20 October 2015

அஜித் Vs விஜய் (1) - AJITH Vs VIJAY ...




சினிமாவில் பார்க்கும் ஹீரோக்களை படம் முடிந்தவுடன் மறந்துவிடாமல் மனதோடு வைத்து பூஜிக்கும் பழக்கம் இன்று நேற்று என்றல்ல பாகவதர் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு நடந்து வருகிறது . எம்.கே.தியாகராஜ பாகவதர் - பி.யு.சின்னப்பா , எம்.ஜி.ஆர் - சிவாஜி , ரஜினி - கமல் இந்த வரிசையில் இன்று பாப்புலராக ரசிகர்களிடையே ஆராதிக்கப்படும் அதே சமயம் எதிர் குழுவினரால் கழுவி கழுவி ஊற்றப்படும் இரண்டு முன்னணி ஹீரோக்கள் அஜித் மற்றும் விஜய் . இவர்களுக்கு பிறகு தனுஷ் - சிம்பு என்றொரு அணி தோன்றினாலும் இன்றளவும் அஜித் - விஜய் இருவருமே கோலிவுட்டில் கோலோச்சி வருகிறார்கள் ...

ஏற்கனவே எதிரும் புதிருமாக இருக்கும் இவர்களின் ரசிகர்கள் ஆரம்ப காலங்களில் சிலேடையாக அடுத்த ஹீரோவை தங்கள் ஹீரோ தாக்கும் போது அந்த பக்க ரசிகர்கள் ஆத்திரப்படுவதை பார்த்து ஆரவாரம் செய்தார்கள் . உதாரணத்துக்கு தினா படத்துக்கு பின் தல என்று ரசிகர்களால் அஜித் அறியப்படுவது அனைவரும் அறிந்ததே . ஒரு படத்தில் ( புதிய கீதை என நினைக்கிறேன் ) விஜய் ' யாருடா உன் தல " என்று ஒரு அடியாளை பார்த்து கேட்டது அஜித் ரசிகர்களை சூடாக்கியது . அஜித் படங்களில் கூட இது போன்ற உதாரணங்களை சொல்லலாம் ., சமீபமாக என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்காவை பார்த்து " டாக்டரா நானா " என்று அஜித் தலையாட்டிய போதும் , சண்டைக்காட்சிக்கு முன்  அருன்விஜயை பார்த்து " என்னடா ஸ்பீச்சா கொடுக்கற " என்று கேட்ட போதும் அஜித் ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள் . விஜய்க்கு டாக்டர் பட்டம் கிடைத்திருப்பதும் , அவர் சில வருடங்களுக்கு முன்னாள் ஒரு கல்லூரியில் ஸ்பீச் கொடுத்ததும் அவர்களுக்கு தெரியாதா என்ன ?! . இப்படி அரசல் புரசலாக அவர்களுக்கிடையேயும் , நேரடியாக ரசிகர்களுக்கிடையேயும் இருந்த சண்டை சமீபத்தில் புலி ரிலீசுக்கு பிறகு இன்னும் அதிகமாகியிருக்கிறது...

புலி எதிர்பார்த்த அளவுக்கு போகாதது மட்டுமல்ல குருவி , சுறா வரிசையில் விஜய் ரசிகர்களே கிண்டல்  செய்யும் அளவுக்கு அமைந்துவிட்டது . படம் சரியாக ஓடவில்லை என்றவுடன் போஸ்டரில் விஜய் படத்தை சின்னதாக்கி ஒத்தக்கண்ணன் படத்தை பெரிதாக போடும் அளவுக்கு தியேட்டர்காரர்கள் இறங்கியும் , அது குழந்தைகளுக்கான படம் என்று பின்னர் கற்பூரம் அடித்து சத்தியம் செய்தும் குழந்தைகளே அதை நம்ப மறுத்துவிட்டார்கள் . அதோடு சேர்த்து ஒப்பனிங்  சீனில் வேதாளமாக வரும் அடியாளை விஜய் அடித்து நொறுக்குவார் என்று ரசிகர்கள் காத்திருக்க அவரோ அவன் காலை பிடித்துக் கொண்டு " நீங்க வேதாளம் , நாங்க பாதளம் " என்று டயலாக் பேசியது விஜய் படத்துக்கு வந்திருந்த அஜித் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்தது. தலைப்பிடப்படாமல் இருந்த தல படத்துக்கு வேதாளம் என்று பெயர் வைத்தது கோ இன்சிடன்டா இல்லை புலியின் காட்சியமைப்புகளை தெரிந்து கொண்டு வைக்கப்பட்ட  ப்ளாண்ட்  இன்சிடண்டா என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம் . இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அஜித் ரசிகர்கள் ஆன்லைனில் புலி படத்தையும் , விஜயை யும் ஓவராக கலாய்க்க விஜய் ரசிகர்கள் கமிஷனர் ஆபீசுக்கு சென்று கம்ப்ளைன்ட் செய்யும் அளவுக்கு போய் விட்டது ...


எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்திலேயே ஒருவரது படம் ரிலீசானால் மற்றொருவரின் ரசிகருக்கு அடி உதை  என்பது எழுத்தப்படாத விதியாக இருந்தது . அதே கதை தான் ரஜினி - கமல் ரசிகர்களுக்கும் . ஆனால் நிலைமை கை மீறிப் போகும் போது  அவர்கள் தலையிட்டு ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார்கள் . இன்றோ தல - தளபதி இருவரின் ரசிகர்களின் தலை மட்டுமே உருண்டு கொண்டிருக்கிறது . இப்படி இரண்டு தரப்பினரும் அடித்துக்கொள்ளும் அளவுக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருப்பதோடு ஒரு படத்தின் மூலம் கிட்டத்தட்ட  100 கோடி  க்கு பிசினசையும் கொடுக்கும் அஜித் - விஜய் இருவரைப் பற்றிய அலசல் அடுத்த பதிவில் ...




2 comments:

Anonymous said...

எனக்கு ஒரு விசயம் புரியல
விஜய்-அஜித் பத்தி எழுதிய நீங்க விக்ரம் என்ற மகா நடிகன மறந்துறிங்க ஏன்?
மனச்சாட்சிய தொட்டு சொல்லுங்க
யார் சிறந்த நடிகர்?
ார் அடுத்த கமல்?

ananthu said...

இந்த பதிவில் எங்குமே நான் அவர்களை சிறந்த நடிகர்கள் என குறிப்பிடவில்லை . உங்கள் கேள்;விக்கு விடை அடுத்த பதிவில் கிடைக்கும் . வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...