கிறார் )


                                                      ***  சினிமா அறிமுகம் ***


அனந்து : முதல் சினிமா அறிமுகம் ?

அருள்நிதி : எனக்கு நாலு வயசு இருக்கும்னு நினைக்கிறேன் , அப்போ
" அருள்நிதி கம்பைன்ஸ் " பேனர்ல எங்க அப்பா " கோபுர வாசலிலே "  படத்தை தயாரிச்சார் ... படத்துல  கொள்ளுபாட்டி போட்டோவுக்கு பூ போடற மாதிரி ஒரு சீன் வரும் . அதுல என்ன வலுக்கட்டாயமா பூ தூவ வச்சாங்க , ஆனா இப்போ நான் வலுக்காட்டாயமா வம்சம் படத்துல நடிக்க வந்துட்டேன் ...

அனந்து : உங்கள  சின்ன வயசுல வலுக்கட்டாயமா பூ தூவ வச்சுருக்கலாம் , ஆனா மௌனகுரு வெற்றிக்கு பிறகு அடுத்த படத்துக்கு ரசிகர்கள் உங்களுக்கு பூக்கள் தூவ தயாரா இருக்காங்க !

அருள்நிதி : பூ தூவராங்களோ இல்லையோ , அவங்க ஏமாறாத மாதிரி நான் அடுத்த படம் கொடுக்கணும் , அவ்வளவு தான் ...

அனந்து : வம்சம் வாய்ப்பு எப்படி வந்தது ?

அருள்நிதி : உதய் அண்ணன் தயாரிப்புக்காக கதை கேட்டுக்குட்டு இருந்தாரு ... அப்போ பாண்டிராஜ் சார் சொன்ன கதை எனக்கு சரியான அறிமுகமா இருக்கும்னு அண்ணன் பீல் பண்ணாரு ...

அனந்து : அப்பா உடனே ஒத்துக்கிட்டாரா ?

அருள்நிதி : நீங்க வேற , என் படிப்புக்காக நிறைய புக்ஸா வாங்கி வச்சுருந்தாரு ( சிரிக்கிறார் ) , அப்புறமா அம்மா சொல்லி தான் சம்மதிச்சாரு , அவரே படத்தையும் தயாரிக்க ஒத்துக்கிட்டாரு ...


                                                            *** இயக்குனர்கள் *** 


அனந்து : உங்களை இயக்கிய  இயக்குனர்கள் பற்றி ?

அருள்நிதி : பாண்டிராஜ் சார் என்ன அறிமுகப்படுத்தி என்னால நடிக்க முடியும்னு காட்டினார் ... ரெண்டாவது படம் கமர்சியலா பண்ணேன் ... சாந்தகுமார் சார் மௌனகுரு மூலமா முழுமையான நடிகனாக எனக்குன்னு ஒரு இடத்தை ஏற்படுத்தியிருக்கார்னு சொல்லலாம் ...!


                                                              ***  நடிகைகள் ***


அனந்து : மூணு படத்துலயும் சுனைனா , ப்ரனிதா , இனியா இப்படி மூணு ஹீரோயின்களோட நடிச்சுட்டீங்க ! இதுல யார் கூட நல்லா கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆச்சுன்னு நினைக்கிறீங்க ? ( மாட்டிவிட்டுட்டேனே !)

அருள்நிதி : வில்லேஜ் , சிட்டி , மிக்ஸ்ட் இப்படி மூணுமே வேற வேற களங்கள்... ஹீரோயின்களோடு கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆச்சோ இல்லையோ இயக்குனர்களோட நல்லா வொர்க் அவுட் ஆச்சு ...( தப்பிசுட்டோம்ல ! )

                                                 
                                                           *** மௌனகுரு *** 


அனந்து : மௌனகுரு உங்களுக்கு செட்டாகும்னு எப்படி நம்பினீங்க ?

அருள்நிதி : வம்சம் படம் பண்ணும் போதே நான் மௌனகுரு கதைய கேட்டேன், ஆனா உதயனுக்கு அப்புறம் தான் பண்ண முடிஞ்சது... பக்காவா முழு கதையையும் சாந்தகுமார் சார் சொல்லும் போதே புடிச்சது ... அப்புறமா ரஷ்  பாக்கும் போதே படம் நிச்சயம் பேசப்ப்படும்னு நம்பினேன் , இவ்வளவு பெரிய வெற்றிய எதிர்பார்க்கல ! அதிலும் குறிப்பாக படம் ரிலீசான மூணாவது வாரத்துலயே நிறைய தியேட்டர்களும் , ஷோக்களும் இன்க்ரீஸ் ஆகியிருக்கரத பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு ...




                                                   ***  மௌனகுருவின் வெற்றி *** 


அனந்து : பொதுவா சினிமாவுல  ஜெயிக்கறது எவ்வளவு கஷ்டமோ , அத விட அத தக்க வச்சுக்கறது ரொம்ப ரொம்ப கஷ்டம் ... மௌனகுருவோட வெற்றிய எப்படி எடுத்துக்கிறீங்க ?

அருள்நிதி : ரொம்ப சந்தோசமா இருக்கு , அதே சமயத்துல கூடுதல் பொறுப்புணர்வோட இருக்கேன் ... பேருக்கு படம் பண்றத விட வருஷத்துக்கு ஒரு படம் பண்ணா கூட இந்த மாதிரி நல்லதா நச்னு படம் பண்ணனும்னு ரொம்ப தெளிவா இருக்கேன் ... ரிஸ்க் எடுத்தாலும் தரமான , வித்தியாசமான கதைகளுக்கு முக்கியத்துவம் தருவேன் ...



                                                      *** பிடித்த காட்சிகள் ***


அனந்து : மௌனகுரு படம் பார்க்கும் போதே நிறைய காட்சிகளை இயல்பாக நம் வாழ்க்கையோடு ரிலேட் செய்ய முடிந்தது , அந்த விதத்தில் உங்களுக்கு படத்தில் பிடித்த காட்சிகள் ?

அருள்நிதி : படத்தோட வெற்றிக்கு அதான் காரணம் ... படம் நெடுக எனக்கு பிடிச்ச சீன்ஸ் நிறைய இருக்கு , குறிப்பா என் அம்மா என்ன தோல்ல அடிக்குற சீன் , என்ன விட்டுற மாட்டேல்ல என்று இனியாவிடம் நான் சொல்ற சீன் , ஸ்ட்ரைக் சீன் இப்படி நிறைய இடங்களில் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் ரொம்பவே நல்லா இருந்தது ...


                                                            *** அடுத்த படம் ***


அனந்து : இப்போ உங்களோட அடுத்த படத்த பார்க்கறதுக்கு எல்லோரும் ரொம்ப ஆர்வமா இருக்கோம் ... முடிவு பண்ணிட்டீங்களா ?

அருள்நிதி : இன்னும் பேச்சுவார்த்தையில தான் இருக்கு , கூடிய சீக்கிரமே அறிவிப்பு  வரும் ...


                                                               ***  அரசியல் ***


அனந்து : அரசியல் சம்பந்தமான கேள்விகளை நீங்க தவிர்ப்பீங்கன்னு தெரியும், இருந்தாலும் கேட்கிறேன் ! எதிர்காலத்துல அரசியலுக்கு வருகிற  எண்ணம் இருக்கா ?

அருள்நிதி : மௌனகுரு படத்துல ஒரு சீன்ல நான் நாலு போலிஸ்காரங்க முன்னாடி முட்டி போட்டு உட்கார்ந்திருப்பேன் , அந்த மாதிரி சினிமாவுக்காக இமேஜ் பார்க்காம நடிக்கறது தான் என்னோட விருப்பம் , மத்தபடி நீங்க சொல்ற  மாதிரி எண்ணமெல்லாம் எனக்கு இல்லை ...


                                                               *** கல்யாணம் *** 


அனந்து : என்ன ஐடியால்ல இருக்கீங்க ? லவ் மேரேஜா இல்ல அரேஞ்சுடா ?

அருள்நிதி : கண்டிப்பா கல்யாணம் ஆகும் போது பத்திரிக்கை  கொடுப்பேங்க ... அப்போ தெரிஞ்சுப்பீங்க !


                                                                 ***  நன்றி ***


அனந்து : இந்த பேட்டி மூலமாக யாருக்காவது நன்றி சொல்ல விரும்புறீங்களா?

அருள்நிதி : மொதல்ல எங்க அப்பா அம்மாவுக்கும்  , அப்புறமா உதய் அண்ணன் உட்பட என் குடும்பத்தாருக்கும் , பாண்டிராஜ் சார் , சாந்தகுமார் சார் இருவருக்கும்  , ரசிகர்களுக்கும் , மௌனகுரு படத்தை பாராட்டிய அனைத்து பத்திரிக்கைகளுக்கும் , குறிப்பாக படம் ரிலீஸ் ஆன உடனே தரமான படம் என்பதை உணர்ந்து இணையதளத்தில் நல்ல படியாக விமர்சனம் செய்த உங்களை போன்ற இணையதள எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ...

அனந்து : நான் கேட்டவுடன் , எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி பேட்டி கொடுத்தற்கு மிக்க நன்றி ...!

அருள்நிதி : நன்றி ...!

14 January 2012

வேட்டை - வேகத்தடை ...



ர்யா , மாதவன் , சமீரா ரெட்டி , அமலா பால் இவர்களுடன் லிங்குசாமி யு.டி.வி  யுடன் இணைந்து தயாரித்து இயக்கியதால் எனது எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் - 2012  லிஸ்டில் வேட்டையும் இருந்தது ... நடிகர்களோடு சேர்த்து யுவன் - நீரவ் ஷா , ஆக்சன் படத்திற்குண்டான பக்கா பார்முலா கதை இவையெல்லாம் இருந்தும் லிங்குசாமி வேட்டை யில் வேகத்தை கோட்டை  விட்டுவிட்டார் ...

போலிஸ்கார அப்பாவுக்கு பயந்தாங்கொள்ளி அண்ணனாக மூத்த மகன் மாதவன் , தைரியமான தம்பியாக ஆர்யா இருவரும் நடிக்க அவர்களுக்கு ஜோடி அக்கா - தங்கையாக சமீரா ரெட்டியும் , அமலா பாலும் நடித்திருக்கிறார்கள் ...அப்பா இறந்து விட மாதவனுக்கு தூத்துக்குடியில் எஸ்.ஐ வேலை கிடைக்கிறது ... அந்த ஊரில் போட்டி போட்டுக்கொண்டு அக்கிரமங்கள் செய்யும் இரண்டு வில்லன்களை அண்ணன் மாதவன் தம்பி ஆர்யாவின் உதவியுடன் வேட்டையாடுகிறார் ... கடைசியில் அண்ணன் - தம்பி சேர்ந்து வில்லன்களை அழிக்கும் பார்முலா கதை ...


ஹீரோக்களுக்கு ஆக்சன் இமேஜை ஏற்படுத்துவதில் வல்லவரான லிங்குசாமியுடன் இணைந்தும் ஆர்யாவிற்கு சக்சஸ்புல் ஆக்சன் ஹீரோவாக மாறக்கூடிய வாய்ப்பு வேட்டையில் நழுவிப்போனது துரதிருஷ்டமே ... தெனாவெட்டான உடல்மொழியில் நக்கலான பேச்சு , சண்டையில் ஆக்ரோஷம் இதெல்லாம் ஆர்யாவிற்கு நன்றாகவே வந்தாலும் , எல்லா சீன்களுக்கும் ஒரே மாதிரியான முகபாவத்தை காட்டுவது கொஞ்சம் டல்லடிக்கிறது ... குறிப்பாக அப்பா இறந்து போகும் சீனில் இவர் யார் வீட்டுக்கோ எழவுக்கு போனது போல முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறார் ... அவருக்கு என்ன சோர்வோ ? ...


டைட்டில் கார்டில் இரண்டாவதாக பெயர் வந்தாலும் ஆர்யாவுக்கு ஒரு படி மேலாகவே நல்ல வெயிட்டான கேரக்டர் மாதவனுக்கு , இருந்தாலும் அந்த வெயிட்டை கொஞ்சம் உடலில் அவர் குறைத்திருக்கலாம் , பாடல் , சண்டை காட்சிகளில் தொப்பை உறுத்துகிறது ...  பயந்தாங்கொள்ளி போலீசை அப்படியே கண்முன் நிறுத்துகிறார் , பயந்த முக பாவங்களில் சிரிப்பையும் வரவைக்கிறார் ...ஆனால் சீரியசான போலீசாக மாறிய பிறகும் ஏய் , ஊய் என்று கத்தி நம்மை சிரிக்க வைக்காமல் இருந்திருக்கலாம் ... சமீபத்தில் ஹிந்தியில் பெரிய ஹிட் கொடுத்து விட்டு தமிழில் இது போன்ற கேரக்டரில் நடிக்க மாதவனால் மட்டுமே முடியும் ...


சமீரா - அமலா இருவரில் சமீராவிற்கு நல்ல கதாபாத்திரம்..குறிப்பாக இவர் ஆர்யாவுடன் சண்டையிடும் காட்சிகள் அருமை...ஆனால் அழகான அமலாவுடன் இவர் சேர்ந்து நிற்கும் போது அக்கா போல அல்லாமல் அத்தை போல தெரியும் அளவிற்கு முற்றல் முகம் ...

அமலா எக்ஸ்ட்ரா இரண்டு பாடல்கள் ஆர்யாவுடன் வருகிறார் , ஆர்யாவிற்கு முத்தம் கொடுக்கிறார் அவ்வளவே ... யுவன் - முத்துகுமார் கூட்டணியில் பழைய மேஜிக் சுத்தமாக மிஸ்ஸிங் ... " பப்பரப்ப " , ஓபனிங் சாங் தவிர மற்றவை சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை ...



அண்ணன் , தம்பி இருவரின் குணாதசியங்களை   முதலிலேயே எளிதாக விளக்கி விடுவது , ஆர்யா - மாதவன் கெமிஸ்ட்ரி , அழகான அமலா பால் , இரண்டாம் பாதியில் வைக்கப்பட்ட சின்ன சின்ன ட்விஸ்டுகள் இவையெல்லாம் வேட்டையை கவனிக்க வைக்கின்றன ...

பார்முலா பழசாக இருந்தாலும் அதை விட அதரபழசான திரைக்கதை உத்தி , கிருஷ்ணா டாவின்ஷி உட்பட ஆறுபேர் கதை விவாதத்தில் இருந்தும் ஒன்றிரண்டை தவிர சுவாரசியம் இல்லாத , எளிதில் கணித்துவிடக்கூடிய சீன்கள் , கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய வைத்து ஆர்யா மாதவனை வீரனாக மாற்றிய பிறகும் மாதவன் மெனக்கெடாமல் அதே தொப்பையுடன் அலைவது , சொத்தையான வில்லன்கள் , " ஏய் , அண்ணன தொட்டா என்ன நடக்கும் தெரியும்ல  , ஊரே பத்திக்கிட்டு எரியும் " இது போன்ற புளித்துப்போன மொக்கையான வசனங்கள் இவையெல்லாம் வேட்டைக்கு விறுவிறுப்பை குறைக்கும் வேகத்தடையாய் இருக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 40 

நண்பன் - வெற்றியாளன் ...



முதல்வன் படத்திற்காக பத்து வருடங்களுக்கு முன்பாகவே சேர்ந்திருக்க வேண்டிய விஜய் - ஷங்கர் இருவரும் இப்போது நண்பனில் கை கோர்த்திருக்கிறார்கள் ... " 3 இடியட்ஸ் " ரீமேக் வாயிலாக அவர்கள் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாகவே நண்பன் ஜெயித்திருக்கிறான் ... அமீர்கான் நடிப்பில் சேத்தன் பகத்தின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட அருமையான படத்தை விஜய்யின்  இமேஜிற்காக கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் அப்படியே எடுத்ததே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ...

வெங்கட் ( ஸ்ரீகாந்த் ) , சேவற்கொடி செந்தில் ( ஜீவா ) இருவரும் குசும்பனின்
( சத்யன் ) உதவியுடன் தங்களின் வாழ்க்கையையே நல்ல படியாக மாற்றியமைத்து விட்டு திடீரென காணாமல் போய் விட்ட நண்பன் பாரிவேந்தனை ( விஜய் ) தேடி போகிறார்கள் ... தேடலுக்கிடையில் நண்பன் யார் ? என்ன செய்தான் ? என்பதை பிளாஷ்பேக் மூலம் அழகாக விளக்குகிறார்கள் ... தேடிய  நண்பன் இவர்களுக்கு கிடைத்தானா ? என்பதே மீதி கதை ...

கல்வியை உணர்ந்து படிக்க வைக்காமல் இயந்திரத்தனமாக மனப்பாடம் செய்ய வைக்கும் பயிற்றுவித்தல் முறையும் , அதை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்களும் , தங்களின் ஆசையை பிள்ளைகளின் மேல் திணிக்கும் பெற்றோர்களும் ,  பள்ளி - கல்லூரிகளில் இருக்கும் ரேங்கிங் சிஸ்டமும் மாணவர்களை தேர்வில் வெற்றி பெற செய்தாலும் வாழ்க்கையில் தோற்கடித்து விடுகின்றன என்பதை செவிட்டில் அறைவது போல சொல்கிறது படம் ...


போக்கிரிக்கு பிறகு பெரிய வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த விஜய்க்கு கடந்த வருடம் காவலன் நல்ல பெயரையும் , வேலாயுதம் கொஞ்சம் வசூலையும் வாங்கிக்கொடுத்தன ... ஆனால் இவையிரண்டையும் பெரிய அளவில் வாங்கிக்கொடுத்திருக்கிறான் நண்பன் ... வழக்கம் போல கெட் -அப்பை மாற்றாவிட்டாலும் , பஞ்ச் டயலாக் , சண்டை இவைகளில்லாத வித்தியாசமான கேரக்டரில் தன்னை முழுமையாக புகுத்தி படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் விஜய் ... கீப் இட் அப் விஜய் ... உங்ககிட்ட இருந்து இன்னும் இதுபோல நிறைய எதிர்பார்க்கிறோம்  !


மற்ற இருவரை விட ஜீவா கல்லூரி மாணவனாக வெகு இயல்பாக பொருந்துகிறார். ஏழை மாணவன் என்பதை தன் நடிப்பாலும் , உடல்மொழியாலும் நன்றாக வெளிப்படுத்துகிறார்... தண்ணியடித்து விட்டு வகுப்பறையில் இவர் செய்யும் கலாட்டா கல கல ... மாதவன் இடத்தில் ஸ்ரீகாந்தை நினைத்து பார்ப்பது கஷ்டம் என்றாலும் தன் லிமிடேசனை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார் ... குறிப்பாக அப்பாவிடம் தன் எதிர்காலத்திற்காக மன்றாடும் காட்சி அற்புதம் ...


ஒல்லியான இலியானா தன் இடுப்பாலும் , நடிப்பாலும் நம்மை கவர்கிறார் ! இராணியின் இயல்பான நடிப்பை தன் ஓவர் ஆக்டிங்கால் கெடுத்து விடுவாரோ என்ற பயத்தை ஆங்காங்கே ஏற்படுத்தினாலும் , அனுபவம் வாய்ந்த நடிப்பால் சத்யராஜ் சபாஷ் போட வைக்கிறார் ...

தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகி பெரிய காமெடி பண்ணியவர் சத்யன் , ஆனால் நண்பனை பார்த்த பிறகு " 4 இடியட்ஸ் " என்று கூட பெயர் வைக்கலாமென சொல்லுமளவிற்கு காமெடியனாக மட்டுமல்ல  நல்ல நடிகனாவும் தன்னை நிரூபித்திருக்கிறார் ... எஸ்.ஜே.சூர்யா வந்தவுடன் தியேட்டரில் பயங்கரமாக கை தட்டுகிறார்கள் ! ஹீரோ ஆசையையெல்லாம்  ஒதுக்கி வைத்துவிட்டு  கேரக்டர் ஆர்டிஸ்டாக மாறினால் அவருக்கு நல்ல எதிர்காலம் என்று நினைக்கிறேன் ...

ஹாரிஸ் ஜெயராஜ் " சைய்ய சைய்யா " வில் இருந்து " அஸ்க் அஸ்க் " , " சலே சலோ " வில் இருந்து " என் நண்பன் போல " இப்படி ஏ.ஆர்.ஆரின் மெட்டுக்களை உருவியிருந்தாலும் வழக்கம் போல பாடல்களை ஹிட் செய்து விட்டார் ... மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு   ஊட்டியின்  ஹேர்பின் வளைவுகளை டாப் ஆங்கிளில் காட்டி மிரள வைக்கிறது ...



ரீமேக் படங்களாக இருந்தாலும் ஈயடிச்சான் காப்பி செய்வதை பொதுவாக யாரும்  விரும்புவதில்லை , இருப்பினும் இந்த படம் பார்த்த பிறகு நல்ல வேலை எதையும் மாற்றவில்லையே என "  3  இடியட்ஸ் " பார்த்தவர்களையும் , கதை நன்றாக இருந்தால் எந்த ஹீரோவும் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என "  3 இடியட்ஸ் " பார்க்காதவர்களையும் சொல்ல வைத்ததே படத்தின் பெரிய பலம்...

பதினான்கு ஆண்டுகளுக்கு முந்தைய கல்லூரி வாழ்க்கையை காட்டும் போது சரளமாக செல்போனை பயன்படுத்துவது , இலியானாவின் திருமண காட்சியை ஹிந்தி படத்தை போல வட இந்திய ஸ்டைலில் வைத்திருப்பது , என்ன தான் ஆள் மாறாட்டம் செய்திருந்தாலும் நண்பர்களை மட்டுமின்றி காதலியையும் பத்து ஆண்டுகளாய் வேறெந்த விதமான அழுத்தமான காரணமும் இல்லாமல் விஜய் பிரிந்திருப்பது , நகைச்சுவையாகவே நகர்த்திக்கொண்டு போவதால்
" 3  இடியட்ஸ் " ஏற்படுத்தியதை போன்ற சீரியஸ் பாதிப்பை ஏற்படுத்த தவறியது போன்ற சிலவற்றையும் குறைகளாக சொல்லலாம்  ...

ரீமேக் படமாக இருந்தாலும் ஷங்கரின் முந்தைய வெற்றிப்படங்களின் வசூலுக்கு எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதை நிரூபிக்கும் நண்பன் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவரின் பார்வைக்கும் ஒரு வெற்றியாளன் ...

ஸ்கோர் கார்ட் : 45 

11 January 2012

நம் காதல் ...!



எந்தவித கணக்கீடுகளுக்குள்ளும்
அடங்குவதில்லை
நம் காதல் ...

விழுந்து எழுந்து
வளைந்து நெளிந்து
ஏதோ ஒரு விகிதத்தில்
அது
ஓடிக்கொண்டேயிருக்கும் ...!

உன்னுடன் இனி பேசுவதில்லை
என்று சொல்லியாவது
முறிந்த
நம் பேச்சுவார்த்தை
மீண்டும் தொடங்கும் ...

பூமராங் போல
எங்கே போனாலும்
என் மனம்
மீண்டு வந்து
உன் கைகளுக்குள்ளேயே அடங்கும் ...!

அழகான பெண்கள்
கடக்கும் போது
அடடா என வழிந்தாலும்
முறைப்புடன் உன் முகம்
கண் முன் ஒரு கணம்
வந்து போகும் ...

உனக்காக கவிதைகள்
என்ற பெயரில்
நான்
ஏதேதோ கிறுக்கியதால் தான்
சொன்னான் பாரதி
தமிழ் இனி மெல்ல சாகும் ...!

கடன் கொடுத்தார்
நெஞ்சம் போல்
பதைபதைக்க வைத்தாலும்

பிரிந்திருக்கையில்
உலகமே நீயாய்
உன்னோடிருக்கையில்
நீயே உலகமாய்
எல்லாமுமாய் என்னுள்
எரிந்து கொண்டேயிருக்கும்
தீயாய்
நம் காதல் ...!




5 January 2012

எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் - 2012

               
கடந்த வருடத்தை போல உலக கோப்பை கிரிக்கெட் , சட்டசபை தேர்தல் இவையெல்லாம் இந்த வருடம் இல்லாத காரணத்தால் கூடுதலான படங்கள் ரிலீஸ்  ஆகுமென எதிர்பார்க்கலாம் ... அதிலும் ரஜினி , கமல் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவரின் திரைப்படங்களும் இந்த வருடம் வெளிவரப்போவது எதிர்பார்ப்பை எகிற வைத்திருத்திருக்கிறது ... இனி எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் - 2012 பற்றிய ஓர் பார்வை ....



கோச்சடையான்

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் கதையமைப்பில் அவருடைய மகள் சௌந்தர்யா இயக்கும் 3 d  படம் " கோச்சடையான் " . ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் , ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில் வெளிவரும் படத்தில் சினேகா , ப்ரிதிவிராஜ் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்கள் ... அவதார் , டின்டின் போன்ற ஹாலிவுட் படங்களின்  வரிசையில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் கோச்சடையான் உருவாகிறான் என்பது குறிப்பிடத்தக்கது..

விஸ்வரூபம் 

உலக நாயகனின் நடிப்பு , இயக்கத்தில் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் இண்டர்நேஷனல் கிட்டத்தட்ட 150  கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கும் படம் " விஸ்வரூபம் " ... முதலில் செல்வராகவன் இயக்கத்தில்  யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவருவதாய் இருந்த படம் இப்பொழுது கமல் இயக்கத்தில் ஷங்கர் - இஷான் - லாய் இசையில் தமிழ் - தெலுங்கு - ஹிந்தி என்று மூன்று மொழிகளில் வெளிவரப்போகிறது ... சோனாக்ஷி சின்ஹா , தீபிகா படுகோனே , அனுஷ்கா ஷெட்டி இவர்களின் பெயர்கள் அடிபட்டாலும் பூஜா குமார்  , இஷா இருவர் மட்டுமே ஹீரோயின்களாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக நம்பத்ததகுந்த தகவல் ...

நண்பன் 

அமீர்கான் நடிப்பில் 200  கோடிகளுக்கு மேல் வசூல் செய்த " 3 இடியட்ஸ் " படத்தை தழுவி ஷங்கர் எடுக்கும் முதல் ரீமேக் படம் " நண்பன் " ... ஹீரோவாக விஜய் , ஹீரோயினாக இலியானா நடிக்க , ஜீவா , ஸ்ரீகாந்த் , சத்யராஜ் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள் ... ஹாரிஸ் இசையில் படம் ஜனவரி 12  இல் ரிலீஸ் ஆகிறது ...



பில்லா 2 

அஜித்குமார் நடிப்பில் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் இந்த வருடம் தமிழ் புத்தாண்டில் வெளிவருமென எதிர்பார்க்கப்படும் படம் " பில்லா 2  " ... பில்லாவை இயக்கிய விஷ்ணுவர்த்தனே முதலில் இயக்குவதாக இருந்து பின்னர் அவர் விலக " உன்னைப்போல்ஒருவன் " படத்தை இயக்கிய சக்ரி அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் ... 2008  இல் " பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் " பட்டம் பெற்ற பார்வதி ஓமனக்குட்டன் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ... யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் ...

கரிகாலன் 

விக்ரம் நடிப்பில் , காந்திகிருஷ்ணா கதையில் ,  கண்ணன் இயக்கும் பீரியட் படம் " கரிகாலன் " ... வீர் படத்தில் சல்மான்கானுடன் நடித்த ஜரினா ஹீரோயினாக நடிக்க முக்கியமான வேடத்தில் பசுபதி நடிக்கிறார் ... ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார் ... படம் தெலுங்கில் " வீருடு " என்ற பெயரில் ரிலீசாகிறது ...

மாற்றான் 

சூப்பர் ஹிட் ஹீரோ சூர்யா , ஹிட் பட இயக்குனர் கே.வி.ஆனந்த் இருவரும் "அயன்" வெற்றிக்கு பிறகு இணையும் மற்றொரு படம் "  மாற்றான் " ... " ரேஸ் " என்ற மலையாள படத்தின் ரீமேக்கான இந்த படம் தெலுங்கில் " வீடு " என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது ... ஹாரிஸ் இசையமைக்க , காஜல் ஹீரோயினாக நடிக்கிறார் ...





கந்தசாமி படத்தில் வடிவேலு ஓவர் நைட்டில் ஒபாமாவாக போவதாக சொல்லுவார் , அதே போல் ஒபாமா கூட யு டியுபில் கேட்டிருப்பாரோ என்று சந்தேகப்படும் அளவிற்கு தனுஷை உலகம் முழுவதும் பிரபலமாக்கிய ஒரே பாடல் கொலவெறி இடம்பெற்ற படம் " 3  " ... இந்த ஒரே பாடல் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒப்பிடும் அளவிற்கு உயர்ந்து விட்டார் இளம் இசையமைப்பாளர் அனிருத் ... ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் கமலின் மகள் ஸ்ருதி நடிப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ...

ஆதிபகவன் 

பெரிய ஹீரோக்களை போலவே எதிர்பார்க்க வைக்கும் இயக்குனர்களுள் முக்கியமானவர் அமீர் ... அவருடைய இயக்கத்தில் ஜெயம்ரவி யின் நடிப்பில் நீண்ட காலம் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம்
" ஆதிபகவன் "  ... நீது ஹீரோயினாக நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் ...



அரவான் 

அமீரை போலவே எதிர்பார்க்க வைக்கும் மற்றொரு இயக்குனர் வசந்தபாலன். இவருடைய இயக்கத்தில் ஆதி , பசுபதி , தன்ஷிகா நடிப்பில் உருவாகும் படம் "அரவான்" ... இப்படத்தில் பாடகர் கார்த்திக் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ... பரத் சிறு வேடத்தில் நடிக்கிறார் ...

தோனி 

பிரகாஷ்ராஜ் தயாரிப்பாளராக அறிமுகமான " அந்தபுரம் " படத்திற்கு இசையமைத்ததை போலவே அவர் இயக்குனராக அறிமுகமாகும் " தோனி " படத்திற்கும் இசைஞானியே இசையமைக்கிறார் ... இசையில் தான் என்றென்றும் ராஜா ... என்பதை இசைஞானி மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் படமாக இது அமையலாம் ...

பூக்கடை 

வெற்றி , தோல்விகளை தாண்டி தொழில்நுட்ப ரீதியாக தன் படங்களை கூர்ந்து கவனிக்க வைப்பவர் இயக்குனர் மணிரத்னம் ... அவர் தன்னுடைய வழக்கமான ஏ.ஆர்.ரஹ்மான் - ராஜீவ் மேனன் கூட்டணியுடன் சேர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனுடன் கை கோர்த்திருக்கும் படம் " பூக்கடை " ... அர்ஜுன் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் ஹீரோவாகவும் , தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்சு ஹீரோயினாகவும் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள் ...

வேட்டை 

ஹீரோக்களுக்கு தனி இமேஜை ஏற்படுத்திக் கொடுக்கும் இயக்குனர் லிங்குசாமி  , பையாவின் வெற்றியை தொடர்ந்து தன் சொந்த தயாரிப்பில் ஆர்யா , மாதவன் , சமீரா ரெட்டி , அமலா பால் இவர்களை வைத்து இயக்கம் படம் " வேட்டை " ... ஒளிப்பதிவை நீரவ்ஷா வும் , இசையை யுவன் ஷங்கர் ராஜா வும் கவனிக்கிறார்கள் ... ஏற்கனவே " பப்பரப்ப " பாடல் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது ...



வேட்டை மன்னன் 

வானத்தை நம்பி கோ வை கை கழுவிய சிம்பு நிச்சயம் கோ வின் வெற்றிக்கு பிறகு நிறைய வருத்தப்பட்டிருப்பார் ... அதே போல வேட்டையில் இருந்து விலகினாலும் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஜெய் , ஹன்சிகா , தீக்ஷா சேத் இவர்களுடன் இணைந்து சிம்பு நடிக்கும் படம் " வேட்டை மன்னன் " ... யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நீ தானே என் பொன்வசந்தம் 

கெளதம் மேனனின் தயாரிப்பு , இயக்கத்தில் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தனித்தனியாக எடுக்கப்பட்டு வரும் காதல் படம்  " நீ தானே என் பொன்வசந்தம் " ... தமிழில் ஜீவா ஹீரோவாக நடிக்க மூன்று மொழிகளிலும் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார் ... முதலில்  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாய் இருந்து பின்னர் விலகிய பிறகு இதுவரை யார் இசையமைப்பாளர் என்பதை சொல்லாமல் சஸ்பென்சாகவே வைத்திருக்கிறார்கள்...

ஒரு கல் ஒரு கண்ணாடி 

தம்பி அருள்நிதி சென்ற வருடம் மெளனமாக ஒரு வெற்றியை கொடுத்திருக்க, இந்த வருடம் வெற்றிப் பட இயக்குனர் ராஜேஷுடன்  இணைந்திருக்கும் அண்ணன் உதயநிதி அதே போல வெற்றியை கொடுப்பாரா என எதிர்பார்க்க வைத்திருக்கும் படம் " ஒரு கல் ஒரு கண்ணாடி " ... ஹன்சிகா ஹீரோயினாக நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் ...


Related Posts Plugin for WordPress, Blogger...