23 October 2015

அஜித் Vs விஜய் (2) - AJITH Vs VIJAY ...அஜித் 

மராவதியில் அறிமுகம் ஆகி ஆசைக்கு பிறகு இளம் பெண்கள் மனதில் ஆசை நாயகனாக உருமாறி காதல் கோட்டையில் தன் வெற்றிக் கொடியை  நட்டு , வாலிக்கு பிறகு தனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகை அமர்க்களப்படுத்தி வருபவர்  அஜித். இவரின் மங்காத்தா ஆட்டத்தை இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை. இவரின் மேல் ரசிகர்களுக்கு இருக்கும் பேய்த்தனமான அன்பு தான் வேதாளம் என்று பேர் வைத்தாலும் டீசருக்கே யூ டியூபில் 48 லட்சம் ஹிட்ஸ்களும் , எல்லா படத்திற்கும் ஒபெனிங்கில் தல யாகவும்  இவரை வைத்திருக்கிறது ...


சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் வந்தவர் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்ததோடு  20 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் 50க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்  .  சிவாஜிகமல் , விக்ரம் என மிக சிறந்த நடிகர்கள் வரிசையில் அஜித் இல்லையென்றாலும் எல்லா தரப்பிலும் இவருக்குள்ள ரசிகர்களால் இவர் படங்களுக்கு கிடைக்கும் முதல் வாரத்திற்கான வசூலையும்,வரவேற்பையும் யாரும் மறுக்க முடியாது . அதனால் தான் தோல்வி படங்கள் அதிகம் கொடுத்திருந்தும் வர்த்தக ரீதியாக இவர் படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள் ...

22 ஆண்டு கால கலை வரலாற்றில் முதல் படம் அமராவதி  தோல்விப் படம் . மூன்றாவது படமான ஆசை பெரிய வெற்றியை பெற்ற போதும் அதை தொடர்ந்து ஒரே வருடத்தில் உல்லாசம் ராசி உட்பட ஐந்து தோல்வி படங்கள்.  வேறு யாராவதாக இருந்திருந்தால் இவ்வளவு வருடம் நடித்திருப்பார்களா என்பது  சந்தேகமே .   ஆரம்ப காலங்களில் அஜித் பத்திரிக்கையாளர்களிடம்   அதிகமாக கோபப்படுகிறார்  என்ற சர்ச்சையும் இருந்தது. இவர் எடுத்த சில முடிவுகளும் தவறாகவே இருந்தன..திரை உலகில் இவரை வழி  நடத்த  காட் பாதர்  யாரும் இல்லாததும் காரணமாக இருக்கலாம் . ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிம்பு , ஆர்யா  போன்ற சம கால நடிகர்களே இவரை  காட் பாதர் என்று சொல்வதும் , சமீபமாக வரும் எல்லா படத்திலும் ஏதோ ஒரு வகையில் இவரது பெயர் இடம்பெறுவதும்
( மிக சமீபத்திய உதாரணம் 10 எண்றதுக்குள்ள ) தமிழ் சினிமா வரலாற்றில் அஜித்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ...                   

சிவாஜி , ரஜினி , கமல் வரிசையில் அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நடித்திருக்கும் அஜித் அதில் வாலி , வரலாறு , வில்லன் , பில்லா உட்பட பெரும்பாலான படங்களில் வெற்றி பெற்றிருக்கிறார் . விஜயகாந்தை போல இவரும் நிறைய புது முக இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறார் . அதில் சரண் , எஸ்.ஜே.சூர்யா , துரை போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் . ரெட் , ஜனா , ஆழ்வார் போன்ற புதியவர்களின் படங்கள் காலை வாரினாலும் முகவரி , கிரீடம் போன்றவை அஜித்துக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தன . விஜய் , சூர்யா போன்ற நடிகர்களை போல அஜித்தால் நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் பிரகாசிக்க முடிவதில்லை , அவர் உடல் எடையை கவனிப்பதில்லை , ரொம்ப வருடங்களாக கெட்டப்பை மாத்தாமல் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே இருக்கிறார்  இப்படி சில குறைகள் அவரை பற்றி சொன்னாலும் அவர் தான் எங்க " தல " என்கிறார்கள் ரசிகர்கள் ...  

முன்னாள் முதல்வர் அமர்ந்திருந்த மேடையிலேயே தனக்கு சரியென பட்டதை தைரியமாக சொன்னது  , விளம்பர படங்களில் நடிக்காதது  , தான் நடிக்கும் படங்கள் உட்பட எந்த சினிமா விழாக்களுக்கும் போகாதது என்று ஒரு கோடு  போட்டுக்கொண்டு அதற்குள் தனியாக இருப்பது போல பட்டாலும் அவர் ரசிகர் மன்றங்களை கலைக்க சொல்லியும் அவர் கிழித்த கோட்டை தாண்டாத ரசிகர்கள் கிடைத்தது அவரது வரம் . பீக்கில் இருக்கும் போதே டக்கென்று ரேசிங் கிளம்புவது , செட்டில் உள்ள அனைவருக்கும் சுவையாக பிரியாணி சமைத்து தருவது , சின்ன நடிகர் அப்புக்குட்டி யை நிற்க வைத்து விதவிதமாக போட்டோ எடுப்பது என்று தல செய்யும் நிறைய விஷயங்கள் அவரது தனித்துவம் . அதனால் தான்  நடிப்பு திறமையால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் தன் முயற்சி, உழைப்பு , துணிவு மற்றும் போலித்தனமில்லாத இயல்பு இவற்றின் மூலம் அசல்  நாயகனாகவே நம் கண் முன் தெரிகிறார்  அஜித் ...


அறிமுகம்       :  அமராவதி  
முதல் ஹிட்  :  ஆசை 
ப்ரேகிங் பாயிண்ட் : வாலி 
தல அவதாரம்         : தினா 
அறிமுக இயக்குனர் : செல்வா 
பேவரட் இயக்குனர்  : சரண் ,  இப்போது சிறுத்தை சிவா 
100 க்ரோர் கிளப் : மங்காத்தா , ஆரம்பம் 
அடுத்த ரிலீஸ் : வேதாளம் 

அடுத்த பதிவில் விஜய்  ...நானும் ROWDY தான் - NRD - நம்பி பார்க்கலாம் ...


பொதுவாக வெற்றிப் படங்களை இரண்டு வகைக்குள் அடக்கலாம் . ஒன்று படம்  பார்த்து முடித்த பின்னும் காட்சிகளின் பாதிப்பு சில காலம் தொடர்வது, இரண்டு படம் பார்க்கும் போது எதைப்பற்றியும் யோசிக்காமல் என்ஜாய் செய்து விட்டு வெளியே வந்தவுடன் மறந்து விடுவது . நானும் ரவுடி தான் இதில் இரண்டாம் வகை ...

சிறு வயதிலிருந்தே ரவுடியாக வேண்டுமென்கிற கொள்கையில் ! இருக்கும் பாண்டு பாண்டி ( விஜய் சேதுபதி ) க்கு ஒரு சோதனை . காதலி காதம்பரி
( நயன்தாரா ) யின் பெற்றோர்களை கொன்ற நிஜ ரவுடி கிள்ளிவளவனை
( பார்த்திபன் ) கொல்ல வேண்டும் . இந்த ஆஸ் யூசுவல் ரிவென்ஜ் ஸ்டோரியை படு காமெடியாக சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன் ...

இ.ஆ.பா.கு விற்கு பிறகு வெற்றியை தேடி அலைந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு இந்த படம் நல்ல தீர்வு . போலீஸ் செலக்சனில் முன்னாள் ஒடுபவனிடம் போலீசை விட ரவுடி தான் பெருசு என்று ப்ரைன் வாஷ் செய்யும் ஆரம்ப காட்சியிலிருந்து தொடங்கி விடுகிறது அவர் ராவுடி . இவரது கண்களே நன்றாக பேசும் போது படபடவென உதடுகள் பேசுவதை தவிர்த்திருக்கலாமோ?! . இந்த வருடத்தின் நாயகி நயன்தாரா தான் என்பதில் சந்தேகமே இல்லை . மாயா வை தொடர்ந்து மற்றொருமொரு மைண்ட் ப்ளோயிங் பெர்ஃபார்மன்ஸ் . காது கேட்காத பெண் காதம்பரி ! யாக நடித்ததோடு சொந்தக்குரலிலும் முதன்முறையாக பேசி நடித்திருக்கிறார் . இனிமே இவங்களே தொடர்ந்து டப்பிங் பேசலாம் . அப்பா இறந்தது தெரிந்தவுடன் ரோட்டில் அழுது கொண்டே நயன் போகும் ஸீன் காமடிப் படத்திலும் லேசாக கலங்க வைக்கிறது . இன்டர்வெல் ப்ளாக்கில் வரும் லிப் டு லிப் பேசும் ஸீன்  தேவையா ?! . என்று கேட்க வைத்தாலும் வித்தியாசம் ...


லீட் பேர்  தவிர சூயிங்கம் மென்று கொண்டே சேட்டையாக பேசும் பார்த்திபன், கிடைக்கிற கேப்பில் காமெடி கடா வெட்டும் ஆர்.ஜே .பாலாஜி , " மொதல்ல அந்த பொண்ணு பேசுறத நிப்பாட்ட சொல்லுங்கப்பா " என்று புலம்பும் ஆனந்தராஜ் , பிள்ளைக்காக பார்த்து மார்க் போடுங்க என்று கெஞ்சும் போலீஸ்காரம்மாவாக ராதிகா இவர்களோடு மன்சூர்அலிகான் , மொட்டை ராஜேந்திரன் , ராகுலாக  வரும் பெரியவர் என எல்லோருமே தங்கள் பங்கை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள் ...

ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவு பாண்டிச்சேரியை பளிச்பளிச் என்று காட்டுகிறது . முதலில் தான்  ஹீரோவாக நடிக்கவிருந்ததாலோ என்னவோ அனிருத் தின் இசை இந்தப் படத்தில் கூடுதல் தெறி யாக இருக்கிறது . பாடல்களை இயக்குனர் சரியான விதத்தில் பயன்படுத்தியதும் சூப்பர் . காது கேட்காத ஹீரோயின் , காதலனின் உதவியோடு பெற்றோர்களை கொன்றவனை பழிவாங்கும் கதைக்கு எங்குமே செண்டிமெண்டையோ , ஹீரோயிசத்தையோ புகுத்தாமல் தான் எடுத்துக்கொண்ட கண்டெண்டிற்கு ஏற்றபடி ஃப்ரெஸ்ஸாக இயக்குனர் சொன்ன விதத்திற்காக இந்த நானும் ரவுடி யை நம்பி பார்க்கலாம்  ...

ஸ்கோர் கார்ட் :  43

ரேட்டிங் :    3.5 * / 5 *


21 October 2015

10 எண்றதுக்குள்ள - 10 E - வேகமா எண்ணியிருக்கலாம் ...


கோலிசோடா ஹிட் டுக்கு பிறகு  இயக்குனர் விஜய்மில்டன் - ஐ ஹிட்டடித்த கையோடு நடிகர் சீயான் விக்ரம் இருவரும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் இணைந்திருக்கும் படம் 10 எண்றதுக்குள்ள . இவை தவிர படத்தின் எதிர்பார்ப்பு எகிறியதற்கு மற்றொரு காரணம் இளைஞர்களின் தற்போதைய சென்சேஸன்  சமந்தா . இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்பை விக்ரம் - சமந்தா காம்பினேஷனை வைத்து ஓரளவு மட்டுமே நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று சொல்லலாம் ...

சொன்ன டயத்துக்கு எதையும் டெலிவரி செய்யக்கூடிய  ஃபாஸ்ட் டிரைவர் ஹீரோ விக்ரமுக்கு  ( படத்தில் அவருக்கே பெயரே இல்லை  )  முசெளரி க்கு காரை கொண்டு சேர்க்கும் அசைன்மெண்ட் வருகிறது . காருக்குள் அவருக்கு தெரியாமல் இருப்பது ஹீரோயின் ஷகீலா ( நோ டென்ஷன் அது சமந்தாவோட பேரு ) . பிறகு என்ன நடந்திருக்கும் என்கிற  கடைசி பெஞ்ச் ஆடியன்ஸ் வரை தெரிந்த கதையை ட்விஸ்டோடு சேர்த்து ஸ்பீட் ப்ரேக்கரும் வைத்து சொல்லியிருக்கிறார்கள் ...

படத்துக்கு நிறைய மெனக்கெட்ட விக்ரம் அதுக்கு மேல என்றெல்லாம் ரிஸ்க் எடுக்காமல் கேசுவலாக செய்திருக்கும் படம் . படத்தில் லேசி போல காணப்பட்டாலும் ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறார் . சமந்தாவிடம் இவர் மாட்டிக்கொண்டு படும்பாடு சுவாரசியம் . சமந்தாவுக்கு விக்ரமுக்கு ஈக்குவலாக ஏன் கொஞ்சம் தூக்கலாகவே வெயிட்டான ரோல் . டிரைவிங் கற்றுக்கொள்கிறேன் பேர்வழி என்று இவர் அடிக்கிற லூட்டி தனியாக காமெடியன் இல்லாத குறையை தீர்க்கிறது . முதலில் கண்ணாடி போட்டுக்கொண்டு அப்பாவி போல இருப்பவரிடம் போகப்போக கண்ணாடியையும் காணோம் , அப்பாவித்தனத்தையும் காணோம் . ஒருவேளை கண்ணாடியோடு சேர்த்து அதுவும் தொலைந்து விட்டதோ என்னமோ ?! ...


படத்தின் சர்ப்ரைஸ் எளிமென்ட் சீரியஸ் டானாக வந்து சிரிப்பு காட்டும் பசுபதி. முன்டாசுப்பட்டி மூலம் நம்மை கவர்ந்த ராமதாசை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம் . ஹிந்திக்கார மைதாமாவு வில்லன்கள் படத்தின் கதைக்கு பொருத்தம் . சார்மி குத்தாட்டம் போடும் அயிட்டம் சாங் படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் . விக்ரமின் ஒபெனிங் ஸீன் உட்பட படத்தின் சி.ஜி கவுத்தினாலும் பாஸ்கரனின் ஒளிப்பதிவும் , மாஸ்டர் விஜயனின் சண்டைக்காட்சிகளும் படத்தை காப்பாற்றுகின்றன . டி.இமான் இசையில் பாடல்கள் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படியில்லை ...

ஒரு பெண்ணை இந்தியாவின் இந்த கோடியிலிருந்து அந்த கோடிக்கு கொண்டு செல்லும் பையா டைப் கதை . அதில் எதற்கு ஹீரோயின் கடத்தப்படுகிறாள் என்கிற ட்விஸ்டை கலந்து கதையெனும் காரை ஓட்டியிருக்கிறார்கள் . கடைசியில் அதற்கு சொல்லப்படும் காரணம் கொஞ்சம் வித்தியாசமாகப் பட்டாலும் பெரிதாக ஒட்டவில்லை . முசெளரி க்கு போன பிறகு ஏதோ இங்கிருக்கும் முசிறிக்கு போவது போல டிக்கெட் எடுத்து சமந்தாவை பஸ் ஏற்றி விடுகிறார் விக்ரம் . இப்படி படத்தில் லாஜிக் எனும் வஸ்துவை தங்கள் தேவைக்கேற்ப பின்பக்கம் ஸ்டெப்னி போல மாட்டியிருக்கிறார்கள் ...

ஒரு ஸீன் வந்தாலும் விக்ரம் - தங்கை ஸீன் உருக்கம் .  வழக்கமான கதைக்கு  உத்ராகண்ட் வில்லன்கள் சமந்தாவை ஏன் கடத்துகிறார்கள் ? சமந்தாவுக்கு என்ன ஆகும் ? , விக்ரம் எப்படி காப்பாற்றுவார்?  என்று  க்யூரியாசிட்டி யை  ஸ்க்ரீன் ப்ளே யில் கொடுக்கத் தவறவில்லை  இயக்குனர் விஜய்மில்டன் . அதேசமயம் விக்ரம் - சமந்தா காம்பினேஷனில் ரோட் ட்ராவல் கதையை யோசித்து 10 எண்றதுக்குள்ள என்று கேட்சியாக தலைப்பிட்டவர்கள் ஒன்னு ... ஒன்னேமுக்கால் என்று நீட்டி முழக்காமல் டைட்டிலுக்கேற்ப  கொஞ்சம் வேகமாக எண்ணியிருக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 40

ரேட்டிங் : 2.5 * / 5 *
20 October 2015

அஜித் Vs விஜய் (1) - AJITH Vs VIJAY ...
சினிமாவில் பார்க்கும் ஹீரோக்களை படம் முடிந்தவுடன் மறந்துவிடாமல் மனதோடு வைத்து பூஜிக்கும் பழக்கம் இன்று நேற்று என்றல்ல பாகவதர் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு நடந்து வருகிறது . எம்.கே.தியாகராஜ பாகவதர் - பி.யு.சின்னப்பா , எம்.ஜி.ஆர் - சிவாஜி , ரஜினி - கமல் இந்த வரிசையில் இன்று பாப்புலராக ரசிகர்களிடையே ஆராதிக்கப்படும் அதே சமயம் எதிர் குழுவினரால் கழுவி கழுவி ஊற்றப்படும் இரண்டு முன்னணி ஹீரோக்கள் அஜித் மற்றும் விஜய் . இவர்களுக்கு பிறகு தனுஷ் - சிம்பு என்றொரு அணி தோன்றினாலும் இன்றளவும் அஜித் - விஜய் இருவருமே கோலிவுட்டில் கோலோச்சி வருகிறார்கள் ...

ஏற்கனவே எதிரும் புதிருமாக இருக்கும் இவர்களின் ரசிகர்கள் ஆரம்ப காலங்களில் சிலேடையாக அடுத்த ஹீரோவை தங்கள் ஹீரோ தாக்கும் போது அந்த பக்க ரசிகர்கள் ஆத்திரப்படுவதை பார்த்து ஆரவாரம் செய்தார்கள் . உதாரணத்துக்கு தினா படத்துக்கு பின் தல என்று ரசிகர்களால் அஜித் அறியப்படுவது அனைவரும் அறிந்ததே . ஒரு படத்தில் ( புதிய கீதை என நினைக்கிறேன் ) விஜய் ' யாருடா உன் தல " என்று ஒரு அடியாளை பார்த்து கேட்டது அஜித் ரசிகர்களை சூடாக்கியது . அஜித் படங்களில் கூட இது போன்ற உதாரணங்களை சொல்லலாம் ., சமீபமாக என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்காவை பார்த்து " டாக்டரா நானா " என்று அஜித் தலையாட்டிய போதும் , சண்டைக்காட்சிக்கு முன்  அருன்விஜயை பார்த்து " என்னடா ஸ்பீச்சா கொடுக்கற " என்று கேட்ட போதும் அஜித் ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள் . விஜய்க்கு டாக்டர் பட்டம் கிடைத்திருப்பதும் , அவர் சில வருடங்களுக்கு முன்னாள் ஒரு கல்லூரியில் ஸ்பீச் கொடுத்ததும் அவர்களுக்கு தெரியாதா என்ன ?! . இப்படி அரசல் புரசலாக அவர்களுக்கிடையேயும் , நேரடியாக ரசிகர்களுக்கிடையேயும் இருந்த சண்டை சமீபத்தில் புலி ரிலீசுக்கு பிறகு இன்னும் அதிகமாகியிருக்கிறது...

புலி எதிர்பார்த்த அளவுக்கு போகாதது மட்டுமல்ல குருவி , சுறா வரிசையில் விஜய் ரசிகர்களே கிண்டல்  செய்யும் அளவுக்கு அமைந்துவிட்டது . படம் சரியாக ஓடவில்லை என்றவுடன் போஸ்டரில் விஜய் படத்தை சின்னதாக்கி ஒத்தக்கண்ணன் படத்தை பெரிதாக போடும் அளவுக்கு தியேட்டர்காரர்கள் இறங்கியும் , அது குழந்தைகளுக்கான படம் என்று பின்னர் கற்பூரம் அடித்து சத்தியம் செய்தும் குழந்தைகளே அதை நம்ப மறுத்துவிட்டார்கள் . அதோடு சேர்த்து ஒப்பனிங்  சீனில் வேதாளமாக வரும் அடியாளை விஜய் அடித்து நொறுக்குவார் என்று ரசிகர்கள் காத்திருக்க அவரோ அவன் காலை பிடித்துக் கொண்டு " நீங்க வேதாளம் , நாங்க பாதளம் " என்று டயலாக் பேசியது விஜய் படத்துக்கு வந்திருந்த அஜித் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்தது. தலைப்பிடப்படாமல் இருந்த தல படத்துக்கு வேதாளம் என்று பெயர் வைத்தது கோ இன்சிடன்டா இல்லை புலியின் காட்சியமைப்புகளை தெரிந்து கொண்டு வைக்கப்பட்ட  ப்ளாண்ட்  இன்சிடண்டா என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம் . இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அஜித் ரசிகர்கள் ஆன்லைனில் புலி படத்தையும் , விஜயை யும் ஓவராக கலாய்க்க விஜய் ரசிகர்கள் கமிஷனர் ஆபீசுக்கு சென்று கம்ப்ளைன்ட் செய்யும் அளவுக்கு போய் விட்டது ...


எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்திலேயே ஒருவரது படம் ரிலீசானால் மற்றொருவரின் ரசிகருக்கு அடி உதை  என்பது எழுத்தப்படாத விதியாக இருந்தது . அதே கதை தான் ரஜினி - கமல் ரசிகர்களுக்கும் . ஆனால் நிலைமை கை மீறிப் போகும் போது  அவர்கள் தலையிட்டு ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார்கள் . இன்றோ தல - தளபதி இருவரின் ரசிகர்களின் தலை மட்டுமே உருண்டு கொண்டிருக்கிறது . இப்படி இரண்டு தரப்பினரும் அடித்துக்கொள்ளும் அளவுக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருப்பதோடு ஒரு படத்தின் மூலம் கிட்டத்தட்ட  100 கோடி  க்கு பிசினசையும் கொடுக்கும் அஜித் - விஜய் இருவரைப் பற்றிய அலசல் அடுத்த பதிவில் ...
10 October 2015

தெருக்கூத்து - கூத்தாடிகள் ரெண்டுபட்டால் ?! ...


டந்த சில மாதங்களாகவே பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருக்கும் செய்தி அக்டோபர் 18 ல் நடக்கவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தல் . கடந்த 15 வருடங்களாகவே தேர்தலே இல்லாமல் நடிகர் சங்கத் தலைவர் பதிவியை தக்க வைத்துக்கொண்டிருந்த சரத்குமாருக்கும் , 29 வருடங்களாக செயலாளர் பதவியில் இருக்கும் ராதாரவிக்கும் " பாண்டவர் அணி " என்று அழைக்கப்படும் விஷால் , கார்த்தி , நாசர் , பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் இந்த ஐவரால்
( பாஞ்சாலி யாருன்னெல்லாம் குசும்பா கேட்கக்கூடாது ) சில வருடங்களாக குடைச்சல் கொடுக்கப்பட்டு இன்று சரத்துக்கு எதிராக நாசரும் , ராதாரவிக்கு எதிராக விஷாலும் தேர்தலில் நிற்கும் அளவிற்கு மிகப்பெரிய மோதலாக வெடித்திருக்கிறது ...

நடிகர் சங்கத்தை இடித்து அங்கே எஸ்பிஐ சினிமாஸ் வருவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே பூச்சி முருகன் என்பவர் கேஸ் போட்டு கட்டிடம் கட்டுவதற்கு ஸ்டே வாங்கியிருந்தார் . இந்த முறைகேடு சம்பந்தமாக விஷால் , எஸ்.வி.சேகர் போன்றவர்கள் கேட்ட கேள்விக்கு பொறுப்பான பதில்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்தவர்கள் தனி டீம் அமைத்து இன்று ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்க முனைத்திருக்கிரார்கள் . முதலில் இவர்களை பெரிதுபடுத்தத சரத்குமார் & கோ இப்பொழுது கமல்ஹாசனின் ஆதரவோடு சத்யராஜ் உட்பட பல சீனியர்களின் ஆதரவும் கிடைத்திருப்பதால் நிறையவே டென்சன் ஆகியிருக்கிறார்கள் . கட்டிடம் கட்டும் விஷயத்தில் முறைகேடு நடந்ததா ? இல்லையா என்று யாருக்கும் தெரியாது . ஆனாலும் விஷால் & கோ வினர் நிர்வாகிகள் தன்னிச்சையாக நடந்து கொண்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் . மறு தரப்பினரோ பொதுக்குழுவில் பேசி முடிவெடுத்த பிறகு தான் தீர்மானம் போடப்பட்டது என்கிறார்கள் . உண்மையில் நடிகர் சங்க இடத்தின் மேல் அவ்வளவு அக்கறை இருப்பவர்கள் கோடி கோடி யாக தாங்கள் வாங்கும் சம்பளத்தில் அள்ளிக் கொடுக்க வேண்டாம் , கிள்ளிக் கொடுத்திருந்தாலே இந்த பிரச்சனை எப்பொழுதோ தீர்ந்திருக்குமே ?! அது அனைத்து நடிகர்களுக்குமே வெளிச்சம் ! ...

பொதுவாகவே எந்த ஒரு சங்கத்தும் குறிப்பிட்ட  ஆண்டு இடைவெளியில் ஜனநாயக முறையில் தேர்தல்  நடத்தப்பட்டு நிர்பவாகிகள் தேர்ந்தேடுக்கப்படுவதே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும் . அப்படி இல்லாமல் ஒரே ஆட்களே ( மாமன் , மச்சானாக இல்லாமல் போனாலும் ) நீண்ட வருடகளுக்கு பொறுப்பில் இருப்பது நிச்சயம் இது போன்ற பிளவுக்கு ஒரு நாள் இல்லை நாள் வழிவகுக்கும் . அது தான் இப்போது நடந்திருக்கிறது . ஆர்யா , விஷ்ணு , விக்ராந்த் , சாந்தனு என்று இளவட்டங்கள் விஷாலுக்கு பின்னால் வரிந்து கட்ட , சிம்பு , தனுஷ் போன்ற சீனியர் இளவட்டங்கள் சரத்துக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் .  சிம்பு சரத் அணியினர் சார்பில் போட்டியிட , கார்த்தி விஷால் சார்பில் போட்டியிடுகிறார் . ஊர் ஊராக சென்று நாடக நடிகர்களை சந்தித்து அவர்கள் ஆதரவை விஷால் அணியினர் கோரினால் , சின்னத்திரையினர் ஆதரவை ராதிகா சரத்குமார் வைத்திருக்கிறார் .  இவை எல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பது போல விஷாலை அவன் , இவன் என்று வசை பாடுகிறார் வாலு நடிகர் . நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று சொல்லிக்கொண்டே பிரஸ் மீட்டில் விஷாலை கழுவி கழுவி ஊற்றுகிறார் சிம்பு . சரத்குமார் ஒரு படி மேலே சென்று விஷால் மேல் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கே போட்டுவிட்டார் . விஷாலோ எதையும் சந்திக்க தயார் என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார் . லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் நினைவு தின விழாவைக் கூட இவர்கள் அரசியல் விட்டுவைக்கவில்லை . இப்படி நிஜ அரசியல் தேர்தலை கூட மிஞ்சி விடும் போலிருக்கிறது இவர்கள் சண்டை ...

முதலில் கூடுதல் பலத்திலிருந்த சரத் & கோ விஷால் சிலம்பலுக்கு  செவி சாய்க்காமல் தானிருந்தனர் . பிறகு உலகநாயகனின் நேரடி ஆதரவு அவர்களை நிலைகுலைய செய்தது . சூப்பர்ஸ்டார் மண்டபத்தில் வைத்து விஷால் அணியினர் கூட்டம் நடத்தியிருப்பது அவரின் மறைமுக ஆதரவாக மற்ற அணியினர் பார்க்கிறார்கள் . இப்படி ஒரு பக்கம் ஆதரவு கூடி வருவதை கண்ட சரத் அணியினர் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அதை மறுத்துவிட்டார் விஷால் . இன்னும் தல ஆதரவு யாருக்கு என்று தெளிவாக தெரியவில்லை . ஆனால் இளையதளபதி புரட்சிதளபதி க்கு எதிராகத் தான் இருப்பார் போலத் தெரிகிறது . அரசியல் ஆசையில் இருக்கும் அவருக்கு கலைஞர் ஆட்சியில் மேடையிலேயே கேள்வி கேட்டு கெத்து காட்டிய தல போல சீனியர்களுடன் நிஜ ஸ்டண்ட்  அடித்து வரும் விஷாலின் வளர்ச்சி வெறுப்பேற்றியிருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள் ....

இந்த இரண்டு அணியினரின் சண்டை ஒரு புறம் இருக்க தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை மாற்றி தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் வைக்க வேண்டும் மற்றும் ஒரு தமிழர் தான் சங்கத்தின் உயர் பதவிக்கு வரவேண்டுமென்றும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர் மற்றொரு அணியினர் . இது போன்ற இன , மொழி பேதங்களை கலைஞர்களுக்குள் புகுத்துவது சரியில்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் தமிழர் யாரும் எந்த பதவியிலும் நிற்க முடியாது என்று அவர்கள் சொல்கிற செய்தியையும் மறுக்க முடியாது . புலி படம் ஃப்ளாப்பா , ஹிட்டா என்று இணையதளங்களில் நடக்கும் சண்டையை விஞ்சி நிற்கும் இந்த தேர்தல் பரபரப்புக்கு அக்டோபர் 18 க்கு பிறகு விடை தெரியும் . தேர்தல் முடிந்து நல்ல மாற்றம் ஏற்பட்டால் நல்லது தான் . எது எப்படியோ ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் . இங்கே கூத்தாடிகள் ரெண்டுபட்டிருப்பது ஊருக்கு கொண்டாட்டமோ இல்லையோ மீடியாக்களுக்கு நல்ல கொண்டாட்டம் . இதைப்பற்றி தினமொரு பேட்டி , செய்தி  என்று பரபரப்பாக்க இயங்கிக்கொண்டிருக்கின்றன மீடியாக்கள் ...2 October 2015

புலி - PULI - பலி ...


ஜினிக்கு அடுத்தபடியாக குழந்தைகளால் அதிகம் ரசிக்கப்படும் மாஸ்  ஹீரோ விஜய் , முதல் படம் தவிர ஹிட் கொடுக்காத ஃபேண்டசி இயக்குனர் சிம்புதேவன்  இருவரும் குழந்தைகளுக்கான படமாக புலியை கொடுக்க நினைத்ததில் தப்பில்லை . ஆனால் குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகும் பெரியவர்களின் நிலைமையை கொஞ்சமாவது யோசித்துப் பார்த்திருக்கலாம்...

வேதாளங்களின் ( அஜித் இல்லைங்கோ ! ) கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் மருதீரன் ( விஜய் ) , வேதாளங்களால் கடத்தப்பட்ட தன் காதலி பவளவள்ளி (ஸ்ருதிஹாசன் ) யையையும் , அடிமைப்பட்ட தனது  கிராமத்தையும் எப்படி மீட்கிறார் என்பதே கடைசி வரை எப்படா பாயும் என்று நம்மை நோகடித்த புலியின் கதை ...

தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் இது போன்ற ஃபேண்டசி டைப் படத்துக்கு ஓகே சொன்னதற்கு பாராட்டுக்கள் . ஆனால் அதோடு தன் வேலை முடிந்து விட்டது என்று நினைத்து விட்டாரோ என்னமோ ! கொஞ்சம் நடிங்க பாஸ் ! . ஸ்ருதி யோடு அவருக்கு என்ன பிரச்சனையோ ?! எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசுகிறார் . அப்பா புலியாக ஃப்ளாஷ்பேக்கில் சீரியசான  குரல் மாடுலேஷனில் அவர் பேசும் போது சிரிப்பு சிரிப்பாக வருகிறது . பிரச்சனை என்னவென்றால் குழந்தைகளுக்கான படத்தை தனது ரசிகர்கள் நிராகரித்து விடுவார்களோ என்கிற பயத்தில் நடப்பு அரசியல் , " நான் ஆளப்பிறந்தவன் இல்ல , மக்களுக்காக வாழப்பிறந்தவன் " என்றெல்லாம் டயலாக் பேசவிட்டு அப்பா புலியை சாகடித்து விடுகிறர்கள் . பரிதாபம் வரவேண்டிய இந்த இடத்தில் புலி மேக்கப் புடன் ஒரு மாதிரி பேசும் விஜயை பார்த்து நமக்கு பயம் வருகிறது . கத்தி , துப்பாக்கி என்று ஒரு ஸ்டைலிஷான ஹீரோவாக மாறிக்கொண்டிருந்தவர் மேல் யார் கண் பட்டதோ ?! . குருவி , சுறா வரிசையில் புலி யை பார்த்தால் விஜய்க்கு மிருக தோஷமா ?! . கொடுமை என்னவென்றால் அந்த சுறாவையே நிறைய இடங்களில் தின்று விட்டது புலி . இளைய தளபதி யின் பழைய படத்தை பார்த்த ஃபீலிங் ...


ஐ.பி.எல் மேட்ச் நடுவில் ஆடும் சீர் லீடர் வேலை தான் ஸ்ருதி ஹாசனுக்கு . இலியானாவுக்கு அடுத்து அதிகம் இடுப்பை ஆட்டியவர் இவராகத்தான் இருப்பார் . இவருக்கு யாராவது டப்பிங் கொடுத்தால் தேவல ! . விஜயிடம்
" இப்படிக்கூடவா காதுல சொல்லுவாங்க " னு ஒரு டயலாக் பேசுகிறார் . என்னடா ஏதாவது பலான ஜோக் தான் விஜய் சொல்லிட்டாரோ னு பாத்தா , அது "காதுல " இல்லேங்கின்னா " காதல " அதத் தான் அந்த அம்மணி அப்புடி சொல்றாங்கோ ! . ஸ்ருதியின் இடைக்கு ஒய்வு கொடுத்து இடைவேளைக்குப் பின் அந்த வேலையை எடுத்துக்கொல்கிறார் சாரி கொள்கிறார் ஹன்சிகா மோத்வானி . ஸ்ரீதேவி க்குல்லாம் வயதே ஏறாதா ?! வேதாளமாக அதீத மேக்கப்புடன் சில இடங்களில் பயமுறுத்தினாலும் நார்மாலாக நைஸ் டு வாட்ச். பெரிய ஹீரோ என்றவுடன் நடிக்க டப்பென்று ஒப்புக்கொண்டிருப்பார்  நந்திதா . கமல் , மணிரத்னம் படங்களிலாவது ஏதோ டயலாக் கொடுத்திருப்பார்கள் போல ! பாவம் ஒரு பாட்டுக்கு வரும் டேன்சர் அளவிற்கு கூட நந்திதா ஸ்க்ரீனில் இல்லை ...

அடிக்கடி வரும் பாடல்களை பொதுவாக ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்லாலம் . ஆனால் இந்த படத்தில் ஸ்பீடே  இல்லாததால் அப்படி சொல்ல முடியவில்லை . விஜய் சூப்பரா டேன்ஸ் ஆடுறத நாங்க சன் மியூஸிக் லையே பாத்துட்டு போறோம் . அதுக்காக இப்புடியா !? . மற்றபடி
 " ஜிங்கிலியா  " தாளம் போட வைத்தால் விஜய் குரலில் " ஏண்டி ஏண்டி " மெஷ்மெரிசம் செய்கிறது . படத்தின் ஹைலைட் நடராசன் எ நட்டுவின் ஒளிப்பதிவு . சும்மா நச்சுன்னு இருக்கு . சிஜி சில இடங்களில் பல்லிளித்தாலும் நிறைய இடங்களில் சூப்பர் . ஆர்ட் டைரக்ஷன் அமர்க்களம் ...


சக்சஸ்  ஹீரோ விஜய் , ஸ்ரீதேவி , சுதீப் என பெரிய நடிகர் பட்டாளாம் , 100 கோடியை தாண்டிய பட்ஜெட் இப்படி கிடைத்த மிக பிரம்மாண்ட வாய்ப்பை நழுவ விட்டாலும் பரவாயில்லை சிதைத்து விட்டார் சிம்புதேவன் . பரிசலில் வரும் ராஜவம்ச குழந்தை , கொடுங்கோல் ஆட்சி , அந்த ராஜ்யத்துக்குள் செல்லும் ஹீரோ என பாகுபலி டைப் கதை தான் புலி . ஆனால் திரைக்கதை ?!. 100 கோடிக்கு மேல் இயக்குனரை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் சுஜாதா வின்  " திரைக்கதை எழுதுவது எப்படி " என்கிற 100 ரூபா புத்தகத்தை முதலில் வாங்கிக் கொடுத்திருக்கலாம் . பதுங்கவும் இல்லாமல் , பாயவும் இல்லாமல் ஒரே ஃப்ளாட்டாக இருக்கிறது புலியின் திரைக்கதை . 150 வயது ஆமை , ஒத்தைக் கண்ணன் , தவளை போன்ற சில சுவாரசியங்களும் படத்தில் உண்டு . ஹன்சிகா வை கருஞ்சிறுத்தையிடமிருந்து காப்பாற்றும் சீன் , விஜய் தன்னை வேதாளம்  என்று நிரூபிக்கும் சீன் போன்ற  ஒன்றிரண்டை ரசிக்கலாம் ...

வேதாளத்திடமிருந்து ஊர் மக்களை காப்பாற்ற விஜய் ஓடி வரும் ஒப்பெநிங் சீனில் புலி வேதாளத்தை ( அஜித் ?! ) துவட்டி எடுக்கும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் கத்த அவரோ வேதாளத்தின் காலை இறுகப்பிடித்து ஊரை காப்பாற்றுகிறார் . ஹீரோவின் பயந்த கேரக்டருக்கு ஏற்றபடி இந்த ஸீன்  இருந்தாலும் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் அடங்கிப் போகிறார்கள். வேதாளம் பிரபு வை  கொன்று விட்டு ஸ்ருதி யை கடத்திப் போவதை ஸீனாக வைக்காமல் செய்தி போல் நரேன் சொல்வதைக் கேட்டு விஜய் ஆவேசமாக போவது ஏதோ " ஆடித்தள்ளுபடி முடியப்போகுதாம்மா அதுக்குள்ளே சேலை எடுத்தரலாம் " என்று போவதைப் போல இருக்கிறது . ஒரு இலையைக் காட்டி சங்கிலி முருகன் வேதாளம் கதையை சொல்லி முடிப்பதற்குள் நாம் முருங்கை மரமே ஏறி விடுவோம் . பொதுவாக பாட்டுக்கு வெளியே போகிறவர்களை பார்த்திருப்போம் . இதில் வெளியில் போனவர்கள் பாட்டுக்கு உள்ளே வருகிறார்கள் ...

படம் என்ன அவ்வளவு மொக்கையா ? அப்படின்னா நீங்க அஜித் ரசிகரா ?1 என்று சிலர் கேட்கலாம் . ஆழ்வார் , ஆஞ்சநேயா போன்ற அஜித் படங்களாலும் பாதிக்கப்பட்ட அபலைத் தமிழர்களில் நானும் ஒருவன் தான் . விவரம் தெரியாத குழந்தைகளுக்கு படம் பிடிக்கலாம் . அவர்கள் சந்தோஷத்துக்காக படத்துக்கு போகிற பெரியவர்கள் ஷாப்பிங் போகும் போது ப்ளே ஏரியாவில் குழந்தைகளை விட்டு விட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பது போல விலகி நிற்பது நலம் . பிரம்மாண்டத்தால் பாகுபலி யுடன் ஒப்பிடப்பட்ட புலி வரிசையாக வெற்றிகளை கொடுத்துக்கொண்டிருந்த விஜய்க்கு திருஷ்டி கழிப்பதை போல ரசிகர்களுக்கும் சேர்த்து போடப்பட்ட பலி ...

ஸ்கோர் கார்ட் : 37 

ரேட்டிங்      : 2* / 5*


Related Posts Plugin for WordPress, Blogger...