30 September 2012

டி 20 - யுத்தம் ஆரம்பம் ...ன்னும் சிறிது  நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே கிரிக்கெட் யுத்தம் ஆரம்பிக்க போகிறது ... இந்தியா டி 20 உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் பாகிஸ்தானிடம் தோற்கக்கூடாது என்று நினைக்கும் ரசிகர்கள் தான் ஏராளம் , அந்த அளவிற்கு இரு நாடுகளில் உள்ள ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டியாகவே இரு நாடுகளுக்கிடையேயான போட்டி எப்பொழுதும் இருக்கும் ...

இது வரை 7 உலகக்கோப்பை போட்டிகளில் ( 2 டி 20 , 5 50 ஓவர் )  பாகிஸ்தானுடன் ஆடியுள்ள இந்தியா ஒன்றில் கூட தோற்றதில்லை என்று வரலாறு சொன்னாலும் தற்போது பாகிஸ்தான் அணியினரின் தொடர் வெற்றியும் , சேவாக் - தோனி இடையேயான பனிப்போரும்  இந்தியா வெற்றி பெறுவது அவ்வளவு  எளிதல்ல  என்பதை தெளிவாக காட்டுகின்றன ... 

இன்று இந்திய அணி ஹர்பஜன் , சாவ்லாவை விடுத்து சேவாக் , பாலாஜி யுடன் களமிறங்குவதாக தோனி அறிவித்துள்ளார் ... பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமுமில்லை ... டாஸ்  ஜெயித்திருக்கும் பாகிஸ்தான் முதலில் பேட் செய்யப் போகிறது ... ஜெயிக்கப் போவது யார் ? மூன்றரை மணி நேரம் எல்லோரும் காத்திருப்போம் ... 

தாண்டவம் - தடுமாற்றம் ...


தெய்வதிருமகள் வெற்றிக்கு பிறகு விக்ரம் - இயக்குனர் விஜய் இருவரும் அதே டீமுடன் மீண்டும் தாண்டவத்தில் கை கோர்த்திருக்கிறார்கள் ... படம் வருவதற்கு முன்பே கதை என்னுது என்று உதவி இயக்குனர் பொன்னுசாமி எழுப்பிய குற்றச்சாட்டும் , அதை தொடர்ந்து அவருக்கு நியாயம் வழங்க முடியவில்லை என்று அமீர் உட்பட எட்டு பேர் பதவி விலகியதும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் , படத்தை பார்த்த பிறகு இதுக்காகவா இப்படி அடிச்சுக்கிட்டாங்க என்கிற நினைப்பு மட்டுமே மேலோங்கி நிற்கிறது ...

2011 இல் லண்டனில் ஒரு குண்டு வெடிப்பு , அதை தொடர்ந்து வரிசையாக சில கொலைகள் , கொலைகளை துப்பறியும் வீரகத்தி பிள்ளை ( நாசர் ) பார்வையிழந்த கெனி ( விக்ரம் ) தான் இதற்கு காரணமென்று கண்டுபிடிக்கிறார் ... பிறகு பார்வையிழந்தவர் கெனி இல்லை , அவர் எக்ஸ் ரா ஆபீசர் சிவா என்பதையும் , எதற்கு கொலைகள் செய்தார் என்பதையும் எந்த வித ஆக்ரோஷமும் இல்லாமல் நீ .. ள .. தாண்டவமாய் சொல்லியிருக்கிறார்கள் ... கொலாட்ரல் , டேர் டெவில் போன்ற படங்களை நினைவு படுத்தும் கதை தான் என்றாலும் விஜய்க்கு இது ஒன்றும் புதிதில்லை என்பதால் விட்டு விடுவோம் ...


கண் பார்வையிழந்த கெனி , ரா ஆபிசர் சிவா என்று இரண்டு தோற்றத்தில் வரும் விக்ரம் உடல் மொழியாலும்  , உடற்கட்டாலும் நம்மை கவர்கிறார் , ஆனால் முகம் மட்டும் வயதை காட்டிக் கொடுக்கிறது ... இரண்டு , மூன்று அடிகளில் எதிரிகளை இவர் வீழ்த்தும் சண்டைக்காட்சிகள் அருமை ... அனுஷ்கா எனக்கு பிடித்த நடிகை , ஆனாலும் இந்த படத்தில் ஹோண்டா ஆக்டிவாவில் வரும் ஆன்டி  போல தழுக் , முழுக் என்று இருக்கிறார் ... இவர் நடிப்பதற்கு ஒன்றும் பெரிதாய் பிரயத்தனப்படவில்லை... டூயட்  காட்சிகளில் இளமை ததும்பவில்லை , மற்றவை ( சரி விடுங்க ) ...


எமி பார்வையிழந்த கெனிக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ... சமூக சேவை என்ற பெயரில் சர்ச்சில் இவருடன் சேர்ந்து போட்டோக்ராபர் செய்யும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன , மற்றபடி சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை ... கொலை நடக்கும் இடங்களில் தானாய் வந்து மாட்டிக்கொள்ளும் டாக்ஸி டிரைவர் வேடத்தில் சந்தானம் ... நகைச்சுவைக்கு நல்ல ஸ்கோப் இருந்தும் படத்தின் முடிவு முன்னமே தெரிந்து விட்டதோ என்னமோ மனிதர் டல்லாகவே இருக்கிறார் ...

துப்பறியும் இலங்கை தமிழர் வேடத்தில் வரும் நாசர் அந்த ஸ்லாங்கோடு ஒத்துப்போக முடிந்த வரை முயற்சித்திருக்கிறார் ... தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வை விக்ரமின் நண்பனாக இருந்து கொண்டே பணத்திற்காக வில்லனாக மாறுவதை போல காட்டியிருப்பது சலிப்பை தருவதை தவிர வேறொன்றும் செய்யவில்லை ... இவருக்கும் , விக்ரமிற்கும் இடையேயான க்ளைமேக்ஸ் சண்டைகாட்சி விறுவிறுப்பு ... விக்ரமின் அம்மாவாக சரண்யா , மாமாவாக எம்.எஸ்.,பாஸ்கர்  , சில சீன்களே வந்தாலும் " தப்பாச்சே " என்று சொல்லி சிரிக்க வைக்கும் தம்பி ராமையா , பாலாஜி , லக்ஷ்மிராய் போன்றோரும் படத்தில் இருக்கிறார்கள் ...

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் ... விஜய் - ஜி.வி  கூட்டணி வழக்கம் போல கிளிக் ஆகியிருக்கிறது ... 25 வது படத்திற்காக ஜி.வி மெனக்கட்டிருப்பது " ஒரு பாதி கதவு " , " உயிரின் உயிரே " போன்ற மெலடிகளில் நன்றாகவே தெரிகிறது ...


பழி வாங்கும் கதை என்றாலும் வன்முறையையும் , வழக்கமான ஹீரோயிஷத்தையும் தவிர்த்திருப்பது , பாடல் காட்சிகளை படமாக்கிய விதம், மெதுவாக கொண்டு  சென்றாலும் முதல் பாதியில் முடிந்தவரை சஸ்பென்ஷை தக்க வைத்தது , விக்ரம் - அனுஷ்கா திருமண காட்சிகள் , கண் பார்வை இல்லாவிட்டாலும் ஒலி எழுப்பி அது ஏற்படுத்தும் எதிரலைகள் மூலம் ( எக்கோலொகேஷன் ) எதிரில் இருப்பவர்களை அடையாளம் காணும் முறையில் விக்ரம் பயிற்சி எடுப்பது போன்றவை தாண்டவத்தில் நம்மை லயிக்க வைக்கின்றன ...

முந்தைய படமான  தெய்வதிருமகள் - திருட்டு தேவதை  என்ற போதும்  திரைக்கதையாலும் , விக்ரம் - சாரா நடிப்பாலும் நம்மை ரசிக்க வைத்த விஜய் பெரிதும் கவராத கதை , மிக நீளமான திரைக்கதை , விக்ரம் நண்பனையே துரோகியாக இனம் கண்டு கொள்ளும் காட்சிகள் , அரைகுறையாய் கொடுக்கப்பட்ட த்ரில்லர் , ஆங்காங்கே மட்டும் மனதை தொடும் காதல் , ரசிக்க வைக்காத நகைச்சுவை  இவற்றால் தாண்டவத்தில் நிறையவே தடுமாறியிருப்பது நன்றாக தெரிகிறது...

ஸ்கோர் கார்ட் : 40  


23 September 2012

டி 20 - இந்தியா அபார வெற்றி ...


லங்கையில் நடந்து வரும் டி 20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்தை இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது ... ஏற்கனவே இரண்டு அணிகளும் சூப்பர் 8 க்கு தகுதி பெற்று விட்ட போதிலும் அதற்கு முன்னோடியாக அமைந்த இந்த ஆட்டத்தில் இந்தியா நடப்பு டி 20 சேம்பியனை அபாரமாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது ...

இந்திய அணியில் சேவாக் , ஜாகிர் , அஸ்வின் ஆகியோருக்கு ஒய்வு தரப்பட அதற்கு பதில் ஹர்பஜன் , சாவ்லா , திந்தா ஆகியோர் சேர்க்கப்பட்டனர் ... டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் பிராட் இந்தியாவை பேட் செய்ய பணித்தார் ... துவக்க ஆட்டக்காரர்களாக கம்பீர் மற்று பதான் இறங்கினர் ... பதான் எட்டு ரன்களில் அவுட் ஆகி விட கம்பீர் - கோலி ஜோடி நிதானமாக ஆடி 50 ரன்களுக்கு மேல் சேர்த்தது ... கடைசியில் ரோஹித் சர்மா 50 ரன்களுக்கு மேல் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இந்தியா 170 ரன்களை எட்டுவதற்கு காரணமாக  அமைந்தார் ...

அடுத்து 171 ரன் இலக்கை நோக்கி ஆட வந்த இங்கிலாந்திற்கு முதல் ஓவரிலேயே விக்கட் எடுத்து பதான் அதிர்ச்சி கொடுத்தார் , அதை தொடர்ந்து ஹர்பஜன் - சாவ்லா ஜோடியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் 80 ரன்களுக்கு சுருண்டனர் ... இங்கிலாந்து எடுத்த குறைந்தபட்ச டி 20 ஸ்கோர் இதுவே ஆகும்... நான்கு ஓவர்கள் பந்து வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கட்களை வீழ்த்திய ஹர்பஜன் சிங்கிற்கு மேன் ஆப் தி மேட்ச் விருது கொடுக்கப்பட்டது ... அடுத்து நடக்கவிறுக்கும் சூப்பர் 8 போட்டிகளில் இந்தியா மிகுந்த தன்னம்பிக்கையுடன் இறங்கும் என்பதில் சந்தேகமேயில்லை ...

ஸ்கோர் : இந்தியா 170 / 4 ( ரோஹித் 52 * )
                     இங்கிலாந்து 80 ஆல் அவுட் ( ஹர்பஜன் 4 / 12 )


சாட்டை - சடுதியில் தவறவிட்ட அடி ...


பிரபல இயக்குனர்கள் மற்ற இயக்குனர்களை வைத்து தயாரிக்கும் படங்கள் தரமானவையாக இருக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் " சாட்டை " ... அதற்காக இப்படத்தை காதல் , பசங்க வரிசையில் சேர்த்து விட முடியாது , ஆனால் முதல் படத்திலேயே ஒரு கருத்தாழம் மிக்க கதையை சொல்ல முற்பட்டதற்காக அறிமுக இயக்குனர் அன்பழகனை பாராட்டலாம் ...
நம்மவர் ஸ்டைல் கதை , இப்படத்தில் கல்லூரிக்கு பதில் அரசு மேல்நிலை பள்ளி , மாணவர்களுக்கு பதில் உடன் பணிபுரியும் சக ஆசிரியர்களையும் சேர்த்து ஒரு ஆசிரியர் திருத்துவது மட்டும் மாறுதல் ...

திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் தயாளன் (  சமுத்திரக்கனி  ) , அங்கோ ஏ.ஹெச்.எம் சிங்கம்பெருமாள் ( தம்பி ராமையா ) தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் சும்மா சம்பளம் வாங்கிக் கொண்டு படிப்பு உட்பட அனைத்திலும் பள்ளியை பின்தங்கிய நிலையிலேயே வைத்திருக்கிறார்கள் , இதை தட்டிக் கேட்க முடியாத நிலைமையில் இருக்கிறார் ஹெச்.எம் ஜூனியர் பாலையா ( இதற்கு தேவையான விளக்கம் எதுவும் படத்தில் இல்லை ) ... தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளியை  சமுத்திரக்கனி   எப்படி மாற்றிக்காட்டுகிறார் என்பதை மாணவர் பழனி
யுவன்) ,  மாணவி அறிவழகி (  மகிமா  ) இவர்கள் இடையேயான காதல் , தம்பி ராமையாவின் வில்லத்தனம் , மாணவன் பாண்டியின் காமெடி மற்றும் பாசிடிவ் சாங் உட்பட பல சினிமாத்தனங்களை கயிறாக திரித்து சாட்டையை கொடுத்திருக்கிறார்கள் ...


சமுத்திரக்கனி தயாளனாகவே நம் மனதில் பதிகிறார் ... முக பாவங்கள் குறைவெனினும் அதை தன்  குரலால் சமன் செய்கிறார் ... இவர் தன்னம்பிக்கை வசனங்கள் பேசும் போது தியேட்டரில் கைதட்டல்கள் கிடைத்தாலும் படம் நெடுக அதையே செய்வதால் போரடிக்கறது ... ஒரு விதமான ஹீரோயிஸத்துக்குள் இவர் கேரக்டரை புகுத்தாமல் தவிர்த்திருந்தால் இன்னும் அழுத்தமாகவே நம் மனதில் பதிந்திருப்பார் ...

இவருக்கு நிகரான கதாபாத்திரம் தம்பிராமையாவினுடையது ... மனிதர் வெளுத்து வாங்கியிருக்கிறார் ... தன்னிடம் கடன் வாங்கி விட்டு வட்டி தராத ஆசிரியர்களை கலாய்ப்பது , ஆசிரியர்கள் மீட்டிங்கில்  சமுத்திரக்கனியை மடக்குவது என்று ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் போக போக ஓவர் ஆக்டிங் செய்து நிறையவே வெறுப்புமேற்றுகிறார் ... காமெடி அல்லது குணச்சித்திரமான கேரக்டராக இவரை வடிவமைக்காமல்  சமுத்திரக்கனியை கொலை செய்யப் போகும் அளவிற்கு பக்கா வில்லனாக மாற்றியது சாட்டையின் சறுக்கல் ...

+2 மாணவன் பழனியாக வரும் யுவனின் முகம் குழந்தைத்தனமாகவும் , தாடி , மீசை மற்றும் அவர் கண்களில் காட்டும் கோபம் இவைகளெல்லாம் ஓட்ட வைத்தது போல ரொம்ப செயற்கையாகவும் இருக்கின்றன ... புதுமுகம் மகிமா அழகாக மட்டுமல்லாமல் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார் ... படிப்புக்காக இவர் மன்றாடும் காட்சிகள் அருமை ... கடைசியில் வழக்கம் போல இவரும்  காதல் வயப்படுவது போல காட்டாமல் இருந்திருந்தால் இவர் கேரக்டருக்கு இன்னும் மெருகேறியிருக்கும் ...


ப்ளாக் பாண்டி , ஜூனியர் பாலையா , குட்லக் லக்ஷ்மன்  ,சமுத்திரக்கனியின் மனைவியாக  நடித்திருப்பவர் இப்படி படத்தில் நிறைய பேர் பொருத்தமாகவே நடித்திருக்கிறார்கள் ... இமானின் இசையில் பழைய நெடி இருந்தாலும் பாடல்கள் யுவபாரதியின் வரிகளோடு சேர்ந்து கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன ...

பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் அரசு பள்ளி ஆசிரியர்களின் நிலை , மாணவர்களிடையே நண்பன் போல பழகி அவர்களின் குறைகளை  கலையாமல் அதை ஊதி பெரிதாக்கும் அவர்களுடைய போக்கு , தற்போதைய முன்னேற்றங்களுக்கு ஏற்றபடி தங்களை மேம்படுத்திக்கொள்ளாத பள்ளி நிர்வாகம் போன்றவற்றை சாட்டை கொண்டு விளாசியிருக்கிறார் இயக்குனர்... அதேநேரம் அரசு கெடுபிடிகளால் மாணர்வகளை சமாளிக்க முடியாமல்  திணறும் அரசு பள்ளி ஆசிரியர்களின் நிலையையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம் ...

படம் நன்றாக ஆரம்பித்து பிறகு சமுத்திரக்கனி மேல் காமுகன் பழி விழுந்து அவரை மக்கள் அடித்து துரத்துவது , ஒரு போட்டியில் கூட கலந்து கொண்டிராத ஒரு பள்ளி மாவட்ட அளவிலான சேம்பியன் பட்டம் வெல்வது , சாகக்கிடக்கும் சமுதிரக்கனிக்காக மாணவர்கள்  பாடுவது , அவர் மனைவி பாசிட்டிவாக பேசுவது , மிகைப்படுத்தப்பட்ட தம்பி ராமையா கேரக்டர் இவைகளெல்லாம படத்தை சாட்டை கொண்டு அடிக்கின்றன ... நாடக , சினிமாத்தனங்களை தவிர்த்து ஒரு நேர்மையான நிகழ்வாக படத்தை இயக்குனர் பதிவு செய்திருந்தால் நிச்சயம் எழுந்து நின்று சல்யூட் அடித்திருக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41 

17 September 2012

ட்வென்டி 20 உலககோப்பை ...


லககோப்பை ட்வென்டி 20 கிரிக்கெட்  இன்று இலங்கையில் தொடங்குகிறது. மொத்தம் உள்ள நான்கு பிரிவுகளில் இந்தியா ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் உடன் களம் இறங்குகிறது ... முதல் டி 20 உலககோப்பையை 2007 ஆம் ஆண்டு வென்ற இந்திய அணி அடுத்த இரண்டு உலகக்கோப்பைகளிலும் சோபிக்கவில்லை ...

இது வரை நடந்துள்ள மூன்று டி20 உலககோப்பைகளையும் இந்தியா , பாகிஸ்தான் , இங்கிலாந்து உட்பட மூன்று வெவ்வேறு நாடுகள் வென்றிருப்பதும் , இந்த முறை யார் வெல்வார்கள் என்பதை உறுதியாக கணிக்க முடியாததுமே ட்வென்டி 20 யின் சிறப்பம்சங்கள்... இலங்கைக்கு எதிராக இந்தியா சமீபத்தில் ஒரு நாள் தொடர் மற்றும் ஒரு ட்வென்டி 20 ஐ அந்த நாட்டிலேயே வென்றிருப்பது இந்திய அணிக்கு சாதகமாக  அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ...

இந்திய அணியில் கோலி , பதான் , ரெய்னா ஆகியோர் பார்மில் இருப்பதும் , யுவராஜ் சிங் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதும் நம்பிக்கை கொடுக்கின்றன , அதே சமயம் சென்னையில்  நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய ஆட்டத்தை தோனியின் மெத்தனமான போக்கால் தோற்றது டீமின் நம்பகத்தன்மையை பாதிக்கிறது. பயறிசி ஆட்டத்தில் இலங்கையை  எளிதாக வென்ற இந்தியா 185 ரன்கள் அடித்தும் பாகிஸ்தானிடம் பரிதாபமாக தோற்றுப் போனதும் இந்திய அணியை நம்ப முடியாதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் ...

மற்ற அணிகளை பொறுத்தவரை பாகிஸ்தான் , ஆஸ்திரேலியா , வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். மேற்சொன்ன அணிகள் எல்லாம் டி 20 தர வரிசை  பட்டியலில் பின் தங்கியிருந்தாலும் அப்ரிடி  , ஹஸ்சி , கிரீஸ் கெய்ல் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் அந்த அணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது ...

நடப்பு சேம்பியன் இங்கிலாந்து , போட்டியை நடத்தும் இலங்கை , இந்தியாவை வென்று நம்பிக்கையில் இருக்கும் நியூசிலாந்து போன்ற அணிகளையும் நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது ... எந்த அணி ஜெயித்தாலும் நடப்பது உலககோப்பை டி 20 என்பதால் அடுத்த இருபது நாட்கள் ரசிகர்களுக்கு விறுவிறுப்பில் பஞ்சமிருக்காது என்று மட்டும் அடித்து சொல்லலாம் ...
15 September 2012

சுந்தரபாண்டியன் - சறுக்க மாட்டான் ...


சிகுமார் தயாரிப்பில் அவருடைய உதவி இயக்குனர் பிரபாகரன் இயக்குனராய் அறிமுகமாகியிருக்கும் படம் சுந்தரபாண்டியன் ... சசிகுமார் - சமுத்திரக்கனி பாணியில் வரும் வழக்கமான நண்பர்களை சுற்றி பிண்ணப்பட்ட கதையை தொய்வில்லாமல் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ... " சுப்ரமணியபுரம் " மாதிரி ஒரு படம் கொடுத்ததே  ஜென்மத்திற்கும் போதுமென்று சசிகுமார் நினைத்து விட்டாரோ என்னமோ , இதில் ஒரு முழுமையான கமர்சியல் ஹீரோவாக தன்னை முன்னிறுத்த முயற்சித்திருக்கிறார் ...

ஊரே மெச்சும் பெரிய குடும்பத்தின் ஒரே வாரிசு சந்தரபாண்டியன் ( சசிகுமார் ) , கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நண்பர்களுடன்  வெட்டியாக ஊரை சுற்றுவதை தவிர இவருக்கு உருப்படியாக ஒரு வேலையும் இல்லை ...                 ( இன்னும் எத்தன படத்துக்கு தான் சினிமால  ஹீரோவ இப்படியே காட்டப் போறாங்களோ ) ... வேலை வெட்டி ஏதும் இல்லாததால் தன் நண்பன் அறிவு
 ( இனிகோ பிரபாகரன் ) நான்கு மாதங்களாய் ஒரு தலையாய் காதலித்து வரும் அர்ச்சனாவுடன் ( லக்ஷ்மி மேனன் ) அவரை சேர்த்து வைக்கும் மாபெரும் பணியை கையிலெடுக்கிறார் சுந்தபாண்டியன் ... இதன் பிறகு என்ன நடக்குமென்பதை நாம் மின்சாரகனவில் ஆரம்பித்து சமீபத்தில் வந்த ராட்டினம் வரை பல படங்களில் பார்த்துவிட்டதால் அதை பற்றி வேறெதுவும் சொல்வதற்கில்லை... இரண்டாம் பாதியை சுப்ரமணியபுரம் , நாடோடிகள் பாணியில் ட்விஸ்ட் வைத்து முடித்திருக்கிறார்கள் ...


சசிகுமார் நடிப்பில் மெருகேறியிருக்கிறார் என்று சொல்லலாம் , ஆனால் அவருக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்காமல் ரஜினி ரசிகன் என்ற போர்வையில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை எதற்கு பின்பற்றினார் என்று தெரியவில்லை ... மாஸ் ஹீரோவாக ஆக வேண்டுமென்ற ஆசை அவர் முகத்திலும் , அவருக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகளிலும் நன்றாக தெரிகிறது.
சசிக்கென்று தனியாக மார்க்கெட் இருக்கலாம் , அவர் வசனத்திற்கு ரசிகர்கள் கை தட்டலாம் , அவர் நடிப்பில் மினிமம் கியாரண்டியை படங்கள் தொடலாம் , ஆனால் சசிகுமார் சுப்ரமணியபுரம் போல ஒரு படத்தை கொடுக்க முடியாவிட்டாலும் அதற்கான முயற்சியை கூட  எடுக்காமலிருந்தால் நாளைய வரலாறு நிச்சயம் அவரை பழிக்கும் ...

அறிமுக நாயகி லக்ஷ்மி தோற்றத்திலும் , மேக்கப் இல்லாத முகத்திலும் மதுரைப் பெண் போல இருந்தாலும் உயரம் மட்டும் இடிக்கிறது ... இவர் கேரக்டரை திமிர் பிடித்தவள் என்று காட்டுவதற்காக உம்மனாமூஞ்சியாகவே விட்டுவிட்டார் இயக்குனர் ... அமலா பாலின் தூரத்து சொந்தம் போல இருக்கிறார் லக்ஷ்மி மேனன் ... " கும்கி " யிலும் இவர் தான் ஹீரோயின் என்பது கூடுதல் தகவல் ...
( இவுகளுக்கு மட்டும் நுழையும் போதே எப்படி தான் இம்புட்டு சான்ஸ் கிடைக்குதோ ) ...

சசிக்கு இணையான கதாபாத்திரத்தில் வரும் இனிகோ அவரை விட இளமையாக இருக்கிறார் ... இவர் இப்படி தான் நடந்து கொள்வார் என்று முன்னமே யூகிக்க முடிந்து விடுவதால் ட்விஸ்டில் பெரிய சுவாரசியம் இல்லை ... பிஸ்ஸா படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி இதில் முக்கியமான நண்பன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் , ஆனால் பட முடிவில் மட்டுமே இவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

சசியின் நண்பனாக வரும் சூரியும் , லக்ஷ்மி மேனனை  டாவடிப்பதாய் ரவுசு கட்டும் அப்புக்குட்டியும் படத்தின் பெரிய பக்கபலங்கள் ... கதை என்று பெரிதாக எதுவும் இல்லாத இந்த படத்தை முதல் பாதி முழுவதும் போரடிக்காமல் பார்க்க வைப்பது இந்த இருவருமே , அதிலும் சூரி படம் நெடுக கட்டையை கொடுத்து பட்டையை கிளப்புகிறார் ... வடிவேலுவின் மேனரிசத்தை இவர் கொஞ்சம் தவிர்க்கலாம் ...


இடைவேளை வரை ராட்டினம் படத்தின் கருவை வேறு மாதிரி களத்தில்  கொடுத்திருக்கிறார்கள் , இடைவேளையில் போலீஸ் வந்து சசியை கைது செய்யும் சீன் கூட அதே போல இருக்கிறது ... இடைவேளைக்கு பிறகு படம் நண்பர்களின் துரோகம் என்ற களத்திற்குள்  நுழைகிறது  ... சசிகுமாரின் முந்தைய படங்கள் போல சாதி குறியீடுகள் மறைமுகமாக இல்லாமல் இதில் நேரடியாகவே வருகிறது ... வெண்ணிலா கபடி குழுவில் " சாதி , சாமி இந்த ரெண்டு பாரத்தையும் இறக்கி வச்சாத்தான் வேகமா போக முடியும் " என்று பாஸ்கர் சக்தி வசனம் எழுதியிருப்பார் , ஆனால் அது சினிமாவில் இருக்கும் நிறைய பேருக்கே  இன்னும் போய் சேராதது வருத்தமே ...

புதிதாய் சொல்லப்படாத கதை , சுப்ரமணியபுரத்தை நினைவு படுத்தும் க்ளைமேக்ஸ் , சசி " குத்தினது நண்பனா இருந்தா செத்தாலும் சொல்லக்கூடாது அதான் நட்பு " என்றெல்லாம் வசனம் பேச , கூட இருப்பவர்களோ நயவஞ்சகர்களாக மாறுவது என்னமோ ஒரு தலை காதல் போல இது ஒரு தலை நட்போ என்கிற அளவிற்கு ஏற்படுத்தும்  சலிப்பு , சசிக்கும் , சாதிக்கும் கொடுக்கப்படும் பில்டப்ஸ் , பாடல்கள் இவையெல்லாம் சுந்தரபாண்டியனை சறுக்க  நினைத்தாலும்  ,

அருமையான பாத்திர தேர்வு , சின்ன சின்ன கேரக்டர்கள் மூலம் கூட சுவாரசியமாக படத்தை கொண்டு சென்றது  , சசி - சூரி அலப்பறை , இரண்டரை மணி நேரம் மண் மனம் மாறாமல் ஏதோ நாம் உசிலம்பட்டிக்கு வந்து விட்டோமோ என்று நினைக்குமளவிற்கு நேட்டிவிட்டியோடு பார்ப்பவர்களை படத்தோடு ஒன்ற செய்த விதம்  , போரடிக்காத திரைக்கதை போன்றவை கமர்சியலாக சுந்தரபாண்டியனை சறுக்க  விடாமல் நிறுத்துகின்றன ...

ஸ்கோர் கார்டு : 42 
9 September 2012

ஞாபகங்கள் ...


ஒரு வயதில் உனக்கு
காது  குத்திய போது 
உன்னை விட 
அதிகமாய் நான் 
அலறிய ஞாபகம் ...

ஐந்து வயது ஆனபோதும் 
தனியாய் நடக்காமல் 
என் கைகள் கோர்த்தே 
நீ நடந்த ஞாபகம் ...

பத்து வயதில் உன் 
அழுகையை நிறுத்த 
மரத்திலிருந்து குதித்து 
என் கால்களை 
உடைத்துக்கொண்ட ஞாபகம் ...

பனிரெண்டு வயதில் 
தூக்கத்திலே  என் 
கால்கள் மேல் படர்ந்திருந்த 
உன் கால்களை 
அகற்றும் போது 
நீ ஒரு முறை 
உற்றுப்பார்த்து விட்டு 
மீண்டும் கண்களை 
மூடிக்கொண்ட  ஞாபகம் ...

பதினைந்து  வயதில் 
உன்னை கடைசியாய் 
பாவாடை சட்டையில் 
பார்த்த ஞாபகம் ... 

பதினெட்டு வயதில் 
என்னுடன் தனியாக 
பேசிக்கொண்டிருந்த உன்னை 
உன் அம்மா 
போட்ட சத்தத்தால் 
பலர் 
திரும்பிப்  பார்த்த ஞாபகம் ... 

இருபத்தியொரு  வயதில் 
நீ படிப்பை 
முடித்த பிறகும் 
நான் நண்பர்களுடன் 
ஊர் சுற்றிக் கொண்டிருந்த ஞாபகம் ...  

இருபத்தி மூன்றாம் வயதில் 
உனக்கு மாப்பிள்ளை 
பார்க்க ஆரம்பித்த  
போது  
என்னை வேலை 
தேடச் சொல்லி 
நீ வற்புறுத்திய ஞாபகம் ... 

இருபத்தைந்தாம் வயதில் 
உன் கழுத்தில் தாலி 
ஏறிய பிறகு தான் 
அயல்நாடு செல்வதில் 
உனக்கும் ஆசை 
இருந்தது என்பதை 
நான் தெரிந்து கொண்ட ஞாபகம் ... 

இருபத்தியேழாம் வயதில் 
உனக்கு பிறந்த 
முதல் பையனுக்கு 
என் பெயரை 
வைத்ததாய் ஞாபகம் ... 
5 September 2012

நீதானே என் பொன்வசந்தம் - புது ராஜ வாழ்க்கை ஆரம்பம் ...


ரலாற்றுப் பாடத்தில் சிந்து சமவெளி காலம்  , முகலாயர் காலம் , ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் என்றெல்லாம் படித்திருப்போம் , ஆனால் எக்காலத்திற்கும் கேட்கக் கூடிய இசையைக் கொடுப்பவர் இசைஞானி ... இன்றைய இளைஞர்கள் மத்தியில் தன் இயக்கத்திற்காக மட்டுமின்றி படத்தின்   இசைக்காகவும் பேசப்படுபவர் கெளதம் மேனன் ... இந்த இருவரும் இணைந்தால் எப்படியிருக்கும் என்று நினைக்கும் போதே வீசுகிறதே ஒரு சுகந்தம் , இணைந்ததன் விளைவே " நீதானே என் பொன்வசந்தம் " ...

70 களில் " அன்னக்கிளி ஒன்னத்தேடுதே " , " செந்தூரப்பூவே " மூலம் கவனிக்க வைத்தவர் , 80 களில் " இளைய நிலா " , " " பனிவிழும் மலர்வனம் " , " பூவே செம்பூவே " போன்ற பாடல்கள் மூலம் நம்மை கட்டிப்போட்டவர் , 90 களில் புதியவர்களின் வருகைக்குப் பிறகும் " இஞ்சி இடுப்பழகி " , " தென்றல் வந்து " ,
" என்னை தாலாட்ட " மூலம் இசைக்கு ராஜா நான் தான் என்று மீண்டுமொருமுறை நிரூபித்தவர் , 2000 க்கு பிறகு " ஒளியிலே தெரிவது " ,
" உன்னவிட உலகத்தில் " , " இளங்காத்து வீசுதே " என்று சொக்க வைத்தவர் இப்படி இசைஞானி தன் இசையால் நம் உயிரோடு கலந்து உறவாடியதை சொல்லிக்கொண்டே போகலாம் ... 2010 க்கு பிறகு " அழகர்சாமியின் குதிரை " ,
" தோனி" போன்ற படங்கள் பின்னணி இசைக்காக பேசப்பட்டாலும் , பாடல்களின் இசைக்கான ஒரு வெற்றிடத்தை " நீதானே என் பொன்வசந்தம் " நிரப்பியிருக்கிறது என்று சொல்லலாம் ...

படத்தின் பாடல்களை கேட்டவுடனே எந்த ஒரு முடிவுக்கும் வராமல் பொறுமையாக இரண்டு நாட்கள் கேட்டுப் பார்ப்பவர்களை இந்த இசை நிச்சயம் கட்டிப்போடும் ... இதில் " அஞ்சலை " இல்லை ஆனால் " பெண்கள் என்றால் " இருக்கிறது . " ஹொசானா " இல்லை " சாய்ந்து சாய்ந்து இருக்கிறது. படத்தின் அனைத்து பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார் ... குறை என்று பார்த்தால் எட்டு பாடல்களையும் யுவன் , கார்த்திக் உட்பட சிலரே பாடியிருப்பதை தவிர்த்திருக்கலாம் . அதே போல எல்லா பாடல்களும் மெலடியாகவே இருப்பதால் வெரைட்டி இல்லாத ஒரு தோற்றத்தை கொடுக்கிறது , மற்றபடி படம் வெளிவந்த பிறகும் பாடல்கள் நீண்ட நாட்கள் மனதில் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை ... எனக்குப் பிடித்த வரிசையில் பாடல்களை அடுக்கியுள்ளேன் ...

1 .சாய்ந்து சாய்ந்து...
   யுவன்ஷங்கர் ராஜா / ரம்யா.என்.எஸ்.கே 

   யுவன் , ரம்யா குரலில் இளமை ததும்புகிறது . படத்தில் ஹைலைட்டே இந்த பாடல் தான் .

2. என்னோடு வா வா ...
    கார்த்திக் 

   கார்த்திக்கின் குரலும் , முத்துக்குமாரின் வரிகளும் புகுந்து விளையாடுகின்றன ... " காதலின் இலக்கணமே தன்னால் வரும்  
சின்ன சின்ன தலைக்கனமே " போன்ற வரிகள் காதலின் ஊடலை தத்ரூபமாய் சொல்கின்றன .

3. வானம் மெல்ல ...
    இளையராஜா / பெலா செண்டே  

   என்றுமே உடையாத குரல் இசைஞானியுடையது ... அவருடைய குரலில் பாடல் வசீகரித்தாலும் ஹரிஹரன் அல்லது மது பாலகிருஷ்ணன் இந்த பாடலி பாடியிருக்கலாம் என்பது என் கருத்து ... இயக்குனர் கேட்டுக் கொண்டதற்காகவே இந்த பாடலை இசைஞானி பாடினார் என்பது தகவல் .

4. முதல் முறை ...
    சுனிதி சௌஹான் 

   சுனிதி புதியவர் என்று நினைக்கிறேன்  , ஆனால் கேட்டவுடன் பற்றிக்கொள்ளும் குரல் ... பாடலின் பி.ஜி யும் , கோரஸும்  அருமை ... வழக்கம் போல இதிலும் ஒரு முறையோடு கோரஸை முடித்துக் கொண்டு 
ஏமாற்றமளிக்கிறார் இசைஞானி . பாடல் தேவதை படத்தின் " ஒருநாள் " பாடலை நினைவுபடுத்துகிறது ... 

5. பெண்கள் என்றால் ...
    யுவன்ஷங்கர் ராஜா 

   காதல் தோல்விப் பாடல் ... யுவனின் உருக்கும்  குரல் , " பெண்ணின் காதலின் அர்த்த்தமினி , புல்லின் மேல் தூங்கும் காலைப்பனி " போன்ற நா.முத்துக்குமாரின் வரிகளும் அருமை .

6. சற்று முன்பு ...
    ரம்யா என்.எஸ்.கே 

   கௌதமின் படங்களில் வரும் பெண் ஏக்கப் பாடல் ... கேட்க கேட்க பிடித்துப் போகும் பாடல் ... வாத்தியங்களின் ஆக்ரமிப்பை குறைத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் ...

7. காற்றை கொஞ்சம் ...
    கார்த்திக் 

    வரிகளின் அளவிற்கு பாடல் உடனடியாக  கவரவில்லை ... படம் வந்த பிறகு ஹிட்டாகும் .

8. படிக்கல மாமு ...)
    சுராஜ் ஜகன் / கார்த்திக் 

     காலேஜ் கலாட்டா பாடல் ...  திருஷ்டி கழிக்கும் பாடல் என்று சொல்லலாம். படம் வந்த பிறகே தெரியும் ... 

   ( பின்குறிப்பு : இந்த பதிவை எழுதி முடித்தவுடனே எங்கிருந்தோ 
" நினைவெல்லாம் நித்யா " படத்திலிருந்து  " நீதானே என் பொன்வசந்தம் " பாடல் ஒலிக்க என்னையறியாமல் அதில் மூழ்கிப்போனேன் ) ஏ 


2 September 2012

தமிழ் வலைப்பதிவர்கள் கவியரங்கம் - நட்பிற்கினியவளே ...!


ன்முறை இரண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம் என்றார் அறிஞர் அண்ணா ... என்னைப் பொறுத்த வரை கவியரங்கத்தில் கவிதை வாசிப்பதும் அது போலத்தான் ... கவிதை நன்றாக இருந்தால் பாராட்டு பெறலாம் இல்லையேல் கல்லடி தான் ... அதிலும் நமக்கு முன்பாக வாசித்தவர்களின் கவிதை சரியில்லை என்றால் நாம் வரும் போதே அரங்கத்தில் உள்ளவர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பி விடும் , அதே சமயம் அவர்கள் அருமையாக கவிதை வாசித்திருந்தால் நம் கவிதையும் அதற்கு ஈடு கொடுக்கும் படி இருக்க வேண்டும் , இல்லையேல் நாம் அம்பேல் ... ஏதோ ஒரு தைரியத்தில் நானும் எனது கவிதையை கவிதையை கவியரங்கத்தில் வாசிக்க முடிவு செய்தேன். ( எவ்வளவோ செஞ்சாச்சு இத செய்ய மாட்டோமா).
கேபிள் சங்கர் அவர்கள் வானமே வீழ்ந்தாலும் அவரது என்டர் கவிதையை படித்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நின்றதை பார்த்த போது எனக்கு மேலும் தைரியம் கூடியது ... மயிலன் கவிதைக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த போது எனக்கும் நம்பிக்கை பிறந்தது ...

எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து நானும் சில கவிதைகளை ஓட்டிக் கொண்டிருந்தேன் , பிறகு நானே கவிதை வாசிக்க போகிறேன் என்று தெரிந்த போது சுற்றியிருந்தவர்கள் சற்று அதிர்ச்சியுடன் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு எஸ்கேப் ஆக பார்த்தார்கள் ... கவிதை சரியில்லை என்றால் குவாட்டர் வாங்கித் தருகிறேன் என்றெல்லாம் சொல்லி அவர்களை ஒரு வழியாக சமாதானப்படுத்தி வைத்தேன் ... கவிதை என்ற பெயரில் நான் கிறுக்க ஆரம்பித்தது பத்தாவது படிக்கும் போது தான் ... மதுரை கல்லூரியல் படிக்கும் போது திருச்சி ஆர்.ஈ.சி கல்லூரியில் கணையாழி ஆசிரியர் திரு.ஞானக்கூத்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கல்லூரிகளுக்கான கவிதைப் போட்டியில் " நட்பு " என்ற தலைப்பில் நான் வாசித்த எனது கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது ... அதன் பிறகு எந்த ஒரு மேடையிலும் கவிதை வாசிப்பதற்க்காக நான் ஏறியதில்லை ...

இது வரை எனது வலையில் பத்துக்கும் மேற்ப்பட்ட கவிதைகளை பதிவிட்டிருக்கிறேன் ...அவற்றுள்  " நட்பிற்கினியவளே  " , " உண்மையை சொல்கிறேன் " ,  அல்லது " தனிமை " இந்த மூன்றில் எதையாவது ஒன்றை வாசிக்கலாம் என முடிவு செய்து அருகிலிருந்த நண்பர் நண்டு @ நொரண்டுவிடம் ( அவர் தான் பாக்க எதையும் தாங்கும் இதயம் போல தெரிஞ்சாரு )எனது மொபைல் போனில் டவுன்லோட் செய்திருந்த கவிதைகளை காண்பித்தேன்... அவர் படித்து விட்டு முதல் கவிதையை தேர்ந்தேடுத்ததோடு மூன்றுமே நன்றாக இருக்கின்றன என்று பாராட்டினார் ( என்ன பெருந்தன்மை ! ) ...ஒருவழியாக எனது கவிதையை பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் ( யாருக்கு , யாருக்கோ ) வாசித்து முடித்தேன் ... கவியரங்கத்தின் போது சக பதிவர் சசிகலா அவர்களின் " தென்றலின் கனவு " என்கிற கவிதை தொகுப்பும்  பிரபல எழுத்தாளர் பி.கே.பி அவர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது ... மொபைல் போன் மூலம் கவிதை வாசித்ததை திரு.பி.கே.பி அவர்கள் தன் உரையின் போது நினைவு கூர்ந்தார்... இந்த கவிதையை தேர்ந்தெடுத்த ராஜசேகர் ( நண்டு @ நொரண்டு ) , படிக்க சொல்லி ஊக்கமளித்த கடம்பவன் ,  நான் கவிதை வாசிக்கும் போது  அதை படம் பிடித்து ட்விட்டருக்கும் அனுப்பி வைத்த சி.பி.செந்தில்குமார்  ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . இதோ உங்களுக்காக ( எதுக்கு இந்த பில்ட் அப் ! ) ...

                                                                        நட்பிற்கினியவளே ...!
வகுப்பறையில்
வேற்று கிரக வாசிகள் போல்
ஆண்களும் பெண்களும்
வெறுமையாய் அமர்ந்திருக்க
பார்வையிலேயே புரிந்து கொண்டு
கை குலுக்களில்
தொடங்கியது
நம் நட்பு....

நான்கே நாட்களில்
புரிந்து விட்டது
நட்பிற்கினியவள்
நீயென்று....

எவன் சொன்னது ?
பெண்ணின் மனது
பெண்ணிற்குத் தான்
தெரியுமென்று..
மௌனத்தில் நீயிருந்தும்
உன்
மனதைப் படிப்பதில்
சிறந்தவர்
எனைத் தவிர
வேறெவரும் உண்டா ?...

நம் நட்பு
உயிர் வாழ
நாம் சந்தித்த
சங்கடங்கள் பல
ஆனால்
நம் மனதில்
சஞ்சலங்கள் இருந்ததில்லை...


                                       
எனக்கு
இளையராஜா பிடிக்கும்
உனக்கு ஏ.ஆர்.ரஹ்மான்...
மதில் சுவரில் அமர்ந்து
மணிக்கணக்கில் 
சண்டைகள் போட்டிருக்கிறோம்...
என்
பிறந்த நாளில்
உன் பரிசாக
கைகளில் தவழ்ந்தது
இசைஞானியின் இசை பேழை...

சுயநலம் மறந்தும்
சுயத்தை இழக்கவில்லை...

வெட்கத்துடன்
திருமண அழைப்பிதழ்
கொடுத்த போது தான்
நீ
பெண் என்பதை
நான் உணர்ந்தேன்...

அதை
என் மூலம் கொடுத்து
ஊர் வாயை அடைத்தாய்...


என் காதலுக்கு
தூது போனவள்
நீ..
நம் நட்பை
கொச்சைப்படுத்திய காதலையே
தூக்கியெறிந்தவன்   நான்...

இன்று அவள்
எங்கே இருக்கிறாள்
தெரியவில்லை...

இத்தனை வருடங்கள்
ஆனாலும்
வாசம் மாறாமல்
வீசிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு...

1 September 2012

முகமூடி - மினியேச்சர் ...


ஞ்சாதே , யுத்தம் செய் போன்ற படங்களை உலக சினிமாப் படங்களின் பாதிப்புகளில் எடுத்தவர் , ஒரு உலக சினிமா படத்தை அப்படியே உல்டா செய்து நந்தலாலா வாக எடுத்தவர் இப்படி எவ்வளவோ சொன்னாலும் தன் படங்களை எதிர்பார்க்க வைக்கும் இயக்குனர்களுள் ஒருவர் மிஷ்கின்  ... இவர் சூப்பர் ஹீரோ கதையை வைத்து ஜீவா நடிப்பில் தந்திருக்கும் படம் முகமூடி ...

சென்னையில் வயதானவர்கள் வீட்டை தேடி தேடி கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல் ... அந்த கொள்ளை கும்பலை பிடிக்கும் பொறுப்பு அசிஸ்டன்ட் கமிஸனர் கெளரவிடம் ( நாசர் ) கொடுக்கப்படுகிறது ...  இதற்கிடையில் மாஸ்டர் சந்துருவிடம் ( செல்வா ) குங்க்பூவை கற்றுக்கொண்டு தண்டசோறாக ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் ஆனந்த் ( எ ) ப்ரூஸ்லீ ( ஜீவா ) ஏ.சி யின் பெண் ஆர்த்தியை ( பூஜா ஹெக்டே ) காதலிக்கிறார்... ஒரு சந்தர்ப்பத்தில் நரேன் தலைமையிலான கொள்ளைக் கும்பல் ஏ.சி யை கொல்லும் முயற்சியில் போலீசின் சந்தேகப் பிடியில் ஜீவா மாட்டிக் கொள்கிறார் ... காதலியை கவர்வதற்காக போட்ட முகமூடியுடன் ஜீவா கொள்ளைக் கூட்டத்தை எப்படி அழிக்கிறார் என்பதே கதை ...


படத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் நடிகர் ஜீவா ... இந்தப் படத்திலும் சண்டைக் காட்சிகளில் அவரது அர்ப்பணிப்பு நன்றாகவே தெரிகிறது , ஆனாலும் சிக்ஸ் பேக் வைக்க சொல்லி ஜீவாவை கஷ்டப்படுத்தாமல் அந்த வேலையை டெய்லரிடமே விட்டுவிட்டார் மிஷ்கின்... சூப்பர் மேன் போல பேண்டிற்கு  மேல் ஜட்டி போட்டும் நடிப்பிற்கு பெரிய ஸ்கோப் இல்லாததால் ஜீவா ஏனோ நம்மை கவரவில்லை ...

அழகிப் போட்டிகளில் ஜெயிப்பவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவிற்கு ஒத்து வர மாட்டார்கள் என்பதை ஒரு முறை மீண்டும் நிரூபித்திருக்கிறார் பூஜா ... பேக்கிலிருந்து ஸ்டெப் ஸ்டெப் பாக இவரை அறிமுகம் செய்து அட போங்கடா என்று சொல்ல வைக்கிறார்கள் ... கொடூரமான வில்லனாக அறிமுகமாகி
க்ளைமேசில் ஜீவாவை பார்த்து " பேட்மேன் , ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன் " என்றெல்லாம் சகிக்க முடியாத மேனரிஷத்தில் வசனம் பேசி பரிதாபமாக செத்துப் போகிறார் நரேன் ...ஆர்ப்பாட்டமாக இருந்திருக்க வேண்டிய இவருடைய கேரக்டர் அபத்தமாக மாறியது அந்தோ பரிதாபம் ...


செல்வாவை பார்த்து ஜீவா உட்பட  அனைவரும்  " மாஸ்டர் , மாஸ்டர் "  என்று உயிரை விடுகிறார்கள் , ஆனால் அவரோ குங்க்பூ மாஸ்டர் போலல்லாமல் முழுக்கை பனியனை போட்டுக்கொண்டு " என்ன  மூணு இட்லி ஒரு பொங்கல் பார்சலா " என்று கேட்கும் சரக்கு மாஸ்டர் போலத்தான் இருக்கிறார் ..நந்தலாலா படத்தில் ஒரு சீனில் லாரி ஒட்டி சென்ற நாசருக்கு இந்த படத்தில் கனமான கதாபாத்திரம் ... வழக்கம் போல நன்றாகவே செய்திருக்கிறார் ... கிரீஸ் கர்னார்ட் கதாபாத்திரம் படத்தில் உள்ள மற்ற ஓட்டைகளை போலவே பெரிய ஓட்டை ... மிஷ்கினின் மனதிற்கு ஏற்ப லோ ஆங்கிள்  , வைட் டாப் ஆங்கிளில் கேமராவை நகர்த்தியிருக்கிறார் சத்யா ... அவர் என்ன செய்வார் பாவம் ?! ...

" கத்தாழ " , " கன்னித்தீவு " அளவிற்கு இல்லாவிட்டாலும் " நாட்டுல " பாட்டில் நன்றாகவே மெலடி குத்து போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் கே ... " வாய மூடி " பாடலாலும் , " டார்க் நைட் " படத்தின் இசையை நியாபகப்படுத்தினாலும் பின்னணி இசையாலும் மனதில் பதிகிறார் கே ...

பேட்மேன் , சூப்பர் மேன் போல தமிழில் ஒரு படத்தை தர முயற்சித்ததற்காக இயக்குனர் மிஷ்கினை பாராட்டலாம் ... வழக்கமான தண்டசோறு ஹீரோவாக இருந்தாலும் குங்க்பூவை வைத்து பிணையப்பட்ட பின்னணி , மார்க்கெட் சண்டை உட்பட ரசிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் , பிரமாதமான பின்னணி இசையுடன் ஜீவா முகமூடியாக மாறும் காட்சி , ஆங்காங்கே பளிச்சிடும் மிஷ்கின் டைப் ஷாட்கள் , இரண்டாவது பாதிக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முதல் பாதி போன்றவற்றால் மனதை தொடுகிறார் மிஷ்கின் ...


பெரிய பில்ட் அப் கொடுத்துவிட்டு சப்பென்று நகரும் இரண்டாம் பாதி , பெரிதும் கவனிக்க வைக்காத செல்வா - நரேன் பிளாஷ்பேக் காட்சிகள் , ஆஸ்பத்திரி சண்டை , கூன் விழுந்த வேரக்டர் , மடியில் விழுந்து சாகும் நண்பன் , பாம்பு போல காலை சுற்றி சுற்றி வரும் லோ ஆங்கிள் ஷாட்கள் , வசனமே இல்லாமல் நெடு நேரம் நகரும் காட்சிகள் இப்படி படம் நெடுக வழக்கமான மிஷ்கினின் மேக்கிங் ஸ்டைல் இவையெல்லாம் நம் முகத்தை கொஞ்ச நேரம் நேரம் மூட வைக்கின்றன . கொள்ளை கும்பல் நடத்தும் குங்க்பூ ஸ்கூல் , கிரீஸ் கர்னார்ட் வைத்திருக்கும் ஆராய்ச்சி கூடம் , திடீரென ஜீவா தரிக்கும் சூப்பர் ஹீரோ வேடம் இவையெல்லாம் மிஷ்கின் எந்நேரமும் அணிந்திருக்கும் கருப்பு கண்ணாடி போல புரியாத புதிராகவே இருக்கின்றன ...

இரண்டரை மணி நேரத்திற்கு மேல் படத்தை வளர்க்காமல் தட்டி , ஒட்டி இரண்டாவது  பாதியை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருந்தால் முகமூடி தமிழ் சினிமா உலகத்திற்கு முக்கிய மூடியாக இருந்திருக்கும் , அதிலும் குழந்தைகளை கடத்தல் கும்பலிடம் இருந்து ஜீவா மீட்கும் விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டிய க்ளைமேக்ஸ் காட்சி க்ரீஷ் கர்னார்ட் &  கோ வின் குளறுபடிகளால் மொக்கையாகி போனது ... பொருளாதார , வியாபார காரணங்களினால் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு  பிரம்மாண்டத்தை கொடுக்க முடியாமல் போனாலும் , க்ரிப்பான ஸ்க்ரீன்ப்ளே மூலம் மிஷ்கின் முகமூடியை ஹாலிவுட் படங்களின் மினியேச்சர் மாதிரி இல்லாமலாவது தவிர்த்திருக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 40

Related Posts Plugin for WordPress, Blogger...